Showing posts with label விளையாட்டு செய்திகள். Show all posts
Showing posts with label விளையாட்டு செய்திகள். Show all posts

Thursday, February 16, 2012

பாகிஸ்தானுடனான 2ஆது ஒருநாள் போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி

பாகிஸ்தான் அணியுடனான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இங்கிலாந்து அணி 20 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

அபுதாபியில் புதன்கிழமை பகல் இரவு ஆட்டமாக நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 250 ஓட்டங்களைப் பெற்றது. அணித்தலைவர் அலஸ்டயர் குக் 102 ஓட்டங்களைப் பெற்றார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 49 ஓவர்களில் 230 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.அவ்வணியின் சார்பில் அதிகபட்சமாக இம்ரான் பர்ஹாத், மிஸ்பா உல் ஹக் ஆகியோர் தலா 47 ஓட்டங்களைப் பெற்றனர்.

இங்கிலாந்து பந்துவீச்சாளர்களில் ஸ்டீவன் பின் 34 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அலஸ்டயர் குக் இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார்.

இத்தொடரின் முதல் போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றிருந்தது. இதனால் 4 போட்டிகள் கொண்ட இத்தொடரில் அவ்வணி 2-0 விகிதத்தில் முன்னிலையில் உள்ளது

தோனிக்கு குவியும் பாராட்டுகள்

ஒருநாள் போட்டிகளில் பின் வரிசையில் களமிறங்கி போட்டியை வென்று தரும் மேட்ச் வின்னராக இந்தியாவின் அணித்தலைவர் தோனி உள்ளார்.

ஒருநாள் கிரிக்கட்டில் வெற்றி நாயகனாக இருப்பது அவ்வளவு எளிதல்ல. ரன்ரேட் அதிகமாக தேவைப்படும், பின்வரிசையில் வரும் போது சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது.

எப்போதும் ஒரு நெருக்கடி இருந்து கொண்டே இருக்கும். இவை அனைத்தையும் மீறி இந்திய அணித்தலைவர் தோனி சிறப்பாக செயல்படுகிறார் என்றால் முதல் காரணம் இவரது கூல் பாணி தான்.

தற்போதைய முத்தரப்பு தொடரில் கடைசி நேரத்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்தார். இதே போன்று இலங்கைக்கு எதிராக 3 ஓட்டங்கள் எடுத்து போட்டி டை ஆக காரணமாக இருந்தார்.

தோனியை பொறுத்தவரை இரண்டாவதாக துடுப்பெடுத்து ஆடும் போது அசத்துகிறார். சேஸ் செய்த போது 49 இன்னிங்சில் இவரது அபார ஆட்டம் வெற்றிக்கு கைகொடுத்தது.

இதில் 2 சதம், 14 அரைசதம் உட்பட 1993 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதன் சராசரி 104.89 ரன்கள். இந்த 49 இன்னிங்சில் தோனி 30 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.

200 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், சேஸ் செய்த போது 50 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். மொத்தம் இவர் எடுத்த 7 சதம், 44 அரைசதத்தில் பெரும்பாலானவை சேஸ் செய்த போது எடுத்தது தான்.

அணித்தலைவர், விக்கெட் கீப்பர், துடுப்பாட்ட வீரர் என்ற பணிகளுடன், போட்டியை வெற்றிகரமாக முடித்து தருவதிலும் தோனி கெட்டிக்காரராக உள்ளார்.

இதுகுறித்து இலங்கை அணியின் தலைவர் ஜெயர்வர்தனா கூறுகையில், அடிலெய்டு போட்டியில் ஒரு இன்ச் அளவில் போட்டியை எங்களிடம் இருந்து தோனி தட்டிப்பறித்தார். அமைதி மற்றும் நிதானமாக செயல்படும் குணம் இவரை வலிமையானவராக மாற்றியுள்ளது என்றார்.

அவுஸ்திரேலிய அணியின் தலைவர் மைக்கல் கிளார்க் கூறுகையில், தோனி அசத்தலான வீரர். புள்ளிவிவரங்களை பார்த்தால் இதைத் தெரிந்து கொள்ளலாம். மெக்கேயின் கடைசி ஓவரில் சிக்சர் அடித்தது மறக்க முடியாதது என்றார்.

Friday, May 06, 2011

லண்டன் வரும் இலங்கை கிரிகெட் அணி அச்சமாம்: பாதுகாப்பு அதிகரிப்பு

பிரித்தானியாவில் கிரிகெட் விளையாட வரும் இலங்கை அணிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 14ம் திகதி அக்ஸ்பிரிஜ் மைதானத்தில் நடக்கவிருக்கும் இப்போட்டிகளை புறக்கணிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது தமிழ் இளையோர் அமைப்பினர். விளையாட்டு நடைபெறும் மைதானத்தின் முன்பாக நிண்று அங்கு வரும் மக்களுக்கு இலங்கையில் நடைபெற்ற போர்குற்றம் தொடர்பாக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும் இளையோர்கள் பல முயற்சிகளை மேற்கொண்டு உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இலங்கைத் தூதரகம், பிரித்தானியா வரவிருக்கும் இலங்கை விளையாட்டு அணிக்கு பாதுகாப்பு இல்லை என்று முறைப்பாடுகளைச் செய்துள்ளது.

இதன் காரணமாக தாம் பாதுகாப்பை அதிகரிக்கவிருப்பதாக பிரித்தானியப் பொலிசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அமைதியான ஆர்ப்பாட்டத்தைச் செய்யவும் தமது எதிர்பைக் காட்டவும் தமிழ் இளையோர்களுக்கு பொலிசார் அனுமதியை வழங்கியும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும். எனவே இளையேர்களின் கரங்களைப் பலப்படுத்த தமிழ் மக்கள் திரண்டு எழவேண்டும். அடுத்த சனிக்கிழமை போட்டி நடக்கவிருக்கும் மைதானத்தை தமிழர்கள் முற்றுகையிட்டு தமது எதிர்ப்பைக் காட்டவேண்டும்.

இன அழிப்பில் ஈடுபட்ட ஆபிரிக்க நாடுகள் சிலவற்றோடு, கிரிகெட் விளையாடுவது இல்லை என பிரித்தானியா முடிவெடுத்துள்ளது, ஆனால் இலங்கையோடு எவ்வாறு விளையாட முடியும் என்ற கேள்விகள் தமிழ் இளையோர் அமைப்பால் முன்வைக்கப்பட்டுள்ளது.

Wednesday, July 07, 2010

உதைப்பந்தாட்ட ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அக்டோபஸ்

ஜேர்மன் பெர்லினில் உள்ள மீன்கள் அருங்காட்சியகத்தில் போல் (Paul )என்ற அக்டோபஸ் கால்பந்து போட்டிகளின் முடிவுகளை சரியாக குறிப்பிட்டு அனைவரையும் பிரமிக்க வைத்து வருகிறது.

தொட்டிக்குள் 2 சிறிய பெட்டிகள் அக்டோபஸஷுக்கு பிடித்த உணவுகளுடன் இறக்கப்படுகின்றன. அதோடு பெட்டியில் கால்பந்து போட்டியில் மோதும் அணிகளின் நாட்டுக் கொடியும் வைக்கப்படுகிறது.

அக்டோபஸ் எந்த பெட்டிக்குள் போகிறதோ அந்த அணிதான் வெற்றி பெறுகிறது. கானா அஸ்திரேலியா இங்கிலாந்துடன் மோதிய போது ஜேர்மனிதான் வெற்றி பெறும் என அக்டோபஸ் கூறியது சரியானது. பலமிக்க செர்பியா அணியூடன் ஜேர்மனி தோற்கும் என்றது. அதுவும் சரியாக நடந்தது. இந்த நிலையில் கால் இறுதியில் ஆர்ஜன்டினாவை ஜேர்மனி வீழ்த்தும் என கணித்தது. இதுவும் சரியாக நடந்து விட்டது.

தொடர்ந்து ஜேர்மனியை சரியாக கணித்து வரும் அக்டோபஸ் அரை இறுதியின் போது என்ன சொல்லப் போகிறது என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.இந்நிலையில் அரை இறுதியில் ஸ்பெயின் வெற்றி பெரும் என அக்டோபஸ் கணித்துள்ளது .இது ஜேர்மனி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது , , ,

மரடோனா பயிற்சியாளராக தொடருவார்!

மரடோனா பயிற்சியாளராக தொடருவார் என்று ஆர்ஜென்டினா கால்பந்து சங்கத் தலைவர் ஜுலியோ ஹம்பர்டோ கிராடனோ கூறியுள்ளார்.

உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட போட்டியில் ஆர்ஜென்டினா படுதோல்வியுற்றது. இதற்கு பின் மரடோனா பயிற்சியாளராக தொடருவாரா? மாட்டாரா? அல்லது நீக்கப்படுவாரா? அவராக நீங்குவாரா? என்று பல குழப்பங்கள். இதற்கிடையே ஆர்ஜென்டினா திரும்பியதும் மரடோனா அளித்த பேட்டியில், எனது நேரம் முடிந்து விட்டது என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் மரடோனாவை பதவி விலக் சொல்லி எந்த நிர்பந்தமும் செய்யவில்லை, ஆர்ஜென்டினாவில் உதைப்பந்து வளர்ச்சிக்காக 30 வருடங்களுக்கு மேல் அவர் உழைத்திருக்கிறார்.

மரடோனா ஒரு ஜாம்பவான். இன்னமும் அவர் ஒப்பந்தத்தில் இருக்கிறார்.மரடோனா எடுக்கும் முடிவை ஆர்ஜென்டினா கால்பந்து சங்கம் ஏற்கும். மரடோனா மட்டுமே அர்ஜென்டினாவில் அவர் நினைத்ததை செய்ய முடியும் என்று சொல்லப்படும் அளவுக்கு செல்வாக்குள்ள மனிதர் என்று அதன் தலைவர் ஜுலியோ ஹம்பர்டோ கிராடனோ கூறியுள்ளார். ,

இறுதி போட்டிக்கு நெதர்லாந்து தகுதி

உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட போட்டியில் நடைபெற்று முடிந்த அரைஇறுதி ஆட்டத்தில் உருகுவே அணியை 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியுற செய்த நெதர்லாந்து இறுதி போட்டிக்குள் நுழைந்தது.

உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட போட்டியில் நேற்று கேப்டவுனில் நடந்த அரைஇறுதி ஆட்டத்தில் உருகுவே நெதர்லாந்து அணியை சந்தித்தது. உருகுவே நட்சத்திர வீரர் சாரஸ் கால்இறுதியில் சிவப்பு அட்டை பெற்றதால் இந்த போட்டியில் விளையாடவில்லை. நெதர்லாந்து அணியில் எந்த மாற்றமும் இல்லை. போட்டி ஆரம்பமாகியதும் எந்த பரபரப்பும் இல்லாமல் பந்து அங்கும் இங்கும் சென்று கொண்டிருந்தது.

ஆட்டத்தின் 18ஆவது நிமிடத்தில் நெதர்லாந்து அணி தலைவர் ஜியோவானி வான் புரோன்காஸ்ட் ஒரு கோல் அடித்து அந்த அணிக்கு முன்னிலை தேடிக் கொடுத்தார். மைதானத்தின் இடது பக்கத்தில் இருந்து இடது காலால் அடிக்கப்பட்ட பந்து 30 அடி தொலைவை மிக வேகத்தில் கடந்து கோல்கம்பத்துக்குள் புகுந்தது. இந்த உலக கிண்ண உதைப்பந்தாட்ட தொடரில் புரோன்காஸ்ட் அடித்த முதல் கோல் இதுதான். அனைத்து கோல்களையும் விட அதி அற்புதமான முறையில் இந்த கோல் அடிக்கப்பட்டது.

இதனால் ஆட்டத்தில் பரபரப்பு கூடியது. பதிலுக்கு கோல் அடிக்க உருகுவே போராடியது. ஆட்டத்தின் 41ஆவது நிமிடத்தில் நெதர்லாந்து தலைவர் அடித்த கோலுக்கு பதிலடி கொடுத்தார் உருகுவே தலைவர் போர்லான். சுமார் 25 அடி தொலைவில் இருந்து இவரால் உதைக்கப்பட்ட பந்து ஜபுலானி நெதர்லாந்து கோல்கீப்பர் கைக்குள் சிக்காமல் அழகாக வளைந்து சென்று வளைக்குள் தஞ்சமடைந்தது.

இந்த உலக கிண்ண உதைப்பந்தாட்ட தொடரில் போர்லான் அடித்த 4ஆவது கோல் இதுவாகும். தற்போது அத்லெடிகோ மாட்ரிட் அணிக்காக விளையாடி வரும் போர்லான் உருகுவேக்காக 68 சர்வதேச போட்டிகளில் விளையாடி 28ஆவது கோல்கள் அடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த கோலையடுத்து முதல் பாதி ஆட்டம் 1க்கு1 என்று சமநிலையில் முடிந்தது.

பிற்பாதியில் பந்தை தன் கட்டுக்குள் வைத்து ஆர அமர யோசித்து யோசித்து விளையாடியது நெதர்லாந்து. உருகுவே அபாயக்கரமான எதிரியாக மாறியதே இந்த மாற்றத்துக்கு காரணம்.68ஆவது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் வான்டெர்வார்ட் அடித்த பந்தை உருகுவே கோல்கீப்பர் முஸ்லெரோ தடுத்தார். அந்த பந்து மற்றொரு நெதர்லாந்து வீரர் ஆர்ஜான் ராபனிடம் சென்றது. அதனை வந்த வேகத்தில் வெளியே அடித்து வீணடித்தார் ராபன்.

தொடர்ந்து 70ஆவது நிமிடத்தில் ஸ்னைடர் நெதர்லாந்துக்கான 2ஆவது கோலை அடித்தார். அடுத்த 3ஆவது நிமிடத்தில் ஆர்ஜான் ராபன் 3ஆவது கோலை அடித்தார். டர்த் குயித் கொடுத்த பந்தை தலையால் முட்டி ராபன் கோலாக மாற்றினார். இதனால் நெதர்லாந்து 3-1 என்று முன்னிலை பெற்றது.

தொடர்ந்து அடிக்கப்பட்ட இரு கோல்களால் உருகுவே வீரர்கள் நிலைகுலைந்து போனார்கள்.ஆனாலும் போராட்டத்தை கைவிடவில்லை. இறுதியில் 92ஆவது நிமிடத்தில் உருகுவே வீரர் பெரைரா ஒரு கோல் அடித்தார். ஆனால் மேற்கொண்டு கோல் அடிக்க நேரம் இல்லை. ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஆட்ட நேர இறுதியில் 3-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தது.

Tuesday, July 06, 2010

ரோபனை குறிவைக்கும் உருகுவே

உலக கிண்ண உதைப்பந்தாட்ட போட்டியில் இன்று நடைபெறும் முதலாவது அரை இறுதிப் போட்டியில் நெதர்லாந்து-உருகுவே அணிகள் மோதுகின்றன.

நெதர்லாந்து அணிக்கெதிரான அரையிறுதிபோட்டியில் நெதர்லாந்தின் முன்கள வீரரான ஆர்ஜன் ரோபனை தடுப்பதற்காக திட்டத்தினை உருகுவே அணியின் பயிற்சியாளரான ஒஸ்கார் டெபோரஸ் தீட்டியுள்ளதாக அவ்வணியின் வீரர் செபஸ்தியான் அகேரு தெரிவித்துள்ளார்.

உபாதைகள் காரணமாக உலக்கிண்ண முதல் சுற்றுப்போட்டிகளில் விளையாடவில்லை. ரோபன் இரண்டாம் சுற்றில் லோவாக்கியா அணிக்கெதிரான போட்டியிலேயே தமது ஆட்டத்தினை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலக்கிண்ணத்தை முதல் முறையாக கைப்பற்ற எதிர்பார்க்கும் நெதர்லாந்து அணியில் ரோபன் முக்கிய வீரராக கருதப்படுகிறார். பொடாபோகா கழக அணிக்காக விளையாடிவரும் அபேரு உருகுவே அணியின் முக்கிய வீரராக கருதப்படுகிறார். கானா அணிகெதிராக அவர் பெற்ற கோலானது அவ்வணியின் வெற்றிக்கு வழிவகுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1970ம் ஆண்டுக்கு பிறகு உருகுவே அரையிறிதிப் போட்டியொன்றில் நுழைவது இதுவே முதல் முறையாகும்.உருகுவே அணி கிண்ணத்தினை இதுவரை இரண்டு தடவை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது , , ,

Thursday, April 29, 2010

நோர்வேயில் ஈழத்தமிழ் இளைஞனின் சாதனை

உலகின் எப்பகுதியில் ஈழத்தமிழர்களாகிய நாம் வாழ்ந்தாலும், தாய் நாட்டுக்கும் வாழ்கின்ற நாட்டுக்கும் பெருமை சேர்ப்பவர்களாகவே வாழ்ந்து வருவது வரவேற்புக்குரியது.

அந்த வகையில் தாயகத்தில் உரும்பராயைச் சேர்ந்த சிவகுமார், பிருந்தா தம்பதிகளின் புதல்வன் ஜனகன் சிவகுமார் (வயது 16) அவர்கள் ரக்வொண்Nடா (Taekwondo) என்னும் தற்காப்புக் கலையில் சர்வதேச தரத்தில் திகழ்ந்து நோர்வே நாட்டுக்காகப் பல வெற்றிக் கிண்ணங்களைப் பெற்றுக் கொடுத்து வருகின்றார்.

நோர்வே நாடளாவிய ரீதியில் நடைபெற்ற போட்டிகளில் 12 தடவைகள் முதலாவது இடத்தையும், 3 தடவைகள் இரண்டாம் இடத்தையும் பெற்ற பெருமை செல்வன் ஜனகன் அவர்களுக்குண்டு.

கடந்த மூன்று ஆண்டுகளாக (16 வயதுக்குட்பட்டோர் 48 கிலோ) நோர்வேயின் அதிசிறந்த வீரராகத் தொடர்ந்து தெரிவு செய்யப்பட்டு வரும் இவரே இப்பிரிவில் வெற்றி பெற்றவர்களில் குறைந்த வயதுடையவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இருதடவைகள் அதிசிறந்த ஸ்கன்டினேவிய வீரராகவும், கடந்த இருவருடங்களாக அதி சிறந்த நோர்டிக் வீரராகவும் தெரிவாகியது மட்டுமன்றிப் பல நாடுகளுக்கும் சென்று விளையாடிப் பெருமெண்ணிக்கையில் வெற்றிக் கிண்ணங்களைத் தனதாக்கிவரும் இவர் 2009ஆம் ஆண்டுக்கான ஐரோப்பிய வெற்றிக்கிண்ணப் போட்டியில் குறைந்த வயதில் பங்குபற்றிய சிறப்பையும் கொண்டவர்.

இவ்வாண்டு மெக்சிக்கோவில் நடைபெற்ற உலக வெற்றிக்கிண்ணப் போட்டியில் (16 வயதுக்குட்பட்டோர் 48 கிலோ) பங்கெடுத்துச் செனகல், கனடா ஆகிய நாடுகளுடன் முறையே 7 - 2, 4 - 2 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்குத் தெரிவாகியிருந்தார்.


மூன்றாவது சுற்றில் டொமினிக்கன் குடியரசுடன் மிகத்திறமையாக விளையாடி இறுதிக்கணத்தில் துரதிர்ஷ்டவசமாக வெற்றிவாய்ப்பைத் தவறவிட்டிருந்த போதிலும் நோர்வே நாட்டின் சார்பாக இவ்வுலக வெற்றிக்கிண்ணப் போட்டியில் கலந்து கொண்டவர்களில் சர்வதேச ரக்வொண்டோ வீரர்கள் பலரை வென்று மூன்றாவது சுற்று வரைக்கும் முன்னேறியிந்த நோர்வேயிய வீரர் என்ற பெருமையை இவர் பெற்றிருந்தார்.

இவர் தொடர்ந்து இத்துறையில் முன்னேறித் தாம் வாழும் நாடான நோர்வேக்கும், தாய்நாட்டுக்கும் புகழ்சேர்க்க வாழ்த்துகின்றோம்.

Wednesday, April 21, 2010

மும்பை - பெங்களூர் மோதும் முதலாவது அரை இறுதி ஆட்டம் இன்று

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் முதல் அரையிறுதி ஆட்டம் மும்பையில் இன்று புதன்கிழமை இரவு 8.00 மணிக்கு நடைபெறுகிறது.

இதில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் ரோயல் சாலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.

இரு அணிகளின் தலைவர்களுமே இந்திய அணிக்கு தலைமை வகித்த அனுபவம் இருப்பதால் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை அணி சொந்த மண்ணில் விளையாடுவதால் அந்த அணிக்கு ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருக்கும் என்பதில் ஆச்சரியமில்லை. அதுவே அந்த அணிக்கு கூடுதல் பலமாகவும் அமைந்துள்ளது. அதேசமயம் மும்பை அணி இதுவரை நடந்த முடிந்த சுற்றுப் போட்டிகளில் அதிகபட்ச வெற்றியைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

மும்பை 14 போட்டிகளில் விளையாடி 10இல் வெற்றியும், 4இ-ல் தோல்வியும் அடைந்து 20 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. பெங்களூர் 7இல் வெற்றியும், 7இல் தோல்வியுடன் 14 புள்ளிகளுடன் 4ஆ-ம் இடத்தில் உள்ளது.

மும்பை அணித் தலைவர் டெண்டுல்கர், நடப்பு ஐபிஎல் போட்டிகளில் அதிகபட்ச ஓட்டம் எடுத்து அதாவது 14 போட்டிகள் மூலம் 561 ஓட்டங்களுடன் முதலிடத்தில் உள்ளார். மேலும் அவரது அனுபவமும் அந்த அணிக்குக் கூடுதல் பலத்தை அளித்துள்ளது.

கொல்கத்தாவில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் பிராவோ தலைமையில் அந்த அணி விளையாடி தோல்வியைத் தழுவியது. அணியை வழிநடத்த டெண்டுல்கர் வேண்டும் என்பதையே இந்த தோல்வி காட்டுகிறது.

டெண்டுல்கருடன் சேர்ந்து இலங்கை வீரர் ஜயசூர்யா தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவது அந்த அணிக்கு பெரிய பலத்தை அளிக்கிறது. ஆனால் அவர் விளையாடுவாரா என்பது சந்தேகமே. 'ஓல்ரவுண்டர்' ஷிகார் தவாண் அண்மையில் நடந்த போட்டிகளில் சரியாக விளையாடவில்லை. எனினும் சௌரவ் திவாரி மற்றும் அம்பட்டி ராயுடு ஆகிய இருவரும் அந்த அணியில் டெண்டுல்கருக்கு இணையாக விளையாடி வருகின்றனர்.

தென் ஆபிரிக்க வீரர் டுமினியும், 'மிடில் ஓர்டர் ' பேட்ஸ்மேன் பொல்லார்டும் இருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம். பந்துவீச்சில் ஹர்பஜனும், ஜாகீர்கானும் இதுவரை சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளனர்.

எனவே துடுப்பாட்டம், களத்தடுப்பு, பந்துவீச்சு என அனைத்திலும் மும்பை அணி சிற்ந்தே காணப்படுகிறது.

பெங்களூர் அணி

அனில் கும்ப்ளே தலைமையிலான பெங்களூர் அணியில் பல முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். தென் ஆபிரிக்க வீரர் ஜாக்ஸ் காலிஸ் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக அதிகஓட்டங்கள் எடுத்த பட்டியலில் உள்ளார்.

அதேபோல் அனுபவமிக்க ட்ராவிட், விராட் கோலி, மணீஷ் பாண்டே, ரொபின், உத்தப்பா, ராஸ் டெய்லர், கெவின் பீட்டர்சன் போன்ற வீரர்கள் இருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம். கும்ப்ளே, ஸ்டெய்ன், காலிஸ், பிரவீண் குமார் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர்.

பெங்களூரில் கடைசியாக நடைபெற்ற போட்டியில் மும்பையிடம் அந்த அணி 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அதற்குப் பழிவாங்க இன்றைய முதல் அரையிறுதிப் போட்டி பெங்களூர் அணிக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

முதல் அரையிறுதிப் போட்டி பெங்களூரில் நடத்தப்படுவதாக இருந்தது. கடைசியாக பெங்களூரில் நடந்த போட்டியின்போது அடுத்தடுத்து குண்டுவெடித்ததால், பாதுகாப்பு கருதி போட்டி மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளது. , , , , ,

அரையிறுதி வாய்ப்பை ஏற்கனவே இழந்த கொல்கத்தா நேற்றைய போட்டியில் வெற்றி

கொல்கத்தாவில் இடம் பெற்ற ஐ.பி.எல் தொடரின் கடைசி லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. மும்பை இந்தியன்ஸ், கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. மும்பை அணி ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது.

மும்பை அணி சார்பில் அணித்தலைவர் சச்சின், போலார்டு, ஜாகிர் கான், ஹர்பஜன், அபிஷேக் ஆகியோர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டது. பிராவோ தலைமையிலான மும்பை அணியில் சதீஷ், ஸ்டூவர்ட் பின்னி, முர்டாசா, சிகர் தவான் இடம் பெற்றனர்.

கொல்கத்தா அணியில் காயம் காரணமாக கெய்ல், சுக்லா நீக்கப்பட்டு, சஹா, டேவிட் ஹசி இடம் பெற்றனர்.நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணித்தலைவர் பிராவோ முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

மும்பை அணி சார்பில் ஆதித்யா தாரே, சிகர் தவான் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக களம் இறங்கினர் இதில் தாரோ01, தவான்11,டுமினி 19 , திவாரியும் 46 , பிவோரா 05, சதீஷ் 11 ,பின்னி 08 , ராயுடு 27 ,ஓட்டங்களையும் பெற்றனர். 20 ஓவர் முடிவில் முபை அணி 8 விக்கெட் இழப்புக்கு 133 ஓட்டங்களை எடுத்தது.

134 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணியில் கங்குலி 42, ஹசி 20 , மெக்கலம் 57 , உதிரிகளாக 16 ஓட்டங்கள் பெறப்பட்டது. 17.3 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்து, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நேற்றைய போட்டியின் ஆட்ட நாயகன் விருதை முரளி கார்த்திக் தட்டிச் சென்றார்.

நேற்றைய வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி, 14 புள்ளிகள் பெற்ற போதும் (7 வெற்றி) மோசமான புள்ளிவீதத்தின் அடிப்படையில் (-0.341) அரையிறுதி போட்டியில் இருந்து வெளியேறியது.

ஐ.பி.எல் வரலாற்றில் கொல்கத்தா மும்பை அணிகள் இதுவரை 6 முறை எதிர்கொண்டுள்ளன. இதில் ஐந்து முறை, மும்பை அணி வென்று இருந்தது. நேற்றைய போட்டியில், மும்பைக்கு எதிராக கோல்கட்டா அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

நேற்று மும்பைக்கு எதிராக, 42 ஓட்டங்களை எடுத்த கங்குலி (1031) ஐ.பி.எல் அரங்கில் ஆயிரம் ஓட்டங்களை கடந்த 10ஆவது வீரராவார். இதில் ரெய்னா (1316), கில்கிறிஸ்ட் (1201), ரோகிட் சர்மா (1168) ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர்.

Friday, April 09, 2010

ஐபிஎல் போட்டிகளில் தொடரும் அபராதம் விதிமுறைகள்

கொல்கத்தாவில் புதன்கிழமை நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது,​​நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் 2 ஓவர்கள் குறைவாக பந்து வீசியதால்,​​ கொல்கத்தா அணித்தலைவர் கங்குலிக்கு ரூ.18.40 லட்சமும்,​​ அணி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.4.60 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா அணி 2ஆவது முறையாக மேற்படி தவறு செய்ய்துள்ளது. ​ மீண்டும் ஒரு முறை இதே தவறை செய்தால் கங்குலிக்கு ஓர் ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்படும் எச்சரிக்கப்பட்டுள்ளார்.

நடுவரின் இறுதித் தீர்ப்பினை ஏற்காமல் ஸ்ரீசாந்த் எதிர்ப்பு தெரிவித்தது வீரர்களின் நடத்தை விதிமுறைகளை மீறிய செயல் என, “லெவல் 1” விதிப்படி அவர் மீது குற்றம்சாட்டப்பட்டு, போட்டி நடுவர் வெங்கட்ராகவன், ஸ்ரீசாந்த்துக்கு ரூ.4 லட்சத்து 5 ஆயிரம் அபராதமாக விதித்து உள்ளார்.

நேற்றைய போட்டியின் 3ஆவது ஓவரை ஸ்ரீசாந்த் விசினார். லம்ப் அந்த ஓவரை எதிர் கொண்டார்.

எல்லைக் கோட்டுக்கு வெளியே வந்து பந்து வீசியதால் நடுவர் 2 முறை 'நோ' போல் கொடுத்தார். இந்த 2 முறையும் அவர் நடுவரிடம் ஆட்சேபம் தெரிவித்தார். எப்படி 'நோ' போல் கொடுக்க முடியும் என்று அவரிடம் விவாதித்தார்.

முதல் முறையாக நடுவரிடம் ஆட்சேபம் தெரிவித்த போது யுவராஜ்சிங் இடை நின்று மனதை நிலைப்படுத்துமாறு ஸ்ரீறிசாந்திடம் கூறினார்.இருந்தும் 2ஆவது முறையாக 'நோ'போல் கொடுத்த போது ஸ்ரீசாந்த் மீண்டும் ஆட்சேபம் தெரிவித்திருந்தார். இதனையடுத்தே மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டது.

Sunday, March 14, 2010

ஐ.நாவின் சூழல் நல்லெண்ண திட்ட தூதுவர்: சச்சின்

இந்திய கிரிக்கெட் நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கர் ஐக்கிய நாடுகள் பேரவையின் சுற்றுச்சூழல் திட்ட நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சச்சின் டெண்டுல்கரின் உலகம் முழுதுமான புகழால் அவர் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்திலும் ஏற்படுத்த முடியும் என்று ஐ.நா. சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு நேற்று அறிவித்துள்ளது.

"இந்த புவியின் பல இடங்களில் விளையாடி மகிழ்ந்திருக்கிறேன், தற்போது நமது வீடான இந்தப் புவியின் நன்மைக்காக ஏதாவது செய்ய நேரம் வந்துள்ளது." என்று சச்சின் டெண்டுல்கர் இந்த கௌரவம் குறித்து பெருமிதமடைகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

"புவியைக் காப்பாற்றும் பெருமுயற்சி என்ற சவாலில் ஐ.நா.வுடன் இணைந்து பணியாற்ற தயாராயிருக்கிறேன், நான் நல்ல குழுவுடன் இணைந்துள்ளேன், அனைவரும் இணைந்து இதனைத் திறம்படச் செய்ய முடியும் என்று நம்புகிறேன்." என்று சச்சின் டெண்டுல்கர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பின் செயல் இயக்குனர் அகிம் ஸ்டெய்னர், "சச்சினின் குணம், நேர்மை, அவரது அறிவு மற்றும் அர்ப்பணிப்பு, பரவலான சுற்றுச்சூழல் செயல்பாட்டிற்கு தூண்டுகோலாக அமையும்." என்றார். ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின் "நல்லெண்ணத் தூதராக" சச்சின் தன் முதல் கடமையை நேற்று ஆரம்பித்தார்.

ஏற்கனவே யூனிசெப் அமைப்பின் குழந்தைகள் நிதியத்திற்காக சச்சின் டெண்டுல்கர் குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.எல். தொடக்க விழாவில் நேற்று சச்சின் டெண்டுல்காரின் இந்த புதிய பொறுப்பை அறிமுகம் செய்யும் விதமாக மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களிலான பெரிய அளவு பூமி உருண்டை ஒன்றை உருவாக்கி அதில் ஐ.பி.எல். அணித் தலைவர்கள் கையெழுத்திடுகின்றனர்.