Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

Saturday, April 04, 2015

இந்தியப் பிரதமர் மீனவ பிரச்சினைகளில் தலையிட வேண்டும்: ராமதாஸ், கருணாநிதி வலியுறுத்து

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலுள்ள வங்ககடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இருநாட்டு மீனவர்களுக்கும் உரிமையுண்டு என்பதை இந்திய அரசாங்கம் வலியுறுத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் இன்றைய தினம் இந்திய ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பது தொடர்பில் 40 வருடங்களுக்கும் மேலாக பிரச்சினைகள் நீடித்து வருகின்றன.
கச்சதீவை இலங்கைக்கு தாரைவார்த்த பின்னரே இந்த பிரச்சினை மிகவும் தீவிரமடைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியதுடன்,
இதற்கு தீர்வு காணும் வகையில் கடந்த 24ம் திகதி சென்னையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது வருடமொன்றிற்கு 83 நாட்கள் மாத்திரம் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு அனுமதியளிக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதற்கு அனுமதியளிக்க முடியாது என தெரிவித்து எல்லை தாண்டும் மீனவர்களை கைது செய்யுமாறு நேற்று முன்தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் கடற்படையினருக்கு உத்தரவிட்டிருந்தார். 
இதன் முதற்கட்ட நடவடிக்கையாக நேற்றைய தினம் 33 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினராலும், 6 இலங்கை மீனவர்கள் இந்திய கடற்படையினராலும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
இந்நிலையிலேயே இருநாட்டு மீனவர்களுக்கும் வங்ககடலில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு உரிமையுண்டு என இந்திய அரசாங்கம் இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு வலியுறுத்த வேண்டும் எனவும், 
அவ்வாறு வலியுறுத்தும் சந்தர்ப்பத்தில் அவர்களால் மறுப்பு தெரிவிக்க முடியாது என ராமதாஸ் தெரிவித்துள்ளார். 
இதேவேளை இலங்கை, இந்திய மீனவர்களுக்கு இடையில் எத்தனை தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும் இந்த பிரச்சினை தொடர்கதையாகவே அமைந்துள்ளது என திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். 
இவ்வாறு தொடர்கதையாக அமைந்துள்ள மீனவ பிரச்சினைக்கு இந்திய மீனவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து இலங்கை ஜனாதிபதியுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும், 
இந்திய மத்திய அரசு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடும் வழிவகைகளுக்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டு கொண்டுள்ளார். 
இந்த முயற்சிகளை இந்திய அரசாங்கம் இதுவரை மேற்கொள்ளாமல் அசமந்த போக்கில் செயற்படுவது தமிழக மீனவர்களை மிகவும் வேதனைக்குள் தள்ளியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். 
அத்துடன் இந்திய அரசாங்கம் முயற்சித்தால் ஐ.நா அமைப்பினால் உருவாக்கப்பட்ட சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டு இந்த உரிமையை நிலைநிறுத்த முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார். 
இவ்வாறு செய்யும் போது இருநாட்டு மீனவ பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணமுடியும் எனவும், இலங்கையை ஒரு வழிக்கு கொண்டு வரமுடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
இலங்கை அரசாங்கத்தின் மீது இந்தியா கருணை காட்டாமல் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வங்ககடலில் தமிழக மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட சட்டபூர்வமான உரிமையை பெற்று தர முனைய வேண்டும் என அவர் மேலும் கேட்டு கொண்டுள்ளார்.

Monday, January 27, 2014

நீயா-நானா நிகழ்வில் நீக்கப்பட்ட தலைவர் பிரபாகரனைப்பற்றிய கருத்துக்கள்!

நேற்றைய நீயா-நானா நிகழ்வில் பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டிருந்தன. தோழர்.கி.வே.பொன்னைய்யனின் வாதங்கள் ஏனோ பதியப்படாமல் போனது வருத்தமளிக்கிறது. மிக நீண்ட நேரம் பதியப்பட்ட இந்த நிகழ்வு ஒளிபரப்பின் போது சுருக்கப்பட்ட காரணம் என்றாலும், குமரேசன்.அசோக் மற்றும் இன்னும் பிற நண்பர்களின் விரிவான வாதங்கள் பதிந்திருந்தால் விவாதத்தினை இன்னும் சிறப்பாக கண்டிருக்க முடியும். கி.வே பொன்னையனும்-குமரேசன் அசோக்கும் பல தகவல்களை விவாதித்திருந்தார்கள்.. எப்பொழுதும் இருப்பதைப் போல ஒன்றுக்கொன்று எதிர் நிலையில் இருக்கும் கருத்துக்களைப் போன்றதல்ல நேற்றய தலைப்பு. இதனாலேயே பலவிடயங்களை விரிவாக பலரால் பேச முடியாமல் போயிற்று.

அதே போல தமிழீழ தேசியத் தலைவர் தோழர். பிரபாகரனைப்பற்றி பதிந்த கருத்துக்களும் நீக்கப்பட்டிருக்கின்றன. எனக்கு பிடித்த பேச்சாளர்களாக மூவரை குறிப்பிட்டிருந்தேன் 1. மால்கம் எக்ஸ், 2. தந்தைப் பெரியார், 3. தலைவர்.தோழர்.பிரபாகரன். இதில் மூன்றாவது நீக்கபப்ட்டிருந்தது. கி.வே பொன்னைய்யனும் இதே பதிவினை செய்திருந்தார்.

தொலைக்காட்சிகளில் செய்யப்படும் தணிக்கை வருத்தத்திற்குரியது. எத்தனையோ ஆபாசக் காட்சிகளை, குடும்ப வன்முறைக் காட்சிகளை, தணிக்கை செய்யாத தொலைக்காட்சிகள் ”தலைவர் பிரபாகரனின்” பெயரை உடனடியாக தணிக்கை செய்வதை காணமுடிகிறது.. இது முதல்முறைகிடையாது... நேரடி ஒளிபரப்பினைத் தவிர்த்து வேறு எங்கும் முழுமையாக பேசிவிடமுடிவதில்லை..
தலைவர் பிரபாகரனை அவரது அரசியல் நுணுக்கத்திற்காகவும், சர்வதேச அரசியலில் ஏற்படுத்திய தாக்கத்தினைப் பற்றியும், 'டி ஃபேக்டோ' நாடாக "சுயாட்சி பிரதேசமாக இருந்த தமிழீழத்தின்" ஆட்சியைப் பற்றியும் விரிவாக பேசும் காலம் வரும். அதனை உருவாக்குவது நம் அனைவரின் கடமை.

வணிகப் பொருளாக ‘அடையாளமாக பயன்படுத்தி’ வணிகத்தினை பெருக்கமட்டுமே பயன்பட்ட நிகழ்வுகள் மாறி நேர்மையான விவாத களம் அமைக்கப்படவேண்டிய நெருக்கடியை உருவாக்கவேண்டும்,. .. தொடர்ச்சியான போராட்டங்களின் ஊடாகவே இதனை சாத்தியப்படுத்த முடியும்..

குறிப்பு: இதே விஜய் தொலைக்காட்சி தமிழீழத் தேசியத் தலைவரின் வரலாற்றை தானே தயாரித்து ஒளிபரப்பும் அதற்கான காலம் மிக விரைவில் வரும், இது தமிழ் இணையத்தின் கருத்து.
சென்னை - தமிழன்

Tuesday, November 26, 2013

ஊடகங்கள் மீதான தாக்குதலாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

தமிழ்த்தேசிய ஊடகங்கள் மீது தொடர்ந்து நடைபெறும் தாக்குதல்கள் சிறீலங்காவின் வழிநடத்தலில் அவர்களின் அனுசரணையாளர்களாக விளங்கும் ஐரோப்பாவில் உள்ள தமிழர் தொலைபேசி நிறுவனத்தின் நிதியிலும் கட்டளையிலும் இந்தியாவிலிருந்தே நடைபெற்றுக் கொண்டிருப்பதாக எமது தொழில்நுட்பவியலாளர்கள் உறுதி செய்துள்ளனர். இதனை இந்தத் தொலைத் தொடர்பு குழுமத்தின் உள்ளகத் தொடர்புகள் உறுதி செய்துள்ளன. இந்தக் குழுமத்தின் சிறீலங்காத் தொடர்புகள் பற்றியும் இராஜபக்ச குடும்பத்துடனான தொடர்புகள் பற்றியும் தமிழ்த் தேசிய ஊடகங்கள் எழுதி வந்தமை தெரிந்ததே. தமிழ்தேசிய ஊடகங்கள் தவிர்ந்த வேறு சில இணைய ஊடகங்களும் நேற்று இந்தத் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது.

மேலும், தமிழ்த்தேசிய ஊடகங்கள் மீது நாளையும் தொடர்ச்சியான தாக்குதல்கள் நடாத்துமாறு கட்டளையிடப்பட்டுள்ளது எனவும் இக் குழுமத்தின் உள்ளகத் தகவல்கள் தெரிவித்துள்ளன. மாவீரர் நாளில் தாயக, தமிழக, புலம்பெயர் தேசத்து மக்களின் எழுச்சியையும் இன உணர்வையும் தடுக்கத் தனது சக்திவளம் முழுவதையும் சிறீலங்கா அரசு பிரயோகிக்க அவர்களுக்குத் துணையாகத் தமிழ்த்தேசிய ஊடகங்களை முடக்கும் நடவடிக்கையில் இந்தத் தொலைபேசிக் குழுமம் ஈடுபட்டுள்ளது உறுதியாகி உள்ளது.

Sunday, October 13, 2013

தமிழர்களின் சுயாட்சியை வென்றெடுக்கும் ஆளுமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளது என்கிறார் சிதம்பரம்

தமிழர்களின் சுய ஆட்சியை வென்றெடுக்கும் ஆளுமை தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் இருப்பதாக இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் நிதி அமைச்சர் பி.சிதம்பரம் இதனை சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 25 வருடங்களின் பின்னர் நடத்தப்பட்ட வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரிய வெற்றி பெற்றது. 

இது வரலாற்று சாதனையாகவே கருதப்பட வேண்டும். இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மக்கள் வழங்குகின்ற ஆதரவின் அடிப்படையில், தமிழர்களுக்கும், ஏனைய சிறுபான்மையினருக்குமான சுயஆட்சி, சுயகௌரவம், சமஉரிமை மற்றும் அதிகார பகிர்வு போன்ற விடயங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பால் விரைவில் பெற்றுக் கொடுக்க முடியும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Friday, October 11, 2013

ஒடிசாவை நெருங்கியது பாய்லின் புயல்: மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்

வங்கக் கடலில் அந்தமான் அருகில் உருவான பாய்லின் புயல், மிகவும் வலுவடைந்து வடமேற்கு நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. ஒடிசாவின் கோபால்பூரில் இருந்து சுமார் 450 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ள இந்த புயல் நாளை மாலை ஆந்திராவுக்கும் ஒடிசாவுக்கும் இடையில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது சராசரியாக 200 கி.மீ. வேகத்தில் காற்று வீசலாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

புயல் நெருங்கி வருவதால், இரண்டு மாநிலங்களிலும் இன்று மாலை மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இந்த மழை தீவிரமடைவதுடன் பலத்த காற்றும் வீசும் என்றும், இதனால் வீடுகள், தொலைத்தொடர்பு மற்றும் மின் திட்டங்கள், விவசாயப் பயிர்கள் பெருமளவில் சேதம் ஏற்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து இரு மாநிலங்களிலும் கடலோர பகுதிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்த புயலின் தாக்கத்தால் வடக்கு சத்தீஷ்கர், தெற்கு ஜார்க்கண்ட், கிழக்கு உத்தர பிரதேசம் மற்றும் பீகாரில் சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

அமெரிக்காவைத் தாக்கிய கேத்ரினா புயல் போன்று கடும் பாதிப்புகளை, பாய்லின் புயல் ஏற்படுத்தும் என்று வானியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

இந்த புயலால் 1.2 கோடி மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் எதிர்பார்த்ததை விட நிலைமை மோசமாக இருப்பதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது.

அவசர கால மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு தயாராக இருக்கும்படி ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினரை பாதுகாப்புத்துறை மந்திரி ஏ.கே.அந்தோணி கேட்டுக்கொண்டுள்ளார். 

இதற்கிடையே புயல் தீவிரமடைந்திருப்பது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் தனது கவலையைத் தெரிவித்துள்ளார். மேலும் புயலால் பாதிக்கப்படும் மாநிலங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Wednesday, October 02, 2013

இங்கிலாந்துக்கான இந்திய உயர் தூதராக ரஞ்சன் மத்தாய் நியமனம்

இங்கிலாந்துக்கான இந்தியாவின் புதிய உயர்தூதராக ரஞ்சன் மத்தாய் நியமிக்கப்பட்டுள்ளார்.

1974ம் ஆண்டின் ஐ.எப்.எஸ். பேட்ச் அதிகாரியான ரஞ்சன் மத்தாய் இதற்கு முன்னதாக இஸ்ரேல், கத்தார், பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கான இந்திய தூதராக பணியாற்றியுள்ளார்.

1-8-2011 அன்று இந்திய வெளியுறவு துறை செயலாளராக பதவியேற்ற அவர் கடந்த ஜூலை மாதம் பணி ஓய்வு பெற்றார்.

இங்கிலாந்துக்கான இந்திய உயர் தூதராக பதவி தற்போது பதவி வகிக்கும் ஜெய்மினி பகவதியிடம் இருந்து ரஞ்சன் மத்தாய் விரைவில் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார் என இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Sunday, September 15, 2013

தமிழரும் சிங்களவரும் கணவன்-மனைவி போன்றவர்கள் என கூறவில்லை: சீ.வி விக்னேஸ்ரன் மறுப்பு


தழிழரும் சிங்களவரும் கணவன்-மனைவி உறவு போன்றவர்கள் என்று நான் எங்கும் குறிப்பிடவில்லை.ஹிந்து பத்திரிகை எனது செவ்வியை திரிவுபடுத்தியே பிரசுரித்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சீ.வி. விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகவியலாளர் மாநாடு தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்டத்தில் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் நான் த ஹிந்து பத்திரிகைக்கு செவ்வி ஒன்று வழங்கியிருந்தேன். அந்த செவ்வியின் சில விடயங்கள் குறித்து தற்போது காரசாரமாக பேசப்பட்டு வருகின்றது.
எனினும் த ஹிந்து பத்திரிகையின் செய்தியாளர் என்னிடம் 10 மேற்பட்ட கேள்விகளைக் கேட்டிருந்தார். அத்தனை கேள்விகளுக்கும் கொடுத்த பதில்களில் ஒன்றாவது வரவில்லை.
ஆனால் இந்த ஒரு கேள்விக்கான பதில் மட்டும் திரிவு படுத்தப்பட்டு வந்துள்ளதுடன் நான் கூறிய முக்கியமான சில விடயங்களையும் அவர் குறிப்பிடாது விட்டுள்ளார் என்றார்.
அதேவேளை ஹிந்து பத்திரிகை தன்னிடம் கேட்ட கேள்விகளுக்கு வழங்கிய பதில்கள் பற்றிய தகவல் வெளியிட்ட விக்னேஸ்வரன்,
தென்னியந்திய இளைஞர் யுவதிகள் நடாத்திய போராட்டமும் அவர்கள் தமது உணர்வுகளைத் தெரிவித்த விதமும் எமக்கு மகிழ்ச்சியைத் தருவதுடன் அதனால் எமக்கு பல நன்மைகள் கிடைத்துள்ளன என்று கூறியிந்தேன்.
மேலும் அரசியல் கட்சிகள் எமது பிரச்சினைகளை தமது சுயநலனுக்காக பாவிக்ககூடாது என்றும் அப்படி பாவிப்பது ரெனிஸ் பந்தை அடிப்பது போல் இருக்கும்.
அத்துடன் பிரிவினையை ஒரு தீர்வாக வெளிநாட்டில் இருப்பவர்கள் கூறுவது ஒரு கணவன் மனைவி சம்பந்தப்பட்ட விடயத்தில் மூன்றாவது நபர் ஒருவர் குறுக்கே வந்து நீங்கள் திருமண நீக்கத்திற்குச் செல்லுங்கள் என்று கூறுவது போல் இருக்கிறது என்றும் தெரிவித்திருந்தேன்.
இதில் கணவன் மனைவி என்று தமிழரையும் சிங்களவரையும் நான் குறிப்பிடவில்லை. அந்த மூன்றாம் நபர் உட்புகுந்து நடவடிக்கை எடுப்பது தொடர்பில் தான் அவ்வாறு குறிப்பிட்டேன்.
அதன்படி மூன்றாம் நபர்கள் உட்புகுந்து நீங்கள் பிரிந்து விடுங்கள் என்று கூறுவது கணவன்- மனைவிக்கு எவ்வாறு இருக்குமோ அதுபோல தான் பிரிவினை ஒன்றே தீர்வு என்று தென்னிலங்கையில் உள்ள கட்சிகள் கூறுவதும் எமது நாட்டு அரசுடன் பேசும் போது பிரச்சினையை ஏற்படுத்துகின்றது என்று கூறினேன்.
எனினும் தென்னிந்திய மக்களுக்கும் எனக்கு எதுவித பிரச்சினையும் இல்லை அங்குள்ளவர்களில் பலர் எனது நண்பர்கள் இருக்கின்றனர்.
அவர்களது அனுசனையும் உதவிகளும் எமக்கு வருங்காலத்தில் வடமாகாண சபையிலோ அல்லது எந்தவொரு சந்தர்ப்பத்திலோ தேவையானது. எனவே அவற்றை மறந்து அவர்களை நான் கொச்சைப்படுத்தியதாக குறித்த பத்திரிகை பிரசுரித்துள்ளமை எனக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார். 

Friday, September 13, 2013

கணவன் மனைவிக்கு இடையிலான சண்டையில் அயல்வீட்டுக்காரர் தலையிட முடியாது - விக்னேஸ்வரன்


இலங்கையில் இடம்பெறுவது கணவன் - மனைவிக்கு இடையிலான சண்டையாகும். இதில் தமிழக அரசியல் தலைவர்கள் வந்து விவாகரத்து பெறுமாறு கோரமுடியாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணத்துக்கான முதன்மை வேட்பாளர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கையில் தாம் சண்டையிட்டு கொள்வோம் பின்னர் சேர்ந்துக் கொள்வோம். அடுத்த வீட்டுக்காரர் வந்து நீங்கள் விவாகரத்து பெறுங்கள் என்று கூறமுடியாது. அது உங்களுடைய பணியும் அல்லவென்று விக்னேஸ்வரன், தி ஹிந்துவுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசியல்வாதிகள் இலங்கை தமிழர் பிரச்சினையை டென்னிஸ் அரங்கில் உள்ள பந்தைப்போல பயன்படுத்துகின்றனர். ஒரு கட்சிக்காரர் குறித்த பந்தை மட்டையால் அடித்ததும் மற்றைய கட்சிக்காரர் அதனை அடிப்பதற்கு பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசியல்வாதிகள் இலங்கையின் பிரிவினையை கோரும் போது இலங்கையில் உள்ள சிங்கள சமூகம், இலங்கையில் உள்ள தமிழர்கள் பிரிந்து இந்தியாவுடன் சேர்ந்து விடுவார்களோ என்று அச்சப்படுவதாக விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.  இலங்கையில் தமிழர்கள் பாதிக்கப்பட்டமைக்கு பதற்றமான நடவடிக்கைகளே காரணம் என்று விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

Monday, August 05, 2013

சீனா அமைத்துள்ள கொழும்பு தெற்கு துறைமுகத்தை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று காலை திறந்து வைத்துள்ளார்.

சிறிலங்கா அரசாங்கமும், சீனா அரசுத்துறை நிறுவனமான சீன மேர்ச்சன்ட் ஹோல்டிங்ஸ் இன்ரநசனல் நிறுவனமும், இணைந்து, 20 அடி கொண்ட 18 ஆயிரம் கொள்கலன்களை ஏற்றிய மிகப் பெரிய கப்பல்களை கையாளும் துறைமுகத்தை அமைத்துள்ளன.
 
500 மில்லியன் டொலர் செலவிலான இந்தத் திட்டம், 2006இல் ஆரம்பிக்கப்பட்டது. தெற்காசியாவிலேயே, மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களைக் கையாளக் கூடியதான, ஆழ்கடல் முனைய வசதி கொண்ட, ஒரே துறைமுகம் இதுவாகும்.
 
புதிய முனையத்தின் துறை முக கடல் ஆழம் 18 மீற்றராகும். முன்னதாக இது 14 தொடக்கம் 15 மீற்றர் ஆழத்தைக் கொண்டதாகவே இருந்தது.  இதன்மூலம் மிகப் பெரிய கொள்கலன், சரக்குக் கப்பல்களை இலகுவாக துறைமுகத்தில் நிறுத்த முடியும். பிரதான முனையம், தனியார்துறையினரால் கட்டப்பட்டுள்ளது.
 
தலா 1200 மீற்றர் கொண்ட மூன்று முனையங்களிலும், கப்பல்களை அணைக்கவும், ஆண்டுக்கு 75 மில்லியன் கொள்கலன்களை கையாளவும், வசதிகள் உள்ளன. இன்று தெற்கு முனையம் மட்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிழக்கு முனையம், 2014ம் ஆண்டில் பயன்பாட்டுக்குத் தயாராகும்.
 
இந்தத் திட்டத்தின் எல்லாக் கட்டுமானப் பணிகளும், 2020ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
கொழும்பு துறைமுக விரிவாக்கத் திட்டத்தின் மூலம், 10 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 15 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
 
இதேவேளை, மேற்குலக நாடுகள் மற்றும் இந்தியா என்பன, மனிதஉரிமை விவகாரங்களை காரணம் காட்டி அழுத்தம் கொடுத்து வருகின்ற நிலையில், சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் சீனாவின் முதலீடுகள், புதுடெல்லிக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆனால், புதிய கொழும்புத் துறைமுக முனையம் குறித்து இந்தியா அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், அதனால் அதிகம் பயனடையப் போவது இந்தியாவே என்றும் சிறிலங்கா துறைமுக அதிகாரசபையின் தலைவர் பிரியத் பந்து விக்கிரம கூறியுள்ளார். 

Thursday, April 18, 2013

டெல்லி மாணவி பலாத்கார வழக்கு : வேறு மாநிலத்துக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் மறுப்பு!


டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, உயிரிழந்த வழக்கில் குற்றவாளிகளின்  வழக்கு விசாரணையை வேறு மாநிலத்துக்கு மற்ற உச்ச நீதி மன்றம் அனுமதி மறுத்துள்ளது.

டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 15ம் திகதி ஓடும் பேருந்தில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மருத்துவ சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட 6 பேரில்  முக்கிய குற்றவாளியான ராம்சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான்.இன்னொரு குற்றவாளிக்கு 18 வயது நிரம்பாததால் அவரின் வழக்கு சிறார் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த வாரம் குற்றவாளி முகேஷ் என்பவர் சிறையில் கடுமையாக தாக்கப்பட்டார் என்றும் தகவல் வெளியானது. இதை தொடர்ந்து தன்னை வேறு சிறை அல்லது, தனது வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றவேண்டும் என்று முகேஷ் கொடுத்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை அடுத்து முகேஷின் வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில், தன்னை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்றும், தனது வழக்கை வேறு மாநிலத்துக்கு மற்ற வேண்டும் என்றும் கேட்டு மனுத் தாக்கல் செய்து இருந்தார்.

வழக்கை வேறு மாநிலத்துக்கு மற்ற வேண்டும் என்கிற மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வேறு  சிறைக்கு மாற்றவேண்டும் என்கிற மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

Monday, March 25, 2013

மாணவர் புரட்சி – விடுதலையை வென்றெடுக்கும் ,தோற்கடிக்கும் தந்திரங்களும்.


எந்த விடயத்தை யாரின் கையில் கொடுப்பது என்பதை காலமே தீர்மானிக்கின்றது. அந்தவகையில் தமிழ் மாணவர்களின் கையில் காலம் கொடுத்திருப்பது ஒரு சாதாரண பொறுப்பு அல்ல.
அது ஒரு வரலாற்றுப் பொறுப்பு. அந்தப் பொறுப்பு எந்த ஒரு காரணத்தினாலும் முழுமையாக நிறைவேற்றப்படாமல் போய்விடக்கூடாது. அவ்வாறான ஒரு வரலாற்றுத் தப்பு நடந்துவிடக்கூடாதென்ற கரிசனையில் இந்தக்குரல் உங்களை நோக்கி வருகின்றது.

ஒரு தீர்மானகரமான இலக்கோடு புறப்படும் போராட்டம் தன்னகத்தே காலவரையறையை துல்லியமாகக் கணக்கிடமுடியாவிட்டாலும் எதிர்நோக்க இருக்கும் சவால்களை உய்த்து உணர முடியும். வரலாற்றுப் பாடத்தையும் யதார்த்த புறநிலைகளையும் குறிப்பெடுத்து ஒரு மாதிரி திட்டவரைபையும், மாற்றுவழிகளையும் கையில் வைத்துக்கொண்டு தடம்புரளாமல் நகரமுடியும்.

இங்கு மாணவர்களின் இலக்கு என்பதும் அவர்கள் சுமக்கத்தயாராகியிருக்கும் பொறுப்பு என்பதும் மிகவும் தெளிவானது. சமரசங்களுக்கு அப்பாற்பட்டது. அவசியமானதும் அவசரமானதும் கூட.

1. தமிழ் ஈழ விடுதலையை வென்றெடுப்பதனூடாக உலகில் உள்ள ஒடுக்கப்படும் ஒவ்வொரு இனங்களுக்குமான உரிமையையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதில் பங்களித்தல்.

2. தமிழ் இனப்படுகொலையாளிகளை தண்டிப்பதனூடக இன்னுமொரு இனப்படுகொலை உலகில் எந்த மூலையிலும் நடந்துவிடாமல் மனித விழுமியங்களை பாதுகாப்பதில் பங்களித்தல்.
என்ற இரண்டு பூகோளப் பரிமாணங்களைக் கொண்டதாக கவனம்பெற வேண்டியது.
வெறுமனே தமிழ் மாணவர்கள் ஆரம்பித்த தமிழர் உரிமைக்கான போராட்டம் என்று மட்டும் மட்டுப்படுத்தப்படாமல் நாளைய உலகை ஆழப்போகும் இளம் சமுதாயம் ஒவ்வொன்றின் முன்னும் உள்ள போராட வேண்டிய தேவைக்கும், நன்கு திட்டமிட வேண்டிய கட்டாயத்திற்குமான போராட்டமாக பரப்பப்பட வேண்டியது.

இத்தகைய கனதியான போராட்டத்தின் கொதிநிலை மையமாக தமிழ்நாடு இருக்கின்ற போதும் அதன் நகர்வுப்புள்ளிகளில் அநேகமானவை பல் இன மொழிவாரியான மாநில ஆட்சிகளை தன்னகத்தே கொண்டுள்ள இந்திய மத்திய ஐனநாயக மன்றத்தின் நாற்காலிகளில் உள்ளது. மிகுதிப் புள்ளிகளில் சில ஈழத்தீவிலும் ஏனையவை சர்வதேசத்திலும் உள்ளன.

இந்தப் பகுத்தறிவு போராட்டத்தின் திட்டமிடலுக்கும் வெற்றிக்கும் இன்றியமையாதது.
இந்தியாவைப் பொறுத்தவரையில் அதன் மாநில அரசுகளிற்கு எப்போதும் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி மத்திய அரசு தலையிடும் என்ற பயமும், மத்திய அரசிற்கு தங்களது பாரபட்சமான செயற்பாடுகளால் மாநிலங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இல்லாது சென்றுவிடும் என்ற பயமும் பரஸ்பரம் உள்ளபடிதான் ஒவ்வொரு விடியலும் ஒவ்வொரு அஸ்தமனமும் நகர்ந்துகொண்டிருக்கிறது.

இத்தகைய பிண்ணனியில் போராட்டங்களுக்கு தமிழக அரசிடம் இருந்து உடனடியாக அதிகரித்த ஆதரவு வரும் என்று எதிர்பார்ப்பது அர்த்தமற்றது. அதே நேரத்தில் ஆங்காங்கே மட்டுப்படுத்தப்பட்ட சில வேளைகளில் அதிகரித்த கட்டுப்படுத்தல்களை கூட காவல்துறை மேற்கொள்ளும் என்பதில் எந்த ஆச்சரியமும் இருக்கவேண்டியதில்லை.
அதே நேரம் மத்திய அரசில் இருந்தும் மாணவர் கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பது போன்ற தோற்றமும் அவ்வப்போது ஏற்படுத்தப்படுவதும் இயல்பானதே.

இந்தியாவைப் பொறுத்தவரை மாணவர்களின் போராட்டம் அடுத்த கட்டத்தை அடையும் வரைக்கும் இந்தக் கண்டும் காணாததுமான போக்கு மத்தியிலும் மாநிலத்திலும் தொடரத்தான் செய்யும்.

அத்துடன் அடுத்தகட்டத்திற்கு போராட்டம் நகராமல் தடுப்பதிலும் அதனை இல்லாது ஒழித்தலிலும்; மாணவர் போராட்டத்தை விரும்பாத சக்திகள் ஒவ்வொன்றும் தங்கள் காய்களை நகர்த்திய வண்ணமே இருக்கும்.
எனவே இக்காலம் மாணவர்கள் தங்கள் போராட்டத்தை அடுத்தகட்டத்திற்கு நகர்த்துவதற்கான செம்மையான திட்டமிடல்களிலும் தீவிரமான செயல்ப்பாடுகளிலும் ஈடுபடவேண்டிய பொற்காலம்.

போராட்டத்தைத் தடுக்க நினைக்கும் சக்திகள் மேற்கொள்ளச் சாத்தியமான செயற்பாடுகளையும் மாணவர்கள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துவதற்கு கவனிக்க வேண்டிய விடயங்களையும் மையமாக வைத்து சில விடயங்களை சுருக்கமாக குறிப்பிட விரும்புகிறேன்.

1. தன்னொழுக்கம், கட்டுப்பாடு, நெறிப்படுத்தலுடன் கூடிய மாணவர்களுக்காண கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படல்.
இக்கட்டமைப்பு பாடசாலைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என அனைத்திலும் இருந்து அனைத்து மாணவர்களையும் உள்வாங்கியதாக ஊர்கள், பிரதேசங்கள், மாவட்டங்கள் ரீதியாக பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வினைத்திறன் மிக்க கட்டமைப்பாக உருவாக்கப்படவேண்டும்.
இது மாணவர்களை ஐhதி மத கட்சி அரசியலிற்குள் வீழ்ந்துவிடாமல் பாதுகாக்கவும், அன்றாட தொடர்பாடலோடு கூட்டுச்சக்தியாக நின்று தற்காத்துக்கொள்ளவும், சினம் கொண்டு எழுந்துநிற்கும்; மாணவர் போராட்டம் எரிப்பு, உடைப்பு என வன்முறைக்குள் சென்று வழிதவறிவிடாமல் ஜனநாயக வரம்பிற்குள் உறுதியாகவும் தொடர்ந்தும் போராட அவசியமாக விளங்கும்.

2. தமிழக அரச இயந்திரத்தினதும் அரசு சாராதவர்களினதும் ஊடகங்களினதும் மக்களினதும் மனங்களை முழுமையாக வெல்லும்படியான திட்டங்களும் நடவடிக்கைகளும்.
கல்வித்துறையினருடனோ, காவல்துறையினருடனோ வேறு எந்த அரச தமிழக அரச துறையினருடனும் மோதிக்கொள்ளும் படியாக அமைந்துவிடாமல் சகல அரசியல் கட்சிகள் திரைப்படத்துறையினர் ஊடகத்துறையினர் தொழிலாளர்கள் என தமிழகத்தின் அனைத்து தரப்பினரது ஆதரவையும் பெருக்கி உங்கள் கோரிக்கையை தமிழக சட்டசபையில் தீர்மானமாக கொண்டுவர அழுத்தம் கொடுக்க வேண்டும்.

3. ஏனைய மாநிலங்களின் மாணவர்களினதும் அரச இயந்திரங்களினதும் அரசு சாராதவர்களினதும் ஊடகங்களினதும் மக்களினதும் மனங்களை முழுமையாக வெல்லும்படியான திட்டங்களும் நடவடிக்கைகளும்.
தமிழ் நாட்டில் உள்ள ஏனைய மாநில மாணவர்க@டாகவும் பிற சாத்தியமான வழிகளிலும் உங்கள் கோரிக்கையை அவர்களது கோரிக்கையாகவும் போராட்டமாகவும் மாற்றும்படியான ஒளிப்பதிவுகள் கோரிக்கை மனுக்கள் போன்றவற்றை தயார்செய்து ஏனைய மாநிலங்களிற்கும் உங்கள் போராட்டத்தைப் பரவச்செய்து மாநில அரசுகளினதும் மத்திய அரசினதும் நிலைப்பாட்டை மாற்றச்செய்து பாரதப்பாராளுமன்றில் உங்கள் கோரிக்கையை தீர்மானமாக நிறைவேற்றுதல்.

4. சர்வதேச ரீதியாக உள்ள மாணவர்களினதும் அரசுகளினதும் மக்கள் மற்றும் ஊடகங்களினதும் ஆதரவை பெறுவதற்காண திட்டங்களும் நடவடிக்கைகளும்.
ஈழத்திலும் சர்வதேசமெங்கும் இயங்கிவரும் தமிழ் மாணவர் அமைப்புகளுடன் இணைந்து ஏனைய பல்லின மாணவர்களையும் அவர்கள் சார்ந்த மாணவர் அமைப்புகளையும் ஆசிரியர்களையும் பேராசிரியர்களையும் உள்ளடக்கிய தமிழ் இனப்படுகொலைக்கு எதிரான சர்வதேச மாணவர் பேரவையாக பலம்பெற்று போராட்டத்தை விரிவுபடுத்துவதுடன் உலகப்பரப்பில் எங்கேனும் போராடும் மாணவர்களது உரிமை மறுக்கப்பட்டாலோ மீறப்பட்டாலோ உலகம் முழுவதிலும் இருக்கும் மாணவர்களினதும் சர்வதேச அமைப்புகளிதும் கண்டனங்களும் கரிசனையும் உங்களைப்பாதுகாக்கவும் உங்கள் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கவும் செய்தல்.மாணவர்களே, வெறுமனே வீதியிறங்கிப் போராடுவதால் மட்டும் ஆட்சியாளர்களால் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுவிடும் என்றால் உலகில் தோன்றிய அத்தனை புரட்சிகளுமே வென்றிருக்கும் என்ற பேருண்மையை நாம் புரிந்துகொண்டு மதிநுட்பமாக திட்டமிடவேண்டும் என காலம் நமக்கு கட்டளையிடுகின்றது.விரைவில் தமிழக மாணவர் புரட்சி மற்ற மாநிலங்களுக்கு உங்கள் கோரிக்கைகளை தாங்கியவாறு பரவவேண்டும். அங்கே தங்கள் பிள்ளைகள் ஒரு கோரிக்கையை வைத்து போராடும் போது பெற்றவர்கள் உணர்வுரீதியாகவும் அறிவுரீதியாகவும் அதற்கு கட்டுப்படுவார்கள். அதுவே மத்தியில் உங்கள் கோரிக்கைகளிற்கு அனைத்துக்கட்சிகளிலும் இருந்தான ஆதரவை உறுதிப்படுத்தும். உலகம் முழுவதும் நடைபெறப்போகும் மாற்றத்துக்குமான உந்துதலாகவும் அமையும்.

இதற்கு தமிழ் நாட்டில் நடந்த ஒரு சிறு உதாரணத்தை குறிப்பிட விரும்புகின்றேன்.
ஒரு பல்கலைக்கழக வளாகம், தொண்டை வறண்டு போகுமளவுக்குக் கடுமையான முழக்கங்கள் இட்டபடி மாணவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள், சுற்றிலும் காவலர்கள் பாதுகாப்புக்காக அவர்களோடு நின்று கொண்டிருக்கிறார்கள்.இடைவெளியில் சில மாணவர்கள் தேநீர் அருந்துவதற்காக அருகில் இருக்கும் கடைக்குள் நுழைகிறார்கள்.பாதுகாப்புக்காக அங்கு வந்திருந்த தலைமைக் காவலர் அங்கு நின்று கொண்டிருக்கிறார்.மாணவர்கள் உள்ளே நுழையத் தயங்கியபடி வெளியே நின்றபடி தேநீர் சொல்கிறார்கள்.
தலைமைக் காவலர் முழக்கங்கள் இட்டுக் களைத்திருந்த மாணவர் ஒருவரை அழைக்கிறார்.
“ஏலே, காலைல இருந்து எதாச்சும் சாப்டியாலே”.
“கண்ணெல்லாம் உள்ள கூடி போயிட்டு”.
“உயிர விட்டுக் கத்தாதலே”
“வயித்துக்கு எதாச்சும் சாப்பிடு”
காவலரின் திடீர்ப் பாசம் கண்டு மருள்கிறார்கள் மாணவர்கள்.
தலைமைக் காவலர் கடைக்காரரிடம் சொல்கிறார், “யோவ், கோட்டிப் பயலுகளுக்கு என்ன வேணுமோ கொடும், துட்டு நான் குடுக்கேன் என்ன???”
எனக்கும் இவங்களப் போல ஒரு மகன் இருக்காம்ல, மூணு நாளா எங்;க ஊருல பட்டினியாக் கிடக்கான், செத்தாலும் பரவாயில்லப்பா, இப்போ விட்டா எப்பவுமே நாம ஜெயிக்க முடியாதுன்னு போன்ல சொல்றான். என்ன செய்றது, நாங்க பாக்குற வேலை அப்பிடி, போலீஸ்காரனும் மனுசன் தாம்ல, எம்மக்களப் போலத் தான் உங்களைப் பாத்தாலும் தெரியுது, நல்லா வயித்துக்குச் சாப்பிடுங்க, அப்புறமா போராட்டம் பண்ணுங்க”.
“வேண்டாம்னு தடுக்கவும் முடியல, பண்ணுங்கன்னு ஆதரிக்கவும் முடியல, போலீஸ்காரன் பொழப்பு ஒரு சாபக்கேடு கண்ணா”,
பக்கத்தில் இருக்கும் காவலரிடம் புலம்பி விட்டு மாணவர்கள் கொடுக்க முயன்ற பணத்தைத் தடுத்து தனது காக்கிச் சட்டையின் ஈரத்தில் இருந்து நூறு ரூபாய்த் தாளை எடுத்து கடைக்காரரிடம் கொடுக்கிறார் தலைமைக் காவலர். அவர் ஒரு போராடும் மாணவனின் அப்பா.
இவ்வாறு இந்தியா முழுவதும் ஏன் உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு காவல்துறையினதும் அரச அதிகாரிகளினதும் ஊடகவியலாளர்களினதும் பிள்ளைகள் உங்களுடன் போராட்டக்களத்தில் இருந்தால் என்ன நடக்கும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
ஒரு புறம் உங்கள் போராட்டத்தின் சூடு தணியாமல் இருக்க தற்போது நடாத்திக்கொண்டிருக்கும் போராட்டங்களை அறவழியில் உங்கள் உயிர்களைப் பாதுகாத்தபடி தொடருங்கள்.
மறுபுறம் உங்கள் போராட்டத்தை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்த கச்சிதமாக திட்டமிடுங்கள்.
மாணவச் செல்வங்களே!
தோல்வியிலும் வெற்றியிலும் அறுவடைசெய்யக்கூடிய பொது விடயம் அனுபவம் மட்டும் தான். அனுபவத்தில் இருந்து வென்றவர்கள் தமது அடுத்த வெற்றிகளை விரைவுபடுத்துவதிலும் வீரியம் கொள்ளவைப்பதிலும் கவனம் செலுத்துவார்கள். தோற்றவர்கள் தங்கள் அடுத்தமுயற்சி வெற்றியாக அமைய அனுபவப்பாடத்தை சற்றும் பிசகாமல் பயன்படுத்திக்கொள்வார்கள்.

உலக மாணவர் போராட்டங்களிற்கு பல நூறாண்டுகள் வரலாறும் தமிழக மாணவர் போராட்டத்திற்கு அறுபது ஆண்டுகளிற்கு முந்திய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் அனுபவம் உண்டு.
புரட்சி என்பது ஒரு பெரும் புயலுக்கு நிகரான சக்தியை தரவல்லது. ஆனால் அதை பாதுகாத்து பலன்பெறுதல் என்பது அதே புயலில் ஒரு சிறு தீபத்தை பாதுகாப்பாக கொண்டுசெல்வதற்கு சமமானது.
மாணவச் செல்வங்களே எங்கள் மொழியும் வலியும் உங்களுக்கு புரியாதது அல்ல.
வெல்லட்டும் மாணவர் புரட்சி! மலரட்டும் சுதந்திரத் தமிழீழம்!

ஈழத்திலிருந்து பிரம்மாதவன்.

Tuesday, March 19, 2013

நாங்களும் விலகுறோம்… திருமாவளவனும் அறிவிப்பு (காணொளி இணைப்பு)



ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்து நாங்களும் வெளியேறுகிறோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். இத்தனை ஆண்டுகாலமாக இலங்கைத் தமிழர்கள் மீது இல்லாத பாசம் இப்போது மத்திய அரசின் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் திமுக, வி.சி. கட்சித்தலைவர்களுக்கு வந்துள்ளது. 

மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் ஐ.நாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க கோரி நாங்கள் வைத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை என்று ஐ.மு கூட்டணியில் இருந்து திமுக விலகியுள்ளது. இதே காரணத்திற்காக தற்போது நாங்களும் கூட்டணியில் இருந்து விலகுகிறோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார். மத்திய அரசின் ஆதரவை வாபஸ் பெற்றுள்ள வி.சி கட்சி சார்பில் ஒரு உறுப்பினர் மட்டுமே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசில் இருந்து விலகல்! திமுக வெளியிட்ட முழுமையான அறிக்கை! (காணொளி இணைப்பு)



மத்திய அரசில் இருந்து திமுக விலகுவதாக அக்கட்சியின் தலைவர் கலைஞர் 19,03,2013 காலை சென்னை அண்ணா அறிவாலத்தில் செய்தியாளர்கள் முன்னிலையில் அறிவித்தார்.

அப்போது அவர் வெளியிட்ட அறிக்கையின் முழு வடிவம்:

ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் ஐம்பதாண்டுகளுக்கு மேலாக செல்வா காலந்தொட்டு, திராவிட முன்னேற்றக் கழகம்  அங்குள்ள தமிழர்களின் உரிமைக்காகவும் - தமிழர் வாழ்வாதாரங்களின்  பாதுகாப்புக்காகவும் - தமிழ் மொழியின் சமத்துவமான தகுதிக்காகவும் -  குரலெழுப்பி வந்துள்ளது.
அண்ணா காலத்திலேயே 1956ஆம் ஆண்டு  நடைபெற்ற சிதம்பரம் திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக் குழுவிலும்,  தொடர்ந்து கட்சியின் மாநாடுகளிலும், ஈழத் தமிழர்களின் உரிமைக்காக அறப் போராட்டங்கள் பலவற்றை நடத்திய வரலாற்றுப் பெருமை கொண்டது திராவிட முன்னேற்றக் கழகம்.

செல்வா காலத்தில் ஈழத் தமிழர்களுக்காக அமைதியான முறையில் தொடங்கிய எழுச்சியையும், ஈழத் தமிழ்ச் சமுதாயப் புரட்சியையும் ஆயுத பலம் கொண்டு; அரசின் அதிகார வலிமையைக் காட்டி சிங்கள வெறியர்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டலாம் என்று கருதி செயல்பட்ட சிங்களப் பேரினவாத அரசாங்கத்தின் கொடுமைகளையும், அங்கு வாழும் தமிழர்களின் கலை, கலாச்சாரங்கள் போன்றவைகளையும், அழித்தொழிக்க முனைந்து வன்முறை வெறியாட்டங்களை நடத்திய சிங்கள வெறியர்களுக்கு எதிராக கிளம்பிய விடுதலைப் புலிகள் மற்றும் விடுதலைப் போராளிகள் அந்த மண்ணில் அடுத்தடுத்த நடந்த போரில் பலியானார்கள் என்றாலுங்கூட; அங்கே கொழுந்து விட்டெரிந்த தமிழ் உணர்வு மங்கிப் போய் விடவில்லை என்பதற்கு உதாரணமாக; வரலாற்றில் பதிந்துள்ள பல நிகழ்ச்சிகளைக் கோடிட்டுக் காட்ட முடியும்.

தமிழ் இளைஞர்களும், வாலிபர்களும் தங்கள் இனம் வாழ - மொழி வாழ - நடத்திய வீர மரணப் போராட்டங்கள் கூட தமிழ் உணர்வற்றவர்களால் எள்ளி நகையாடப்பட்டாலும், அவைகளையெல்லாம் மீறி நமது குறிக்கோள் வெற்றியே முக்கியம் என்ற கொள்கை உறுதியோடு; ஈழப் போரில் மாண்டு மடிந்த போராளிகளுக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிற சூழலில் அவர்தம் காலடி மண்ணெடுத்து, அதனைத் திலகமாக இட்டுக் கொண்டு, அந்தத் திலகத்தின் சாட்சியாக - தமிழ் ஈழத்தில் சிங்களப் பேரினவாதிகளால் நடத்தப்பட்ட - அதிலும் குறிப்பாக ராஜபக்சே அரசின் போர்க் குற்றங்கள் மலிந்த - இரு கருத்துக்கு இடமில்லாத வகையில் இனப் படுகொலையே நடத்தப்பட்டு - உலக அரங்கில் உள்ள நாடுகளின் விவாதத்திற்கு உரியதாக ஆகி விட்ட இந்தச் சூழலில் உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று மார் தட்டிக் கொள்ளும் இந்தியத் திருநாடு, இந்தப் பிரச்சனையின் ஆழத்தை உணராமல், விளைவுகளைக் கருதாமல், ஒதுங்கி நிற்பதோ; அல்லது எதிர் மறை கருத்துரைப்பதோ - இந்தியாவில் காந்தியடிகளும், இலங்கையில் தந்தை செல்வநாயகமும் சுதந்திரப் போராட்டத்திற்காகத் தேர்ந்தெடுத்து நடத்திய அறவழிகளை - அறவே மூடிவிடுவதற்கான; ஜனநாயக விரோதச் செயல்களாகும்.

 இவைகளையெல்லாம் ஐ.நா. மன்றத்திலும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்திலும் நீதி நெறியோடு ஆய்ந்து பார்த்து - அனைத்து நாட்டு மக்களின் இதயத்தையும் குளிர வைக்கும் முடிவுகளை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அதற்கு மாறாக இழப்பின் உச்சத்திற்கே தள்ளப்பட்ட இலங்கையும், அந்த இலங்கையின் “தொப்புள் கொடி” உறவு கொண்ட தமிழகம் இடம் பெற்றுள்ள இந்தியாவும், இந்த ஜனநாயக விரோதச் செயல்களுக்கு கதவுகளைத் திறந்து விட்டிருப்பதை இன உணர்வுள்ள எந்த ஒரு தமிழனும் ஏற்றுக் கொள்ள இயலாது.

 எனவே “குதிரை குப்புறத் தள்ளியதும் அல்லாமல், குழியும் பறித்த கதை”யாக, அமெரிக்காவின் வரைவுத் தீர்மானத்தை பெருமளவுக்கு நீர்த்துப் போக விட்டதோடு; திராவிட முன்னேற்றக் கழகம் முன்மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் இந்திய அரசு சிறிதும் பரிசீலனையும் செய்யவில்லை. எனவே, ஈழத் தமிழருக்கு எந்த வகையிலும் பயன்படாத சூழ்நிலைகளே உருவாக்கப் பட்டுள்ள நிலையில், இதற்குப் பிறகும் இந்திய மத்திய ஆட்சியில் திராவிட முன்னேற்றக் கழகம் நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால், திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அமைச்சரவையிலிருந்தும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்தும் உடனடியாக விலகிக் கொள்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

போரில் இலங்கைக்கு இந்தியா உதவியிருந்தால் அதுவும் விசாரிக்கப்பட வேண்டிய நிலை வரலாம்! கருணாநிதி பேட்டி


2009ம் ஆண்டு இலங்கையில் நடந்த இறுதிப் போரின்போது இந்திய அரசு இலங்கை அரசுக்கு உதவி செய்ததாக குற்றச்சாட்டு கூறப்படுகிறதே என்று கேட்டதற்கு, அது உண்மையாக இருந்தால், எதிர்காலத்தில் விசாரிக்கப்பட வேண்டியவற்றில் அதுவும் ஒன்றாக இருக்கலாம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
இலங்கை விவகாரத்தை முன் வைத்து மத்திய அரசில் இருந்து திமுக விலகுவதை இன்று நிருபர்களிடம் அறிவித்த கருணாநிதி நிருபர்களுக்கு வழங்கிய பேட்டி:
கேள்வி: இனிமேல் மத்திய அரசுக்கு பிரச்சனை அடிப்படையில்ஆதரவு தரப்படுமா?
பதில்: பொதுவாக பிரச்சனை அடிப்படையில் ஆதரிப்பது என்பது எல்லா கட்சிகளுமே கடைப்பிடிக்கின்ற முறை தானே.
கேள்வி: அமைச்சரவையில் பங்கேற்காமல், வெளியே இருந்து மத்திய அரசுக்கு ஆதரவு தரப்படுமா?
பதில்: எதுவும் கிடையாது.
கேள்வி: மத்தியில் மதவாத சக்திகள் ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்பதற்காகத் தான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக ஏற்கனவே கூறியிருந்தீர்கள். நீங்கள் ஆதரவைத் திரும்பப் பெறுவதால் மதவாத சக்திகள் ஆட்சிக்கு வரக் கூடுமல்லவா?
பதில்: அதற்கு நாங்கள் பொறுப்பாளி அல்ல.
கேள்வி: நேற்றைய தினம் உங்களை மத்திய அமைச்சர்கள் சந்தித்து விட்டுப் போன பிறகு, மத்திய அரசிலிருந்து உங்களுக்கு ஏதாவது தகவல் வந்ததா?
பதில்: பத்திரிகைகளில் வந்த செய்திகள் தான் தகவல். எங்களிடம் யாரும் இதுவரை பேசவில்லை.
கேள்வி: இது தாமதமாக எடுக்கப்பட்ட முடிவு என்று நினைக்கிறீர்களா? ஏனென்றால் 2009ம் ஆண்டு இலங்கையில் இறுதிப் போர் நடந்தபோது நீங்கள் ஒன்றும் செய்யவில்லை என்று குற்றச்சாட்டு உள்ளதே?
பதில்: 2009ம் ஆண்டில் நாங்கள் என்ன செய்யவில்லை? அப்போது நாங்கள் ஒன்றும் அமைதியாக இல்லையே.
கேள்வி: பொதுவாக அப்படி ஒரு குற்றச்சாட்டு உங்கள் மீது சொல்லப்பட்டதே?
பதில்: 'பொது' என்பதே ஒரு நல்ல சொல் அல்ல.
கேள்வி: டெசோவின் அடுத்த கட்ட செயல்பாடுகள் எப்படி இருக்கும்?
பதில்: டெசோ சார்பில் ஏற்கனவே நடந்து வரும் செயல்பாடுகள் மேலும் தொடரும்.
கேள்வி: நீங்கள் குறிப்பிட்ட திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வராத பட்சத்தில் இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்து விட்டதாக நினைக்கிறீர்களா?
பதில்: தற்போது ஐ.நா. மன்றமே அப்படி துரோகம் இழைத்து விட்டதோ என்று கருதுகிறேன். இந்திய அரசும் கூடத்தான்.
கேள்வி: 2009ம் ஆண்டு நடந்த இறுதிப் போரின்போது இந்திய அரசு இலங்கை அரசுக்கு உதவி செய்ததாக குற்றச்சாட்டு கூறப்படுகிறதே?
பதில்: அது உண்மையாக இருந்தால், எதிர்காலத்தில் விசாரிக்கப்பட வேண்டியவற்றில் அதுவும் ஒன்றாக இருக்கலாம்.
கேள்வி: அப்படிப்பட்ட நிலையில் இந்திய அரசும் சேர்ந்து போர்க் குற்றம் செய்ததாக கருதலாமா?
பதில்: அது உண்மையா இல்லையா என்பது முதலில் தெரியட்டும்.
கேள்வி: நாடாளுமன்றத்தில் நீங்கள் கேட்டபடி திருத்தங்களோடு தீர்மானம் கொண்டு வரப்பட்டால், உங்களுடைய தற்போதைய முடிவை மீண்டும் பரிசீலனை செய்வீர்களா?
பதில்: அதற்கு நேரம் அதிகமாக இருக்கிறது. இன்று மாலை வரையிலே நேரம் இருக்கிறது, நாளைக்கும் இருக்கிறது, 21ம் தேதிக்கு முன்பும் இருக்கிறது. அதற்குள் நாடாளுமன்றத்தில் நாங்கள் எண்ணியவாறு இந்தத் தீர்மானம் திருத்தங்களோடு முன்மொழியப்பட்டு, விவாதத்திற்குக் கொண்டு வரட்டும்.
கேள்வி: உங்களுடைய மத்திய அமைச்சர்கள் எப்போது ராஜினாமா செய்வார்கள்?
பதில்: இன்று அல்லது நாளை.
இவ்வாறு கருணாநிதி பேட்டியளித்தார். 

Monday, March 18, 2013

இலங்கைத்தமிழர் பிரச்சனையில் துணிச்சல் மிக்க முடிவை இந்தியா எடுக்கும் என நம்புகிறேன்: ஜெயலலிதா கடிதம்




இலங்கைத்தமிழர் பிரச்சனை குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா இன்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பி உள்ள கடிதத்தில்,

’’இலங்கையில் நடைபெற்ற கடைசி கட்ட போரின் போது நடந்த போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச அளவில் எழுந்துள்ள கண்டனங்களையும், இதுதொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் தீர்மானங்களையும் இலங்கை அரசு நிராகரித்து இருப்பதால் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் வேதனையும், ஆத்திரமும் அடைந்து வருவதை நீங்கள் அறிவீர்கள். 


இந்த தருணத்தில் ஐ.நா. சபையில் 22வது மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்காவால் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தின் மீது இந்தியா வலுவான நிலையை எடுப்பதும், தீர்மானத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் சுதந்திரமான திருத்தங்கள் கொண்டு வருவதும் அவசியமாகும். 

இந்த விஷயத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போர்க்குற்றங்களுக்கு எதிராகவும், இடம் பெயர்ந்த தமிழர்கள் மறுகுடி அமர்த்தப்பட்டு, அவர்கள் சிங்களர்களுக்கு இணையாக அனைத்து உரிமைகளையும் பெறும் வரை இலங்கையின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் 8.6.2011 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தங்களின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில், 14.6.2011 அன்று தங்களிடம் நான் மனு கொடுத்ததையும், அதனை தொடர்ந்து 25.6.2011 அன்று கடிதம் எழுதியதையும் நினைவு படுத்த விரும்புகிறேன்.

இதனை தொடர்ந்து 2012 பிப்ரவரி 29ம் தேதியன்றும், 2012 மார்ச் 6ம் தேதியன்றும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் 19வது கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக வலுவான ஒரு நிலையை எடுக்குமாறு நான் உங்களை வலியுறுத்தி இருக்கிறேன். 

தமிழக மக்களின் உணர்வு, சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மற்றும் எனது கடிதங்கள் மூலமாக மனித உரிமை கவுன்சிலின் 19வது கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது. இந்த தீர்மானத்தின்படி பாடம் கற்றல் மற்றும் மறுசீரமைப்பு குழு அளித்துள்ள ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளை இலங்கை அரசு அமல்படுத்த வேண்டும்.
இந்த தீர்மானம் மிதமானது என்பது மட்டுமின்றி ஐ.நா. பொதுச் செயலாளர் அமைத்த நிபுணர் குழு தெரிவித்த பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது அல்ல. மேலும், இந்திய அரசின் வழிகாட்டுதல் படியே இந்த குழுவின் அறிக்கை தமிழர்களுக்கு துரோகம் விளைவிக்கும் வகையில் அமைந்திருந்தது. 

இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓராண்டு ஆன பிறகும் கூட இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் நிகழ்வுகள் நடைபெற்று கொண்டிருப்பதற்கு  ஐ.நா. மனித உரிமைக்குழுவின் அலுவலகம் அளித்துள்ள அறிக்கையே சாட்சியாகும். பாடம் கற்றல் மற்றும் மறுசீரமைப்பு குழுவின் பரிந்துரைகளில் பெரும்பாலானவற்றை இலங்கை அரசு இன்னும் அமல்படுத்தப் படவில்லை என்பதையும் மனித உரிமை குழு தெரிவித்திருக்கிறது.

தமிழர்களுக்கு எதிரான கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு நீதி வழங்கி தமிழர்களின் வாழ்வாதாரங்களை மீட்டெடுக்கவும், மறுசீரமைப்பு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.
இலங்கைத் தமிழர்கள் இன்னமும் 2ம் தர குடிமக்கள் போல் நடத்தப்பட்டு, அடிக்கடி வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு துன்புறுத்தப்படுகிறார்கள்.
இந்நிலையில், இலங்கை அரசு நியாயமான விசாரணை நடத்தவும், இனபடுகொலை தொடர்பான போர்குற்றங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான எந்த  அறிகுறியும் தென்படவில்லை. இந்த தருணத்தில் நடைபெற்று வரும் ஐ.நா.வின் 22வது மனித உரிமை கவுன்சில் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

இலங்கை ராணுவம் நடத்திய அராஜகம் மற்றும் அத்துமீறல்கள் குறித்து நடவடிக்கை எடுப்பதற்காக சர்வதேச அளவில் நிர்ப்பந்தம் ஏற்பட்டு இருக்கிறது. 

இலங்கைத் தமிழர்கள் அரசியல் சட்டப்படி சமஉரிமைகள் பெற்று கண்ணியமுடன் வாழ்வதற்கு வழிவகை செய்யவும் இது ஒரு வாய்ப்பாகும். இந்த சமயத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு இந்தியா முக்கிய பங்காற்ற வேண்டும். அதோடுமட்டுமின்றி மனித உரிமைகளை காப்பதிலும் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதிலும் இந்தியா உலகளவில் தலைமையேற்க வேண்டியதும் அவசியமாகும். 

ஆனால், கடந்த சிலநாட்களுக்கு முன் இந்த விஷயத்தில் நீங்களும், வெளியுறவு அமைச்சரும் வெளியிட்ட அறிக்கைகள் எனக்கு வருத்தத்தை தருகிறது. இலங்கையில் நடந்த இனப்படுகொலை ஏராளமான அப்பாவி மக்கள் படுகொலை, மனித உரிமை மீறல் போன்றவற்றை பிரதிபலிப்பதாக உங்களது அறிக்கைள் அமையவில்லை. ஐ.நா. மனித உரிமை குழுவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று வரும் வேளையில் கூட, இந்தியா மவுனம் சாதிப்பது ஏமாற்றம் தருகிறது. 

இந்த விஷயத்தில் இந்தியா வலுவான வரலாற்று சிறப்பு மிக்க துணிச்சலான முடிவை எடுக்க வேண்டும். நடந்த தவறுகளுக்கு இலங்கையை பொறுப்பாக்கி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு வலியுறுத்தும் அமெரிக்காவின் நகல் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிப்பது மட்டுமின்றி இந்த தீர்மானத்தில் உரிய திருத்தங்கள் கொண்டு வந்து அதனை வலுப்படுத்தி தீவிரமாக அமல்படுத்துவதற்கும் இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* ஐ.நா. பொதுச்செயலாளர் அமைத்த குழுவின் அறிக்கை இலங்கை அரசு அமைத்த எல்.எல்.ஆர்.சி. குழுவின் அறிக்கையை விட கூடுதலான அம்சங்களை கொண்டதாகும். 

* இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நீடித்து வருவது கவலை அளிக்கக்கூடியதாகும்.

* அரசியல் அதிகாரங்கள் வழங்குவதற்காக இலங்கை அரசு அளித்த வாக்குறுதி நிறைவேற்றப் படவில்லை. 

* சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணை 6 மாதத்தில் முடிக்கப்பட்டு அதன் அறிக்கை 2014ல் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை குழுவின் 25 கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

இவற்றை கவனத்தில் கொண்டு இதுபற்றிய திருத்தங்களை அமெரிக்காவின் தீர்மானத்தில் இணைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இந்திய தூதரை கேட்டுக் கொள்ள வேண்டும் என்று நான் உங்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். இதுமட்டுமின்றி மனித உரிமைக்குழுவின் உறுப்பு நாடுகளின் ஆதரவை பெறவும், குறிப்பாக தீர்மானத்தை எதிர்க்கும் நாடுகளுடன் பேசி அவற்றின் ஆதரவை பெறவும் முயற்சிக்க வேண்டும்.

பிரதமர் அவர்களே, இந்த தருணத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த துணிச்சல் மிக்க முடிவை ஜனநாயகத்திற்காகவும், மனித உரிமைகளை காப்பதற்காகவும் இந்திய அரசு எடுக்கும் என்று நான் நம்புகிறேன்.
இத்தகைய முடிவை எடுத்து இலங்கையில் பாரபட்சம் காட்டப்பட்டு, அவதிப்பட்டு வரும் சிறுபான்மை தமிழ் மக்களுக்கு உறுதுணையாக தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களும், உலகெங்கும் வாழும் பிற தமிழர்களும் உறுதுணையாக இருக்கிறார்கள் என்பது நிரூபிக்கப்பட வேண்டும்’’என்று கூறப்பட்டுள்ளது.



Sunday, March 17, 2013

சுப்பிரமணியம் சுவாமியை களமிறக்கி விட்டது யார்?


இந்தியாவில் அரசியல் கோமாளி என்று ஊடகங்களால் வர்ணிக்கப்படும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கடந்த மாத இறுதியில் திடீரென கொழும்புக்கு வந்திருந்தார். 
அண்மைக்காலத்தில் அவர் கொழும்பு வந்தது இரண்டாவது முறை.
கடந்த ஆண்டு இலங்கை இராணுவம் நடத்திய போர்க் கருத்தரங்கிற்கு சுப்பிரமணியம் சுவாமியை முதல் முறையாக அழைத்து வந்திருந்தார் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச.
அதன் பின்னர் கடந்த 28ம் திகதி அவர் மீண்டும் கொழும்பு வந்தார்.
அவரை பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவும், வெளிவிவகாரச் செயலர் கருணாதிலக அமுனுகமவும் அலரி மாளிகைக்கு அழைத்துச் சென்றனர்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் அவர் சந்தித்துப் பேசிவிட்டுச் சென்றார்.
அதன் பின்னர் தான், சுப்பிரமணியம் சுவாமி இலங்கை வந்த விபரமே வெளியே தெரிய வந்தது.
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கோரும் போராட்டங்கள் தீவிரம் பெறத் தொடங்கிய காலகட்டம் அது.
எதற்காக சுப்பிரமணியம் சுவாமி கொழும்பு வந்தார், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் என்ன பேசினார் என்ற விபரங்கள் எதுவுமே அப்போது வெளியிடப்படவில்லை.
மொட்டையாக இருதரப்பு ஈடுபாடுள்ள விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக மட்டும், ஜனாதிபதி செயலகம் செய்திக் குறிப்பையும், படங்களையும் வெளியிட்டது.
அப்போது ஒன்றை மட்டும் புரிந்துகொள்ள முடிந்தது.
இலங்கையை சர்வதேச அழுத்தங்களில் இருந்து மீட்பதற்கான ஒரு திட்டம், சுப்பிரமணியம் சுவாமியை மையப்படுத்தித் தயாராகிறது என்பதே அது.
கொழும்பில் இருந்து தமிழகம் திரும்பிய சுப்பிரமணியம் சுவாமி, திருச்சியில் நடந்த விஸ்வ இந்து பரிசத் மாநாட்டில் பங்கேற்றார்.
அப்போது தனது கொழும்புக்கான பயணம் குறித்த சில விபரங்களை வெளியிட்டார்.
மகிந்த ராஜபக்சவுடன் தன்னால்' மட்டுமே பேச முடியுமென்றும் அவருடன் பேசி தமிழருக்கான தனியான மாநிலத்தை உருவர்க்கி தர முடியுமென்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் ராஜீவ் காந்தி - ஜே.ஆர். ஜெயவர்த்தன உடன்பாடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.
அந்தச் சந்திப்பில் சோனியா காந்திக்கு ஊழல்களில் மிகப் பெரிய பங்கு இருப்பதாக சுப்பிரமணியம் சுவாமி கடுமையாக குற்றம் சாட்டியிருந்ததால் தமிழ்நாட்டு ஊட்கங்கள் அவரது கொழும்பு பயணத்தை அவ்வளவாகக் கணக்கில் எடுக்கவில்லை.
அதன் பின்னர் சுப்பிரமணியம் சுவாமி திடீரென அமெரிக்காவுக்கு போயுள்ளதாகச் செய்திகள் வெளியாகின.
அவர் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அதிகாரிகளைச் சந்திப்பதற்காகவே வாசிங்டன் சென்றார் என்பது பின்னர்தான் தெரியவந்தது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் ரொபர்ட் பிளேக்கை சந்தித்த சுப்பிரமணியம் சுவாமி சுமார் ஒரு மணி நேரம் பேசியிருந்தார்.
அவரது அந்தச் சந்திப்பின் அடிப்படை நோக்கம் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை நீர்த்துப் போக வைப்பதுதான்.
முக்கியமாக சர்வதேச போர்க்குற்ற விசாரணையை அமெரிக்கத் தீர்மானம் வலியுறுத்தக் கூடாது என்பதே அவரது கோரிக்கையாக இருந்தது.
அதற்கான நியாயங்களை அவர் பிளேக்கிடம் முன்வைத்திருந்தார்.
சர்வதேச போர்க்குற்ற விசாரணையை இந்தியா விரும்பாது என்றும், காஷ்மீர் விவகாரம் தனக்கெதிரான திரும்பும் என்பதால் இந்தியா அதை ஏற்காது என்று ஒரு நியாயத்தையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அடுத்து எந்த விசாரணையாக இருந்தாலும் அது உள்நாட்டிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
மேலும் ஜெனிவாவில் கொண்டு வரப்படும் தீர்மானம் விடுதலைப் புலிகள் மீண்டெழுவதற்கு வசதியாகி விடும் என்றும் அவர் அமெரிக்காவுக்கு பூச்சாண்டி காட்டியிருந்தார்.
இதனால் இலங்கையுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு தீர்மானத்தை முன்வைக்குமாறு அவர் பிளேக்கிடம் கேட்டுக்கொண்டார்.
இவ்வளவு கோரிக்கையையும் இலங்கை அரசின் சார்பிலேயெ முன்வைத்த சுப்பிரமணியம் சுவாமி இவையெல்லாம் தனது தனிப்பட்ட கோரிக்கைகள் என்று குறிப்பிடவும் தயங்கவில்லை.
அசர் கொழும்புக்கு வந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்திருக்காமல் அமெரிக்கா போயிருந்தால் அது உண்மையென்று நம்பலாம்.
காரணம் எதுவும் கூறப்படாத ஒரு சந்திப்பை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் நடத்திவிட்டு அவசரமாக அமெரிக்கா போய் இலங்கை அரசுக்கு சார்பாக வேண்டுகோள் விடுத்ததை சுவாமியின் தனிப்பட்ட விருப்பாக கொள்ள முடியாது.
அவர் இலங்கை அரசின் தூதுவர் போன்றே செயற்பட்டுள்ளார். இலங்கை அரசின் சார்பிலேயே பேசியுள்ளார்.
அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இலங்கை எதிர்க்கும் என்றும் அது குறித்து அமெரிக்காவுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்த முயற்சிக்காது என்றும் இலங்கை கூறிய நிலையில் தான் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
அரசியல் இராஜதந்திர மட்டங்களில் இவ்வாறு இரட்டை நாக்கு, அல்லது இருநிலை தந்திரோபாயம் கடைப்பிடிக்கப்படுவது ஒன்றும் புதிய விடயமல்ல.
வெளிப்படையாக பேச முடியாது என்று கூறிக்கொண்டே பின் கதவு வழியாக இணக்கப்பாட்டை எட்ட முயற்சிப்பது வழக்கமான தந்திரம் தான்.
இலங்கை அரசாங்கமும் சுப்பிரமணியம் சுவாமி மூலம் அதையே தான் செய்ய முனைந்தது.
சுப்பிரமணியம் சுவாமி வாசிங்டனில் பிளேக்கை சந்தித்து பேச்சு நடத்திய பின்னர் அமெரிக்கா தீர்மான வரைபின் பிரதியை வெளியிட்டது.
அதில் அவரது பரிந்துரைகள் ஏதம் இருக்கவில்லை.
ஆனால் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் நெருக்கமான அதிகாரிகளுக்கும் இடையில் இதுபற்றி பேச்சுகள் தொடர்வதாகவும் இதில் சுமுக இணக்கம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் சுப்பிரமணியம் சுவாமி கூறியிருந்தார்.
தனிப்பட்ட ரீதியாக சுப்பிரமணியம் சுவாமி அமெரிக்காவுக்குச் சென்றிருந்தால் இத்தனை விபரங்கள் அவருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.
இலங்கை அரசின் விருப்பத்துடன் தான் அவர் வாசிங்டன் சென்றுள்ளார் என்பதில் சந்தேகமில்லை.
திடீரென சுப்பிரமணியம் சுவாமி இந்த அரங்கினுள் எப்படி இழுத்து வரப்பட்டார். அவரை இழுத்து வந்தது யார்? இந்தக் கேள்விகள் இப்போது எழுகின்றன.
ஜெனிவாவில் முன்வைக்கும் தீர்மான வரைபு குறித்து அமெரிக்காவுடன் இலங்கை பேசவேண்டும். இணக்கப்பாட்டை ஏற்படுத்த வேண்டும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியிருந்தார்.
இது குறித்து அவர் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் உடன் தனிப்பட்ட முறையிலும் அதிகார பூர்வமாகவும் கலந்துரையாடியுள்ளார்.
கடந்த முறை அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியாவே தலையிட்டு பலவீனப்படுத்தியது.
ஆனால் இம்முறை அவ்வாறு நேரடியாகச் செய்ய முடியாத நிலையொன்று இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது.
ஏனென்றால் அதற்கேற்றவாறு இலங்கை நடந்து கொண்டிருக்கவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவில்லை.
அதைவிட வெளிப்படையாக இலங்கைக்குச் சார்பாக நடந்துகொள்ள முடியாத உள்ளக அழுத்தங்களையும் இந்தியா சந்திக்கிறது.
இந்த நிலையில் எப்படியாவது அமெரிக்காவுடன் இலங்கை பேச்சு நடத்தி ஒரு இணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புகின்றது இந்தியா.
ஆனால் இலங்கையோ நேரடியாக அமெரிக்காவின் காலில் விழத் தயாராக இல்லாத நிலையில் தான் சுப்பிரமணியம் சுவாமி களமிறக்கப்பட்டள்ளார்.
அவரை இந்தக் களத்திற்கு இலங்கை இழுத்து வந்திருக்க வேண்டும் அல்லது இந்தியா கொண்டு வந்திருக்க வேண்டும்.
இலங்கை அரசாங்கத்தை விட அமெரிக்காவுடன் இணக்கத்தை ஏற்படுத்தப்படுவதை இந்தியாவே அதிகம் விரும்பிய சூழலில் தான் அவர் உள்நுழைந்தார்.
சோனியா காந்தி மீது தொடர்ச்சியாக ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் சுப்பிரமணியம் சுவாமி, மன்மோகன் சிங் அரசாங்கத்தை காப்பாற்றுவதற்காக அதன் சார்பில் இந்த முயற்சியில் ஈடுபட முன்வந்திருப்பாரா என்ற கேள்வி உள்ளது.
மன்மோன் சிங் அரசை ஊழல் அரசு என்று அவர் விமர்சித்தாலும் சோனியா காந்திக்கு ஊழலில் பங்கிருப்பதாக குற்றஞ்சாட்டி வந்தாலும் தீவிர இந்திய தேசிய வாதம் என்று வரும்போது சுப்பிரமணியம் சுவாமி அதையெல்லாம் மறந்து விட்டிருக்கக்கூடும்.
அதைவிட சவுத்புளொக்கில் உள்ள புதுடில்லியின் கொள்கை வகுப்பாளர்களுடன் அவருக்கு நெருக்கம் அதிகம்.
மத்திய அரசில் பலமான தலைவர்கள் இல்லாத நிலையில் சவுத்புளொக்கின் சொற்படியே மன்மோகன் சிங் அரசு செயற்படுவதாக ஒரு குற்றச்சாட்டு இந்திய அரசியல் விமர்சகர்களால் முன்வைக்கப்படுகின்றது.
சவுத்புளொக்கில் உள்ள கொள்கை வகுப்பாளர்களின் திட்டப்படியே சுப்பிரமணியம் சுவாமி இந்த விவகாரத்தில் தரகராக உள்நுழைக்கப்பட்டிருக்கலாம். 
எதற்காக சுப்பிரமணியம் சுவாமி தெரிவு செய்யப்பட்டார் என்றால் அவருக்கு அமெரிக்காவுடன் நெருக்கம் அதிகம்.
அமெரிக்காவின் ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் தான் அவர் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றிருந்தார்.
அது மட்டுமன்றி நியூயோர்க்கில் ஐநாவில் உதவிப் பொருளாதார அதிகாரியாகவும் பணியாற்றியவர்.
அமெரிக்கா உளவு அமைப்பான சிஐஏ யின் முகவர் என்றும் கூட ஊடகங்களால் விமர்சிக்கப்பட்டவர்.
அதைவிட விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் விரோதமான செயற்பாடுகளை இவர் மேற்கொள்பவர் என்பது இவரது மேலதிக தகைமை.
இந்தவகையில் தான் சுப்பிரமணியம் சுவாமி இந்தப் பணிக்க கொண்டு வரப்பட்டார்.
கொழும்புக்கு வந்து இவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் பேச்சு நடத்தி விட்டு அமெரிக்கத் தீர்மானத்தை பலவீனப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்ட பின்னர் சுப்பிரமணியம் சுவாமிக்கு எதிராக தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. அவரது அலுவலகம் உடைக்கப்பட்டது. இதெயெல்லாம் அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார் என்று கருத முடியாது. ஆனால் அதைப்பற்றி அவர் கவலைப்படவில்லை. ஏனென்றால் அவரது கட்சி தமிழ்நாட்டில் ஒரு நாடாளுமன்றத் தொகுதியையோ சட்டமன்றத் தொகுதியையோ கைப்பற்றக்கூடிய அளவுக்கு பகலமானதல்ல.
ஒரு பஞ்சாயத்து உறுப்பினர் பதவியைக் கூட அவரது ஜனதா கட்சியால் வெற்றி கொள்ள முடியாது.
எனவே அரசியல் செல்வாக்கு பறிபோகின்றதே என்று அவர் கவலைப்படப் போவதில்லை.
இன்னொரு விடயம் தமிழ் தேசிய வாதத்துக்கு முற்றிலும் எதிரானவர் என்பதுதான் பலருக்குத் தெரிந்த விடயம்.
ஆனால் அவர் ஒரு தமிழரே அல்ல என்பது பலருக்கும் தெரிந்திராத உண்மை.
இவரது தந்தையான சீதாராமன் சுப்பிரமணியம் மதுரையைச் சோ்ந்தவராக இருந்தாலும் தாய் கேரளா, திருச்சூரைச் சோ்ந்த ஒரு மலையாளி.
இவரது தாய்மொழி தமிழ் அல்ல மலையாளம் தான்.
இவர் திருமணம் செய்து கொண்ட றொக்ஸ்னா என்ற பெண் பார்ஷி இனத்தைச் சோ்ந்தவர்.
சிஎன்என், ஐபிஎன் தொலைக்காட்சியில் மூத்த ஆசிரியராக இருக்கும் சுப்பிரமணியம் சுவாமியின் இளைய மகள் சுகாஷினி ஹைதர், இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் சல்மான் ஹைதரின் மகன் நதீம் ஹைதரைத் தான் திருமணம் செய்துள்ளார்.
இவ்வாறு பல இனத் தொடர்புடையவரான சுப்பிரமணியம் சுவாமி தனது செயற்பாடுகளில் ஒரு தமிழராக காட்டிக் கொள்வதில்லை.
வேட்டி சட்டைக்கு மேலாக வட இந்தியர்கள் அணியும் அரை கோர்ட்டை அணிந்து தன்னை இந்தியத் தேசியவாதியாக உருவகப்படுத்திக் கொள்பவர் அவர்.
இவரது பல்வேறு செயற்பாடுகளும் இவரை ஒரு அரசியல் கோமாளியாக தமிழ்நாட்டில் அடையாளம் காட்டியுள்ள போதிலும், பல்வேறு விடயங்களில் குட்டையைக் குழப்புவதில் வல்லவர் என்பதையும் ஆட்சி மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு திடீர் திருப்பங்களுக்கு காரணமானவர் என்பதையும் மறந்து விட முடியாது.
ஆனாலும் சர்வதேச போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தும் வாசகங்களை அமெரிக்கத் தீர்மான வரைபில் இருந்து நீக்கும் இவரது முயற்சி கைகூடியதாகத் தகவல் இல்லை.
ஆனாலும் அவர், இணக்கப்பாடு ஏற்படும் என்று இன்னமும் நம்புவதாக கூறியுள்ளார்.
இவரை யார் இந்தப் பணியில் களமிறக்கினார்களோ அவர்களின் எதிர்பார்பபை அவரால் ஈடுசெய்ய முடிகிறதோ இல்லையோ, தமிழர்களுக்கு தனிமாநிலம் பெற்றுக் கொடுக்கப் போவதாக கூறியதை மட்டும் அவரால் நிறைவேற்ற முடியாது.
ஏனென்றால், இன அடிப்படையிலோ மொழி அடிப்படையிலோ எந்தவொரு நிர்வாக அலகுகளையும் உருவாக்க முடியாது என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறிவிட்ட நிலையில் இவரால் எப்படி அதனை நிறைவேற்ற முடியும்?
ஹரிகரன்

Friday, March 15, 2013

கொதி நிலையில் தமிழகம் இந்தியா எடுக்கப்போகும் முடிவு என்ன..?


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா பிரேரணையைக் கொண்டுவரவுள்ள நிலையில் இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராகத் தமிழகத்திலும், தமிழர்கள் வாழும் ஏனைய மாநிலங்களிலும் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாகப் பாடசாலை மாணவர்கள் அதிகளவில் இம்முறை போராட்டத்தில் குதித்துள்ளனர்.
01. அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை வன்மையாக கண்டிக்கிறோம். ஐ.நா. சபையில் அமெரிக்கா தீர்மானத்தை நிறைவேற்றாதே.
02. இலங்கையில் நடைபெற்றது போர்க்குற்றமோ, மனித உரிமை மீறலோ மட்டுமல்ல திட்டமிட்ட இனப்படுகொலை.
03. சர்வதேச விசாரணையும் போதுவாக்கேடுப்புமே தமிழ் மக்களுக்கான ஒரே தீர்வு சர்வதேச விசாரணையும் தனித் தமிழீழ பொது வாக்கெடுப்பும் நடத்துவதற்கான தீர்மானத்தை இந்திய அரசு முன்மொழிந்து கொண்டுவர வேண்டும்.
04. சிங்கள இனவெறி அரசின் துணைத் தூதரகத்தை தமிழ் மண்ணில் இருந்து வெளியேற்றத் தீர்மானம் கொண்டு வர வேண்டும். மேலும் இந்திய அரசு இலங்கையுடன் அனைத்து அரசாங்க உறவுகளையும் துண்டிக்க வேண்டும்.
05. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கை அரசின் மீது இந்திய அரசு பொருளாரதாரத் தடை விதிக்க வேண்டும்.
06. உலகத் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழ்நாடு அரசு சார்பாக வெளியுறவுத்துறையை உருவாக்க வேண்டும்.
07. ஆசிய நாடுகள் எதுவும் விசாரணைக்குழுவில் இடம்பெறக்கூடாது.
08. தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
09. ஈழத் தமிழர் பிரச்சினைக்கு இந்திய அரசு தீர்வு காணாவிட்டால் தமிழகத்திலிருந்து எந்த வரியையும் செலுத்த
மாட்டோம். இந்தப் பிரச்சாரத்தில் மாணவர்கள் தீவிரமாக ஈடுபடுவோம்.

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி லயோலா கல்லூரியைச் சேர்ந்த எட்டு மாணவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தனர். மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தவரும் வரை தங்கள் உண்ணாவிரதத்தைக் கைவிடப்போவதில்லை என்றும் அவர்கள் கூறிவந்தனர். இவர்களது போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள், தமிழின உணர்வாளர்கள் மற்றும் பிற கல்லூரி மாணவர்கள் உட்பட பெருந்திரளானோர் நேரில் சென்று தமது ஆதரவை வழங்கிவந்தனர்.

இந்நிலையில் ஆதரவு வழங்குவதாகக்கூறி கடந்த ஞாயிற்றுக்கிழமை இனப்படுகொலையை நடத்தியதாகக் குற்றம்சாட்டப்படும் கொங்கிரஸ் மற்றும் அதற்குத் துணைபோன தி.மு.க. உறுப்பினர்கள் அங்கு சென்றபோது அவர்களை விரட்டியடித்துள்ளனர். இதனால் அங்கு சற்றுநேரம் களேபரமும் ஏற்பட்டது. கொங்கிரஸ் தமிழகத் தலைவர்களில் ஒருவரான தங்கபாலு மீது செருப்பு வீசியும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் கடும் சீற்றத்துடன் அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

இச்சம்பவம் நடைபெற்றிருந்த நிலையில், உண்ணாவிரதப் போராட்டம் மூன்று நாட்களைக் கடந்து நான்காவது நாளான நேற்று திங்கட்கிழமை அதிகாலை 1.45 மணியளவில் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக  லயோலா கல்லூரி மாணவர்கள் மற்றும் உடனிருந்த அனைத்து மாணவர்கள் மற்றும் உணர்வாளர்களைக் கைது செய்து, மாணவர்களை ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதித்தனர். மாணவர்களுக்கு ஆதரவாக இருந்தவர்களை அரும்பாக்கம் அருகில் உள்ள சமுதாய நாலக்கூடத்தில் அடைத்துவைத்தனர்.

மேலும், உண்ணாவிரதப் பந்தலை சீல் வைத்ததுடன், உண்ணாவிரதப்பந்தலில் இருந்த நாற்காலிகளைக் காவல்துறையினர் அடித்து நொறுக்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது. மாணவர்களின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல்துறை கூறியுள்ளபோதும், மேலிட அழுத்தம் காரணமாகவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவருகின்றன.  
இதேவேளை, காவல்துறையின் இந்நடவடிக்கைக்கு ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள இராஜபக்சே அரசின் மீது சுதந்திரமான பன்னாட்டு நீதிவிசாரணை நடத்த மனித உரிமைகள் சபை தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அத்தகைய ஒரு தீர்மானத்தை இந்திய அரசே முன் வைக்க வேண்டும் என்றும் சுதந்திரத் தமிழ் ஈழமே ஒரே தீர்வாகும் என்பதால் அதற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதி வழியில் உண்ணாநிலை அறப்போராட்டம் நடத்திய லயோலா கல்லூரி மாணவர்கள் போக்குவரத்துக்கு எவ்வித இடையூறும் இன்றி தனியார் கட்டட வளாகத்துக்குள் தங்கள் அறப்போரை நடத்தினார்கள்.

இப்படி அறவழிப் போராட்டம் நடத்திய எட்டு மாணவர்களை நடுநிசிக்கு மேல் அதிரடியாக வளாகத்துக்குள் நுழைந்த காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அந்த மாணவர்களை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றுள்ளனர். அங்கிருந்த 200 கல்லூரி மாணவர்களையும் காவல்துறை கைது செய்திருக்கிறது.

அந்த இரவு வேளையில் மாணவர்களுக்குப் பாதுகாப்பாக இருந்த மறுமலர்ச்சி தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா தென்சென்னை மாவட்டச் செயலாளர் வேளச்சேரி மணிமாறன் அகில இந்திய மாணவர் சங்க தமிழ் மாநிலச் செயலாளர் திருமலை மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி திரைப்பட இயக்குநர்கள் கௌதமன் களஞ்சியம் ராம் மற்றும் வழக்கறிஞர் அங்கையற்கண்ணி எழுத்தாளர் கென்னடி மாணவர் தலைவர்கள் அருண்சோரி பிரபாகரன் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உண்ணாநிலை அறப்போர் நடத்துவது ஜனநாயக உரிமையாகும். அந்த அடிப்படை உரிமையை நசுக்கும் விதத்தில் காவல்துறை மாணவர்களைக் கைது செய்ததற்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். மாணவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதேவேளை, லயோலாக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில், நேற்றுக் காலை திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள ஜோசப் கல்லூரி மாணவர்கள் அதே கோரிக்கைகளை முன்வைத்து காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, பொன்னேரி எல்.என்.ஜி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள், கும்பகோணம் அரசு ஆண்கள் கலைக்கல்லூரி மாணவர்கள், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் உட்பட தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன. இது தமிழ்நாடு முழுவதும் பரவும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.  
மாணவர்களின் போராட்டம் அறவழியில் தொடர்ந்துகொண்டிருக்கையில், தமிழின உணர்வாளர்களால் சிறீலங்காவின் நிறுவனங்களுக்கு எதிரான தாக்குதல்களும் அதிகரித்து வருவதாகத் தெரியவருகின்றது. சிறீலங்காவின் விமான சேவை நிறுவனங்கள் தாக்கப்பட்ட நிலையில் தற்போது, சிறீலங்கா நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இன்று தமிழகம் முழுவதும் கடையடைப்புப் போராட்டம் நடத்த தி.மு.க. அழைப்பு விடுத்திருந்தது. எனினும் தி.மு.க.வின் போலிப் போராட்டத்திற்கு ஆதரவு கிடைக்கவில்லை என்று தெரியவருகின்றது. இதேவேளை, இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்த ஸ்டாலின் பிரச்சாரத்தில் உண்மையில்லை என சனல்-4 தொலைக்காட்சியின் பணிப்பாளரும், இலங்கையின் கொலைக்களம் காணொளியின் தயாரிப்பாளருமான கெல்லம் மெக்ரே தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர்களின் விடயத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்காக, அதன் உப தலைவர் மு.க.ஸ்டாலினை, மெக்ரே பாராட்டியதாக, திமுக பிரசாரம் செய்து வந்தது. கடந்த வாரம் தி.மு.கவின் ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடைபெற்ற போது, கட்சி சார்பில் உரையாற்றி இருந்த உறுப்பினர் ஒருவர் இதனைத் தெரிவித்தார். இதனை மு.க ஸ்டாலினும் ஆமோதித்தார். இது தொடர்பில் கெலம் மெக்ரேயின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் வாசகர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதில் வழங்கியுள்ள கெல்லம் மெக்ரே, எல்லா நன்மனம் படைத்தவர்களும், இலங்கை தமிழர்களுக்கான நீதியும், நியாயமும் கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.

ஆனால் தாம் தனிப்பட்ட எந்த கட்சியையும் இதற்காக பாராட்டவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தி.மு.க இலங்கை விடயத்தை வைத்து தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது என்பது புலனாகிறது.
இந்நிலையில், மத்திய அரசில் தி.மு.க. அமைச்சர்கள் அங்கம் வகித்துக் கொண்டிருக்கும் அதேவேளையில் மத்திய அரசுக்கெதிராக தி.மு.க வெளியில் போராடுவது என்பது நம்பகத்தன்மைக்கு உரியது அல்ல என தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,  இந்திய அரசு உண்மையில் ஈழப் பிரச்சினைக்கு துரோகம் செய்கிறது என கருணாநிதி உணர்வது உண்மையானால் அமைச்சரவையில் இருந்து தனது அமைச்சர்களை திரும்பப் பெற்றுக்கொண்டும் மத்திய ஆட்சிக்கு தி.மு.க. அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெற்றுக்கொண்டும் போராட வேண்டும். இல்லையேல், அவர் நடத்தும் நாடகங்களில் இதுவும் ஒன்றாகிவிடும்.

ஐ.நா. மனித உரிமைக் குழுவின் ஆணையர் நவநீதம்பிள்ளையே தனது அறிக்கையில் இலங்கை நடத்திய போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகத்தன்மை வாய்ந்த சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு கரம் நீட்ட வேண்டிய மத்திய அரசின் நடவடிக்கைகள் நம்மை வேதனைத் தீயில் ஆழ்த்தியுள்ளன. வெந்தபுண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப் போல வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் ஈரமில்லாத வகையில் உரையாற்றியிருக்கிறார். நமக்காகப் போராட வேண்டிய தளபதி எதிரிப்படையின் முன்வரிசையில் நின்று அவர்களுக்கு ஆலோசனைகளை வாரி வழங்கியிருப்பதைப் போலத்தான் அவரின் உரை அமைந்துள்ளது என தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே அவர் வெளியிட்ட அறிக்கையில் ஈழப்பிரச்சினையில் கொங்கிரஸ் கட்சி மற்றும் மத்திய அரசின் போக்கினை தொடர்ந்து மௌனமாக பார்த்துக் கொண்டிருக்க இயலாத நிலை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்றும் எச்சரித்திருக்கிறார். முதல்வர் பதவியில் இருந்தபோது கூறாத வகையில் மத்திய அரசின் மீது கண்டனம் தெரிவிக்க இப்போதாவது அவர் முன் வந்துள்ளார்.

காலம் கடந்து மத்திய அரசுக் கெதிராக நடத்தும் மாநாடுகள், போராட்டங்கள் போன்றவை யாருக்கெதிராக என்பதுதான் மக்கள் முன்னால் உள்ள கேள்வியாகும். மத்திய அரசில் தி.மு.க. அமைச்சர்கள் அங்கம் வகித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் மத்திய அரசுக்கெதிராக திமுக வெளியில் போராடுவது என்பது நம்பகத்தன்மைக்கு உரியது அல்ல.

இந்திய அரசு உண்மையில் ஈழப் பிரச்சினைக்கு துரோகம் செய்கிறது என கருணாநிதி உணர்வது உண்மையானால் அமைச்சரவையில் இருந்து தனது அமைச்சர்களை திரும்பப் பெற்றுக் கொண்டும் மத்திய ஆட்சிக்கு திமுக அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெற்றுக்கொண்டும் போராட வேண்டும். இல்லையேல், அவர் நடத்தும் நாடகங்களில் இதுவும் ஒன்றாகிவிடும் என்று அவர் கூறியுள்ளார்.

நிலைமை இவ்வாறிருக்க, ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இந்தியா எடுக்கப்போகும் முடிவு குறித்த கேள்விகள் பலமாக எழுந்துள்ளன. இதற்கிடையே கடந்தமுறை போன்று இம்முறையும் அமெரிக்கப் பிரேரணையில் கொங்கிரஸ் அரசு மாற்றங்களைச் செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின்றன.

குறிப்பாக ‘ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, மனித உரிமைகள் சபைக்கு சமர்பித்த அறிக்கையின்படி இறுதிப் போரில் பன்னாட்டுச் சட்டங்கள் மீறப்பட்டது தொடர்பாக சுதந்திரமான பன்னாட்டு விசாரணை ஒன்று வேண்டும் என்றார். இதற்காக சிறப்பு அதிகாரிகள் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்பவும் வலியுறுத்தியிருந்தார். இந்த விடயத்தில் இந்தியா மாற்றங்களைச் செய்துள்ளதாக அறியவருகின்றது.

அதாவது, ஐ.நா. மனித உரிமைகள் சபையின் சிறப்பு நடைமுறை அதிகாரத்துடன் செயற்படுவோர் சிறீலங்கா அரசின் சம்மதத்துடனும், கலந்தாலோசனையுடனும் மட்டுமே செயற்படலாம் என்ற சொற்பதத்தை பிரேரணையில் இந்தியா இணைக்க வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, கடந்தமுறை போன்று சிறீலங்காவை அடித்துக் காப்பாற்றும் நடவடிக்கையையே இந்தியா செய்யமுயன்றுள்ளதாக அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே, கடந்த முறைபோன்று பிரேரணையில் மாற்றங்களைச் செய்து சிறீலங்காவைப் பாதுகாப்பதுடன், எந்தவொரு தாக்கத்தையும் மகிந்த அரசுக்கு ஏற்படுத்தாத பிரேரணையை ஐ.நா. மனித உரிமைகள் சபையில் ஆதரித்து வாக்களிப்பதன் ஊடாக தமிழகத்தினது ஆதரவைப் பெறுவதுமே இந்திய மத்திய அரசின் திட்டமா என்ற கேள்வியே எழுந்துள்ளது.