Showing posts with label கனடா. Show all posts
Showing posts with label கனடா. Show all posts

Thursday, September 22, 2011

கனடாவின் முயற்சியால் கதிகலங்கிப் போயுள்ள இலங்கை: ஐ.நாவில் திண்டாட்டம் !

ஜெனிவாவில் இடம்பெற்றுவரும் 18வது மனித உரிமைக் கூட்டத்தொடரில் சர்வதேச நாடுகளும், அனைத்துலக மனித உரிமை அமைப்புகளும் கொடுத்துவரும் கடும் அழுத்தங்கள் காரணமாக, சிறிலங்கா அரசாங்கம் பெரும் சிக்கலை எதிர்கொண்டு வருகிறன்து. சிறிலங்கா அரசாங்கத்திற்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் விதத்தில் சிறிலங்கா அரசு மேற்கொண்டு போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்படவேண்டுமென்ற தீர்மானமொன்றை கொண்டுவருவதற்கான முயற்சியில் கனடா இறங்கியுள்ளது.
இது தொடர்பான ஆலோசனைக் கூட்டமொன்று இன்று ஜெனிவாவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவின் தலைமையில் இடம்பெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், 47 உறுப்பு நாடுகளில் ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகள் பங்குபற்றியுள்ளன.

வியாழக்கிழமை, கனடா கொண்டுவருமென எதிர்பார்க்கப்படும் தீர்மானம், மனிதவுரிமைக் கூட்டத்தொடரில் விவாதத்திற்கு எடுக்கப்பட்டு, பின்னர் வாக்கெடுக்பிற்கு விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், உறுப்பு நாடுகளால் முன்னெடுக்கப்படும் இதுபோன்ற முயற்சிகளைத் தடுப்பதற்கு, சிறிலங்கா பலத்த முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. ரஷ்சியா, பாகிஸ்தான், கியூபா, அல்ஜீரியா போன்ற தனது ஆதரவு நாடுகளூடாக இந்த பிரேரணையை தோற்கடிக்கும் முயற்சிகளை சிறிலங்கா மேற்கொண்டு வருவதாகவும் நம்பப்படுகிறது. இவ்வாண்டு இறுதியில் வெளியிடப்படும் என கூறப்படும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்படும்வரை ஐ.நா உறுப்பு நாடுகள் இதுபோன்ற தீர்மானங்களுக்கு ஆதரவளிக்க வேண்டாமென சிறிலங்கா கடும் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது.

கனடாவின் முயற்சிகளுக்கு சுவிற்சலாந்து, போலந்து போன்ற நாடுகள் வெளிப்படையான ஆதரவைத் தெரிவித்துள்ளபோதும், வாக்கெடுப்பு சவால் நிறைந்த ஒன்றாக இருக்கும் என்றே கருதப்படுகிறது. கனடாவின் முயற்சிகளுக்கு மனிதவுரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச்சபை போன்ற மனித உரிமை அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இத் தீர்மானத்திற்கு ஆதரவு தேடும் முயற்சிகளில் ஐ.நா மனிதவுரிமைகள் கூட்டத்தொடரில் பங்கேற்றுவரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tuesday, January 25, 2011

கனடாவை வாட்டிவதைக்கும் குளிர்! (பட இணைப்பு)

கனடாவின் கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் கடும் குளிர்ச்சியான காலநிலை தொடர்ந்து நீடிக்கின்றது. திங்கள்கிழமை காலநிலை மிகவும் மோசமாக இருந்தது.

நான்கு மாநிலங்களில் காலநிலை பற்றிய எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன. ஒன்ராறியா , கியுபெக், கிழக்குக் கனடா ஆகிய பகுதிகளில் வெப்பநிலை -40 பாகை செல்சியஸுக்கும் குறைவாக இருந்தது.

திங்கள் கிழமை ஒட்டாவாவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக உறையும் குளிர் நிலை காணப்பட்டது. நடுங்கவைக்கும் குளிர் காற்றும் வீசியது.


வெப்பநிலை-38 பாகை செல்சியஸாக இருந்தது. இத்தகைய குளிர் நிலைகளில் பத்து நிமிடங்களுக்கு மேல் சருமத்தில் குளிர் தாக்கம் படுமானால் அது உறைநிலை பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


ஒட்டாவாவின் சில பகுதிகளில் மின்சாரத் தடையும் ஏற்பட்டுள்ளது. கியுபெக் மாநிலத்தின் பல இடங்களில் வெப்பநிலை -38 முதல் -48 பாகை செல்சியஸாகக் காணப்பட்டது.

இந்தப் பிரதேசத்தில் நீர் மின்சாரத்தைப் பாவிப்பவர்கள் அந்தப் பாவனையைக் குறைத்துக் கொள்ளுமாறும் கேட்கப்பட்டுள்ளது. பொதுவாக கனடா முழுவதும் குளிர் காலநிலை தொடர்ந்து நீடிக்கின்றது.