Showing posts with label தலைமைச் செயலகம் தமிழீழம். Show all posts
Showing posts with label தலைமைச் செயலகம் தமிழீழம். Show all posts

Tuesday, April 19, 2011

களத்திலும் தளத்திலும் போராட்டத்தோடு இணைந்துநின்றவர்கள் நாட்டுப்பற்றாளர்கள் - தமிழீழ விடுதலைப்புலிகள்

தமிழீழ விடுதலைப் போராட்டம் முகிழ்ந்ததிலிருந்து, போர் தொடுத்து, பூமிப்பந்தெங்கும் வேர்விட்டு, விழுதெறிந்து, தமிழனுக்கென்றொரு முகவரி பதித்து நிலையாக நின்று நீறுபூத்த நெருப்பாகி, ஈழக்கனவை தமிழர் நெஞ்சங்களிலெல்லாம் உருக்காக உருவாக்கி, கருவாகச் சுமக்கும் காலம் வரை போராட்டத்தோடு வனங்கள் எங்கும் வழிகாட்டியாக, கடலெல்லாம் கடந்து காரிருள் கிழித்த கடலோடிகளாக, புலனாய்வு முகவர்களாக, பொருளாதார வழங்குனர்களாக, விழுப்புண்ணடைந்த போராளிகளின் மருத்துவர்களாக, பசிக்கு உணவளித்து பக்குவமாக உறைவிடம் தந்த பற்றாளராக, போராளிகளுக்கு அறிவூட்டிய அற்புதக் கல்விமான்களாக தங்களைத் தளத்தோடும் களத்தோடும் அர்ப்பணித்துச் சாவடைந்த மக்களை தமிழ் மக்கள் எல்லோரும் தங்களின் நெஞ்சங்களில் நிறுத்திப் போற்றுகின்ற நாள் இந்நாளாகும் என நாட்டுப்பற்றாளர் நாள் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழீழ விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.

அவ்வறிக்கையின் முழுவடிவம் வருமாறு:


‘தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் – 2011’

தலைமைச் செயலகம்,
த/செ/ஊ/அ/02/11
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
19/04/ 2011.

அன்பான தமிழ் மக்களே!

இன்று தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள்.

எமது நீண்ட விடுதலைப் போராட்டத்தில் எம்மோடு தோளோடு தோள் நின்று பணியாற்றி சாவடைந்த மக்களை நினைவுகூரும் நாள்.

எமது அமைப்பு தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதற்குக் கவசமாக நின்று தம்மை அர்ப்பணித்த தியாகிகளின் நினைவுநாள்.

‘இந்திய அமைதி காக்கும் படை’ என்ற போர்வையில் அன்னியப் படைகள் எமது மண்ணில் காலூன்றியிருந்த காலத்தில் அப்படையை எதிர்த்து அகிம்சை வழியில் போராடிய அன்னை பூபதியின் மறைவு நாளே ‘தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள்’ என நினைவுகூரப்படுகின்றது. அடக்குமுறைக்கெதிராக எமது மக்களை அணிதிரட்டிப் போராடிய அன்னை பூபதியின் தியாகம் எமது போராட்டப் பாதையில் முக்கிய மைற்கல்.

தியாகி லெப்.கேணல் திலீபன் அவர்களின் உண்ணாநிலைப் போராட்டம் இந்திய அரசின் கபட நோக்கத்தின் முகத்திரையைக் கிழித்தெறிந்தது. காந்திய வழிகாட்டலைப் போற்றி நிற்பதாகக் கூறிக்கொண்ட பாரதப் படைகள் தமிழீழத்தின் மீது ஏவிவிட்ட அடக்குமுறைகளுக்கு எதிராக எமது மக்களின் தியாக உணர்வை ஒருங்கே இணைத்துக்காட்டிய பெருமை அன்னை பூபதியையே சாரும்.

இந்தியப்படைகள் தமிழ்மக்களின் நலன்களில் எவ்வித அக்கறையும் கொள்ளாது தங்களது தாயக நிலத்திலேயே தங்களை அடிமைப்படுத்த முனைவதைப் புரிந்து கொண்ட மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்புணர்வை காந்திய வழியிலேயே போராடி, மக்களின் நியாயமான கோரிக்கைகளை மக்கள் போராட்டங்கள் ஊடாக அணிதிரட்டி உணர்த்திய அன்னை பூபதி அவர்களை சாகும்வரை வேடிக்கை பார்த்து நின்றது பாரதம்.

அன்னை பூபதியின் சாவு வல்லாதிக்கப் படைகளுக்கெதிராக மக்களால் முன்னெடுக்கப்பட்ட அகிம்சைப் போராட்டங்களுக்கு மகுடமாக மாறியது. ஈழப்போராட்டம் என்பது ‘ஆயுத வழியில் நாட்டம் கொண்ட இளைஞர்களால் முன்னெடுக்கப்படும் ஒரு கிளர்ச்சியே’ என தமது அரசியல் இலாபங்களுக்காகப் பேசித்திரிந்தவர்களுக்குப் பேரிடியாக மாறியது. தமிழரின் போராட்ட வரலாற்றில் அன்னை பூபதி அவர்களின் சாவு பெரும் மக்கள் புரட்சியை ஏற்படுத்திய உந்துசக்தியாகவே அமைந்தது.

தமிழீழ விடுதலைப் போராட்டம் முகிழ்ந்ததிலிருந்து, போர் தொடுத்து, பூமிப்பந்தெங்கும் வேர்விட்டு, விழுதெறிந்து, தமிழனுக்கென்றொரு முகவரி பதித்து நிலையாக நின்று நீறுபூத்த நெருப்பாகி, ஈழக்கனவை தமிழர் நெஞ்சங்களிலெல்லாம் உருக்காக உருவாக்கி, கருவாகச் சுமக்கும் காலம் வரை போராட்டத்தோடு வனங்கள் எங்கும் வழிகாட்டியாக, கடலெல்லாம் கடந்து காரிருள் கிழித்த கடலோடிகளாக, புலனாய்வு முகவர்களாக, பொருளாதார வழங்குனர்களாக, விழுப்புண்ணடைந்த போராளிகளின் மருத்துவர்களாக, பசிக்கு உணவளித்து பக்குவமாக உறைவிடம் தந்த பற்றாளராக, போராளிகளுக்கு அறிவூட்டிய அற்புதக் கல்விமான்களாக தங்களைத் தளத்தோடும் களத்தோடும் அர்ப்பணித்துச் சாவடைந்த மக்களை தமிழ் மக்கள் எல்லோரும் தங்களின் நெஞ்சங்களில் நிறுத்திப் போற்றுகின்ற நாள் இந்நாளாகும்.

காலத்துக் காலம் ஏற்பட்ட மக்கள் புரட்சியால் அடிமைப்பட்ட மக்கள் தம்மைத் தாமே ஆளும் இறையாண்மையைப் பெற்றெடுத்தனர். 21ஆம் நூற்றாண்டில் எம் கண்முன்னே நடந்துகொண்டிருக்கும் மக்கள் புரட்சிபற்றிய செய்திகள் அனைத்தும் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகவே வருகின்றன. மானுட நீதியை மதிக்காமல் பல தசாப்தங்களாக ஆட்சி செய்தவர்கள் மக்கள் புரட்சியால் நாட்டை விட்டே விரட்டியடிக்கப்பட்டுள்ளார்கள். தர்மத்தின் வழியில் நம்பிக்கை கொண்ட மக்கள் கூட்டம் அணிதிரளும்போது எந்தச் சக்தியாலும் அடக்கிவிட முடியாது. மொழியால், கலாசாரத்தால், பண்பாட்டால், வீரத்தால் உயர்ந்து நிற்கும் எம்மினத்தின் விடுதலையின் நியாயத்தை எந்தச் சக்தியாலும் விலைகொடுத்து வாங்கிவிடவும் முடியாது.

புரட்சிகர சிந்தனைகளைக் களைய புனையப்படும் வரலாறுகளை எமது மக்கள் நன்கு அறிவார்கள். இன்றும் விடுதலைப் போராட்டத்தின் தாங்குசக்தியாக இருக்கும் மக்கள் அன்னை பூபதி அவர்களின் நினைவுநாளில் தமிழீழ விடுதலையை வென்றெடுக்க ஜனநாயக முறையிலான மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

இராமு.சுபன்,
இணைப்பாளர்,
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.

Tuesday, February 22, 2011

தேசத்தின் அன்னை பார்வதியம்மா அவர்களுக்கு வீரவணக்கம் - தழிழீழ விடுதலைப் புலிகள்.

21.02.2011

தமிழீழம்.


தேசத்தின் அன்னை பார்வதியம்மா அவர்களுக்கு வீரவணக்கம்.

அகவை 81 வரை பெருவாழ்வு வாழ்ந்த திருமதி. வேலுப்பிள்ளை பார்வதியம்மா பெப்ரவரி 20ம் நாள் (2011) காலை 6.10 மணியளவில் காலமானார். அவர் பிறந்த ஊரான வல்வெட்டித்துறையில் இறுதி நாட்களைக் கழித்த அவர் கடும் நோய்வாய்பட்டு உயிர் நீத்தார்.

பண்பாலும் அரவணைத்துச் செல்லும் சிறப்பாலும் அனைவரின் அன்புக்குப் பாத்திரமான அவர்‘தேசத்தின் அன்னை” என்று போற்றிப் பாராட்டப்படுகின்றார். அவருடைய பிரிவு ஏற்படுத்திய இடைவெளியை நிரப்புவது மிகவும் கடினம் அவரைப் போன்ற பெரியோர்கள் ‘தேசத்தின் அன்னை”என்று அழைக்கப்படுவதற்கு வரலாற்றில் உறுதியான காரணங்கள் இருக்கின்றன.

அவருடைய மரணம் சாதரணமானதல்ல. அது ஒரு யுக மாற்றத்தின் அறிகுறி. வாழ்வாங்கு வாழ்ந்த இந்த மூதாட்டியின் வாழ்வு வாய்மை, மனவுறுதி, இனப்பற்று என்பனவற்றின் வடிவமாகத் திகழ்ந்தது. காலத்தால் மறக்க முடியாத இந்த மூதாட்டியின் பிரிவால் அவர் விட்டுச் செல்லும் தமிழுறவுகள் கடுந்துயர் கொண்டுள்ளனர்.

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களைப் பெற்றெடுத்த இந்த வீரத்தாயின் மரணம் சாதாரணமானதல்ல. வாழ்வாங்கு வாழ்ந்த ‘தேசத்தின் அன்னையின்” சாவு எம்மினத்தின் பெரும் துயராகும்.

அவருடைய பிரிவால் துயருறும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உற்றார் உறவினர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் இந்த ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றி.


“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”


அனைத்துலகத் தொடர்பகம்.

தமிழீழ விடுதலைப் புலிகள்.

தமிழீழம்.

Monday, February 21, 2011

‘தேசத்தின் பேரன்னை’ பார்வதி அம்மாவுக்கான இரங்கற் செய்தி – தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள்

தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தாயார் திருமதி பார்வதியம்மா வேலுப்பிள்ளை அவர்களின் மறைவுச் செய்தி தமிழ்மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பேரன்னையின் பிரிவால் துயருறும் இவரின் பிள்ளைகளுக்கும், உறவினர்களுக்கும், தமிழ்பேசும் மக்கள் அனைவருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.


பார்வதி அம்மாவுக்கு இரங்கல் தெரிவித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் விடுக்கும் அறிக்கை.

‘தலைமைச் செயலகம் ,
த/செ/இ/செ/01/11
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
20/02/ 2011.

அன்பான தமிழ் பேசும் மக்களே!

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தாயார் திருமதி பார்வதி வேலுப்பிள்ளை அவர்கள் இன்று (20/02/2011) வல்வெட்டித்துறையில் காலமானார். அன்னை பார்வதியம்மாவின் மறைவுச் செய்தி தமிழ்மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழீழத் தேசத்தின் விடுதலைப் போராட்டத்தைத் தலைமைதாங்க ஒரு தவப்புதல்வனைப் பெற்றெடுத்து, வளர்த்து, ஆளாக்கிய அந்தப் பெருவிருட்சம் இன்று கண்மூடித் துயில்கின்றது.

எமது தேசியத் தலைவரைப் பெற்றெடுத்த திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை ஐயாவும் பார்வதி அம்மாவும் தமது இறுதிக்காலத்தில் தாயகத்தில் வாழும் பேரவாவோடு இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பியிருந்தனர். தாயகத்தில் நிகழ்த்தப்பட்ட பேரழிவின்போது தமது தள்ளாத வயதிலும் மக்களோடு மக்களாக இறுதிவரை வாழ்ந்து வந்தனர்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் சிறிலங்கா இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு, சர்வதேச நெறிமுறைகளுக்கு மாறாக உறவினர்களைச் சந்திக்கும் வாய்ப்புக்கூட மறுக்கப்பட்டு எமது தேசியத் தலைவரின் பெற்றோர் சிறைப்படுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த ஆண்டு திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் உரிய மருத்துவ வசதிகளின்றி சிறிலங்காப் படையினரின் தடுப்புக்காவலில் சாவடைந்த நிகழ்வு இன்றும் தமிழ்மக்களின் மனதில் ஆறாத துயராகவுள்ளது.

கணவரின் மறைவைத் தொடர்ந்து தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் பார்வதியம்மா தனது சொந்த ஊரிலேயே தங்கியிருந்தார். மிகவும் நொடிந்து போன நிலையில் அவர் தனது இறுதிக்காலத்தை மருத்துவமனையிலேயே கழித்திருந்தார். கடந்த ஓராண்டாக பல சிரமங்களோடு வாழ்ந்து வந்த எமது தேசத்தின் பேரன்னை இன்று மீளாத் துயிலில் ஆழ்ந்துள்ளார்.

ஓர் ஒப்பற்ற விடுதலை வீரனை, தளபதியை, தலைவனை, வழிகாட்டியை தமிழினத்துக்குப் பெற்றெடுத்துத் தந்த பெருமை எமது தேசத்தின் பேரன்னைக்குரியதே. தனது சிறு பராயத்திலேயே விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டு ஒரு விடுதலை அமைப்பைக் கட்டி வளர்க்கத் தொடங்கிய எமது தேசியத் தலைவரைப் புடம்போட்டு வளர்த்தவர் எமது தேசத்தின் பேரன்னையே ஆவார்.

இறுதிநேரம் வரை பல நெருக்கடிகளின் மத்தியிலும் எமது தேசத்தின் பேரன்னையின் நலன் பேணலில் அக்கறையெடுத்து உறுதுணையாகச் செயற்பட்ட அனைவருக்கும் இந்நேரத்தில் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, பேரன்னையின் பிரிவால் துயருறும் இவரின் பிள்ளைகளுக்கும், உறவினர்களுக்கும், தமிழ்பேசும் மக்கள் அனைவருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

இராமு.சுபன்,
இணைப்பாளர்,
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.

Thursday, December 02, 2010

வன்னிப் படுகொலைகளின் கட்டளைத் தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் Chagie Gallage மகிந்தவுடன் லண்டனில்...!

வன்னியில் கடந்த ஆண்டு பொதுமக்கள், மற்றும் போராளிகள் என ஒரு இலட்சத்திற்கும் அதிகமாக கொன்றுகுவித்த சிறீலங்கா இராணுவத்தின் கட்டளைத் தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் Chagie Gallage (General Officer Commanding 59 Division) என்பவர் மகிந்த ராஜபக்ஷவுடன் லண்டனில் தங்கியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு வன்னிப்போர் உக்கிரமடைந்து இறுதிக்கட்டத்தை அடைந்தபோது அப்பகுதிகளில் இருந்த சிறீலங்கா படைப்பிரிவுகளில் ஒன்றான டிவிசன் 59 பிரிகேட்டின் கட்டளைத் தளபதியாக பணியாற்றிய மேஜர் ஜெனரல் Chagie Gallage என்பவரே லண்டனில் கடந்த மூன்று நாட்களாக மகிந்தவுடன் தங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை கொழும்பிலிருந்த லண்டன் நோக்கி புறப்பட்ட மகிந்த ராஜபக்ஷவுடன் 59 ஆவது பிரிகேட் படையணி கட்டளைத் தளபதி உட்பட மேலும் சில இராணுவ அதிகாரிகளும், அமைச்சர்கள் சிலரும், மகிந்தவின் விசிறிகளும் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆட்சியில் இருக்கும்போது மகிந்தவை கைதுசெய்ய மேற்குலக நாடுகள் தயக்கம் காட்டினாலும் போர்க்குற்றம் புரிந்த இராணுவத் தளபதியை கைதுசெய்யமுடியும் என தெரிவிக்கப்படுகிறது.

எனவே பிரித்தானியா வாழ் தமிழர்கள், மற்றும் தமிழ் அமைப்புக்கள் அனைவரும் ஒன்றிணைந்து உடனடி நடவடிக்கை எடுத்தால் லண்டன் வந்துள்ள இராணுவத் தளபதி சிறீலங்கா திரும்பி செல்ல வாய்ப்புக்கள் இல்லை என்றும், அவர் பிரித்தானிய காவல்துறையினரால் கைதுசெய்யப்படும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று லண்டனில் மகிந்த ராஜபக்ஷ தங்கியுள்ள டோச்சஸ்டர் ஹொட்டேல் ஐ முற்றுகையிட்டு மாலை 4 மணிமுதல் 8 மணிவரை தமிழர்களால் போராட்டம் நடாத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sunday, November 28, 2010

தமிழீழ விடுதலைப் புலிகள் மாவீரர்நாள் அறிக்கை 2010 - தலைமைச் செயலகம்

எமது விடுதலைப் போராட்ட வரலாற்றின் நாயகர்களைப் பூசிக்கும் புனிதநாள். எம்மண்ணை ஆக்கிரமித்து எமது மக்களை அழிக்க வந்த எதிரிப்படைகளை எதிர்த்துக் களமாடி தங்கள் உயிரையும் உடலையும் எமக்குக் காப்பரணாக்கிய உத்தமர்களின் நினைவுநாள்.

மாவீரர்நாள் அறிக்கை - 2010
தலைமைச் செயலகம்
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்.
நவம்பர் 27 2010.


அன்பிற்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே


இன்று மாவீரர் நாள்.

எமது விடுதலைப் போராட்ட வரலாற்றின் நாயகர்களைப் பூசிக்கும் புனிதநாள்.

எம்மண்ணை ஆக்கிரமித்து எமது மக்களை அழிக்க வந்த எதிரிப்படைகளை எதிர்த்துக் களமாடி தங்கள் உயிரையும் உடலையும் எமக்குக் காப்பரணாக்கிய உத்தமர்களின் நினைவுநாள்.

உலக வரலாறு கண்டிராத பல தியாகங்களையும் சாதனைகளையும் தமிழீழ விடுதலைப் போராட்டம் கண்டிருக்கிறது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வீரத்தின் உச்சத்துக்குக் கொண்டு சென்ற பெருமை இந்த வீரப் புதல்வர்களையே சாரும். அவர்களது உயிராலும் உதிரத்தாலுமே நாம் புதிய வரலாற்றைப் படைத்திருக்கின்றோம்.

அந்நிய வல்லாதிக்கச் சக்திகளோடு கைகோர்த்து எம்மண் மீது பெரும் படையெடுப்பைச் செய்த எதிரியின் முன்னால் மனவலிமையோடு போர்புரிந்த இந்த மாவீரச் செல்வங்களை நெஞ்சில் நிறுத்தி நெய்விளக்கேற்றி வழிபடும் இத்திருநாள் தமிழர்களின் எழுச்சி நாளாகும்.

பெயருக்காகவோ புகழுக்காகவோ அல்லது போர்மீது கொண்ட பற்றுதலாலோ எமது மாவீரர்கள் களமாடவில்லை. எமது மொழியின் இனத்தின் பண்பாட்டு விழுமியங்களின் மீதான அடக்குமுறைகளுக்கெதிராகவே இவர்கள் போராடப் புறப்பட்டார்கள். எம் மண்மீதும் மக்கள்மீதும் கட்டவிழ்த்து விடப்பட்ட சிங்கள இனவெறி அடக்குமுறைக்கெதிராகவே ஆயுதமேந்திப் போராடினார்கள்.

எமது தேசவிடுதலைப் போராட்டத்தில் களமாடி வீரச்சாவடைந்த வீரர்களைப் பெற்றெடுத்த பெற்றோர்களும் அவர்களது குடும்பத்தினரும் என்றும் பெருமைக்குரியவர்களே.

இலங்கைத்தீவில் தமது இறைமையைப் பேணியபடி தம்மைத்தாமே ஆட்சி செய்துகொண்டிருந்த தமிழினம் படிப்படியாக மேற்குலக நாட்டவரின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. மாறிமாறி ஆட்சி செய்தவர்கள் இறுதியில் இலங்கைத்தீவைக் கைவிட்டுச் சென்றபோது தமிழரின் அரசியல் உரிமைகளைச் சிங்களப் பெரும்பான்மையினத்திடம் நிரந்தரமாகக் கையளித்துச் சென்றார்கள்.

பிரித்தானியரின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து தமிழினத்தின் மீதான கொடுமைகள் சிங்களப் பெரும்பான்மையினத்தால் இனவெறியோடு மேற்கொள்ளப்பட்டன. இவற்றுக்கெதிராக தமிழ்மக்கள் நடாத்திய தொடர்ச்சியான அறவழிப்போராட்டங்கள் பலனற்றுப்போன நிலையிலும் தமிழினத்தின் மீதான அடக்குமுறைகள் அதிகரித்த நிலையிலும்தான் எமது மக்கள் ஆயுதப் போராட்ட வழிமுறையைத் தெரிவு செய்தார்கள்.

உலகநாடுகள் பலவற்றில் நடந்த விடுதலைப் போராட்டங்கள் போலவே எமது போராட்டமும் முற்றிலும் நியாயமான அடிப்படைகளைக் கொண்டதாகவே அமைந்துள்ளது. ஆயுதப் போராட்டத்தை வழிமுறையாகக் கொண்டு விடுதலைபெற்ற அனைத்து இனங்களுக்கும் நாடுகளுக்கும் இருக்கும் அதே உரிமை எமது மக்களுக்கும் எமது போராட்டத்துக்கும் உண்டு என்பதை மனச்சான்றுள்ள அனைவரும் அறிவர்.

ஆயினும் பல நாடுகள் தமது சொந்த பிராந்திய அரசியல் – பொருளாதார நலன்களுக்காக எமது இனத்தின் விடுதலைப் போராட்டம் தொடர்பில் பாராமுகமாக இருந்தமை கவலைக்குரியது. சில வல்லரசுகள் இன்னும் ஒருபடி மேற்சென்று எமது போராட்டத்தை நசுக்கவும் அடியோடு அழிக்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்குத் துணைபுரிந்து கொண்டிருப்பது நியாயமற்றது.

நீண்டகாலமாக பெரும்பான்மையினத்தின் அனைத்துவித அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு தமது விடுதலைக்காக வீறுடன் போராடிக்கொண்டிருந்த ஓரினத்தை ஒட்டுமொத்தமாகச் சிதைக்கவென நடாத்தப்பட்ட இனவழிப்பு நடவடிக்கையில் சிலநாடுகள் அணிதிரண்டு உதவியளித்தபோது மனித உரிமைகளைப்பற்றி பெரிதாகப் பேசிக்கொண்டிருந்த நாடுகளும்கூட கண்டுகொள்ளாமல் இருந்தமை தமிழ்மக்களின் மனங்களில் ஆறாத வடுவாகவே உள்ளது.

உலக வரலாறு கண்டிராத மாபெரும் மனிதப் பேரழிவு முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்டபோதும் சரி அதன்பின்னரும் சரி உலகம் தீர்க்கமான நடவடிக்கையேதும் எடுக்கவில்லையென்பது தமிழ்மக்களை வேதனையின் விளிம்பில் கொண்டுபோய் விட்டுள்ளது.

போரில் வெற்றிபெற்றதாக மமதையோடு அறிவித்த சிங்களப் பேரினவாத அரசு அதன்பின்னர் நடந்துகொண்ட நடந்துகொள்ளும் முறையும் மனித விழுமியங்களுக்கு அப்பாற்பட்டது. தமிழினத்தின் ஆன்மாவையே சிதைக்கும் நடவடிக்கையில் சிங்கள அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. எமது மக்கள் தமது உயிரினும் மேலாக மதித்துப் பூசித்துவந்த மாவீரர் துயிலுமில்லங்களை முற்றாக அழித்து அவை இருந்த இடமே தெரியாத வண்ணம் மாற்றியமைத்துள்ளது. தமிழர் பகுதிகளில் எஞ்சியுள்ள பண்டைய வரலாற்றுச் சின்னங்களையும் தேடித்தேடி அழித்தும் வருகின்றது.

தமிழர் தாயகத்தில் புதிது புதிதாக முளைத்துவரும் புத்தர் சிலைகளும் விகாரைகளும் எமது தேசிய அடையாளத்தைச் சிதைக்கும் நோக்கோடு முன்னெடுக்கப்பட்டுவரும் மறைமுக நடவடிக்கையே. இவை தனியே மத அடையாளங்கள் என்பதையும் தாண்டி எமது தாயகக் கோட்பாட்டைச் சிதைக்கும் நோக்கோடு ஆண்டாண்டு காலமாக சிங்கள – பெளத்த பேரினவாத சக்திகளால் முன்னெடுக்கப்பட்டு வந்த சதித்திட்டங்களே. எமது விடுதலை இயக்கம் தாயகத்தில் பலம்பெற்றிருந்தபோது முடக்கப்பட்டிருந்த இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பு தற்போது தீவிரமாக எமது தாயகத்தில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

அத்தோடு புதிய தொல்பொருள் ஆய்வுகளும் வரலாற்று ஆய்வுகளும் சிங்களப் பேரினவாதத்தால் திட்டமிட்டுப் புனையப்படுகின்றன. தமிழரின் பாரம்பரிய வாழ்விடங்கள் சிங்களவர்களின் பூர்வீக பூமி என்று நிறுவும் நோக்குடன் அப்பட்டமான வரலாற்றுத் திரிப்புக்களையும் புனைகதைகளையும் சிங்களப் பேரினவாதம் கட்டவிழ்த்து விடத் தொடங்கியுள்ளது. தொல்பொருள் ஆய்வுகள் என்று கூறிக்கொண்டு நடாத்தப்படும் வரலாற்றுத் திரிப்புகளும் தமிழரின் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாடுகளும் தமிழர் தாயகத்தின் எல்லைகளை மாற்றியமைக்கும் நிர்வாக மாற்றங்களுமென சிங்களப் பேரினவாதம் முழுமூச்சாக ஈடுபட்டு வருகின்றது. இவ்வாறு தமிழரின் தாயகக் கோட்பாட்டைச் சிதைக்கும் வகையில் சகலவிதமான சதித்திட்டங்களையும் வழிமுறைகளையும் சிங்கள அரசு கைக்கொள்கிறது.

புனர்வாழ்வு அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர் தாயகப்பகுதிகளில் சிறிலங்கா அரசு நிகழ்த்திக்கொண்டிருப்பது நிலஆக்கிரமிப்பே தவிர தமிழ்மக்களுக்கான நிம்மதியான வாழ்வாதாரமன்று. ஆங்காங்கே சிங்களக் குடியிருப்புக்களும் படைக் குடியிருப்புக்களும் நிறுவப்பட்டுக் கொண்டிருப்பது தமிழ்மக்களுக்கான அபிவிருத்தியல்ல. அபிவிருத்தியென்ற போர்வையில் நில ஆக்கிரமிப்பை ஒருபுறம் நிகழ்த்திக்கொண்டு தமிழரின் இனப்பரம்பலைச் சிதைத்து இலங்கைத்தீவை முழுமையான ஒரு சிங்கள – பெளத்த நாடாக்கும் கைங்கரியத்தைத் திட்டமிட்டுச் செயற்படுத்துகிறது சிங்களப் பேரினவாத அரசு.

தமிழீழ மக்களின் ஆயுதப்போராட்டம் மெளனிக்கப்பட்டுள்ள இக்காலப்பகுதியில் சிறிலங்கா அரசு தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டிருக்கிறது. தமிழ்மக்கள் மீதான தனது இரும்புப்பிடியைப் பலவழிகளிலும் அது இறுக்கி வருகின்றது. தமிழரின் அரசியல் அபிலாசைகள் எவற்றையும் பொருட்படுத்தாது தான் நினைத்ததை மட்டுமே நடைமுறைப்படுத்துவதோடு தமிழரின் மீது தனது விருப்புக்களைத் திணித்துக் கொண்டிருக்கிறது சிறிலங்கா அரசு.

தமிழரின் தாயக நிலப்பரப்பு முழுவதையும் சிறிலங்கா ஆயுதப்படைகளின் ஆக்கிரமிப்பில் வைத்திருப்பது மட்டுமல்லாமல் ஓய்வுபெற்ற படையதிகாரிகளை தமிழ்மக்களின் தாயகப்பகுதி எங்கணுமுள்ள மக்கள் நிர்வாகக் கட்டமைப்புக்களுக்கு அதிகாரிகளாகவும் மாகாணங்களின் ஆளுநர்களாகவும் அமர்த்தியுள்ளது. இந்தப் படையதிகாரிகள்தான் கடந்த பல ஆண்டுகளாக தமிழ்மக்கள் மீதான போரின்போது அனைத்து மனித உரிமைகளையும் மீறி தமிழர்களைக் கொடுமைப்படுத்திக் கொன்று குவித்தவர்கள். போர்க்குற்றங்கள் தொடர்பில் பன்னாட்டு மனித உரிமை அமைப்புக்கள் எழுப்பிய எதிர்ப்புக்குரல்கள் எவற்றையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப் போவதில்லை என்பதையே சிறிலங்கா அரசின் இச்செயற்பாடுகள் உணர்த்துகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையால் நிறுவப்பட்டுள்ள போர்க்குற்ற விசாரணைக்கான ஆலோசனைக்குழு எமது மக்களுக்கு புதிய நம்பிக்கையை ஊட்டியுள்ளது. போர்க்குற்ற விசாரணையின் ஊடாக எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் வெளிக்கொண்டு வரப்படுவதோடு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்பதும் எமது இனத்தின் விடுதலைக்கான அங்கீகாரத்தை உலகமட்டத்தில் பெற அது உதவ வேண்டுமென்பதும் எமது மக்களின் அவாவாகும்.

சிங்களப் பேரினவாத அரசு ஐக்கிய நாடுகள் சபையினதும் உலக நாடுகளினதும் முயற்சிகளைப் புறக்கணிப்பதோடு அவற்றை மூர்க்கத்தனமாக எதிர்த்தும் வருகின்றது. கூடவே மனித உரிமை அமைப்புக்களினது வேண்டுகோளையும் கரிசனைகளையும் உதாசீனப்படுத்துகிறது. சுயாதீனமான விசாரணையொன்று நடைபெறுவதை எப்பாடு பட்டாவது தடுத்து விடுவதில் சிறிலங்கா அரசு குறியாகவே இருக்கின்றது.

இவ்வாறு ஒருபக்கம் சுயாதீனமான பன்னாட்டு விசாரணை முயற்சிகளை நிராகரித்துக் கொண்டு கண்துடைப்புக்காக தானே ஒரு விசாரணைக்குழுவை அமைத்துள்ளது. இப்படியான விசாரணைக்குழுக்கள் தொடர்பில் தமிழர்களுக்கு மிக நீண்டகால அனுபவமுண்டு. அவ்வகையிலேயே சிறிலங்கா அரசு அமைத்திருக்கும் “கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு” என்ற நாடகமும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. சிறிலங்கா அரசின் இந்தச் சூழ்ச்சியில் உலகநாடுகளும் மனித உரிமை அமைப்புக்களும் வீழ்ந்து விடாமலிருக்க வேண்டும் என்பதே தமிழ்மக்களின் வேண்டுகோளாகும்.

எமது விடுதலைப் போராட்டத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் போர்நிறுத்தங்களை மேற்கொண்டுள்ளோம். சமாதானப் பேச்சுக்களில் பங்கெடுத்துள்ளோம். இக்காலகட்டத்தில் எதிரி மேற்கொள்ளும் சூழ்ச்சிகளைத் தெரிந்துகொண்டும் நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் பேச்சுக்களுக்குச் சென்றுள்ளோம். அமைதிப் பேச்சுக்கள் தொடர்பில் உலகநாடுகள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எப்போதும் நாம் மதிப்பளித்தே வந்துள்ளோம். அவ்வகையில் 2002 ஆம் ஆண்டு நோர்வே தலைமையிலான சமாதான ஏற்பாட்டாளர்களின் துணையோடு சிறிலங்கா அரசுடனான புரிந்துணர்வு உடன்படிக்கையை நாம் ஏற்றுக்கொண்டோம்.

சிங்களப் பேரினவாத அரசாங்கங்களோடு தமிழ்த் தலைமைகள் கடந்த காலங்களில் ஏற்படுத்திய பல உடன்படிக்கைகள் காலத்துக்குக் காலம் சிங்கள அரசாங்கங்களால் தூக்கி வீசப்பட்டன. தமிழர்களாகிய நாம் எப்போதுமே எந்த உடன்படிக்கையிலிருந்தும் நாமாக விலகிக் கொண்டதில்லை. அதேபோலவே 2002 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையிலிருந்தும் இறுதிவரை வெளியேறாமலே இருந்தோம்.

ஆனால் மகிந்த இராஜபக்ச அரசு அவ்வுடன்படிக்கையைக் கிழித்தெறிந்து நோர்வேயின் நடுநிலைமையையும் அசட்டை செய்து தமிழர் தாயகமெங்கும் பெரும்போரை நடாத்தி மாபெரும் மானுட அழிவைத் தமிழர்மேல் கட்டவிழ்த்து விட்டது. தமிழர் தேசத்தில் தமிழர்களை ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலையில் வாழ்பவர்களைப் போலவே இப்போது நடாத்தி வருகின்றது. மகிந்த இராஜபக்ச அரசானது நோர்வே உட்பட்ட இணைத்தலைமை நாடுகளின் நடுநிலைத் தன்மையைக் கேலிக்குரியதாக்கி இருக்கின்றது.

தேசிய இனங்களின் விடுதலையென்பது பன்னாட்டு ஒழுங்குவிதிகளுக்கு உட்பட்டதென்பதை நாம் நன்கு அறிவோம். பன்னாட்டு ஒழுங்குவிதிகளை மதித்தே நாம் எமது விடுதலைப் போராட்டத்தை மேற்கொண்டு வந்திருக்கின்றோம். உலக நாடுகளினது ஆலோசனைகளுக்கும் கருத்துக்களுக்கும் மதிப்பளித்தே வந்துள்ளோம்.

எமது போராளிகள் பன்னாட்டு மனிதாபிமான ஏற்பாட்டாளர்களின் வாக்குறுதிகளை ஏற்று மேற்கொண்ட முயற்சிகள் சிங்கள அரசால் கொடூரமான முறையில் எதிர்கொள்ளப்பட்டன. எமது போராளிகள் பலர் உலக நியதிக்குப் புறம்பாகக் கொல்லப்பட்டதோடு ஏனையவர்கள் இன்றும் சிறைக்கூடங்களில் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவது மட்டுமல்லாமல் தொடர்ச்சியாகக் காணாமற் போய்க்கொண்டும் இருக்கிறார்கள்.

பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் சிறிலங்கா அரச பயங்கரவாதச் சிறைகளில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதும் காணாமற்போவதும் பன்னாட்டு மனித உரிமை அமைப்புக்களுக்குத் தெரியாமலிருக்க முடியாது.

எமது அன்புக்குரிய தமிழ்பேசும் மக்களே

எமது விடுதலைப் போராட்டம் இப்போது பல சவால்கள் நிறைந்த நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் காலத்துக்கேற்ப உலக ஒழுங்குகளுக்கு அமைய மாற்றங்களைச் செய்து அவற்றை எமக்குச் சாதகமாக்கி தமிழீழ விடுதலையை வென்றெடுப்பதற்கான போராட்டத்தை நாம் தொடர்ந்தும் முன்னெடுப்போம்.

தங்கள் பூர்வீக நிலத்தில் இறைமையோடு வாழ்ந்த ஒரு தேசிய இனம் அழிக்கப்படும்போது தம்மைத் தாமே காப்பாற்றிக்கொள்ளப் போராடுவது பயங்கரவாதம் ஆகாது. எங்களின் விடுதலைப் பயணத்தில் உலகநாடுகள் நியாயத்தைப் புரிந்துகொள்ளாமல் எமது அமைப்பை பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிட்டதை வேதனையோடு பார்க்கின்றோம்.

சிங்களப் பேரினவாத அரசின் அரசபயங்கரவாதத்துக்கு எதிராக எமது மக்களது அரசியல் முன்னெடுப்புக்களை நாம் சுதந்திரமாக முன்னெடுப்பதற்கு உலகநாடுகள் எம்மைப் புரிந்துகொண்டு நீதியான நியாயமான முறையில் வழிவிட வேண்டுமென்று அன்போடு வேண்டி நிற்கின்றோம்.

இந்திய தேசத்தின் மீது ஆழ்ந்த பற்றுதல் காலங்காலமாக தமிழ் மக்களுக்குண்டு. எமது விடுதலைப் போராட்டமும் இதற்கு எந்தவகையிலும் எதிரானதன்று. எமது மக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் இந்தியாவின் தேசிய நலனோடு பின்னிப் பிணைந்துள்ளன.

எமது ஆயுதப்போராட்டத்தின் பின்னடைவும் சிங்கள அரசின் படை மேலாதிக்கமும் தமிழர் தேசத்தில் அமைக்கப்படுகின்ற பெரும் சிங்களப் படைத்தளங்களும் அத்தளங்களை அமைக்க உதவி புரியும் நாடுகளின் கபடத்தனமும் இந்திய தேசத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளன. இந்தியாவோடு எம்மக்களுக்கு இருந்த உறவு சிங்கள ஆட்சியாளர்களின் துப்பாக்கி முனையில் சிறுகச்சிறுக சிதைவடைந்து போகாமலிருப்பதை இந்தியாவே உறுதிசெய்ய வேண்டும்.
எமது மக்களின் அவலங்களைப் பார்த்து துடியாய்த் துடித்த தமிழக உறவுகளின் உணர்வும் எமக்கு ஆதரவாக அவர்கள் நடாத்திய போராட்டங்களும் எமது மக்களுக்கு நம்பிக்கையையும் எழுச்சியையும் ஊட்டியுள்ளன. கடல் எம்மைப் பிரித்தாலும் மொழியால் உணர்வால் நாம் தனித்தவர்களில்லை என்பதை தமிழ்நாட்டு எழுச்சிப் போராட்டங்கள் எங்களுக்கு உணர்த்தி நிற்கின்றன. இப்போராட்டங்களின்போது தம்மையே எரித்து தம்முயிரை ஈகம் செய்த வீரமறவர்களையும் இந்நாளில் நினைவு கூறுகின்றோம்.

மேலும் சிங்களப் பேரினவாத அரசாங்கத்தால் முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட பெரும் இனப்படுகொலையைக் கண்டித்து எமக்கு ஆதரவாகப் போராட்டங்களை நடாத்திய தமிழ்பேசும் ஏனைய நாட்டவரையும் அத்தோடு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உண்மையைப் புரிந்துகொண்டு எமது மக்களோடு இணைந்து போராட்டங்களில் பங்கெடுத்த ஏனைய இனத்தவரின் மனிதநேயத்தையும் மதிப்போடு நினைவு கொள்கின்றோம்.

எமது அன்புக்குரிய புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களே

தாயக மண்ணில் எமது மக்கள் சிங்களப் படையினரின் திறந்தவெளிச் சிறைக்குள்ளேயே வாழ்கின்றார்கள். இந்நிலையில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெரும்பளுவை இப்போது நீங்களே சுமக்க வேண்டியுள்ளது. பேரவலத்தைச் சந்தித்து நிற்கும் எமது தாயகத்து உறவுகளின் துயரத்தைத் துடைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பெரும் பொறுப்பும் உங்களிடமே உள்ளது.

நாங்கள் ஒரு தேசிய இனம் என்பதை உலகநாடுகள் பல ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் தமிழ்மக்கள் வாழ்கின்ற நாடுகளில் எமது விடுதலைப் போராட்டத்தைக் கட்டி வளர்க்க வேண்டிய பொறுப்பு இளம் சந்ததியினரின் கைகளிலும் தங்கியுள்ளது.

சிறிலங்கா அரசின் பயங்கரவாத முகத்தை உலகின் கண்முன் வெளிப்படுத்தி சாத்தியமான வழிகளில் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். மொழியால் இனத்தால் பண்பாட்டால் ஒன்றித்து ஒற்றுமையோடும் தேசிய உணர்வோடும் உலகத் தமிழர்கள் போராட வேண்டுமென்பதே எமது அவாவாகும்.

எமது அன்புக்குரிய உலகத்தமிழ் உறவுகளே

சிங்கள அரசானது ஒருபோதும் தமிழர்களுக்கான நியாயத்தை வழங்கப் போவதில்லையென்பதை காலத்துக்குக் காலம் தொடர்ந்தும் நிரூபித்து வருகின்றது. எம்மினத்தை அடக்கி ஒடுக்கி இலங்கைத்தீவு முழுவதையும் சிங்கள – பெளத்த நாடாக்க வேண்டுமென்று தீவிரமாய்ச் செயற்படுகின்றது. சிறிலங்கா அரசானது தமிழரின் அரசியல் வேட்கையை முழுமையாக அழித்து தமிழரின் தாயகக் கோட்பாட்டைச் சிதைக்கும் நடவடிக்கையைத் தீவிரமாக மேற்கொண்டுள்ளது.

தமிழர்களின் அரசியல் உரிமையை சிதறடிக்கக்கூடிய திட்டங்களையே தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது. போர் ஓய்ந்ததாகக் கூறிக்கொள்ளும் இந்நிலையிலும்கூட தமிழர்களுக்கான எந்தவொரு நியாயமான தீர்வுத்திட்டத்தையும் வழங்க சிறிலங்கா அரசு முன்வரவில்லை. அடக்குமுறையென்ற ஒரேயொரு தீர்வை மட்டுமே சிங்கள தேசம் தமிழ் மக்களுக்கு விட்டு வைத்திருக்கின்றது.

இந்நிலையில் தமிழ் மக்களுக்கான விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை. இலங்கைத்தீவில் தமிழரும் சிங்களவரும் சேர்ந்து வாழ முடியாதென்ற நிலை முன்னெப்போதையும்விட இப்போதுதான் மேலும் வலுவடைந்துள்ளது.

அன்பான தமிழீழ மக்களே

எமது விடுதலைப் போராட்டப் பயணத்தில் சாவுகளையும் அழிவுகளையும் இடைவிடாத துன்பங்களையும் கண்டு நாம் சோர்ந்துவிடப் போவதில்லை.

எமது மாவீர்களின் கல்லறைகளை இரும்புக்கரம் கொண்டு இடித்தழித்து அவர்களின் வரலாற்றை அழித்துவிட முடியாது. ஒவ்வொரு தமிழரின் நெஞ்சத்தினுள்ளும் மாவீரர்கள் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

மாவீரர்கள் சத்திய வேள்விக்காய் தம்மை ஆகுதியாக்கியவர்கள். இரத்தமும் சதையும் கலந்து எமது விடுதலைப் போராட்டத்தைச் செதுக்கிய சிற்பிகள். அவர்களின் இலட்சிய உறுதி என்றும் எம்மை வழிநடாத்தும்.

இலட்சியத்தில் ஒன்றுபட்டு அடக்குமுறைக்கெதிராகப் போராடும் மக்களை எந்தவொரு ஆக்கிரமிப்புச் சக்தியாலும் அடக்கிவிட முடியாது. இந்த வரலாற்று நியதிக்கமைய உலகத் தமிழர்களின் முகவரியை வீரத்தால் பதித்துவிட்டுச் சென்ற அந்த வீரமறவர்களை நினைவுகூறும் இந்நாளில் விடுதலையென்ற எமது சத்திய இலட்சியத்துக்காகப் போராட உறுதி கொள்வோமாக.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

தலைமைச் செயலகம்
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்.