Showing posts with label நோர்வே. Show all posts
Showing posts with label நோர்வே. Show all posts

Thursday, March 22, 2012

இலங்கையின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் பதவி நீக்கம்

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் சமர முயற்சிகளில் ஈடுபட்ட நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நோர்வேயில் சோசலிசஸ்ட் கட்சி ஆட்சியில் உள்ளது.

 இக்கட்சியின் அமைச்சரவையில் சுற்றுச்சூழல் மற்றும் சர்வதேச உதவிகளுக்கான அமைச்சராக எரிக் சொல்ஹெய்ம் பதவி வகித்து வந்தார்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட இருக்கும் அமைச்சரவை மாற்றத்தில் எரிக் சொல்ஹெய்ம் கழற்றி விடப்பட்டிருக்கிறார். அவரை பதவி விலகுமாறு கட்சித் தலைவர் அதுன் வலியுறுத்தியுள்ளார்.

கட்சித் தலைமையின் முடிவால் எரிக் சொல்ஹெய்ம் கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இலங்கை உட்பட இன மோதல்கள் நிகழ்ந்த நாடுகளில் அமைதிப் பேச்சுக்கான ஏற்பாடுகளை எரிக் சொல்ஹெய்ம் மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நோர்வே ஈழத் தமிழர் அவை தனது விளக்கத்தை தெரிவித்துள்ளது !

நோர்வே நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஈழத்தமிழர் அவையினர் சந்திப்பு பற்றிய செய்தி ஒன்றை அதிர்வு இணையம் ஏற்கனவே வெளியிட்டு இருந்தது. மக்கள் தெரிவித்த சில விமர்சனங்களையும் நாம் இதன்போது வெளியிட்டு இருந்தோம். இது குறித்து நோர்வே ஈழத் தமிழர் அவை தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளது. இதன் விபரம் பின்வருமாறு.

கடந்த 16 ஆம் நாள், நோர்வே ஈழத்தமிழர் அவை உறுப்பினர்கள் உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களுடன் இணைந்து நோர்வே நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களை சந்தித்து சம கால அரசியல் நிலவரங்கள், நோர்வே எடுக்கவேண்டிய சர்வதேச நிலைப்பாடு, தமிழீழத்தின் இன்றைய நிலவரம் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றை நிகழ்த்தினர். நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த இச்சந்திப்பின் பொழுது, எரிக் சொல்ஹைம் (சுற்றுச்சூழல் மற்றும் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர்), எர்னா சோல்பர்க் (எதிர்க்கட்சித் தலைவி, வலதுசாரி), காரின் வோல்செத் (நாடாளுமன்ற உறுப்பினர், முன்னேற்றக்கட்சி) மற்றும் வெளிநாட்டு அமைச்சின் ஆசிய தொடர்பாடல் குழுவினரோடும் கலந்துரையாடினர்.

இச்சந்திப்பின்பொழுது, ஈழத்தமிழர் நிலங்களில் சிங்கள அரசு செய்யும் இராணுவமயமாக்கல், சிங்கள குடியேற்றங்கள், கலாச்சார இனவழிப்பு, தமிழ் மொழிச்சிதைவை திட்டமிட்டு செய்வது போன்றவற்றை விரிவாக எடுத்துரைத்தனர். மேலும் தமிழ் மீனவர்களை அச்சுறுத்தல் மற்றும் அவர்கள் வாழ்வாதாரங்களை அழித்தல் போன்ற கொடுஞ்செயல் புரிவது தொடர்பான தகவல்களையும் ஆதாரத்துடன் எடுத்துரைத்தனர். பாதுகாப்பற்ற நிலையில் 86000 போர் விதவைகள் இருக்கிறார்கள் என்றும் அவர்கள் வாழ்வும் எதிர்காலமும் கேள்விக்குறியாக இருக்கிறது என்பதை சர்வதேச சமூகம் கவனிக்கத் தவறியிருக்கிறது என்றும் எடுத்துரைத்தனர்.

மேலும், சமகால நிலவரம் தொடர்பான விவாத்தின்பொழுது, இலங்கை அரசின் போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை தொடர்பான சர்வதேச சுயாதீன விசாரணையை இவ்வுலக நாடுகள் முன்னின்று மேற்கொள்ள நோர்வே குரல் கொடுக்கவேண்டும் என்றும் இலங்கை அரசு வெளியிட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பக்கச்சார்பான அறிக்கையை முழுமையாக எதிர்க்கிறோம் என்பதனை எடுத்துரைத்துனர். உலகத் தமிழர் பேரவையினருடன் இணைந்து நோர்வே ஈழத்தமிழர் அவை பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச அரசியல் பிரதிநிதிகளை சந்திக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது என்பதனையும் இவ்வேளையில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.

இவண்,
ஊடகத்துறை,
நோர்வே ஈழத்தமிழர் அவை,
நோர்வே

Saturday, March 17, 2012

நோர்வே அமைச்சர்களுடன் GTF உறுப்பினர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை !

நேற்றைய தினம்(16) உலகத் தமிழர் பேரவையினர், நோர்வே அமைச்சர்கள் சிலரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. நோர்வே நாட்டின் அபிவிருத்தி மற்றும் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் எரிக் சுல்கைம், எதிர்கட்சியின் தலைவி ஏனா சொல்பேர்க், மற்றும் பாதுகாப்புப் அமைச்சில் உள்ள சில பிரதி அமைச்சர்கள் சிலரையும் தாம் சந்தித்ததாக உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. ஐ.நாவின் மனித உரிமைக் கவுன்சிலில் 47 வது இடத்தை வகிக்கும் நாடு நோர்வே என்பது குறிப்பிடத்தக்கது என அது மேலும் தெரிவித்துள்ளது.

உலகத் தமிழர் பேரவை பல நாட்டுத் தலைவர்களையும் அமைச்சர்களையும் சமீபகாலமாகச் சந்தித்து வரும் நிலையில், இச் சந்திப்புகள் எதற்காக நடைபெறுகின்றன, இல்லையேல் எதனை அடிப்படையாகக் கொண்டு நடைபெறுகின்றது என்பது குறித்து தெளிவாக விளங்கப்படுத்துவது இல்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது. மற்றும் இச் சந்திப்புகளின் போது எந்த எந்த விடையங்கள் கலந்துரையாடப்பட்டது என்பது போன்ற விடையங்களையும் அவர்கள் தமிழ் மக்களுக்குத் தெரிவிப்பது இல்லை என்றும் சில தமிழர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

தற்போது நடந்த நோர்வே சந்திப்புக்கூட இவ்வகையில் அமைந்துள்ளது. அது தொடர்பான எத் தகவலையும் அவர்கள் இதுவரை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.



Wednesday, March 14, 2012

இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு நோர்வே ஆதரவு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் நிறைவேற்ற உத்தேசிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு நோர்வே ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளது.

சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டுள்ளதாக சுமத்தப்படும் சகல குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் இலங்கை பதிலளிக்க வேண்டுமென நோர்வே தெரிவித்துள்ளது.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கையை இலங்கை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென தெரிவித்துள்ளது.

எகிப்து, சவூதி அரேபியா மற்றும் பஹ்ரெய்ன் போன்ற நாடுகளின் மனித உரிமை நிலைமை குறித்தும் நோர்வே அதிருப்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதாக நோர்வே அறிவித்துள்ளமை துரதிஸ்டவசமானது என சிறீலங்காவின் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

சமாதான முனைப்புக்களில் மத்தியஸ்தம் வகித்த நாடு என்ற ரீதியில் நோர்வே வாக்களிக்காமல் இருப்பதே பொருத்தமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Friday, February 24, 2012

சுயாதீன விசாரனையை வலியுறுத்தும் நாடுகளில் நோர்வேயும்- எரிக் சொல்ஹெய்ம்

இலங்கையில் இடம்பெற்ற போரின் போது இறுதி மாதத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தக் கோரும் நாடுகளுடன் நோர்வேயும் இணைந்து கொண்டுள்ளது.

போரின் இறுதிக்கட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு பொறுப்புக் கூறுவதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக நோர்வேயும் அறிவித்துள்ளது.

நேர்வேயின் அமைச்சரும், இலங்கைக்கான சமாதான முயற்சிகளில் ஈடுபட்டவருமான எரிக் சொல்ஹெய்ம், நோர்வேயில் இருந்து வெளியாகும் Aftenposten நாளிதழுக்கு இத்தகவலை குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கை அரசு போரை வென்றுவிட்டது, ஆனால் இப்போது அமைதியை வெல்ல வேண்டிய தேவை அதற்கு உள்ளது“ என்றும் எரிக் சொல்ஹெய்ம் கூறியுள்ளார்.

Wednesday, December 14, 2011

நோர்வேயில் நடைபெற்ற தேசத்தின் குரலின் வணக்க நிகழ்வு

நோர்வே தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிரால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவுநாள் நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் அன்னைபூபதி றொம்மன் வளாகத்தில் இன்று (14-12-2011) நினைவுகூரப்பட்டது.

பிற்பகல் 7 மணியளவில் சுடர் வணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. மண்டபம் நிறைந்த மக்கள் தமது இதய அஞ்சலியை மலர் தூவி நிறைவேற்றினர். அகவணக்கத்துடன் தொடர்ந்த நிகழ்வில், எம்மை மாறா சோகத்தில் ஆழ்த்திவிட்டு மீளாத்துயில் கொள்ளும் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் விபரணம் ஒன்று ஒளிவடிவில் காண்பிக்கப்பட்டது.

எமது விடுதலைக்காக தன் சொகுசு வாழ்வை அர்ப்பணித்து, கொடிய நோய்க்கு ஆளானபோதும் மக்களின் சுதந்திர வாழ்விற்காய் தலைவரின் வழிநின்று வாழ்ந்த அந்த அற்புத மனிதரின் வாழ்க்கை வரலாறானது, நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரின் நெஞ்சங்களையும் நெகிழவைத்தது.


இளவயது மங்கையரின் மனதை ஊடுருவிச்சென்ற கவிவரிகளோடு மதியுரைஞரின் நினைவுப்பாடல்களும் பாடப்பட்டது.

தேசத்தின் குரலென்றும், மதியுரைஞர் என்றும், தத்துவாசிரியர் என்றும் ஈழத்தமிழர்களால் அன்போடு அடைமொழிகளால் அழைக்கப்பட்ட கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் ஆயுதமேந்தாத போராளியாகவே வாழ்ந்து இன்று காவியமானார்.

இருப்பினும் எமது இறுதி இலக்கை அடையும் வரை புலத்தில் உள்ளவர்களும் ஆயுதமேந்தாத போராளிகளாக வாழ்ந்து தொடர்ந்து தமது தேசப்பணிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்ற கருத்தே இன்றைய நிகழ்வில் ஓங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. மிக உணர்வுபூர்வமாக நடந்தேறிய தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவுநாள் பிற்பகல் 8.30 மணியளவில் ”தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்” என்ற கொட்டொலியுடன் நிறைவிற்கு வந்தது.

Thursday, November 17, 2011

இலங்கை தொடர்பான நிலைப்பாட்டில் நோர்வேக்கு காலம் கடந்த ஞானம் பிறந்துள்ளது: இந்தியாவின் முகத்திரையும் கிழிஞ்சுது.. என்கிறார் சம்பிக்க ரணவக்க.

இலங்கை தொடர்பான நிலைப்பாட்டில் நோர்வேக்கு காலம் கடந்த ஞானம் பிறந்துள்ளது. இதனூடாக இந்தியாவின் முகத்திரையும் கிழிக்கப்பட்டுள்ளது. எனவே, இனியாவது மேற்குலக நாடுகள் இலங்கை விவகாரங்களில் இதயசுத்தியுடன் செயற்பட வேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

புலிகளை மித மிஞ்சியளவில் எடை போட்டமை இந்தியாவும் மேற்குலக நாடுகளும் செய்த மிகப் பெய தவறாகும். ஆகவே, கூட்டமைப்பு உட்பட மீண்டும் பிரிவினைவாதத்திற்கு துணைபோகும் சக்திகளுக்கு சர்வதேச நாடுகளில் தடை விதிக்கப் பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளர்.

இலங்கையிலிருந்து தவறான தகவல்களைப் பெற்றுக்கொண்டு கடந்த காலங்களில் நோர்வே அரசாங்கம் உள்நாட்டிற்கு எதிரான வகையில் செயற்பட்டது. குறிப்பாக போர் நிறுத்த ஒப்பந்த காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளின் போது மத்தியஸ்தம் வகித்த நோர்வே, இலங்கை அரசாங்கத்தை குறைத்தே மதிப்பிட்டது. இதனால் இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேச அழுத்தங்களும் கூடியது.

ஆனால் அத்தனை சவால்களையும் எதிர் கொண்டு புலிகளுக்கு எதிரான வெற்றியை நாம் பெற்றுக் கொண்டோம். உண்மையிலேயே இந்தியா செய்ய வேண்டியதைத் தான் இலங்கை அரசாங்கம் செய்து முடித்தது. ஏனென்றால் இந்திய அரசியலிலும் சரி, அங்கு காணப்பட்ட பயங்கரவாத நடவ டிக்கைகளிலும்சரி புலிகள் பாரியளவில் செல்வாக்கு செலுத்திவந்தனர். இது அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலானதாகவே அமைந்தது.

இக்காலப்பகுதியிலும்கூட இந்தியா இரட்டை வேடம் பூண்டதை நோர்வே வெளிப்படுத்தியுள்ளது. உண்மையான சூத்திரதாரிகள் தற்போது வெளிப்பட ஆரம்பித்துள்ளனர். எவ்வாறாயினும் நோர்வே, காலம் கடந்தேனும் இலங்கையை புரிந்து கொண்டமை வரவேற்கப்பட வேண்டிய விடயமாகும்.

எதிர்காலத்தில் புலிகளின் ஆதரவாளர்களை தமது நாடுகளில் செயற்படவிடாது வெளிநாடுகள் கடும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.

Wednesday, November 16, 2011

நோர்வேயின் அறிக்கைக்கு எதிர்ப்பு அறிக்கை வெளியிடத் தயாராகிறது இலங்கை!?

விடுதலைப் புலிகளுடனான அமைதி முயற்சிகள் தோல்வியடைந்தமை தொடர்பாக நோர்யால் வெளியிடப்பட்டிருக்கும் கருத்துக்கு இலங்கை அரசு இராஜதந்திர ரீதியிலான அதிருப்தியை வெளியிடத் தீர்மானித்துள்ளது.

இலங்கை அமைதி முயற்சிகள் தோல்வியடைந்தமைக்கு அரசும், புலிகள் இயக்கமும் பொறுப்பேற்கவேண்டுமெனக் கடந்த வாரம் நோர்வேயின் அரச சார்பற்ற அமைப்பு ஒன்று தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது. அத்துடன், இது தொடர்பாக பல விமர்சனங்களையும் அது முன்வைத்திருந்தது.

இந்நிலையில், மேற்படி விமர்சனங்கள் இறைமையுள்ள அரசு ஒன்றின் நற்பெயருக்கு சர்வதேச ரீதியில் களங்கத்தை ஏற்படுத்துமென அரசு கருதுவதாக மூத்த அமைச்சர் ஒருவர் நேற்றுத் தெரிவித்தார்.இதனடிப்படையில் இந்த விமர்சனங்கள் குறித்து நோர்வே அரசுக்கும் மேற்படி ஆய்வை நடத்திய நோறாட் அமைப்புக்கும் இராஜதந்திர ரீதியிலான அதிருப்தியை வெளியிட அரசு தீர்மானித்துள்ளது.

இன்னும் ஓரிரு தினங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.நோர்வே வெளியிட்ட அறிக்கையில் சமாதான முயற்சியில் இலங்கையின் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் அம்பலமானதால், பெரும் சங்டமான நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tuesday, November 15, 2011

நோர்வேயும் அமெரிக்காவும் அனைத்து அழிவுகளும் இடம் பெற்ற பின்னர் செய்த பாவத்திற்கு "பாவ மன்னிப்பு" கோருகின்றனர்!

யுத்தத்தின் போதும் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போதும் அதனை தடுத்து நிறுத்த முயற்சிக்காத நோர்வே இன்று அனைத்தும் முடிந்த பின்னர் பாவ மன்னிப்பு கோருவது எவ்விதத்தில் நியாயமாகும் என்று இடதுசாரி முன்னணியின் தலைவரும் தெஹிவளை, கல்கிசை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

அரசாங்கத்தின் மீது உலக நாடுகளுக்கு நம்பிக்கையில்லாததன் காரணமாகவே பொதுநலவாய விளையாட்டுப் போட்டி கைநழுவிப் போனதென்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் அழிவிற்கும் யுத்தத்திற்கும் இந்தியாவே காரணம் என நோர்வே எக்சொல்ஹெய்ம் சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லை. இதனை அனைவரும் அறிவார்கள். அன்று யுத்தம் நடந்த போது தமிழ் மக்கள் கொல்லப்படும் போது நோர்வேயோ, அமெரிக்காவோ யுத்தத்தை நிறுத்துவதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இன்று அனைத்து அழிவுகளும் இடம் பெற்ற பின்னர் நோர்வேயும் அமெரிக்காவும் செய்த பாவத்திற்கு "பாவ மன்னிப்பு" கோருகின்றனர். இது எவ்வாறு நியாயமாகும். இலங்கை ஜனாதிபதியின் ஆலோசகர் நடுத்தெருவில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஆனால் இதுவரையில் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. நாட்டில் கொலைகள் அரசாங்கத்தின் அடாவடித்தனங்கள் அதிகத்துள்ளன. இவ்வாறான சூழலில் இங்கு வந்து விளையாட்டுக்களில் ஈடுபட்ட பின்னர் உயிரோடு வெளியேற முடியுமா என்ற அச்சம் வெளிநாடுகளில் உருவாகியுள்ளது.

அரசாங்கத்தின் செயற்பாடுகளில் உலக நாடுகளுக்கு நம்பிக்கை இல்லை. பொது நலவாய விளையாட்டுப் போட்டிகளை இலங்கையில் நடத்துமாறு முதன் முறையாக விண்ணப்பித்தும், அனுதாபரீதியிலாவது அதிகப்படியான வாக்குகள் இலங்கைக்கு கிடைக்கவில்லை. 47 அதிகப்படியான வாக்குகளை பெற்று விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் வாய்ப்பு அவுஸ்திரேலியாவிற்கு கிடைத்துள்ளது. சட்டம், ஒழுங்கு நாட்டிற்குள் இல்லாததால் 27 வாக்குகளே இலங்கைக்கு கிடைத்துள்ளன எனவும் அரசாங்கத்தின் பாவத்திற்கு நாடும் மக்களும் தலைகுனிந்துள்ளனர் என விக்ரமபாகு குறிப்பிட்டுள்ளார்.

Sunday, November 13, 2011

விடுதலைப் புலிகளை ஒழிப்பதில் இந்தியாவின் பங்கு அம்பலம்

தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தொழிக்கும் வகையிலான இலங்கையின் இராணுவத் தீர்வுக்கு இந்தியா முழு அளவிலான உதவி ஒத்துழைப்புக்களை வழங்கியமை அம்பலமாகியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கை தொடர்பில் இந்தியா மீதான நோர்வேயின் குற்றச்சாட்டு தொடர்பிலேயே கூட்டமைப்பின் பேச்சாளரான சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வினை இந்தியா வலியுறுத்தி வருகின்றது. இருப்பினும் இவ்விடயத்தில் இந்திய மத்திய அரசு எந்தளவு உண்மைத்தன்மையுடன் இல்லாவிட்டால் இதய சுத்தியுடன் செயற்பட்டு வருகின்றது என்பது தெரியாது.

புலிகளுக்கு எதிரான இராணுவத் தீர்வுக்கு இந்தியா முழுஅளவிலான ஒத்துழைப்பினை வழங்கியது குறித்து தற்போது நோர்வே பகிரங்கப்படுத்தியிருந்தாலும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இராணுவத் தளபதிகள் மற்றும் அமைச்சர்கள் இவ்விடயத்தை யுத்தம் நிறைவடைந்த 2009 காலப்பகுதியிலேயே கூறிவிட்டனர். எனினும் இராணுவத்துக்கு உதவியது தொடர்பிலான இலங்கையின் வெளிப்பாட்டை இந்தியா இதுவரையில் மறுக்கவில்லை எனவும் சுரேஷ் எம்.பி. தெரிவித்தார்.

Friday, November 11, 2011

இந்தியா புலிகளுக்கு எதிராக செயற்பட்டது – நோர்வே

இந்தியா தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்பட்டு வந்ததாக நோர்வே அறிவித்துள்ளது. இலங்கை சமாதான முனைப்புக்கள் தொடர்பில் நோர்வே இன்று விசேட அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில் சமாதான முனைப்புக்கள் எதனால் தோல்வியடைந்த என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட வேண்டுமென இந்தியா பெரிதும் விரும்பியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசாங்கம், இலங்கை அரசாங்கத்தின் மீது அனுதாபம் கொண்டிருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நோர்வே மத்தியஸ்தத்தினால் ஆரம்பிக்கப்பட்ட சமாதான முனைப்புக்கள் தோல்வியில் முடிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2004ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதன் பின்னர், தமிழர் அபிலாஷைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்ட போதிலும் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை.

இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த இந்தியா எவ்வித ஆர்வமும் காட்டவில்லை என நோர்வே அரசாங்கத்தின் அனுசரணையுடன் தயாரிக்கப்பட்ட குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கைப் படையினர் ராடார்கள் மற்றும் புலனாய்வுத் தகவல்களை இந்திய மத்திய அரசாங்கம் வழங்கியிருந்தது.
நோர்வேயுடனான தனிப்பட்ட சந்திப்புக்களின் போது புலிகளுக்கு சார்பாக செயற்பட்டு வருவதாக இந்தியா குற்றம் சுமத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை அரசாங்கத்தின் யுத்தத்திற்கு நேரடியாக இந்தியா உதவிகளை வழங்காத போதிலும் வேறும் நாடுகளிடம் ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கு எதிர்ப்பை வெளியிடவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் புலிகள் மீதான எதிர்ப்பலை இலங்கை அரசாங்கத்திற்கு பெரும் பலமாக அமைந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1992ம் ஆண்டு இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தற்கொலைத் தாக்குதல் மூலம் படுகொலை செய்யப்பட்டதனைத் தொடர்ந்து புலிகளை தடை செய்யப்பட்ட இயக்கமாக இந்தியா அறிவித்திருந்தது.

2004ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட போது ராஜீவின் மனைவி சோனியா கட்சியின் முக்கிய பொறுப்பை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1997ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையில் நோர்வே அரசாங்கத்தினால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சமாதான முனைப்புக்கள் குறித்து 202 பக்கங்களில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைவதனை இலங்கையும் இந்தியாவும் அதிகமாக விரும்பவில்லை என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது காங்கிரஸ் தோல்வியைத் தழுவியிருந்தால் இலங்கைக்கு அது தலையிடியாக அமைந்திருக்கும் எனவும் இந்திய தேர்தல் குறித்து இலங்கை கூடுதல் கவனம் செலுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பாரதீய ஜனதா கட்சி தேர்தலில் வெற்றியீட்டினால் புலிகளை காப்பற்ற முடியும் என வை.கோ கருதியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, July 31, 2011

இலங்கை முஸ்லிம்கள் வெளியேற்றப்பட வேண்டும் – பிரிவிக்

இலங்கை வாழ் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட வேண்டுமென அண்மையில் நோர்வேயில் தாக்குதல்களை நடத்திய என்ட்ராஸ் பிரிங் பிரிவிக் தெரிவித்துள்ளார்.
இலங்கை, ஐரோப்பா, பிலிப்பைன்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

நோர்வே பிரதமர் அலுவலகம் மற்றும் இளைஞர் முகாம் ஒன்றின் மீது குறித்த நபர் மிலேச்சத்தனமான தாக்குதல்களை நடத்தியிருந்தார். இந்தத் தாக்குதல்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்ததுடன் சொத்துக்களுக்கும் பாரியளவில் சேதம் ஏற்பட்டிருந்தது.

பிரிவிக் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, ஐரோப்பாவை புறச் சக்திகளிடமிருந்து பாதுகாக்கும் நோக்கில் தாக்குதல்களை நடத்தியதாகத் தெரிவித்திருந்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட கொள்கைப் பிரகடனம் ஒன்றையும் பிரிவிக் வெளியிட்டுள்ளார்.

இந்தக் கொள்கைப் பிரகடனத்தில் நவீன போர்த் தந்திரோபாயங்கள் மற்றும் பயங்கரவாத அமைப்புக்கள் பற்றி சுட்டிக்காட்டியுள்ளார். ஐரோப்பிய சுதந்திரப் பிரகடனம் என அந்த அறிக்கைக்கு பெயர் சூட்டியுள்ள பிரிவிக், இலங்கையின் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பற்றியும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இலங்கை வாழ் முஸ்லிம்கள் நாடு கடத்தப்பட வேண்டும் எனவும் அதற்கு பூரண ஆதரவளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நான்காம் தலைமுறை யுத்தம் பற்றி குறிப்பிட்டுள்ள பிரிவிக், ஆயுதங்களை மட்டும் பயன்படுத்தி யுத்தம் மேற்கொள்ள முடியாது எனவும், சமூக கலாச்சார மற்றும் ஏனைய விழுமியங்கள் பற்றியும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மஹாத்மா காந்தியின் அஹிம்சை வழிப் போராட்டம் தொடர்பிலும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார். அமெரிக்கா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகளினால் ஐரோப்பா மீது செலுத்தி வரும் தாக்கங்களுக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

Tuesday, July 26, 2011

ஓஸ்லோ நகர வீதியில் மலர்களை ஏந்திய மக்கள் வெள்ளம்!

ஒஸ்லோவில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இரட்டைத்தாக்குதல் சம்பவங்களில் பலியானவர்களை நினைவுகூரும் விதமாக றோசா மலர்களை ஏந்தியவாறு மாபெரும் ஊர்வலம் நோர்வேயின் நகரங்கள் மற்றும் பட்டினங்கள் எங்கும் நடத்தப்பட்டு வருகின்றன.’
இன்று இரவு வீதிகள் எல்லாம் மலர்களை ஏந்திய மக்கள் அன்பு மயமாகக் காட்சியளிக்கின்றனர்’ என்று ஒஸ்லோவில் திரண்டிருந்த ஒரு லட்சம் மக்களிடையே பேசும்போது அந்நாட்டு தலைமை அமைச்சர் தெரிவித்தார்.

இரட்டைத்தாக்குலில் உயிரிழந்தோரின் சரியான எண்ணிக்கை 76 ஆகும் 93 அல்ல என்று தெரிவிக்கப்பட்டது.

இரங்கலில் பங்குபற்றுவதன் மூலம் நீங்கள் எல்லாரும் ஜனநாயகத்திற்கு ‘ஆம்’ என்று வலியுறுத்திக்கூறுகின்றீர்கள் என்று பிரதமர் ஜென்ஸ் ஸரோரென்பேர்க் மக்கள் மத்தியில் தெரிவித்தார்

ஜனநாயகம், சகிப்புத்தன்மை, ஐக்கியம் ஆகியவற்றிற்கான பேரணி இது என்றும் தீமை ஒருவரைக் கொல்லலாம். ஆனால் மக்களை வெற்றி கொள்ள முடியாது என்றும் பிரதமர் சொன்னார். மத்திய ஒஸ்லோவின் பல வீதிகள் அனைத்தும் மக்களுக்கும் இடம்கொடுப்பதற்காக மூடப்பட்டடிருந்தன.