Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

Wednesday, January 08, 2014

தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளான விடுதலைப் புலிகள் தீவிரவாதிகளா..?

விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள், அவர்கள் எங்கிருந்து உருவாகினார்கள், அவர்களின் போராட்ட வரலாறு என்ன, அவர்கள் எதற்காகப் போராடினார்கள்? என்று தெரிந்தும் சில அடிவருடிகள் சந்தர்ப்பத்திற்கேற்ப பச்சோந்திகளாக மாறி.....
... “விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம்” என சிங்களவர்களுடன் சேர்ந்து அறிக்கைகள் விட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
இறுதி யுத்தத்தில் நிராயுதபாணிகளாக அந்த யுத்த களத்திலே நின்றிருந்த போராளிகளையும், பொதுமக்களையும் இனம் காண முடியாத சிங்கள இராணுவம், அங்கே தலைமுடி கத்தரிக்கப்பட்டிருந்த சில பெண் போராளிகளை இனம் கண்டு கைது செய்துதான் அவர்களூடாக அவர்களுக்குத் தெரிந்த மற்றைய போராளிகளை கைது செய்ய முடிந்தது. சில போராளிகள் யுத்த களத்தில் காயம் அடைந்திருந்த வேளையில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சில போராளிகள், சில தளபதிகள் சிங்கள அரசப் படைகளை எதிர்த்து கண்ணுக்கு எட்டும் தூரம் வரை நின்று போராடியிருக்கிறார்கள். சிங்களப்படைகள் நெருங்க நெருங்க துப்பாக்கி ரவைகள் முடியும் வரை நின்று போராடியிருக்கிறார்கள். அவர்கள்தான் அங்கே உடனடியாக கைது செய்யப்பட்டு அந்தந்த இடங்களில் வைத்தே உடனடியாக பழி தீர்க்கப்பட்டவர்கள் ஆவார்கள்..!
உலகில் எந்த யுத்த களத்திலும் அதியுச்ச போர் நடந்து கொண்டிருக்கும் ஒரு குறுகலான சிறிய இடத்தில் வைத்து அந்தப் போராட்ட வேளையிலே யுத்த கோரத்தாண்டவங்களை நேரடியாக எவரும் ஒலிப்பரப்பு செய்து கொண்டிருக்க மாட்டார்கள்.
ஆனால், விடுதலைப் புலிகளோ… கடும் யுத்தம் நடந்து கொண்டிருக்கையில், ஒரு சிறிய சரக்கு வாகனத்தில் வைத்து தவபாலன் (இறைவன்)  என்ற போராளி தான் சுடப்பட்டு இறக்கும் வரை “புலிகளின் குரலை” இறுதி வரை ஒலிக்கச் செய்து கொண்டிருந்தார். அவ்வாறு சில போராளிகளும் பட ஒளிப்பதிவுகள் செய்தமையால்தான் மக்களின் பேரவலங்கள் இன்று உலகின் பார்வைக்கு வந்தது! பின்னால், சிங்கள இராணுவ வீரர்கள் தங்கள் கைகளில் அகப்பட்ட இளைஞர்கள், யுவதிகளையும், சில போராளிகளையும், பன்னிரெண்டு வயதேயான பாலச்சந்திரனையும் சுட்டுக்கொல்வதை தங்கள் கைபேசியூடாக படம் பிடித்து வைத்திருந்ததை சில சுயலாபங்களுக்காக வெளியிட்டிருந்தனர்.
மக்களோடு மக்களாக முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போராளிகளை இனம் காண சிங்களப் படைகளால் முடியாமல் போகவே, சில பொது மக்களை பிடித்து துன்புறுத்தி மிரட்டியதால் அந்த மக்கள் மூலம் சில போராளிகள் இனம் காணப்பட்டார்கள். சிலரை ஒலிபெருக்கிகள் மூலம் “சரணடையுமாறு” அறிவுறுத்தப்பட்டுக் கொண்டிருக்கையில் தங்கள் பெற்றோர்கள், உற்றார் உறவினர்கள் தங்களால் பாதிப்படையக்கூடாது என்பற்காக தாங்களாகவே முன் வந்து சரணடைந்தார்கள். சில போராளிகளுக்குத் தெரிந்தவர்கள், உறவினர்கள் இல்லாததால் அவர்கள் சரணடையாமல் மக்களோடு மக்களாகவே வாழ்கின்றனர். இக்கருத்துக்களை ஏன் இங்கே பதிவு செய்கிறேன் என்றால், “மக்கள் வேறு, புலிகள் வேறு” என்று புலம்பிக் கொண்டிருக்கும் சில சர்வதேச பரப்புரையாளர்களுக்கு தெளிவுபடுத்தத்தான்.
இனியாவது புரிந்து கொள்ளுங்கள்… அங்கே, இறுதிவரை போராடியது அங்கே வாழ்ந்து கொண்டிருந்த ஈழமக்களுக்குச் சொந்தமான புலிகள்தான் என்று! இனி ஒரு போதும் மக்களையும் புலிகளையும் பிரித்து எந்த சக்திகளாலும் இனம் காணமுடியாது!.
இவைகள் ஒரு புறமிருக்க, விடுதலைப் புலிகளின் பலத்தையும், அவர்களுக்கு சர்வதேச ரீதியாக எழுந்த பேராதரவையும் பார்ப்போம்.
இராணுவக் கட்டமைப்புடன் நின்றுவிடாமல்… எந்தவிதமான வெளிநாட்டு உதவிகளுமின்றி எந்த நோக்கத்திற்காக விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்தார்களோ… அந்த நோக்கத்தின் அடிப்படையில் மக்களுக்கு நீதியான, நியாயமான, சுதந்திரமான, பாதுகாப்பான நல்லாட்சி வழங்கும் நோக்கிலே பல அமைப்புக்களையும், பல உள்கட்டுமானங்களையும் உருவாக்கினார்கள். பிறந்த குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அனைவருக்கும் சென்றடையக்கூடிய சகலவிதமான நலத்திட்டங்களையும் உருவாக்கினார்கள்.
காவல்துறையில் இருந்து நீதிமன்றுகள், வங்கிகள், தொலைக்காட்சி சேவைகள், வானொலி சேவைகள், பத்திரிகைகள் என ஓர் அரசாங்கத்திற்குத் தேவையான… இன்னும் ஏராளமான கட்டமைப்புக்களை உருவாக்கியிருந்தனர். உலக வரலாற்றில் தனித்தனி நாடுகள் வைத்து அரசாங்கம் நடத்திக் கொண்டிருக்கும் எத்தனையோ நாடுகள் வறுமை, வரட்சி, உணவுப் பஞ்சம், கலாச்சார சீரழிவு மற்றும் மக்களை கட்டுக்கோப்புக்குள் வைத்திருக்க முடியாமல், அந்த மக்களே அரசைக் கலைத்து ஆட்சிக் கவிழ்ப்பு செய்த வரலாறுகளும் நிறைய உண்டு! இந்த நாடுகளுக்கெல்லாம் பலநாட்டு உதவிகள் கிடைத்தும், தனிநாடு, தனி அரசாட்சி என்று இருந்தும் அங்கு எல்லாக் கொடுமைகளும் இன்றும், இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது!
உலக நாடுகளின் பாரிய உதவிகளுடன் இலங்கை அரசாங்கம் பல தடைகளைப் போட்டு ஒரு சிறுபான்மை இன மக்களை நசுக்கிக் கொண்டு வர, அந்த மக்களே விழிப்படைந்து, எழுச்சியடைந்து எந்த நாட்டு உதவிகளுமின்றி விடுதலைப் புலிகளாக உருவாகி திருப்பித் தாக்கத் தொடங்கி கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக போராடி தமக்கான ஒரு சுதந்திர தேசத்தை உருவாக்கியிருந்தார்கள்.
பூகோள ரீதியாக இந்தியா தவிர வேறு எந்த நாடுகளும் அருகினில் இல்லை. இந்தியா கூட கடல் கடந்துதான் இருக்கிறது! உதவிகள் கேட்டு ஓடவும், உயிரைப் பாதுகாக்க வேறு இடங்களில் போய் பதுங்கிக் கொள்ளவும் எந்தவிதமான பாரிய இடங்களும் இல்லை! ஒரு சிறிய தேசம் அது! அந்தச் சின்னஞ்சிறிய தேசத்தில் துறைமுக வசதிகள் இல்லை, விமானத்தளங்கள் இல்லை, சீரான போக்குவரத்து வசதிகள் இல்லை, எரிபொருள் வளங்கள் இல்லை, எந்தவிதமான மூலவளங்களும் இல்லை..! பல நெருக்கடிகள், பொருளாதாரத் தடைகள், பலநாட்டு மறைமுக அழுத்தங்கள் இன்னும் நிறைய இருந்தும்…. எப்படி உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு ஒரு விடுதலைப் படையை உருவாக்கி முப்படைகளையும் கட்டியமைத்து தனியாக ஒரு தேசத்தை உருவாக்கி (ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொள்ளாதது மட்டும்தான்) தனி அரசாங்கத்தை நடத்திக் காட்ட முடிந்தது?
விடுதலைப் புலிகளை “தீவிரவாதிகள்” என்று விமர்சித்து கொச்சைப்படுத்துபவர்களே…! உங்கள் சுயமூளையுடன் சற்று சிந்தியுங்கள்..!
உலகம் தோன்றிய காலம் முதல் இன்று வரையும் உலகில் எந்த விடுதலை அமைப்புக்களும் விடுதலைப் புலிகள் போல் வளர்ந்ததும் இல்லை!, வாழ்ந்ததும் இல்லை!
இந்த இருபத்தியோராம் நூற்றாண்டுவரை உலகில் எந்த விடுதலை அமைப்பு, விடுதலைப் புலிகள் போல் போராடினார்கள்?
* உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பும் தனக்கென தனியாக இராணுவச் சீருடைகளை அணிந்ததில்லை!
*உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பினரும் தங்களது படை நடவடிக்கைகளுக்கு பெயர் சூட்டி அழைத்ததில்லை!
* உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பினரும் போரில் இறந்த தங்கள் வீரர்களுக்கு தனியாக இடம் ஒதுக்கி கல்லறைகள் (துயிலும் இல்லங்கள்) கட்டியதில்லை!
* உலகில் எந்தவொரு விடுதலை அமைப்பும் முப்பதாயிரத்துக்கு மேற்பட்ட வீரர்களை இழந்ததில்லை!
*உலகில் எந்தவொரு விடுதலை அமைப்பினரையும் உலக அரங்கில் பேச்சுவார்த்தைகளுக்கு சர்வதேச நாடுகள் அழைத்ததில்லை!
* உலகில் எந்தவொரு விடுதலை அமைப்பினருக்கும் ஏராளமான சமூக, போராட்ட, செய்தி இணையத்தளங்கள் இருந்ததில்லை!
* முகநூல்களிலும் (facebook) வேறு சமூக, செய்தி இணையத்தளங்களிலும் தலைவர் பிரபாகரன் பற்றியும், விடுதலைப் புலிகள் போராட்டம் பற்றியும் முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வந்தது போல், வேறு எந்த விடுதலை அமைப்பினர் பற்றியும் பரவலாக செய்திகள் வந்ததில்லை!
* விடுதலைப் புலிகளுக்கு உலகினில் வாழும் அனைத்து தமிழர்களிடமும் இருந்து கிடைக்கப் பெற்ற பெரும் செல்வாக்கு போல், உலகினில் வாழும் வேறு எந்த விடுதலை அமைப்புக்கும் கிடைத்ததில்லை!
* விடுதலைப் புலிகள் தீவிரவாத இயக்கம் என்றால்… எப்படி முப்படைகளையும் கொண்ட மரபுவழி இராணுவமாக வளர முடிந்தது? அது எப்படி சாத்தியாமானது?
* அவர்கள் தீவிரவாதிகள் என்றால், எப்படி மக்களின் பெரும்பலம் அவர்களுக்குக் கிடைத்தது?
பிறகு ஏன் விடுதலைப் புலிகளை முப்பதிற்கும் மேற்பட்ட நாடுகள் சேர்ந்து அழிக்க வந்தன…? அந்த சிறிய தேசத்தில் இருந்து அவர்கள் வளர்ந்த அசுர வளர்ச்சிதான் காரணம்! அவர்களின் வளர்ச்சியை ஜீரணித்துக் கொள்ள முடியாத இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் அவர்களையும், அவர்களின் போராட்டத்தையும் அழித்து விட முடிவு செய்து, போர் தொடுத்து மக்களை துடிக்கத் துடிக்க கொன்று குவித்து, போராளிகளை கொன்றும், சில போராளிகளைக் கைது செய்தும் சகல இடங்களையும் கைப்பற்றினார்கள். ஆனால், அவர்களுக்குக் கிடைத்ததோ விடுதலைப் புலிகளின் சில ஆயுதங்கள் மட்டுமே! அவ்வாறெனில் சில நூற்றுக்கணக்கான தளபதிகளும், பல ஆயிரக்கணக்கான போராளிகளும் எங்கே போனார்கள்? அவர்கள்தான் அங்கிருந்த தமிழ் பேசும் மக்கள் என்பதை இன்றுவரையும் விடுதலைப் புலிகளை “தீவிரவாதிகள்” என்று சொல்லும் பலர் ஏற்றுக்கொள்வதில்லை!
இன்று வரையும் சில சர்வதேச நாடுகளாலும், சில விசக்கிருமிகளாலும் “தீவிரவாதி” என்றழைக்கப்படும் தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒரு தனி மனிதனாக ஒரு விடுதலைப் படையை உருவாக்கி, மக்களுக்கான பல நன்மைகளும், பயன் பெறக்கூடியதுமான பல உள்கட்டமைப்புக்களை உருவாக்கினார்.
அந்த உள்கட்டமைப்புக்கள் பின்வருமாறு:
* தமிழீழ காவல்துறை, குற்றத் தடுப்புக் காவல் துறை, குற்றப் புலனாய்வுப் பிரிவு.
* தமிழீழ வைப்பகம்.
* தமிழர் புனர்வாழ்வுக் கழகம்.
* தமிழர் புனர்வாழ்வு அபிவிருத்திக் கழகம்.
* சமூக பொருளாதார அபிவிருத்தி வங்கி.
* கிராமிய அபிவிருத்தி வங்கி.
* அனைத்துலகச் செயலகம்.
* நந்தவனம் (வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோர்களுக்கான தொடர்பாடல் சேவை மையம்)
* சுங்க வரித்துறை.
* தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்.
* அரசறிவியற் கல்லூரி.
* வன வளத்துறை.
* தமிழீழ நிதித்துறை.
* தமிழீழ நீதித்துறை, நீதிமன்றுகள்.
* கலை பண்பாட்டுக்கழகம்.
* மருத்துவப் பிரிவு.
* திலீபன் சிறப்பு மருத்துவமனை.
* பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை.
* மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு.
* சுகாதாரப் பிரிவு.
* ஆவணப்படுத்தல், பதிப்புத்துறை, வெளியிட்டுப் பிரிவு.
* போக்குவரத்து கண்காணிப்புப் பிரிவு.
* நிர்வாக சேவை.
* அனைத்துலக தொலைத்தொடர்பு செயலகம்.
* மீன்பிடி வளத்துறை.
* விழிப்புக்குழு (கிராமங்களுக்கான இரவுப் பாதுகாப்பு)
* தொழில் நுட்பக் கல்லூரி.
* சூழல் நல்லாட்சி ஆணையம்.
* தமிழீழ பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சித்துறை.
* தமிழீழ விளையாட்டுத்துறை.
* தமிழீழ காலநிலை அறிவுறுத்தல் வாரியம்.
* தமிழீழ போக்குவரவுக் கழகம்.
* மனிதவள செயலகம் (தமிழீழ கிராம சேவகர் பிரிவு).
* வளங்கள் பகுதி.
* மக்கள் தொடர்பகம் (மக்கள் குறை நிறைகளை தலைவரிடம் கொண்டு செல்லும் பிரிவு)
* விலங்கியல் பண்ணைகள்.
* விவசாயத் திணைக்களம்.
* தமிழ்மொழி காப்பகம்.
* தமிழீழ சட்டக்கல்லூரி.
* தமிழீழ கல்விக் கழகம்.
* தமிழீழ கல்வி மேம்பாட்டுப் பேரவை.
* காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் குழந்தைகளுக்கானது).
* செஞ்சோலை (ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கானது).
* செந்தளிர் (ஐந்து வயதிற்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கானது).
* வெற்றிமனை (வலுவிழந்தோருக்கானது)
* அன்பு முதியோர் பேணலகம்.
* இனிய வாழ்வு இல்லம். (காது கேளாத, வாய் பேசாத, பார்வை இல்லாத ஊனமுற்ற சிறுவர் சிறுமிகளுக்கானது)
* சந்தோசம் உளவள மையம் (மனநோயாளிகளுக்கானது).
* நவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த போராளிகளுக்கானது)
* மயூரி இல்லம் (இடுப்பின் கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது)
* சீர்திருத்தப் பள்ளி.
* முரளி முன்பள்ளி (ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆரம்பப் பள்ளி).
* புனிதபூமி மகளிர் காப்புத்திட்டம்
* உதயதாரகை (விதவைகளுக்கானது).
* பெண்கள் மறுவாழ்வு அபிவிருத்தி மையம்.
* பசுமை வேளாண் சேவை (விவசாயிகளுக்கானது).
* எழுகை தையல் பயிற்சி மையம்.
* மாணவர் அமைப்பு.
* பொத்தகசாலை (அறிவு அமுது).
* ஒளிப்பட பதிவுப் பிரிவு. திரைப்பட வெளியிட்டுப் பிரிவு.
* நிதர்சனம் (திரைப்படத் தயாரிப்பு).
* தர்மேந்திரா கலையகம் (திரைப்பட கலைகள் சம்மந்தமானது).
* விடுதலைப்புலிகள் செய்தி இதழ்.
* சுதந்திரப் பறவைகள் (பெண்கள் செய்தி இதழ்).
* ஈழநாதம் (தினச்செய்தி பத்திரிக்கை).
* வெளிச்சம் (மாத சஞ்சிகை).
* நாற்று (மாத சஞ்சிகை).
* பொற்காலம் வண்ணக் கலையகம்.
* அருச்சுனா புகைப்படக் கலையகம்.
* ஒளிநிலா திரையரங்கு.
* புலிகளின் குரல் வானொலி.
* தமிழீழ வானொலி.
* தமிழீழ தேசியத் தொலைக்காட்சி.
* பல சமூக செய்தி இணையத் தளங்கள்.
* தமிழீழ இசைக்குழு.
* காலணி (பாதணி உற்பத்தி மையம்)
* சேரன் உற்பத்திப் பிரிவு.
* சேரன் வாணிபம்.
* சேரன் சுவையகம்.
* சேரன் வெதுப்பகம்.
* சேரன் அரைக்கும் ஆலை (அரிசி உற்பத்தி).
* பாண்டியன் உற்பத்திப் பிரிவு.
* பாண்டியன் சுவையூற்று.
* பாண்டியன் பல்பொருள் வாணிபம்.
* சோழன் தயாரிப்புகள்.
* பொன்னம்மான் உரைவகை வாணிபம்.
* தென்றல் இலத்திரனியலகம்.
* தமிழ்மதி நகை மாடம்.
* தமிழ்நிலா நகை மாடம்.
* தமிழரசி நகை மாடம்.
* அந்திவானம் பதிப்பகம்.
* இளந்தென்றல் குடிவகைப் பிரிவு.
* இளவேனில் எரிபொருள் நிலையம்.
* இளந்தென்றல் தங்ககம் (Lodge).
* 1-9 தங்ககம் (Lodge)
* மருதம் வாணிபம்.
* மருதம் புலால் விற்பனை நிலையம் (மாமிசம்).
* மரமடுவம் (காட்டுமரங்கள், விறகுகள் விற்பனைப் பகுதி).
* கேடில்ஸ் தும்புத் தொழிற்சாலை.
* மாவீரர் அரங்குகள்.
* மாவீரர் நினைவு விளையாட்டு அரங்குகள்.
* மாவீரர் நினைவு வீதிகள்.
* மாவீரர் நினைவு குடியிருப்புத்திட்டங்கள்.
* மாவீரர் போராளிகள் குடும்பநலன் காப்பகம்.
* மாவீரர் நினைவுப் பூங்காக்கள்.
* மாவீரர் நினைவுப் படிப்பகங்கள்.
* மாவீரர் நினைவு நூலகங்கள்.
* மாவீரர் நினைவு விலங்கியல் காப்பகம்.
* மாமனிதர் விருதுகள் (சமூக, பொதுத் தொண்டுகள் செய்வோருக்கானது)
இது தவிர இரணைமடு அறிவியல் நகரில் புதிதாக உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்த தமிழீழ பல்கலைக் கழகம் இறுதி யுத்தத்தினால் கைவிடப்பட்டுள்ளது. இன்னும் பெயர் தெரியாத நிறைய அமைப்புக்கள்.
உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பும் விடுதலைப் புலிகளைப் போல் தங்கள் தேசத்திற்கென “தேசிய மலர்”, “தேசிய மரம்”, “தேசியப் பறவை”, “தேசிய விலங்கு” போன்ற தேசியச் சின்னங்களை வைத்துக் கொண்டதில்லை.
எந்த நாட்டு உதவிகளையும் நம்பாமல், தன் சொந்த மக்களின் பலத்தை நம்பியே போராட்டத்தை ஆரம்பித்தார், தலைவர் பிரபாகரன்! இன்று தலைவர் பிரபாகரன் அவர்களையும், போராளிகளையும் “தீவிரவாதிகள்” என்று வாய் கிழிய கத்தி கொச்சைப்படுத்தி விமர்சனம் செய்து கொண்டிருக்கும் சில விசமிகளிடம் நான் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன்…!
விடுதலைப் புலிகள் தீவிரவாத இயக்கம் என்றால்…. எவ்வாறு மக்களின் பலமும், பேராதரவோடும் மக்களுக்கான உள்கட்டுமானங்களை உருவாக்க முடிந்தது? உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்புக்களும் இவ்வாறான உள்கட்டுமானங்களை உருவாக்கிய சரித்திரம் உண்டா..?
சிங்கள அரசாங்கம் தமிழ்க் குழந்தைகளை அனாதையாக்கியது! பிரபாகரன் அவர்கள் அந்தக் குழந்தைகளுக்குத் தந்தையானார். அப்படித்தான் செஞ்சோலை, காந்தரூபன் அறிவுச்சோலை, செந்தளிர் இல்லம், இனிய வாழ்வு இல்லம் உருவாகியது!
சிங்கள அரசாங்கமானது ஒவ்வொன்றுக்கும் தடைபோட்டு நசுக்கிப் பறிக்கப் பறிக்க… தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒவ்வொன்றையும் பாதுகாக்க பல அமைப்புக்களை உருவாக்கினார். அவைகள்தான் மேற்குறிப்பிட்ட மக்களுக்கான உள்கட்டுமான அமைப்புக்கள். இவர்தான் உங்கள் பார்வையில் தீவிரவாதியா?
மக்களுக்கான கட்டமைப்புக்கள் ஒருபுறமிருக்க…. இராணுவக் கட்டமைப்புக்களைப் பாருங்கள்…
தரைப்படைகள்
* இம்ரான் பாண்டியன் படையணி.
* ஜெயந்தன் படையணி.
* சார்லஸ் அன்ரனி சிறப்புப் படையணி.
* கிட்டு பிரங்கிப் படையணி.
* குட்டிச்சிறி மோட்டார் படையணி.
* இராதா வான்காப்பு படையணி.
* சிறப்பு உந்துகணை செலுத்திப் படையணி.
* விக்டர் கவச எதிர்ப்புப் படையணி.
* சோதியா சிறப்புப் படையணி.
* மாலதி சிறப்புப் படையணி.
* அன்பரசி படையணி.
* ஈருடப் படையணி.
* குறி பார்த்துச் சுடும் படையணி.
* சிறுத்தைப் படையணி.
* எல்லைப்படை,
* துணைப்படை,
* பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவு.
* ஆயுதக்களஞ்சிய சேர்க்கைப் பிரிவு.
* பாதுகாவலர் பிரிவு.
* முறியடிப்புப் பிரிவு.
* காப்டன் முகிலன் நீண்ட தூர விசேட வேவு ரோந்து அணி.
* ஆழ ஊடுருவும் படையணி.
* உந்துருளிப் படையணி
கடற்படைகள்.
* கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு.
* கடல் வேவு அணி.
* சார்லஸ் சிறப்பு அணி.
* அங்கயற்கண்ணி ஆழ்கடல் நீச்சல் அணி (பெண்கள்).
* சுலோஜன் ஆழ்கடல் நீரடி நீச்சல் அணி (ஆண்கள்).
* கடற்சிறுத்தை சிறப்பு அணி.
* சங்கர் படையணி.
* வசந்தன் படையணி.
* சேரன் படையணி.
* பாக்கியன் ஆழ்கடல் தாக்கும் படையணி.
* வான்படை.
* கரும்புலிகள்.
* புலனாய்வுத்துறை.
* வெளியகப் புலனாய்வுப் பிரிவு.
* உள்ளகப் புலனாய்வுப் பிரிவு.
* படையப் புலனாய்வுப் பிரிவு (MI)
* வேவுப் பிரிவு.
* களமுனை முறியடிப்புப் பிரிவு.
* களமுனை மருத்துவப் பிரிவு.
* கணினிப் பிரிவு.
* பொறியியல் பிரிவு.
* விசேட வரைபடப் பிரிவு.
* அரசியல் துறை, பரப்புரைப் பிரிவு, கொள்கை முன்னெடுப்புப் பிரிவு.
* தமிழீழ படைத்துறைப் பள்ளி.
* ஆயுத உற்பத்திப் பிரிவு.
* மின்னணுவியல் சிறப்பு உதவிப் பிரிவு.
* மாவீரர் பணிமனை.
இப்படியானதொரு இராணுவக் கட்டமைப்பை உலகில் எந்த விடுதலை இயக்கமும் கொண்டு வந்ததில்லை! ஆரம்பத்தில் உருவாகும்போது “விடுதலைப் புலிகள்” என்ற அமைப்பாகத்தான் இருந்தார்கள். காலங்களாகி வளர வளர மக்களின் பேராதரவினாலும், மக்களின் முழுப் பலத்தினாலும் “தேசிய இராணுவமாக” வளர்ந்து, ஒரு தேசத்தையே உருவாக்கினார்கள். ஆரம்ப காலங்களில் விடுதலைப் புலிகள் அமைப்பாக இருந்தாலும், இடைப்பட்ட காலங்களில் முப்படைகளையும் கொண்டு ஒவ்வொரு படையணிகளுக்கும் தனித்தனி சீருடையுடன் ஒரு தேசிய இராணுவமாக உலக நாடுகளின் இராணுவங்களுக்கு ஒப்பாக இருந்தார்கள்.
எல்லா நாடுகளிடமும் முப்படைகள் இருந்தது, விடுதலைப் புலிகளிடம் ஒரு படை அதிகமாகவே இருந்தது. அந்த வீரமிக்க படைதான் “கரும்புலிகள்”! உலகில் எந்த நாடுகளிடமும் இல்லாத உயரிய ஆயுதமான, எந்தவிதமான ஆயுதங்களாலும் வெற்றி கொள்ளமுடியாத, எந்தவிதமான ஆயுதங்களோடும் ஒப்பிட முடியாத உயிராயுதமான “கரும்புலிகள்” விடுதலைப் புலிகளிடம் இருப்பது அவர்களுக்கு சிறப்பையும், அதிக பலத்தையும் கொடுத்திருந்தது.
அந்தச் சின்னஞ்சிறிய தேசத்தில் இருந்த விடுதலைப் புலிகளின் படைகளுடன் மோத துணிச்சல் இல்லாத சிங்கள தேசம்தான், முப்பதிற்கு மேற்பட்ட உலக நாடுகளுடன் சேர்ந்து மோதி வெற்றி கண்டதென மார்தட்டிக் கொண்டு திரிகிறது! தமிழர்கள் கவலைப்பட வேண்டிய நேரம் இதுவல்ல…. ஒரு சின்னஞ்சிறிய தேசத்தில் எந்தவித உதவிகளும் இல்லாதிருந்த ஒரு மக்கள் படையுடன் முப்பதிற்கும் மேற்பட்ட உலக நாடுகள் மோதுகின்றன என்றால்… அங்கே தமிழனின் வீரம் எத்தகையது என்பதை ஒவ்வொரு தமிழனும் உணரவேண்டும். அங்கு தமிழனுக்குத்தான் வெற்றி கிடைத்துள்ளது!.
இன்றைய இருபத்தியோராம் நூற்றாண்டில் உலக அரங்கில் தமிழனின் உண்மையான வீரம்தான் முன்னிலை வகிக்கிறது. உலக சரித்திரத்தில் தமிழனுக்கென்று ஒரு குணம், தமிழனுக்கென்று ஒரு வீரம் அழியாமல் இடம் பிடித்துள்ளது! இதை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது! இவ்வாறு தமிழர்களின் வீரத்தை உலக வரலாற்றில் பதிய வைத்த விடுதலைப் புலிகளா… தீவிரவாதிகள்?
தன் சொந்த நாட்டு சிறுபான்மை இன மக்களை, பல நாட்டுப் படைகளோடு உலகில் உள்ள சகல கொடிய ஆயுதங்களாலும் கொன்று குவித்ததால், அது தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்கிறது சிங்கள அரசாங்கத்துடன் சேர்ந்து பயங்கரவாதம் புரியும் வல்லரசுகள்!. அதே சிறுபான்மை இன மக்கள் அரச பயங்கரவாததிற்கு எதிராக உயிர்ப் பாதுகாப்புச் சுதந்திரம் வேண்டிப் போராடினால்; அவர்களைத் “தீவிரவாதிகள்” என்கிறது பயங்கரவாதம் புரியும் மானம் கெட்ட வல்லரசுகள்!.
ஒரு மக்கள் விடுதலைப் போராட்டத்தை “தீவிரவாதம்” “தீவிரவாதம்” என்று சொல்லிச் சொல்லியே நசுக்கிய சர்வதேச நாடுகளே…!
* கணவனைக் கட்டி வைத்து கணவன் கண் முன்னே மனைவியானவளை கதறக் கதற கூட்டமாக கற்பழித்துக் கொன்று விட்டு, பின் கணவனையும் கொன்று புதைப்பதுதான்… உங்கள் ஜனநாயகமா?
* ஆண் பிள்ளைகளையும், பெண் பிள்ளைகளையும் நிர்வாணமாக்கி, கூடவே தாய் தகப்பனையும் நிர்வாணமாக்கி ஒவ்வொருவர் கண் முன்னாலேயே ஒவ்வொருவரையும் கூட்டாகச் சேர்ந்து மாறி மாறி கற்பழித்தும், கட்டிவைத்தும் சுட்டுக் கொல்வதுதான்…. உங்கள் ஜனநாயகமா?.
* பால்குடி பிஞ்சுகளை தாயிடமிருந்து பிரித்து, தாயைக் கற்பழித்துக் கொன்றுவிட்டு அந்தப் பிஞ்சுகளை அனாதையாக்கி தெருத் தெருவாக அலையவிடுவதுதான்…. உங்கள் ஜனநாயகமா?
* மட்டக்களப்பில் வயதிற்கு வந்து ஒரு வாரமே ஆன பதின்மூன்று வயதுச் சிறுமி புனிதவதியை ஏழு சிங்கள இராணுவ காட்டுமிராண்டிப் படைகள் தாயின் முன்னே கதறக் கதற கற்பழித்து அந்தச் சிறுமியை சித்தப் பிரமையாக்கியதுதான்…. உங்கள் ஜனநாயகமா?
* இதேபோல் யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி கிருசாந்தியை கற்பழித்துக் கொன்று புதைத்ததுதான்…. உங்கள் ஜனநாயகமா?
* சமாதான காலத்திலே மன்னார் வங்காலையில் அதிகாலை ஒரு வீட்டிற்குள் புகுந்த சிங்களக் காட்டுமிராண்டிப் படைகள் அங்கே குடும்பத்தோடு தூங்கிக் கொண்டிருந்த இளம் தாயை கற்பழித்துக் கொன்று விட்டு, தந்தையையும் கொலை செய்து விட்டு, அவர்களின் இரண்டு பிஞ்சுப் பாலகர்களையும் உயிரோடு தூக்குக் கயிற்றிலே தொங்க விட்டு கொலை செய்வதுதான்….. உங்கள் ஜனநாயகமா?
* வள்ளிபுனத்திலே 53 செஞ்சோலை பாடசாலைப் பிஞ்சுகளை வானத்தில் இருந்து விமான மூலம் குறி தவறாமல் வேண்டுமென்றே குண்டு வீசி சதைப் பிண்டங்களாக… துண்டு துண்டுகளாக சிதைத்துக் கொன்று குவித்து இரத்தத்தில் குளிக்க வைத்ததுதான்…. உங்கள் ஜனநாயகமா?
* சுற்றிவளைப்பு என்ற பெயரில் சிங்களப் படைகள் கிராமங்களுக்குள் புகுந்து பல பெண்களின் கற்பை சூறையாடி அவர்களின் உயிர்ப்பையினை நிரப்பி… அப்பன் பெயர் தெரியாத குழந்தைகளைக் கொடுத்தும், பருவமாகத பள்ளிச் சிட்டுக்கள் முதல் பால் மடி வற்றிப்போன வயதான பெண்கள் வரை காமக்குருடர்கள் போல் அவர்களைப் பிடித்து கூட்டத்தோடு தெரு நாய்களைப்போல் மாறிமாறி கற்பழித்து கொன்று விட்டு மலசல கழிவுத் தொட்டிகளுக்குள்ளும், பாழாங் கிணறுகளுக்குள்ளும் மூழ்கடித்து முகவரி தெரியாமல் அழித்துத் தொலைப்பதுதான்… உங்கள் ஜனநாயகமா?
* வல்வைப் படுகொலைகள் , சாவகச்சேரிப் படுகொலைகள், அளவெட்டிப் படுகொலைகள், அல்லைப்பிட்டிப் படுகொலைகள், மண்டைதீவுப் படுகொலைகள், குமுதினிப்படகுப் படுகொலைகள், சத்துருக்கொண்டான் டிப்போ படுகொலைகள், நவாலிப் படுகொலைகள், நாகர்கோவில் பாடசாலை படுகொலைகள், பொத்துவில் படுகொலைகள், கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள், சம்பூர் படுகொலைகள், வீரமுனைப் படுகொலைகள் மற்றும் கிழக்கு மாகாணப் படுகொலைகள் என்று எண்ணற்ற படுகொலைகளை ஊர் ஊராக… கிராமம் கிராமமாக… தெருத் தெருவாக தமிழர்களைப் பிடித்து துடிக்கத் துடிக்க கொன்று குவித்து மண்ணுக்குள் உரமாக்கியதுதான்… உங்கள் ஜனநாயகமா?
* உயிரற்ற உடலைக்கூட விட்டு வைக்காமல் கற்பழித்து விட்டு, பின் அந்த உயிரற்ற உடலின் அந்தரங்க உறுப்புக்களை வெட்டியும், சிதைத்தும் அலங்கோலமாக்குவதுதான்….. உங்கள் ஜனநாயகமா?
* இறுதி யுத்தத்தில் பாதுகாப்பு வலயத்திற்குள் வரவழைத்து எரிகுண்டுகளையும், நச்சுக் குண்டுகளையும் போட்டு கூண்டோடு துடிக்கத் துடிக்க கொன்று குவிப்பதுதான்…. உங்கள் ஜனநாயகமா?.
* உயிரைப் பாதுகாக்க பதுங்கு குழிக்குள் ஒழிந்தவர்களையும், இந்த உலகை பார்க்கும் முன்னே தாயின் கருவறைக்குள் பிஞ்சுக் குழந்தைகளையும் கொன்று புதைப்பதுதான்….. உங்கள் ஜனநாயகமா?
* இறுதி யுத்தத்தில் கைதான பொதுமக்களை போராளிகள் என்ற பெயரில் விசாரணை என்று அழைத்துச் சென்று ஆண்களை கொலை செய்து மூடி மறைத்தும்… பெண்களை கூட்டத்தோடு கற்பழித்து, சிலரை கொலை செய்தும், வேறு பலரை கட்டாய விபச்சாரியாக்கி விலை பேசி விற்றுத் தீர்த்ததுதான்…. உங்கள் ஜனநாயகமா?
* கைது செய்து கொலை செய்த ஆண்களின் மனைவிமாரிடம், அவர்கள் கணவர்மார்கள் உயிரோடு இருப்பதாக அவர்களின் பெயரைச் சொல்லி இன்றும் கூட காமவித்தைகளை அரங்கேற்றி விளையாடிக் கொண்டிருப்பதுதான்… உங்கள் ஜனநாயகமா?
 *  ஈழத்தமிழன் ஒழிந்துகொள்ள இடமேதுமில்லாமல் அலைந்து அலைந்து இறுதியில் நிராயுதபாணிகளாக அரச படைகளிடம் அடைக்கலமாக அவர்களை வயது வித்தியாசமின்றி கொன்று குவித்து களைத்துப் போய் முடியாமல் காயப்பட்டவர்களையும், கையில் அகப்பட்டவர்களையும் செத்த பாம்பினைப் போல் கைகளைக் கட்டி வரிசையாக தெருக்களில் விறகுபோல் அடுக்கி வைத்து கவச வாகனங்களால் மிதித்து துடிக்கத் துடிக்க சாகடித்தீர்களே…. இதுதான் உங்கள் ஜனநாயகமா?
இப்படியாக….
மேற்கண்ட கொடுமைகள் எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ள முடியாத மக்கள், தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஆயுதம் ஏந்தி போராடி தங்களை தற்காத்துக் கொண்டால்…. அவர்கள் உங்கள் பார்வையில் தீவிரவாதிகளா?
அவ்வாறெனில்….
உங்கள் பார்வையில் விடுதலைக்காக ஆயுதம் வைத்துப் போராடும் மக்கள் “தீவிரவாதிகள்” என்றால்…. கொடிய ஆயுதங்களை வைத்து மக்களை அநியாயத்திற்கு கொன்று குவிக்கும் அரசாங்கம் “தீவிரவாத அமைப்பாகத்” தெரியவில்லையா?
மாறாக… விடுதலைப்புலிகள்

ஒரு சிங்களப் பெண்ணைக் கற்பழித்திருந்தாலோ…..
சிங்கள மக்களைக் கொன்று குவித்திருந்தாலோ….
அல்லது, வேறு சில அமைப்பினர்போல் நிராயுதபாணிகளாக செய்தி சேகரிக்கச் சென்ற ஒவ்வொரு பத்திரிகையாளர்களையும் பிடித்து தலைகளை தனியாக அறுத்தெடுத்து படம் பிடித்துக் காட்டியிருந்தாலோ….
நீங்கள் சொல்லலாம், அவர்கள் பயங்கரமான தீவிரவாதிகள் என்று..!
எது ஜனநாயகம்….? எது தீவிரவாதம்….? யார் தீவிரவாதி….? யார் ஜனநாயகவாதி….?
அப்படி, அவர்கள் என்ன செய்தார்கள்…?
தங்கள் இனத்தை அழித்து மக்களை கொன்று குவித்து வரும் அரச படைகளை மட்டுமே எதிர்த்துப் போராடினார்கள். இவர்கள்தான் உங்கள் கண்களுக்கு “தீவிரவாதிகளாக” தெரிகிறார்களா?
உரிமைகள் மறுக்கப்பட்டு, உணர்வுகள் நசுக்கப்படும் போது, அங்கே தீவிரவாதம் வளர்ந்தே தீரும்! இங்கு “தீவிரவாதம்” என்ற சொற்பதம் “சுதந்திர விடுதலையை” தீவிரமாக வேண்டி நிற்கும் தீவிரவாதமே!!!
தீவிரவாதிகள் என்று சித்தரிக்கப்பட்டு விமர்சிக்கப்படும் விடுதலைப் புலிகள் என்ன, வானத்தில் இருந்து குதித்து வந்தவர்களா? அந்த அரச பயங்கரவாத அடக்குமுறைகளால் ஒடுக்கப்பட்ட மக்கள்தான், தங்கள் உயிர்ப் பாதுகாப்புச் சுதந்திரம் வேண்டி விழிப்படைந்து, எழுச்சியடைந்து விடுதலைப் புலிகளாகத் திருப்பித் தாக்கினார்கள். அந்த மக்கள்தான் விடுதலைப் புலிகள்! விடுதலைப் புலிகள்தான் அந்த மக்கள்!
விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் என்றால்….
குந்தியிருக்க ஒரு வீடில்லாமல், நடந்து திரிய ஒரு தெரு இல்லாமல், முகவரி சொல்ல ஒரு ஊர் இல்லாமல், மொத்தத்தில் உயிரோடு, பாதுகாப்போடு வாழ ஒரு சுதந்திரமான நாடு இல்லாமல்….. நாடு நாடாக அலைந்து சுதந்திர விடியலைத் தேடிக்கொண்டு தமக்கான ஒரு தேசத்தை உருவாக்கி நிம்மதிப் பெருமூச்சுடன் வாழத் துடித்துக் கொண்டிருக்கும்… உலக அரங்கில் புலம்பெயர்ந்து வாழும் அனைத்து தமிழர்களும் தீவிரவாதிகள்தான்!
இன்றும், என்றும் தமக்கான ஒரு விடியல், தமக்கான ஒரு சுதந்திர தேசம் கிடைக்கும் வரை தாயகத்திலும் சரி, தமிழகத்திலும் சரி, புலம்பெயர் தேசங்களிலும் சரி எங்கெல்லாம் தமிழர்கள் சுதந்திர விடியலுக்காக தீவிரமாக இறங்கி போராட்டங்களை நடத்துகின்றார்களோ…. அங்கே வாழுகின்ற தமிழர்கள் அனைவரும் தீவிரவாதிகள்தான்!
இதற்கு எதிர்மாறாக விடுதலைப் புலிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி விமர்சனம் செய்பவர்கள், அவர்கள் யாராக இருந்தாலும்; அவர்கள் மானம், வெட்கம், சூடு, சொரணை, மனச்சாட்சி அற்ற தமிழ்ப் பிறப்புக்களே! வேற்று மொழியர்களாக இருந்தால்…. அவர்கள் “பயங்கரவாதம்”, “தீவிரவாதம்”, “சுதந்திர தாகம்” , “விடுதலைப் போராட்டம்” போன்ற சொற்பதங்களின் உள்ளர்த்தம் தெரியாத முட்டாள்களாக இருப்பார்கள்!
விடுதலைத்தீ என்பது அனைத்து தமிழ் பேசும் மக்கள் மனதிலும் எரிந்து கொண்டிருக்கிறது! எந்த, தமிழ் பேசும் மக்களின் மனதில் விடுதலைக்கான தீ எரிகிறதோ….. அவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள்தான் என்பதை சிங்கள அரசும், சர்வதேசமும் மறந்து விடக்கூடாது!
விடுதலைத் தீ என்பது எளிதில் அணைந்து விடாது! யாரும் அணைக்கவும் முடியாது! அந்தத் தீ எதற்காக எரிய ஆரம்பித்ததோ அதை அடையும் வரை எரிந்து கொண்டே இருக்கும். அதுவரையும் விடுதலைப் புலிகளும் வளர்ந்து கொண்டே இருப்பார்கள்!
- வல்வை அகலினியன் ( akaliniyan@yahoo.com)

Sunday, October 20, 2013

யாழில் அமைச்சர் மகேஸ்வரனால் அமைத்துக் கொடுக்கப்பட்ட மக்கள் குடியிருப்பில் பாரிய இராணுவ முகாம்


யாழ்.காக்கைத்தீவு, கல்லுண்டாய் வெளிப் பகுதியில் காலஞ்சென்ற அமைச்சர் மகேஸ்வரனால் அமைத்துக் கொடுக்கப்பட்ட மக்கள் குடியிருப்பினை ஆக்கிரமித்துள்ள இராணுவத்தினர் அங்கு பாரிய இராணுவ முகாமினை அமைத்து வருகின்றனர்.

மேற்படி பகுதியில் இருந்த ஒரு குடும்பத்தினையும் அங்கிருந்து வெளியேற்றிவிட்டு முழு வீச்சில் இராணுவ முகாம் அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கொழும்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மகேஸ்வரன் இந்து கலாசார அமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த 2002 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் யாழ்.மாவட்டத்தில் சொந்த வீடுகள், காணிகள் இல்லாதவர்களைத் தெரிவு செய்து அவர்களுக்கு யாழ்.காக்கைதீவு – கல்லுண்டாய் வெளிப் பகுதியில் வீட்டுத்திட்டத்தினை அமைத்துக் கொடுத்திருந்தார்.
மேற்படி வீட்டுத்திட்டத்தில் சுமார் 25 ற்கும் மேலாக கல் வீடுகள் அமைக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டிருந்தது. காலப்போக்கில் குடிநீர்ப் பிரச்சினை காரணமாகவும், நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாகவும் அங்கிருந்த மக்கள் இடம்பெயர்ந்து சென்றனர்.
இறுதி யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னரும் மேற்படி வீடுகளில் இரண்டு குடும்பங்களைக் கொண்ட 14 பேர் வசித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அங்கு சென்ற இராணுவத்தினர் அங்கிருந்த குடும்பங்களிடம், மேற்படிப் பகுதியில் புதிய இராணுவ முகாமினை அமைக்கப் போவதாகவும் இதனால் அங்கிருந்து வெளியேறுமாறும் கூறியுள்ளனர்.
இதனையடுத்து அங்கிருந்த ஒரு குடும்பத்தினர் வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்து சென்றுள்னர். மேலும் மற்றுமொரு குடும்பத்தினர் அங்குள்ள உடைந்த வீட்டில் தங்கியுள்ளனர்.
இதனையடுத்து அங்கு நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் பனை ஓலையினால் காணி எல்லை வேலிகளை அடைத்து பாதுகாப்பினைப் பலப்படுத்தியுள்ளனர்.
இதுமட்டுமல்லாமல் அங்கு ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த வீடுகள் புனரமைக்கப்பட்டு வருகின்றது. புதிதாக குடிநீர் தாங்கிகள் அமைக்கப்பட்டுள்ளது. மலசல கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Tuesday, October 15, 2013

புலிகளுக்கு உதவிய சுவிஸ் பிரஜை சட்டத்தரணி கே.வி. தவராசாவின் கடும் வாதத்தால் கொழும்பில் விடுதலை


தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவி வழங்கியதாக சுவிஸ் பிரஜை நடராஜா கருணாகரன் மீது  குற்றம் சாட்டப்பட்டு, சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசாவின் வாதத்தையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சுவிஸ் பிரஜையும் பேர்ண் மாநிலத்தில் தாய் வீடு பணமாற்று நிறுவனத்தின் உரிமையாளருமான நடராஜா கருணாகரன் புலிகளுக்கு நிதி உதவி வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அரசதரப்பு சாட்சியங்களையும் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தையும் நிராகரித்த மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஜயசுரிய சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசாவின் வாதத்த்தையடுத்து நடராஜா கருணாகரனை விடுதலை செய்தார்.
நடராஜா கருணாகரன் இலங்கை வங்கியுடன் பணமாற்று வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட இலங்கை வங்கியின் வேண்டுகோளையடுத்து, இலங்கை வந்து இன்டர் கொண்டினன்ட் ஹோட்டலில் தங்கியிருக்கையில், 2010ம் ஆண்டு நவம்பர் மாதம் 19ம் திகதி பயங்கரவாதத் தடைப்பிரிவுப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டார்.
பயங்கரவாதத் தடைப்பிரிவுப் பொலிசாரினால் கைது செய்யப்பட்ட கருணாகரன் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதியின் தடுப்புக் காவல் உத்தரவின்  கீழ் தடுத்து வைக்கப்பட்டு பொலிசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா நடராஜா கருணாகரனின் கைதும் தடுப்புக் காவலும் சட்டரீதியற்றதென உயர்நீதிமன்றில் அடிப்படை மனித உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்தார்.
அதைத் தொடர்ந்து, 2007ம் ஆண்டு தை மாதத்திற்கும் மார்கழி மாதத்திற்கும் உட்பட்ட காலப்பகுதியில் அரச விரோத எல் ரீ ரீ ஈ இயக்கத்திற்கு 228 மில்லியன் ரூபா நிதி உதவி பெற்றுக் கொடுத்து அவ் இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு உடந்தையாய் செயல்பட்டதாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் தண்டனை வழங்கக் கூடிய 2(1) (ஏ) பிரிவின் கீழ் குற்றச் சாட்டுப் பத்திரம் கொழும்பு மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரினால்  2013ம் தை மாதம் 11ம் திகதி தாக்கல் செய்யப்பட்டது

2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28.29ம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த வழக்கில் சட்டமா அதிபரினால் அரச சாட்சிகளாக நடராசா கருணாகரனிடம் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெற்ற பொலிஸ் அதிகாரி ஜகத் பொன்சேகா குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை மொழி பெயர்த்த உதவிப் பொலிஸ் பரிசோதகர் சியாப்டீன் பொலிஸ் தட்டெழுத்தாளர் லலிதா ஆகியோர் சாட்சியமளித்தனர்.
 இந்த சாட்சிகள் எதிரி தரப்பில் ஆஜராகிய சிரேஸ்ட சட்டத்தரணியினால் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர்,  நடராசா கருணாகரன் சுயவிருப்பத்தில் பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் பொன்சேகாவிற்கு வழங்கியதாக அரசு தரப்பினால் முன் வைக்கப்பட்ட முக்கிய சான்றான குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சுயமாக வழங்கப்பட்டதா அல்லது பொலிஸ் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தடுப்புக் காவல் கைதியான நடராசா கருணாகரனின் சுயவிருப்பமின்றி பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலமா என்பதற்கான உண்மை விளம்பல் விசாரணையின் தீர்ப்பை வழங்கிய மேல் நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவு செய்த பொலிஸ் அத்தியட்சகர் இந்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை எதிரி சுயவிருப்பத்தில் தனக்கு வழங்கியதாக சாட்சியமளித்துள்ள போதிலும் எதிரி தரப்பு சட்டத்தரணியின் குறுக்கு விசாரணையில் பொலிஸ் அத்தியட்சகரின் சாட்சியத்தில் பல முரண்பாடுகள் காணப்படுகின்றது.
குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பதியப்படுவதற்கு முன்னரும் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பதியப்பட்ட பின்னரும் மொழி பெயர்ப்பாளராக கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் சியாப்டீன் எதிரி தமிழில் கூறியதை சிங்களத்தில் பொலிஸ் அத்தியட்சகருக்கு; மொழி பெயர்த்ததில்  பல குறைபாடுகள் காணப்படுகின்றமையை சுட்டிக்காட்டினார்.
குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பதியப்பட்ட பின்னர் பதிவின் இறுதியில் மொழி பெயர்ப்பாளர் சியாப்டீன் மொழி பெயர்த்ததாக ஒப்புறுதிப்படுத்தி கையொப்பம் இடவில்லை என்பதையும் எதிரி தரப்பு சட்டத்தரணி குறுக்கு விசாரணையில் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.
15 வருடங்கள் பயங்கரவாதத் தடைப் பிரிவில் கடமையாற்றி 50 மேற்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களுக்கு மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றிய மொழிபெயர்ப்பாளர் சியாப்டீன் குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை மொழி பெயர்த்ததாக ஒப்புறுதிப்படுத்தி கையொப்பம் இடாமை சந்தேகத்தை உருவாக்கியுள்ளது.
தட்டெழுத்தாளரான லலிதா குறுக்கு விசாரணையில் பொலிஸ் அத்தியட்சகர் கூறியவற்றை தான் தட்டெழுத்து செய்ததாக கூறியுள்ளாரேயன்றி எதிரி கூறியவற்றை தட்டெழுத்து செய்ததாக கூறவில்லை சட்டரீதியாக இந்த குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பதியப்படவில்லை என்பது தெளிவாகின்றது.
அரச தரப்பு சாட்சிகளது சாட்சியங்கள் நம்பகத்தன்மை அற்றைவையாக காணப்படுகின்றமையால் அரசதரப்பு சாட்சியங்களையும் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தையும் நிராகரித்து எதிரியை விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.
எல் ரீ ரீ ஈ இயக்கத்திற்கு நிதி உதவி அளித்ததாக இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் மேல் நீதிமன்றில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் நிரபராதி என வாதாடப்பட்டு நீதிமன்றம் விடுதலை செய்த முதல் வழக்கு இந்த வழக்காகும்.

நீதிக்கான ஒரு விடுதலை வீரனின் சாவு அவன் சாவுடன் நின்று விடுவதில்லை: தமிழீழ மக்கள் பேரவை - பிரான்சு

நீதிக்கான ஒரு விடுதலை வீரனின் சாவு அவன் சாவுடன் நின்று விடுவதில்லை, எமது மாவீரர்களும் தமது சாவுடன் போராட்டம் முடிந்து விடும் என்று நினைக்கவில்லை.


அதே போல் தான் எங்கள் பரிதி அவர்கள் தனது சிறுவயதில் இருந்து தமிழ் மக்களின் நீதியான உரிமைக்கான போராட்டத்தை தமிழீழ மண்ணிலும் விழுப்புண் கண்டு தமிழீழ மண்ணை விட்டு புலம்பெயர நேர்ந்த போதும் தான் எடுத்த சத்திய பிரமாணத்துக்கு அமைய புலம்பெயர் மக்களுடன் சேர்ந்து தமிழ் மக்களின் விடுதலையை மட்டும் நோக்கமாக கொண்டு,
எந்த வித பிரதிபலன்களை எதிர்பார்க்காமால் மண் மீட்பை மட்டும் தம் நோக்கங்களாகவும் இலட்சியமாகவும் வாழ்ந்து உயிர் நீத்த மாவீரர்களில் பரிதி அண்ணனும் ஒருவர்.

அவர் படுகொலை செய்யப்பட்டு ஒரு வருடம் ஆகும் நிலையில், குற்றவாளிகளை தெரிந்தும், இந்த நாட்டு அரசின் நீதி விசாரணை குற்றவாளிகளை, அல்லது குற்றவாளி அரசுகளை பாதுகாக்கும் செயலானது, தாய்நாட்டிலும் புலத்திலும் நீதியை தேடி நீற்கும் எம்மை போன்ற மக்களுக்கு, எங்களுக்கு நீதி வேண்டும் என்ற நோக்கத்தை மேலுயார்த்தி வைக்கிறது.

ஏற்கனவே இதே காலப்பகுதியில் தான் 17 வருடங்களுக்கு முதல் நாதன், கஜன், 2 போராளிகள் இதே பிரான்சு நாட்டில் தமிழ் மக்களுக்கான சேவையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களுக்கான நீதி இதுவரை வழங்கப்படவில்லை.

எமது மண்ணில் 1948 ல் இருந்து தமிழ் மக்கள் ஒரு இனப்படுகொலைக்குள்ளாகி, தமிழ் மண் பறிக்கப்பட்டு, முள்ளிவாய்காலில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எமது உறவுகள் படுகொலை செயப்பட்டார்கள், 1,46,679 எமது சகோதர சகோதரிகளை நாம் இன்றும் தேடிக்கொண்டு இருக்கிறோம்.

ஐக்கிய நாடுகள் சபை தாம் தவறு செய்து விட்டோம் என்று கூறி இருக்கும் தற்போதைய நிலையில், தவறுகள் செய்தால் அவை திருத்தப்பட வேண்டும் என்பதே நியாயம் என்பதற்கமைய இந்நாட்டில் நடைபெற்ற பரிதி, நாதன், கஜன் ஆகியோரின் படுகொலைக்கு நீதியான விசாரணையை மேற்கொண்டு குற்றவாளிகளை நீதிக்கு முன் நிறுத்த வேண்டியது பிரான்சு அரசின் கடமையாகும்.

இதற்கான நீதியை தமிழர்களாகிய நாங்கள் அமைதி காக்காமல் கேட்கவேண்டியது எமது கடமை. அதற்காக ஒரு முறைப்பாட்டு (Petition) உங்களுக்காக, வியாபார நிலையங்களில், பாடசாலைகளில், மற்றும் உங்களிடமும் எமது அங்கத்தவர்கள் எடுத்து வருவார்கள், அதில் நாங்கள் ஒவ்வொருவரும் கையொப்பங்களை இட்டு, பிரான்சு அரசிடம் நீதி கேட்போம்.

அத்துடன் நவம்பர் 8 ஆம் திகதி பரிசு நீதிமன்றத்திற்கு அருகாமையில் உள்ள Place de la Fontaine- Saint Michel என்னும் இடத்தில் பிற்பகல் 1.00 மணிக்கு ஐரோப்பிய தமிழ் மக்களுடன் சேர்ந்து மாபெரும் நீதிக்கான போராட்டப் பேரணி ஆரம்பமாகி பிரான்சு பாராளுமன்றம் முன்றலில் நீதிக்கு குரல் கொடுப்போம்.
அனைத்து தமிழ் மக்களும் கலந்து கொண்டு இப்பேரணியின் மூலம் எமது வலிமையையும், ஒற்றுமையையும் சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டுவோம்.

“ஒரு விடுதலை வீரனின் சாவு, ஒரு சாதாரண மனித நிகழ்வல்ல, அந்த சாவு ஒரு சரித்திர நிகழ்வு, ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெரும் ஆற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை, அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அனைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்று சக்தியாக மாற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது.” (தமிழீழ தேசியத் தலைவர்)

தமிழீழ மக்கள் பேரவை - பிரான்சு

சிவராம் ஞாபகார்த்த மண்டபம் யாழினில் திறப்பு!!

மாமனிதர் தராகி சிவராம் ஞாபகார்த்த மண்டபம் நாளை புதன்கிழமை யாழ்ப்பாணத்தினில் திறந்து வைக்கப்படவுள்ளது.யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டினில் திறந்து வைக்கப்படவுள்ள இம்மண்டபம் ஊடகவியலாளர்களது அறிவு வள மேம்பாட்டிற்கென உருவாக்கப்பட்டுள்ளது.தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலான புகழ் பெற்ற ஊடகவியலாளர்கள் ஊடக பயிற்றுவிப்பாளர்கள் யாழ்ப்பாண ஊடகவியலாளர்களிற்கு இங்கு பயிற்சிகளை வழங்கவுள்ளனர்.

யாழ்.நகரின் இராசாவின் தோட்டம் வீதியினில் திறக்கபடவுள்ள இம்மண்டபத்தினில் நாளைய தினம் உத்தியோகபூர்வமான பயிற்சி நெறியினை பிஸப் சௌந்தரம் ஊடக கற்கை மைய இயக்குநர் வணபிதா றூபன் மரியாம்பிள்ளை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

திறப்பு விழா நிகழ்வினில் வடமாகாணசபை பிரமுகர்கள் மற்றும் மூத்த ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, October 12, 2013

தமிழரசு கட்சி உட்கட்சி ஜனநாயகத்தை பேணத் தவறியுள்ளது: நிகழ்வைப் புறக்கணித்தமைக்கான காரணம் கூறும் ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ


வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள், அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்வினை புறக்கணித்தமைக்கு பதவி அங்கலாய்ப்பே காரணம் என எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை எனவும் மக்களுடைய உணர்வுகளை மதிக்கவும், உட்கட்சி ஜனநாயகத்தை பேணவும் தமிழரசு கட்சி தவறியுள்ளமையினாலேயே அதனைப் புறக்கணித்தோம் என கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் தெரிவித்துள்ளன.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் மற்றும் ரெலோ அமைப்பினர் இணைந்து யாழ்.நகரப் பகுதியிலுள்ள விடுதியொன்றில் பத்திரிகையாளர் சந்திப்பொன்றினை இன்று காலை நடத்தியிருக்கின்றனர்.
குறித்த சந்திப்பிலேயே மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. இச்சந்திப்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாணசபை தேர்தலுக்கு முன்னதாகவும், தேர்தலின் பின்னரும் கூட்டமைப்பிற்குள் உள்ள சகல கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படாமல் தமிழரசு கட்சி தொடர்ந்தும் தான்தோன்றித்தனமாகவே நடந்து கொண்டிருக்கின்றது. இதன் தொடர்ச்சியே அமைச்சரவை தெரிவும்.
குறிப்பாக ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சர்வவேஷ்வரனுக்கு அமைச்சுப் பதவி கேட்டதாக தமிழரசு கட்சி கூறுகின்றது. அதே தமிழரசு கட்சி தகுதி அடிப்படையில் அமைச்சுப் பதவிகளை வழங்கியதாகவும் கூறுகின்றது. எனவே சர்வேஷ்வரன் அரசியல் விஞ்ஞான பட்டதாரி அவர் எவ்வகையில் அமைச்சுப் பதவிக்கு தகுதி அற்றவர்?
அதனைவிட நாம் அதிகாரங்கள் உள்ள ஒரு அமைச்சுப் பதவியை முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வழங்க வேண்டும் என்றே கேட்டிருந்தோம். அதுவும் செய்யப்படவில்லை.
இந்நிலையில் எமது எதிர்ப்பிற்கு காரணம் எமக்கு அமைச்சுப் பதவிகள் தரப்படவில்லை என்பதற்கானது அல்ல. கூட்டமைப்பிற்குள் உள்ள அனைத்துக் கட்சிகளினதும் அங்கீகாரத்துடன் அமைச்சுக்கள் தெரிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதே.
குறிப்பாக கல்வி மற்றும் சுகாதார அமைச்சுக்களை தமிழரசு கட்சி தெரிவு செய்திருந்தது. அதே மாதிரியான உரிமை கூட்டமைப்பிலுள்ள ஏனைய கட்சிகளுக்கும் உள்ளது. அதனையே நாங்கள் கேட்டோம். அதற்காக நாம் பதவிகள் மீது மோகம் கொண்டவர்கள் என்ற அர்த்தம் கிடையாது.
மேலும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொள்வதை மாவை சேனாதிராசா மற்றும் நாம் முற்றாக நிராகரித்தோம். ஏனென்றால் நாமே எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அவர் ஒரு போர்க்குற்றவாளி என குறிப்பிட்டிருக்கின்றோம்.
பிரபாகரன் மாவீரன் என பேசியிருக்கின்றோம் அவ்வாறு பேசியும், எழுதியும் மக்களிடம் வாக்கு பெற்றுவிட்டு ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் ஏற்பது தவறு, எனவே நாங்கள் அதனை சுட்டிக்காட்டினோம்.
மேலும் ஆயுதப் போராட்டங்களில் இருந்து வந்தவர்கள் மீது தொடர்ந்தும் தமிழரசு கட்சி சேறுபூசும் நடவடிக்கையினை செய்கின்றது. சரி பிழைகளுக்கு அப்பால் நாம் இனத்தின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தியவர்கள். எங்கள் மக்களுடைய அபிலாஷைகளை அடைய முடிந்த வழியில் அடைவதற்காகவே நாங்கள் ஜனநாயக வழிக்கு திரும்பினோம்.
எம்மை விமர்சிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. எனவே நாம் தொடர்ந்தும் தமிழ்த் தேசியத்தின் பாதையில் பயணிப்போம். தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்த தொடர்ந்தும் பாடுபடுவோம் என அவர்கள் கூறியுள்ளனர்.

Friday, October 11, 2013

வடமாகாண சபை கூட்டமைப்பு உறுப்பினர்கள், அமைச்சர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் பதவியேற்பு! 8 உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை


வட மாகாண சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.
இன்று காலை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இந்த வைபவம் நடைபெறவுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் முன்னிலையில் உறுப்பினர்களும் அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளனர்.
இன்று காலை யாழ். நகரிலுள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு அஞ்சலி செலுத்தும் உறுப்பினர்கள் அங்கிருந்து வீரசிங்கம் மண்டபத்துக்கு வருகைதந்து பதவியேற்கவுள்ளனர்.
வடமாகாண சபையின் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் கடந்த 7ஆம் திகதி அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இவர் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் கோவில் வீதியிலுள்ள தனது புதிய அலுவலகத்தில் கடமைகளையும் பொறுப்பேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இன்றைய பதவிப் பிரமாண நிகழ்வில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளனர்.
8 உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்கள் இன்று பதவியேற்றனர்.
இன்று காலை 9 மணிக்கு தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு அஞ்சலி செலுத்திய பின் உறுப்பினர்கள் அங்கிருந்து வீரசிங்கம் மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
பின் வீரசிங்கம் மண்டபத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றது.
உறுப்பினர்களின் சத்தியப்பிரமாணத்தை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்களின் உரைகள் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் தமிழ்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் 8 உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களைத் தவிர்ந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை என்றும் ரெலோ அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் இந்நிகழ்வில் கலந்துகொண்டார் என்றும் தெரியவருகிறது.
நாடாளுமன்மற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.எல்.ஆர்.எப்பில் அங்கம் வகிக்கும்  5 உறுப்பினர்களும் சித்தார்த்தன் தலைமையிலான புளொட்டில் அங்கம் வகிக்கும் 2 உறுப்பினர்களும் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோவில் அங்கம் வகிக்கும் ஒருவரும் இப்பதவி பிரமாண நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Tuesday, September 24, 2013

ஐந்து கோடிக்கு விலை போன டக்ளஸ் தேவானந்தா!!

வட மாகாண சபைத்தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு முன்னிலை பெற்ற சிலர் பணத்தைக் கொடுத்து  அதிகார மிரட்டலின் கீழ் ஓரம் கட்டப்பட்டு ஐந்தாவது இடத்தில்  பின்னால் நின்றவரை இரண்டாவது தெரிவு உறுப்பினராக அரசாங்கத்தின் உயர் மட்டத்தினால் முன்னிலைப்படுத்தியதாக பாரிய குற்றச் சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சதந்திரக் கூட்டமைப்பில் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சி மற்றும் முஸ்லீம் காங்கிரஸ் கட்சிகள் இனைந்து போட்டியிட்டன.

இந்நிலையில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு வேட்பாளர்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட்டவர்கள் யாரும் முதல் ஐந்து இடங்களுக்கள் தெரிவு செய்யப்படாத நிலமை காணப்பட்டது. இது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்க பாரிய அடியாக இருந்ததுடன் பாரிய கௌரவக் குறைவாகவும் காணப்பட்டது. இதனை ஈடு செய்யும் வகையில் சில முடிவுகளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைமைப் பீடம் மற்றும் யாழ் மாவட்டத்தின் அமைப்பாளர் வேண்டுதலின் பெயரில் எடுக்கப்பட்டது.

குறிப்பாக யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இடம் பெற்ற வாக்கு எண்ணும் பணியில் கட்சிகளுக்கான வாக்குகள் மற்றும் உறுப்பினர்களின் விருப்பு வாக்குகள் எண்ணும் பணிகள் அனைத்தம் மதியத்துடன் நிறைவு பெற்று விட்டது. ஆனாலும் குறிப்பிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரை தெரிவு உறுப்பினராக மாற்றும் பணிக்காக பிற்பகல் வரை விருப்ப வாக்கு விடயத்தில் கணக்கு பிழைப்பதாகக் கூறி  உயர் அதிகாரிகளினால் இழுத்தடிப்புகள் நடை பெற்றுக் நேரத்தை கடத்திக் கொண்டு இருந்த வேளையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உயர் மட்டத்தினர் குறிப்பிட்ட 2ம் 3ம் 4ம் இடங்களை பெற்றவர்களை நீக்கி ஐந்தாம் இடத்தில் உள்ளவரை முன்னுக்கு கொடுவரும் நடவடிக்கையாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பணரீதியாகவும் சற்று உருட்டல் மிரட்டலாகவும் கதைத்து உரிய மாற்றங்களை செய்துள்ளார்கள்.

இதற்கான பிரதியீடாக சுமார் ஐந்து கோடி ரூபா கைமாறியுள்ளதாகவும் குறிப்பி;ட்ட வட்டாரங்களின் உயர் மட்டத்தில் உள்ளவர்கள் மூலம் தெரியக் கூடியதாகவுள்ளது. ஏற்கனவெ ஐக்கிய மக்கள் சுதந்திரக கூட்டமைப்பில் வெற்றி பெற்ற உறுப்பினாகளாக ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட பொறுப்பாளர் கமல் மற்றும் தென்மராட்சி பிரதேச பொறுப்பாளர் சாள்ஸ் வடமராட்சி பொறுப்பாளர் மற்றும் தவராசா ஆகியோர் காணப்பட்டார்கள்.

இதனை தேர்தல் முடிவடைந்த அன்று பிற்பகல் வெளியான விசேட பதிப்பு   தினக்குரல் பத்திரிகை ஐக்கிய மக்;கள் சுதந்திரக் கூட்டமைப்பில் வெற்றி பெற்றவர்கள் கமல் மற்றும் சாள்ஸ் என வெளியிட்டுள்ளது. இவர்கள் அனைவரையும் ஓரம் கட்டி யாழ் மாவட்டதின் சுதந்தரிக்கட்சி அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் பணத்தினாலும் அதிகாரத்தினாலும் கொண்டுவரப்பட்டு அவர் பெற்ற வாக்குகள் பத்தாயிரத்திற்க்கு மேல் எனவும் காணக்கிடப்பட்டுள்ளது.இதே வேளை வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றார்கள் குறிப்பி;ட்ட அங்கஜன் இராமநாதனுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் நாலாயிரத்திற்க்கும் குறைவானது என்றும் தற்போது எவ்வாறு பத்தாயிரத்திற்க்கு மேற்பட்டதாக மாறியது என்று. 

இத்தகைய கைங்கரியத்தை மேற்க்கொள்வதற்க்கு இடம் கொடுத்த ஈழ மக்கள் ஜனநாயக்கக் கட்சியின் பொதுக் செயலாளரின் இத்தகைய நடவடிக்கை தமிழ் மக்களிடைய பலத்த விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் அவருடைய வாக்க வங்கியும் கூட தமிழ் மக்களிடம் இருந்து குறைந்து செல்கின்றமையும் குறிப்பி;டத்தக்கதாகும். கடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் கூட  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியில் வெற்றி மூன்றாவதாக தெரிவ செய்யப்பட்ட பசுபதி சீவரத்தினம் தெரிவு செய்யப்படாது இறுதி நேரத்தில் விருப்பு வாக்குளில் மோசடிகள் செய்யப்பட்டு மு.சந்திரகுமார்  தெரிவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு இருந்தன.

இதனை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் தொலைக்காட்சியில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றில் இதனை நிரூபிக்கும் வகையில் மல்லாகம் ரவி என்பவரினால் சவால் விடுத்து போதிலும் இதனை எந்த சந்தர்ப்பத்திலும் யாரும் மறுக்கவிலலை. மேலும் இத்தகைய மோசடி இடம் பெற்றமையால் இம்முறை பனை அபிவிருத்தி சபையின் தலைவராக இருக்கும் பசுபதி சீவரத்தினம வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட வேட்பாளராக ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியனால் நிறுத்த முற்பட்ட போதிலும் இதனை அவர்  கடந்த பாராளுமன்ற தேர்தல் அனுபவத்தின் அடிப்படையில் மறுத்து உள்ளார்.

இதனை அவரே அவருடன் மிகவும் நெருக்கமாக பழகுபவர்களிடம் தெரிவித்துள்ளார். இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கையறு நிலையில் தன்னையே காப்பாற்றிக்கொள்ள முடியாத நிலையில் அரசுடன் இனைந்து காணப்படுவதாகவும் தன்னை காப்பாற்றிக்கொள்ள தமிழ் இனத்தை இத்தகைய செயல்களுக்கு ஒத்துப்போய் விற்று வருவதாகவும் பாரியளவிலான குற்றச்சாட்டுக்கள் பொது மக்களினால் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

எதுவாக இருந்தாலும் சிங்கள பேரினவதத்திற்க்கு ஒத்தூத புறப்பட்டு இன்று தனது ஆதரவாளர்களையே இழந்து தமிழ் மக்கள் மத்தியில் தலை குனிந்து வாழும் நிலமைக்கு டக்ளஸ் சென்றுள்ளார் என்பதே உண்மையாகும். ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி உறுப்பினாகளிடம் கூட இத்தகைய தில்லு முள்ளு பாரிய வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். 

Sunday, September 22, 2013

வட மாகாண சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியது : 30 இடங்கள்


இலங்கையின் வட மாகாண சபைக்கு நடந்த தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 38 இடங்களில் 30 இடங்களை அது பெறுகிறது
அனைத்து மாவட்டங்களிலும் அந்தக் கட்சியே முன்னணி பெற்று, வெற்றி பெற்றது.
மன்னார் மாவட்டத்தில் 3 இடங்களையும், கிளிநொச்சியில் 3 இடங்களையும், முல்லைத்தீவில் 4 இடங்களையும், வவுனியாவில் 4 இடங்களையும், யாழ் மாவட்டத்தில் 14 இடங்களையும் ( மொத்தமாக 28 இடங்கள்) அந்தக் கட்சி பெற்றுள்ளது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 7 இடங்களை பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மன்னார் மாவட்டத்தில் மாத்திரம் ஒரு இடத்தை வென்றிருக்கிறது.
ஆகவே போனஸாக இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு 2 இடங்கள் கிடைக்கும்.
ஆகவே மொத்தமுள்ள 38 இடங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு 30 இடங்களும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 7 இடங்களும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு 1 இடமும் கிடைத்துள்ளன.
ஆகவே வட மாகாண சபைக்கான ஆட்சியை அமைக்கும் வாய்ப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறுகிறது.
விபரம்:
யாழ்ப்பாணம்:
தமிழ் அரசுக் கட்சி --- 14 இடங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு --- 2 இடங்கள்

மன்னார் :
தமிழ் அரசுக் கட்சி --- 3
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு -- 1
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் --- 1
கிளிநொச்சி :
தமிழ் அரசுக் கட்சி --- 3
ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு --- 1
முல்லைத்தீவு :
தமிழ் அரசுக் கட்சி --- 4
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு --- 1
வவுனியா :
தமிழ் அரசுக் கட்சி -- 4
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு -- 2

Saturday, September 21, 2013

வட மாகாண சபைத் தேர்தல் வாக்குப் பதிவுகள் நிறைவு!- மூன்று மாகாணங்களின் வாக்களிப்பு வீதம்


வடக்கு, வடமேல், மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் வாக்குப் பதிவுகள் காலை ஏழு மணிக்கு ஆரம்பமாகி மாலை நான்கு மணியுடன் நிறைவடைந்துள்ளது.
மூன்று மாகாண சபைகளிலுமுள்ள பத்து மாவட்டங்களிலிருந்தும் இத்தேர்தலில் 142 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன், இவர்களைத் தெரிவு செய்வதற்கென இன்று 43 இலட்சத்து 58 ஆயிரத்து 263 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
மூன்று மாகாணங்களிலும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 3785 வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர்.
தேர்தலில் வாக்களிப்பதற்காக பத்து மாவட்டங்களிலும் 3612 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
தேர்தல் நடைபெறும் மூன்று மாகாண சபைகளுக்குமான பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
வாக்குச் சாவடிகளிலிருந்து வாக்குகளை எண்ணுவதற்காக பெட்டிகளை எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இன்னும் சில மணி நேரங்களில் வாக்குகள் எண்ணப்படும்.
மூன்று மாகாணங்களின் வாக்களிப்பு வீதம்
இன்று சனிக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணிக்கு நிறைவடைந்த வடக்கு, வடமேல் மற்றும் மத்திய ஆகிய மூன்று மாகாணங்களின் வாக்களிப்பு வீதத்தை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மத்திய மாகாணம்
கண்டி 58%
மாத்தளை 54%
நுவரெலியா 54.5%
வடமேல் மாகாணம்
புத்தளம் 55-60 %
குருநாகல் 55%
வடமாகாணம்
யாழ்ப்பாணம் 60%
கிளிநொச்சி 60%
வவுனியா 61%
முல்லைத்தீவு 63%
மன்னார் 70%

வரணிப் பகுதியினில் படையினர் சுரேஷ் பிறேமச்சந்திரனின் சிற்றூர்த்தி மீது துப்பாக்கிப் பிரயோகம்


வடக்கினில் தொடரும் தேர்தல் வன்முறைகளிடையே இன்று மதியம் தென்மராட்சியின் வரணிப்பகுதியினில் படையினர் தமிழ் தேசியக்கூட்டமைப்பு வேட்பாளர்களிடையே துப்பாக்கிப்பிரயோகம் செய்துள்ளனர்.எனினும் இச் சம்பவத்தினில் எவரும் காயமடைந்திருக்க வில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

தென்மராட்சியின் வரணி மத்திய மகா வித்தியாலய வாக்களிப்பதற்காகச் சென்ற சாவகச்சேரி உப தவிசாளரை படைப்புலனாய்வாளர்கள் சிறைப்பிடித்ததாகக்கூறப்படுகின்றது. அப் பகுதியிலுள்ள கட்டிடமொன்றில் தடுத்து வைத்து தாக்குதல் நடத்தியவேளை அவரை மீட்கச்சென்ற கூட்டமைப்பின் ஆதரவாளர்களது வாகனம் மீது படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொணடனர்.

எனினும் இந்தச் சம்பவத்தில் எவரும் காயமடைந்திருக்கவில்லை. தாக்குதல் நடத்திய படையினர் அருகிலுள்ள வரணி 55 ஆவது படைபிரிவு தலைமையகத்தை நோக்கி தப்பிச்சென்றதாக கூறக்படுகின்றது. துப்பாக்கிப் பிரயோகத்திற்குள்ளான வாகனம் மோசமான சேதத்திற்குள்ளாகியள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதே வேளை திருநெல்வேலி முத்துத்தம்பி மகா வித்தியாலய வாக்களிப்பு மையத்தில் கூட்டமைப்பு சார்பு நல்லூர் பிரதேச சபை உறுப்பினரொருவர் பொலிஸாரால் தாக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதனிடையே பிற்பகல் இரண்டு மணிவரை யாழ்ப்பாணத்தில் மட்டும் 78 வரையான தேர்தல் வன்செயல்கள் தொடர்பான முறைப்பாடுகள் தமக்கு கிடைக்கப்பெற்றிருப்பதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது.

அரியாலை, புத்தூர் , மற்றும் பருத்தித்துறை கோப்பாய் என பல பகுதிகளிலும் வாக்களிப்பு மையங்களைச் சூழ்ந்திருக்கின்ற படைப் புலனாய்வாரள்கள் மக்களை திருப்பி அனுப்பியிருப்பதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாக பவ்ரல் தெரிவித்துள்ளது.

பிந்திய தகவல் பிரகாரம் யாழ்ப்பாணத்தினில் வாக்களிப்பு வீதம் 50 சதவீதத்தினை தாண்டியுள்ளது.கடந்த தேர்தல் வாக்களிப்பு வீதத்துடன் ஒப்பிடுகையினில் இது அதிகமாகும்.

இதனிடையே கிளிநொச்சி பன்னங்கண்டி  பகுதியினில் கூட்டமைப்பு வேட்பாளர் சிறீதரன் மீது படையினர் சிலர் தாக்குதல் முயற்சியிலீடுபட்டிருந்த நிலையினில்  மெய்பாதுகாப்பு அதிகாரிகளினால் மீட்கப்பட்டுள்ளார்.

சூடுபிடித்துள்ள வடமாகாண சபைத் தேர்தலும் மக்களை வாக்களிக்க விடாமல் துரத்தும் படையினரும்!


வடக்கு மாகாணசபை தேர்தல் வாக்களிப்பு சூடு பிடித்துள்ள நிலையில், இன்று மதியம் 12மணி வரை யாழ்.தேர்தல் மாவட்டத்தில் 22 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் வாக்களிப்பு வீதம் அதிகரித்துள்ளபோதும் 70சதவீத வாக்காளர்கள் வீடுகளுக்குள் முடங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்று காலை முதல் வாக்களிப்பு இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றபோதும், சில வாக்களிப்பு நிலையங்களில், வாக்களிப்பு வீதம் மிகவும் மந்தகதியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. எனினும் கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் வாக்களிப்பு நிலையங்களில் பெருமளவு வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து, வாக்களிப்பதையும் காண முடிந்தது.
இதனிடையே பல பகுதிகளிலும் பகிரங்கமாக படையினர் வாக்களிக்க வந்த வாக்காளர்களை விரட்டியமை தொடர்பான தகவல்கள் வெளியாகத் தொடங்கியிருக்கின்றன. இன்று காலை தென்மராட்சி பகுதியில் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு ஒன்றின் ஏற்பாட்டில், அங்கவீனர்களை வாக்களிப்பதற்காக ஏற்றிவரப்பட்டபோது படையினர் என நம்பப்படுபவர்கள் வாகனத்தின் சாரதியை கடுமையாக தாக்கியதுடன், வானத்தை நோக்கி துப்பாக்கி வேட்டுக்களையும் தீர்த்துள்ளனர்.
இதேவேளை வலி,வடக்கு மற்றும் மாதக ல் ஊர்காவற்றுறை தம்பாட்டி, கொக்கிளாய், கொக்குதொடுவாய், கிளிநொச்சி-பன்னங்கண்டி மற்றும் மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் படையினர் மற்றும் அரச அதரவு குழுக்கள் இணைந்து வாக்காளர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன், வாக்களிக்க விடாது திருப்பியும் அனுப்பியுள்ளனர்.
இதேவேளை பிந்திய தகவல்களின் பிரகாரம் கிளிநொச்சி மாவட்டத்தில், நண்பகல் 29 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. பரவலாக தேர்தல் நடவடிக்கைகளில் படையினர் தலையிடமாட்டார்கள் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பையும் மீறி படையினர் வாக்களிப்பு நிலைய வட்டாரங்களில் உலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் கொல்லங்கலட்டி பகுதியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா வாக்களிக்கச் சென்றிருந்த சமயம் அங்கு வாக்களிக்க வந்த ஏனைய வாக்காளர்களை புலனாய்வாளர்கள் என அடையாளப்படுத்தியவர்கள் அச்சுறுத்துவரை அவதானித்துள்ளார்.
பின்னர் விடயத்தை பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த புலனாய்வாளர்கள் பொலிஸாரினால் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றனர்.
இதேபோன்று மாவட்டத்தின் சகல பிரதேசங்களிலும் உள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சென்று நிலைமைகளை நேரில் அவதானித்து வருகின்றனர்.
மன்னார் மாவட்டத்திலும் வாக்களிப்பு வீதம் குறிப்பிடத்தக்கதாக இருந்து வருவதாக தெரிவிக்கப்படும் நிலையில், வணபித ஒருவர் பொலிஸாரினால் வாக்குச்சாவடி பகுதியில் முறைகேடாக நடமாடியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை மற்றுமொரு வணபிதா பொலிஸாரினால் தாக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.