Showing posts with label சனல்4 தொலைக்காட்சி. Show all posts
Showing posts with label சனல்4 தொலைக்காட்சி. Show all posts

Wednesday, March 14, 2012

தேசியத் தலைவரின் இருப்பை அறியும் முயற்சி!!

இது ஒரு பல்கூட்டு முயற்சி. முடிந்துபோய்விட்டதாக சிறீலங்காஅரசு உத்தியோகபூர்வமாக அறிவித்த பின்னரும் அந்த இயக்கத்தின்மீதான தமிழ் மக்களின் நம்பிக்கை கொஞ்சம்கூட குறைந்து போய்விடவில்லை.

அந்த இயக்கத்தின் நடவடிக்கைகள் கடந்த 34 மாதங்களாக பகிரங்கமாக எதுவுமே நடைபெறாத போதும் இன்னும் தமிழ் மக்கள் அந்த இயக்கத்தின்மீது வைத்திருக்கும் நம்பிக்கை சிறிதளவேனும் குறைந்ததாக இல்லை. இன்றும்கூட அந்த இயக்கத்தின் மீள்வருகையையும் அதன் போராளிகளின் முகங்களையுமே தமிழ் மக்கள் வழிமேல் விழிவைத்து பார்த்து இருக்கின்றார்கள்.

இந்த உளவியல் உறுதியை என்றுமே கணக்கெடுக்கவும் கணித்துவிடவும் ஆளும் தரப்பால், ஆக்கிரமிப்பாளர்களால் முடிந்ததில்லை. முடிவதுமில்லை. இதற்கு ஒரு முடிவு காணும் முயற்சியாக சில நடவடிக்கைகளை, சில காட்சிப்படுத்தல்களை செய்தே ஆகவேண்டிய கட்டாயத்துக்குள் சிறீலங்கா இனவெறி அரசும், அதனுடைய பங்காளிகளான பிராந்திய வல்லாதிக்கமும் தள்ளப்பட்டுள்ளது.

மேற்கு நாடுகளுக்கும் இதனை ஒத்த தேவைகளும் இருக்கின்றன. மேற்கின் கதவுகளை இப்போது ஜனநாயக முறைப்படி தட்டிக்கொண்டிருக்கும் தமிழர்கரங்கள், அந்த வேண்டுகோள்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டால் இதே மென்முறையிலேயே தொடர்வார்கள் என்பதற்கு எந்தவொரு உறுதிப்பாடும் இல்லை. மேற்குலகுக்கும் இந்த உணர்வை சிதைக்கவேண்டிய கட்டாயமும் அவசியமும் மிக அதிகமாகவே தேவை.

இவர்களுடைய தேவைகைள் ஒருபுறம் இருக்க. இன்னொரு பக்கத்தில் ஊடகத்தின் தேவை என்றும் ஒன்றுள்ளது. ஊடகம் தன்னை நடுநிலையாளனாக காட்டுவதற்காக தமிழர் தரப்பையும் குற்றஞ்செய்ததாகவும் காட்டவேண்டிய தேவை உள்ளது. அப்போதுதான் அவர்களுக்கு நடுநிலை ஊடகம் என்ற நற்சான்றிதழ் (?) கிடைக்க வாய்ப்பிருக்கும்.

இது முழுக்க முழுக்க ஊடகம் தன்னை தக்க வைத்துக்கொள்ளவும் தன்னுடனான போட்டி தொலைக்காட்சிகளை வென்றுவிடவும் செய்யும் பலவித முயற்சிகளில் ஒன்று. இசைப்பரியாவின் படுகொலையை கடந்தமுறை காட்சிப்படுத்திய தொலைக்காட்சி அதன்போது இசைப்பிரியாவின் உயிரற்ற உடலை காட்டியதுடன் அடுத்த காட்சியில் இசைப்பிரியா உயிருடன் இருந்த காலத்தின் காட்சி ஒன்றை ஒளிபரப்பும்போது இசைப்பிரியா கரும்புலி உடையுடன் பாடல் பாடுவதாகவே காட்டி இருந்தது.

இசைப்பிரியா புடவையுடன் செய்தி வாசிக்கும் காட்சிகளும், சாதாரண பெண்போல இருக்கும் காட்சிகளும் ஏராளம் இருக்கும்போது கரும்புலி உடையுடன் காட்சிப்படுத்தவேண்டிய தேவை என்ன? எந்தவொரு மேற்கின் ஊடகமும் முழுக்க முழுக்க எமக்கும் எமது சுயநிர்ணய உரிமை போராட்டத்துக்கும் ஆதரவானதாக இருந்ததில்லை. இருக்கபோவதுமில்லை. சில வேளைகளில் எமக்கு ஒரு சில மனித உரிமை தளங்களில் உதவக்கூடியவர்களாக இருப்பார்கள். அவ்வளவுதான்.

அத்துடன் தலைவரின் இருப்பை பற்றிய எந்தவொரு தகவலும் இன்னும் வெளிவராத நிலையில் தலைவரை பற்றிய கீழ்தரமான காட்சிப்படுத்தலை வெளிப்படுத்துவதன் மூலம் அதற்கு மறுப்பாக தலைவரின் இருப்பு சம்பந்தமான ஒளிப்பதிவு ஏதும் வெளிவரக்கூடும் என்றும் முகர்ந்து திரியும் வல்லாதிக்க புலனாய்வின் முயற்சிதான் தலைவரை பற்றிய பிழையான தகவல் கசிவுகள்.


இந்த ஒரு காட்சிப்படுத்தலின் விளைவாக ஒரு தலைகீழ் மாற்றத்தை எதிர்பார்த்து பல சக்திகள் காத்திருக்கின்றன. வரப்போகும் காட்சிப்படுத்தலை பார்த்துவிட்டு எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு முகம்புதைத்து கிடக்கப்போகின்றோமா? இல்லை.

நந்திக்கரை ஓரத்தில் 2009 மே மாதத்தில் சிங்களஅரசு காட்டி எதனை சாதிக்க நினைத்ததுவோ அதனை இப்போது சில புலம்பெயர் தமிழ் பினாமிகளை வைத்து தொலைக்காட்சி ஒன்றுக்கு கொடுத்து அதன் மூலம் மீண்டும் சாதிக்க எடுக்கும் முயற்சி என்று புரிந்துகொண்டு எழப்போகின்றோமா?

ஏகன்

உண்மைக்குப் புறம்பான, ஆதாரமற்ற செய்திகளை பார்த்து மக்கள் குழப்பமடையத் தேவையில்லை-எஸ்.ஜெயானந்தமூர்த்தி

தமிழ் ஊடகங்களும், சில தமிழ் இணையத்தளங்களும் குளப்பகரமான தகவல்களை வெளியிடுவது குறித்து தமிழ் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி வேண்டுகோள்விடுத்துள்ளார்.

உண்மைக்குப் புறம்பான, ஆதாரமற்ற செய்திகளை பார்த்து மக்கள் குழப்பமடையத் தேவையில்லை.

பிரித்தானியாவில் இன்று இரவு சனல் 4 தொலைக்காட்சியின் “இலங்கையின் கொலைக்களம்” ஆவணப்படம் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் தேசிய தலைவர் தொடர்பான சர்ச்சைக்குரிய, உண்மைக்குப் புறம்பான தகவல்கள் வெளிவரவுள்ளதாக தெரியவருகிறது.

இதுவரை காலமும் சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் சிறீலங்காவில் தமிழ் மக்களின் படுகொலைகளை தொடர்பான ஆதாரபூர்வமான உண்மைத் தகவல்களை வெளிக் கொண்டுவந்துள்ளது.

ஆனால், தற்போது ஒரு சிலரின் வேண்டுதலுக்கமைய தேசிய தலைவர் பற்றிய உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிடவுள்ளதாக அறிய முடிகிறது.

இது ஒரு சிலரின் வேண்டுதலுக்கு இணங்க சனல் 4 இவ்வாறு வெளியிடவுள்ளது. எனினும், அதன் தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார், சர்ச்சைக்குரிய ஆவணப்படம் குறித்து தம்மிடம் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இல்லையெனவும் குறிப்பிட்டுள்ளார்.

போர் நடந்த பகுதியில் இறுதி நேரத்தில் என்ன நடந்தது என்பது எவருக்கும் தெரியாத மர்மம். எனவே தேசிய தலைவரின் விடயமும் மர்மமாகவே உள்ளது.

தலைவர் தொடர்பான விடயத்தில் மக்கள் குழப்பமடையத் தேவையில்லை. மர்மம் வெளிவருவதற்கு இன்னும் சில காலம் எடுக்கும் என எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Thursday, March 01, 2012

12 வயது சிறுவன் கொடூரமாக கொல்லப்பட்ட காட்சியுடன் சனல் 4 இன் புதிய வீடியோ!

இலங்கையின் கொலைக்களம் – 02 ஐ வெளியிட்டு உள்ளது பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி அலைவரிசை.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகின்ற நிலையில் இலங்கையின் கொலைக்களம் – தண்டனைக்கு உட்படுத்தப்படாத போர்க் குற்றங்கள் என்கிற இப்புதிய ஆவணப் படம் வெளிவந்து உள்ளது.

இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்றன என்று கூறப்படுகின்ற நான்கு குற்றங்கள் தொடர்பாக இப்படத்தில் விசேடமாக ஆராயப்பட்டு உள்ளது. இக்குற்றங்களுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யார்? என்றும் ஆய்வு செய்யப்பட்டு இருக்கின்றது.

*யுத்த சூனிய பிரதேசத்தில் பொதுமக்கள் மீதும் வைத்தியசாலைகள் மீதும் நடத்தப்பட்ட பயங்கரமான எறிகணைத் தாக்குதல்கள்

*பல்லாயிரக் கணக்கான பொதுமக்களுக்கு உணவு, மருந்து ஆகியன மறுக்கப்பட்டதுடன் யுத்த வலயத்துக்கு மனிதாபிமான உதவிகள் வர விடாமல் தடுக்கப்பட்ட சம்பவங்கள்

*மீட்பு நடவடிக்கையின்போது பொதுமக்கள் கொல்லப்பட்டமையுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க கைதிகள் நிர்வாணம் ஆக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள்

*12 வயது சிறுவன் ஒருவன் மிக கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஆகியனவே இந்த ஆவணப் படத்தில் முக்கியமாக காட்டப்பட்டு இருக்கின்ற நான்கு வகையான போர்க் குற்றங்கள்.

இவ்வாவணப்படத்தின் மேலதிக விபரங்களை சனல் 4 நிறுவனத்தின் இணையத்தளத்தில் பார்வையிடலாம்:

http://www.channel4.com/info/press/programme-information/sri-lankas-killing-fields-war-crimes-unpunished

Sunday, February 19, 2012

மீண்டும் குழப்பத்தில் இலங்கை அரசு! புதிய காணொளியை வெளியிடவுள்ள சனல் 4

‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்தை தயாரித்து வெளியிட்ட பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி, சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும் மற்றொரு ஆவணப்படத்தை அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடவுள்ளது.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே இந்த ஆவணப்படம் வெளியிடப்படவுள்ளது.

சனல்-4 வெளியிட்ட ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்தை தயாரித்து வெளியிட்ட ஜோன் சினோ என்ற செய்தி வழங்குனரே இந்த ஆவணப்படத்தையும் வெளியிடவுள்ளார்.

ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு நெருடிக்கடியை ஏற்படுத்தும் வகையிலேயே இந்த ஆவணப்படம் வெளியிடப்படவுள்ளதாக சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் கூறியுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, சனல்-4 தொலைக்காட்சி இந்த ஆண்டுக்கான தமது நிகழ்சித் தயாரிப்பு தொடர்பாக வெளியிட்ட தகவலில், ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்தின் இரண்டாவது பாகத்தை - புதிய போர்க்குற்ற ஆதாரங்களுடன் வெளியிடப் போவதாக கூறியிருந்தது.

Saturday, December 17, 2011

இலங்கை அரசின் குட்டுகளை வெளியிடும் சனல் 4இன் செய்திகக் காணொளிகள்! (காணொளி)

வெளியாகியுள்ள கற்றுக்கொண்ட பாடத்திற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் பொதுமக்களை குறிவைத்து இராணுவம் எத் தாக்குதலையும் நடத்தவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக யுத்த சூனியப் பிரதேசத்தில் இலங்கை இராணுவம் எத் தாக்குதலையும் நடத்தவில்லை என அவ்வறிக்கையில் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிறிய அளவு பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் அவ்வறிக்கை மேலும் தெரிவித்துள்ளமை வேடிகையான விடையம் என சனல் 4 தொலைக்காட்ச்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அது செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஐ.நாவின் அறிக்கையை அது இணைத்து சில ஆதாரங்களையும் சுட்டிக்காட்டியுள்ளது.

கொலைக்களங்கள் என்னும் ஆவணப்படத்தை தயாரித்த "காலம் மக்ரே" அவர்கள் இதில் பல விளக்கங்களைக் கொடுத்துள்ளார். மேலும் "தண்டிக்கப்படாத குற்றங்கள்" என்ற தலைப்பில் மற்றுமொரு 30 நிமிட ஆவணப்படம் ஒன்றை சனல் 4 தொலைக்காட்ச்சி வெளியிட உள்ளது. வரும் ஜனவரி மாதம் வெளியாகவுள்ள இந்த ஆவணத் திரைப்படத்தில் புதிய பல போர் குற்ற ஆதாரங்கள் இணைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Wednesday, June 15, 2011

இலண்டனில் அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்டு நாடுகடத்தபடவுள்ள தமிழர்கள் நிறுத்தபட வேண்டும்: சனல் 04

இலங்கையில் இருந்து யுத்தம் காரணமாக இலண்டன் வந்து அகதி அந்தஸ்த்து மறுக்கப்பட்ட தமிழர்கள் நாடுகடத்தப்படுதல் நிறுத்தபட வேண்டும் என்று சனல் 4 தொலைக்காட்சி இன்று கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கு இந்த வாரம் சுமார் 40 இலங்கை தமிழர்கள்வரை நாடுகடத்தபட உள்ளனர் எனவும் தொடர்ந்தும் பலர் கடத்தப்பட உள்ளதாகவும் அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் இவர்கள் நாடுகடத்தப்பட்டால் இலங்கையில் அவாகள் மேன் மேலும் துன்புறுத்தபடலாம் என சனல் 4 தொலைக்காட்சி இன்றய தனது செய்தியில் தெரிவித்துள்ளது. இதே நேரம் பிரித்தானிய குடிவரவு திணைக்களம் தமிழர்களின் இரகசியங்களை இலங்கை அரசிற்கு கசிய விட்டுள்ளதாகவும் அத்தொலைக்காட்சி சுட்டிக்காட்டபட்டுள்ளது.

Wednesday, June 01, 2011

குத்துயிரும் குலையுமாக உள்ள பெண்போராளிகளைக் கொல்லும் இராணுவம்: புதிய ஆதாரம் ! தயாராகிறது சனல் 4

குத்துயிரும் குலையுமாக உள்ள பெண்போராளிகைக் கொல்லும் இராணுவத்தினரது புதிய ஆதாரம் வெளியிடப்படவுள்ளது! போரில் காயமடைந்து, மற்றும் வான்படையின் குண்டு வீச்சில் காயமடைந்து உயிருக்குப் போராடிக்கொண்டு இருக்கும் பெண்போராளிகளை செத்த உடலங்களோடு தூக்கிப் போட்டும் இலங்கை இராணுவத்தின் மற்றுமொரு கொடூரக் காட்சிகள் அடங்கிய வீடியோவை சனல் 4 தொலைக்காட்சி வெளியிட உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை போர்குற்றம் தொடர்பான பல காணொளிகளை தொடர்ந்து வெளியிட்டுவரும் சனல் 4 தொலைக்காட்சி வரும் ஜூன் 14ம் திகதி புது யுத்தக்குற்ற காணொளி ஒன்றை வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 1 மணித்தியாலம் நடக்கவிருக்கும் இந் நிகழ்ச்சியில் இலங்கையில் நடைபெற்ற போர்குற்றங்கள் தொடர்பாக அலசி ஆராயப்படவுள்ளதாகவும் அது செய்தி வெளியிட்டுள்ளது.

இதே வேளை இந்த புதிய ஆதாரக் காணொளிகளில், பெண்போராளிகளைக் கொல்வதும், உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் தமிழ் பெண்களை இறந்த உடலங்களோடு தூக்கிப் போட்டு அவர்களையும் கொலை செய்வதையும் இக் காணொளி கொண்டுள்ளதாக அது தெரிவித்துள்ளது . இக் காணொளி ஜூன் 14 ஒளிபரப்பாகவுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் மேலும் நெருக்கடிக்குள் தள்ளப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Wednesday, May 19, 2010

சனல்4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள மற்றும் ஒரு போர்க்குற்றக் காட்சிகள்!

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின்போது இலங்கைப் படையினரால் பிடிக்கப்பட்ட அப்பாவிப்பொதுமக்கள் கொலை செய்யப்பட்ட காணொளியை வெளியிட்ட சனல் - 4 தொலைக்காட்சி, அவ்வாறு இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள் இலங்கை படைச்சிப்பாய் ஒருவரினால் எடுக்கப்பட்டவை என்றும் தெரிவித்துள்ளது.

அத்துடன், கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட காணொளி தொடர்பாக மேலும் ஆதாரங்களை பெற்றுக்கொள்ளும் வகையில் அந்த படுகொலைகளை மேற்கொண்ட இலங்கை இராணுவ சிப்பாய் ஒருவரினதும் போர் முனையில் கடமையிலிருந்த இராணுவ தளபதிகளில் ஒருவரினதும் கருத்தினையும் சனல் - 4 தொலைக்காட்சி மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டிருக்கிறது.



"எமது தளபதி எல்லோரையும் படுகொலை செய்யுமாறு உத்தரவிட்டார். ஆகவே, நாங்கள் எல்லோரையும் கொலை செய்தோம்" - என்று படுகொலைகளை மேற்கொண்ட இராணுவ சிப்பாய் ஒருவர் சனல் - 4 தொலைக்காட்சிக்கு தெரிவித்தார் என்றும் - "விடுதலைப்புலிகளின் முக்கியமானவர்கள் எவரையும் வைத்துப் பாதுகாக்கும் திட்டம் எதுவும் இல்லாததால், அவர்கள் அனைவரும் படுகொலை செய்யப்பட்டார்கள். இதற்கான உத்தரவு நிச்சயமாக உயர்மட்டத்திலிருந்தே கிடைத்திருக்கவேண்டும்" - என்று இலங்கை இராணுவத்தின் மூத்த தளபதிகளில் ஒருவர் சனல் - 4 தொலைக்காட்சிக்கு தெரிவித்தார் என்றும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வந்த விடுதலைப்புலிகள் அமைப்பு உறுப்பினர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் என்ன நடந்தது என்று கேட்டபோது, குறிப்பிட்ட இலங்கை இராணுவ சிப்பாய் பதிலளிக்கையில் -

முதலில் நாங்கள் அவர்களை கைது செய்தோம். பின்னர் சித்திரவதை செய்தோம். பின்னர் கொலை செய்தோம். போரின் இறுதி நாட்களில் நாங்கள் எல்லோரையும் கொலை செய்தோம். பெருந்தொகையான சடலங்கள் அங்கு காணப்பட்டன. அவ்வாறு கொலை செய்யுமாறு எமது தளபதி எங்களுக்கு உத்தரவிட்டார்" - என்று கூறினார்.

சனல் - 4 தொலைக்காட்சியினால் தொடர்பு கொள்ளப்பட்ட குறிப்பிட்ட இலங்கை இராணுவத்தின் மூத்த தளபதி மேலதிக தகவல் ஒன்றினை தெரிவிக்கையில் -

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் 13 வயது மகன் இலங்கை இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு அவரது தந்தையார் - தலைவர் பிரபாகரன் - எங்கு உள்ளார் என்று விசாரணை செய்யப்பட்டு பின்னர் சுடப்பட்டார் என்று கூறியுள்ளார்.

இந்த செய்திகள் மற்றும் படங்கள் குறித்து பிரிட்டனில் உள்ள இலங்கை தூதரகத்திடம் சனல் - 4 செய்தி நிறுவனம் கேட்டபோது -

இலங்கை படையினர் மனிதாபிமான நடவடிக்கையினையே கடந்த வருடம் மேற்கொண்டிருந்தனர் அதில் பொதுமக்கள் எவருக்கும் எந்த இழப்பும் எற்படவில்லை. அவ்வாறு படையினர் குற்றச்செயல்களில் ஈடுபட்டார்கள் என்று வெளிவரும் செய்திகள் எதிலும் எந்த உண்மையும் இல்லை.

சனல் - 4 தொலைக்காட்சியினால் தற்போது வெளியிடப்பட்ட தகவல்கள் குறித்து தற்போது நான் எந்த பதிலும் கூறமுடியாது. இது தொடர்பான காணொளியை அனுப்புங்கள். அதன் பின்னர்தான் அது குறித்து கருத்து கூறமுடியும்.

இலங்கைப் படையினர் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு இலங்கை அரச அதிபர் குழு ஒன்றினை நியமித்துள்ளார் - என்று பிரிட்டனுக்கான இலங்கை தூதுவர் பதிலளித்துள்ளார்.