Showing posts with label தமிழ்நாடு. Show all posts
Showing posts with label தமிழ்நாடு. Show all posts

Thursday, October 02, 2014

17 ஆண்டுகள்... அதிர்வலைகள்!

17 ஆண்டுகளைத் தாண்டியும் தடதடத்துக்கொண்டிருந்த ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை, நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா அதிரடியாக முடித்து வைத்துவிட்டார். வழக்கு கடந்துவந்த 17 ஆண்டுகளைப் பற்றிய பருந்துப் பார்வை இது...
1. முட்டாள்கள் தின காமெடி! 1995, ஏப்ரல் 1...
அப்போதைய, ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி, ஒருசில பத்திரிகையாளர்களை சென்னையில் தனது அலுவலகத்துக்கு வரவழைத்திருந்தார். சுவாமியின் வழக்கமான அரசியல் செய்தியாக இருக்கும் எனச் சென்றவர்களுக்குக் காத்திருந்தது, இந்தியாவுக்கான ஸ்கூப் நியூஸ்! ''தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீது வழக்குத் தொடர, தமிழக ஆளுநர் சென்னா ரெட்டி அனுமதி அளித்துவிட்டார்'' என்ற பகீர் தகவலை சர்வசாதாரணமாகச் சொன்னார் சுவாமி. செய்தியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தாலும், சுவாமி ஏதேனும் காமெடி செய்கிறாரா என அந்தப் பத்திரிகையாளர்களுக்குச் சந்தேகம். 'இன்று முட்டாள்கள் தினம். அதனால் சுவாமி நம்மை ஏமாற்றுகிறார்’ என்று ஒரு நிருபர் கமென்ட் அடிக்க, ஆளுநர் சென்னாரெட்டி கையெழுத்திட்ட அனுமதிக் கடிதத்தின் நகலை அனைவருக்கும் வழங்கினார் சுவாமி. 
2. மூன்றே மாதங்களில் முடிக்கலாம்!
இந்திய அரசியல் சட்ட வரலாற்றில், முதலமைச்சர் மீதான ஊழல் குற்றங்களை விசாரிக்க, மாநில ஆளுநர் அனுமதி கொடுத்தது இதுதான் முதல்முறை. லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின்படி நான் தொடரப்போகும் இந்த வழக்கில், சட்டரீதியான நடைமுறைகள்படி தாமதம் ஏற்பட வாய்ப்பு இல்லை. நடைமுறை தாமதங்களையும் தவிர்க்கத்தான் சிறப்பு நீதிமன்றமும் சிறப்பு நீதிபதியும் வேண்டும் என்கிறேன். ஜெயலலிதா மட்டும் வழக்கு நடைமுறைகளுக்கு இசைந்தால், மூன்றே மாதங்களில் வழக்கை முடித்துவிடலாம்!'' என்று அப்போது கூறினார் சுப்ரமணியன் சுவாமி. 
3. ஜெயலலிதாவின் முதல் ரியாக்ஷன்!
ஜெயலலிதா மீது வழக்கு போடலாம்’ என ஆளுநர் சென்னாரெட்டி அனுமதியளித்த கடிதத்தின் நகல், சுவாமி பேட்டியளித்த நாள் அன்று மதியம் 12.30 மணிக்கு போயஸ் கார்டன் ஃபேக்ஸ் மெஷினில் வந்து விழுந்தது. அதைப் படித்ததும் ஆத்திரம், இயலாமை, வெறுப்பு... என நிதானம் இழந்த நிலையில், அப்போது தனக்கு எதிரே நின்றுகொண்டிருந்த அமைச்சர் கே.ஏ.கிருஷ்ணசாமியை விளாசித்தள்ளினார் ஜெயலலிதா. 'நீங்கள் இத்தனை பேர் இருந்தும் என்ன பிரயோஜனம்? நான் எல்லாவற்றையும் உதறிவிட்டு எங்கேயாவது போகிறேன்!’ எனக் கடுகடுத்தார்! 
4. இராஜினாமா பெஸ்ட்!
முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமனைத் தொடர்புகொண்டு, 'ஆளுநர் சென்னா ரெட்டி, சுப்ரமணியன் சுவாமிக்கு அளித்த அனுமதியை ரத்துசெய்யக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்போகிறேன். இதில் உங்கள் கருத்து என்ன?’ என்று கேட்டார். 
முழு விவரத்தையும் பொறுமையாகக் கேட்ட ஆர்.வி, 'அது மிகப் பெரிய விபரீதமாக முடியும். வழக்குத் தொடுத்தால், அதுபற்றிய செய்திகள் தினமும் விவாதிக்கப்படும். உங்கள் மீது 'ஊழல்வாதி’ என்ற பிம்பம் படியும். எனவே, இப்போதே நீங்கள் பதவியை இராஜினாமா செய்து, வேறு ஒருவரை முதல்வராக அமர்த்திவிட்டு, வழக்கை முழுமூச்சாக எதிர்கொள்ளுங்கள்’ என்றார். ஆனால், அதைச் செய்யவில்லை ஜெயலலிதா! 
5. மலையெனக் குவிந்த புகார்கள்!
1995, ஏப்ரல் 15-ம் தேதி தி.மு.க சார்பில், 'தமிழகத்தில் ஊழல்கள் பெருகிவிட்டன’ எனச் சொல்லி 539 பக்கங்கள்கொண்ட அறிக்கை அப்போதைய ஆளுநர் சென்னா ரெட்டியிடம் அளிக்கப்பட்டது. அவர்களைத் தொடர்ந்து வாழப்பாடி ராமமூர்த்தி, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ஆகியோரும் ஆளுக்கு ஓர் அறிக்கையை ஆளுநரிடம் கொடுத்தனர். ம.தி.மு.க சார்பிலும் ஊழல் பட்டியல் தரப்பட்டது. சுவாமி கிள்ளிய திரிக்கு, மற்ற அனைத்துக் கட்சிகளும் வெடிமருந்துகளைக் குவித்தன! 
6. அரசியலில் இது சாதாரணம் அல்ல!
தமிழக முதலமைச்சரான தன் மீது வழக்குத் தொடுக்க ஆளுநர் அளித்த அனுமதிக்குத் தடை விதிக்க வேண்டும்’ என சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை விசாரித்தார் நீதிபதி சிவராஜ் பாட்டீல். ஜெ. தரப்பு வழக்குரைஞர் பராசரன், 'முதலமைச்சருக்கும் ஆளுநருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு மற்றும் அரசியல் காழ்ப்பு உணர்ச்சியின் காரணமாக இப்படி ஓர் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, அதை ரத்துசெய்ய வேண்டும் என்றார். நீதிபதி சிவராஜ் பாட்டீல், 'இது மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு. எனவே, டிவிஷன் பெஞ்சுக்கு மாற்றுகிறேன்!’ என உத்தரவிட்டார். 
7. சுவாமி மீது தாக்குதல் சுனாமி!
1995, ஏப்ரல் 20 அன்று ஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்துக்கு வரும் சுப்ரமணியன் சுவாமி மீது தாக்குதல் நடத்த சிலர் திரண்டனர். சுவாமி வரவும் கற்கள், சைக்கிள் செயின், அழுகிய முட்டை, அறுந்த செருப்புகள் ஆகியவை நீதிமன்ற வளாகத்தில் பறந்துகொண்டே இருந்தன. அந்த சமயம், முன்பு மதுரையில் நடந்த ஒரு கூட்டத்தில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை அவதூறாகத் திட்டியதாகச் சொல்லி வழக்குப் பதிவுசெய்த மதுரை போலீஸ், சுவாமியைக் கைதுசெய்ய சென்னை வந்து காத்திருந்தது. அவர்களிடமும் சிக்காமல் தப்பினார் சுவாமி. இந்த அத்தனை எதிர்ப்புகளில் இருந்தும் தப்பி நீதிமன்றத்துக்குள் வந்தார் சுவாமி. 'ஆளுநரின் உத்தரவை ரத்துசெய்ய முடியாது’ என உத்தரவிட்டது உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச்! 
8. தி.மு.க ஆட்சியில் விறுவிறு வேகம்!
1996-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க மாபெரும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வர, சென்னை சிங்காரவேலர் மாளிகையில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு, வேகம் பிடித்தது ஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு. 'முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளார். அதுபற்றி விசாரிக்க உத்தரவிட வேண்டும்’ என வழக்குத் தொடர்ந்தார் சுவாமி. நீதிபதி சம்பந்தம், விசாரணைக்கு உத்தரவிட்டார். நீதிமன்றம் நல்லம்ம நாயுடு தலைமையில் தனிப் படை அமைத்து உத்தரவிட்டது. 
9. சிறையில் ஜெ... கார்டனுக்குள் போலீஸ்!
வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் முதல் குற்றவாளியாக ஜெயலலிதா, இரண்டாவது குற்றவாளியாக சசிகலா, மூன்றாவது குற்றவாளியாக வளர்ப்பு மகன் சுதாகரன், நான்காவது குற்றவாளியாக இளவரசி ஆகியோரைச் சேர்த்து, 1996 செப்டம்பர் 18 அன்று முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது. அதன்பிறகே 5.5.1997-ல் நீதிபதி சம்பந்தம், ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் முதல் விசாரணையைத் தொடங்கினார்.
அப்போது தி.மு.க அரசு தொடர்ந்த பல வழக்குகளில் ஒன்றான கலர் டி.வி ஊழல் வழக்கில் கைதுசெய்யப்பட்டு, சென்னை மத்திய சிறையில் இருந்தார் ஜெயலலிதா. அந்தச் சமயம் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் போயஸ் கார்டனுக்குள் நுழைந்தனர். 
10. மாறியது காட்சி!
டான்சி வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா, 2001-ம் ஆண்டு நடந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல். ஆனாலும், நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவற்றை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்தது. தேர்தலில் அ.தி.மு.க அமோக வெற்றி பெற, அப்போதைய தமிழக ஆளுநர் பாத்திமா பீவி, ஜெயலலிதாவுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். அதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜெயலலிதா முதலமைச்சர் ஆனது செல்லாது என சுரீர் தீர்ப்பளித்தது. ஜெயலலிதாவின் பதவி பறிபோக, ஓ.பன்னீர் செல்வம் தமிழக முதலமைச்சர் ஆனார். பிறகு டான்சி வழக்கில் இருந்து விடுதலை பெற்று, மீண்டும் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, ஜெயலலிதா மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சர் ஆனார். 
11. வழக்கு பெங்களூருக்கு பார்சல்!
தி.மு.க ஆட்சிக் காலத்தில் இந்த வழக்கில் வாக்குமூலம் அளித்த சாட்சிகளில் 76 பேர், இப்போது தங்கள் தரப்பை மாற்றிச் சொல்லியிருக்கிறார்கள். அத்துடன் லஞ்ச ஒழிப்புத் துறையும் முதலமைச்சர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் துறையாக இருக்கிறது. அதனால் வழக்கை தமிழகத்தில் நடத்தினால், நியாயம் கிடைக்காது. அதிகாரிகள் தைரியமாகச் செயல்பட முடியாது. எனவே, வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்!’ என தி.மு.க பொதுச் செயலாளர் க.அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். 2003, நவம்பர் 18-அன்று, வழக்கை பெங்களூருக்கு மாற்றி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். 
12. வழக்கைத் தரவில்லை தமிழகம்!
பெங்களூர் சிறப்பு நீதிமன்ற சிறப்பு நீதிபதியாக பச்சாபுரே நியமிக்கப்பட்டார். தமிழகத்தில் அப்போது ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க ஆட்சி. அதனால் வழக்கை சென்னையில் இருந்து விடுவிக்க தாமதம் ஆனது. 10 மாதங்கள் கழித்தே, வழக்கின் தமிழ் ஆவணங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு அளித்தார்கள். 
13. எரிச்சல் ஆன நீதிபதிகள்!
பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார் ஜெயலலிதா. 'கடந்த ஆறு மாதங்களாக நான் தினம் தினம் வந்துவிட்டு உட்கார்ந்துவிட்டுப் போகிறேன். நான் தனிமைச் சிறையில் இருப்பதைப்போல் உணர்கிறேன். குற்றம் சாட்டப்பட்டவர்கள் இனியும் வராவிட்டால், நான் அதைக் காரணம்காட்டியே தீர்ப்பைச் சொல்வேன்’ எனக் கடுகடு எச்சரிக்கை விடுத்தார் நீதிபதி பச்சாபுரே. அவர் ஓய்வுபெற, மல்லிகார்ஜூனையா புதிய நீதிபதியாகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவரிடமும் இதே இழுத்தடிப்புகள் தொடர்ந்தன. 
14. லண்டன் சிக்கல்!
சொத்துக்குவிப்பு வழக்கோடு லண்டன் ஹோட்டல் வழக்கு ஒன்றும் இணைக்கப்பட்டு இருந்தது. அந்த வழக்கின் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாததால், வழக்கு இழுக்கப்பட்டது. தி.மு.க ஆட்சிக் காலத்தில் லண்டன் வழக்கு இதிலிருந்து பிரிக்கப்பட்டது. ஆனால், லண்டன் சொத்துக்குவிப்பு வழக்கையும் பெங்களூர் வழக்குடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் என ஜெயலலிதா தரப்பு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய, அந்த மனு மீதான தீர்ப்பு வரும்வரை பெங்களூர் வழக்கு விசாரிக்கப்படவில்லை. இறுதியில் உச்ச நீதிமன்றம், பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கை மட்டும் விசாரித்தால் போதும் என உத்தரவிட்டது. இடையில் நான்கு ஆண்டுகள் உருண்டோடியிருந்தன! 
15. உச்சந்தலையில் கொட்டிய உச்ச நீதிமன்றம்!

சொத்துக்குவிப்பு வழக்கின் குற்றப்பத்திரிகையை எதிர்த்து ஒரு வழக்கு, 'இந்த வழக்கு விசாரணை முழுவதும் சட்ட விரோதம். எனவே, இத்துடன் விசாரணையை நிறுத்த வேண்டும்’ எனக் கோரி ஒரு வழக்கு, வழக்கின் ஆவணங்கள் தமிழில் வேண்டும் எனக் கோரிக்கை என, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றங்களில் மனுக்கள் மேல் மனுக்கள் போட்டார் ஜெயலலிதா. தீவிர விசாரணைக்குப் பிறகு பல மனுக்களைத் தள்ளுபடிசெய்த உச்ச நீதிமன்றம், ஒவ்வொரு சமயமும் ஜெயலலிதா தரப்பைக் கண்டித்தது. 
இடையில், தமிழகத்தில் தி.மு.க ஆட்சி மாறி 2011-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தது! 
16. பெங்களூரிலேயே பல்டி விளையாட்டு!
2013 ஜனவரி 17 அன்று, சொத்துக்குவிப்பு வழக்கின் அரசு வழக்குரைஞர் ஆச்சாரியா பதவி விலகினார். நீதிபதி மல்லிகார்ஜூனையா ஓய்வுபெற்று, புதிய நீதிபதியாக பாலகிருஷ்ணா பொறுப்புக்கு வந்தார். அரசு வழக்குரைஞராக பவானி சிங் பொறுப்பெடுத்துக்கொண்டார். அந்தச் சமயம் வழக்கின் காட்சிகள் மாறின. பவானி சிங்கின் அணுகுமுறை ஜெயலலிதா தரப்புக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறி, அவரை மாற்ற வேண்டும் என கர்நாடக அரசுக்கு பேராசிரியர் க.அன்பழகன் கோரிக்கை வைத்தார். அதை ஏற்றுக்கொண்ட கர்நாடக அரசு அவரை மாற்றியது. பவானி சிங் மாற்றத்தை எதிர்த்து, ஜெயலலிதா தரப்பு உச்ச நீதிமன்றம் சென்றது. பவானி சிங்கே அரசுத் தரப்பு வழக்கறிஞராக நீடிக்கட்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்தச் சமயம்தான் நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா பொறுப்பு எடுத்துக்கொண்டார். 
17. மிஸ்டர் ஸ்ட்ரிக்ட் மாஸ்டர்!
பொறுப்பை கையில் எடுத்ததில் இருந்து கறாரான மாஸ்டராகத்தான் நீதிபதி குன்ஹா இருந்தார். வழக்கை விரைவுபடுத்தி முடிக்க நினைக்கிறார் குன்ஹா என்றதும், புதிய அஸ்திரத்தை எடுத்தார்கள். 
இந்த வழக்கில் 32 நிறுவனங்கள் உள்ளன. இவர்கள் தனித் தனியாக மனு போட்டார்கள். 'எங்கள் நிறுவனத்தை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும். அதுவரை சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணையை நிறுத்த வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார்கள். 
17 ஆண்டுகளாக இந்த வழக்கு நடக்கிறது. இதுவரை தூங்கினீர்களா?’ என்று கேட்டு எல்லா மனுக்களையும் குன்ஹா டிஸ்மிஸ் செய்தார். 
அந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தார். அந்த அளவுக்கு கறார் காட்டியதால்தான், குன்ஹாவால் தீர்ப்பு தேதியை அறிவிக்க முடிந்தது. 
மைக்கேல் டி.குன்ஹா நீதிபதியாக வந்த பிறகு, ஜெயலலிதா பெங்களூருக்கு வரவே இல்லை. தீர்ப்பு தரப்பட்ட 2014, செப்டம்பர் 27 அன்றுதான் நீதிபதி குன்ஹா, ஜெயலலிதாவை முதன்முறையாக நேரில் பார்த்தார். 
அந்த முதல் சந்திப்பே மறக்க முடியாததாக மாறிவிட்டது இருவருக்கும்!
ஜோ.ஸ்டாலின்

ஜெயலலிதாவை பெங்களூரில் இருந்து புழல் சிறைக்கு மாற்ற அதிமுக திட்டம்?

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை, அங்கிருந்து புழல் சிறைக்கு மாற்ற அதிமுக வழக்கறிஞர்கள் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜெயலலிதா சரி என்று கூறி விட்டால் அதற்கான நடவடிக்கைகளை அவர்கள் எடுக்கவுள்ளனர்.
கைதியின் உடல் நலம், பாதுகாப்பு, சிறப்பு அந்தஸ்து உள்ளிட்டவற்றைக் காரணம் காட்டி சம்பந்தப்பட்ட சிறை அதிகாரியிடம் இதுதொடர்பாக கோரிக்கை விடுக்கலாம். அவர் பரிசீலித்து கைதி விரும்பும் சிறைக்கு மாற்ற முடியும். 
எனவே அந்த அடிப்படையில் பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து புழல் சிறைக்கு ஜெயலலிதாவை மாற்றுவது தொடர்பான சட்ட ஆலோசனைகள் ஏற்கனவே செய்து முடிக்கப்பட்டு விட்டனவாம். ஜெயலலிதாவின் சம்மதத்திற்காக தற்போது அதிமுக தரப்பு காத்துக் கொண்டுள்ளது என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 
ஜெயலலிதா இசட் பிரிவு பாதுகாப்பின் கீ்ழ் உள்ளவர். 
மூட்டு வலி, முதுகுவலி, சர்க்கரை நோய் உள்ளிட்டவற்றால் அவர் தொடர் சிகிச்சை பெறும் நிலையில் உள்ளவர். எனவே இதைக் காரணம் காட்டி சிறை மாற்றத்திற்கு அதிமுக தரப்பு திட்டமிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி என்ன ஆவார் ஜெயலலிதா?

ஆரம்பத்திலேயே எங்க குடும்பம் ரொம்ப வசதியாக இருந்தது, ரொம்பப் பணக்காரக் குடும்பம். அப்போது இருந்த அந்தச் சொத்து அப்படியே நிலைச்சு இருந்திருந்தால், எங்க அம்மாவும் நடிக்க வந்திருக்க வேண்டாம், நானும் சினிமாவில் நடிக்க வந்திருக்க வேண்டாம்! இப்படிச் சொன்னவர் ஜெயலலிதா!
தங்களின் அரசியல் வளர்ச்சியை அருகில் இருந்து பார்க்காத உங்களது தாயாரின் நினைவுகளைச் சொல்லுங்கள்...’ என ஒருமுறை ஜெயலலிதாவிடம் கேட்டபோது,
அம்மா இருந்திருந்தால், இந்தக் கேள்விக்கே இடம் இருந்திருக்காது. ஏனென்றால், என்னை அவர் அரசியலில் நுழைய அனுமதித்திருக்கவே மாட்டார்! என்றார். 
குடும்பச் சூழ்நிலை காரணமாக நடிக்க வந்து, தாய் சந்தியாவின் மரணத்துக்குப் பின்னால் அரசியலுக்கு வந்து, 'கூடா நட்பு கேடாய் முடியும்’ என்ற பழமொழிக்கு உதாரணமாக பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் சென்றுவிட்டார் ஜெயலலிதா! 
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்புரத்தில் 'ஜெய விலாஸ்’, 'லலித விலாஸ்’ எனப் பெரும் பங்களாக்களில் அவரது மூதாதையர் வாழ்ந்தார்கள். அதன் நினைவாகத்தான் 'ஜெயலலிதா’ என இவருக்குப் பெயர் சூட்டினார்கள். இன்று பரப்பன அக்ரஹாரா சிறைக்கும், 'ஜெயலலிதா இருக்கும் சிறை’ என்ற பாரம்பர்யம் தொற்றிக்கொண்டுவிட்டது. 
காலம் வழங்கிய அருட்கொடையான ஆட்சி அதிகாரத்தை, அதன் அருமை தெரியாமல் விளையாட்டுத்தனமாக உருட்டி விளையாண்டதன் விளைவு... வினையாகி, இன்று இருட்டுச் சிறைக்குக் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டது ஜெயலலிதாவை! 
'எனக்கு என்ன குடும்பமா... குட்டியா? தமிழக மக்கள்தான் என் குடும்பம்’ எனச் சொல்லிக்கொண்ட ஜெயலலிதா, யதார்த்தத்தில் அப்படி வாழவில்லை என்பதற்குச் சாட்சியே இந்த 66 கோடி ரூபாய். இந்த 66 கோடியின் மதிப்பை 1991-ம் ஆண்டுக் கணக்கின்படி மதிப்பிட வேண்டும். 'இந்தச் சொத்துக்களின் இன்றைய மதிப்பு 3,600 கோடி ரூபாய்க்கும் மேல்’ என அரசு வழக்குரைஞர் பவானி சிங், சிறப்பு நீதிமன்றத்தில் பதிவுசெய்துள்ளார். 
ஓர் அரசு ஊழியர் தன்னுடைய ஒவ்வொரு பைசாவின் வரவுக்கும் கணக்குக் காட்ட வேண்டும் என்ற, மிகச் சாதாரணமான வழிமுறையைக்கூட உதாசீனம் செய்துவிட்டு நினைத்தை எல்லாம் வளைத்து வசப்படுத்தி ஆண்டிருக்கிறார்கள். 
2013 அக்டோபர் 31-ம் நாள், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக ஜான் மைக்கேல் டி.குன்ஹா நியமிக்கப்பட்டார். ஜெயலலிதாவின் வழக்குரைஞர் குமாரைப் பார்த்து, 'இது என்ன மாதிரியான வழக்கு? சுருக்கமாகச் சொல்லுங்கள்’ என்று கேட்டார் நீதிபதி. 
பொதுவாக இந்த மாதிரியான இயல்பான தன்மையை நீதிபதிகளிடம் எதிர்பார்க்க முடியாது. மேலும், அரசு வழக்குரைஞர்களிடம்தான் முதலில் கேட்பார்கள். ஆனால் குன்ஹா, எதிர்த் தரப்பில் இருந்து தொடங்கினார். குமார் மொத்தக் கதையையும் சொல்லிவிட்டு, 'இப்படி பல குளறுபடிகள் உள்ள வழக்கு இது’ என முடித்தார். 
உடனே நீதிபதி, 'எல்லா வழக்குகளிலும் குளறுபடி இருக்கத்தான் செய்யும். அதைக் களைவதுதான் நம்முடைய பொறுப்பு’ என்றார். வார்த்தையைக் கவனியுங்கள். 'நீதிமன்றத்தின் பொறுப்பு’ எனப் பிரித்துச் சொல்லாமல், 'நம்முடைய பொறுப்பு’ என ஜெயலலிதா தரப்பையும் தன்னோடு சேர்த்துக்கொண்டார். 
இந்த வழக்கில் அரசியல் பின்புலங்கள் இருப்பதாக குமார் வாதிட்டபோது, கொஞ்சம் குரலை உயர்த்தினார் நீதிபதி. 'யாரும் இந்த நீதிமன்றத்தில் உணர்ச்சிவசப்பட வேண்டாம். அனைவரும் சேர்ந்தே கோப்புகளைப் பார்த்து நீதியை நிலைநாட்டுவோம்’ என்று சொன்னார். 
பொதுவாக, 'எந்த வழக்காக இருந்தாலும் பேப்பர் பேசும்’ என்பார்கள். அந்த மாதிரி, தன் முன்னால் இருக்கும் ஆவணங்களின் அடிப்படையில் முடிவுகள் எடுப்பேன் என்பதைச் சொல்லாமல் சொன்னார் நீதிபதி. 
மூன்று குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்தான் இந்த வழக்கே நடந்தது! 
1. 1991-96 வரை முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கும் அதிகப்படியான சொத்துக்களைச் சேர்த்துள்ளார். அவற்றை 32 நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். 
2. ஜெயலலிதாவுடன் சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் சேர்ந்து கூட்டுச் சதி செய்துள்ளார்கள். இது இந்தியத் தண்டனைச் சட்டம் 109 (குற்றம் செய்யத் துணிதல்), 120-பி (கூட்டுச் சதி) ஆகிய பிரிவுகளின்படி குற்றம். 
3. 66 கோடி ரூபாய்க்கு சரியான கணக்கு ஒப்படைக்காததால், ஊழல் தடுப்புச் சட்டம் 13(1) இ பிரிவின்படி குற்றம் செய்தவர்கள் ஆகிறார்கள். 
- இந்தக் குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் அப்படியே ஏற்றுக்கொண்டுவிட்டது. குற்றங்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டதாகச் சொன்ன நீதிபதி, வழங்கிய தண்டனைதான் ஜெயலலிதாவுக்கு மட்டும் அல்ல, ஊழல் அரசியல்வாதிகள் அனைவருக்குமே அடிவயிற்றைக் கலக்கிவிட்டது. 
ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டு சிறைத்தண்டனை விதித்ததுடன், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் என அளித்துள்ள தீர்ப்பு, பொதுச் சொத்தை தன் சொத்தாகச் சுருட்டும் எல்லா அரசியல்வாதிகளுக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை. 
சில நாட்களுக்கு முன் வட மாவட்டம் ஒன்றில் தி.மு.க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அதில் பேசிய முன்னாள் அமைச்சர் ஒருவர், 'ஜெயலலிதாவுக்கு எதிராகத் தீர்ப்பு வந்தவுடன் யாரும் பட்டாசு எல்லாம் வெடிக்க வேண்டியது இல்லை. வீட்டுல அமைதியா இருங்க’ என்றாராம். 
அவர் மீதும் சொத்துக்குவிப்பு வழக்கு நீதிமன்றத்தில் நடக்கிறது. அதாவது, ஊழல் அரசியல்வாதிகள் எல்லோரையுமே ரத்தம் உறைய வைத்துள்ளது இந்தத் தீர்ப்பு. 
குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள், அப்பீல் போய்விட்டு, அந்த வழக்கையே முடிக்கவிடாமல் பார்த்துக்கொண்டு, தன் வாழ்நாள் முழுக்க அதே குற்றத்தைத் தொடர்ந்து செய்துவரும் நிலைக்கு, கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்தது. குற்ற வழக்கில் தண்டனை தரப்பட்டதும் பதவி போய்விடும் என்பதே அந்த உத்தரவு. 
அதேபோல், ஒரு குற்ற வழக்கை எவ்வளவு விரைந்து முடிக்க வேண்டும் என்பதையும் நீதிபதி குன்ஹா காட்டிவிட்டார். வெறும் சிறைத் தண்டனைதானே என ஜாமீன் வாங்கிவிட்டு வீட்டில் ஹாயாக இருந்துவிடக் கூடாது என்பதால், மொத்தச் சொத்துக்களையும் பறிமுதல் செய்யவும், சம்பாதித்த சொத்தைவிட ஒரு மடங்கு அதிகமாக அபராதம் விதிக்கவும் வழிகாட்டி இருக்கிறார் குன்ஹா. 
எடியூரப்பாக்களையும், ரெட்டி சகோதரர்களையும் கொண்ட கர்நாடக மாநிலத்தில் இருந்து நீதி, நேர்மை, நியாயத்துக்கு ஆதரவான குரலாக நீதிபதி குன்ஹா உயர்ந்து நிற்கிறார். 
திருமலைப்பிள்ளை வீட்டில், தன் தலையணைக்கு அடியில், 100 ரூபாயை வைத்திருந்த பெருந்தலைவர் காமராஜரையும், நுங்கம்பாக்கம் வங்கியில் 5,000 ரூபாயை வைத்திருந்த பேரறிஞர் அண்ணாவையும் கொண்ட தமிழகத்தில் இருந்து, ஊழல் வழக்குக்காக முதலமைச்சர் பதவியில் இருந்தபடியே சிறைக்குப் போன அவமானம் ஜெயலலிதாவால் நேர்ந்துள்ளது. 
இந்தியாவில் இனி ஊழல் வழக்குகளில் தண்டனை பெறும் ஒவ்வோர் அரசியல்வாதிக்கும் முன்னதாக ஜெயலலிதாவின் பெயர் உச்சரிக்கப்படும். அந்துலேவை அவரது மாநிலத்துக்காரர்களே மறந்துபோயிருப்பார்கள். ஆனால், அரசியல்வாதிகளின் ஊழல் வழக்குகள் பேசப்படும் போதெல்லாம் அந்துலேவின் வழக்கும் பேசப்படுவதைப்போல ஜெயலலிதாவும் இனி நினைக்கப்படுவார். 
சிறுவயதில் தந்தையை இழந்து, வளர்ந்து நின்றபோது தாயை இழந்து, வழி சொல்லத் தேவையான போது அண்ணனை இழந்து, அரசியல் பாதை தொடங்கிய போது குருவான எம்.ஜி.ஆரை இழந்து தனியாக இருந்த ஜெயலலிதா, இப்போது பதவியை, மரியாதையை, நிம்மதியை இழந்து நிற்கிறார். 
குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் அந்தத் தண்டனை காலம் முடிந்து, ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. அப்படிப் பார்த்தால் 10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாது. அப்படியானால் ஜெயலலிதா இனி தேர்தலில் பங்கேற்பதே சிரமம்தான். 
கர்நாடக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் விடுதலை பெற்று வெளியில் வந்தால்தான், பத்தாண்டுகளுக்குள் தேர்தலில் போட்டியிடவே முடியும். ஒருவேளை அப்படி எதுவும் நடக்காத பட்சத்தில், அடுத்த பத்தாண்டுகளுக்கு அ.தி.மு.க., ஆட்சியில் தொடர்ந்தாலும் ஜெயலலிதா வெளியில் இருந்து அதிகாரம் செய்ய முடியுமே தவிர, அதிகாரத்தை அவர் நேரடியாகச் சுவைக்க முடியாது. இது அவரை மனரீதியாகவும் பாதிக்கச் செய்யும்.
இந்தச் சட்ட, நீதிமன்ற நடைமுறைகள் சாதாரணமாக நடந்தாலே இரண்டு ஆண்டுகளைக் கடந்துவிடும். ஊழல் வழக்குகளுக்கு எதிராக நீதிமன்றங்கள் எப்போதும் சாட்டையைச் சுழற்றி வரும் நிலையில், ஜெயலலிதா முழுமையாக வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவது அசாதாரணமான விஷயமே. 
இவை அனைத்தும் கர்நாடக மாநிலம் சம்பந்தப்பட்டதாக இருப்பதால் காலதாமதங்கள் ஏகத்துக்கும் அதிகரிக்கும். அரசியலில் அபார வெற்றிக்குப் பிறகு, மிகப் பெரிய வாழ்க்கைத் தோல்வியை அடைந்துவிட்டார். 
ஜெயலலிதா நினைத்த வாழ்க்கை இதுதானா?

Saturday, February 22, 2014

எமது குரல் உலகெங்கும் கேட்க நாம் ஓயாமல் போராட வேண்டும்! வை.கோ ஜெனீவாவுக்கு அழைப்பு!

மார்ச் 10 திகதிக்கு ஜெனீவா திடலுக்கு திரண்டு வாருங்கள் ,இதுவரை ஜெனீவா இப்படியான மக்கள் சங்கமத்தை சந்தித்திருக்க முடியாத அளவில் அணிதிரள்வோம். உலகம் திகைக்க வேண்டும் , திடுக்கிட வேண்டும். எமது குரல் உலகெங்கும் கேட்கும் வகையில் நாம் ஓயாமல் போராட வேண்டும். வை. கோபால்சாமி அழைப்பு

Monday, January 27, 2014

நீயா-நானா நிகழ்வில் நீக்கப்பட்ட தலைவர் பிரபாகரனைப்பற்றிய கருத்துக்கள்!

நேற்றைய நீயா-நானா நிகழ்வில் பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டிருந்தன. தோழர்.கி.வே.பொன்னைய்யனின் வாதங்கள் ஏனோ பதியப்படாமல் போனது வருத்தமளிக்கிறது. மிக நீண்ட நேரம் பதியப்பட்ட இந்த நிகழ்வு ஒளிபரப்பின் போது சுருக்கப்பட்ட காரணம் என்றாலும், குமரேசன்.அசோக் மற்றும் இன்னும் பிற நண்பர்களின் விரிவான வாதங்கள் பதிந்திருந்தால் விவாதத்தினை இன்னும் சிறப்பாக கண்டிருக்க முடியும். கி.வே பொன்னையனும்-குமரேசன் அசோக்கும் பல தகவல்களை விவாதித்திருந்தார்கள்.. எப்பொழுதும் இருப்பதைப் போல ஒன்றுக்கொன்று எதிர் நிலையில் இருக்கும் கருத்துக்களைப் போன்றதல்ல நேற்றய தலைப்பு. இதனாலேயே பலவிடயங்களை விரிவாக பலரால் பேச முடியாமல் போயிற்று.

அதே போல தமிழீழ தேசியத் தலைவர் தோழர். பிரபாகரனைப்பற்றி பதிந்த கருத்துக்களும் நீக்கப்பட்டிருக்கின்றன. எனக்கு பிடித்த பேச்சாளர்களாக மூவரை குறிப்பிட்டிருந்தேன் 1. மால்கம் எக்ஸ், 2. தந்தைப் பெரியார், 3. தலைவர்.தோழர்.பிரபாகரன். இதில் மூன்றாவது நீக்கபப்ட்டிருந்தது. கி.வே பொன்னைய்யனும் இதே பதிவினை செய்திருந்தார்.

தொலைக்காட்சிகளில் செய்யப்படும் தணிக்கை வருத்தத்திற்குரியது. எத்தனையோ ஆபாசக் காட்சிகளை, குடும்ப வன்முறைக் காட்சிகளை, தணிக்கை செய்யாத தொலைக்காட்சிகள் ”தலைவர் பிரபாகரனின்” பெயரை உடனடியாக தணிக்கை செய்வதை காணமுடிகிறது.. இது முதல்முறைகிடையாது... நேரடி ஒளிபரப்பினைத் தவிர்த்து வேறு எங்கும் முழுமையாக பேசிவிடமுடிவதில்லை..
தலைவர் பிரபாகரனை அவரது அரசியல் நுணுக்கத்திற்காகவும், சர்வதேச அரசியலில் ஏற்படுத்திய தாக்கத்தினைப் பற்றியும், 'டி ஃபேக்டோ' நாடாக "சுயாட்சி பிரதேசமாக இருந்த தமிழீழத்தின்" ஆட்சியைப் பற்றியும் விரிவாக பேசும் காலம் வரும். அதனை உருவாக்குவது நம் அனைவரின் கடமை.

வணிகப் பொருளாக ‘அடையாளமாக பயன்படுத்தி’ வணிகத்தினை பெருக்கமட்டுமே பயன்பட்ட நிகழ்வுகள் மாறி நேர்மையான விவாத களம் அமைக்கப்படவேண்டிய நெருக்கடியை உருவாக்கவேண்டும்,. .. தொடர்ச்சியான போராட்டங்களின் ஊடாகவே இதனை சாத்தியப்படுத்த முடியும்..

குறிப்பு: இதே விஜய் தொலைக்காட்சி தமிழீழத் தேசியத் தலைவரின் வரலாற்றை தானே தயாரித்து ஒளிபரப்பும் அதற்கான காலம் மிக விரைவில் வரும், இது தமிழ் இணையத்தின் கருத்து.
சென்னை - தமிழன்

Wednesday, November 27, 2013

அடுத்தகட்ட போர் பிரபாகரன் தலைமையில் நடக்கும்!- பழ.நெடுமாறன்

அடுக்கட்ட போர் பிரபாகரன் தலைமையில் நடக்க இருக்கிறது. அந்த போருக்கு இந்த பாசறையில் இருக்கும் போராளிகளும் பங்கேற்க வேண்டும் என்று பழ.நெடுமாறன் தெரிவித்தார்.
நவம்பர் 27 மாவீரர் தினம். உலகம் முழுவதும் உள்ள உணர்வாளர்கள் அனுசரிக்கும் நாள். இந்த நாளில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பழ.நெடுமாறன் தலைமையில் மாவீரர் தின அரங்க கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு ஏராளமானோர் குடும்பம் குடும்பமாக வந்து கலந்து கொண்டனர். சின்னாளப்பட்டி தனியார் பள்ளி மாணவர்கள் 60 பேர் வந்து முற்றத்தை பார்த்தனர்.


விழாவில் நெடுமாறன் பேசும்போது.. முற்றத்தை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். இது தமிழினத்தின் அவலத்தின் துயர சின்னம். இந்த முற்றம் இனி போராளிகளை உருவாக்கும் பயிற்சி களமாக பாசறையாக செயல்படும்.


அடுக்கட்ட போர் பிரபாகரன் தலைமையில் நடக்க இருக்கிறது. அந்த போருக்கு இந்த பாசறையில் இருக்கும் போராளிகளும் பங்கேற்க வேண்டும் என்று பேசினார்.

Tuesday, November 26, 2013

தமிழர்க்கு பூமிப் பந்தில் முகவரி தேடித் தந்தவர் தேசியத் தலைவர் பிரபாகரன்! - நக்கீரன்

தமிழினத்தின் வரலாற்றில் எத்தனையோ அரசர்களும் பேரரசர்களும் தோன்றி மறைந்துள்ளார்கள். இராசராச சோழனும் அவன் மகன் இராசேந்திர சோழனும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சோழப் பேரரசை நிறுவிய மன்னர்கள் ஆவர். இலங்கை மீது படையெடுத்து அதனைப் பிடித்து (கிபி 993 - கிபி 1077) ஆட்சி செய்தவர்கள். சோழர்களது ஆட்சி 84 ஆண்டுகள் நீடித்தது. வங்கப் பெருங்கடலில் வலம் வந்த பேரரசர்கள் முதலாவது இராசராச சோழன், முதலாவது இராசேந்திர சோழன் ஆகியோரது கடற்படைக் கப்பல்களில் புலிக்கொடிகள் வானளாவப் பறந்தன.
அந்தப் பொற்காலத்தின் பின்னர் தேசியத் தலைவர் பிரபாகரனின் கடற்படைதான் புலிக் கொடிகளோடு வங்கக் கடலில் வலம் வந்தன.
உலக வரலாற்றில் கிரேக்கத்தின் மகா அலெக்சான்டர், பிரான்சின் சக்கரவர்த்தி நெப்போலியன் மாவீரர்கள் என்று பெயர் எடுத்தவர்கள்.
தமிழினத்தின் வரலாற்றில் மாவீரன் என்ற பட்டத்தைச் சுமந்தவர் தலைவர் பிரபாகரன் ஒருவரேதான்.
தேசியத் தலைவர் பிரபாகரன் ஒருவர்தான் மாவீரன் என்ற சொல்லுக்கு இலக்கணமாகவும் இலக்கியமாகவும் விளங்கியவர்.
தேசியத் தலைவர் என்றாலும் அது பிரபாகரன் ஒருவரையே குறிக்கும். வேறு யாரையும் குறிக்காது.
ஆங்கிலேயர் இந்தியாவைப் பிடித்து ஆண்ட காலத்தில் தமிழர்கள் படைகளில் சேர்க்கப்படவில்லை. காரணம் ஆங்கிலேயர் கணிப்பில் அவர்கள் வீரம் செறிந்த இனமாகக் கருதப்படவில்லை.

அந்த வசை மாவீரன் பிரபாகரன் பிறந்ததால் கழிந்தது.
தமிழினத்துக்கு இந்தப் பூமிப் பந்தின் மூலை முடுக்கெல்லாம் முகவரி தேடித் தந்தவர் தேசியத் தலைவர் பிரபாகரன் ஒருவரேதான்.
தமிழனைத் தெரியாதவர்களும் தலைவர் பிரபாகரனை தெரிந்து வைத்திருந்தார்கள்.
தமிழினம் இழந்த நாட்டை மீண்டும் போராடிப் பெறவேண்டும் அய்யனாவில் தமிழீழக் கொடி பறக்க வேண்டும் என்ற இலட்சியத்தோடு 30 ஆண்டு காலம் ஓய்வின்றிப் போராடியவர் தேசியத் தலைவர் பிரபாகரன்.

கடலிலும் தரையிலும் எத்தனை தாக்குதல்கள். எத்தனை ஊடுருவல்கள், எத்தனைப் போர்க்களங்கள். எத்தனை படையணிகள். உலகையே வியப்பில் ஆழ்தியவர் தேசியத் தலைவர் பிரபாகரன்.
தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த மண்ணையும் அதில் வாழும் மக்களையும் உயிருக்கு மேலாக நேசித்தவர்.
தேசியத் தலைவர் பிரபாகரன் தமிழ் மக்கள் கால்களில் பூட்டப்பட்ட அடிமை விலங்குகள் என்றோ ஒரு நாள் உடையும் தமிழீழம் பிறக்கும் என நம்பியவர். அந்த நம்பிக்கை வீண்போகாது.

இன்று தேசியத் தலைவர் பிரபாகரனது 59 ஆவது பிறந்த நாள்.
தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் மட்டுமே தமிழ் கூறும் நல்லுகம் எங்கும் கொண்டாடப்படுகிறது.
இந்தச் சிறப்பு வேறு யாருக்கும் இல்லை.

தமிழ் மக்களின் வலி தெரியாத தமிழன் முத்தையா முரளிதரன்- மனிதனாக கூட இருக்க முடியாது -ஈ.சரவணபவன்

தனது மகனை , மகளை, கணவனை , மனைவியை தொலைத்த உறவுகளின் வலியை விளங்கிக் கொள்ள முடியாத ஒருவர் மனிதர் என்று கருதப்படவே தகுதி இல்லாதவர் என முத்தையா முரளிதரனின் கூற்றுக்கு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் கண்டனத்தை தெரிவித்துள்ளார். 

கடந்த 21 ஆம் திகதி 2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. அதற்கான விவாத நேரத்தின் போது உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன் இலங்கையின் சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனைச் சந்தித்திருந்தார்.

அதன்போது முரளிதரன் வெளியிட்ட சில கருத்துகள் மிகவும் கண்டிக்கத்தக்கவை. அதன்படி தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களை மறப்போம் மன்னிப்போம் என அவர் தெரிவித்திருந்தார்.

எனினும் இது அவரின் சொந்த விருப்பம். அதை நான் விளக்க விரும்பவில்லை. ஆனால் இலங்கையில் டேவிட் கமரூன்  பிழையாக வழிநடத்தப்பட்டுள்ளார் எனவும் 20 அல்லது 30 பெண்கள் மட்டும் தமது உறவுகள் காணாமற்போய்விட்டனர் என படங்களை வைத்துக் கொண்டு கண்ணீர் சிந்தி நிற்கின்றனர்.

எனவே இவற்றினை மட்டும் வைத்துக் கொண்டு இலங்கை நிலைமைகளைக் கணக்கிடக்கூடாது. இவை பிரித்தானிய பிரதமர் கமரூனிற்கு காட்டுவதற்காக அன்றைய தினம் மட்டும் ஏற்பாடாகியும் இருக்கக் கூடும் என்றும் தெரிவித்திருந்தார். இவரது கருத்து தமிழ் மக்கள் மத்தியில் மன உழைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் இவர் ஒரு தமிழனாக இருந்து கொண்டு இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது மிகவும் கண்டிக்கத்தக்க விடயம் .

அது மட்டுமன்றி அவ்வாறு கூறும் உரிமை முரளிதரனுக்கு கிடையாது எனவும் இவருக்கு ஆனித்தரமாக தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

ஒரு தமிழ் பெண் தன் கணவர் உயிரோடு இருக்கின்றாரா இல்லையா என்று தெரியாத நிலையில் வாழ்வது எவ்வளவு அவலமானது என்பதை தமிழரான இவர் விளங்கிக் கொள்ளாமல் இருப்பது வியப்பைத் தருகின்றது.  

அத்துடன் கணவனைக் காணாத பெண்கள் தனது கணவன் உயிருடன் இருக்கின்றாரா  இல்லையா என்று கூட தெரியாது தனது தாலியைக் கழற்றுவதா நெற்றிப் பொட்டை அழிப்பதா என்று கூட புரியாத  நிலை எவ்வளவு கொடுமையானது.

தனது பிள்ளை, கணவர் காணாமாற் போன ஒரு பெண்ணின்; வலியையோ ஒரு தந்தை, காணாமற் போன பிள்ளையின் வலியையோ புரிந்து கொள்ள முடியாத ஒருவர் மனிதர் என்று கருதப்படவே தகுதி இல்லாதவர் என்று நான் கருதுகின்றேன்.

முத்தையா முரளிதரனுக்கு அவர் ஒரு சிறந்த பந்து வீச்சாளர் என்ற அடிப்படையிலும் தமிழர் என்ற வகையிலும் நிறைய அபிமானிகள் உண்டு.

ஆனால் அவர் தான் ஒரு தமிழர் என்பதையும் மனிதர் என்பதையும் மறந்து  இலங்கையில் இன ஒடுக்குமுறைகளைத் திருப்திப்படுத்த  வெளியிட்ட அபத்தமான கருத்து அவரைத் தமிழ் மக்களிடம் மட்டுமன்றி மனிதாபிமானிகளிடமும் வெறுப்புக்குரிய ஒருவராக மாற்றி விட்டது.

அது மட்டுமன்றி விளையாட்டுகளில் இனி அவரைக் கணக்கில் எடுக்கப்போவதில்லை. தான் பிறந்த தமிழினத்துக்கு விரோதமாக மட்டுமன்றி மனிகுலத்திற்கும் விரோதமாகச் செயற்பட்டதன் மூலம் தன்னைத் தானே தனிமைப்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார் என்றார்.

Monday, October 14, 2013

தோழர் தியாகுவின் உடல் நிலை கவலைக்கிடம்


இலங்கையில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் பங்கேற்கக் கூடாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தோழர் தியாகு அவர்கள் சென்னையில் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றார்.
இன்று 14 ஆவது நாளாகவும் தோழர் தியாகு உண்ணாவிரதப் போராட்டத்தினை தொடர்ந்து வருகின்றார்.
சாகும் வரையான உண்ணாவிரதத்தை கைவிட திரு.தியாகு அவர்கள் மறுத்து வருகின்றார்.
இனியும் உண்ணா நிலைப் போராட்டத்தை தொடர்ந்தால் அவருடைய உறுப்புகள் செயலிழக்கும் நிலை ஏற்படுவதுடன் இனி எந்த நொடியிலும் அவருக்கு திடீர் மரணம் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இனியும் பொறுமையுடன் இருந்தால் தமிழனுக்காய் குரல் கொடுக்கும் ஒவ்வொருவரையும் இழந்துவிட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விடுவோம்.
எந்த நேரமும் தோழர் தியாகு கைது செய்யப்படும் நிலை
கொமன் வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க கோரி 14 நாட்களாக உண்ணா விரதப் போராட்டத்தில்
ஈடுபட்டு வரும் தோழர் தியாகுவின் உண்ணா விரத போராட்ட பந்தலை காவல் துறையினர் முற்றுகையிட்டுள்ளனர். எந்த நேரமும் தமிழனுக்காய் குரல் கொடுக்கும் தோழர் கைது செய்யப்படும் நிலையே காணப்படுகின்றது. இதனால் தோழரின் ஆதரவாளர்கள் பதற்றத்துடன் காணப்படுகின்றனர்.
தோழருக்கு ஆதரவு வழங்கி வருகின்றது மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு.இவர்கள் தோழர் தியாகுவின் தியாகத்தை மதித்து கடிதம் மூலம் தொடர்பும் கொண்டுள்ளனர்.

Sunday, October 13, 2013

தமிழர்களின் சுயாட்சியை வென்றெடுக்கும் ஆளுமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளது என்கிறார் சிதம்பரம்

தமிழர்களின் சுய ஆட்சியை வென்றெடுக்கும் ஆளுமை தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் இருப்பதாக இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் நிதி அமைச்சர் பி.சிதம்பரம் இதனை சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 25 வருடங்களின் பின்னர் நடத்தப்பட்ட வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரிய வெற்றி பெற்றது. 

இது வரலாற்று சாதனையாகவே கருதப்பட வேண்டும். இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மக்கள் வழங்குகின்ற ஆதரவின் அடிப்படையில், தமிழர்களுக்கும், ஏனைய சிறுபான்மையினருக்குமான சுயஆட்சி, சுயகௌரவம், சமஉரிமை மற்றும் அதிகார பகிர்வு போன்ற விடயங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பால் விரைவில் பெற்றுக் கொடுக்க முடியும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Monday, October 07, 2013

உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய தோழர் தியாகு மருத்துவமனையில் அனுமதி


“இலங்கையில் கொமன்வெல்த் - எதிர்ப்பியக்கம்” சார்பில், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும், மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது, அதில் இந்தியா பங்கேற்கக் கூடாது உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அக்டோபர் 1 முதல், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காலவரையற்ற உண்ணாப் போராட்டத்தில் தோழர் தியாகு ஈடுபட்டு வந்தார்.
அவருக்கு ஆதரவு தெரிவித்து, பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் உண்ணாப் போராட்டத்தில் பங்கெடுத்து வந்தன. அந்தவகையில், போராட்டத்தின் 7ஆம் நாளான இன்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையில், த.தே.பொ.க. தோழர்கள் உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் க.முருகன், தோழர் அ.ஆனந்தன், தோழர் உதயன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் கு.சிவப்பிரகாசம், தமிழக இளைஞர் முன்னணிப் பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி, துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன், தமிழக உழவர் முன்னணி கடலூர் மாவட்டச் செயலாளர் திரு. சி.ஆறுமுகம் உள்ளிட்ட திரளான த.தே.பொ.க. தோழர்கள், இதில் பங்கேற்றனர்.
போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தமிழக அரசு சார்பில் வந்த மருத்துவர் குழு தோழர் தியாகுவின் உடல்நிலையை சோதித்தது. அதன்பின், அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டுமென காவல்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதனையடுத்து, தோழர் தியாகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும், சிறையில் அடைக்கப்பட்டாலும் உண்ணாப் போராட்டம் தொடரும் என அறிவித்தார்.
“இலங்கையில் கொமன்வெல்த் மாநாட்டை நடத்தாதே! தோழர் தியாகுவின் போராட்டத்தை முடக்காதே! ”என கூடியிருந்த தோழர்கள் எழுப்பிய முழக்கங்களுக்கிடையில், அரசு மருத்துவ வாகனத்தில் தோழர் தியாகு கொண்டு செல்லப்பட்டார்.
தற்போது, இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

Wednesday, October 02, 2013

வடமாகாணதேர்தல் ஈழத் தமிழ் மக்கள் உலகிற்கு அளித்திருக்கும் செய்தியாகும் - பழ.நெடுமாறன்!


1977-ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் தமிழர் பகுதிகளில் நடத்தப்பட்ட அனைத்துத் தேர்தல்களிலும் தமிழர்கள் தங்களின் விருப்பம் என்ன என்பதைத் தெளிவாக அறிவித்துள்ளனர். இந்த மாகாணசபை தேர்தலிலும் அதே தீர்ப்பை அவர்கள் அளித்திருக்கிறார்கள்.உலக சமுதாயம் இனிமேலாவது உண்மையை உணர்ந்து அவர்களின் வாழ்வுரிமையை மதிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் முன் வர வேண்டும். இதுவே இத்தேர்தலில் ஈழத் தமிழ் மக்கள் உலகிற்கு அளித்திருக்கும் செய்தியாகும் என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வடக்கு மாநிலத்தில் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் ஈழத் தமிழர்கள் சிங்களக் கட்சிகளை அடியோடு புறந்தள்ளியுள்ளார்கள். மாகாணசபையில் உள்ள 36 இடங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 28 பேர் பெருவெற்றி பெற்றிருக்கிறார்கள். இதன் காரணமாக மேலும் இருவரை உறுப்பினர்களாக நியமனம் செய்து கொள்ளும் உரிமையும் கிடைத்திருக்கிறது. இராஜபக்சேயின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிக்கு ஏழு இடங்களும் இலங்கை முஸ்லிம் காங்கிரசுக்கு ஒரு இடமும் கிடைத்திருக்கின்றன.
இலங்கையில் தமிழர் பகுதிகளில் ஏற்கெனவே குடியேற்றப்பட்ட சிங்களரைத் தவிர கடந்த நான்கு ஆண்டு காலத்தில் மேலும் ஏராளமான சிங்களர்கள் குடியேற்றப்பட்டனர். சொந்த வீடுகளில் இருந்தும் ஊர்களில் இருந்தும் தமிழ் மக்கள் விரட்டியடிக்கப்பட்டனர். ஏராளமானவர்கள் நாட்டை விட்டே வெளியேறி விட்டனர்.

தமிழர் பகுதிகள் முழுவதிலும் சிங்கள இராணுவ முகாம்கள் மக்களை அச்சுறுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. வந்தேறிகளான சிங்களக் காடையர் இராணுவ பக்கபலத்துடன் தமிழர்களைத் தாக்கியும் மிரட்டியும் வந்தனர். குறிப்பாக போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்கள் குறி வைத்துத் தாக்கப்பட்டனர். தேர்தலுக்கு முதல் நாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஆனந்தி எழிலன் என்னும் வேட்பாளரின் வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் மட்டுமல்ல இலங்கை சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து தமிழர் பகுதியில் நடைபெற்ற தேர்தல்களில் சிங்களக் கட்சிகள் போட்டியிட்டது இல்லை. அவர்களின் எடுபிடிகளான தமிழர்களையே தங்களின் வேட்பாளர்களாக சில தொகுதிகளில் நிறுத்தி படுதோல்வியைச் சந்தித்தார்கள். ஆனால் இம்முறை வடக்கு மாகாண சபை தொகுதிகள் அனைத்திலும் இராஜபக்சே தனது வேட்பாளர்களை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி என்ற பெயரில் நிறுத்தினார். எதிர்க்கட்சித் தலைவரான இரணில் விக்கிரமசிங்கேயின் ஐக்கிய தேசியக் கட்சியும் பல இடங்களில் போட்டியிட்டது. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதற்குக் காரணமான முன்னாள் இராணுவ தலைமைத் தளபதி சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சியும் போட்டியிட்டது.
மொத்தம் பதிவான 4 50574 வாக்குகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 3 53 595 வாக்குகளைப் பெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 82 838 வாக்குகளையும் இலங்கை முஸ்லிம் காங்கிரசு 6 761 வாக்குகளையும் ஐக்கிய தேசியக் கட்சி 3 062 பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி 170 வாக்குகளையும் பெற்றன.
பதிவான வாக்குகளில் தமிழ்த் தேசியக் கூட்டணி 78.48 சதவீத வாக்குகளையும் முஸ்லிம் காங்கிரசு 1.5 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளன. இராஜபக்சேயின் கூட்டணி உட்பட அனைத்து சிங்களக் கட்சிகளும் இணைந்து 20.02 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளன. தமிழர் பகுதியில் தடம் பதிக்க முயன்ற சிங்களக் கட்சிகளை வாக்குரிமை என்னும் ஆயுதத்தைப் பயன்படுத்தி தமிழ் மக்கள் விரட்டியடித்துள்ளனர்.

உலக நாடுகளை ஏமாற்றுவதற்காக வடக்கு மாகாண சபைக்கு தேர்தலை நடத்த இராஜபக்சே முன்வந்தார். இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கக் கூடிய தமிழ் மக்கள் வாக்குச் சாவடிகளுக்கு வருவதற்கே அஞ்சுவார்கள். எனவே தனது வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். அதைக் காட்டி உலக நாடுகளைத் திசை திருப்பலாமென இராஜபக்சே திட்டமிட்டார்.

திட்டமிட்டு இனப்படுகொலைக்கு ஆளாக்கப்பட்ட தமிழர்களின் அரசியல் உரிமைகள் அவர்களின் பிரதேச ஒருமைப்பாடு மனித உரிமைகள் பறிப்பு போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்துதல் ஆகியவற்றை பின்னுக்குத் தள்ளிவிட்டு அவர்களுக்கு ஜனநாயக உரிமைகள் அளிக்கப்பட்டு விட்டதாக தம்பட்டம் அடிக்க இராஜபக்சே திட்டமிட்டார். குறிப்பாக இந்த தேர்தலில் தன்னுடைய சிங்களக் கூட்டணி வெற்றி பெறுமானால் அதைக் காட்டி தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக உருவாகியுள்ள எழுச்சியையும் அதற்கு மதிப்பளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இந்திய அரசின் சூழ்நிலையையும் மாற்றி விடலாம் என அவர் கருதினார்.
ஆனால் அவரது நோக்கங்கள் யாவற்றையும் தமிழ் மக்கள் தங்களின் தீர்ப்பின் மூலம் முறியடித்துள்ளனர். இராஜபக்சேயுடன் எல்லா வகையிலும் இணக்கமுடன் அரசியல் நடத்தியாக வேண்டும் என்ற நிர்பந்தம் அடியோடு தகர்க்கப்பட்டு அவருக்கு எதிரான அரசியல் முன்னிறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் அளித்த இந்த தெளிவான தீர்ப்பு இராஜபக்சேக்கு எதிரானது மட்டுமல்ல. இந்திய அரசுக்கும் உலக நாடுகளுக்கும் ஓர் உண்மையான செய்தியைத் தெரிவித்துள்ளது. கடந்த நான்காண்டு காலத்தில் தமிழ் மக்கள் சந்தித்த இனப்படுகொலைஇ மனித உரிமைகள் பறிப்புஇ பாரம்பரிய நிலங்கள் இழப்பு சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்ட அவலம்இ அடிமைகளாக வாழ வேண்டிய பரிதாபம் போன்ற கொடுமைகளிலிருந்து அந்த மக்களை விடுவிக்க வேண்டிய ஐ.நா. அமைப்போ அல்லது சர்வதேச மனித உரிமை அமைப்புகளோ எதுவும் செய்ய முன்வராமல் கைகளைப் பிசைந்துக் கொண்டு நின்றன.

பாஞ்சாலியின் கூந்தலைப் பிடித்து இழுத்து அவளை அரச அவைக்கு துச்சாதனன் கொண்டு வரும் வழி நெடுக நின்ற மக்கள் எப்படியிருந்தார்கள் என்பதை பாரதி தனது 'பாஞ்சாலி சபத'த்தில் பின் வருமாறு பாடுகிறான்.
என்ன கொடுமை
ஊரவர்தங் கீழ்மை உரைக்குந் தரமாமோ?
வீரமிலா நாய்கள் விலங்காம் இளவரசன்
தன்னை மிதைத்துத் தராதலத்திற் போக்கியே
பொன்னையவள் அந்தப் புரத்தினிலே சேர்க்காமல்
நெட்டை மரங்களென நின்று புலம்பினார்
பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ?
சபைநடுவே தான் துகிலுரியப்பட்டபோது அதைத் தடுத்து நிறுத்தி தன் மானத்தைக் காக்க யாரும் முன்வராத நிலையில் பாஞ்சாலி சபதம் ஒன்றை மேற்கொண்டாள். துச்சாதனன் மற்றும் துரியோதனன் ஆகிய இருவரின் இரத்தத்தைக் கலந்து பூசி அதன் பின்பே தனது கூந்தலை முடிக்கப் போவதாக சூளுரைத்தாள். பாரதப் போரின் முடிவில் அதை நிறைவேற்றினாள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

அதைப்போல நவீன துச்சாதனான இராஜபக்சே தமிழ் மக்களுக்கு இழைத்த அநீதிகளையும் அட்டூழியங்களையும் தடுத்து நிறுத்தவோ கண்டிக்கவோ அல்லது தண்டிக்கவோ முன் வராமல் உலக சமுதாயம் வேடிக்கை பார்த்து நின்ற போது ஈழத் தமிழ் மக்கள் ஒன்று திரண்டு மாகாண சபை தேர்தலில் அளித்த தீர்ப்பு இராஜபக்சேக்கு எதிரானது மட்டுமல்ல உலக நாடுகளின் விழிகளைத் திறக்க வைத்தத் தீர்ப்புமாகும். இது வெறும் மாகாண சபை தேர்தல் முடிவல்ல. அந்த மக்களிடையே நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பின் தீர்ப்பாகவும் இது கருதப்பட வேண்டும்.
காஷ்மீர் தனக்கே உரியது என பாகிஸ்தான் உரிமை கொண்டாடியபோது அன்றைக்கு பிரதமராக இருந்த நேரு காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவு காணலாம் என ஐ.நா. பேரவையில் உறுதி கூறினார். ஆனால் காஷ்மீர் சட்டமன்றத்திற்கு நடத்தப்பட்ட தேர்தலில் ஷேக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி பெருவெற்றி பெற்றது. காஷ்மீரிகள் அளித்த இந்தத் தீர்ப்பையே பொது வாக்கெடுப்பின் தீர்ப்பாக கருத வேண்டுமென நேரு உலக நாடுகளுக்குக் கூறினார்.

கிழக்குப் பாகிஸ்தான் என்றழைக்கப்பட்ட கிழக்கு வங்கத்தில் பாகிஸ்தான் இராணுவ கெடுபிடிகளுக்கு இடையே நடத்தப்பட்ட சட்டமன்றத் தேர்தலில் முஜிபுர் ரகுமானின் அவாமி லீக் மாபெரும் வெற்றி பெற்றது.
இந்தத் தீர்ப்பை வங்க மக்களிடம் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பாகக் கருத வேண்டுமென அன்றைய பிரதமர் இந்திரா காந்தி சர்வதேச நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்றுக் கொண்டு செயல்பட சர்வதேச சமுதாயம் தவறிய சூழ்நிலையில் இந்திய இராணுவத்தை அனுப்பி அந்த மக்களின் விடுதலைக்கு துணை புரிந்தார்.
1977-ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் தமிழர் பகுதிகளில் நடத்தப்பட்ட அனைத்துத் தேர்தல்களிலும் தமிழர்கள் தங்களின் விருப்பம் என்ன என்பதைத் தெளிவாக அறிவித்துள்ளனர். இந்த மாகாணசபை தேர்தலிலும் அதே தீர்ப்பை அவர்கள் அளித்திருக்கிறார்கள்.

உலக சமுதாயம் இனிமேலாவது உண்மையை உணர்ந்து அவர்களின் வாழ்வுரிமையை மதிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் முன் வர வேண்டும். இதுவே இத்தேர்தலில் ஈழத் தமிழ் மக்கள் உலகிற்கு அளித்திருக்கும் செய்தியாகும்.

Thursday, September 26, 2013

ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்காக போராடிய தமிழீழ ஆதரவாளர் தோழர் பழ.நீலவேந்தன் தீக்குளித்து மரணம்


தமிழீழ ஈகைச்சுடர் திலீபனின் நினைவு போற்றியும் தமிழகத் தமிழர்களால் சாதியால் ஒடுக்கப்பட்டுவரும் ஆதித்தமிழர்களான அருந்ததியர்களுக்கான 6 சதவீத உள் ஒதுக்கீட்டை வலியுறுத்தியும் கடிதம் எழுதி வைத்துவிட்டு பெரியார் சிந்தனைப் பற்றாளர் தோழர் பழ.நீலவேந்தன் தீக்குளித்து இன்று அதிகாலை மரணமடைந்துள்ளார்.
தமிழ் இனத்தில் சாதியால் தமிழர்களாலேயே ஒடுக்கப்பட்டுவரும் அருந்ததியர் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க ஆதித்தமிழர் பேரவையில் இணைந்து போராடிவந்த தோழர் பழ. நீலவேந்தன் தீக்குளித்து மரணித்துள்ள செய்தி தமிழ் உணர்வாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈழவிடுதலை ஆதரவுப் போராட்டங்களிலும், தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதார போராட்டங்களிலும் தோழர் நீலவேந்தன் ஆற்றிய தொண்டு பெரும்பங்கு.
ஈழ விடுதலைப்போர் நடந்து கொண்டிருந்தபொழுது இலங்கைக்கு இந்திய அரசு அனுப்பிய இராணுவ தளவாடங்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் தோழர் நீலவேந்தனும் கைதாகி சிறையில் இருந்தார்.
கோவை, திருப்பூர் மாவட்டம் என்றில்லாது தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று தமது அனல் கக்கும் பேச்சால் தமிழ் மக்கள் பிரச்சினையை அனைவருக்கும் கொண்டு சென்றவர்.
தமிழகத்திலுள்ள அமைப்புகள் அம்பேத்கரையும், பெரியாரையும் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளதைப்போல எனது தலைவர்கள் அண்ணன் கொளத்தூர் மணியும், ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா இரா.அதியமான் அவர்களும் ஆவார் என்று எப்பொழுதும் கூறுவார்.
தங்கள் வாழ்வாதாரத்திற்கே தமிழகத்தில் நாள்தோறும் போராடிக்கொண்டிருக்கும் அருந்ததியர் மக்களை தமிழீழ ஆதரவு போராட்டங்களில் ஈடுபடுத்தியதில் பெரும்பங்கு தோழர் பழ..நீலவேந்தனுக்கே உண்டு.
"அருந்ததியினருக்க்கு தாழ்த்தப்பட்ட இனத்தில் உள் ஒதுக்கீடாக 3 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இது எனது மக்களுக்கு போதுமானதாக இல்லை.  படித்த இளைஞர்கள் ஏராளமானோர் வேலை வாய்ப்பின்றியும், சம்பந்தமில்லாத வேலையில் விருப்பமின்றியும் வேலை செய்து வருகிறார்கள்.
மேலும் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் அருந்ததியினர் மிகவும் பின் தங்கியுள்ளனர். இதை எதிர்த்து பலமுறை பேசியுள்ளேன். உரிய அதிகாரிகளிடம் குறைந்த பட்சம் அருந்ததியினருக்கு 6 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க கோரிக்கை விடுத்தேன். ஆனால் யாரும் இந்த கோரிக்கையை காதுகொடுத்து கூட கேட்கவில்லை. இதனால் வெறுப்படைந்தேன். எனது இனம் விழிப்புணர்வை அடையவே தீக்குளித்தேன்." என்று நீலவேந்தன் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
தமிழீழ ஈகைச்சுடர் திலீபனின் நினைவு போற்றியும் தமிழகத்தமிழர்களால் சாதியால் ஒடுக்கப்பட்டுவரும் ஆதித்தமிழர்களான அருந்ததியர்களுக்கான 6 சதவீத உள் ஒதுக்கீட்டை வலியுறுத்தியும் கடிதம் எழுதி வைத்திருக்கிறார். திருப்பூர் மாவட்ட மருத்துவமனை அனைத்துக் கட்சி, அமைப்புத்தோழர்களாலும் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. ஒரு மாபெரும் சக்தியை இந்த சமூகம் மறுபடியும் இழந்திருக்கிறது.

Tuesday, September 24, 2013

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் நடவடிக்கைக்கு மீனவ சங்கங்கள் வரவேற்பு!


இலங்கை இந்திய மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு தமிழக மீனவ சங்கங்கள் தமது வரவேற்பினை வெளிப்படுத்தியுள்ளன.

இது தொடர்பாக இருநாட்டு மீனவர்களின் பிரதிநிதிகளும், சென்னையில் கூடி பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக முதல்வர் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குடன் தொடர்பை ஏற்படுத்தி எடுக்கும் முயற்சிகளுக்கு தமிழக மீனவ சங்கங்களின் சமாஜ தலைவர் யூ.அருளானந்தம் நன்றி தெரிவித்துள்ளார்.

Sunday, September 15, 2013

ஈழத் தமிழர் விடிவுக்கு தமிழ் ஈழமே ஒரே தீர்வு!- மதிமுக மாநாட்டில் தீர்மானம்


ஈழத் தமிழர் தேசிய இனப் பிரச்சினைக்கு தமிழ் ஈழமே தீர்வாகும் என்று மதிமுகவின் விருதுநகர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.
ஈழத்தமிழர் தேசிய இனப்பிரச்சினைக்கு, சுதந்திரத் தமிழ் ஈழமே தீர்வு ஆகும் என்று, 1995 ஜூலை முதலாம் தேதி, திருச்சியில் நடைபெற்ற மறுமலர்ச்சி தி.மு.க.வின் மாநில மாநாடு, தொலைநோக்கோடு தீர்மானம் நிறைவேற்றியது. அதே நிலையில், எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் ஈழ விடுதலைக்காகப் போராடுகிறது.
முள்ளிவாய்க்கால் கோரப்படுகொலைகளுக்கு பின்னர், தமிழர் தாயகப் பகுதிகளில், சிங்களவர் குடியேற்றம் வேகமாக நடக்கின்றது. சிங்கள இராணுவமும், போலீசும், தமிழர் பகுதிகளில் குவிக்கப்பட்டு உள்ளன. அவர்களையும், சிங்களக் குடியேற்றங்களையும் அப்புறப்படுத்த வேண்டும் என்றும்,
சுதந்திரத் தமிழ் ஈழக் கோரிக்கையை முன்வைத்து, ஒரு பொது வாக்கெடுப்பை, அனைத்து உலக நாடுகளும், ஐ.நா. மன்றமும் நடத்த வேண்டும் என்றும், அந்தப் பொது வாக்கெடுப்பில், உலகின் பல நாடுகளில் ஏதிலிகளாக வாழும் ஈழத்தமிழர்கள், அந்தந்த நாடுகளிலேயே, அந்த வாக்குப்பதிவில் பங்கு ஏற்க வகை செய்ய வேண்டும் என்றும்,
2011ம் ஆண்டு, ஜூன் முதலாம் தேதி, பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரில், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் கூட்டத்தில் நடைபெற்ற மாநாட்டில், மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் முதன்முதலில் பிரகடனம் செய்தார்கள்.
இந்தக் கருத்து, உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது.
எனவே, தமிழ் இனக்கொலை புரிந்த, ராஜபக்ச கூட்டத்தை, அனைத்து உலக நீதிமன்றக் குற்றக்கூண்டில் நிறுத்தித் தண்டிப்பதையும், பொது வாக்கெடுப்பு மூலம், சுதந்திரத் தமிழ் ஈழத்தை அமைப்பதையும், ஒரே இலக்காகக் கொண்டு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் பாடுபடும், தமிழகத்திலும் தரணி எங்கிலும் இதற்கான ஆதரவைத் திரட்டுகின்ற பணியில், தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் என இம்மாநாடு தீர்மானிக்கின்றது என்று கூறப்பட்டிருந்தது.
மாநாட்டில் இடம்பெற்ற இன்னொரு தீர்மானம்.
பச்சிளம் குழந்தைகள், தாய்மார்கள் உள்ளிட்ட இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை, ஈவிரக்கம் இன்றி, உலகம் தடை செய்த குண்டுகளை விமானப் படை கொண்டு வீசியும், மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் இராணுவத் தாக்குதல் நடத்தியும், கொடூரமாகப் படுகொலை செய்த சிங்கள அரசை, அனைத்துலக நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்ற குரல் தாய்த் தமிழகத்திலும், தரணி எங்கும் மான உணர்வுள்ள தமிழர்கள், மனித உரிமை காப்பாளர்கள் நெஞ்சில் ஓங்கி ஒலிக்கும் நிலையை மாற்றுவதற்காகவே, தமிழர்களின் புதைகுழியின் மீது, தமிழ்க்குலத்தின் மரண ஓலம் ஒலித்த இடத்தில், கொமன்வெல்த் மாநாட்டை, நவம்பர் 17,18 தேதிகளில் கொடியவன் ராஜபக்ச தலைமையில் நடத்துவதற்கு இந்திய அரசு மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
அதன் மூலம் கூண்டில் நிறுத்தப்பட்டு, தண்டனை பெற வேண்டிய கொலை பாதகன் ராஜபக்ச, இரண்டு ஆண்டுகளுக்கு கொமன்வெல்த் அமைப்புக்கே தலைவர் ஆகி விடுவான். நீதியை புதைகுழிக்கு அனுப்பவே இந்திய அரசும், சிங்கள அரசும் வஞ்சகமாகச் செயல்படுகின்றன.
கொமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தி, இனக்கொலை செய்த குற்றவாளி ராஜபக்சவை தப்பிக்க வைக்க, தொடர்ந்து துரோகம் இழைக்கும் இந்தியா மேற்கொள்ளும் முயற்சியை இம்மாநாடு வன்மையாகக் கண்டிப்பதோடு. சுமார் 25 லட்சம் பூர்வகுடி தமிழர்களை நாடற்றவர்களாக்கிய கொடுங்கோலன் ராஜபக்ச ஆட்சியாளனாக இருக்கின்ற இலங்கையில் நவம்பர் 2013 ல் கொமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை நடத்தக் கூடாது என்றும், ஈழத்தமிழர்களை இனப் படுகொலை செய்த இலங்கையை கொமன்வெல்த் நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்கி வைக்க வேண்டும் என்றும் கொமன்வெல்த் அமைப்பை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

Saturday, September 14, 2013

புலியின் இடத்தை பூனைகள் நிரப்ப முடியாது: விக்னேஸ்வரனுக்கு நாம் தமிழர் கட்சி பதில்


இலங்கைத் தமிழர் பிரச்சனையை தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தங்களுடைய அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும், அதனால் பாதிக்கப்படுவது இலங்கைத் தமிழர்களே என்றும் இலங்கை வட மாகாணத் தேர்தலில் தமிழ்த் தேச கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

ஈழத் தமிழினத்தின் அரசியல் விடுதலைப் போராட்டத்தை தொடக்க காலம் தொட்டு கொச்சைபடுத்தியும், தமிழீழ விடுதலைப் போராளிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்தும் வந்த ஒரு ஆங்கில நாளேட்டிற்கு அளித்துள்ள பேட்டியில் மேற்கண்டவாறு விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டிற்கும், தமிழீழ மக்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்திற்கும் உள்ள தொடர்பை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை அறிந்தவர்கள் எவரும் விக்னேஸ்வரன் கூறுவதை ஏற்க மாட்டார்கள். ஈழத் தமிழரின் வாழ்விற்கும், அரசியல் சம உரிமைக்கு ஒரே தீர்வு தனித் தமிழ் ஈழமே என்று தமிழ்நாடு முடிவு செய்யவில்லை. அதனைத் தீர்மானத்தவர், ஈழத் தமிழினத்தின் அரசியல் சம உரிமைக்காக சாத்வீக வழியில் போராடிய ஈழத் தந்தை செல்வா அவர்கள்தான் என்பதை விக்னேஸ்வரன் தெரியாதோ? ஈழத் தமிழர்களின் அரசியல் சம உரிமைப் போராட்டத்தை ஒடுக்க முதலில் சிங்கள காவல் துறையையும், பிறகு இராணுவத்தையும் ஏவிவிட்டு தமிழர்களை திட்டமிட்ட இன அழித்தலுக்கு ஆளாக்கிய இலங்கையை ஆண்டு வந்த சிங்கள பெளத்த இனவாத அரசுகளின் இனவெறிபிடித்த நடவடிக்கைகளே அங்கு ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்கு வித்திட்டது என்கிற வரலாறும் விக்னேஸ்வரன் அறியாதவரோ? அதனால்தான், ஏதோ தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தமிழீழ விடுதலையை பேசுவதனால்தான் இலங்கைத் தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று கதை விடுகிறார்.

இலங்கைத் தமிழினத்தின் அரசியல் விடுதலை வரலாறு விக்னேஸ்வரனுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஏனென்றால் அவர் கொழும்புவில் சட்டப் பணியாற்றிக்கொண்டு, பிறகு நீதிபதியாகி வசதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தவர். சிங்கள அதிகார, அரசியல் குடு்ம்பங்களோடு திருமண சம்பந்தம் செய்துகொண்டு பாதுகாப்பாக வாழ்ந்து வந்தவர். எனவே, ஈழத் தமிழினத்தின் 60 ஆண்டுக்கால துயரம் விக்னேஸ்வரன் அறியாதது. அந்த துயரத்திற்குக் காரணமான சிங்கள பெளத்த இனவாத அரசியல் அவருக்கு புரிந்திருக்கவில்லை. அதனை விக்னேஸ்வரன் முழுமையாக புரிந்துகொள்ள வேண்டுமெனில், ஈழத் தந்தை செல்வா ஆற்றிய உரைகளின் தொகுப்பாக வந்துள்ள புத்தகங்களை படித்துத் தெளிய வேண்டும். 

இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் இடையிலான பிரச்சனை, ஒரு குடும்பத்தின் கணவருக்கும் மனைவிக்குமான பிரச்சனை போன்றது, அதில் பக்கத்து வீட்டார் தலையிடக்கூடாது, நாங்கள் அடித்துக்கொள்வோம், பிறகு கூடிக்கொள்வோம் என்று விக்னேஸ்வரன் அந்த பேட்டியில் கூறியுள்ளார். விக்னேஸ்வரன் கூறியுள்ள இந்த எடுத்துக்காட்டை தமிழீழ மக்களிடம் கூறினால் வாயால் சிரிக்க மாட்டார்கள்! சிங்கள பெளத்த இனவாத அரசியலின் அடிப்படையை புரியாத அல்லது இல்லாததுபோல் காட்டிக்கொள்ள விக்னேஸ்வரன் முயற்சிக்கிறார். தமிழருக்கும் சிங்களருக்கும் உள்ள பிரச்சனைதான், இதில் பக்கத்து வீட்டுக்காரன் தலையிடக்கூடாது என்று கூறியுள்ள விக்னேஸ்வரன், பிறகு இந்திய அரசின் தலையீட்டை பாராட்டுகிறார்! ஆக, ஈழத் தமிழினத்திற்காக குரல் கொடுக்கும் தமிழ்நாடு உங்களுக்கு  பக்கத்து வீட்டுக்காரன் என்றால், டெல்லி உங்களுக்கு யார்? அதனை விளக்க வேண்டும். 

தமிழருக்காக பேசும் சிங்களவர்களும் உள்ளார்கள் என்று கூறுகிறார். தமிழர்களுக்காக நியாயமாக பேசும் சிங்கள புத்திசீவிகள் அனைவரும் தமிழீழ விடுதலையே தமிழருக்கான ஒரே தீர்வு என்று கூறுகிறார்கள் என்பதை விக்னேஸ்வரனை விட நாங்கள் அதிகம் அறிந்தவர்கள்.

இன்றிலிருந்து இரண்டு மாதங்களுக்கு முன் வரை யாருக்கும் தெரியாத நபர் விக்னேஸ்வரன். ஆனால், அவரை தமிழ்த் தேச கூட்டமைப்பு வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கிறது என்றால், அதன் பின்னணி சதியில் சிங்கள பெளத்த இனவாத அரசும், டெல்லியும் உள்ளது என்பது வெள்ளிடை மலை. தமிழனின் அரசியலைக் கொண்டே தமிழினத்தின் விடுதலையை முடக்குவது என்கிற சீறிய சதித் திட்டத்தின் வெளிப்பாடுதானே  விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளது? இந்த உண்மையெல்லாம், சிங்கள இனவாத இராணுவத்தின் கொடூரங்களால் தங்களின் கணவரையும், பிள்ளைகளையும் இழந்து தனிமரமாய் நிற்கும் ஈழத் தாய்மார்களுக்குத் தெரியும், விக்னேஸ்வரன்களுக்குத் தெரியாது.
 
பதவிக்காக தமிழினத்தின் விடுதலைப் போராடத்தை விலை பேசும் இப்படிப்பட்ட கொழும்புக் காக்காய்களுக்கு காயம் பட்டு முணங்கிக் கொண்டிருக்கும் தமிழினத்தின் வலி தெரியுமா? இனவெறி அரசியலால் சற்றும் பாதிக்கப்படாத உங்களைப் போன்றவர்களுக்கு தமிழினத்தின் விடுதலை உணர்வு சற்றும் தீண்டாதது எங்களுக்கு எந்த விதத்திலும் வியப்பளிக்கவில்லை. ஈழத் தமிழினத்தின் விடுதலைப் போராட்ட வரலாறு எண்ணிலடங்கா துரோகிகளை கண்ணுற்றுள்ளது. அந்த பட்டியலில் நீங்களும் உள்ளீர்கள் என்பது எங்களுக்காக புரியாது?
தமிழிழ மக்களின் உண்மைப் பிரதிநிதிகள் அவர்களின் விடுதலைக்காகவும், மானம் காக்கவும் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளே. தம் இனம் காக்க களம் புகுந்து உயிர் தியாகம் செய்த மாவீரர்களே ஈழத் தமிழினத்தின் வழிகாட்டிகள். ஈழத் தமிழினத்தின் துயரத்தை துடைக்க முத்துக்குமார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் தங்கள் இன்னுயிரை தீக்கீரையாக்கியுள்ளனர். அவர்களின் தியாகமே, ஈழத் தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தோடு எம் தமிழ்நாட்டையும், அதன் அரசியலையும் இணைத்துவிட்டது. அதன் மீது கேள்வி எழுப்பும் எந்த யோக்கிதையும் விக்னேஸ்வரனுக்குக் கிடையாது. எம் இனத்தின் விடுதலைக்காக உயிர் நீத்த ஒரு மாவீரராவது இந்த விக்னேஸ்வரன் குடும்பத்தில் உள்ளரா? தமிழீழ விடுதலையின் தியாக ரூபங்களான விடுதலைப் புலிகளே எம்மக்களின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள். அவர்களின் இடத்தில் ஒருபோதும் தமிழ்த் தேச கூட்டமைப்பு வந்துவிட முடியாது. புலிகளின் இடத்தை பூனைகள் நிரப்ப முடியாது. அது நடக்கவும் நடக்காது, உலகத் தமிழினம் அதனை ஒருபோதும் அனுமதிக்காது.
வட மாகாணத் தேர்தலில் தமிழ்த் தேச கூட்டமைப்பு வெற்றி பெறலாம், விக்னேஸ்வரன் முதலமைச்சர் ஆகலாம். ஆனால் அதுவே ஈழத் தமிழினத்தின் விடுதலை கோரிக்கையை விட்டுத் தந்துவிடுவதாக ஆகாது. நாங்கள் ஒருபோதும் சிங்களத் தலைமையையோ அல்லது சிங்கள அரசியல் கட்சிகளையோ ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பதை வெளிப்படுத்தவே, தமிழீழ மக்கள் தமிழ்த் தேச கூட்டமைப்பிற்கு வாக்களிக்கின்றனரே தவிர, த.தே.கூ.தான் எங்களின் அரசியல் பிரதிநிதிகள் என்று சான்றளிக்க அல்ல என்பதை விக்னேஸ்வரனும், அந்த கூட்டமைப்பின் பதவிப் பித்தர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
 
தமிழீழ விடுதலையே தமிழினத்தின் தாகம்.
 
நாம் தமிழர் கட்சிக்காக,
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

Sunday, September 01, 2013

கச்சதீவு தொடர்பான இந்திய அரசின் முடிவு கண்டனத்திற்குரியது: கருணாநிதி


இந்திய- இலங்கைக் கடல் பகுதியில் சர்வதேச எல்லைக் கோட்டை நிர்ணயித்த போது கச்சதீவு இலங்கை வரம்புக்குள் சென்று விட்டதாக திமுக தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.
கச்சதீவு விவகாரம் தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,
கச்சதீவு பற்றிய வழக்கில் மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப் பத்திரத்தில் கச்சதீவு எந்த நாட்டுக்கும் சொந்தமில்லாமல் இருந்தது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கச்சதீவுக்கு யார் உரிமை கொண்டாடுவது என்ற பிரச்சினை இந்தியா, இலங்கை இடையே நீடித்து வந்தது. அதைத் தொடர்ந்து இந்திய-இலங்கைக் கடல் பகுதியில் சர்வதேச எல்லைக் கோட்டை நிர்ணயித்த போது கச்சத்தீவு இலங்கை வரம்புக்குள் சென்று விட்டது. அதன் பிறகு 1974ஆம் ஆண்டில் இந்தியா இலங்கை இடையே கச்சத் தீவு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
1976ஆம் ஆண்டில் இரு நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திலும் கச்சதீவு இலங்கையின் பகுதியில் இருப்பதை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது. இந்திய எல்லைக் கோட்டுக்குள் இருந்த கச்சதீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்ததாக மாயை ஏற்படுத்துவது தவறானது என்றெல்லாம் தெரிவித்திருப்பது தமிழ் மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கச்சதீவு இந்தியாவிற்குத் தான் சொந்தம் என்றும், அதனை 1974ஆம் ஆண்டு இந்திய அரசு இலங்கைக்கு ஒரு ஒப்பந்தத்தின் வாயிலாகத் தாரை வார்த்து விட்டது என்றும், அந்த ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறாத காரணத்தால், அது செல்லாது என்றும் தமிழகத்தின் சார்பில் முதலமைச்சர் உச்சநீதி மன்றத்தில் முறையிட்டிருக்கிறார்.
கச்சதீவு பற்றி 15-4-2013 அன்று நடைபெற்ற டெசோ அமைப்பின் கூட்டத்தில், “கச்சதீவு இந்தியாவின் ஒரு பகுதியாகும். அது 1974ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி இலங்கை அரசுக்கு இந்திய அரசால், சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் நாம் தெரிவித்த எதிர்ப்புகளையெல்லாம் மீறி விட்டுக் கொடுக்கப்பட்டது.
இந்தியாவின் எந்தவொரு பகுதியையும் வேறு ஒரு நாட்டிற்கு விட்டுக் கொடுப்பதென்றால், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 368வது பிரிவின்படி நாடாளுமன்றத்தின் பரிசீலனைக்கு வைத்து சட்டம் இயற்றப்பட வேண்டும்.
கச்ச தீவைப் பொறுத்தவரை அப்படி எந்தவொரு சட்டமும் இதுவரை நிறைவேற்றப்படாததால், கச்சதீவை இலங்கைக்கு ஒப்பந்தத்தின் மூலம் விட்டுக் கொடுத்தது அரசியல் சட்ட ரீதியாகச் செல்லுபடி ஆகாது என்பதுதான் உண்மை.
எனவே 1974ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், கச்சதீவு இந்தியாவின் ஒரு பகுதி தான் என்பதைப் பிரகடனப்படுத்தவும், “டெசோ” அமைப்பின் மூலம் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதென இந்தக் கூட்டம் தீர்மானிக்கின்றது” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில், டெசோ அமைப்பின் சார்பில் நான் இந்திய உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை 10-5-2013 அன்று தாக்கல் செய்திருக்கிறேன்.
உச்ச நீதி மன்றத்தில் நான் தாக்கல் செய்த இந்த மனு, 15-7-2013 அன்று தலைமை நீதிபதி அல்தமாஸ் கபீர், நீதிபதிகள் எப்.எம். இப்ராகிம் கலிபுல்லா, விக்ரம் ஜித் சென் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, எனது மனுவினை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிட உத்தரவிட்டனர்.
கச்சதீவைப் பொறுத்தவரை அது பாரம்பரியமான நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது என்பதை மத்திய அரசுக்கு நினைவுபடுத்த வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
கச்சதீவில் புனித அந்தோனியார் கத்தோலிக்க தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு வாரத் திருவிழாவிற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களே அதிகம் செல்வர். இலங்கை மீனவர்களும் கலந்து கொள்வர்.
தொன்று தொட்டு தமிழக மீனவர்களும் இலங்கை மீனவர்களும் இப்பகுதியில் மீன் பிடித்து வருகின்றனர். அதன் தொடர்பான, வலைகளை உலர்த்துதல், களைப்பாறுதல் போன்றவற்றிற்கும் இத் தீவினைப் பயன்படுத்துவர். இத்தீவானது பன்னெடுங்காலமாக ராமநாதபுரம் ராஜாவின் ஆளுகையில் இருந்தது.
இலங்கையை ஆட்சி செய்த டச்சுக் கம்பெனி அந்தத் தீவை 1660இல் குத்தகைக்குப் பெற்றிருந்தது. பின்னர் 1870-73, 1875, 1880, 1889 ஆகிய ஆண்டுகளிலும் ராமநாதபுரம் அரசர் இந்தத் தீவிற்கு அருகில் உள்ள சங்குப் படுகையை குத்தகைக்கு விட்டிருந்தார் என்பதும், இலங்கை கவர்னரின் 1757-1962 நினைவு ஏடுகளில் குறிப்பிடப்பட்டிருப்பதும், 1766-ல் கண்டி அரசரால் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தமும், 1845ஆம் ஆண்டில் இலங்கை லெப்டினன்ட் கவர்னர் எழுதிய கடிதமும், இத்தீவு ராமநாதபுரம் அரசரின் இத்தீவு ராமநாதபுரம் அரசரின் இத்தீவு ராமநாதபுரம் அரசரின் இத்தீவு ராமநாதபுரம் அரசரின் ஆளுகையிலும் கட்டுப்பாட்டிலும் இருந்தது என்பதற்கான ஆதாரங்களாகும்.
இந்தக் காலக் கட்டத்தில் ராமநாதபுரம் அரசர் ஆங்கிலேய அரசுக்குக் கட்டுப்பட்ட குறுநில மன்னராக இருந்தார். இந்தியா விடுதலை பெற்ற பின் இத்தீவு தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் 1250 சர்வே எண்ணில் கட்டுப்பட்டிருந்தது. தமிழ்நாடு அரசு வெளியிட்ட ராமநாதபுரம் மாவட்ட ஆவணத் தொகுப்பேட்டிலும் (கெசட்டிலும்) இவ்விவரம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு, தமிழக அரசு மூன்று வாரங்களில் விளக்கம் தர வேண்டுமென்று அறிக்கை அனுப்பப்பட்டுள்ள நிலையில், மேலே குறிப்பிட்டுள்ள வரலாற்றுப் பூர்வமான ஆதாரங்களையும், மேலும் தமிழக அரசிடம் இருக்கும் கூடுதல் ஆவணங்களையும் இணைத்து உச்ச நீதிமன்றத்தில் உரிய முறையில் தாக்கல் செய்வது மிக மிக அவசியமாகும்.
1974ஆம் ஆண்டு இந்திய அரசு. இலங்கை அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட காலக் கட்டத்திலேயே, மத்திய அரசு அந்த ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென்று, 21-8-1974 அன்று திமுக ஆட்சியில், நான் முதலமைச்சராக இருந்த போதே தமிழகச் சட்டப் பேரவையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1974ஆம் ஆண்டு இந்தியா இலங்கையுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட போது நாடாளுமன்றத்தில் அதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
23-7-1974 அன்று அந்த ஒப்பந்தத்தின் நகலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த சுவரண்சிங் தாக்கல் செய்த போது, தமிழகத்துக்குச் சொந்தமான கச்சதீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்ததை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று தி.மு.கவின் சார்பில் இரா. செழியன் நாடாளுமன்றத்தில் கூறினார்.
பார்வர்டு பிளாக் கட்சியின் உறுப்பினராக இருந்த அருமை நண்பர் மூக்கையா தேவர், “எனது இராமநாதபுரம் தொகுதிக்குள் அடங்கியுள்ள இத்தீவை இலங்கைக்கு வழங்கியது அரசியல் சட்டத்துக்கு முரணானது” என்றார்.
“இலங்கையின் நட்பை பெறுவதற்காகவே இரகசிய பேரம் நடத்தி கச்சதீவைத் தானமாக வழங்கியுள்ளது” என்று வாஜ்பாய் பேசினார். இப்படிப்பட்ட கருத்துக்களை மாநிலங்களவையில் திமுக சார்பில் எஸ்.எஸ். மாரிசாமி, சோஷலிஸ்ட் கட்சி சார்பில் ராஜ்நாராயண், முஸ்லீம் லீக் சார்பில் நண்பர் அப்துல் சமது ஆகியோர் தெரிவித்தனர்.
இதையெல்லாம் முற்றிலும் மறந்து விட்டு அல்லது மறைத்து விட்டு, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தற்போது தாக்கல் செய்துள்ள பிரமாணத்தில் உண்மைக்கு மாறான தகவல்களைத் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் டெல்லிக்கு வந்த இலங்கை அமைச்சர் பீரிஸ், கச்சதீவு முடிந்து போன அத்தியாயம் என்று வரம்பு கடந்து பேசியதற்கு மத்திய அரசு “பின்பாட்டு” பாடுவதைப் போல, இந்தப் பிரமாண வாக்குமூலத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
கச்சதீவு, இராமநாதபுரம் சேதுபதி அரசருக்குச் சொந்தமானது. இந்தத் தீவை வணிகர்களான ஜனாப் முகமது காதர் மரக்காயருக்கும், முத்துசாமி பிள்ளைக்கும் அரசர் சேதுபதி ஐந்தாண்டுகளுக்குக் குத்தகைக்கு வழங்கியிருந்தார். இதற்கான ஆவணம், இராமநாதபுரம், துணை பதிவாளர் அலுவலக ஆவண எண். 510/570, தேதி 2-7-1980. 1947இல் குறுநில மன்னர் ஒழிப்புச் சட்டத்தின் மூலம் இந்தியாவிற்கு சொந்தமானது. கச்சதீவு இந்தியாவிற்குச் சொந்தம் என்பதற்கு பல ஆவணங்கள் உள்ளன.
இந்த ஆவவணங்களையும், அடிப்படை ஆதாரங்களையும் இந்திய அரசியல் சட்ட நெறிமுறைகளையும் ஆழமாகப் பரிசீலனை செய்து உச்ச நீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கிடும் என்று நாம் நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், “கச்சதீவு இலங்கை வரம்புக்குள் உள்ளது” என்று மத்திய அரசு பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்திருப்பது, தமிழகத்திற்குப் பேரிடர் போன்றது.
இந்தப் பிரச்சினையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்திடக் கூடியது. மத்திய அரசின் இந்த முடிவு கடும் கண்டனத்திற்குரியதாகும். எனினும், கச்சதீவுப் பிரச்சினையில் தமிழகத்தின் பக்கம் நீதியும் நேர்மையும் நிரம்ப இருப்பதால், நமது உரிமையை உச்ச நீதிமன்றம் நிலைநாட்டிடும் என்று நம்புவோம் என்று கூறியுள்ளார்.

இலங்கையின் கோர முகம் அம்பலம்! இந்தியாவின் முகமூடி கிழிப்பு: ராமதாஸ்


இலங்கையின் கோர முகத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அம்பலப்படுத்தியுள்ளதாக பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து கடந்த ஒருவாரமாக அந்நாட்டில் விசாரணை நடத்திய ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை, அங்கு நிலவும் சூழல் குறித்து அதிர்ச்சி நிறைந்த உண்மைகளை கூறியுள்ளார். அதன் மூலம் இலங்கையின் கோர முகம் அம்பலமாகியுள்ளது.
இலங்கயில் போர் வேண்டுமானால் முடிவடைந்திருக்கலாம், ஆனால் அங்கு ஜனநாயகம் தொடர்ந்து நசுக்கப்படுகிறது, சட்டத்தின் ஆட்சி அழிந்து வருகிறது என்று நவநீதம் பிள்ளை கூறியுள்ளார்.
இலங்கை சர்வாதிகார ஆட்சி முறையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இலங்கையின் நிலை குறித்து என்னிடம் புகார் கூறிய மனித உரிமை ஆர்வலர்களும், பொதுமக்களும் இராணுவத்தினரால் மிரட்டப்பட்டிருக்கிறார்கள், இலங்கையில் நான் இருக்கும்போதே இந்த அளவுக்கு மனித உரிமை மீறல்கள் நடந்தி ருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் குற்றப்பத்திரிகை வாசித்திருக்கிறார்.
மேலும், இலங்கைப் போரின் போது அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டது, விடுதலைப் புலிகளுக்கும், அவர்களின் ஆதரவாளர்களுக்கும் விசாரணையின்றி மரண தண்டனை அளிக்கப்பட்டது,
வெள்ளை வானில் ஆட்கள் கடத்தப்பட்டது, இராணுவமயமாக்கலால் தமிழ் பெண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு, பத்திரிகையாளர்களுக்கு எதிரான அடக்குமுறை ஆகிய மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் நவநீதம்பிள்ளை வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் போர் முடிவடைந்து 4 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அங்கு நிலைமை சீரடைவதற்கு மாறாக சீரழிந்து வருகிறது என்பது நவநீதம் பிள்ளையின் அறிக்கையின் மூலமாக உறுதியாகியிருக்கிறது.
இலங்கையில் நிலவும் மிக மோசமான மனித உரிமைச் சூழல் குறித்து சான்றளிக்க ஐ.நா. மனித உரிமை ஆணையரை விட சிறந்த ஒருவர் இருக்க முடியாது. போருக்குப் பிறகு இலங்கையில் நிலைமை மேம்பட்டு வருவதாக கூறி வந்த இந்திய வெளியுறவுத் துறையினரின் முகமூடி இதன் மூலம் கிழிக்கப்பட்டிருக்கிறது.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது நவநீதம் பிள்ளை முன்வைத்த குற்றப்பத்திரிக்கையில் இடம் பெற்றுள்ள குற்றச்சாட்டுக்கள் மிகவும் கடுமையானவை. இதற்கான ஆதாரங்கள் தெளிவாக இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கு இவற்றைவிட வலிமையான ஆதாரங்கள் தேவையில்லை. இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து அந்நாட்டு அரசே விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் மூலம் இரண்டு ஆண்டுகள் காலக்கெடு கொடுத்த பிறகும் ராஜபக்ஷ அரசு இன்றுவரை ஆக்கபூர்வமாக எதையும் செய்யவில்லை.
எனவே, இலங்கை அரசை காப்பாற்றும் முயற்சிகளில் ஈடுபடுவதை இந்தியா கைவிட வேண்டும். மாறாக, இலங்கை மீது பன்னாட்டு போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கான தீர்மானத்தை அடுத்த ஆண்டு பெப்ரவரி- மார்ச் மாதங்களில் கூடும் ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இந்தியா கொண்டுவர வேண்டும்.
அதுமட்டுமின்றி, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட ராஜபக்ஷ அரசை கண்டிக்கும் வகையில் பொதுநலவாய அமைப்பிலிருந்து இலங்கையை நீக்கவும், கொழும்பில் வரும் நவம்பர் மாதம் நடைபெற விருக்கும் பொதுநலவாய ஆட்சித் தலைவர்கள் மாநாட்டை வேறு நாட்டிற்கு மாற்றவும் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.