Showing posts with label போரின் இறுதிநாட்களில். Show all posts
Showing posts with label போரின் இறுதிநாட்களில். Show all posts

Monday, April 26, 2010

வன்னியின் கடைசி மாதம் 23,24,25 ஏப்ரல் 2009 முள்ளிவாய்க்காலில்

பாதுகாப்பு வலையத்தில் தொடர் விமான தாக்குதல்

23 ஆம் திகதி காலை தொடக்கம் இலங்கை விமானப்படை, தரைப்படை மற்றும் கடற்படையினர் தமது கனரக தாக்குதல்களை நிறுத்தவில்லை மக்கள் வெளியேறாமல் தடுப்பதற்காகவும் கணிசமான மக்களை கொன்று காயப்படுத்திலிற்கு உள்ளாக்குவதற்காகவும் தொடர்ந்து தாக்குதலினை மேற்கொ|ண்டவண்ணம் இருந்தனர்.

50 பொதுமக்களை கொன்றாலும் பரவாயில்லை ஒரு புலியை காயபடுத்துவோம் அல்லது கொல்வோம் என்ற இலக்கில் அரச படைகள் செயற்பட்டன. கூடவே வன்னி மக்கள் நீண்டகாலமாக ஆயுத போராட்டத்தின் தூண்களாக இருந்தவர்கள் என்பதனால் அவர்களில் கணிசமான அளவினை முடித்தே ஆகவேண்டும் என்பதிலும் சிங்கள அரசு உறுதியாக இருந்தது.

இன்றைய (23.04.2009)இந்திய அதிகாரிகளின் அறிக்கை

இந்த நிலையில் வழமையான பாணியில் இந்தியாவின் கூலிகளான எம்.கே நாராயணனும் (பாதுகாப்பு ஆலோசகர்), சிவசங்கர் மேனன்( வெளிவிவகார செயலர்) ஆகியோர் முதலை கண்ணீர் வடித்து ஓர் அறிக்கை விட்டனர். அதாவது தமிழ் நாட்டு தமிழர்களை ஏமாற்றுவதற்காகவே இந்த அறிக்கை.

இந்த அறிக்கையில் பாதுகாப்பு வலையத்தில் தாக்குதல் நடப்பதும் அங்கு மக்கள் கொல்லப்படுவதும் கவலை அளிப்பதாகவும் கூறப்பட்டது. இதற்கு இலங்கை அரசாங்கமும் ஓமோம் நாங்கள் கொஞ்சம் கவனமாக அடிக்குமாறு எங்கள் படைகளுக்கு அறிவிக்கின்றம் என கூறியது. வேடிக்கை என்னவெனில் இதனை தமிழ் நாட்டு அரசாங்கம் ஏற்றுக்கொண்டதே.
பான் கி மூனின் மனிதாபிமான குழு திட்ட முன்மொழிவு

இதே வேளை பான் கி மூன் அவர்கள் உடனடியாக பாதுகாப்பு வலையத்திற்குள் சிக்கியுள்ள மக்களை மீட்க இலங்கைக்கு மனிதாபிமான குழு ஒன்றினை அனுப்ப போவதாக கூறி இருந்தார். ஆனால் அதனை எப்படி எவ்வாறு செய்வது என்பதனை கூறவில்லை. அதனால் இதுவும் ஓர் இழுத்தடிப்பாகவே இருந்தது. அதாவது திட்டங்களை கூறுவதன் மூலம் பிறர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தாமதமாக்குவதே இதன் நோக்கம். உண்மையிலேயே பான்கி மூன் சொன்ன உடனேயே மனிதாபிமான குழுவினை முள்ளிவாய்க்காலிற்கு அனுப்பி இருந்தால் நாளை (25.04.2009) நடைபெறவிருந்த மிக கொடூரமான தாக்குதலினை நிறுத்தி இருக்க முடியும் ஏன் முள்ளிவாய்க்காலில் இறுதியில் நடந்தேறிய படுகொலைகளும் நிறுத்தப்பட்டிருக்கும்.

பிரித்தானியாவின் பிரயோசனமில்லா அறிக்கையும் பிரித்தானிய தமிழர்களும்

இதே வேளை பிரித்தானியாவின் வெளியுறவு செயலர் டேவிட் மில்லிபாண்ட் இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுப்பதாக கூறி முன்னைய அறிக்கை ஒன்றினை திகதிமாற்றம் செய்து விட்டிருந்தார். அதாவது பிரிட்டன் இலங்கை அரசினை ; மக்களை பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்குமாறு தாம் அழுத்தம் கொடுப்பதாக அந்த அறிக்கை இருந்தது. இறுதிவரை இலங்கை அரசு எதற்கும் தலை சாய்க்காது என தெரிந்தும் கூட மீண்டும் மீண்டும் இவ்வாறான அறிக்கைகளை வெளியிட்டு கொண்டிருந்தமை பிரித்தானிய தமிழர்களை ஏமாற்றி தமக்கு ஆதரவு தேடும் முயற்சியே தவிர வேறெதுவும் இருப்பதாக தெரியவில்லை.

அடுத்ததாக பிரித்தானிய பாராளுமன்றம் ஏப்ரல் 29, 2009 அன்று பராளுமன்றில் இலங்கை நிலவரம் தொடர்பில் விவாதம் நடத்துவதாக இன்று அறிவித்தது. பிரித்தானிய தமிழர்கள் அந்த விவாதத்தில் ஏதாவது முன்னேற்றம் கிடைக்குமா என ஏங்கி எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் இளையோர்கள் இவற்றை எதிர்பார்க்காது வீதியில் இறங்கி போராடிக்கொண்டிருந்தனர்.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையும் நம்பியாரும்

இன்று ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை ( 15 நாடுகள்) கூடியது. இதில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபைக்கு இலங்கை சென்றிருந்த நம்பியார் தனது அறிக்கயினை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பின்னர் அவர் மூடிய அறைக்குள் தான் தனது அறிக்கயினை வாசிப்பார் அதாவது அவரது அறிக்கை பகிரங்கமாக இருக்காது என அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே நம்பியாரின் அசைவில் நம்பிக்கையற்று இருந்த தமிழர்களும் மனித உரிமை அமைப்புக்களும் மூடிய அறையில் அறிக்கை வாசிக்கப்படும் என்று கேள்விப்பட்டதும் இருந்த சிறிது நம்பிக்கையும் போய்விட்டது.

நம்பியார் மூடிய அறையில் தனது அறிக்கையினை தாக்கல் செய்தார். அதன் பின்னர் பாதுகாப்பு சபை கூடி ஓர் அறிக்கை விட்டது. அந்த அறிக்கையினை (23.ஏப்ரல் 2009) பாதுகாப்பு சபைக்கு தலைவராக இருக்கும் மெக்சிக்கோ நாட்டவரான கிளவுட் ஹெல்லெர் வாசித்தார்.

அந்த அறிக்கையில் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைய வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான மீட்பு பணிகளுக்கு உதவ வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. கூடவே இலங்கை அரசும் சர்வதேச சட்டங்களை மதித்து நடக்கவேண்டும் என்றும் கூறியது. ஆனால் போரை நிறுத்துமாறு அரசாங்கத்தினை கேட்கவில்லை.

இதே வேளை போர் நிறுத்தம் ஒன்றை அறிவித்து மக்களை வெளியேற்ற தாம் தயாராக இருப்பதாக புலிகள் அறிவித்தனர். ஆனால் அனைத்துலகம் போரை நிறுத்தாமல் மக்களை வெளியேறுமாறு கேட்டது. பல தடவை மக்கள் வெளியேறியபோது அந்த மக்கள் மீது விமான தாக்குதல் நடத்தப்பட்டமைக்கான வீடியோ, புகைப்பட ஆதாரங்கள் உள்ளன. கூடவே புலிபோராளிகளும் மக்களை தாக்கியதாக கூறப்பட்டது. இந்த நிலையில் மக்களை வெளியேற்ற வேண்டுமாயின் போர் நிறுத்தம் அவசியம் என்பதனை அனைத்துலகம் விளங்கவில்லையா அல்லது வேணும் என்றே விட்டார்களா?
24 ஏப்ரல் 2009

இன்றும் விமானத்தாக்குதல்கள் கடற்கரையோரங்களில் நடந்தன கூடவே கடலாலும் தரையாலும் மக்கள் மற்றும் போராளிகள் தப்பி செல்லலாம் என்றும் அத்துடன் உணவு மருந்து வினியோகங்களை தடுப்பதற்காகவும் பாதுகாப்பு வலையத்தினை சூழ தாக்குதல்கள் நடந்த வண்ணம் இருந்தது. கடந்த நான்கு நாட்களாக உணவோ, நல்ல குடினீரோ இன்றி மக்கள் பலர் மயக்கமுற்ற நிலையில் இருந்தனர். பலர் பதுங்கு குழிக்குள்ளேயே தமது விதி இதுதான் என படுத்துறங்கிய வண்ணம் உயிரை விட்டனர். காயப்பட்டோரை மருத்துவ அதிகாரிகள் மட்டுமன்றி காயப்பட்டோரின் உறவினர்கள் கூட கைவிட்டு விட்டனர். அவர்களால் கடவுளை மறாடுவதனை விட வேறு எதனையும் செய்ய முடியவில்லை. அவரவர் தமக்கு வேண்டிய கடவுளரை மன்றாடிய வண்ணம் இருந்தனர்.

இந்திய அமைச்சர் சிதம்பரத்தின் அறிக்கை

இந்திய அமைச்சர் சிதம்பரம் இன்று ஓர் இணைய தளத்திற்கு பேசுகையில் இலங்கை அரசாங்கம் புலிகளை விட கொஞ்சம் மோசமாகவே செயற்படுவதாக கூறினார். இலங்கை அரசும் புலிகளும் போரை நிறுத்துவதில் அக்கறை காட்டவில்லை; இந்தியாவின் சொல்லை கேட்கவில்லை என்று கூறினார். கூடவே கொழும்பு இராணுவ தீர்வினையே முன் நிறுத்தி இருப்பதாகவும் கூறினார். ஆனால் சிதம்பரம் அவர்களுக்கு புலிகள் எப்போதே போர் நிறுத்தம் செய்ய தயார் என அறிவித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆனால் சிவசிதம்பரத்தின் இந்த பேச்சு அவர் தேர்தலில் நிற்கப்போகும் சிவ கங்கை தொகுதியில் வேட்பு மனு தாக்குதல் செய்ய வந்த போதே பேசினார். ஆகவே அவரும் எவ்வாறு தமிழ் நாட்டு தமிழர்களை ஏமாற்றி வாக்கு பெறலாம் என்ற வகையில் தான் கொழும்பை சாதுவாக சாடி பேசிவிட்டு சென்றார்.

மஹிந்த - நாராயணன் - சிவசங்கர் மேனன் சந்திப்பு

இந்திய தேர்தல் நெருங்கும் வேளை இந்திய வெளிவிவகார செயலர் சிவசங்கர் மேனன், பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணன் ஆகியோர் கொழும்பில் இன்றைய தினம் மஹிந்தவுடன் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தனர். 90 நிமிடம் நடைபெற்ற சந்திப்பில் என்ன கதைத்தார்கள் என்பதனை இந்திய அதிகாரிகள் இருவரும் கூற மறுத்துவிட்டனர். ஆனால் இலங்கை அரசு கூறியது என்னவெனில் பேச்சு வார்த்தை நன்றாக இடம்பெற்றது. கூடவே போர் நிறுத்தம் பற்றியோ பேச்சுவார்த்தைபற்றியோ எதுவும் கலந்துரையாடப்படவில்லை என்றும் தகவல் வெளியானது. ஆனால் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் வெற்றிக்கு பாதிப்பு இல்லாமல் தாக்குதலை செய்யுமாறு தான் கலந்துரையாடல் இடம்பெற்றதாக தகவல் கசிந்தது.

ஆனால், இதே வேளை இந்திய வெளி நாட்டமைச்சர் பிரணாப் முகர்ஜீ பத்திரிகையாளர்களுக்கு இன்றைய தினம் கருத்து தெரிவிக்கையில் இலங்கையில் தொடரும் வன்முறைகளும் பொதுமக்கள் கொல்லப்படுவதும் தமக்கு சந்தோசத்தினை தருவதாக இருக்காது என்றும். ஆகவே உடனடியாக போர் நிறுத்தத்தினை கொண்டுவரவேண்டும் என்றும் பேச்சளவில் கூறினார்.

இன்னர் சிற்றி பிறஸ் கேள்வி கணைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்

இன்று நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் பத்திரிகையாளர் கேள்வி நேரத்தில் இன்னர் சிற்றி பிறெஸ் பல கேள்விகளை கேட்டது. அதில் முக்கியமாக அவர்கள் கேட்டது என்னவெனில்

நம்பியார் இலங்கை சென்று திரும்புகையில் இந்தியா சென்று வந்துள்ளார். அவர் அங்கே யாரை சந்தித்தார்? எந்த தலைவரை சந்தித்தார்?
டாபூரில் பல என்.ஜி.ஓ க்கள் வெளியேறியமைக்கு ஐக்கி நாடுகள் சபை நடவடிக்கை எடுத்தது. ஆனால் முள்ளிவாய்க்காலிற்குள் இருந்து சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உட்பட பலர் வெளியேற்றப்பட்ட நிலையில் ஏன் ஐக்கிய நாடுகள் நடவடிக்கை எடுக்கவில்லை?
முள்ளி வாய்க்காலிற்குள் இருந்து அரச வைத்தியர்களை வெளியேறுமாறு அரசாங்கம் பணித்துள்ளது. ஆகவே இதனை ஏன் ஐ. நா கேட்கவில்லை?

இவ்வாறு பல கேள்விகளை ஐக்கிய நாடுகள் சபை துணை பேச்சாளர்களான மேரி ஒகாபே மற்றும் மிஸ் பிக் ஆகியோரை கேட்டனர்.

ஆனால் இந்த பேச்சாளர்கள் பான் கி மூன் பல தடவை அறிக்கைகள் விட்டிருக்கின்றார் என்று கூறி மழுப்பினரே தவிர சரியான விடைகளை கொடுக்க முடியவில்லை.

இதே வேளை ஐக்கிய நாடுகள் சபை இன்று வரை 6500 சிவிலியன்கள் கொல்லப்பட்டும் 14,000 பேர் காயப்பட்டும் உள்ளதாக கூறியுள்ளது.
25 ஏப்ரல் 2009

இன்று வலைஞன் மடம் பகுதியில் கஞ்சி பெறுவதற்காக கூடி இருந்த மக்கள் மீதும் கடற்கரை பகுதியில் கூடாரத்தினுல் இருந்த காயப்பட்ட மக்கள் மீதும் இலங்கை விமானப்படை கோரமாக குண்டுகளை வீசியது. ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கைக்கு சவாலாகவோ அல்லது அவற்றை புறக்கணிப்பதற்காகவே தான் இந்த தாக்குதல் அமைந்திருக்கவேண்டும்.

மிக், கிபிர் விமானங்களின் இந்த தாக்குதலில் 341 அப்பாவின் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். 400 இற்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த பகுதியில் காலை தொடக்கம் மாலை வரை முறையே காலை 10.15 மதியம் 2.15 , 2.30, பின்னேரம் 5.15 ஆகிய நேரங்களில் விமானத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் 184 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

2.15 அளவில் முள்ளிவாய்கால் மேற்குபகுதியில் மேற்கொள்ளப்பட்ட விமான தாக்குதலில் 126 பேர் கொல்லப்பட்டனர் இந்த நடவடிக்கை சுமார் 15 நிமிடம் மேற்கொள்ளப்பட்டது 16 இற்கு மெற்பட்ட 250 இறாத்தல் குண்டுகள் போடப்பட்டதாக கள படப்பிடிப்பாளர் பதிவாக்கியுள்ளார்.

இதே வேளை மாலை 5.15 இற்கு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 48 பேர் கொல்லப்பட்டனர். இன்று மாலை புனர்வாழ்வுக்கழகத்தால் கஞ்சி வழங்கப்பட்டதுடன் கூடவே உலர் பருப்பும் குழந்தைகள் உள்ள குடும்பங்களிற்கு நிவாரணமாக வழங்கப்பட்டது.

Tuesday, September 22, 2009

இறுதி போரை நேரில் கண்ட சிவரூபன்: மே-17 வரை நந்திக்கடலருகே நின்ற இவர், இலங்கை இராணுவத்தினரின் இன அழிப்பு கொடூரத்தை விபரிக்கிறார்

 [செவ்வாய்க்கிழமை, 22 செப்ரெம்பர் 2009]
இன அழித்தல் நடந்த இறுதி நாட்களின் கொடூரத்தை நான் இங்கு எழுதுவதுகூட உங்களின் கழிவிரக்கம் கேட்டல்ல. என்றேனும் ஒருநாள் எமது மக்களுக்கான உரிமைகளை நீங்கள் பெற்றுத் தருவீர்களென்ற நம்பிக்கையில்தான் நான் எழுதுகிறேன். இவ்வாறு முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிக்கட்ட போரில் நந்திக்கடல் அருகில் இடம்பெற்ற இலங்கை இராணுவத்தின் தமிழ் இன அழிப்பை நேரில் கண்ட சாட்சியாக இங்கு விபரிக்கின்றார்.

இதோ சிவரூபன் பேசுகிறார்:

“”ஐ.நா.சபையே, வல்லரசுகளே, உலகின் தலைவர்களே, ஊடகத்துறையினரே, எமது போராட்டத்தின் எதிர்கால நம்பிக்கையாகவும் உயிராகவும் இருக்கிற தமிழ்நாட்டு உறவுகளே!

நான் எழுத்தாளனோ, சிந்தனையாளனோ அல்ல. போராட்ட இயக்கமும் வாழ்வும் கற்றுத் தந்தவற்றைத் தவிர வேறெங்கும்போய் பெரிய படிப்பு படித்தவனுமல்ல. கண்ணெதிரே கண்ட கொடூரமான தமிழ் இன அழித்தலின் சில காட்சிகளை எழுத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன். எம் இன மக்களின் கொடூர அழிவைக் கண்டும் மௌனமாயிருந்த சர்வதேச சமூகத்தின் மீதான அவநம்பிக்கையும் நான் எழுதுவதற்கு முக்கிய காரணம்.

பசியின் வலியும், பிழிந்த தாகமும், பிரிவின் தவிப்பும், வெடிகுண்டுகளின் வெக்கையும், படு கொலைகளின் கொடூரமும், சகலமும் முடிந்துபோகிற தருணத்தின் திகிலுமாய் நாங்கள் வெள்ளாம் முள்ளிவாய்க்கால் பரப்பில் நின்றிருந்த அக்கடைசி நாட்களில் இரண்டு நம்பிக்கைகளை கடைசிவரை கொண்டிருந்தோம். “தாய் தமிழ்நாட்டு உறவுகள் எம்மை கைவிடமாட்டார்கள், அமெரிக்கா எப்படி யாவது எமது உதவிக்கு வரும்’ அந்த நாட்களின் வலியை எம்மால் வார்த்தைகளில் வருணிக்க முடியாது. அங்கு நின்று அனுபவிக்காதவர்களால் அதனை புரிந்துகொள்ளவும் முடியாது.

இதனைக்கூட நான் ஒரே ஒரு மன்றாட்டத்துடன் தான் எழுதுகிறேன். சர்வதேசமே! உயிரான தமிழ்நாட்டு உறவுகளே! இறக்கைகள் வெட்டப்பட்டு, கம்பிவேலிகளுக் குள் அடைக்கப்பட்டு, பாலைவனத்தில் வெந்து துடிக்கும் மண்புழுக்கள்போல், தமிழர்களாய் பிறந்ததைத் தவிர வேறெந்த குற்றமோ பாவமோ செய்யாத, உடல் சோர்ந்து, உளம் நலிந்து, உணர்வு செத்து, நா வறண்டு, இதய நாடிகள் ஒடுங்கி, வார்த்தைகள் முடிந்துபோய் வாடிக் கொண்டிருக்கும் எம் உறவுகளை எப்படியாவது காப்பாற் றுங்கள். சுதந்திர வேட்கைக்கெல்லாம் அப்பால் இம்மக்களுக்காய் இன்று நாங்கள் வேண்டுவது பெரிதாக எதுவுமில்லை. உணவு, குடிநீர், அச்சமின்றிக் கண்ணுறங்க தமது குடிசை, மணியோசை கேட்க எமது சிறு கோயில்கள். இப்போதைக்கு இவ்வளவும் போதும்.

இன அழித்தல் நடந்த இறுதி நாட்களின் கொடூ ரத்தை நான் இங்கு எழுதுவதுகூட உங்களின் கழிவிரக் கம் கேட்டல்ல. என்றேனும் ஒருநாள் எமது மக்களுக்கான உரிமைகளை நீங்கள் பெற்றுத் தருவீர்களென்ற நம்பிக்கையில்தான் நான் எழுதுகிறேன்.

அன்று வைகாசி 16. நள்ளிரவு கடந்திருந்தது. வழமையை விட இருள் கனத்திருந்தது போன்ற உணர்வு. ஏதோ நடக்கப்போகிற தென்ற திகில் எங்கும் சூழ்ந்திருந் தது. அதிகாலை 3 மணி இருக்க லாம். தொடங்கிற்று ஊழித்தாண்டவம். முள்ளிவாய்க் காலில் இருந்து முல்லைவட்டுவாகல் நோக்கி முன்னூறு மீட்டர் நீளத்திலும் வட ஆழ்கடலில் இருந்து நந்திக்கடல் திசையாக ஐநூறு மீட்டர் அகலத்திலுள்ளுமாய் ராணுவ வேலிக்குள் அடைக்கப்பட்டிருந்த மூன்று லட்சத்திற்கும் மேலான மக்களைச் சுற்றி ராஜபக்சேவின் பிணம்தின்னிப் பேய்கள் பேரவலத்தின் இறுதிப் போரை தொடங்கின.

வைகாசி-17 அதிகாலை. கோடி சிங்கங்கள் சேர்ந்து கர்ஜித்தால் எழும் ஓங்கார ஓசையுடன் ராட்சஸ கொடுங்கோலன் ராஜபக்சேவின் ஏவலில், தமிழ்ப் பிணம் தின்னும் கழுகு பொன்சேகா வழிநடத்த, “தமிழரை அழித்து தீர்த்த பின்னரே அடுத்த வேலை’ என நின்ற கோத்தபய்யா பின்நிற்க, மூன்றாம் உலக யுத்தம்போல் மூன்று லட்சம் மக்கள் மீதான தாக்குதல் தொடங்கியது. புயலடித்தால் தாவ முடியாமல் தவிக்கும் காட்டு மந்திகள் போல் எம்மக்கள் அங்குமிங்கும் ஓடினார்கள். சிங்களக் கொலைவெறிப் படைகளுக்கு பிரபாகரனின் படைகள் தக்க பதில் தந்திருக்க முடியும். ஆனால் முடியாது போயிற்று. ஏன் தெரியுமா…?

“”இனப்படுகொலையை அரங்கேற்ற இந்தியா ராணுவ உதவிகள், இந்திரா ரடார், செயற்கைக்கோள் செய்மதி உதவியெல்லாம் செய்து கொடுத்தது. சீனா ராக்கெட்டுகளும், ரசாயன ஆயுதங்களும் அள்ளிக் கொடுத்தது. ரஷ்யா டாங்குகள் மட்டுமல்ல பீரங்கிகளுடன் கவச வாகனங்களும் கொடுத்து, தானே நேரில் வந்து கள ஆலோசனைகள் தரவும் தயாராய் இருந்ததாம். பக்கதுணையாய் ஏவுகணைகளும் பலகோடி பெறுமதியுடைய ஆயுதங்களும் தந்தது பாகிஸ்தான். உலகின் அத்தனை பெரிய நாடுகளின் ராணுவ வளங்களும் சுற்றி நிற்க தமிழருக்கென தலைவன் உருவாக்கிய படைகள் தனித்து நின்று எந்தளவுக்குத்தான் தாக்குப் பிடிக்க முடியும்?

இப்படித்தான் மே-17 இறுதி யுத்தம் நடந்தது. நடப்பது கனவா, கற்பனையா என்று புரியாமல் நின்றோம். நாற்திசையிலிருந்தும் எறிகணைகள். எங்கெங்கிருந்தோ ரசாயன எறிகுண்டுகள். இடைவெளியில்லா துப்பாக்கி வேட்டுகள். சற்றே நிமிடம் ஷெல் மழை ஓய்ந்ததும் பதுங்கிப் பதுங்கி பங்கரில் இருந்து வெளியே வந்து பார்த்தேன். அவலத்தின் பெருங்கொடுமை கண்ணெதிரில் முள்ளிவாய்க்கால் பரப்பெங்கும் விரிந்து கிடந்தது.

பதுங்கு குழிக்குள் ஓடி ஒளியுமுன் நான் பார்த் திருந்த தமிழ் உறவுகள் சதைத் துண்டுகளாகிக் கிடந்தன. ஆண், பெண், பெரியோர், குழந்தைகள் வேறுபாடு எதுவும் தெரிய வில்லை. தலை வேறு, கால் வேறு, உடல் வேறாக பிணக் காடாய் கிடந்தது. சற்று தூரத்தில் தலைவிரிகோல மாய் தாய் ஒருவர் தலையற்ற உடல் ஒன்றை மடியில் கிடத்தி அழுது கதறிக்கொண்டிருந்தார். “”கடவுளே… ஏன் எங்களுக்கு இந்த அவலம்? என்ட ராசாவின்டெ முகத்தைக் கூட பார்க்க முடியலியே. பாவி ராஜபக்சவே… வா… என்னையும் கொன்றுபோடு” என்று அழுது புலம்பிக்கொண்டிருந்தாள். திடீரென எங்கிருந்தோ வந்த துப்பாக்கி ரவையொன்று அவளின் தலையை சிதைத்துச் சென்றது. குரலின்றி தரை சாய்ந்தாள் அந்தத் தாய். முகம் கவிழ்ந்து ஈழ மண்ணை முத்தமிட்டபடியே பிணமானாள்.

பக்கத்து பங்கருக்குள்ளிருந்து தம்பி… என்று சன்னமாய் குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். மார்பில், வயிற்றில், காலில் குண்டு காயங்களோடு ரத்தம் வழிந்த நிலையில் முதியவர் ஒருவர் “ஆரேனும் என்னெ காப்பாற் றுங்களேன்…’ என்று இயலாமை யின் வலியோடு குரல் கொடுத் தார். அருகில் நான் செல்லுமுன் அவரும் விழிகள் மூட தரையில் விழுந்தார். கண்களுக்கு எட்டிய தூரம்வரை எங்கு நோக்கிலும் பிணங்கள்… மனிதச் சதையின் சிதறல்கள்.

வேதனையின் கனம் என்னை அழுத்தியது. என்னையும் அறியாமல் ஏதேதோ புலம்பினேன். ஐயா ஒபாமா அவர்களே… உங்களைத்தானே ஐயா நாங்கள் கடைசியாக நம்பியிருந்தோம். ஒடுக்கப்பட்ட இனத்தில் இருந்து எழுந்து வந்தவர் நீங்கள். எனவே எம் இனத்தைக் காப்பாற்ற கட்டாயம் இறுதியில் கை கொடுப்பீர்கள் என்று நம்பி வான்பரப்பில் வந்து போன அத்தனை விமானங்களையும் அண்ணாந்து உயிர் தவிப்புடன் பார்த்திருந்தோமே… கைவிட்டு விட்டீர்களே ஐயா… என்றெல்லாம் புலம்பினேன்.

எழுந்து நடக்க எத்தனித்தேன். மீண்டும் ரவைகள் கூவிப் பாய்ந்து வந்தன. வேகமாக நடக்க முடியவில்லை. சிதறிய உடல் களின் மீது என் கால்கள் பட்டுவிடக்கூடாதென்ற பக்தி யுடன் நகர்ந்தேன். அந்தளவுக்கு எங்கும் பிணக்குவியலாய் கிடந்தன. ஒவ்வொரு பிணமாகக் கடந்து எனது மனைவி, பிள்ளை கள் இருந்த பதுங்கு குழிநோக்கி நகர்ந்தேன். இன்னொருதாயின் துயரம் என்னை முன்செல்ல விடாது தடுத்தது.

அவருக்கு 30 வயதிருக்கும். சுமார் ஆறு மாத கைக்குழந்தை. ஷெல் அடிபட்டு இறந்திருந்தது. பிஞ்சுக் குழந்தையை மார்போடு இறுக அணைத்துக்கொண்டு “”பாவி ராஜபக்சே… புருஷனையும் தின்டான், என்ட பச்ச புள்ளையெயும் தின்டான்… பசி தீர்ந்ததாடா பாவி…” என்று புலம்பியபடி இறந்த குழந்தையை முத்தமிட்டு முத்தமிட்டுக் கண்ணீரால் நனைத்தாள். அவளுக்கு ஆறுதல் சொல்ல அங்கு எவரும் இருக்கவில்லை. அவளது கூக்குரலையும் எவரும் கேட்கவில்லை. குழந்தையை முத்தமிட்டுக் கொண்டே முன் போனவள் திடீரென பின்னோக்கிப் பார்த்தாள். அவளது முகம் சந்திரமுகிபோல் மாறியது. வெடித்து சிரித்தவண்ணம் தன் பிள்ளையோடு ஏதேதோ பேசத்தொடங்கினாள். நிமிடங்களுக்கு முன் தாயாக இருந்தவள் மனநோயாளியாகி நின்றாள்.

“”என் மனைவி, பிள்ளை, தாய்-தகப்பன் நினைவுகள் நெஞ்சைப் பிழிந்தது. அவர்கள் மறைந்திருந்த பதுங்குக்குழி பார்த்து ஓடினேன். அவ்விட மெல்லாம் நச்சுவாயுக் குண்டுகள் விழுந்து நூற்றுக் கணக்கான தமிழர் உடல்கள் சிதறுண்டும் எரிசாம்பலாகவும் கிடந்தன. முட்டுக்கால் தரையில் குற்றி விழுந்தேன். “கடவுளே’ என்று கதறினேன். ஷெல் மழை கொட்டிக்கொண்டேயிருந்தது. அதனூடேயும் ஒவ்வொரு தலையாக, உடலாகப் புரட்டினேன். எவரையும் அடையாளம் தெரியவில்லை. என் உறவுகளும் எரியுண்டு முடிந்துவிட்டதாய் மனதில் முடிவு செய்தவனாய் இனி என் மார்பிலும் எறிகணை விழட்டுமென நிமிர்ந்து திரும்பி நடந்தேன். அப்போது பிணங்களுக்கு நடுவிலிருந்து ஒரு தாய் முனகலுடன் மெதுவாக எழுந்தார்.

“”தம்பி… உங்கட சொந்தங்கள் காலையில வட்டுவாகல் பக்கம் போயிட்டினும். நீங்க கெதியா போய் அவையள காப்பாற்றுங்கோ” என்றார் அந்தத்தாய். வட்டுவாகல் நோக்கி ஓடத்தொடங்கினேன். வட்டுவாகல்- முள்ளிவாய்க்கால் பிரதான வீதியில் வன்னி மக்கள் வைத்திருந்த வாகனங்கள் நீண்ட வரிசையில் பாதி எறிகணை வீச்சில் எரிந்தும், ஏனையவை அனாதைகள்போலும் நின்றிருந்தன. பதுங்குகுழி வெட்ட இடமில்லாத மக்கள் இந்த வாகனங்களுக்குக் கீழ் படுத்துக்கிடந்தார்கள்.

தேசியத் தலைவர் தன் செல்வங்களாய் வளர்த்த செஞ்சோலைப் பிஞ்சுகளும் அப்படிச் சில வாகனங்களுக்குக் கீழ்தான் கடைசி கட்டத்தில் அடைக்கலம் தேடியிருந்தன. நான் சுமார் 100 மீட்டர் தூரத்தில் நின்றபோது கூவிவந்த எறிகணையொன்று செஞ்சோலைப் பிஞ்சுகள் பிணம்தின்னிப் பருந்துகளுக்கு அஞ்சிய கோழிக்குஞ்சுகள்போல் பதுங்கிக் கிடந்த பகுதியில் விழுந்து வெடித்தது. என் கண்ணெதிரே ஐம்பதுக்கும் மேலான அப்பிஞ்சுகள் தலை, கால், கை, உடல் சிதறி கோரமாய் செத்தார்கள்.

கடற்கரையில்தான் பிணக்காடென்றால் பிரதான வீதியும் தமிழர் சடலங்களால் நிறைந்து நீண்டு கிடந்தது. சின்னஞ்சிறு பிஞ்சுகளின் சிதறிய உடல்களைக் காணத்தான் நெஞ்சு பொறுக்கவில்லை. இறுகி, உணர்வு செத்து மரத்திருந்த மனது வெடித்தது. ஓவென்று அழ வேண்டும் போலிருந்தது. என் கால்கள் சிதறிக் கிடந்த தமிழர் தசைகள் மேல் பட்டுவிடக்கூடாதே என்ற பக்தியோடு தவண்டு தவண்டு நகர்ந்தேன்.

அங்குமிங்கும் சிங்களக் காட்டேறிகள் ஏவிக் கொண்டிருந்த எறிகணைகள் கூவிக் கூவிப் பறந்து பாய்ந்து கொண்டிருக்க வீதியோர மரத்தடியொன்றின் கீழ் தாயொருத்தி பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருந்தாள். அவளது கணவன் சற்று முன்னர்தான் எறிகணை வீச்சில் இறந்திருக்க வேண்டும். இரத்த வெள்ளத்தில் கிடந்த தன் கணவனை இறுகப் பிடித்துக் கொண்டு அந்த இளம் தாய் பிரசவ வலியில் வீறிட்டுக் கதறிய அவலத்தின் கோலத்தை எப்படி நான் மறப்பேனய்யா?

மல்ட்டிபேரல் எறிகணைகளின் அதிர்வில் தாயின் வயிற்றிலிருந்து குழந்தை முல்லைத்தீவு மண்ணில் விழுந்தது. குழந்தையின் காலைப்பிடித்து இழுத்து அந்தத் தாய் தன் மார்போடு போர்த்தினாள். அவளுக்கு உதவ உறவுப் பெண்களோ வேறெவருமோ அங்கிருக்கவில்லை. பிறந்த பிள்ளையை அணைப்பதா, அருகில் இறந்து கிடக்கும் கணவனுக்காய் அழுவதா என்று தெரியாமல் இடது கையால் கணவனின் உடலையும் வலது கையால் இப்போது பெற்ற தன் செல்வத்தையும் அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டுக் கதறிய காட்சியை எப்படி நான் பதிவு செய்வேன்?

தன் ஆடைகளை ஒதுக்கி ஒழுங்கு செய்யும் பிரக்ஞை கூட இல்லாதவளாய் அந்தத்தாய் அழுது கொண்டிருந்தாள். உடல் சோர்ந்தவளாய் மண்தரையில் தலை சாய்ந்து படுத்தவரை மட்டும் தூரத்தில் நின்று பார்த்தேன். முதல் தாகம் தீர்க்க தாய்ப் பாலுக்காய் அக்குழந்தை வீறிட்டு அழுததையும் கண்டேன். ராஜபக்சேவும், கோத்தபய்யாவும் ரத்தமும் சதையும் சேரப் பிணம் தின்னும் கொடிய ராட்சதக் கழுகுகளாய் என் கண்முன் நின்றார்கள். நீங்கள் அழிவீர்களடா… சிங்களம் இதற்கெல்லாம் பதில் சொல்லித்தான் தீர வேண்டுமடா… என்றெல்லாம் மனது கொதித்தது.

கையறு நிலையின் கைதியாய் முன் நகர்ந்தேன். அந்தத் தாயும் பிள்ளையும் என்ன ஆனார்களோ என்று எண்ணியே பல இரவுகள் தூக்கமும் நிம்மதியும் இழந்து தவிக்கிறேன். இப்படித்தான் மே முதல் வாரம் முள்ளிவாய்க்கால் தற்காலிக வைத்தியசாலைக்குச் சென்றிருந்தேன். ஓலைக் குடிசைதான் அன்று எங்களின் அவசர மருத்துவ சேவைப் பிரிவு.

குடிசையின் தாழ்வாரத்தில் குண்டுவீச்சில் தாய், தகப்பன் இருவரையும் இழந்த சுமார் ஒரு வயதுக் குழந்தை கிடத்தப்பட்டிருந்தது. அதே குண்டுவீச்சில் தன் இரு கால்களையும் இந்தக் குழந்தை இழந்திருந்தது. கிட்டப் போய் அக்குழந்தையை கண்களில் நீர் மல்கப் பார்த்தேன். குளுக்கோஸ் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது. குளுகோஸ் வயரை கையில் எடுத்து விளையாடிக் கொண்டே என்னைப் பார்த்து அக்குழந்தை சிரித்தது.

நடந்தவற்றின், நடந்து கொண்டிருப்பவற்றின் கொடூரங்களும், விபரீதங்களும் அந்தக் குழந்தைக்குப் புரிந்திருக்கவில்லை. அருகில் நின்று கொண்டிருந்த மருத்துவ தாதியிடம், “”தாய், தகப்பன்…” என்று ஆரம்பிக்கவே, “”எல்லாம் இப்போது நான்தான்” என்று கூறியபடியே என்னை நிமிர்ந்து நோக்கி குடிசைக்கு சற்று தூரத்தில் குவியலாய் கிடந்த தமிழர் சடலங்களைக் காட்டினார். “”இதுக்குள்ளதான் இந்தக் குழந்தையிண்ட தாயும் தகப்பனும்” என்றார்.

பெற்றோரை இழந்து, இரண்டு கால்களையும் இழந்து என்ன நடந்ததென்றே தெரியாது குளுகோஸ் ஒயரை பிடித்து விளையாடிப் புன்னகைத்த இந்தக் குழந்தையின் முகமும், சற்றுமுன் வீதியோரத்தில் பிறந்து தாயின் முதற் பாலுக்காய் வீறிட்டு அழுத அந்தப் பிஞ்சின் முகமும் என்னை விட்டு அகல மறுக்கின்றன. எனக்கு மரணம் வருகின்றவரை இந்த அவலத்தின் காட்சிகள் என்னை விட்டு நீங்குமென்றும் நான் நினைக்கவில்லை.

மனதில் வெறுப்பும், நெருப்பும் விரக்தியு மாய் -இப்படியா எங்கள் விடுதலைப் பயணம் முடிவுறவேண்டுமென்ற வேதனையுடன் தொடர்ந்து நடக்க முயன்றேன். அவலத்தின் அடுத்த காட்சி அங்கே அரங்கேறிக்கொண்டிருந்தது.

வீதியை விட்டு சற்று தொலை. எறிகணை விழுந்து வெடிக்கிறது. பிளிறிச் சிதறிய புழுதி அடங்கியபின் பார்க்கிறேன். மரத்தடியில் இருந்த ஒரு தமிழ்க் குடும்பம் கண்ணெதிரே கணப்பொழுதில் சிதறிக் கிடக்கிறது. எழுந்திருக்க முடியாத அளவுக்கு படுகாயமடைந்த தகப்பனின் கால்களும் கைகளும் விட்டுவிட்டுத் துடிப்பது மட்டும் தெரிகிறது. எறிகணை விழுந்தபோது அந்தத் தாய் தன் பிள்ளைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்திருக்கிறாள். குழந்தையை இறுக அணைத்தபடியே அத்தாய் சிதைந்துபோய் உயிர் பிரிந்து கிடக்கிறார். அவளது இடதுபுற மார்பில் ஷெல் குண்டு பாய்ந்து சிதைத்திருக்கிறது. இப்போதும் கொடூரத்தின் கொலைவெறி புரியாத அப்பிஞ்சுக் குழந்தை தாயின் வலதுபுற மார்பை பாலுக்குத் தேடுகிறது.

பக்கத்தில் ஓர் சிறுமி நான்கு வயது இருக்கலாம், முந்திய பிள்ளையாக இருக்கக் கூடும். அந்தப்பிள்ளை கையில் ஓர் தட்டுடன் “அம்மா பசிக்குது… அம்மா பசிக்குது…’ என்று அழுதுகொண்டிருந்தது. தகப்பனுக்கு அருகில் பையன். சுமார் ஆறு வயது இருக்கலாம். “”அப்பா… எல்லாரும் போகினும் வாங்க, போவோம் ஆமி வறான், எழும்புங்கோ அப்பா… தண்ணீர் விடாக்குது… கெதியா எழும்புங்கோ அப்பா…” என்று குளறிக்கொண்டிருந்தான்.

நின்று நிதானித்து அங்கு என்னதான் நடந்துகொண்டிருக்கிறதென்று சிந்திக்கிற நிலையிலோ, ஒருவருக்கொருவர் உதவும் நிலையிலோ ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லும் நிலையிலோ எவரும் இருக்கவில்லை. எங்கும் மரணம் வெறியாடிக்கொண்டிருந்தது. ஈவிரக்கம் ஏதுமின்றி இன அழித்தலின் இறுதி காட்சி அரங்கேறிக்கொண்டிருந்தது. மரணத்தின் நிலமாய் தமிழ் ஈழம் நின்றது. இறந்து கிடந்த தாயின் மார்பில் பால் முகர்ந்து தேடிய அப் பச்சிளங்குழந்தை எமது அவலநாளின் அழியா காட்சியாய் காலம் முழுதும் நிற்கும்.

தொடர்ந்து நகர்ந்தேன். தேசியத் தலைவர் அடிக்கடி சொல்வாரே… “”அவலத்தை தந்தவனுக்கே அதை திருப்பிக் கொடு” என்று… அப்படிச் சொன்னதோடு நிறுத்தாமல் சிங்களவனுக்கும் நாங்கள் இப்படி ஈவிரக்கமின்றிக் கொடுமை செய்திருந்தால் ராஜபக்சேவும் கோத்தபய்யாவும் இந்த வெறியாட்டம் ஆடியிருக்கமாட்டார்களே… என்றெல்லாம் மனது எண்ணியது.

முன்பொருமுறை சட்டக்கல்லூரி உரையொன்றில் தந்தை செல்வநாயகம் சொன்னாரே… “”தமிழ் மக்களுக்கு எதிர்காலத்தில் எவ்வித பாதுகாப்பும் இருக்காது -கடவுள்தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும்…” என்று, ஆம் கடவுளும் எம்மைக் கைவிட்ட நாளில் நா வறண்டு நடந்துகொண்டிருந்தோம். தமிழனாய் பிறந்ததையிட்டு என்னை நானே சபித்துக்கொண்டேன்.

உலகத்தின் சகலர் மீதும் கோபமாய் வந்தது. மீண்டும் முன்பு நான் குறிப்பிட்ட உணர்வு… : “”ஐயா, ஒபாமாவே… கடைசி நம்பிக்கையாய், நீங்கள் ஏதாவது செய்வீர்களெனக் காத்திருந்தோமே… வானில் வந்த ஒவ்வொரு விமானத்தையும் பார்த்திருந்தோமே… ஏமாற்றி விட்டீர்களே….” என்று மனம் புலம்பியது.

எங்கும் பிணக்காடாய் கிடந்த வட்டுவாகல்-முள்ளி வாய்க்கால் பிரதான வீதியில் தமிழர் உடலங்களில் என் கால்கள் பட்டுவிடக்கூடாதென்ற கவனத்தோடும், மனதின் பாரங்களோடும் நகர்ந்து கொண்டிருந்தேன். ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் வீதியின் இருபுறமும் துப்பாக்கிகளை மக்களை நோக்கி நீட்டியவாறு சிங்களக் கைக்கூலிகள் நின்றிருந்தனர். கடைசியாக புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதியை விட்டு வெளியே வந்து விட்டோமென்பது புரிந்தது. சுதந்திர வாழ்க்கை முடிந்து போய்விட்ட உணர்வு உடல் முழுதும் பரவியது. களைத்துப் போயிருந்த மனது மேலும் களைத்தது.

வட்டுவாகல் பாலம் பக்கமாய் நடந்தேன். பாலத்தின் இருபுறமுமாய் விரிந்து கிடந்த நீரேரியை பார்த்தேன். தண்ணீர் பரப்பு தெரியவில்லை. எங்கு பார்க்கினும் தமிழரின் பிணங்கள் மிதந்து கொண்டிருந்தன. அனைத்து உடல்களுமே ஆடையின்றிக் கிடந்தன. அநேகம் பேர் எம் குலப் பெண்கள். கொடுமையை பதிவு செய்யக்கூட என் கண்களால் பார்க்க முடியவில்லை. எனினும் அந்த நீரில் மிதக்கும் பிணங்களூடே என் சொந்த உறவுகள் இருக்கக்கூடுமென்பதால் நின்று பார்த்தேன். பல உடல்களில் நகக்கீறல்களும், கடித்துக் குதறிய காயங்களும் தெரிந்தன.

ஆண்கள் பெரும்பாலோரது உடல்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடந்தன. சுடப்பட்டும், அடித்தும், வெட்டியும் கொல்லப்பட்டிருக்கிறார்களென்பது தெரிந்தது. கரையொதுங்கிய உடல்களில் பசித்த தெரு நாய்கள் பற்கள் பதித்த காட்சியை காணப் பொறுக்கவில்லை. பாலத்தைக் கடந்து அங்கிருந்து இராணுவ முகாம் வாயிலருகே நடந்தோம். “”புலி தனியா பிரிஞ்சு வாங்கோ… பொது மக்கள் தனியா பிரிஞ்சு போங்கோ…” என்று கொச்சைத் தமிழில் சிங்களவன் அறிவித்துக் கொண்டிருந்தான். அச்சத்தின் மின்னல் பிடரியில் பாய்ந்தது. அருகிலிருந்த மக்கள் விரக்தியோடு முணுமுணுத்தார்கள்.

“”இனி அவன் ஆட்சிதானே… இதுக்குப் பயந்துதானே புலியளோட ஓடி வந்தம்… பல நாட்கள் அணு அணுவாய் சாவதிலும் பார்க்க புலியளோட அங்க நின்டு கௌரவமா செத்திருக்கலாம்…” என்றெல்லாம் பேசிக் கொண்டே பிரிந்தார்கள். என் மனைவி, பிள்ளை உறவுகள் எப்படியேனும் உயிர் தப்பியிருப்பார்கள் என்ற நம்பிக்கையில் நானும் நடந்து கொண்டிருந்தேன்.

இரண்டு பக்க கம்பி வேலிக்கு நடுவே மூன்று லட்சம் மக்கள் ஊர்ந்தோம். கம்பி வேலிக்கு மறுபுறத்தில் இருந்து நாக்கு நனைக்க ஒரு முடறு தண்ணீர் கொடுத் தார்கள். ஐம்பதாயிரம் பேருக்கு எனச் சொல்லப்பட்ட கம்பிவேலி முகாமுக்குள் அத்தனை பேரையும் அடைத்தார்கள். சுற்றிலும் சுடும் நிலையில் இராணுவத்தினர். ஒரு சிலர் தமிழ் கதைத்தார்கள். அவர்களில் ஒருவனிடம் மெல்லச் சென்று கேட்டேன். “என் உறவுகளைக் காணவில்லை, தேடிப் பார்க்கலாமா?’ என்று. “”கம்பி வேலிக்குள் மட்டும் தேடிப் பாருங்கள். வெளியே போறவங்களை சுடச் சொல்லி உத்தரவு” என்றான் அவன். தொடர்ந்து பேசிய அவன், “”இவ்வளவு பேரும் எங்க இருந்தீங்கள்… ஐம்பதாயிரம் பேர் என்றுதானே நினைத்தோம்” என்று வியப்பாகக் கேட்டான். நான் சொன்னேன், “”ஐம்பதாயிரம் பேர் வரை செத்துவிட்டார்கள். நாங்கள் பங்கரில் இருந்து தப்பி வாறம்” என்றேன்.

“பங்கருக்குள் இத்தனை நாள் எப்படி இருந்தீர்கள்?’ என்று மேலும் வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தான். அவனோடு பேசிக்கொண்டிருந்தபோது வேறொரு இராணுவக் கூட்டத்தினர் பொதியுணவு கொண்டு வந்தார்கள்.

இருந்தது மூன்று லட்சம் மக்கள். அவர்கள் கொண்டு வந்ததோ சுமார் 3000 உணவுப் பொதிகள். எப்படி பங்கீடு செய்வதென்று தெரியாமல் நாய்களுக்கு எலும்புத் துண்டுகளை வீசுவது போல் கம்பிவேலிக்கு வெளியே நின்று கொண்டு மக்கள் கூட்டத்தினர் மீது கேவலச் சிரிப்புடன் வீசி எறிந்தார்கள். ஏதோ எறிபந்து விளையாடுவதுபோல் மேலும் மேலும் எள்ளி நகையாடிச் சிரித்துக்கொண்டே எறிந்தார்கள்.

தமிழரின் இயலாமை அவமானக் களத்தில் அவர்களின் அரை மணி நேர விளையாட்டு முடிந்தபோது, சில வயது போனவர்களும் எட்டுப் பத்து சிறுவர்களும் நெரிசலில் சிக்கி மூச்சடங்கிப் பிணங்களாய் கிடந்தார்கள். கைக்குழந்தையுடன் உணவுப் பொட்டலம் கிடைக்காதா எனச்சென்ற தாய் மூச்சுத் திணறி இறந்து போன குழந்தையுடன் திரும்பியதும், “பசிக்குது, ஒரு பார்சல் குடுங்கோ’ என்று கூவிக் கேட்டுக்கொண்டே நெரிசலில் குரலடங்கிப் போன சிறுவர்களும், தண்ணீராவது தாருங்கோ எனக்கேட்டு மிதியுண்டு மடிந்த முதியவரும் அன்றைய நாள் எமது வரலாறு சந்தித்த பேரவலத்தின் பதிவு செய்யப்படாத சாட்சிகள்.

வாகனத்தில் ஏற்றுவதற்காக கம்பி வேலிக்குள்ளிருந்து வரிசை பிடிக்கச் சொன்னார்கள். அதற்குள்ளாகவே காட்டிக் கொடுக்கும் சிலரை சிங்களம் விலைக்கு வாங்கியிருந்தது. அந்தக் கேவலப் பிறவிகள் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்காத, பக்கத்து வீட்டுக்காரர்களையெல்லாம் கூட “புலிகள்’ என்று கை நீட்டிக் காட்ட இராணுவத்தினர் தனியாக அவர்களைப் பிடித்துச் சென்றனர். தமிழன் வீழ்ந்ததும் வீழ்வதும் காட்டிக் கொடுக்கும் எட்டப்பர்களாலென்பது மீண்டும் ஒருமுறை வேதனையோடு அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தது.

எம் தேசியத் தலைவர் அடிக்கடி இரண்டு விஷயங்களைச் சொல்வார். ஒன்று, “”நேர்மையான வர்கள்போல நடிப்பவர்களைவிட நேர்மையானவர் களாக இருப்பவர்களைத்தான் எனக்குப் பிடிக்கும்” என்பது. இன்னொன்று “”எதிரிகளைவிட துரோகி களே ஆபத்தானவர்கள்” என்றும் அவ்வப்போது நினைவுபடுத்துவார். நடைமுறை ஒழுங்குகளில் தமிழ் சமூகம் மீது தலைவர் காட்டிய இறுக்கத்திற்கு காரணமும் இந்த இனத்தின் மோசமான துரோகக் குணங்களை அவர் உள்ளார அறிந்திருந்த காரணத்தினால்தான்.

அந்த இடத்தில், அந்த கணத்தில் இப்போது சிங்கள ஆமிக்காரனைவிட அடை யாளம் காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த எம் இனத்துக் கூலிகள்தான் அதிக அச்சத்தை தந்தார்கள்.
உடல் சோதனைக்கு ஒவ்வொருவரும் உள்ளாக்கப்பட்டோம். காட்டிக்கொடுக்கும் துரோகக் கூலிகள் நின்ற இடத்தைக் கடந்து உடல் சோதனைக்குப் போனேன். கட்டிய கோவணத்தையும் அவிழ்த்துப்போட்டு பரிசோதித்தார்கள். எனக்குள் கொலைவெறி ஆவேசம். அடக்கிக்கொண்டேன்.

என்றேனும் எம் தேசியத்தலைவன் மீண்டும் அழைப்பு விடுத்தால், அல்லது தகுதியானதோர் விடுதலை தலைமை எமக்குத் தெரிகின்ற நாளில் அவன் சொல்லும் திசையில் இலக்கு நோக்கி நகர இந்த உயிர் இப்போதைக்கு இருக்கவேண்டுமென்ற வைராக்கியத்தில், வந்த ஆவேசத்தையெல்லாம் அடக்கிக்கொண்டேன். இங்கே எழுத முடியாத ஒரு கெட்ட வார்த் தையை மட்டும் பம்பலாய் வாயில் முணுமுணுத் தேன். சோதனையெல்லாம் முடிந்து ஒருவழியாய் பேருந்தில் ஏறியபோது மே-18 முற்பகல் ஆகியிருந்தது. முல்லைத்தீவிலிருந்து வவுனியா செட்டிக்குளம் வதை முகாம் நோக்கி பேருந்து புறப்பட்டது.

எங்கு கொண்டுபோகிறார்களோ, என்னவெல்லாம் நடக்கப் போகிறதோவென்ற பதற்றம். பேருந்தின் பின்கதவு அடைக்கப்பட்டு முன் கதவில் இரண்டு ராணுவத் தினர் சுடும் நிலை யில் கொடூர முக பாவத்தோடு எம்மை அவதானித்துக்கொண்டிருந்தனர். நூற்றுக்கணக்கான பேருந்துகள் ஓமந்தை சோதனைச் சாவடிக்குமுன் நின்று நகர்ந்தன. 2006 வரை இந்த சோதனைச் சாவடி புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. புலிகள் தமது குடிவரவு (Immigration) மற்றும் சுங்கம் (Customs)பிரிவினரை உருவாக்கி முதலில் அமர்த்திய இடம் இது. இன்றோ எல்லாம் சூன்யமாகிப்போன உணர்வு உயிரைப் பிழிந்தது.

இன அழித்தலின் அடுத்த கட்டம் ஓமந்தையில் ஆரம்பித்தது. “”புலியாக இருந்தவர்கள் அனைவரும் தனியாகப் பதியவும்”, “”ஒருநாள் பயிற்சி எடுத் திருந்தாலும் தனியாகப் பதியவேண் டும்”, “”எல்லைப்படை பயிற்சி எடுத்தவர் களும் பதியவேண்டும்”, “”எங்களுக்கு எல்லாம் தெரியும், பொய் சொல்லி பதிவு செய்தால் தப்பிக்க முடியாது -மரணம்தான்” என்றெல்லாம் அறிவித்துக்கொண்டிருந்தார்கள்.

பதிவு செய்துவிட்டவர்களெல்லாம் ஒருபுறமாய் கூடி கதைத்துக்கொண்டிருந்தபோதுதான் அங்கிருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் எம் தலைவன் வீரமரணம் செய்துவிட்டான் என்ற செய்தியைக் காட்டினார்கள். என் சுவாசம் நின்றது. இதய நாடிகள் ஒடுங்கின. என்னையு மறியாது கண்களில் நீர். பின்னோக்கி நினைவுகள் ஓடின.

1989-ம் ஆண்டு என்று நினைக்கிறேன். இந்தியப்படைகள் எம் தலைவனை சுற்றி வளைத்து “சதுரங்கம் 1,2,3 (Operation Checkmate) என பெயரிட்டு நின்றபோது மணலாற்றுக் காட்டில் நிலை தடுமாறாது, அருகில் போராளிகள் கொள்கலன்களில் உயர்ரக பெட்ரோல் சுமந்துகொண்டே சண்டையிட்ட அந்த நாட்கள் நினைவுக்கு வந்தன. “உயிரற்ற என் உடலோ, சாம்பலோகூட அந்நியப் படைகளிடம் கிடைக்கக்கூடாது’ என்று உடன்நின்ற போராளிகளுக்கு உத்தரவிட்டுத்தான் சண்டை புரிந்துகொண்டிருந்தார் எம் தலைவன்.

போர்க்களத்தில் தன்னையே கொடையாக்கும் அக்கினியாய் நின்றுகொண்டுதான் அன்று எம்மை வழிநடத்தினார் அவர். உன்னிப்பாக தொலைக்காட்சியில் காட்டப்பட்ட உடலையும் தலையையும் பார்த்தேன். நிச்சயமாக முகமும் தலையும் எம் தலைவனுடையதல்ல என்பது தெரிந்தது. முற்றுகை வளையத்திற்குள் சிக்கியிருந்தாலும்கூட எம் தலைவன் எதிரிக்கு நெருப்பாய், புயல்காற்றாய் தான் இருப்பார்.

சர்வதேசமே, ஐ.நா.சபையே, தமிழுலகே… எப்போது வேண்டுமானாலும் என்னைக் கூப்பிடுங்கள். நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன். இன அழித்தலுக்கு சாட்சி சொல்ல வருகிறேன். (சிவரூபன் வருவான்.)

Thursday, September 17, 2009

போரின் இறுதி ஐந்து நாட்களில் மட்டும் 20 ஆயிரம் தமிழர்கள் பலி: நேரடி சாட்சி

[வியாழக்கிழமை, 17 செப்ரெம்பர் 2009 ]
வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா அரச படையினர் நடத்திய இறுதி வலிந்த தாக்குதல்களின் கடைசி ஐந்து நாட்களில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் பொதுமக்கள் உயிரிழந்தனர் என்று போரின் நேரடி சாட்சியான தமிழ்வாணி ஞானகுமார் கூறியுள்ளார்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இவர், போரின்போது வன்னிக்குள் சிக்கிக்கொண்டிருந்தார். நான்கு மாதங்கள் கழித்து பிரித்தானியா திரும்பியுள்ள அவரை 'த கார்டியன்' நாளேடு நேர்கண்டு வெளியிட்டுள்ளது. அதன் தமிழ் வடிவம் வருமாறு: தன் குழந்தையை இறுக்க அணைத்தபடி ஒரு இளம் தாய் வீதியோரமாக நின்றுகொண்டிருக்கிறாள். அந்தக் குழந்தை இறந்துவிட்டது. அந்தத் தாய் ஒரு முடிவு எடுப்பதற்குத் தவித்துக் கொண்டிருக்கிறார் என்பதை தமிழ்வாணி ஞானகுமார் பார்த்தார். அவர்களைச் சுற்றிலும், வீதியெங்கும் சிதறிக் கிடக்கும் மனித உடலங்களுக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான மக்கள் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள ஒரு வழி தேடி நடந்து கொண்டிருக்கிறார்கள். "வீதி ஓரமாக ஒரு தாய் தனது குழந்தையை இறுகப்பிடித்தபடி நின்றுகொண்டிருந்தார். குழந்தை இறந்து போயிருந்தது. அந்தக் குழுந்தையை தாயால் எடுத்துவர முடியாது. அதை அப்படியே விட்டுவிட்டு வரவும் அந்தத் தாய் விரும்பவில்லை. என்ன செய்வது என்று அவளுக்குத் தெரியவில்லை. லட்சக்கணக்கான மக்கள் விரைவாக வெளியேறியபடியும் ஒவ்வொருவரையும் வெளியேற்றியபடியும் இருந்த அந்த நிலையில், இறுதியில், வீதியோரமாக அந்தக் குழந்தையைப் போட்டுவிட்டு அவளும் வெளியேறிச் சென்றாள். அந்த உடலத்தை அங்கு விட்டுவிட்டுத்தான் அவள் வரவேண்டியிருந்தது. அவளுக்கு வேறு தெரிவுகள் எதுவும் இல்லை. "அப்போது நான் சிந்தித்தேன், இந்த மக்கள் என்ன தவறு செய்தார்கள்? ஏன் அவர்கள் இப்படிப்பட்ட துன்பங்களைச் சுமக்கிறார்கள்? அனைத்துலக சமூகம் ஏன் அவர்களுக்காகப் பேச மறுக்கிறது? நான் இப்போதும் அந்தக் கேள்விகளைக் கேட்கிறேன்." நான்கு மாதங்கள் கழித்து தனது சொந்த இடமான எசெக்ஸ், சிங்போர்ட்டில் உள்ள வீட்டில் குடும்பத்தினருடன் இளமஞ்சள் நிற சொகுசு கதிரையில் அமர்ந்தபடி மிக மோசமான இலங்கையின் இறுதிப் போரின்போது அங்கே நடந்தது என்பதை விபரிக்கிறார். அந்த நான்கு மாதங்களும், பிரித்தானியாவின் 25 வயதான அந்த இளம் பட்டதாரி, இலங்கையின் வடக்கில் உள்ள 3 இலட்சம் மக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாமில் முட்கம்பி வேலிகளுக்கு நடுவே தடுத்து வைக்கப்பட்டிருந்தார். கடந்த வாரம் அவர் விடுதலை செய்யப்பட்டிருந்தார். இந்த நாளேட்டுக்கும் அதில் சிறிய பங்கிருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் லண்டன் திரும்பியிருந்தார். இலங்கையின் வடக்கு-கிழக்கில் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த பகுதியில் இருந்த மருத்துவமனைகளில் இருந்து அவர் கடைசியாக வெளி உலகுடன் பேசி இருந்தார். இறுதியில் விடுதலைப் புலிகளை ஒடுங்கிய நிலப் பிரதேசத்திற்குள் நெருக்கிச் சென்ற அரச படையினர், லட்சக்கணக்கான தமிழ் மக்களை அகதிகளாகப் பிடித்துச் சென்றனர். அந்தப் பேரவலத்திற்குள் தமிழ்வாணி இருந்துள்ளார். எறிகணைக் குண்டு மருத்துவமனை மீது வீழ்ந்து வெடித்து பலரைப் பலிவாங்கியது. "அந்தத் தருணம் நரகம் போன்றது" என்கிறார் தமிழ்வாணி. காயமடைந்தவர்களுக் மருத்துவ உதவிகளையும் போர் நடைபெறும் இடங்களுக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பது பற்றி அங்கிருந்து அவர் வெளி உலகிற்குத் தகவல்களையும் சொல்லி வந்த, அங்கிருந்த சிறிய மருத்துவக் குழுவில் ஒருவராக தமிழ்வாணி இருந்துள்ளார். அவரைச் சுற்றி ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துகொண்டிருந்தபோது தனது உயிரை இழக்காமல் தமிழ்வாணி ஒருவாறு பாதுகாத்துக் கொண்டார். மண்ணிற்குள் தோண்டப்பட்ட பதுங்கு குழிகளுக்குள் இரவுகளில் காலத்தைக் கழித்துள்ளார். பகல் பொழுதுகளில், இடம்மாறிக் கொண்டிருந்த மருத்துவமனைகளில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

கசாப்புக் கடைக்காரனின் கத்தியைக் கொண்டும் தண்ணீர் கலக்கப்பட்ட மயக்க மருந்தைக் கொண்டு மருத்துவர்கள் சத்திர சிகிச்சை மேற்கொள்ள முயன்று கொண்டிருந்த சமயத்தில், வீழும் எறிகணைகளாலும் குண்டுகளாலும் அங்கு பலர் காயமடைந்தும் இறந்தும் கொண்டிருந்தனர். ஏற்பட்ட இழப்புக்கள் குறித்து இப்போது அவர் தெரிவிக்கும் தகவல்கள், பொதுமக்களின் ஒரு துளி இரத்தம் கூடச் சிந்தாமல் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றி கொள்ளப்பட்டதாக அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்திருப்பதற்கு எதிரான வலுவான ஆதாரங்களாக இருக்கின்றன. தமிழ்வாணி 1984 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். அவரும் அவரது குடும்பத்தினரும் 1994 ஆம் ஆண்டில் பிரித்தானியாவிற்கு நகர்ந்தனர். கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் நாள் வரைக்கும் அவர் அங்கு திரும்பிச் சென்றிருக்கவில்லை. கிறீன்விச் பல்கலைக்கழகத்தில் உயிரி மருத்துவ பட்டப் படிப்பை அவர் முடித்திருக்கிறார். ஆனாலும், அவரது திருமண வாழ்க்கை இயல்பானதாக அமையவில்லை. அதனால் அதனை முறித்து விடுவதற்கான நேரம் வந்துவிட்டது என அவர் தீர்மானித்தார். தான் எங்கு செல்கிறார் என்ற விபரத்தை யாரிடமும் தெரிவிக்காமல் அவர் வீட்டை விட்டுப் புறப்பட்டார். கொழும்பை வந்தடைந்த அவர் அங்கிருந்து புறப்பட்டு தனது உறவினர்களுடன் வசிப்பதற்காக வன்னிக்குச் சென்றார். அவருக்கு ஒரு சகோதரரும் இரு சகோதரிகளும் லண்டனில் இருக்கிறார்கள். வன்னியில் ஆபத்துக்கான சில அறிகுறிகள் தெரிந்தன. ஆனாலும் 2008 ஆம் ஆண்டு ஜூலையில்தான் சண்டைகள் மிக மோசமாகின. அரசுடன் பேச்சுக்களை நடத்தலாம் என புலிகள் தொடர்ந்து எண்ணி வந்தனர். அதைத்தான் அவர்கள் கடந்த காலங்களிலும் செய்தனர். ஆனால், புலிகளை அடியோடு அழித்துவிடுவது என்ற திட்டத்தை அரசு கொண்டிருந்தது. இந்தச் சண்டையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கத்துடன் அங்கேயே தங்கி இருப்பது என தமிழ்வாணி தீர்மானித்தார். அரசின் தரைப் படையினர் அவர்களை எட்டுவதற்கு முன்னர் அப்பகுதி முழுவதும் தொடர்ச்சியான வானூர்தி குண்டு வீச்சுக்கள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால், ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் கனரக எறிகனைகளில் ஆக்ரோசமான தாக்குதல்கள் தொடங்கின. அது மக்களை தமது இடங்களைவிட்டு நகரும்படி நிர்ப்பந்தித்தது. "மழை பெய்துகொண்டிருந்தது. அத்துடன்........ வீதி முழுவதும் தண்ணீருடன் சேர்ந்து இரத்தமும் உடலங்களும் ஆறாய் ஓடியதைப் பார்க்க முடிந்தது. அந்த உடலங்கள் அங்கேயே விட்டுச் செல்லப்பட்டிருந்தன. யார் இறந்தார்கள் யார் உயிரோடு இருக்கிறார்கள் என்பதை யாராலும் அடையாளப்படுத்த முடியவில்லை. உடலங்கள் அத்தனையும் தரையில் அப்படியே அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. முதல் தடவையாக நான் உடலங்களையும் அழுதுகொண்டும் கத்திக்கொண்டும் இருந்த காயப்பட்ட மக்களையும் நான் பார்த்தேன்." மக்கள் எங்கு நிற்கிறார்களோ அங்கே உடனடியாக ஒரு பதுங்கு குழிகளை உருவாக்கினார்கள். குறைந்தபட்சம் ஒரு மனிதன் நின்றுகொண்டிருக்கக் கூடியளவு மண்ணில் துளை தோண்டிக்கொண்டார்கள். பனை மரங்களை வெட்டி அந்தக் குழிகளின் மேலே அடுக்கினார்கள். அதற்கு மேலேயும் அருகிலேயும் மண் மூட்டைகளை அடுக்கினார்கள். அரச படையினர் முன்னேறத் தொடங்கியதும் சுமார் 3 லட்சம் மக்களும் இடம்பெயரவேண்டி ஏற்பட்டது. தமிழ்வாணி அங்கிருந்த மருத்துவமனைக்கு உதவிகள் புரிவதற்காகச் சென்றார். முன்னாள் ஆரம்பப் பாடசாலை ஒன்றிற்கு அது இடம்மாறி இருந்தது. முதலுதவிகளை வழங்குவது மற்றும் காயங்களுக்குக் கட்டுப்போடுவது போன்ற பணிகளில் ஈடுபடுவது அவரது நோக்கமாக இருந்தது. தமிழ்வாணியின் பட்டப் படிப்பு இதற்கான எதனையும் அவருக்குச் சொல்லிக் கொடுத்திருக்கவில்லை. நேரடியாக அவற்றைச் செய்வதன் மூலமே அவர் அவற்றைக் கற்றுக்கொண்டார். சண்டை கடுமையானதும், அந்த இரண்டு அறைகளை மட்டுமே கொண்ட தற்காலிக மருத்துவமனையில் ஒவ்வொரு நாளும் 500 பேருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. "அவர்களுக்கு மருந்துப் பொருட்களின் பற்றாக்குறை இருந்தது. ஆனால் எப்படியோ அவர்கள் சில உயிர்களைக் காப்பாற்றினார்கள். கடைசி இரண்டு வாரங்களும் அதற்கு மேலும் எல்லாவற்றிற்குமே பற்றாக்குறை இருந்தது." ஏற்றிய இரத்தமும் சேர்ந்து வெளியேறிக் கொண்டிருக்க, நோயாளியிடம் இருந்து என்ன கிடைக்கிறதோ அதைக் கொண்டு காயத்திற்குக் கட்டுப்போட வேண்டிய நிலையில் அவர் இருந்துள்ளார். அவர்களின் நரம்புகளில் திரும்பவும் இரத்தம் ஏற்றுவதற்கு முன்னர் அவர் அதனைச் செய்ய வேண்டி இருந்தது. மயக்க மருந்து பற்றாக்குறையாகிக் கொண்டிருந்த நிலையில் அதனுடன் சுட்டாறிய தண்ணீரைக் கலந்து கொடுத்தார்கள். "ஆறு வயதுச் சிறுவனுக்கு சத்திர சிகிச்சை செய்யும்போது நான் பார்த்தேன். அவர்கள் அவனது ஒரு காலையும் கையையும் எடுக்க வேண்டி இருந்தது. ஆனால் அவர்களிடம் அதற்கான சரியான உபகரணங்கள் இருக்கவில்லை.

 இறைச்சி வெட்டுவதற்குப் பயன்படும் கத்தி மட்டுமே அவர்களிடம் இருந்தது. அதனைப் பயன்படுத்தி, அந்தச் சிறுவன் கதறக் கதற அவனது காலையும் கையையும் வெட்டி எடுத்தார்கள். படையினர் நெருங்கி வந்தபோது நிலைமை இன்னும் மோசமானது. "எறிகணைக் குண்டுகளிடம் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் ஓடினார்கள் ஓடினார்கள் ஓடிக்கொண்டே இருந்தார்கள். ஆனாலும் அவர்களால் முடியவில்லை. ஒரு கட்டத்தில் நாங்கள் எல்லோருமே இறந்துவிடப் போகின்றோம் என்ற எண்ணம் எங்களுக்கு ஏற்பட்டது. தொடர்ந்தும் அங்கு உயிருடன் இருப்பதற்கான வழிகள் ஏதும் இருக்கிவில்லை. நான் இங்கே இப்போது உயிருடன் இருப்பேன் என்று நினைத்திருக்கவே இல்லை. நான் சொல்லிக் கொண்டேன், சரி, நான் சாகப்போகிறேன், இதுதான் இறுதி முடிவு என்று. "ஒரு நாள் நான் சத்திர சிகிச்சைக் கூடத்திற்குள் இருந்தேன். அடுத்த அறை குண்டுத் தாக்குதலுக்கு உள்ளானது. அந்த அறையில் மருத்துவர்களின் கண்காணிப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல நோயாளிகள் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் அந்தக் குண்டுவீச்சில் இறந்துபோனார்கள். அவர்கள் (அரச படையினர்) மீண்டும் எறிகணைத் தாக்குதல்களை மருத்துவமனை மீது நடத்தினார்கள். இதில் ஒரு மருத்துவர் இறந்துபோனார்." அந்த மருத்துவமனையில் ஓய்வு ஒழிச்சலே இருக்கவில்லை. தனது குழந்தையை அணைத்தபடி காயமடைந்த நிலையில் கொண்டு வரப்பட்ட ஒரு தாயை தமிழ்வாணியால் என்றுமே மறக்கமுடியாது. "தனது குழந்தையை அவர் மடியில் வைத்திருந்தார். அந்தக் குழந்தை இறந்திருந்தது. ஆனால் அந்தத் தாய்க்கு அது தெரியாது. குழந்தை இறந்தது பற்றி இப்போது அவரிடம் சொல்ல வேண்டாம், ஏனெனில் விடயம் தெரிந்தால் தாய் அழுது, கூப்பாடு போடுவார் அத்துடன்.... நாங்கள் அந்தத் தாயை முதலில் காப்பாற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். அதனால் நாங்கள் அந்தத் தாயிடம் கூறினோம், சரி நீங்கள் உங்கள் குழந்தையை எங்களிடம் தாருங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் சென்று மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள் என்று. சிகிச்சை முடிந்த பின்னரே அவரிடம் நாங்கள் குழந்தை இறந்துபோய் விட்டது என்ற உண்மையைச் சொன்னோம். என்னால் இப்போது இலகுவாகச் சொல்லிவிட முடிகின்றது. ஆனால், அந்தத் தருணத்தில் நான் பெரும் வேதனையை அனுபவித்தேன். அது ஒரு அப்பாவிக் குழந்தை. அது இறந்தது கூடத் தெரியாத தாய். குழந்தை தூங்கிக் கொண்டிருக்கிறது என நினைத்துக் கொண்டிருந்தாள் அந்தத் தாய்." "இது போன்ற பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. ஒரு சமயம் தாய் இறந்து போயிருந்தார். அது தெரியாமலேயே அவரது குழந்தை அவர் மார்பில் பால் குடித்துக் கொண்டிருந்தது." சண்டை இன்னும் இன்னும் நெருக்கமாக வந்தபோது, கைகளில் என்ன கிடைத்ததோ அவற்றையே அவர்கள் உண்டார்கள். தூங்க முடிந்தவர்கள் கிடைத்த இடங்களில் தூங்கினார்கள். "எப்போதும் ஓடுவதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். நீங்கள் ஓய்வாக இருந்து தூங்குவதற்குச் செல்ல முடியாது. எந்த நிமிடத்திலும் அந்த இடத்தைவிட்டு அகல்வதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்." மே மாதம் 13 ஆம் நாள் மருத்துவமனை குண்டுத் தாக்குதல்களுக்கு உள்ளானபோது அங்கிருந்த 50 பேர் கொல்லப்பட்டனர்.

 அதன் பின்னர் தமிழ்வாணிக்கு அங்கு வேலை இருக்கவில்லை. "எங்களுடைய பதுங்குகுழிக்கு அடுத்ததாக இருந்த குழியின் மீது குண்டுகள் வீழ்ந்து வெடித்தன. அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்தனர். மூன்று பேர் காயமடைந்தனர். "நான் அவர்களைப் பார்த்தேன்.......... திடீரென மக்கள் கதறி அழும் சத்தம் கேட்டது. நான் நினைத்தேன் இது எங்கோ எமக்கு மிக அருகில் என்று. ஆனால் நான் அந்த இடத்தை கற்பனை பண்ணிக்கூடப் பார்க்கவில்லை. அந்த இடம் முழுவதும் இரத்தக் கறையாகக் கிடந்தது. உடலங்கள் எல்லா இடங்களிலும் துண்டுதுண்டாகச் சிதறிக் கிடந்தன. என்னுடைய சகோதரன் சொன்னான், எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு இந்த இடத்தைவிட்டு நாங்கள் உடனடியாக விலகிச் செல்ல வேண்டும் என்று." கடைசி ஐந்து நாட்களில் மட்டும் சுமார் 20 ஆயிரம் பேர் இறந்திருக்கலாம் என தமிழ்வாணி கூறுகின்றனர். ஆனால், உயிரிழந்தவர்களின் உண்மையான, சரியான எண்ணிக்கையைக் கணக்கிட முடியாது என ஐக்கிய நாடுகள் சபை கூறுகின்றது. ஆனால், சாட்சிகளிடம் இருந்து தாம் பெற்றுக்கொண்ட கணக்குகளின்படி தமிழ்வாணி கூறுவது சரியானதுதான் எனத் தெரிவிக்கிறது உலகத் தமிழர் பேரவை. கடைசி குண்டுத் தாக்குதல்களின் பின்னர், படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்த லட்சக்கணக்கான மக்களுடன் சேர்ந்து தமிழ்வாணியும் வந்திருந்தார். அவர் உடனடியாக அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டார். "நாங்கள் நகர்வதற்கு தொடங்கினோம். சுமார் ஒரு மணிநேரம் அல்லது அதற்கும் மேல் நடந்ததன் பின்னர் சிறிலங்காப் படையினரை நாங்கள் கண்டோம். வாருங்கள், நீங்கள் இப்போது பாதுகாப்பாக இருக்கிறீர்கள், உங்களுக்கு உணவும் தண்ணீரும் தரப்படும் என்று அவர்கள் சொன்னார்கள். எங்கும் உடலங்கள் சிதறிக் கிடந்தன. துண்டு துண்டுகளாகவும் சிதறிக் கிடந்தன. அவற்றுக் நடுவே நாங்கள் நடந்து வந்தோம். அங்கேதான் தனது இறந்துபோன குழந்தையை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து நின்ற தாயை தமிழ்வாணி கண்டார். உடலங்களை அடக்கம் செய்வதற்கு எவருக்கும் நேரம் இருக்கவில்லை. சிலர் அவற்றை பதுங்கு குழிகளுக்குள் தள்ளிவிட்டு அதன் மேல் கொஞ்சம் மண்ணை அள்ளிப் போட்டு மறைத்தார்கள். அதுதான் அவர்களால் செய்ய முடிந்த மிகச் சிறந்த விடயமாக அப்போது இருந்தது. அந்த இரவு அவர்கள் அனைவரும் பாடசாலை ஒன்றில் தூங்கினார்கள். அதன் பின்னர் பேருந்துகளில் வவுனியா நகரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கிருந்து அவரது தாயாருடன் பேசினார். "என்னை இங்கிருந்து வெளியே எடுங்கள் அம்மா என்று நான் சொன்னேன். அந்த இடத்தைவிட்டு வெளியேறிவிடவேண்டும் என்றிருந்தது எனக்கு. அத்துடன் என் தொலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது." படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தமிழ்வாணி வந்த முதல் நாளில் எந்த உணவும் அவர்களுக்குக் கிடையாது.

அத்துடன் அவருடன் இருந்தவர்களின் தொடர்புகளையும் அவர் இழந்துவிட்டிருந்தார். மேலும் பலருடன் சேர்ந்து ஒரு கூடாரத்திற்குள் அவர் உறங்கினார். போர்ப் பகுதிகளைவிட்டு பிரிந்து முகாம்களுக்கு வந்தால் அதன் நிலைமை அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. "நீங்கள் எங்கே போனாலும் அங்கு பெரியதொரு வரிசை நின்று கொண்டிருக்கும். உங்களுக்கு என்ன வேண்டும் என்றாலும் வரிசையில் நின்றாக வேண்டும். அது எவ்வளவு அருவருப்பாக இருந்தது என்பதை என்னால் விளக்க முடியவில்லை. எங்கு பார்த்தாலும் நுளம்பும் சுகாதாரமற்ற நிலையும்..... மக்களுக்கு எல்லா வகையான வருத்தங்களும் வந்தன. "மக்கள் தமது சொந்தங்களை இழந்தனர்...... பலர் குடும்பங்களில் இருந்து பிரித்தெடுத்துச் செல்லப்பட்டனர்...... அத்துடன் மக்கள் மிகச் சோர்வடைந்தார்கள்." கொலைகளும் பாலியல் வன்புணர்ச்சிகளும் அங்கு நிகழத் தொடங்கின. மக்கள் காணாமல் போனார்கள். சிலர் தற்கொலை செய்துகொண்டார்கள். ஒரு ஆசிரியை மரத்தில் தூக்குப்போட்டுத் தொங்கிக் கொண்டிருந்தபடி கண்டுபிடிக்கப்பட்டார். படைத்துறை புலனாய்வாளர்கள் முகாம்களைச் சுற்றிச் சுற்றி வந்தார்கள். முன்னாள் போராளிகளைக் கண்டறிவதற்காக. "அது ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலை. நீங்கள் சுதந்திரமாக நடக்கலாம். ஆனால் சிறைகளுக்கு உள்ளேயே நீங்கள் இருக்கிறீர்கள். அதை விட்டு வெளியே செல்ல நீங்கள் அனுமதிக்கப்பட மாட்டீர்கள். உங்களால் முடியாது. காவலர்கள் எல்லா இடங்களிலும் நின்றிருப்பார்கள். அத்துடன் சோதனை நிலையங்களும் இருக்கும்." தமிழ்வாணி முகாமுக்கு வந்து சில நாட்கள் கழித்து அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதரகம் ஊடாக பிரித்தானிய தூதரகம் அவரைத் தொடர்பு கொண்டது. அவரது பெற்றோரும் 'த கார்டியன்' நாளேடும் மேற்கொண்ட நடவடிக்கைகளை அடுத்து இது நிகழ்ந்தது. அதன் பின்னர் அவர் சன நெரிசலால் தவித்த, மெனிக் முகாமின் இரண்டாம் வட்டாரத்தில் இருந்து முதலாம் வட்டாரத்திற்கு மாற்றப்பட்டார்.

இந்தப் பகுதியே வெளியிருந்து வருகை தருபவர்களுக்கு அரசால் காண்பிக்கப்படும் பகுதி. "ஐக்கிய நாடுகள் சபைக்கான பொதுச் செயலாளர் பான் கீ மூன் அங்கு வரும்போது நான் அங்கே இருந்தேன். அவர் அங்கே ஒரு 10 நிமிடங்கள்தான் இருந்திருப்பார். உடனடியாகவே திரும்பிச் சென்றுவிட்டார். முகாமுக்குள் அவர் ஏன் செல்லவில்லை? ஏன் மக்களைச் சந்தித்து கொஞ்ச நேரத்தைச் செலவிட்டு அவர்களின் பிரச்சினைகள் என்னவென்று கேட்கவில்லை? நான் நினைக்கிறேன் அவருக்கு அந்தப் பொறுப்பு இருந்தது என்று. அத்துடன், மக்களும் அவரிடம் இருந்து சிலவற்றை எதிர்பார்த்தார்கள். அவர்கள் அவரிடம் இருந்து நிறையவே எதிர்பார்த்தார்கள். ஆனால், அவர் 10 நிமிடங்கள் மட்டுமே அங்கு இருந்தார். அவ்வளவுதான்." தமிழ்வாணி சில நாட்கள் முகாமில் தங்கி இருக்க வேண்டும் என்றும் அதன் பின்னர் அவர் விடுவிக்கப்படுவார் என்றும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். "அதன் பின்னர் 48 மணிநேரம் மூன்று நாட்களாக மாறியது. பின்னர் வாரங்களாக மாதங்களாக அது மாறியது. அப்போது நான் நினைத்தேன், சரி இனி இது நடக்கப் போவதில்லை என்று." அவர் அங்கு என்ன செய்து கொண்டிருந்தார் என்பது பற்றியும் மருத்துவமனையில் என்ன செய்துகொண்டிருந்தார் என்பது பற்றியும் ஐந்து தடவைகள் அவர் அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். கடந்த வாரத்தில் அவரை அழைத்த அதிகாரிகள் அவர் வீட்டிற்குச் செல்லாம் எனத் தெரிவித்திருந்தனர். அரச தலைவரின் சகோதரர் பசில் ராஜபக்சவைச் சந்திப்பதற்காக அவர் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார். "சரி, இந்த நாட்டில் பல்வேறு விடயங்களுக்கு மத்தியில் நீர் பயணித்து வந்திருக்கிறீர். இப்போது நீர் விடுதலை செய்யப்படுகிறீர், நீர் சென்று உம்முடைய குடும்பத்துடன் இணைந்து கொள்ளலாம். மகிழ்ச்சியாக இருக்கலாம். அதற்காக அவர் மன்னிப்பு எதுவும் கேட்கவில்லை." அதன் பின்னர் அவர் பிரித்தானிய தூதரக அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டார்.

நடந்த விபரங்கள் பற்றி அவர் பேசும் விதம் சில சமயங்களில் அவரது உணர்வுகளைக் காட்டிக்கொடுக்கிறது. அவரது முடி பின்புறமாக இறுக்கக் கட்டப்பட்டுள்ளது. பிரித்தானியாவை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் மிக அழகான முடியை அவர் கொண்டிருந்தார். ஆனால் அவையெல்லாம் முகாம் வாழ்க்கையில் இழக்கப்பட்டு விட்டதாக அவர் கூறுகின்றார். இப்போது என்ன செய்வது என்பது தொடர்பில் நிச்சயமில்லாத நிலையில் அவர் இருக்கிறார். அனேகமாக மருத்துவத் துறையில் ஏதாவது செய்யக்கூடும். "மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்ய முடிந்தது குறித்து நான் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றேன். நான் பிரித்தானியாவில் இருக்கின்றேன் என்பது உண்மையல்ல என்று இப்போதும் எண்ணிக்கொண்டிருக்கிறேன்....... நான் உயிருடன் இருப்பேன் என்றோ பிரித்தானியாவுக்குத் திரும்பி வருவேன் என்றோ நான் எண்ணி இருக்கவே இல்லை. முகாமில் இருக்கும்போது கூட அப்படி எண்ணவில்லை.

புதினம்.கொம்