Showing posts with label அஞ்சலி. Show all posts
Showing posts with label அஞ்சலி. Show all posts

Saturday, October 12, 2013

மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் விக்ரர் அவர்களின் 27 ம் ஆண்டு நினைவு நாள் இன்று!


விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான விக்ரர் இயக்கத்தின் தலை சிறந்த போர் தளபதிகளில் ஒருவராவார். மன்னார் பிராந்தியத் தளபதியாகப் பணியாற்றிய விக்ரர் 12.10.1986 அன்று அடம்பன் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் விக்ரர் அவர்களின் 27 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
யாழ். குடாநாட்டுக்கு அது புதிய காட்சியாக இருந்தது. ஒவ்வொரு ஊர்களின் ஊடாகவும், கிராமங்களின் வழியாகவும், நகரங்களின் ஊடாகவும் அந்த வீரனின் இறுதி ஊர்வலம் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது.
வீதிகளின் இருமருங்கிலும் மக்கள் வரிசையாக நின்று தமது தோட்டங்களிலும்,முற்றங்களிலும் பூத்திருந்த மலர்களை கொண்டுவந்து அவனின் உடல்தாங்கிய அந்த ஊர்திக்கு முன்பாக தூவி கண்ணீர் மல்க நின்றனர். 
அதற்குமுன்னர் ஒருபோதும் இப்படியான இறுதி ஊர்வல நிகழ்வு உணர்வுடனும், லட்சோபலட்சம் மக்களின் வழியனுப்பலுடனும் நடந்ததே இல்லை. யாழ். மண்ணில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் முகாம்களுக்குள் முடக்கப்பட்டு இருப்பதால் மக்கள் எந்தவித பயமுமின்றி தமது இதயத்துள் இருக்கும் விடுதலை வீரனுக்கு தமது இறுதி மரியாதையை செலுத்தியபடி இருந்தனர்.
இரவு பகலாக அந்த ஊர்தி யாழ். மண்ணின் அனைத்து இடங்களுக்கூடாகவும் நகர்ந்தது. எமது மண்ணில் இருந்து சிங்கள இராணுவத்தினர் விரட்டியடிக்கப்பட வேண்டும். எமது மக்கள் அச்சமின்றிய வாழ்வு ஒன்று வாழவேண்டும் என்ற கனவு கண்ட அந்த வீரன் அந்த பேழைக்குள் இருந்தபடியே அவற்றை பார்த்து உண்மையில் மனம் நிறைந்திருப்பான்.
யாழ். மண் விடுதலைப் போராளிகளின் கைகளுக்குள் வருவதற்காக ஓய்வற்ற உழைப்பும் திறனும் காட்டிய அந்த வீரன் லெப்.கேணல் விக்ரரின் இறுதி ஊர்வலம்தான் அது. ஒஸ்கார்..ஒஸ்கார்..என்ற சங்கேத அழைப்பிற்குரிய அந்த பெருவீரன் தாயக மண்ணில் விதையாகி கால் நூற்றாண்டுகள் கடந்து போய்விட்டன.
விக்ரர், இவனை எப்படி அடையாளப்படுத்துவது. அச்சம் கொஞ்சமும் இல்லாத பெருவீரன் என்றா? பழகும்போது குழந்தையை போல பழகும் மனதுள்ளவன் என்றா? களங்களில் நெருப்புகனரும் விழிகளுடன் உத்தரவிடும் ஆளுமைமிக்க தளபதி என்றா?…எப்படியும் அவனை அடையாளப்படுத்தலாம். அத்தனை ஆளுமைகளும் அவனிடத்தில் இருந்தன.
எந்த விடுதலைப் போராட்டம் என்றாலும் புரட்சி அமைப்பு என்றாலும் அதில் இணைபவர்கள் இரண்டு வழிகளில் இணைவார்கள். அடக்குமுறையும், ஒடுக்குமுறையும் மெல்லியதாக முளைவிடும் பொழுதிலேயே அதனை நிராகரித்து அதனில் இருந்து விடுதலைபெற என்று ஆரம்பித்திலேயே அமைப்பில் இணையும் வழி ஒன்று.
அடக்குமுறையும், ஒடுக்குமுறையும் உச்சமாகி கொடிய கொலைவெறியாட்டத்தினூடாக உணர்வுபெற்று விடுதலை அமைப்பில் இணையும் வழி அடுத்தது.1983 கறுப்பு யூலை இனப்படுகொலைகளுக்கு பின்னர் விடுதலை அமைப்புகள் வீச்சுப் பெறவும்,வீக்கம் பெறவும் ஆரம்பிக்க முன்னரே 1983 க்கு முன்னரேயே விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்தவன் விக்ரர்.
1981ன் இறுதிப் பகுதியில் விக்ரரின் விடுதலைப்புலிகளுடனான தொடர்பு ஆரம்பிக்கிறது. ஆரம்பப் பொழுதுகளில் அமைப்புக்குள் உள்வாங்குவதற்கான அனைத்து கவனிப்புகளிலும் விக்ரரின் உறுதி தலைமையால் கவனிக்கப்பட்டு பயிற்சிக்காக முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் அமைந்திருந்த முகாம் ஒன்றுக்கு அனுப்பப்படுகின்றான்.
அங்கே லிங்கம், பொட்டு, பசீர், ரஞ்சன், கணேஸ், விக்டர், ஆனந்த் ஆகியோரும் இன்னும் சிலருக்கும் தலைவர் நேரடியாகவே பயிற்சிகளை ஆரம்பிக்கிறார். பயிற்சி முகாமின் உணவுப்பிரிவில் மூத்த உறுப்பினர்களான கிட்டுவும், ரஞ்சன்லாலாவும் இருக்கின்றனர். உடற்பயிற்சியாளராக செல்லக்கிளி அம்மான் இருக்கிறார்.
இந்த பயிற்சி முகாமில் பயிற்சி எடுத்த அதிகமானவர்கள் உறுதியிலும், விடுதலைப் போராட்டத்தின் ஏற்ற இறக்கங்கள் பற்றிய தெளிவிலும் தமது இறுதிக்கணம் வரைக்கும் மலையை நிகர்த்த உருக்கு உறுதியுடன் நின்றதற்கு காரணம் தலைவரின் நேரடி பயிற்சி, பயிற்சியின் பின்னான மாலைப் பொழுதுகளில் அமைப்பின் மூத்த உறுப்பினர்களான செல்லக்கிளி அண்ணா, சீலன், கிட்டு, ரஞ்சன், புலேந்திரன் ஆகியோர் உட்பட மற்றும் சிலரும் இணைந்த அனுபவ பங்கீடுகள்.
இவைகளேதான் விக்ரரையும் ஒரு உன்னதமான போராளியாக, மிகப்பெரும் வீரனாக வரித்தெடுத்த காரணிகளாகும்.சக போராளிகள் அனைவர் மீதும் அளவற்ற அன்பும், பாசமும் காட்டும் ஒரு பெரிய குழந்தையாக அவன் இருந்தான்.
அதிலும் பயிற்சிக்கு முன்னரும் பயிற்சிக்கு பின்னரும் அவன் இருந்த இளவாலைப் பகுதியில் அமைந்திருந்த வீட்டில் அவனுடன் இருந்தோர் இன்றும்கூட அவனின் நினைவுகளையும் செயல்களையும் ஒருவகையான பெருமிதத்துடனும் ஈர்ப்புடனும் கண்களில் ஒளிபொங்க நினைவு கூருவதை பார்க்கலாம்.
விக்ரரின் அஞ்சாமையையும், சீறிப்பாயும் துப்பாக்கி சன்னங்களுக்கு மத்தியிலும் நிதானமாக நகரும் அவனின் வேகத்தையும் அந்த நேரம் இருந்த போராளிகளுக்கு அடையாளம் காட்டியது திருநெல்வேலி தபாற்பெட்டி சந்தியில் 1983 யூலை 23ல் சிங்கள இராணுவத்துக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட தாக்குதல் ஆகும்.
மிகவும் செறிவான வாகனப் போக்குவரத்தும், சிங்கள காவல்துறை, சிங்கள இராணுவ நடமாட்டம் என்பன அடிக்கடி நிகழும் திருநெல்வேலி வீதியில் இரவில் வீதியை குழிதோண்டி அதில் சக்கையை வைத்து எக்ஸ்புளோடருக்கு தொடர்பு கொடுக்கும் வேலையை செல்லிக்கிளி அம்மான், அப்பையா அண்ணை ஆகியோருடன் இணைந்து செய்து முடித்தவன் விக்ரர்.
விக்ரர் அமைப்பில் இணைந்த பிறகு மன்னார் பகுதியில் நிகழ்ந்த தாக்குதல்களில் அநேகமாக அனைத்திலும் விக்ரரின் நேரடி பங்களிப்பும் விக்டரின் எம்16 கிறனைற் செலுத்தியின் வெடிப்பும் இருந்தே இருக்கும்.மன்னார் பொலிஸ் நிலையம் மீதான தாக்குதலில் விக்ரருடன் குமரப்பா போன்றோர் இணைந்திருந்தாலும்கூட அந்த தாக்குதலுக்கான திட்டமிடல், ஒருங்கிணைப்பு என அனைத்தையும் அற்புதமாக கையாண்டவன் விக்ரர்.
வெறும் தாக்குதல்களை மட்டும் நடாத்திக் கொண்டிருக்காமல் சிங்களத்திடம் இருந்து விடுவிக்கப்பட்ட மன்னார் பிரதேசத்தின் பகுதிகளில் மக்கள் அமைப்புகளை உருவாக்குவதிலும், மக்கள் மத்தியில் விடுதலைப் போராட்டம் பற்றி தெளிவையும், அரசியல் அறிவையும் ஊட்டுவதிலும் விக்டரின் செயற்பாடுகள் மிகவும் ஆழமாக அமைந்திருந்தன.அவன் மக்களால் ஆழமாக நேசிக்கப்பட்டதற்கு பின்னால் மக்களுடனான அவனின் ஆத்மார்த்தமான தொடர்பே காரணமாகும்.
விடுவிக்கப்பட்ட மன்னார் நிலப்பகுதியில் விக்ரர் பயிற்சி முகாம்களையும் உருவாக்கி ஏராளமான புதிய போராளிகளை தாய் மண்ணிலேயே உருவாக்குவதிலும் முனைப்புடன் செயற்பட்டவன். விக்ரர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் காட்டிய உறுதியும், தலைமைப் பண்பும், வீரமும் மிகவிரைவாகவே அவனை விடுதலைப்புலிகள் அமைப்பின் மத்தியகுழு உறுப்பினர் என்ற அதியுச்ச நிர்வாக மையத்துக்குள் உள்வாங்கி கொண்டது. சிங்கள தேசத்தின் இராணுவத்தினரை தமிழீழ மண்ணில் இருந்து துரத்தும் நடவடிக்கை தினமும் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருந்த காலமது.
இராணுவம் முகாம்களுக்குள் முடங்கிக் கிடப்பதும், சிலவேளைகளில் முகாம்களை விட்டு சிறிய தொகையாக வெளிவரும் இராணுவத்தினரை உடனடியாக அந்த பகுதிக்கு விரையும் விடுதலைப்புலிப் போராளிகள் விரட்டியடிப்பதும் அன்றாட நிகழ்வுகள் அப்போது.
அப்படியான ஒருபொழுதில் 12.10.1986 அன்று அதிகாலையில் அடம்பன்நகருக்குள் இராணுவம் நுழைந்துவிட்டதாக கிடைத்த தகவலை அடுத்து கருக்காய்க்குளத்தினூடாகவும், ஆண்டான்குளப் பகுதியாலும், நாயாற்று வெளிக்குள்ளாக தாமரைக்குளத்தினூடாகவும் அடம்பனுக்குள் விக்ரரின் தலைமையில் நுழைந்து விடுதலைப்புலிகள் நடாத்திய தாக்குலில் சிங்கள இராணுவத்துக்கு துணையாக ஹெலிக்கொப்படரும் வந்து தாக்குதலை ஆகாயத்தில் இருந்து நடாத்தியபோதும் வீரமுடன் போரிட்ட அந்த தளபதி எதிரியின் சன்னம் ஒன்று நெஞ்சுக்குள்ளாக புகுந்து சென்றுவிட வீரமரணமடைகிறான்.
ஒருமாமலையின் சரிவாக விக்ரரின் மரணம் அமைப்பை உலுக்கியது அந்த பொழுதில். தலைமை கொடுக்கும் பணியை செயற்படுத்தும் திறனும், அதனை செயற்படுத்தியே தீரவேண்டும் என்ற இலட்சிய உணர்வும் உடைய ஒரு பெருவீரன் அவன்.விக்ரர் மரணித்த அந்த சண்டையில்தான் முதன்முதலாக பெண்கள் அணி தாக்குதலில் நேரடியாக இறக்கப்பட்டனர்.
நாயாற்று வெளிக்குள்ளாக தாமரைக்குளம் கடந்து அடம்பனுக்குள் நுழைந்த சாஜகானின் அணியில் விக்ரரின் வழிகாட்டலில்தான் முதலில் பெண்புலிகள் எதிரிக்கு எதிரான சண்டையில் நின்றனர்.
அதுமட்டுமல்லாமல் அந்த சண்டையில்தான் முதன்முதலாக சிங்கள இராணுவத்தை செர்ந்த இரண்டு வீரர்கள் உயிருடன் பிடிக்கப்படுகிறார்கள். 2வது லெப்.அஜித் சந்திரசிறீ, கோப்ரல் கே.டபிள்யூ பண்டார ஆகியோரே பிடிக்கப்பட்ட சிங்கள இராணுவத்தினர். விக்ரர் தாயக மண்ணில் வீழ்ந்துவிட்ட தாக்குதலில்கூட அவன் இன்னொரு அங்கீகாரத்தையும், விடுதலைப் போராட்டத்துக்கு பாரிய எழுச்சியையும் இந்த இராணுவ வீரர்களின் கைதுகள் மூலம் உருவாக்கிச் சென்றிருந்தான்.
சிங்கள தேசத்துடன் தமிழர் தேசம் ஒரு உத்தியோகபூர்வமான கைதிகள் பரிமாற்றத்தைச் செய்வதற்கு விக்டரின் அடம்பன் சண்டையில் சிறைபிடிக்கப்பட்ட இராணுவத்தினர் காரணமாக இருந்தனர்.
சிங்கள தேசத்தின் பாதுகாப்பு அமைச்சர் அத்துலக் முதலியும், சிங்கள தேசத்தின் முப்படைகளின் தளபதியான சிறில் ரணதுங்கா, பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் நேரடியாக பலாலி சென்று பலாலி வாசலில் வைத்து விடுதலைப்புலிகளான அருணாவையும், காமினியையும் விடுவித்தனர்.
அதற்கு பரிமாற்றமாக அடம்பன் சண்டையில் பிடிக்கப்பட்டவர்களை கிட்டு விடுவித்தார்.  இப்போது பார்த்தால் இது சிறிய சம்பவமாக தெரியும். ஆனால் அன்றைய பொழுதில் இது ஏற்படுத்திய எழுச்சியும் மன உறுதி ஏற்றமும் வார்த்தைகளில் வடிக்க முடியாதவை.
இப்போது இருபத்தைந்து வருடங்களாகி விட்டது. விக்ரர் என்ற என்ற அற்புதமான வீரனின் நினைவுகளும், மாசுமறுவற்ற அவனின் உன்னதமான இலட்சிய பற்றும் என்றென்றும் எமது மக்களால் இதயத்தின் ஆழத்திலிருந்து நினைவு கொள்ளப்படும்.
என்றாவது ஒருநாள் விடுதலைப்புலிகள் தலைமை விக்ரரின் இதுவரை பதியப்படாத பக்கங்களையும்,அவற்றில் தலைமையின் கட்டளையை ஏற்று அவன் செய்ய வீரத்தையும் பதிவு செய்யும் போது நிச்சயமாக ஒரு உன்னதத்திலும் உன்னதமான வீரனாக அவன் இன்னும் உயர்ந்து தெரிவான்.

Thursday, September 26, 2013

ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்காக போராடிய தமிழீழ ஆதரவாளர் தோழர் பழ.நீலவேந்தன் தீக்குளித்து மரணம்


தமிழீழ ஈகைச்சுடர் திலீபனின் நினைவு போற்றியும் தமிழகத் தமிழர்களால் சாதியால் ஒடுக்கப்பட்டுவரும் ஆதித்தமிழர்களான அருந்ததியர்களுக்கான 6 சதவீத உள் ஒதுக்கீட்டை வலியுறுத்தியும் கடிதம் எழுதி வைத்துவிட்டு பெரியார் சிந்தனைப் பற்றாளர் தோழர் பழ.நீலவேந்தன் தீக்குளித்து இன்று அதிகாலை மரணமடைந்துள்ளார்.
தமிழ் இனத்தில் சாதியால் தமிழர்களாலேயே ஒடுக்கப்பட்டுவரும் அருந்ததியர் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க ஆதித்தமிழர் பேரவையில் இணைந்து போராடிவந்த தோழர் பழ. நீலவேந்தன் தீக்குளித்து மரணித்துள்ள செய்தி தமிழ் உணர்வாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈழவிடுதலை ஆதரவுப் போராட்டங்களிலும், தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதார போராட்டங்களிலும் தோழர் நீலவேந்தன் ஆற்றிய தொண்டு பெரும்பங்கு.
ஈழ விடுதலைப்போர் நடந்து கொண்டிருந்தபொழுது இலங்கைக்கு இந்திய அரசு அனுப்பிய இராணுவ தளவாடங்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் தோழர் நீலவேந்தனும் கைதாகி சிறையில் இருந்தார்.
கோவை, திருப்பூர் மாவட்டம் என்றில்லாது தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று தமது அனல் கக்கும் பேச்சால் தமிழ் மக்கள் பிரச்சினையை அனைவருக்கும் கொண்டு சென்றவர்.
தமிழகத்திலுள்ள அமைப்புகள் அம்பேத்கரையும், பெரியாரையும் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளதைப்போல எனது தலைவர்கள் அண்ணன் கொளத்தூர் மணியும், ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா இரா.அதியமான் அவர்களும் ஆவார் என்று எப்பொழுதும் கூறுவார்.
தங்கள் வாழ்வாதாரத்திற்கே தமிழகத்தில் நாள்தோறும் போராடிக்கொண்டிருக்கும் அருந்ததியர் மக்களை தமிழீழ ஆதரவு போராட்டங்களில் ஈடுபடுத்தியதில் பெரும்பங்கு தோழர் பழ..நீலவேந்தனுக்கே உண்டு.
"அருந்ததியினருக்க்கு தாழ்த்தப்பட்ட இனத்தில் உள் ஒதுக்கீடாக 3 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இது எனது மக்களுக்கு போதுமானதாக இல்லை.  படித்த இளைஞர்கள் ஏராளமானோர் வேலை வாய்ப்பின்றியும், சம்பந்தமில்லாத வேலையில் விருப்பமின்றியும் வேலை செய்து வருகிறார்கள்.
மேலும் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் அருந்ததியினர் மிகவும் பின் தங்கியுள்ளனர். இதை எதிர்த்து பலமுறை பேசியுள்ளேன். உரிய அதிகாரிகளிடம் குறைந்த பட்சம் அருந்ததியினருக்கு 6 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க கோரிக்கை விடுத்தேன். ஆனால் யாரும் இந்த கோரிக்கையை காதுகொடுத்து கூட கேட்கவில்லை. இதனால் வெறுப்படைந்தேன். எனது இனம் விழிப்புணர்வை அடையவே தீக்குளித்தேன்." என்று நீலவேந்தன் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
தமிழீழ ஈகைச்சுடர் திலீபனின் நினைவு போற்றியும் தமிழகத்தமிழர்களால் சாதியால் ஒடுக்கப்பட்டுவரும் ஆதித்தமிழர்களான அருந்ததியர்களுக்கான 6 சதவீத உள் ஒதுக்கீட்டை வலியுறுத்தியும் கடிதம் எழுதி வைத்திருக்கிறார். திருப்பூர் மாவட்ட மருத்துவமனை அனைத்துக் கட்சி, அமைப்புத்தோழர்களாலும் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. ஒரு மாபெரும் சக்தியை இந்த சமூகம் மறுபடியும் இழந்திருக்கிறது.

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் மற்றும் வான்படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கரின் வீரவணக்க நாள் இன்று!

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள் மற்றும் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர், வான்படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கரின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தமிழீழ போராட்ட வரலாற்றில் ஒரு புரட்சிகரமான திருப்பத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சி தமிழீழ தேசிய ஆன்மாவை தட்டி எழுப்பிய நிகழ்ச்சி பாரத நாட்டை தலைகுனிய வைத்த நிகழ்ச்சி உலகத்தின் மனட்சாட்சியை தீண்டிவிட்ட நிகழ்ச்சி என்று தீர்க்க தரிசனமாக தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் அன்று தெரிவித்துள்ளார்.
ஈகைச்சுடர் லெப்டினன் கேணல் திலீபனின் 26ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். இந்திய அமைதிப்படைக்கு எதிராக ஐந்தம்ச கோரிக்கையினை முன்வைத்து சாகும்வரை உண்ணா நோன்பிருந்து காந்திதேசத்தின் முகத்தில் கரியை பூசிய இராசையா பார்த்தீபன் என்று அழைக்கப்படும் லெப்டினன் கேணல் திலீபனின் 26ஆம் ஆண்டு நீங்கா நினைவுகளை எங்கள் மனதில் நிறுத்தி விடுதலை பயணத்தினை தொடர்வோம்..
அதேவேளை விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் வான்படையினை உருவாக்கி வரலாறு படைத்த கேணல் சங்கர் அண்ணா அவர்கள் 26.09.2001 அன்று சிறீலங்கா படையினரின் தாக்குதலில் வீரச்சாவடைந்து 12 ஆம் ஆண்டு நினைவு நாட்களையும் இன்றைய நாளில் நினைவிற் கொள்கின்றோம்.
திலீபன் ஒரு ஈடு இணையற்ற மகாத்தான தியாகத்தை புரிந்தான் அவனது மரணம் ஒருமாபெரும் வரலாற்று நிகழ்வு தமிழீழ போராட்ட வரலாற்றில் ஒருபுரட்சிகரமான திருப்பத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சி தமிழீழ தேசிய ஆன்மாவை தட்டிஎழுப்பிய நிகழ்ச்சி பாரத நாட்டை தலைகுனிய வைத்த நிகழ்ச்சி உலகத்தின் மனட்சாட்சியை தீண்டிவிட்ட நிகழ்ச்சி.
எனது அன்பார்ந்த மக்களே..திலீபன் யாருக்கா இறந்தான் எதற்காக இறந்தான் அவனது இறப்பின் அர்த்தம் என்ன?
அவனது இறப்பு ஏன் ஒரு மகத்தான நிகழ்ச்சியாக மக்கள் எல்லோரையும் எழுச்சி கொள்ளசெய்த ஒரு புரட்சிகர நிகழ்ச்சியாக அமைந்தது. திலீபன் உங்களுக்காக இறந்தான் உங்கள் உரிமைக்காக இறந்தான். உங்கள் மண்ணுக்காக இறந்தான். உங்கள் பாதுகாப்பிற்காக சுதந்திரத்திற்காக கௌரவத்திற்காக இறந்தான்.
தான் நேசித்த மக்களுக்காக, தான் நேசித்த மண்ணுக்காக ஒருவன் எத்தகைய உயர்ந்த உன்னத தியாகத்தை செய்யமுடியுமோ அந்த அற்புதமான அர்ப்பணிப்பைத்தான் அவன் செய்திருக்கின்றான்.
ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன். ஆனால் உயிரினும் உன்னதமானது எமது உரிமை எமது சுதந்திரம் எமது கௌரவம்.. என்றும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் ஈகைச்சுடன் லெப்ரினன் கேணல் திலீபன் நினைவாக தெரிவித்துள்ளார்.
பாரதம் தான் எமது இனப்பிரச்சினையில் தலையிட்டது. பாரதம் தான் எமது மக்களின் உரிமைக்கு உத்தரவாதம் அளித்தது. பாரதம் தான் எம்மிடம் ஆயுதங்களை வாங்கியது.
பாரதம் தான் எமது ஆயதப்போராட்டத்தை நிறுத்தி வைத்தது. ஆகவே பாரத அரசிடம் தான் நாம் உரிமைகோரி போராட வேண்டும். எனவேதான் பாரதத்துடன் தர்மயுத்த அம்பை தொடுத்தான் திலீபன்.
அத்தோடு அகிம்சை வடிவத்தை ஆயதமாக எடுத்துக்கொண்டான். நீராகாரம் கூட அருந்தாது மரணநோன்பை திலீபன் தழுவிகொள்வதற்கு 24மணிநேரம் முன்பே இந்திய தூதர் டிக்சிற்கு முன்னறிவித்தல் கொடுத்தோம். ஆனால் எதுவும் நடைபெறவில்லை.
அதற்கு மாறாக திலீபனின் உண்ணாவிரதத்தை கேவலமாக கொச்சைப்படுத்தியது என்றும் தமிழீழ விடுதலை போராட்டத்தின் நீண்டகால நிகழ்வுகளை தலைவர் அவர்கள் அன்றே சொல்லியிருந்தார்.
அந்தத் தியாக தீபத்தின் இலட்சியங்கள் நிறைவேற, எம்மை நாம் அர்ப்பணிப்போமாக!

Friday, May 10, 2013

” போர்பயிற்சி ஆசான் ” வசந்தன் மாஸ்ரர்


" போர்பயிற்சி ஆசான் " வசந்தன் மாஸ்ரர்
தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறை பயிற்சியில் பயிற்சி வல்லுனராக விளங்கியவர் வசந்தன் மாஸ்ரர் .

தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் வித்தகனாக செயற்பட்ட வசந்தன் மாஸ்ரர் என்று அழைக்கப்படும், மன்னார் மாவட்டத்தை நிலையான முகாவரியாக கொண்ட ஆறுமுகம் அன்பழகன் தொடக்க காலத்தில் விடுதலைப்புலிகளின் படைத்துறைபள்ளியின் ஆசானாக செயற்பட்டு பின்னர் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் பாதுகாப்பு அணியின் செயற்பாட்டாளனாகவும் பாதுகப்பு அணியின் தற்காப்பு பயிற்சி ஆசானாகவும் விளங்கினார்.


பின்னர் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் திட்டமிடல் செயற்பாடுகளுடன் அருகில் இருந்து செயற்பட்ட வசந்தன் அவர்கள் தலைவர் அவர்களின் பல திட்டமிடல்களுக்கு வல்லுனனாக விளங்கினார். தமிழீழ விடுதலைப்புலிகள் மகளீர் அணியிற்கு தற்பாதுகாப்பு கலையினை பயிற்றுவித்து மகளீர்கள் எதிலும் சளைக்காதவர்கள் என்பதை வெளிக்காட்டி நின்றார், யுத்த தந்திரங்களான எதிரியை மடக்குவது, சத்தமின்றி எதிரியை கொல்லுவது, உள்ளிட்ட சிலம்பு வித்தை, கம்புவீச்சு, வாள்வீச்சு, நெஞ்சாக்கு, தற்காப்புக்கலை, யோகாசனம் மற்றும் யப்பானிய கலைகளில் வல்லுனனாகவும், கனரக பீரங்கிகள் இயக்குதலில் சிறப்பு தேர்ச்சி அடைந்தவராகவும் விளங்கிய வசந்தன் மாஸ்ரர் அவர்கள், அனைத்து கலைகளையும் விடுதலைப் போராளிகளுக்கு கற்றுக்கொடுக்கும் ஆசானாக திகழ்ந்தார்.
இவ்வாறு கரும்புலிகளின் பயிற்சி அணிதொடக்கம் வேவு அணிகளின் பயிற்சி ஆசானாக திகழ்ந்த வசந்தன் மாஸ்ரர் அவர்கள் தனது கலையினை திரைப்படம் ஊடாக வெளிக்கொண்டுவந்தார்.
பயிற்சி ஆசானாக ..
தமிழீழத்தில் உருவாக்கம் பெற்ற எல்லாளன் திரைப்படத்தில் கரும்புலிகளின் பயிற்சி ஆசானாக விளங்கி திரைப்படத்தில் பயிற்சி திறன்களை போலின்றி உண்மையாக காட்டிநின்றார்.
இவ்வாறு விளங்கிய வசந்தன் மாஸ்ரர் அவர்கள் இறுதியில் விடுதலைப்புலிகளின் வெடிமருந்து பகுதியின் பொறுப்பாளனாக செயற்பட்டு 10.05.2009 ஆம் ஆண்டு அன்று முள்ளிவாய்கால் பகுதியில் வீரவரலாறானார்.
" போர்பயிற்சி ஆசான் " வசந்தன் மாஸ்ரர்
இன்றும் வசந்தன் மாஸ்ரரிடம் போரியல் பயிற்சி பெற்ற போராளிகளின் மனதில் மரியாதை கூடிய பயத்துடன் என்று அவரின் தேசபக்தி நெக்ஞ்சினை ஆளும். ஆயிரம் ஆயிரம் மாவீரர்களுடன் உங்களின் வழித்தடம் பார்த்து என்றும் தானைத்தலைவனின் வழியில் தமிழீழ தேசம் கட்டியெழுப்புவோம்.
அன்று உங்கள் முகம் மலர்ந்திடும். நிம்மதியாய் உறங்குங்கள் எங்கள் பயிற்சி ஆசானே ! நீங்கள் ஊட்டிய வீரம் – தீரம் தேசக்காதலாக நெஞ்சில்க் கனக்கின்றது பகையை எரிக்கும் ஓர்மத்துடன்.
- மீள்திருத்தத்துடன் தேசக்காற்று.
” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “

Tuesday, March 19, 2013

தளபதி வசந்த்திற்கு அஞ்சலி! நான்கு வருடங்களின் பின்னர் கிடைத்த பதில்!!

முள்ளிவாய்க்கால் பேரவலத்தினில் படுகொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் விடுதலைப்புலிகளது மூத்த தளபதி வசந்தின் நினைவு நிகழ்வு இன்று அவரது குடும்பத்தவர்களினால்  அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.



சுமார் நான்கு வருடங்கள் வரையினில் தளபதி வசந்தினின் நிலை பற்றி தகவல்கள் ஏதும் குடும்பத்தவர்கள் எவருக்கும் கிடைக்காதேயிருந்தது.இந்நிலையினில் தற்போது அம்பலமாகியுள்ள போர் குற்ற புகைப்படங்கிளினில் தளபதி வசந்த் இனது புகைப்படமும் வெளியாகியிருந்தது.

அப்புகைப்பட தொகுப்பினிலிருந்த சிறுவனொருவன் படுகொலை செய்யப்பட்ட பின்னரான புகைப்படமும் வெளியாகியிருந்த நிலையினில் அப்புகைப்படத்தினிலிருந்த ஏனையவர்களும் படுகொலை செய்யப்பட்டிருக்கலாமென நம்பப்படுகின்றது.

இதையடுத்தே காணாமல் போன தமது மகன் வசந்த் மரணித்துள்ளதாக கருதி அவரது குடும்பத்தவர்கள் மரண வீடு அனுஸ்டித்துள்ளனர்.அத்துடன் சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் இணைந்து நினைவு கூரலையும் அனுஸ்டித்துள்ளனர்.வன்னியிலுள்ள அவர்களது வாசஸ்தலத்தினில் இவ்வஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

திருகோணமலையினை சொந்த இடமாக கொண்ட தளபதி வசந்த் தளபதி சொர்ணத்தினது நெருங்கிய சகவுமாவார்.அப்புகைப்படத்தினிலுளள அனைவரும் அவரது படைப்பிரிவை சேர்ந்தவர்களெனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

Sunday, March 17, 2013

மாமனிதர் நவசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு.


அனைவராலும் N.S.மூர்த்தி என அழைக்கப்பட்ட டாக்டர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று நடைபெற்றது.
மேற்கு லண்டன் Balham பகுதியில் அமைந்துள்ள Memon Centre மண்டபத்தில் (Memon Centre, 3 Weir road, Balham, SW12 0PS) இன்று ஞாயிற்றுக்கிழமை அவரின் இறுதிவணக்க நிகழ்வுகள் நடைபெற்றது.
மாமனிதர் சத்தியமூர்த்தி அவர்கள் தமிழ் மக்களின் விடுதலைக்காக பல வருடங்கள் தன்னை அர்ப்பணித்துப் பணியாற்றியவரும் பள்ளிப் பருவம் முதல், இறுதிக்காலம்வரை தமிழ் மக்களின் விடுதலை பற்றியே சிந்தித்துச் செயலாற்றியவரும் .தமிழீழ மக்களாலும், தலைமையாலும் ஆழமாக நேசிக்கப்பட்ட ஒரு மாமனிதர். 
இலங்கைச் சிறையில் அடைக்கபட்டு கை, கால்கள் அடித்து முறிக்கப்பட்ட பின்னரும், பல இளைஞர்களின் உயிர்களைக் காக்கும் மருத்துவப் பணியையும், கால்களை இழந்தவர்களுக்கு செயற்கைக் கால் பொருத்துதல், பெற்றோரை இழந்த சிறார்களைப் பராமரித்தல் போன்ற பல தொண்டுகளைச் செய்த மாபெரும் மனிதர் ஆவார்.

இனவாத அரசின் நெருக்கடிகளால் அவரும் அவரது குடும்பத்தினரும் பல இன்னல்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்த போதிலும், தாயகத்திலும், இந்தியாவிலும், பின்னர் லண்டனிலும் தனது கொள்கையில் இறுதிவரை உறுதியாக நின்று தமிழ் மக்களின் விடிவுக்காக தன்னை அர்ப்பணித்த, போற்றுதற்குரிய மாமனிதர்.
1985ஆம் ஆண்டு இந்தியாவில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முதலாவது தலைவராக இருந்து வழி நடத்தி, அந்த அமைப்பு தாயகத்தில் பல்வேறு தொண்டுப் பணிகளைச் செய்ய வித்திட்டவர். பின்னர் பிரித்தானியாவில் வெண்புறா தொண்டமைப்பை நிறுவி பல்வேறு பணிகளை முன்னெடுத்தவர்.

‘மாமனிதர்’ என்ற தமிழீழத்தின் அதியுயர் பட்டம் அளிக்கப்பட்டுள்ள இந்த அரும்பெரும் மனிதனின் இறுதி வணக்க நிகழ்வில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.
பிரித்தானியாவில் நடைபெறும் இன்றைய இறுதி வணக்க நிகழ்வில் வெளிநாடுகளில் இருந்தும் பலர் கலந்துகொள்ளுகின்றனர். இதேவேளை, இன்று இத்தாலியிலும் மாமனிதர் சத்தியமூர்த்தி அவர்களிற்கான வணக்க நிகழ்வு நடைபெறுகின்றது. யேர்மனி, பிரான்ஸ், நோர்வே, சுவிஸ் போன்ற நாடுகளில் ஏற்கனவே இவ்வாறான வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
இரண்டாம் இணைப்பு
மாமனிதர் நமசிவாயம் சத்தியமூர்த்தியின் இறுதி வணக்க நிகழ்வு ஆயிரக்கணக்கான மக்களின் பற்கேற்புடன் இன்று நடைபெற்றது.
தமிழீழ தேசியக் கொடியை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் தனம் ஏற்றி வைக்க, அதனைத் தொடர்ந்து வெண்புறா அமைப்பின் கொடியை அதன் நிர்வாகப் பொறுப்பாளர் பொன்.சத்தியசீலன் ஏற்றினார்.
அக வணக்கத்தையடுத்து, பொதுச்சுடரை தென்மேற்கு லண்டனின் செயற்பாட்டாளர் லிங்கம் ஏற்றி வைக்க, புகழுடலுக்கான தேசியக் கொடி மரியாதை செலுத்தப்பட்டு, அது மாமனிதரின் புகழுடலுக்குப் போர்த்தப்பட்டது.
இதனையடுத்து மாமனிதர் சத்தியமூர்த்தியின் மனைவி, பிள்ளைகள் மலர் வணக்கத்தை தொடக்கி வைக்க, அங்கு வந்திருந்த மக்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று மலர் வணக்கத்தில் ஈடுபட்டனர்.
வணக்க உரைகளை, ருற்றிங் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சத்தீக் கான், மாணவர் பேரவையின் தொடக்குனரும், வெண்புறா அமைப்பின் நிர்வாகியுமான பொன்.சத்தியசீலன், குடும்ப உறவினர்கள்இ மருத்துவர் மூர்த்தியிடம் சிகிச்சை பெற்ற நோயாளி கரன், வெண்புறா அமைப்பின் தொண்டர், மருத்துவர் மூர்த்தியின் மகள் கவிதா, பிரித்தானிய தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முன்னாள் பொறுப்பாளர், மகன் மருத்துவர் இளங்கோ ஆகியோர் நிகழ்த்தினர். கவிதையும் இடம்பெற்றது.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, நோர்வே, டென்மார்க், மற்றும் சுவிஸ் ஆகிய நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டதுடன், தமது கிளைகள் சார்பாக வணக்க உரைகளையும் இரங்கல் செய்திகளையும் வழங்கினர்.
இதேவேளை, உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் ஐயா பழ.நெடுமாறன், தமிழீழ உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோரின் வணக்க உரைகள் காணொளி வடிவில் வழங்கப்பட்டன.
மிகவும் உணர்வெழுச்சியுடன் இறுதி வணக்க நிகழ்வு இடம்பெற்ற அதேவேளை, நாளை பிற்பகல் 1:45 முதல் 2:30 வரை சவுத் லண்டன் கிறிமரோறியத்தில் மாமனிதர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் புகழுடலுக்கான இறுதி தகன நிகழ்வுகள் இடம்பெறும்.

Friday, March 01, 2013

ஒரு பாலசந்திரனை மட்டுமே சுட்டுக்கொல்ல முடிந்தது - தமிழகத்தில் ஏராளமான பாலசந்திரன் உள்ளனர்.-வைகோ

சுட்டுக்கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரன் உருவ முகமூடியுடன் மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

மறைமலைநகரில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் அமர்ந்து இருந்தனர். அவர்களுக்கு பிரபாகரனின் மகன் பாலசந்திரனின் உருவம் பொறித்த முகமூடியை வைகோ அணிவித்தார்.

இதனைதொடர்ந்து மற்ற மாணவர்களும் பாலசந்திரனின் முகமூடியை அணிந்து கொண்டனர். அப்போது அந்த மாணவர்களிடம் வைகோ ஆவேசமாக பேசியதாவது:-

இலங்கையில் இறுதிக்கட்ட போரில் பிரபாகரனின் இளைய மகன் பாலசந்திரனை கைது செய்த இலங்கை ராணுவத்தினர், பாலசந்திரனின் கண் எதிரேயே பாதுகாப்புக்கு இருந்த 5 விடுதலைப்புலிகளை சுட்டுக்கொன்றனர். பின்னர் பாலசந்திரனுக்கு சாப்பிடுவதற்கு பிஸ்கெட் தந்தனர். அதனை பால் வடியும் சிறுவன் பாலசந்திரன் சாப்பிட்டு கொண்டு இருக்கும்போது போர் மரபை மீறி, இளம் சிறுவனை துப்பாக்கியால் ஈவு இரக்கமற்ற முறையில் சுட்டுக்கொன்றனர்.


இதில் சிறுவனின் மார்பில் 5 குண்டுகள் பாய்ந்து இருந்தன. இலங்கை கொடூரர் ராஜபக்சே, ஒரு பாலசந்திரனை மட்டுமே சுட்டுக்கொல்ல முடிந்தது. ஆனால் தமிழகத்தில் ஏராளமான பாலசந்திரன் உள்ளனர். இவர்களை அவன் என்ன செய்ய முடியும்?. பாலசந்திரன் சுட்டுக்கொல்லப்பட்ட காட்சிகளை சேனல்-4 வெட்ட வெளிச்சமாக காண்பித்த பிறகு இலங்கையின் கொடிய போர்க்குற்றம் உலக நாடுகளுக்கு வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.


இங்கு பாலசந்திரன் உருவம் பொறித்த முகமூடி அணிந்து வந்த அனைத்து மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு வைகோ பேசினார்.
இதன் பின்னர் வைகோ, மாணவர்கள் மத்தியில் அமர்ந்து கொண்டார். அப்போது பாலசந்திரன் முகமூடி அணிந்த மாணவர்கள், இலங்கை அரசுக்கு எதிராகவும், போர்க்குற்றவாளி ராஜபக்சேவை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது மேடை அருகே இருந்தவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இலங்கைக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.


விடுதலைக் கனவுடன் இயங்கிய மூச்சை இன்று நாடு இழந்துவிட்டது -


கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தாயக விடுதலைக்கனவுடன் விடாமூச்சாக இயங்கிய எமது விடுதலைப் போராட்ட வரலாற்றுடன் பின்னிப் பிணைந்து விட்ட ஒரு விடுதலை விரும்பியை எமது நாடு இன்று இழந்து விட்டது. ஒரு அற்புதமான ஆளுமை நிறைந்த இனிய மனிதரை இழந்து உலகத்தமிழரெல்லோரும் சோகக்கடலிலே மூழ்கிக் கிடக்கின்றனர்.
மருத்துவர் என்.எஸ் மூர்த்தி என அனைவராலும் அறியப்படும் மருத்துவர்.நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்கள் நாட்டு நலனையே முன்னிறுத்தி வாழ்ந்தவர். பார்வைக்கும் பழக்கத்திற்கும் இனிமையானவர். அன்பான பேச்சும் அழகான சிரிப்பும் அவரின் ஆளுமையாக மெருகேறி மிளிர்ந்தன. வீண் பகட்டற்ற எளிமையும் அவருக்கேயுரிய உயர்தனிப் பண்புகளும் அவரை நோக்கி எல்லோரையும் ஈர்த்தன.

அவர் தனது இளமைக்காலத்திலேயே தமிழரசுக்கட்சியில் இணைந்து வாலிப முன்னணியின் பேச்சாளராகத் தனது விடுதலைக்கான குரலை ஒலிக்கத் தொடங்கினார். தமிழ் மாணவர் பேரவையின் இணைப்பாளராகிச் சிறிலங்கா அரசுக்கெதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுச் சிறிலங்காக் காவற்துறையாற் காவலில் வைக்கப்பட்டார். மருத்துவக் கல்வியை நிறைவுசெய்த பின்னர் தனது பிறப்பிடமாகிய திருகோணமலையில் மருத்துவராகப் பணியாற்றிய அவர் 1983 யூலை இனக்கலவரத்தின் பின் மட்டக்களப்புச் சிறையில் இருந்து தப்பிய இளைஞர்களுக்கு மருத்துவ உதவி புரிந்ததற்காகக் கைது செய்யப்பட்டு வெலிக்கடையில் ஒரு வருடம் சிறை வைக்கப்பட்டார்.

சிங்கள அரசு தமிழ்மக்களை அவர்களின் தாய்மண்ணில் என்றுமே நிம்மதியாக வாழவிடப் போவதில்லை என்பதையும் தனது பேரினவாதக் கொள்கையைக் கைவிட்டு நீதியான ஒரு தீர்வைத் தமிழ் மக்களுக்கு வழங்கப் போவதில்லை என்பதையும் தனது பட்டறிவுகளால் நன்குணர்ந்த மருத்துவர்.நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்கள் விடுதலைக்கான வழியில் இறுதிவரை சென்று தமிழீழத் தனியரசை அமைப்பதைத் தவிரத் தமிழர்களுக்கு வேறெந்தத் தெரிவுகளுமில்லை என்று கண்டு கொண்டார். எமது விடுதலைக்கான பயணத்திற் தன்னையும் இணைத்துக் கொண்டு தமிழ் நாட்டில் நடாத்தப்பட்ட எமது பயிற்சி முகாம்களுக்கு மருத்துவராகினார். அக்காலத்திற் தமிழ் நாட்டிற் பல்வேறு அரசியற் தலைவர்களோடும் நாம் நல்லுறவினை வளர்க்கவும் அரும்பணியாற்றினார்.

1985ல் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட போது அதன் முதலாவது பொறுப்பாளராகி அதனை வளர்த்தெடுப்பதில் அயராது உழைத்தார். அதன் பின்னர் பிரித்தானியாவை வந்தடைந்து 1992ல் இருந்து 2001 வரை பிரித்தானியத் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துடன் இணைந்து பணியாற்றினார். அக்காலப் பகுதியில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஐரோப்பிய மண்ணிற் சிறப்பாகச் செயற்படப் பல வகைகளில் ஆலோசனை வழங்கியும் ஊக்குவித்தும் வந்ததோடு அதன் பேச்சாளராகவும் விளங்கினார்.

2001ல் பிரித்தானியாவில் வெண்புறா அமைப்பை நிறுவிப் பல வேலைத் திட்டங்களை வெற்றிகரமாக நடாத்தினார். தாயகத்தின் பெரும்பகுதி ஆழிப்பேரலையாற் கடுமையாகப் பாதிக்கப்பட்டபோது வெண்புறா நிறுவனத்தின் மூலம் பிரித்தானிய மக்களிடம் பெரும் நிதி திரட்டி அனுப்பினார். வெண்புறா நிறுவனத்தின் மூலம் செயற்கைக்காற் திட்டங்களுக்கும் பெருமளவில் உதவினார். வெண்புறா நிகழ்ச்சிகளுக்காகத் தாயகப்பாடற் போட்டிஇ தாயகப் பாடல்களுக்கான நடனப் போட்டிகளை நடாத்தி இளம் சந்ததியினர் மத்தியிற் தாயக உணர்வையும் அறிவையும் மேம்படுத்தினார்.

புலம் பெயர் வானொலிகளில் 'நாமும் நலவாழ்வும்' என்ற பயன்தரும் மருத்துவ நிகழ்ச்சித் தொடரைப் பல ஆண்டுகளாகச் செய்து வந்ததோடு சமகால அரசியல் ஆய்வுகளிலும் பங்கு கொண்டார். பிரித்தானிய மண்ணில் மாற்று மருத்துவத்தில் அவர் செய்த சேவைக்காக பிரித்தானிய அரச விருதான 'சுதந்திர மனிதன்' (FREE MAN) விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டார்.

சிறந்த மருத்துவரும் கலாரசிகரும் சிறந்த மேடைப் பேச்சாளரும் பண்பாளருமாகிய மருத்துவர்.நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்கள் மண்ணையும் மக்களையும் தேசியத் தலைவரையும் மாவீரர்களையும் வாஞ்சையுடன் நேசித்தவர் ஆவார். சிறீலங்காவின் சிறைகளிற் கடுமையான சித்திரவதைகளை அனுபவித்த அவர் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் ஏற்பட்ட மனஅழுத்தங்களால் அடிக்கடி நோய்வாய்ப்பட்டு இன்று எம்மை விட்டுப் பிரிந்து விட்டார்.

மருத்துவர்.நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் இனப்பற்றுக்கும் விடுதலைப்பற்றுக்கும் மதிப்பளித்து அவரின் விடுதலைப் பணியைச் சிறப்பிக்குமுகமாக 'மாமனிதர்' என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் நாம் பெருமையடைகிறோம். தாயக விடுதலை எனும் சத்திய இலட்சியத்தை நெஞ்சில் வரித்து இறுதிவரை அதற்காகவே உழைக்கும் சாதனை மனிதர்களைச் சாவு என்றுமே அழித்து விடுவதில்லை. அவர்கள் நாட்டின் வரலாறாகி மக்களின் மனங்களிலே நீடித்து வாழ்வார்கள்.
'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்'

Thursday, November 15, 2012

தளபதி கேணல் பரிதி ஏன்; படுகொலை செய்யப்பட்டார்? - இ.மதியழகன்

தளபதி பரிதி என்ற பரிமாணம்.

நடராஜா மதீந்தரன் என்ற இயற்பெயரைக் கொண்ட தளபதி பரிதி 1983 ஆம் ஆண்டு தன்னை தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டார். இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டாம் பாசறைப் பிரிவில் பயிற்சியை பெற்றுக் கொண்ட வீரத்தளபதிக்கு தலைமைபீடம் சூட்டிய பெயர் றீகன். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளான பிரிகேடியர் பானு, லெப் கேணல் குமரப்பா, ரஞ்சன் லாலா மற்றும் வாசு போன்றோருடன் இணைந்து போரியல் பயிற்சியை நிறைவு செய்த பின்னர் தமிழீழம் திரும்பினார் தளபதி கேணல் பரிதி.

களம்பல கண்ட நாயகன்.

தமிழீழம் திரும்பிய தளபதி கேணல் பரிதி மன்னார், யாழ்ப்பாணம், வன்னி என்று தமிழீழத்தின் முக்கியமான போர்முனைகளிலெல்லாம் வீரத்தோடும் விடுதலை வேட்கையோடும் களம்பல கண்டார். இவரது போரிடும் ஆற்றல் இவரை குறுகிய காலத்துக்குள்ளேயே மத்தியநிலை தளபதியாக உயர்த்தியது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் புலம்பெயர் களம் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை உணர்ந்து 2003 ஆம் ஆண்டு முதல் பரிதி என்ற பெயருடன் பிரான்ஸ் நாட்டுக்கான அரசியல் மற்றும் நிதி சேகரிப்பு நடவடிக்கைகளுக்கான பொறுப்பாளராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தால் நியமிக்கப்பட்டார்.

அன்றிலிருந்து, புலம்பெயர் களத்திலும் ஒரு தளபதியாக, முழுநேர தேசியச் செயற்பாட்டாளனாக தமிழீழ விடுதலை என்ற உயரிய இலட்சியத்துக்காகப் பணியாற்றிய தளபதி கேணல் பரிதி அவர்கள், தனது இறுதி மூச்சு வரை அந்த இலட்சியத்துக்காகவே போராடி, அந்த இலட்சியப் பணியில் ஈடுபட்டிருந்த போதே சிங்கள புலனாய்வாளர்களின் ஒட்டுக்குழுவால் கோழைத்தனமாகவும், கோரத்தனமான முறையிலும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலின் பின்னணி என்ன?

2009 மே மாதம் தமிழீழ விடுதலைப் போரட்டத்தினதும் தமிழ் மக்களினும் கவசங்களாக விளங்கிய ஆயதங்களை மௌனமாக்குவதற்கான சிங்கள அரசின் சூழ்சித் திட்டம் 2000 ஆம் ஆண்டிலேயே தீட்டப்பட்டிருந்தது. அது யாதெனில், தமிழர்களுடைய சுதந்திர தாகத்தை அழிக்க வேண்டுமானால், தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டுமானால், தமிழீழ விடுதலைப் புலிகளின் முதன்மைத் தளபதிகளை இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் மூலம் படுகொலைசெய்யக் கூடிய தளபதிகளை படுகொலை செய்வது, ஏனைய முக்கிய உறுப்பினர்களின் நடமாட்டங்களை முடக்குவது.

அதன் அடிப்படையிலேயே, சிறீலங்கா படைத்துறையில் ஆழ ஊடுருவும் படையணி உருவாக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியும் விமானப் படைத்தளபதியாகவும் விளங்கிய கேணல் சங்கர் அவர்களை படுகொலை செய்ததுடன் 2001 ஆண்டு செப்டெம்பர் 26 ஆம் திகதி ஆரம்பமான ஆழ ஊடுருவும் படையணியின் நரபலி வேட்டை, 2008 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறை தளபதிகளில் முதன்மையானவரான கேணல் சாள்ஸ் அவர்களை மன்னார் மாவட்டத்தில் இலக்குவைத்ததை தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் இனஅழிப்பின் உச்சக் கட்டம் தாண்டவமாடியதோடு முடிவுக்கு வந்தது.

முள்ளிவாய்க்காலோடு தமிழீழ விடுதலைப் போராட்டம் முற்றுப்பெற்றுப் போகும் என எண்ணிய சிங்களத்துக்கு புலம்பெயர் தமிழர்களின் எழுச்சி பெரும் பூதாகாரமான ஆபத்தாக உருவெடுத்தது. இதன்பின்னணியில் யார், யார் உள்ளார்கள் என்று உளவுப் பணியை முடக்கி விட்ட சிங்களத்துக்கு சிம்மசொப்பனமாக இருப்பவர் தளபதி பரிதி என்பது தெரியவந்தது. ஆதலால், புலம்பெயர் தேசங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆழ ஊடுருவும் படையணிக்கு இணையான படுகொலை படலத்தின் முதல் இலக்காக தளபதி பரிதியை இலக்கு வைப்பதனூடாக, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்டத்தை அழிக்கலாம் அல்லது முடக்கலாம் என்று கணக்கு போட்டது சிங்கள தேசம்.


தளபதி பரிதி இலக்கு வைக்கப்பட்டமைக்கான காரணம் என்ன?

படுகொலைசெய்யப்பட்ட தளபதி கேணல் பரிதி, முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்பட்ட பின்னரும் ஓர்மத்தோடும் விடுதலை வேட்கையோடும் வெளிப்படையாக இயங்கிய மூத்த தளபதி. உயிர் அச்சுறுத்தல்கள் எத்தனை வந்தபோதும், எதற்கும் அடிபணியாது, அனைத்தையும் எதிர்த்து நின்று விடுதலைக்காக மூழுமூச்சுடன் பணியாற்றினார். அமைதியான சுபாவமுடைய தளபதி பரிதி அவர்கள் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பெரும் பெறுமதியும், அதிக கனதியும் இருந்தது. ஆதலால், இளையோர் தொடக்கம் முதியோர் வரை பரிதி அண்ணா என்று வாஞ்சையோடு அழைத்தது மட்டுமன்றி, வீரத்தளபதிக்கு பின்னால் அணிதிரண்டனர். இது, சிங்கள தேசத்துக்கும், அவர்களின் கைக்கூலிகளுக்கும் அச்சத்தை உண்டுபண்ணியது.

ஏனெனில், தளபதி பரிதி அவர்களின் அர்ப்பணிப்பும், தலைமைத்துவமும் தமிழீழ விடுதலையை அடைவதற்கான படிக்கற்களை விரைவுபடுத்தின. ஆகவே, தளபதி பரிதி அவர்களை படுகொலை செய்வதனூடாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பேரிழப்பையும் பெருவெற்றிடத்தையும் உருவாக்குவதே சிங்கள அரச பயங்கரவாதத்தின் திட்டம். அத்துடன், புலம்பெயர் தமிழர் தேசத்துக்கு எதிரான சிறீலங்கா அரச பயங்கரவாதத்தின் உளவியல் போரில் இது முக்கியமானதொரு நடவடிக்கை. இதனூடாக, புலம்பெயர் தேசங்களில் வாழும் ஏனைய செய்ற்பாட்டாளர்களுக்கு அச்சத்தையும் அழுத்தத்தையும் உண்டுபண்ணுவதானூடாக அவர்களினுடைய செயற்பாடுகளை முடக்குவது சிங்கள பௌத்த பேரினவாதத்தின் முக்கிய நிகழ்சி நிரலில் ஒன்று. அத்துடன், தமிழர் தரப்புகளுக்கிடையில் பிளவுகளை மேலும் தீவிரப்படுத்துவதனூடாகத் தொடரும் ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை மேலும் நெருக்கடிக்குட் தள்ளுவதும் முக்கிய நிகழச்சி நிரலிலுள்ள விடயம்.

அத்தகைய விடயங்கள் அனைத்தையும், தளபதி பரிதி அவர்களைப் படுகொலை செய்வதனூடாக முன்னெடுக்கலாம் என்ற அடிப்டையிலேயே, தளபதி பரிதியை எல்லை கடந்த சிங்கள அரச பயங்கரவாதம் முதலாவது இரையாக்;கியது. இதிலிருந்தே, தளபதி கேணல் பரிதி தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு ஆற்றிய பங்களிப்பு தெட்டதெளிவாகிறது.

தளபதி பரிதிக்காக தமிழ்மக்கள் செய்ய வேண்டியது என்ன?

தளபதி கேணல் பரிதி அவர்களின் இழப்பென்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு, குறிப்பாக முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய போராட்ட வழிமுறைக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். இவரது இழப்பால், தமிழர் தேசம் அதிர்ச்சியும் சோகமும் அடைந்துள்ளது. ஆனால், தமிழீழ விடுதலைக்காக இரத்தம் சிந்தி தன்னுயிரை அர்ப்பணித்த தளபதி கேணல் பரிதியின் வீரச்சாவுக்கு கண்ணீர் சிந்துவதும் கவலையடைவதும் மட்டும் போதாது.

இத்தருணத்தில், தளபதி கேணல் பரிதி எந்த உயரிய இலட்சியத்துக்காகத் தன்னை அர்ப்பணித்து, அதற்காகவே தனது இறுதி மூச்சுவரை வாழ்ந்தாரோ, அந்த இலட்சியப் பயணம் இலக்கினை அடையும் வரை தளராமல் போராடுவதே ஒவ்வொரு தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களதும், உணர்வாளர்களதும், மற்றும் தன்மானமுள்ள ஒவ்வொரு தமிழர்களினதும் வராலற்றுப் பொறுப்பும் தார்மீகக் கடமையுமாகும். இதன் ஊடாகவே, சிங்கள தேசத்தின் நிகழ்ச்சி நிரலை முறியடிப்பதோடு, சுதந்திர தமிழீழம் என்ற உயரிய இலக்கை அடையலாம்.

தளபதி கேணல் பரிதி அவர்களின் வீரச்சாவு என்பது, அடுத்த கட்ட போராட்டத்தின் திருப்புமுனை சக்தியாக உருவாக்கம்பெற்றுள்ள புலம்பெயர் களத்தில் தமிழர்கள் எழுச்சி கொள்ள வேண்டும் என்பதை கோடிட்டுக் காட்டியுள்ளது. இன்றே போராட புறப்படு தமிழா! இல்லை நாளையென்பது நமக்கில்லை.

இ.மதியழகன்

Friday, November 09, 2012

களத்திலும் புலம்பெயர் நாட்டிலும் அயராது போராடிய மாவீரன் கேணல்.பருதி - தமிழீழ விடுதலைப் புலிகள்

தாயக விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்துக் களத்திலும் புலம்பெயர் நாட்டிலும் அயராது போராடிய மாவீரன் கேணல்.பருதி அவர்கள் (நடராஜா மதீந்திரன்), 08-11-2012 அன்று மாலை பிரான்சு நாட்டின் பாரிசு நகரிற் சிங்களஅரசின் உளவுப்பிரிவினராற் சுடப்பட்டு வீரச்சாவடைந்துள்ளார்.

தனது இளமைக்காலத்தில் 1983 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து தாயக விடுதலைக்காகப்
போராடத் தொடங்கிய கேணல்.பருதி அவர்கள் 2003 ஆம் ஆண்டிற் தமிழீழத் தேசியத் தலைவரின் பணிப்புக்கமையப் பிரான்சு நாட்டின் கிளைப் பொறுப்பை ஏற்றுத் தனது இறுதிமூச்சு வரை விடுதலைக்காகவே உழைத்தார்.

அவர் புலம்பெயர் மண்ணில் வாழ்ந்த போதும், எமது விடுதலையமைப்பின் கட்டமைப்பையும் கட்டளைகளையும் முழுமனதுடன் உயிரினும் மேலாக ஏற்று மதித்துச் செயற்பட்ட மாவீரனாவார். முள்ளிவாய்க்காலுடன் எமது போராட்டம் முற்றுப்பெற்று விடவில்லை என்ற உண்மையை ஆணித்தரமாக மனதிலிருத்தி, அதை அனைவரும் உணரும் வண்ணம் விடுதலை நோக்கிய தனது செயற்பாடுகளை எதற்கும் அஞ்சாது முழுமூச்சாக முன்னெடுத்தார்.

2011 ஆம் ஆண்டு இதே காலப்பகுதியில் அவரது பணியக வாயிலில் வைத்து, எதிரிகள் அவரை வாளால் வெட்டிக் கொல்ல முயன்றார்கள். அதிலே படுகாயங்களுடன் உயிர் தப்பிய கேணல்.பருதி அவர்கள் தொடர்ந்தும் விடுதலைப்பணியை அச்சமேதுமின்றி முன்னெடுத்தார்.

முள்ளிவாய்க்காலில் எமக்கேற்பட்ட இழப்புகளைக் கண்டு சோர்ந்து விடாமல், தனக்கு நேரக்கூடிய ஆபத்துக்களெதையும் பொருட்படுத்தாது, எமது விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்குடன், தனது பாதுகாப்பைப் புறந்தள்ளிவிட்டு, தானே எல்லாவற்றுக்கும் முன்னின்று அயராதுழைத்தார். இறுதிக்கணம் வரை அவர் ஓயவில்லை. அதனாலேயே அவரை எதிரிகள் இலக்கு வைத்தார்கள்.


கேணல்.பருதி அவர்கள் தாயக விடுதலைப் பணியிலிருந்த போது, அவரது பணியக வாயிலிலேயே வைத்து எதிரிகளாற் சுடப்பட்டு வீரச்சாவடைந்துள்ளார். இம்மாவீரனின் இழப்பு எமதமைப்புக்குப் பேரிழப்பாகும்.

முள்ளிவாய்க்காலை அடுத்துப் புலம்பெயர் நாடுகளிலும், எமது விடுதலைப் போராளிகளை இலக்கு வைத்துச் சிங்கள அரசானது தனது கொடுங்கரங்களை நீட்டியுள்ளது. சிங்கள அரசு தமிழ் மக்களுக்கெதிராகத் தனது யுத்தப்
பேரிகையைக் கொட்டி ஆர்ப்பரித்து, மீண்டும் யுத்தப் பிரகடனம் செய்துள்ளது. இதை வெறுமனே பார்த்துக் கொண்டு நாம் வாளாதிருக்க முடியாது. இதன் மூலம் சிங்களத் தலைமையானது சிங்கள மக்களையும் மீண்டும் யுத்தத்துக்குட் தள்ளியுள்ளது. தமிழ் மக்கள் தமது வாழ்விடங்களில் நிம்மதியாக வாழ முடியாத சூழல் நிலவும்வரை, சிங்களத் தலைமைகளும் சிங்கள மக்களும் தமது வாழ்விடங்களில் நிம்மதியாக வாழ முடியாது என்பதை அவர்கள் நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

சிங்கள அரசானது தமிழர்களின் பலத்தைச் சிதைத்து, எமது விடுதலைப் போராட்டத்தை முற்றாக அழித்தொழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதையே, அவர்களின் இந்தக் கொடுஞ்செயல் தௌளத்தெளிவாக உணர்த்தி நிற்கிறது.

தமிழர்கள் மத்தியிலுள்ள வேறுபாடுகளையும் சுயநலப் போக்குகளையும் பயன்படுத்தித் தமிழினத் துரோகிகளின்
துணையுடன், புலம்பெயர் மண்ணிலும் சிங்கள அரசின் உளவுப்பிரிவினர் மிக ஆழமாக ஊடுருவியுள்ளனர். தமிழர்கள் நாமனைவரும் ஒன்றுபட்டு நிற்பதன் மூலமே நாம் சிங்கள அரசின் சதிச்செயல்கள் யாவற்றையும் முறியடித்துத் தாயக விடுதலையை வென்றெடுக்க முடியும். பிரிவினைகளை மறந்து எமது பொது எதிரிக்கெதிராக ஒன்றுபடுமாறு தமிழ்மக்கள் அனைவருக்கும் நாம் அறைகூவல் விடுக்கின்றோம். இதுவே மாவீரன் கேணல்.பருதி அவர்கள் தனது வீரச்சாவினூடாகத் தமிழர்கள் அனைவருக்கும் விடுத்துள்ள செய்தியுமாகும்.

மாவீரன் கேணல்.பருதி அவர்கள் இறுதிவரை கடமையே கண்ணாக இருந்தார். அவரது வாழ்க்கையின் ஒரு பகுதி
அயல்நாட்டுச் சிறையிலே கழிந்தது. அவரது ஓய்வு நேரங்களும் விடுதலைப் பணியிலேயே கழிந்தன. புலம்பெயர்
மண்ணிலும் மிகமிக எளிமையான, ஒழுக்கமான வாழ்க்கையையே அவர் வாழ்ந்தார். தனிப்பட்ட குடும்ப வாழ்வுக்காக நேரம் ஒதுக்காமற் தாயக விடுதலையையே எப்போதும் முன்னிறுத்தி வாழ்ந்த, அம்மாவீரனை இழந்து தவிக்கும் அவரது அன்பு மனைவிக்கும் ஆசை மகளுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம். நாமும் அவர்களது துயரத்திற் பங்கு கொண்டு அவர்களது கரங்களை இறுகப்பற்றி ஆறுதல் கூறுகின்றோம்.

தன்னலமற்ற ஒரு விடுதலைப்போராளியாக, ஒரு தளபதியாக, ஒரு பொறுப்பாளராக அனைவருக்கும் முன்னுதாரணமாக வாழ்ந்த கேணல்.பருதி அவர்கள் தனது வீரச்சாவின் மூலம் எமது விடுதலைப் போராட்டத்தை வீச்சுடனும் வீறுடனும் முன்னோக்கி முடுக்கி விட்டுள்ளார். விடுதலை வேள்வியில் ஆகுதியாகிய மாவீரன் கேணல்.பருதி அவர்களுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாம் தலைசாய்த்து எமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இம்மாவீரனின் கனவுகள் நனவாகும் வரை, நெஞ்சிலெரியும் விடுதலை நெருப்போடு, நிழலாடும் அவரது நினைவுகளையும் சுமந்து தாயக விடுதலையை வென்றெடுக்கத் தளராது போராடுவோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
 

படுகொலைசெய்யப்பட்ட கேணல் பருதிக்கு ஊடகஇல்லம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றது

தமிழீழ விடுதலையை நேசிக்கும் எம் இன மக்களை ஒருங்கிணைத்து, அவர்களது கலை பண்பாட்டுக் கலாச்சார விழுமியங்களைப் பாதுகாத்து, எம் புலம் பெயர் சமூகத்தினை ஒன்றிணைக்கும் பணியைத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்கள் பல்தேசம் எங்கிலும் செய்து வருகின்றது.

இந்த வகையிலேயே பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும் செயற்பட்டு வருகின்றது. இதன் முதன்மைச் செயற்பாடட்டாளராகத், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளராகத் திரு.பரிதி அவர்கள் பணியாற்றி வந்தார்.

பல இன்னல்களுக்கும் அழுத்தங்களுக்கு மத்தியிலும் அயராது மக்கள் பணிக்காகத் தம்மைத் திரு.பரிதி அவர்கள் அர்ப்ணித்திருந்தார். ஏற்கனவே படுகொலை முயற்சிக்கு ஆளாகியும் அதிலிருந்து தப்பித் தனது பணியை மேற்கொண்டு வந்துள்ளார்.

தமிழின அழிப்பு சக்திகளால் 08.11.2012 அன்று திரு.பரிதி அவர்கள் பரிசில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஊடக இல்லம் திரு பரிதி அவர்களின் பணிக்குத் தலை வணங்குவதுடன் இப்படுகொலைக்கான விசாரணையை மேற்கொள்ளுமாறு பிரான்ஸ் காவற்துறையினரையும் கேட்டுக் கொள்கின்றோம்.

திரு.பரிதி அவர்களை இழந்து நிற்கும் அவர் குடும்பத்தினர்க்கு பிரான்ஸ் ஊடகஇல்லம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றது.

ஊடகஇல்லம்
22, rue Perdonnet
75010 Paris, France

Thursday, November 08, 2012

பாரிசில் சிங்கள கைக்கூலிகள் கொலைவெறியாட்டம்! தேசிய செயற்பாட்டாளர் பருதி வீரச்சாவு

பாரிசில் சிங்கள அரசின் கைக்கூலிகள் எனக் கருதப்படும் தேசவிரோதிகள் நிகழ்த்திய கொலைவெறித் துப்பாக்கிச் சூட்டில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கிய உறுப்பினரும், தேசிய செயற்பாட்டாளருமான பருதி (நடராஜா மதீந்தரன்) அவர்கள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளார்.

இன்று மாலை பாரிசில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலகத்திற்கு முன்பாக இக் கொலை வெறித்துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

1996 ஒக்ரோபர் மாதம் 26ஆம் நாளன்று பாரிஸ் லாச்சப்பலில் இடம்பெற்ற லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரின் படுகொலையின் பாணியில் தற்பொழுது பருதி அவர்களின் படுகொலை இடம்பெற்றிருப்பதாக சங்கதி-24 இணையத்திற்கு தெரிய வருகின்றது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதேயிடத்தில் பருதி அவர்கள் மீது வாள்வீச்சை தேசவிரோதிகள் நிகழ்த்தியமை நினைவூட்டத்தக்கது.

Monday, April 02, 2012

சாவுகள் நிறைந்த சமர்களமான ஆனந்தபுரத்தின் நினவுகள்! - சுபன்

பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் மணிவண்ணன் பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா, பிரிகேடியர் ஆதவன் உள்ளிட்ட பல தளபதிகளின் வீரவரலாறு ஆனந்தபுர மண்ணில் பதிந்த நினைவு நாட்கள் என்றும் எங்கள் மனதில் பதிந்தவைகள்.

மார்ச் 29,30,31, ஏப்ரல் 01,02,03,04 ஆகிய நாட்களில் நடந்தேறிய அக்கினி சமர்தான் அந்த ஆனந்தபுரத்து மண்ணில் நடந்த விடுதலைப் புலிகளின் வீரச்சமர். எதிரியானவன் நேரடியாக மோத வலுவிழந்த நிலையில் பன்னாடுகளினால் தடைசெய்யப்பட்ட குண்டுகளை வீசி அந்த ஆனந்தபுர மண்ணினையே அழித்தான். இன்றும் அந்த மண்ணில் அந்த வரலாற்றில் தடயங்கள் காணப்படுகின்றது.

அன்று 2009 ஆம் ஆண்டு 03 ஆம் மாதம் இறுதி நாட்கள் ஆனந்தபுர மண்ணில் அக்கினி சுவாலை மூண்ட தாக்குதல்கள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. இவ்வாறான தாக்குதல்களுக்கு விடுதலைப்புலிகளின் போராளிகளை அழிக்கவென்று சிங்களப் படையினர் தடைசெய்யப்பட்ட நச்சுக் குண்டுகளை களமுனையில் பயன்படுத்துகின்றார்கள்.

மணித்துளிகள் நகர தாக்குதல்களும் உச்சம் பெறுகின்றது. ஆனந்தபுர மண்ணில் இருந்து தலைவர் அவர்களை பத்திரமாக மீட்டுக்கொண்டு செல்கின்றார்கள் சிறப்பு போராளிகள். இந்நிலையில்தான் ஆனந்தபுரம் மண்ணில் நின்று போராளிகள் சமராடிக்கொண்டிருக்கின்றார்கள். அவர்களை மீட்டெடுக்கமுடியாத நிலையில் எதிரியின் இறுக்கமான சூழ்நிலை.

காயம் அடைந்த பிரிகேடியர் தீபன் அண்ணாவினை பின்தளத்திற்கு கொண்டு செல்லவேண்டிய தேவை. அங்காங்கு சிறீலங்காப்படையினர் ஊடுருவி விட்டார்கள். தீபன் அண்ணா காயமடைந்த நிலையில் ஒருநாள் அதிகாலை கொண்டு செல்லப்படுகின்றார். அன்று செல்லும் வழியில் சிறீலங்காப்படையினரின் பாரிய தாக்குதல் ஒன்றிற்கு முகம் கொடுத்து, அந்த உக்கிர தாக்குதலில் பிரிகேடியர் தீபன் அண்ணா அந்த மண்ணினை முத்தமிடுகின்றார். தீபன் அண்ணா உள்ளிட்ட போராளிகளை அழிக்க எதிரியவன் பயன்படுத்திய நச்சுக்குண்டுகள் என்பதை இன்றும் உறுதிசெய்கின்றோம்.



தடைசெய்யப்பட்ட பல்வேறு குண்டுகளையே சிங்கள படையினர் களமுனையில் பயன்படுத்தி இந்த இனவழிப்பு போரினை நடத்தினார்கள். இவ்வாறு அன்று ஆனந்தபுரம் மண்ணில் பல வீரத்தளபதிகள் வரலாறாகின்றார்கள். ஆனந்தபுரத்தில் இருந்து தலைவர் சென்ற பிறகு அந்த மண்ணில் முன்நூறு வரையான போராளிகள் நின்று தாக்குதல்களை தொடுக்கின்றார்கள். அவர்களுக்கான இறுதி கட்டளை நீங்கள் உடைத்துக்கொண்டு வரமுடிந்தால் வாருங்கள், என்றதுதான் அந்த கட்டளை காயமடைந்த போராளிகளை காப்பாற் முடியாது இறந்தவர்கள் அந்தந்த இடங்களில் விடப்படுகின்றார்கள்.

இதில்தான் எதிரியின் முற்றுகை வலயத்தினை ஊடறுத்து நூறுவரையான போராளிகள் தாக்குதலை நடத்திக்கொண்டு அந்த இடங்களை விட்டுவெளியேறுகின்றார்கள். அதாவது சிறு சிறு அணிகளாக அந்த போராளிகள் களமுனையினை விட்டு வெளியேறுகின்றார்கள். ஏனைய போராளிகள் எதிரியின் தொடர் எறிகணை மழையிலும் நச்சுக்குண்டு வீச்சிலும், வீரச்சாவினை அடைகின்றார்கள். அவர்களது உடலங்கள் எதிரியினால் கைப்பற்றப்படுகின்றது. அவைதான் ஆனந்தபுரம் மண்ணில் எதிரியால் சிதைக்கப்பட்ட உடலங்கள். இதில் இன்னும் ஒரு நிகழ்வு நடந்தேறுகின்றது. இந்த பகுதியில் இறுதியில் காயம் அடைந்த நிலையில் இருந்த போராளிகளை சிறீலங்காப்படையினர் உயிருடன்பிடித்து சித்திரவதை செய்கின்றார்கள். இதிலும் எத்தனையோ நிகழ்வுகள் நடந்தன.
இவ்வாறு ஆனந்தபுரம் மண் சிறீலங்காப்படையினரின் நெருப்பு மழையினால் நனைந்து சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில்தான் படையினர் பலத்த இழப்புக்களுக்கு மத்தியில் ஆனந்தபுரம் மண்ணினை பிடிக்கின்றார்கள். தீபன் அண்ணா எத்தனையோ களங்களை கண்ட தளபதி மட்டுமல்ல, எத்தனையோ பெயர்குறிப்பிட்டும், குறிப்பிடாமலும் நடத்தப்பட்ட தாக்குதல்களின் வெற்றிகளுக்கு பின்னாலும் அவரது கரங்கள் இருக்கின்றன. வடபோர்முனையின் கட்டளைத் தளபதியாக இருந்து அவர் ஆற்றிய சாதனைகள் சாதராணமானவையல்ல. தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் அவருக்கென்றொரு தனி வரலாறு எழுதும் அளவிற்கு அவரது திறமைகள் எதிரியினால் கூட வியந்துபாக்கப்பட்டவை. அந்த சிறப்புமிக்க தளபதியின் வீரச்சாவு நிகழ்வு மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் அன்று நிகழ்தேறுகின்றது. அந்தநினைவுகளை என்றும் மறக்கமுடியாது.

வீரத்தளபதி பிரிகேடியர் ஆதவன் அவர்கள் அன்று ஆனந்தபுரமண்ணில் உக்கிரமான சமர்க்களம் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற காலட்டத்தில் தலைவர் அவர்களை பாதுகாப்பதில் உறுதியாக நின்று போராடினார். அன்றைய நாட்கள் அதாவது ஏப்ரல் மாதம் 2ம் நாள் கடாபி அண்ணாவிற்கு காலில் 50கெலிபர் துப்பாக்கியின் ரவை பட்டு படுகாயம் அடைகின்றார். அவரது கால் சிதறுகின்றது அவரை கொண்டு செல்வதற்காக பின்னகர்த்துகின்றார்கள். ஆனால் அன்று அந்த ஆனந்தபுர மண்ணில் நின்ற தாக்குதல் படகு ஒன்றின்கீழ் அவரையும் அதில் காயம் அடைந்த பல தளபதிகளையும் பாதுகாப்பாக வைக்கின்றார்கள். களமுனையில் நின்ற போராளிகளுக்கு 360 பாகையில் இருந்தும் தடைசெய்யப்பட்ட குண்டுகளின் தாக்குதல்கள் உக்கிரம் பெறுகின்றன. அன்று அந்த மண்ணில் கடாபி அண்ணாகூறிய இறுதி வார்த்தை 'போறவர்கள் தப்பி போங்கள் என்னை பாக்காதீர்கள் விடிகாலை ஆகின்றது என்னையும் சுட்டுப்போட்டுபோங்கள்' என்றுகூறிய வார்த்தைதான் காடபி அண்ணாவின் இறுதி வார்த்தைகளாக காணப்படுகின்றது.

இவ்வாறே பிரிகேடியர் விதுசா, பிரிகோடியர் துர்க்கா, ஆகியவர்கள் தளபதி லோறன்ஸ் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் முற்றுகையினை உடைத்துக்கொண்டு செல்வதற்காக தயாராகிக்கொண்டிருக்கின்றார்கள். அன்று ஏப்ரல் 2ம்நாள் அதிகாலை. ஆனந்தபுர மண்ணில் நடந்தேறிக்கொண்டிருக்கும் விடுதலைப்புலிகளின் அனைத்து தாக்குதல் திட்டங்களையும் தளபதி பானு அவர்கள் புலனாய்வுத்துறைப் ;பொறுப்பாளர் பொட்டு அவர்களின் ஒழுங்குபடுத்தலின் கீழ் ஏனைய தளபதிகளுக்கான கட்டளைகளை வழங்கிக்கொண்டிருக்கின்றார். இறுதியில் அவரின் கட்டளையினைகூட செயற்படுத்தமுடியாத நிலையில் களமுனையில் நின்ற தளபதிகள் தாங்கள் தாங்கள் நிலமைகளுக்கு ஏற்றவகையில் நடவடிக்கையினையும் தங்கள் பாதுகாப்பினையும் மேற்கொள்கின்றார்கள்.

இதில்தான் பிரிகோடியர் விதுசா அக்கா அவர்கள் காலில் காயமடைய களமுனையில் உள்ள மகளீர் போராளிகள் அவரை தூக்குவாதற்காக அந்த இடத்திற்கு விரைய, அவர்களை எதிர்தாக்குதல் நடத்துமாறு கூறிவிட்டு அந்த இடத்திற்கு பிரிகோடியர் துர்க்கா அவர்கள் விதுசா அக்காவினை காப்பாற்ற விரைகின்றார். இந்நிலையில்தான் விதுசா அக்காவிற்கும் வயிற்றில் எதிரியின் குண்டுபட்டு படுகாயம் அடைகின்றார். இருவரும் இருக்கும் இடத்திற்கு நகரமுடியாத அளவிற்கு எதிரியின் தாக்குதல் உச்சம் பெறுகின்றது. இரு தளதிகளுடனும் நின்ற போராளிகளுக்கு தங்களை சுட்டுப்போட்டு போங்கள் என்று கட்டளை இடுகின்றார்கள். அந்த கட்டளைக்கு அமைவாக அந்த போராளி செயற்படுகின்றார்.

எதிரியானவன் அன்றைய களமுனையில் நின்ற போராளிகளை சுற்று வட்டமாக நின்று எதிர்தாக்குதல்களை நடத்திக்கொண்டு நின்றார்கள். இந்நிலையில் எதிரியின் ஒருவகையான இரசாயன குண்டுத்தாக்குதல்களின் புகை முகத்தில் பட்டவுடன் முகத்தின் தோல் எல்லாம் உரிந்துவிடும் அவ்வளவு இரசாயன குண்டுகள்தான் ஆனந்தபுரமண்ணில் பயன்படுத்தப்பட்ட குண்டுகள்.

அன்று அந்த ஆனந்தபுர மண்ணில் காயம் அடைந்த ஏராளமான போராளிகள் இடத்தைவிட்டு நகரமுடியாத நிலையில் காணப்பட ஏலக்கூடியளவிலான போராளிகள் இடத்தனை விட்டு நகரும் போது அவர்களின் கழுத்தில் கிடந்தகுப்பிகளை கழட்டி காயம் அடைந்த போராளிகளுக்கு கொடுக்கும் போது அந்த போராளிகளின் நெஞ்சின் வலிகள் எவ்வாறு இருக்கும் என்பதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. இவ்வாறுதான் அந்த களமுனையில் நடந்தேறிய பலநிகழ்வுகள் இன்றும் அந்தபோராளிகளின் மனதில் இறுகப்பற்றி நிற்கின்றது.

போராடிய இறுதிக் களமுனைகளில் நின்றபோராளிகளுடன் களத்தில் போராடிய வீரத்தளபதிகள் எத்தனை போர் என்பதை எண்ணில் அடக்கிவிடமுடியாது. தளபதிகள் களத்தில் நிற்பதை விட தலைவர் அவர்கள் களத்தில் நிற்பதில் உறுதியாக இருந்தார். இதனை அவதானித்த தலைவர் அவர்களின் பாதுகாப்புத் தளபதிகள் தலைவர் அவர்களை பாதுகாப்பதில் உறுதியாக இருந்தார்கள்.

அந்தவகையில்தான் தலைவர் அவர்களை எப்படியாவது ஆனந்தபுர களமுனையில் இருந்து மீட்டுவிடவேண்டும் என்ற துணிச்சலான நடவடிக்கையினை, தலைவர் அவர்களின் வளர்ப்பில் உருவான போராளிகள் துணிகர மீட்பு நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டு பத்திரமாக மீட்டுச் செல்கின்றார்கள்.

இவ்வாறு அந்த ஆனந்தபுர மண்ணில் வீரவரலாறான வீரத்தளபதிகளை இன்றும் எங்கள் மனங்களில் இறுகபற்றுகின்றோம்..

 சுபன்