Showing posts with label கே.பி. Show all posts
Showing posts with label கே.பி. Show all posts

Monday, June 21, 2010

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன் - கே.பி

சிறீலஙகா அரசுக்கு ஆதரவளித்து அமைதியைக் கட்டியெழுப்ப தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வந்திருப்பதாகவும், இதனை தான் வரவேற்பதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரான கே.பி அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

கொழும்பின் ஆங்கில வார ஏடான சண்டே ஒப்சேவருக்கு செவ்வி வழங்கியிருந்த பத்மநாதன், தானும், கனடா, சுவிற்சர்லாந்து, யேர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் என்ற பெயரில் இயங்கி வரும் 9 பேருடன் இணைந்து அரசுக்கு ஆதரவாக மீள் கட்டுமானப் பணிகளில் ஈடுபட இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

இந்த செவ்வியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பற்றிக் கூறிய அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைதியை நிலைநாட்டுவதற்கு சிறீலங்கா அரசுடன் இணைந்து செயலாற்ற எடுத்திருக்கும் முடிவை தான் வரவேற்பதாகக் கூறியிருக்கின்றார்.

தமிழ் மக்களின் வாக்குகளின் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் இணைந்து செயலாற்றுவது பற்றியோ, எந்த அடிப்படையில் என்ன விதமாகப் பணியாற்றுகின்றோம் என்பது பற்றியோ, தம்மை தெரிவு செய்த மக்களிற்கு இதுவரை வெளிப்படையாக எதனையும் தெரிவிக்கவில்லை.

பத்மநாதன் கூறியது போன்று அரசுடன் இணைந்து பணியாற்றினால் அது பற்றி மக்களிற்குத் தெளிவுபடுத்தும் கடமையும், கட்டாயமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இருக்கின்றது. இல்லையெனில் பத்மநாதனின் கருத்தை மறுத்து அறிக்கை வெளியிட வேண்டிய கடப்பாடும் உண்டு.

ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் நடைபெற்ற யப்பானின் விவசாய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் யசூசி அகாசி, பசில் ராஜபக்ச, ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் ஆகியோருடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும் கலந்து கொண்டிருந்த போதிலும், தமிழ் ஊடகங்கள் இதனை இருட்டடிப்புச் செய்திருந்ததை பதிவு சுட்டிக்காட்ட விரும்புகின்றது.

ஆக மொத்தத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது சமகால நடவடிக்கை, எதிர்கால செயற்பாடுகள் பற்றி மக்களிற்கு தெளிவாகத் தெரிவிக்க வேண்டிய கடப்பாடு இருப்பதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள அச்சம் காரணமாகவே கடந்த பொதுத் தேர்தலில் தமிழர் தாயகத்தில் 70 வீதமான மக்கள் வாக்களிக்கவில்லை என்பது நினைவு கூரத்தக்கதாகும்.

Friday, May 14, 2010

கொழும்பில் கே.பியின் மாநாடு - உருத்திரகுமாரைப் பலப்படுத்துமாறு சிறீலங்காவுக்கு ஆலோசனை

சிறீலங்கா அரசினால் கைது செய்யப்பட்டாதாகக் கூறப்படும் கே.பி நாளை 15ம் திகதி சனிக்கிழமை இரகசிய மாநாடொன்றை சிறீலங்காவின் தலைநகர் கொழும்பில் நடத்தவுள்ளதாக தெரியவந்துள்ளது.

கொழும்பின் பிரபல விடுதி ஒன்றில் நடைபெற ஏற்பாடாகியுள்ள இந்த மாநாட்டில், புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்தும் கே.பியின் வழி நடக்கும் சில பிரமுகர்களும் பங்கேற்கவுள்ளதாக உறுதியாகத் தெரியவந்துள்ளது.

நாடு கடந்த அரசின் தேர்தலை நடத்தி தமக்கு ஆதரவான பிரதிநிதிகளை வெற்றிபெற வைக்குமாறு இவர் தனது கையாட்களுக்கு கொழும்பில் இருந்து அறிவுறுத்தல்களை வழங்கியிருந்த போதும், மக்கள் இவரது ஆட்களைப் பெருமளவில் தேர்தலில் தோற்கடித்திருந்தனர்.

இது தனது ஏற்பாட்டாளர்கள் மீது கே.பிக்கு சினத்தை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாக நின்று வெற்றிபெற்ற வேட்பாளர்கள் பலர் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு, அந்த இடத்திற்கு நாடு கடந்த அரசுக்கு ஆதரவாக செயற்படுபவர்கள் நிறுத்தப்பட்டு வருகின்றனர்.

எனினும், நாடு கடந்த அரசின் மாநாடு உருத்திரகுமாரனால் அமெரிக்காவில் நடத்தப்படுவதற்கு முன்பாக, தனது முக்கிய பிரதிநிதிகளுக்கு கருத்துக்களை வழங்குவதற்காகவும் அடுத்த கட்டமாக தமதுசெயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பாகவும் இந்த மாநாட்டை கொழும்பில் நடத்தவுள்ளதாக எமக்குகிடைத்த தகவல்களில் இருந்து அறியமுடிகின்றது.

அத்துடன், சிறீலங்காவினால் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் கடத்தப்பட்டதாகவும் கூறப்படும் கே.பி, கொழும்பில் சுதந்திரமாக நடமாடுவதுடன் வெளிநாடுகளில் உள்ள தமது ஆட்களுடன் தொடர்புகளையும் ஏற்படுத்தி வருவது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

இது இவ்வாறிருக்க, வி.உருத்திரகுமாரன் தலைமையில் வெளிநாடுகளில் எடுக்கப்படும் முயற்சிகளைப் பலப்படுத்துமாறு சிறீலங்கா அரசாங்கத்திற்கு பேராசிரியர் றோஹான் குணரட்ண ஆலோசனை வழங்கியுள்ளார். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகள் தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு செவ்வி வழங்கியிருக்கும் பேராசிரியர் றோஹான் குணரட்ண, உருத்திரகுமாரனுடன் சிறீலங்கா அரசாங்கம் சமரசம் செய்து கொள்ள முடியும் என்றும், அதற்காக அவரது தலைமையில் எடுக்கப்படும் முயற்சிகளை சிறீலங்கா அரசாங்கம் பலப்படுத்த வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

எனினும், அருட்தந்தை இம்மானுவேல் அடிகளாரின் தலைமையிலான உலகத் தமிழர் பேரவைமிகவும் ஆபத்தானது என்றும், கடும்போக்கைக் கொண்ட இந்த அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் மறுவடிவம் என்றும், பேராசிரியர் றோஹான் குணரட்ண எச்சரித்துள்ளார்.

இந்த வகையில் உருத்திரகுமாரனின் தலைமையிலான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடாகவேஉலகத் தமிழர் பேரவையை உடைக்க முடியும் என்றும், சிறீலங்கா அரசாங்கத்திற்கு பேராசிரியர் றோஹான்குணரட்ண ஆலோசனை வழங்கியுள்ளார்.