Showing posts with label ஜே.வி.பி.. Show all posts
Showing posts with label ஜே.வி.பி.. Show all posts

Monday, November 07, 2011

ஜே.வி.பியின் காலங்கடந்த ஞானம்! புலிகளுடனான போரை ஆதரித்தது மகா தவறாம்!!

ஜனாதிபதித் தேர்தல்களில் முதலில் மஹிந்த ராஜபக்ஷவையும் பின்னர் சரத் பொன்சேகாவையும் ஆதரித்தது தவறு என்று கூறியுள்ளது ஜே.வி.பி. புலிகளுக்கு எதிரான போரைக் கண்மூடித்தனமாக ஆதரித்ததன் மூலம், தேசியப் பிரச்சினைகளை மஹிந்த அரசு புறந்தள்ள வாய்ப்பளித்து விட்டதாகவும் அது மகாதவறு என்றும் அந்தக் கட்சி முதல் தடவையாக நேற்று ஒப்புக்கொண்டது.
இனிவரும் காலங்களில் யாருடனும் தேர்தல் கூட்டு ஒப்பந்தங்களைச் செய்து கொள்வதில்லை என்ற கொள்கை முடிவையும் அது அறிவித்துள்ளது.

2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஜே.வி.பி. முழுமையான ஆதரவு தெரிவித்தது. 2010ஆம் ஆண்டு அவரது முக்கிய எதிரியாகப் போட்டியிட்ட, இராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளித்தது.

தற்போது, கட்சியின் அந்த முடிவுகள் மகா தவறானவை என்று ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் எந்தவொரு கட்சியுடனோ தனி மனிதர்களுடனோ தேர்தல் கூட்டு ஒப்பந்தங்கள் எதையும் செய்து கொள்ளப் போவதில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸநாயக்க நேற்றுக் கொழும்பில் தெரிவித்தார்.

பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசியக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக திஸநாயக்க தொடர்ந்த போதும் இதனை நேற்று அறிவித்தார்.

கட்சியின் தவறுகளுக்காக அவர் பொதுமக்களிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். நாட்டின் தேசியப் பிரச்சினைகள் தொடர்பாகக் காணப்பட்ட சமநிலைத் தன்மை, போருக்குத் தமது கட்சி காட்டிய முழுமையான ஆதரவால் சமநிலை இழந்து போனதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அது மிகத் தவறான முடிவு என்று கட்சி இப்போது புரிந்துகொண்டுள்ளது. பொதுவுடமையை (சோஷலிசம்) நோக்கி நாட்டை முறையாக முன்னகர்த்துவதற்கு “சிறிய மறுசீரமைப்பு” நடவடிக்கைகள் அவசியம் என்றும் திஸநாயக்க பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

கட்சியின் தற்போதைய தலைமை கைக்கொண்ட கொள்கை தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக ஜே.வி.பி. இரண்டாகப் பிளவு பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகி வரும் நிலையில் இந்த ஒப்புதல் வாக்குமூலமும் மன்னிப்புக்கோரலும் வெளிவந்துள்ளன.

Friday, February 11, 2011

மக்கள் தயார் என்றால் எகிப்தில் நடைபெறுவதனைப் போன்று போராட்டம் நடத்த முடியும் – ஜே.வி.பி.

இலங்கை மக்கள் தயார் என்றால் எகிப்தில் நடைபெறுவதனைப் போன்று போராட்டம் நடத்துவதற்கு முடியும் என ஜே.வி.பி கட்சி அறிவித்துள்ளது. எகிப்து மற்றும் டியூனிசீயா போன்ற நாடுகளின் போராட்டங்களுக்கு நிகரான போராட்டங்களை நடாத்த மக்கள் தயார் என்றால் அதற்கான தலைமைத்துவத்தை வழங்க ஜே.வி.பி தயார் என கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பி கட்சியின் ஆறாவது தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயகம் மற்றும் சமவுரிமைகளை வென்றெடுப்பதற்கான முனைப்பு உலகம் முழுவதிலும் அதிகரித்துள்ளதாகவும், அதற்கான ஆதரவினை வழங்கத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுத் திட்டங்களை முன்வைப்பதற்கு அரசாங்கமோ ஐக்கிய தேசியக் கட்சியோ பொருத்தமற்றது என்பது தெளிவாக அம்பலமாகியுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற இந்த மாநாட்டில் சீனா,இந்தியா, சைப்ரஸ், கியூபா மற்றும் சுவீடன் உள்ளிட்ட நாடுகளின் சோசலிச கட்சிப் பிரதிநிதிகளும், ஜே.வி.பி.யினர் வெளிநாட்டு கிளைப் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் இணைந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மக்கள் போராட்டங்களை நடாத்துவதற்கு முன்வந்தால் அதற்கு தலைமை தாங்க ஜே.வி.பி தயார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குடும்ப ஆட்சி, சர்வாதிகாரம், ஜனநாயக விரோத ஆட்சியாளர்கள், ஏகாதிபத்தியவாதிகளுக்கு இந்த உலகில் இடமில்லை. முதலாளித்துவ ஆட்சி முறை தொடர்ந்தும் முன்னோக்கி செல்ல முடியாது. சமதர்மத்தை ஸ்தாபிக்கும் முக்கியமான இடத்திற்கு முழு உலகம் தற்போது வந்துள்ளது என ஜே.வி.பியின் தமலைவர் சோமவங்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.

உலக முழுவதும் கடந்து செல்லும் புதிய அரசியல் அலையில் இருந்து தற்போதைய மகிந்த ராஜபக்ஷ நிர்வாகம் தப்பிக்க முடியாது. இந்த புதிய அரசியல் அலையில் இருந்து தற்போதைய ஆட்சியாளர்கள் தப்பிக்க நினைத்தால், அது வெறும் பகல் கனவாகவே இருக்க போகிறது எனவும் சோமவங்ச குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் உருவாக்கிய சிரேஷ்ட புரட்சியாளரான ரோஹண விஜேவீரவினால் ஆரம்பிக்கப்பட்ட ஜே.வி.பி தற்போது 46 வருடங்களை பூர்த்தி செய்துள்ளது. இந்த காலத்தில் வெற்றி, தோல்விகளை கட்சி எதிர்நோக்கியது. நாடு முழுவதும் செங்கொடியை ஏற்ற முடிந்த கட்சி ஒன்று இருக்கும் என்றால் அது ஜே.வி.பி மாத்திரமே. நாட்டில் ஏனைய சமதர்ம கட்சிகள் இருந்தாலும் இதுவே ஜே.வி.பியின் வெற்றியாகும்.

மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு நாட்டை அபிவிருத்தி நோக்கி இட்டுச் செல்லவோ, நாட்டிற்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவோ முடியாது. ஏனைய பிரதான கட்சிகளாலும் இதனை செய்ய முடியாது. ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவும் பிரச்சினைகளை அவர்களால் இன்னும் தீர்த்து கொள்ள முடியாமல் உள்ளது. வாக்குகள் குறைவாக பெற்றிருந்தாலும் நாட்டில்; உள்ள சிறந்த அமைப்பு ஜே.வி.பி மாத்திரமே. மக்களுக்கு தேவையான ஜனநாயகத்தை நாட்டில் உள்ள இரண்டு பிரதான கட்சிகளாலும் பெற்றுக்கொடுக்க முடியாது. நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

இந்த நிலையில் மக்கள் விரும்பும் தீர்மானங்களை எடுக்க கூடாது என ஜனாதிபதி கூறுகிறார். ஊடகவியலாளர்கள், எதிராளிகள் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர். நாட்டின் நீதிமன்ற கட்டமைப்பில் உருவாக்கி வரும் நிலைமைகள் புத்திசாலித்தனமாக மக்கள் மத்தியில் விசனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

நாட்டில் இடம்பெறும் அனைத்து எதிர்ப்பு நடவடிக்கைகளின் பின்னணியிலும் ஜே.வி.பி இருப்பதாக அரசாங்கம் கூறுகிறது. மாணவர் அமைப்புகளை ஜே.வி.பியே வழிநடத்துவதாகவும் குற்றம்சுமத்துகிறது. ஜே.வி.பி பின்னணியில் இருந்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாது என்பதை அரசாங்கத்திற்கு கூறிக்கொள்கிறோம். ஜே.வி.பி எப்போதும் மக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் சென்று அவர்களை வழிநடத்தும் எனவும் ஜே.வி.பியின் தலைவர் சோமவங்ச அமரசிங்க மேலும் கூறியுள்ளார்.

Saturday, September 19, 2009

புலிகள் மீதான வெற்றியைக் காட்டி ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குகிறார் மகிந்த: ஜே.வி.பி.

[சனிக்கிழமை, 19 செப்ரெம்பர் 2009]

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான வெற்றியைக் காட்டி அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கீழ்த்தரமான அரசியல் விளையாட்டுக்களில் ஈடுபடுவதன் மூலம் வாக்காளர்களின் உரிமையைக் கேலிக்கூத்தாக்குகிறார். அத்துடன், நாட்டின் சட்ட திட்டங்களையும் மீறி நாட்டின் ஜனநாயகத்தை கேலி செய்கிறார் எனக் குற்றம்சாட்டி இருக்கிறார் ஜே.வி.பி. கட்சியின் தலைவர் சோமசிங்க அமரசிங்க.

தென் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் ஜே.வி.பி. உறுப்பினர்களுக்கு ஆதரவாக பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

"அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து 90 வீதமான வாக்களிப்பு இடம்பெற வேண்டும் என்றும் அத்தனையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆதரவாகவே விழ வேண்டும் என்றும் அரச தலைவர் ராஜபக்ச எதிர்பார்க்கிறார். இதன் மூலம் வேறு எந்தக் கட்சியும் போட்டியிடக்கூடாது எனவும் அவர் நினைக்கிறார்" என்றார் சோமவன்ச.

ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய நிலைப்பாடு பற்றி கருத்துத் தெரிவித்த அவர், தேர்தல் போட்டியில் அந்தக் கட்சி இருப்பதற்கான குறிப்புக்கள் எதனையும் காணவில்லை என்றார்.

நிறைவேற்று அதிகார அரச தலைவர் பதவியை ஜே.வி.பியின் ஆதரவுடனேயே கைப்பற்றிய மகிந்த ராஜபக்ச தற்போது கட்சியையே மறைமுகமாகத் தாக்கி வருகிறார் எனவும் சோமவன்ச குற்றம் சாட்டினார்.

சுதந்திரக் கட்சி தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டால் ஒருபோதும் வெற்றிபெற முடியாது என்றும் அவர் கூறினார். கட்சியின் நிறுவனரான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க கூட ஏனைய கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டே ஆட்சியைக் கைப்பற்ற முடிந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்