Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Wednesday, January 08, 2014

தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளான விடுதலைப் புலிகள் தீவிரவாதிகளா..?

விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள், அவர்கள் எங்கிருந்து உருவாகினார்கள், அவர்களின் போராட்ட வரலாறு என்ன, அவர்கள் எதற்காகப் போராடினார்கள்? என்று தெரிந்தும் சில அடிவருடிகள் சந்தர்ப்பத்திற்கேற்ப பச்சோந்திகளாக மாறி.....
... “விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம்” என சிங்களவர்களுடன் சேர்ந்து அறிக்கைகள் விட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
இறுதி யுத்தத்தில் நிராயுதபாணிகளாக அந்த யுத்த களத்திலே நின்றிருந்த போராளிகளையும், பொதுமக்களையும் இனம் காண முடியாத சிங்கள இராணுவம், அங்கே தலைமுடி கத்தரிக்கப்பட்டிருந்த சில பெண் போராளிகளை இனம் கண்டு கைது செய்துதான் அவர்களூடாக அவர்களுக்குத் தெரிந்த மற்றைய போராளிகளை கைது செய்ய முடிந்தது. சில போராளிகள் யுத்த களத்தில் காயம் அடைந்திருந்த வேளையில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சில போராளிகள், சில தளபதிகள் சிங்கள அரசப் படைகளை எதிர்த்து கண்ணுக்கு எட்டும் தூரம் வரை நின்று போராடியிருக்கிறார்கள். சிங்களப்படைகள் நெருங்க நெருங்க துப்பாக்கி ரவைகள் முடியும் வரை நின்று போராடியிருக்கிறார்கள். அவர்கள்தான் அங்கே உடனடியாக கைது செய்யப்பட்டு அந்தந்த இடங்களில் வைத்தே உடனடியாக பழி தீர்க்கப்பட்டவர்கள் ஆவார்கள்..!
உலகில் எந்த யுத்த களத்திலும் அதியுச்ச போர் நடந்து கொண்டிருக்கும் ஒரு குறுகலான சிறிய இடத்தில் வைத்து அந்தப் போராட்ட வேளையிலே யுத்த கோரத்தாண்டவங்களை நேரடியாக எவரும் ஒலிப்பரப்பு செய்து கொண்டிருக்க மாட்டார்கள்.
ஆனால், விடுதலைப் புலிகளோ… கடும் யுத்தம் நடந்து கொண்டிருக்கையில், ஒரு சிறிய சரக்கு வாகனத்தில் வைத்து தவபாலன் (இறைவன்)  என்ற போராளி தான் சுடப்பட்டு இறக்கும் வரை “புலிகளின் குரலை” இறுதி வரை ஒலிக்கச் செய்து கொண்டிருந்தார். அவ்வாறு சில போராளிகளும் பட ஒளிப்பதிவுகள் செய்தமையால்தான் மக்களின் பேரவலங்கள் இன்று உலகின் பார்வைக்கு வந்தது! பின்னால், சிங்கள இராணுவ வீரர்கள் தங்கள் கைகளில் அகப்பட்ட இளைஞர்கள், யுவதிகளையும், சில போராளிகளையும், பன்னிரெண்டு வயதேயான பாலச்சந்திரனையும் சுட்டுக்கொல்வதை தங்கள் கைபேசியூடாக படம் பிடித்து வைத்திருந்ததை சில சுயலாபங்களுக்காக வெளியிட்டிருந்தனர்.
மக்களோடு மக்களாக முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போராளிகளை இனம் காண சிங்களப் படைகளால் முடியாமல் போகவே, சில பொது மக்களை பிடித்து துன்புறுத்தி மிரட்டியதால் அந்த மக்கள் மூலம் சில போராளிகள் இனம் காணப்பட்டார்கள். சிலரை ஒலிபெருக்கிகள் மூலம் “சரணடையுமாறு” அறிவுறுத்தப்பட்டுக் கொண்டிருக்கையில் தங்கள் பெற்றோர்கள், உற்றார் உறவினர்கள் தங்களால் பாதிப்படையக்கூடாது என்பற்காக தாங்களாகவே முன் வந்து சரணடைந்தார்கள். சில போராளிகளுக்குத் தெரிந்தவர்கள், உறவினர்கள் இல்லாததால் அவர்கள் சரணடையாமல் மக்களோடு மக்களாகவே வாழ்கின்றனர். இக்கருத்துக்களை ஏன் இங்கே பதிவு செய்கிறேன் என்றால், “மக்கள் வேறு, புலிகள் வேறு” என்று புலம்பிக் கொண்டிருக்கும் சில சர்வதேச பரப்புரையாளர்களுக்கு தெளிவுபடுத்தத்தான்.
இனியாவது புரிந்து கொள்ளுங்கள்… அங்கே, இறுதிவரை போராடியது அங்கே வாழ்ந்து கொண்டிருந்த ஈழமக்களுக்குச் சொந்தமான புலிகள்தான் என்று! இனி ஒரு போதும் மக்களையும் புலிகளையும் பிரித்து எந்த சக்திகளாலும் இனம் காணமுடியாது!.
இவைகள் ஒரு புறமிருக்க, விடுதலைப் புலிகளின் பலத்தையும், அவர்களுக்கு சர்வதேச ரீதியாக எழுந்த பேராதரவையும் பார்ப்போம்.
இராணுவக் கட்டமைப்புடன் நின்றுவிடாமல்… எந்தவிதமான வெளிநாட்டு உதவிகளுமின்றி எந்த நோக்கத்திற்காக விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்தார்களோ… அந்த நோக்கத்தின் அடிப்படையில் மக்களுக்கு நீதியான, நியாயமான, சுதந்திரமான, பாதுகாப்பான நல்லாட்சி வழங்கும் நோக்கிலே பல அமைப்புக்களையும், பல உள்கட்டுமானங்களையும் உருவாக்கினார்கள். பிறந்த குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அனைவருக்கும் சென்றடையக்கூடிய சகலவிதமான நலத்திட்டங்களையும் உருவாக்கினார்கள்.
காவல்துறையில் இருந்து நீதிமன்றுகள், வங்கிகள், தொலைக்காட்சி சேவைகள், வானொலி சேவைகள், பத்திரிகைகள் என ஓர் அரசாங்கத்திற்குத் தேவையான… இன்னும் ஏராளமான கட்டமைப்புக்களை உருவாக்கியிருந்தனர். உலக வரலாற்றில் தனித்தனி நாடுகள் வைத்து அரசாங்கம் நடத்திக் கொண்டிருக்கும் எத்தனையோ நாடுகள் வறுமை, வரட்சி, உணவுப் பஞ்சம், கலாச்சார சீரழிவு மற்றும் மக்களை கட்டுக்கோப்புக்குள் வைத்திருக்க முடியாமல், அந்த மக்களே அரசைக் கலைத்து ஆட்சிக் கவிழ்ப்பு செய்த வரலாறுகளும் நிறைய உண்டு! இந்த நாடுகளுக்கெல்லாம் பலநாட்டு உதவிகள் கிடைத்தும், தனிநாடு, தனி அரசாட்சி என்று இருந்தும் அங்கு எல்லாக் கொடுமைகளும் இன்றும், இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது!
உலக நாடுகளின் பாரிய உதவிகளுடன் இலங்கை அரசாங்கம் பல தடைகளைப் போட்டு ஒரு சிறுபான்மை இன மக்களை நசுக்கிக் கொண்டு வர, அந்த மக்களே விழிப்படைந்து, எழுச்சியடைந்து எந்த நாட்டு உதவிகளுமின்றி விடுதலைப் புலிகளாக உருவாகி திருப்பித் தாக்கத் தொடங்கி கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக போராடி தமக்கான ஒரு சுதந்திர தேசத்தை உருவாக்கியிருந்தார்கள்.
பூகோள ரீதியாக இந்தியா தவிர வேறு எந்த நாடுகளும் அருகினில் இல்லை. இந்தியா கூட கடல் கடந்துதான் இருக்கிறது! உதவிகள் கேட்டு ஓடவும், உயிரைப் பாதுகாக்க வேறு இடங்களில் போய் பதுங்கிக் கொள்ளவும் எந்தவிதமான பாரிய இடங்களும் இல்லை! ஒரு சிறிய தேசம் அது! அந்தச் சின்னஞ்சிறிய தேசத்தில் துறைமுக வசதிகள் இல்லை, விமானத்தளங்கள் இல்லை, சீரான போக்குவரத்து வசதிகள் இல்லை, எரிபொருள் வளங்கள் இல்லை, எந்தவிதமான மூலவளங்களும் இல்லை..! பல நெருக்கடிகள், பொருளாதாரத் தடைகள், பலநாட்டு மறைமுக அழுத்தங்கள் இன்னும் நிறைய இருந்தும்…. எப்படி உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு ஒரு விடுதலைப் படையை உருவாக்கி முப்படைகளையும் கட்டியமைத்து தனியாக ஒரு தேசத்தை உருவாக்கி (ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொள்ளாதது மட்டும்தான்) தனி அரசாங்கத்தை நடத்திக் காட்ட முடிந்தது?
விடுதலைப் புலிகளை “தீவிரவாதிகள்” என்று விமர்சித்து கொச்சைப்படுத்துபவர்களே…! உங்கள் சுயமூளையுடன் சற்று சிந்தியுங்கள்..!
உலகம் தோன்றிய காலம் முதல் இன்று வரையும் உலகில் எந்த விடுதலை அமைப்புக்களும் விடுதலைப் புலிகள் போல் வளர்ந்ததும் இல்லை!, வாழ்ந்ததும் இல்லை!
இந்த இருபத்தியோராம் நூற்றாண்டுவரை உலகில் எந்த விடுதலை அமைப்பு, விடுதலைப் புலிகள் போல் போராடினார்கள்?
* உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பும் தனக்கென தனியாக இராணுவச் சீருடைகளை அணிந்ததில்லை!
*உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பினரும் தங்களது படை நடவடிக்கைகளுக்கு பெயர் சூட்டி அழைத்ததில்லை!
* உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பினரும் போரில் இறந்த தங்கள் வீரர்களுக்கு தனியாக இடம் ஒதுக்கி கல்லறைகள் (துயிலும் இல்லங்கள்) கட்டியதில்லை!
* உலகில் எந்தவொரு விடுதலை அமைப்பும் முப்பதாயிரத்துக்கு மேற்பட்ட வீரர்களை இழந்ததில்லை!
*உலகில் எந்தவொரு விடுதலை அமைப்பினரையும் உலக அரங்கில் பேச்சுவார்த்தைகளுக்கு சர்வதேச நாடுகள் அழைத்ததில்லை!
* உலகில் எந்தவொரு விடுதலை அமைப்பினருக்கும் ஏராளமான சமூக, போராட்ட, செய்தி இணையத்தளங்கள் இருந்ததில்லை!
* முகநூல்களிலும் (facebook) வேறு சமூக, செய்தி இணையத்தளங்களிலும் தலைவர் பிரபாகரன் பற்றியும், விடுதலைப் புலிகள் போராட்டம் பற்றியும் முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வந்தது போல், வேறு எந்த விடுதலை அமைப்பினர் பற்றியும் பரவலாக செய்திகள் வந்ததில்லை!
* விடுதலைப் புலிகளுக்கு உலகினில் வாழும் அனைத்து தமிழர்களிடமும் இருந்து கிடைக்கப் பெற்ற பெரும் செல்வாக்கு போல், உலகினில் வாழும் வேறு எந்த விடுதலை அமைப்புக்கும் கிடைத்ததில்லை!
* விடுதலைப் புலிகள் தீவிரவாத இயக்கம் என்றால்… எப்படி முப்படைகளையும் கொண்ட மரபுவழி இராணுவமாக வளர முடிந்தது? அது எப்படி சாத்தியாமானது?
* அவர்கள் தீவிரவாதிகள் என்றால், எப்படி மக்களின் பெரும்பலம் அவர்களுக்குக் கிடைத்தது?
பிறகு ஏன் விடுதலைப் புலிகளை முப்பதிற்கும் மேற்பட்ட நாடுகள் சேர்ந்து அழிக்க வந்தன…? அந்த சிறிய தேசத்தில் இருந்து அவர்கள் வளர்ந்த அசுர வளர்ச்சிதான் காரணம்! அவர்களின் வளர்ச்சியை ஜீரணித்துக் கொள்ள முடியாத இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் அவர்களையும், அவர்களின் போராட்டத்தையும் அழித்து விட முடிவு செய்து, போர் தொடுத்து மக்களை துடிக்கத் துடிக்க கொன்று குவித்து, போராளிகளை கொன்றும், சில போராளிகளைக் கைது செய்தும் சகல இடங்களையும் கைப்பற்றினார்கள். ஆனால், அவர்களுக்குக் கிடைத்ததோ விடுதலைப் புலிகளின் சில ஆயுதங்கள் மட்டுமே! அவ்வாறெனில் சில நூற்றுக்கணக்கான தளபதிகளும், பல ஆயிரக்கணக்கான போராளிகளும் எங்கே போனார்கள்? அவர்கள்தான் அங்கிருந்த தமிழ் பேசும் மக்கள் என்பதை இன்றுவரையும் விடுதலைப் புலிகளை “தீவிரவாதிகள்” என்று சொல்லும் பலர் ஏற்றுக்கொள்வதில்லை!
இன்று வரையும் சில சர்வதேச நாடுகளாலும், சில விசக்கிருமிகளாலும் “தீவிரவாதி” என்றழைக்கப்படும் தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒரு தனி மனிதனாக ஒரு விடுதலைப் படையை உருவாக்கி, மக்களுக்கான பல நன்மைகளும், பயன் பெறக்கூடியதுமான பல உள்கட்டமைப்புக்களை உருவாக்கினார்.
அந்த உள்கட்டமைப்புக்கள் பின்வருமாறு:
* தமிழீழ காவல்துறை, குற்றத் தடுப்புக் காவல் துறை, குற்றப் புலனாய்வுப் பிரிவு.
* தமிழீழ வைப்பகம்.
* தமிழர் புனர்வாழ்வுக் கழகம்.
* தமிழர் புனர்வாழ்வு அபிவிருத்திக் கழகம்.
* சமூக பொருளாதார அபிவிருத்தி வங்கி.
* கிராமிய அபிவிருத்தி வங்கி.
* அனைத்துலகச் செயலகம்.
* நந்தவனம் (வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோர்களுக்கான தொடர்பாடல் சேவை மையம்)
* சுங்க வரித்துறை.
* தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்.
* அரசறிவியற் கல்லூரி.
* வன வளத்துறை.
* தமிழீழ நிதித்துறை.
* தமிழீழ நீதித்துறை, நீதிமன்றுகள்.
* கலை பண்பாட்டுக்கழகம்.
* மருத்துவப் பிரிவு.
* திலீபன் சிறப்பு மருத்துவமனை.
* பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை.
* மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு.
* சுகாதாரப் பிரிவு.
* ஆவணப்படுத்தல், பதிப்புத்துறை, வெளியிட்டுப் பிரிவு.
* போக்குவரத்து கண்காணிப்புப் பிரிவு.
* நிர்வாக சேவை.
* அனைத்துலக தொலைத்தொடர்பு செயலகம்.
* மீன்பிடி வளத்துறை.
* விழிப்புக்குழு (கிராமங்களுக்கான இரவுப் பாதுகாப்பு)
* தொழில் நுட்பக் கல்லூரி.
* சூழல் நல்லாட்சி ஆணையம்.
* தமிழீழ பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சித்துறை.
* தமிழீழ விளையாட்டுத்துறை.
* தமிழீழ காலநிலை அறிவுறுத்தல் வாரியம்.
* தமிழீழ போக்குவரவுக் கழகம்.
* மனிதவள செயலகம் (தமிழீழ கிராம சேவகர் பிரிவு).
* வளங்கள் பகுதி.
* மக்கள் தொடர்பகம் (மக்கள் குறை நிறைகளை தலைவரிடம் கொண்டு செல்லும் பிரிவு)
* விலங்கியல் பண்ணைகள்.
* விவசாயத் திணைக்களம்.
* தமிழ்மொழி காப்பகம்.
* தமிழீழ சட்டக்கல்லூரி.
* தமிழீழ கல்விக் கழகம்.
* தமிழீழ கல்வி மேம்பாட்டுப் பேரவை.
* காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் குழந்தைகளுக்கானது).
* செஞ்சோலை (ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கானது).
* செந்தளிர் (ஐந்து வயதிற்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கானது).
* வெற்றிமனை (வலுவிழந்தோருக்கானது)
* அன்பு முதியோர் பேணலகம்.
* இனிய வாழ்வு இல்லம். (காது கேளாத, வாய் பேசாத, பார்வை இல்லாத ஊனமுற்ற சிறுவர் சிறுமிகளுக்கானது)
* சந்தோசம் உளவள மையம் (மனநோயாளிகளுக்கானது).
* நவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த போராளிகளுக்கானது)
* மயூரி இல்லம் (இடுப்பின் கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது)
* சீர்திருத்தப் பள்ளி.
* முரளி முன்பள்ளி (ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆரம்பப் பள்ளி).
* புனிதபூமி மகளிர் காப்புத்திட்டம்
* உதயதாரகை (விதவைகளுக்கானது).
* பெண்கள் மறுவாழ்வு அபிவிருத்தி மையம்.
* பசுமை வேளாண் சேவை (விவசாயிகளுக்கானது).
* எழுகை தையல் பயிற்சி மையம்.
* மாணவர் அமைப்பு.
* பொத்தகசாலை (அறிவு அமுது).
* ஒளிப்பட பதிவுப் பிரிவு. திரைப்பட வெளியிட்டுப் பிரிவு.
* நிதர்சனம் (திரைப்படத் தயாரிப்பு).
* தர்மேந்திரா கலையகம் (திரைப்பட கலைகள் சம்மந்தமானது).
* விடுதலைப்புலிகள் செய்தி இதழ்.
* சுதந்திரப் பறவைகள் (பெண்கள் செய்தி இதழ்).
* ஈழநாதம் (தினச்செய்தி பத்திரிக்கை).
* வெளிச்சம் (மாத சஞ்சிகை).
* நாற்று (மாத சஞ்சிகை).
* பொற்காலம் வண்ணக் கலையகம்.
* அருச்சுனா புகைப்படக் கலையகம்.
* ஒளிநிலா திரையரங்கு.
* புலிகளின் குரல் வானொலி.
* தமிழீழ வானொலி.
* தமிழீழ தேசியத் தொலைக்காட்சி.
* பல சமூக செய்தி இணையத் தளங்கள்.
* தமிழீழ இசைக்குழு.
* காலணி (பாதணி உற்பத்தி மையம்)
* சேரன் உற்பத்திப் பிரிவு.
* சேரன் வாணிபம்.
* சேரன் சுவையகம்.
* சேரன் வெதுப்பகம்.
* சேரன் அரைக்கும் ஆலை (அரிசி உற்பத்தி).
* பாண்டியன் உற்பத்திப் பிரிவு.
* பாண்டியன் சுவையூற்று.
* பாண்டியன் பல்பொருள் வாணிபம்.
* சோழன் தயாரிப்புகள்.
* பொன்னம்மான் உரைவகை வாணிபம்.
* தென்றல் இலத்திரனியலகம்.
* தமிழ்மதி நகை மாடம்.
* தமிழ்நிலா நகை மாடம்.
* தமிழரசி நகை மாடம்.
* அந்திவானம் பதிப்பகம்.
* இளந்தென்றல் குடிவகைப் பிரிவு.
* இளவேனில் எரிபொருள் நிலையம்.
* இளந்தென்றல் தங்ககம் (Lodge).
* 1-9 தங்ககம் (Lodge)
* மருதம் வாணிபம்.
* மருதம் புலால் விற்பனை நிலையம் (மாமிசம்).
* மரமடுவம் (காட்டுமரங்கள், விறகுகள் விற்பனைப் பகுதி).
* கேடில்ஸ் தும்புத் தொழிற்சாலை.
* மாவீரர் அரங்குகள்.
* மாவீரர் நினைவு விளையாட்டு அரங்குகள்.
* மாவீரர் நினைவு வீதிகள்.
* மாவீரர் நினைவு குடியிருப்புத்திட்டங்கள்.
* மாவீரர் போராளிகள் குடும்பநலன் காப்பகம்.
* மாவீரர் நினைவுப் பூங்காக்கள்.
* மாவீரர் நினைவுப் படிப்பகங்கள்.
* மாவீரர் நினைவு நூலகங்கள்.
* மாவீரர் நினைவு விலங்கியல் காப்பகம்.
* மாமனிதர் விருதுகள் (சமூக, பொதுத் தொண்டுகள் செய்வோருக்கானது)
இது தவிர இரணைமடு அறிவியல் நகரில் புதிதாக உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்த தமிழீழ பல்கலைக் கழகம் இறுதி யுத்தத்தினால் கைவிடப்பட்டுள்ளது. இன்னும் பெயர் தெரியாத நிறைய அமைப்புக்கள்.
உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பும் விடுதலைப் புலிகளைப் போல் தங்கள் தேசத்திற்கென “தேசிய மலர்”, “தேசிய மரம்”, “தேசியப் பறவை”, “தேசிய விலங்கு” போன்ற தேசியச் சின்னங்களை வைத்துக் கொண்டதில்லை.
எந்த நாட்டு உதவிகளையும் நம்பாமல், தன் சொந்த மக்களின் பலத்தை நம்பியே போராட்டத்தை ஆரம்பித்தார், தலைவர் பிரபாகரன்! இன்று தலைவர் பிரபாகரன் அவர்களையும், போராளிகளையும் “தீவிரவாதிகள்” என்று வாய் கிழிய கத்தி கொச்சைப்படுத்தி விமர்சனம் செய்து கொண்டிருக்கும் சில விசமிகளிடம் நான் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன்…!
விடுதலைப் புலிகள் தீவிரவாத இயக்கம் என்றால்…. எவ்வாறு மக்களின் பலமும், பேராதரவோடும் மக்களுக்கான உள்கட்டுமானங்களை உருவாக்க முடிந்தது? உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்புக்களும் இவ்வாறான உள்கட்டுமானங்களை உருவாக்கிய சரித்திரம் உண்டா..?
சிங்கள அரசாங்கம் தமிழ்க் குழந்தைகளை அனாதையாக்கியது! பிரபாகரன் அவர்கள் அந்தக் குழந்தைகளுக்குத் தந்தையானார். அப்படித்தான் செஞ்சோலை, காந்தரூபன் அறிவுச்சோலை, செந்தளிர் இல்லம், இனிய வாழ்வு இல்லம் உருவாகியது!
சிங்கள அரசாங்கமானது ஒவ்வொன்றுக்கும் தடைபோட்டு நசுக்கிப் பறிக்கப் பறிக்க… தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒவ்வொன்றையும் பாதுகாக்க பல அமைப்புக்களை உருவாக்கினார். அவைகள்தான் மேற்குறிப்பிட்ட மக்களுக்கான உள்கட்டுமான அமைப்புக்கள். இவர்தான் உங்கள் பார்வையில் தீவிரவாதியா?
மக்களுக்கான கட்டமைப்புக்கள் ஒருபுறமிருக்க…. இராணுவக் கட்டமைப்புக்களைப் பாருங்கள்…
தரைப்படைகள்
* இம்ரான் பாண்டியன் படையணி.
* ஜெயந்தன் படையணி.
* சார்லஸ் அன்ரனி சிறப்புப் படையணி.
* கிட்டு பிரங்கிப் படையணி.
* குட்டிச்சிறி மோட்டார் படையணி.
* இராதா வான்காப்பு படையணி.
* சிறப்பு உந்துகணை செலுத்திப் படையணி.
* விக்டர் கவச எதிர்ப்புப் படையணி.
* சோதியா சிறப்புப் படையணி.
* மாலதி சிறப்புப் படையணி.
* அன்பரசி படையணி.
* ஈருடப் படையணி.
* குறி பார்த்துச் சுடும் படையணி.
* சிறுத்தைப் படையணி.
* எல்லைப்படை,
* துணைப்படை,
* பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவு.
* ஆயுதக்களஞ்சிய சேர்க்கைப் பிரிவு.
* பாதுகாவலர் பிரிவு.
* முறியடிப்புப் பிரிவு.
* காப்டன் முகிலன் நீண்ட தூர விசேட வேவு ரோந்து அணி.
* ஆழ ஊடுருவும் படையணி.
* உந்துருளிப் படையணி
கடற்படைகள்.
* கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு.
* கடல் வேவு அணி.
* சார்லஸ் சிறப்பு அணி.
* அங்கயற்கண்ணி ஆழ்கடல் நீச்சல் அணி (பெண்கள்).
* சுலோஜன் ஆழ்கடல் நீரடி நீச்சல் அணி (ஆண்கள்).
* கடற்சிறுத்தை சிறப்பு அணி.
* சங்கர் படையணி.
* வசந்தன் படையணி.
* சேரன் படையணி.
* பாக்கியன் ஆழ்கடல் தாக்கும் படையணி.
* வான்படை.
* கரும்புலிகள்.
* புலனாய்வுத்துறை.
* வெளியகப் புலனாய்வுப் பிரிவு.
* உள்ளகப் புலனாய்வுப் பிரிவு.
* படையப் புலனாய்வுப் பிரிவு (MI)
* வேவுப் பிரிவு.
* களமுனை முறியடிப்புப் பிரிவு.
* களமுனை மருத்துவப் பிரிவு.
* கணினிப் பிரிவு.
* பொறியியல் பிரிவு.
* விசேட வரைபடப் பிரிவு.
* அரசியல் துறை, பரப்புரைப் பிரிவு, கொள்கை முன்னெடுப்புப் பிரிவு.
* தமிழீழ படைத்துறைப் பள்ளி.
* ஆயுத உற்பத்திப் பிரிவு.
* மின்னணுவியல் சிறப்பு உதவிப் பிரிவு.
* மாவீரர் பணிமனை.
இப்படியானதொரு இராணுவக் கட்டமைப்பை உலகில் எந்த விடுதலை இயக்கமும் கொண்டு வந்ததில்லை! ஆரம்பத்தில் உருவாகும்போது “விடுதலைப் புலிகள்” என்ற அமைப்பாகத்தான் இருந்தார்கள். காலங்களாகி வளர வளர மக்களின் பேராதரவினாலும், மக்களின் முழுப் பலத்தினாலும் “தேசிய இராணுவமாக” வளர்ந்து, ஒரு தேசத்தையே உருவாக்கினார்கள். ஆரம்ப காலங்களில் விடுதலைப் புலிகள் அமைப்பாக இருந்தாலும், இடைப்பட்ட காலங்களில் முப்படைகளையும் கொண்டு ஒவ்வொரு படையணிகளுக்கும் தனித்தனி சீருடையுடன் ஒரு தேசிய இராணுவமாக உலக நாடுகளின் இராணுவங்களுக்கு ஒப்பாக இருந்தார்கள்.
எல்லா நாடுகளிடமும் முப்படைகள் இருந்தது, விடுதலைப் புலிகளிடம் ஒரு படை அதிகமாகவே இருந்தது. அந்த வீரமிக்க படைதான் “கரும்புலிகள்”! உலகில் எந்த நாடுகளிடமும் இல்லாத உயரிய ஆயுதமான, எந்தவிதமான ஆயுதங்களாலும் வெற்றி கொள்ளமுடியாத, எந்தவிதமான ஆயுதங்களோடும் ஒப்பிட முடியாத உயிராயுதமான “கரும்புலிகள்” விடுதலைப் புலிகளிடம் இருப்பது அவர்களுக்கு சிறப்பையும், அதிக பலத்தையும் கொடுத்திருந்தது.
அந்தச் சின்னஞ்சிறிய தேசத்தில் இருந்த விடுதலைப் புலிகளின் படைகளுடன் மோத துணிச்சல் இல்லாத சிங்கள தேசம்தான், முப்பதிற்கு மேற்பட்ட உலக நாடுகளுடன் சேர்ந்து மோதி வெற்றி கண்டதென மார்தட்டிக் கொண்டு திரிகிறது! தமிழர்கள் கவலைப்பட வேண்டிய நேரம் இதுவல்ல…. ஒரு சின்னஞ்சிறிய தேசத்தில் எந்தவித உதவிகளும் இல்லாதிருந்த ஒரு மக்கள் படையுடன் முப்பதிற்கும் மேற்பட்ட உலக நாடுகள் மோதுகின்றன என்றால்… அங்கே தமிழனின் வீரம் எத்தகையது என்பதை ஒவ்வொரு தமிழனும் உணரவேண்டும். அங்கு தமிழனுக்குத்தான் வெற்றி கிடைத்துள்ளது!.
இன்றைய இருபத்தியோராம் நூற்றாண்டில் உலக அரங்கில் தமிழனின் உண்மையான வீரம்தான் முன்னிலை வகிக்கிறது. உலக சரித்திரத்தில் தமிழனுக்கென்று ஒரு குணம், தமிழனுக்கென்று ஒரு வீரம் அழியாமல் இடம் பிடித்துள்ளது! இதை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது! இவ்வாறு தமிழர்களின் வீரத்தை உலக வரலாற்றில் பதிய வைத்த விடுதலைப் புலிகளா… தீவிரவாதிகள்?
தன் சொந்த நாட்டு சிறுபான்மை இன மக்களை, பல நாட்டுப் படைகளோடு உலகில் உள்ள சகல கொடிய ஆயுதங்களாலும் கொன்று குவித்ததால், அது தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்கிறது சிங்கள அரசாங்கத்துடன் சேர்ந்து பயங்கரவாதம் புரியும் வல்லரசுகள்!. அதே சிறுபான்மை இன மக்கள் அரச பயங்கரவாததிற்கு எதிராக உயிர்ப் பாதுகாப்புச் சுதந்திரம் வேண்டிப் போராடினால்; அவர்களைத் “தீவிரவாதிகள்” என்கிறது பயங்கரவாதம் புரியும் மானம் கெட்ட வல்லரசுகள்!.
ஒரு மக்கள் விடுதலைப் போராட்டத்தை “தீவிரவாதம்” “தீவிரவாதம்” என்று சொல்லிச் சொல்லியே நசுக்கிய சர்வதேச நாடுகளே…!
* கணவனைக் கட்டி வைத்து கணவன் கண் முன்னே மனைவியானவளை கதறக் கதற கூட்டமாக கற்பழித்துக் கொன்று விட்டு, பின் கணவனையும் கொன்று புதைப்பதுதான்… உங்கள் ஜனநாயகமா?
* ஆண் பிள்ளைகளையும், பெண் பிள்ளைகளையும் நிர்வாணமாக்கி, கூடவே தாய் தகப்பனையும் நிர்வாணமாக்கி ஒவ்வொருவர் கண் முன்னாலேயே ஒவ்வொருவரையும் கூட்டாகச் சேர்ந்து மாறி மாறி கற்பழித்தும், கட்டிவைத்தும் சுட்டுக் கொல்வதுதான்…. உங்கள் ஜனநாயகமா?.
* பால்குடி பிஞ்சுகளை தாயிடமிருந்து பிரித்து, தாயைக் கற்பழித்துக் கொன்றுவிட்டு அந்தப் பிஞ்சுகளை அனாதையாக்கி தெருத் தெருவாக அலையவிடுவதுதான்…. உங்கள் ஜனநாயகமா?
* மட்டக்களப்பில் வயதிற்கு வந்து ஒரு வாரமே ஆன பதின்மூன்று வயதுச் சிறுமி புனிதவதியை ஏழு சிங்கள இராணுவ காட்டுமிராண்டிப் படைகள் தாயின் முன்னே கதறக் கதற கற்பழித்து அந்தச் சிறுமியை சித்தப் பிரமையாக்கியதுதான்…. உங்கள் ஜனநாயகமா?
* இதேபோல் யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி கிருசாந்தியை கற்பழித்துக் கொன்று புதைத்ததுதான்…. உங்கள் ஜனநாயகமா?
* சமாதான காலத்திலே மன்னார் வங்காலையில் அதிகாலை ஒரு வீட்டிற்குள் புகுந்த சிங்களக் காட்டுமிராண்டிப் படைகள் அங்கே குடும்பத்தோடு தூங்கிக் கொண்டிருந்த இளம் தாயை கற்பழித்துக் கொன்று விட்டு, தந்தையையும் கொலை செய்து விட்டு, அவர்களின் இரண்டு பிஞ்சுப் பாலகர்களையும் உயிரோடு தூக்குக் கயிற்றிலே தொங்க விட்டு கொலை செய்வதுதான்….. உங்கள் ஜனநாயகமா?
* வள்ளிபுனத்திலே 53 செஞ்சோலை பாடசாலைப் பிஞ்சுகளை வானத்தில் இருந்து விமான மூலம் குறி தவறாமல் வேண்டுமென்றே குண்டு வீசி சதைப் பிண்டங்களாக… துண்டு துண்டுகளாக சிதைத்துக் கொன்று குவித்து இரத்தத்தில் குளிக்க வைத்ததுதான்…. உங்கள் ஜனநாயகமா?
* சுற்றிவளைப்பு என்ற பெயரில் சிங்களப் படைகள் கிராமங்களுக்குள் புகுந்து பல பெண்களின் கற்பை சூறையாடி அவர்களின் உயிர்ப்பையினை நிரப்பி… அப்பன் பெயர் தெரியாத குழந்தைகளைக் கொடுத்தும், பருவமாகத பள்ளிச் சிட்டுக்கள் முதல் பால் மடி வற்றிப்போன வயதான பெண்கள் வரை காமக்குருடர்கள் போல் அவர்களைப் பிடித்து கூட்டத்தோடு தெரு நாய்களைப்போல் மாறிமாறி கற்பழித்து கொன்று விட்டு மலசல கழிவுத் தொட்டிகளுக்குள்ளும், பாழாங் கிணறுகளுக்குள்ளும் மூழ்கடித்து முகவரி தெரியாமல் அழித்துத் தொலைப்பதுதான்… உங்கள் ஜனநாயகமா?
* வல்வைப் படுகொலைகள் , சாவகச்சேரிப் படுகொலைகள், அளவெட்டிப் படுகொலைகள், அல்லைப்பிட்டிப் படுகொலைகள், மண்டைதீவுப் படுகொலைகள், குமுதினிப்படகுப் படுகொலைகள், சத்துருக்கொண்டான் டிப்போ படுகொலைகள், நவாலிப் படுகொலைகள், நாகர்கோவில் பாடசாலை படுகொலைகள், பொத்துவில் படுகொலைகள், கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள், சம்பூர் படுகொலைகள், வீரமுனைப் படுகொலைகள் மற்றும் கிழக்கு மாகாணப் படுகொலைகள் என்று எண்ணற்ற படுகொலைகளை ஊர் ஊராக… கிராமம் கிராமமாக… தெருத் தெருவாக தமிழர்களைப் பிடித்து துடிக்கத் துடிக்க கொன்று குவித்து மண்ணுக்குள் உரமாக்கியதுதான்… உங்கள் ஜனநாயகமா?
* உயிரற்ற உடலைக்கூட விட்டு வைக்காமல் கற்பழித்து விட்டு, பின் அந்த உயிரற்ற உடலின் அந்தரங்க உறுப்புக்களை வெட்டியும், சிதைத்தும் அலங்கோலமாக்குவதுதான்….. உங்கள் ஜனநாயகமா?
* இறுதி யுத்தத்தில் பாதுகாப்பு வலயத்திற்குள் வரவழைத்து எரிகுண்டுகளையும், நச்சுக் குண்டுகளையும் போட்டு கூண்டோடு துடிக்கத் துடிக்க கொன்று குவிப்பதுதான்…. உங்கள் ஜனநாயகமா?.
* உயிரைப் பாதுகாக்க பதுங்கு குழிக்குள் ஒழிந்தவர்களையும், இந்த உலகை பார்க்கும் முன்னே தாயின் கருவறைக்குள் பிஞ்சுக் குழந்தைகளையும் கொன்று புதைப்பதுதான்….. உங்கள் ஜனநாயகமா?
* இறுதி யுத்தத்தில் கைதான பொதுமக்களை போராளிகள் என்ற பெயரில் விசாரணை என்று அழைத்துச் சென்று ஆண்களை கொலை செய்து மூடி மறைத்தும்… பெண்களை கூட்டத்தோடு கற்பழித்து, சிலரை கொலை செய்தும், வேறு பலரை கட்டாய விபச்சாரியாக்கி விலை பேசி விற்றுத் தீர்த்ததுதான்…. உங்கள் ஜனநாயகமா?
* கைது செய்து கொலை செய்த ஆண்களின் மனைவிமாரிடம், அவர்கள் கணவர்மார்கள் உயிரோடு இருப்பதாக அவர்களின் பெயரைச் சொல்லி இன்றும் கூட காமவித்தைகளை அரங்கேற்றி விளையாடிக் கொண்டிருப்பதுதான்… உங்கள் ஜனநாயகமா?
 *  ஈழத்தமிழன் ஒழிந்துகொள்ள இடமேதுமில்லாமல் அலைந்து அலைந்து இறுதியில் நிராயுதபாணிகளாக அரச படைகளிடம் அடைக்கலமாக அவர்களை வயது வித்தியாசமின்றி கொன்று குவித்து களைத்துப் போய் முடியாமல் காயப்பட்டவர்களையும், கையில் அகப்பட்டவர்களையும் செத்த பாம்பினைப் போல் கைகளைக் கட்டி வரிசையாக தெருக்களில் விறகுபோல் அடுக்கி வைத்து கவச வாகனங்களால் மிதித்து துடிக்கத் துடிக்க சாகடித்தீர்களே…. இதுதான் உங்கள் ஜனநாயகமா?
இப்படியாக….
மேற்கண்ட கொடுமைகள் எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ள முடியாத மக்கள், தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஆயுதம் ஏந்தி போராடி தங்களை தற்காத்துக் கொண்டால்…. அவர்கள் உங்கள் பார்வையில் தீவிரவாதிகளா?
அவ்வாறெனில்….
உங்கள் பார்வையில் விடுதலைக்காக ஆயுதம் வைத்துப் போராடும் மக்கள் “தீவிரவாதிகள்” என்றால்…. கொடிய ஆயுதங்களை வைத்து மக்களை அநியாயத்திற்கு கொன்று குவிக்கும் அரசாங்கம் “தீவிரவாத அமைப்பாகத்” தெரியவில்லையா?
மாறாக… விடுதலைப்புலிகள்

ஒரு சிங்களப் பெண்ணைக் கற்பழித்திருந்தாலோ…..
சிங்கள மக்களைக் கொன்று குவித்திருந்தாலோ….
அல்லது, வேறு சில அமைப்பினர்போல் நிராயுதபாணிகளாக செய்தி சேகரிக்கச் சென்ற ஒவ்வொரு பத்திரிகையாளர்களையும் பிடித்து தலைகளை தனியாக அறுத்தெடுத்து படம் பிடித்துக் காட்டியிருந்தாலோ….
நீங்கள் சொல்லலாம், அவர்கள் பயங்கரமான தீவிரவாதிகள் என்று..!
எது ஜனநாயகம்….? எது தீவிரவாதம்….? யார் தீவிரவாதி….? யார் ஜனநாயகவாதி….?
அப்படி, அவர்கள் என்ன செய்தார்கள்…?
தங்கள் இனத்தை அழித்து மக்களை கொன்று குவித்து வரும் அரச படைகளை மட்டுமே எதிர்த்துப் போராடினார்கள். இவர்கள்தான் உங்கள் கண்களுக்கு “தீவிரவாதிகளாக” தெரிகிறார்களா?
உரிமைகள் மறுக்கப்பட்டு, உணர்வுகள் நசுக்கப்படும் போது, அங்கே தீவிரவாதம் வளர்ந்தே தீரும்! இங்கு “தீவிரவாதம்” என்ற சொற்பதம் “சுதந்திர விடுதலையை” தீவிரமாக வேண்டி நிற்கும் தீவிரவாதமே!!!
தீவிரவாதிகள் என்று சித்தரிக்கப்பட்டு விமர்சிக்கப்படும் விடுதலைப் புலிகள் என்ன, வானத்தில் இருந்து குதித்து வந்தவர்களா? அந்த அரச பயங்கரவாத அடக்குமுறைகளால் ஒடுக்கப்பட்ட மக்கள்தான், தங்கள் உயிர்ப் பாதுகாப்புச் சுதந்திரம் வேண்டி விழிப்படைந்து, எழுச்சியடைந்து விடுதலைப் புலிகளாகத் திருப்பித் தாக்கினார்கள். அந்த மக்கள்தான் விடுதலைப் புலிகள்! விடுதலைப் புலிகள்தான் அந்த மக்கள்!
விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் என்றால்….
குந்தியிருக்க ஒரு வீடில்லாமல், நடந்து திரிய ஒரு தெரு இல்லாமல், முகவரி சொல்ல ஒரு ஊர் இல்லாமல், மொத்தத்தில் உயிரோடு, பாதுகாப்போடு வாழ ஒரு சுதந்திரமான நாடு இல்லாமல்….. நாடு நாடாக அலைந்து சுதந்திர விடியலைத் தேடிக்கொண்டு தமக்கான ஒரு தேசத்தை உருவாக்கி நிம்மதிப் பெருமூச்சுடன் வாழத் துடித்துக் கொண்டிருக்கும்… உலக அரங்கில் புலம்பெயர்ந்து வாழும் அனைத்து தமிழர்களும் தீவிரவாதிகள்தான்!
இன்றும், என்றும் தமக்கான ஒரு விடியல், தமக்கான ஒரு சுதந்திர தேசம் கிடைக்கும் வரை தாயகத்திலும் சரி, தமிழகத்திலும் சரி, புலம்பெயர் தேசங்களிலும் சரி எங்கெல்லாம் தமிழர்கள் சுதந்திர விடியலுக்காக தீவிரமாக இறங்கி போராட்டங்களை நடத்துகின்றார்களோ…. அங்கே வாழுகின்ற தமிழர்கள் அனைவரும் தீவிரவாதிகள்தான்!
இதற்கு எதிர்மாறாக விடுதலைப் புலிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி விமர்சனம் செய்பவர்கள், அவர்கள் யாராக இருந்தாலும்; அவர்கள் மானம், வெட்கம், சூடு, சொரணை, மனச்சாட்சி அற்ற தமிழ்ப் பிறப்புக்களே! வேற்று மொழியர்களாக இருந்தால்…. அவர்கள் “பயங்கரவாதம்”, “தீவிரவாதம்”, “சுதந்திர தாகம்” , “விடுதலைப் போராட்டம்” போன்ற சொற்பதங்களின் உள்ளர்த்தம் தெரியாத முட்டாள்களாக இருப்பார்கள்!
விடுதலைத்தீ என்பது அனைத்து தமிழ் பேசும் மக்கள் மனதிலும் எரிந்து கொண்டிருக்கிறது! எந்த, தமிழ் பேசும் மக்களின் மனதில் விடுதலைக்கான தீ எரிகிறதோ….. அவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள்தான் என்பதை சிங்கள அரசும், சர்வதேசமும் மறந்து விடக்கூடாது!
விடுதலைத் தீ என்பது எளிதில் அணைந்து விடாது! யாரும் அணைக்கவும் முடியாது! அந்தத் தீ எதற்காக எரிய ஆரம்பித்ததோ அதை அடையும் வரை எரிந்து கொண்டே இருக்கும். அதுவரையும் விடுதலைப் புலிகளும் வளர்ந்து கொண்டே இருப்பார்கள்!
- வல்வை அகலினியன் ( akaliniyan@yahoo.com)

Tuesday, October 15, 2013

மீண்டும் சூடுபிடிக்கும் நாடாளுமன்றத்தெரிவுக்குழு விவகாரம் - இதயச்சந்திரன்

சர்வதேச உறவுநிலை குறித்து அதிகமாகப்பேசப்படும் இன்றைய காலகட்டத்தில், அதனை இயக்கும் சக்திகளாக பாதுகாப்பும் பொருளாதாரமும் இருக்கின்றது என்பதனை மறந்துவிட முடியாது.

நாடுகளுக்கிடையிலான உறவுநிலை என்பதனை, நாட்டின் அதிகார உச்சநிலையில் இருப்பவர்களுக்கிடையிலான உறவாக பார்க்கும் பழக்கம் அண்மைக்காலமாக பெருகிவருவதை காண்கிறோம்.

உதாரணமாக கமலேஷ் சர்மா, விஜய் நம்பியார் போன்றோர் ஓர் அதிகாரமையத்தின் நலன்களைப் பிரதிபலிக்கும் நபர்களாக இருப்பதை, அவர்களின் செயற்பாடுகளால் பாதிப்புறும் ஈழத்தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தற்போது கமலேஷ் சர்மா மீது கனடா அரசு முன்வைக்கும் குற்றச்சாட்டூ, விஜய் நம்பியார் மீது யுத்தம் முடிவுற்றதும் மேற்கொள்ளப்பட்ட கடுமையான விமர்சனங்கள் என்பன, சர்வதேச உறவில் சிறிதளவு அதிர்வினையே ஏற்படுத்தும்.

ஐ.நா. சபை மீதான உலக மனிதாபிமானச் சங்கங்களின் கடும் கண்டனங்களும், சார்ல்ஸ் பெற்றியின் அறிக்கையும், எதனை மாற்றியுள்ளது?. தவறு நடந்துள்ளது எனக்கூறி பாண் கி மூனும் நழுவிவிட்டார். இருப்பினும், சர்வதேச விசாரணை வேண்டும் என்கிற நவிபிள்ளை அம்மையாரின் கோரிக்கைகளால், இனப்படுகொலையைப் பார்த்துக்கொண்டிருந்த ஐ.நா.வின் நிலைப்பாடு சரி என்று ஆகிவிடாது.

முள்ளிவாய்க்கால் இன அழிவிற்குப் பின், இலங்கை குறித்து அக்கறை கொள்ளும் நாடுகள், அமைப்புக்கள், அவற்றிடையே உள்ள உறவுகள் குறித்து, தெளிவான புரிதல் ஒன்று எமக்கு அவசியம். ஓட்டுப்போடும் அரசியல் உறவுக்கு அப்பால் உள்ள வெளியில் என்ன நடைபெறுகிறது என்பதை வாக்கினைப் பெற்றவர்கள் மக்களுக்குச் சொல்வதில்லை. 

ஆதலால், அதனை மக்களுக்கு புரியவைக்க வேண்டிய தார்மீகக் கடமை ஊடகங்களுக்கு உண்டு என்பதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். மந்திரத்தால் மாங்காய் விழுத்துவோரின் 
கைகளைப் பிடித்து இழுக்கிறார்கள் என்று சகட்டுமேனிக்குத் திட்டக்கூடாது.

முதலில்,  ஈழத்தமிழ் மக்களின் வாழ்வுரிமைப்பிரச்சினை, அதாவது இலங்கையின் தேசிய இனமுரண்பாடு, பிராந்திய-சர்வதேச உறவுநிலையில் எத்தகைய தாக்கங்களை உருவாக்குகின்றது? என்பதோடு,  மறுதலையாக சர்வதேச உறவுநிலை தமிழ் மக்களின் வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்ன? என்பதையும் ஆழமாகப் பார்க்க வேண்டும்.

'எல்லா உறவுகளும் சார்புநிலை கொண்டவை' என்கிற அறிவியல் உண்மையை நிராகரிக்காமல் பார்த்தால், ஒரு இயங்குதளத்தின் உள்ளீட்டினைப் புரிந்து கொள்வது இலகுவானதாகவிருக்கும்.  ஒரு நாட்டின் தேசியநலன் என்பது தனித்துவமானது  என்கிறவகையில் நோக்கும் ஒற்றைப்பரிமாணப் பார்வை , முரண்நிலையின் உட்பரிமாணங்களை மறைத்துவிடும்.

இலங்கையைப் பொறுத்தமட்டில், அதன் அதிகாரமைய வெளியுறவுச் சிந்தனை, உள்ளுறவுச்சிந்தனை என்பன, பேரினவாத அரசியலைத் தக்கவைப்பதன் அடிப்படையில் இருந்து கட்டமைக்கப்படுவதனை  காணலாம். 

நாட்டின் அரச இயந்திரத்தில் நாடாளுமன்றம், முப்படை, திறைசேரி, என்பவற்றோடு பௌத்த அதியுயர் பீடங்களும் தீர்மானகரமான சக்தியாக இருக்கிறது. அத்தோடு, நாட்டின் இறைமை என்பது நாடாளுமன்றம், நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் மற்றும் பௌத்த சங்கங்களிடமும் அதிகளவில் குவிந்திருக்கிறது. இருப்பினும் தேர்தல் காலத்தில் மட்டுமே, அந்த இறைமை மக்களிடம் இருப்பதுபோல் காட்டப்படுகிறது.

ஆகவே, நாட்டின் இறைமையைப் பாதிக்காமல் , இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படவேண்டுமென ஆட்சியாளர்கள் அடிக்கடி சொல்லும் கூற்றின் அர்த்தங்கள் புரியப்பட வேண்டுமாயின், இந்த இறைமை யார் கையில் இருக்கிறது என்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும். இந்நாட்டின் அரசியலமைப்புக்குள் எந்தவிதமான தீர்வுகளும் சாத்தியமில்லை என்கிற முடிவினை நோக்கியே அதற்கான பதில் எம்மை இட்டுச் செல்லும். 

இப்போது, வடமாகாணசபைத்தேர்தலில் தமிழ்தேசியக்கூட்டமைப்பு முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் சுட்டிக்காட்டப்பட்ட தீர்வு குறித்தும் , அதில் கையாளப்பட்ட தேசம், இறைமை என்கிற பதங்கள் குறித்தும் பார்க்க வேண்டும். 
'பகிரப்பட்ட இறைமை என்பதன் அடிப்படையில் தீர்வு' என்று  கூட்டமைப்பு குறிப்பிடும்போது, வடகிழக்கில் வாழும் தனித்துவமான தமிழ்தேசிய இனத்திற்கு, இறைமை இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுவதாக எடுத்துக் கொள்ளலாம். அதனை முதலில் சிங்களதேசம் ஏற்றுக்கொள்ள வேண்டும். 

அடுத்ததாக,  ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள்ளும், அதன் மத்திய அரசின் பூரண இறைமைக்குள்தான் இந்த மாகாணசபைகள் இயங்குகின்றன. ஆகவே 13 வது திருத்த சட்ட மூலத்தால் அமைக்கப்பட்ட மாகாணசபைகளும் நிறைவேற்று அதிகாரமுடைய அதிபரின் அதிகாரத்திற்கு உட்பட்டதுதான் என்கிற ஓரின இறைமைக் கோட்பாட்டினை மறைத்தல் தவறானது.

ஆகவே மாகாணசபை முறைமை என்பது, தேர்தல் விஞ்ஞாபனத்தில் சொல்லப்பட்ட இறைமைப்பகிர்வு நோக்கி இம்மியளவும் நகராது. அப்படி நகருமென்று அடம்பிடிப்பவர்கள், ஒன்றில் இதனைப் புரிந்துகொள்ள இயலாதவர்களாக இருக்க வேண்டும் அல்லது இவையனைத்தையும் தெரிந்து வைத்திருந்து, அதனை தமது நலனிற்காக பயன்படுத்தும் வித்தகர்களாக இருக்க வேண்டும்.

அலரிமாளிகையில் வடமாகாண முதலமைச்சர் சத்தியப்பிரமாணம் செய்த வேளையில், கொழும்பிற்கு வருகை தந்திருந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் அவர்கள் அரசிற்கு ஒரு தெளிவான செய்தியைக் கூறியிருந்தார். 
அதாவது '13வது திருத்தச் சட்டமூலத்தை முழுமையாக (?) நடைமுறைப்படுத்தி, அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு ஊடாக தேசிய இனப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்' என்பதுதான் குர்ஷித் ஊடாக இந்திய நடுவண் அரசு இலங்கை அரசிற்கு சொன்ன செய்தி. 

இங்கு இந்தியா கூறமுற்படும் அதிகாரப்பகிர்வு குறித்து நாம் அதிகம் அலட்டிக்கொள்ளவேண்டிய அவசியமில்லை. ஏனெனில் இது குறித்துப் பேச, நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்குள் கூட்டமைப்பு வர வேண்டும் என்கிற நிபந்தனையை குர்சித்திடமே சனாதிபதி மகிந்த இராஜபக்ச கூறிவிட்டார்.

அண்மைக்காலமாக தன்னைச் சந்திக்க வரும் இந்திய மற்றும் மேற்குலக இராஜதந்திரிகள் ஊடாக, நாடாளுமன்றத்தெரிவுக்குழுவில் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசியக்கூட்டமைப்பினருக்கு அழுத்தம் கொடுக்க,சனாதிபதியும் ஜி.எல்.பீரிசும் பலத்த முயற்சினை மேற்கொண்ட விவகாரத்தை கவனிக்க வேண்டும்.

சர்வதேச அழுத்தங்களை முதலில் உள்வாங்கி, அதனை ஏற்றுக்கொள்வதுபோல் முதலில் தேர்தலை நடாத்தி, பின்னர் கூட்டமைப்பை நாடாளுமன்றத் தீர்வுப்பொறிக்குள் இழுத்து, மார்ச் மாதம்வரை காலத்தை இழுத்தடிப்பதுதான் , சர்வதேச உறவுநிலையில் இலங்கைஅரசு பிரயோகிக்கும் இராஜதந்திர நகர்வாகும்.
தேர்தல், வடமாகாணசபை என்பதெல்லாம் சிறிய மீன். இதைப்போட்டுத்தான், சர்வதேச அங்கீகாரம் கொண்ட பொதுநலவாய நாடுகளின் தலைமைப் பதவியை மகிந்த இராஜபக்ச பெறப்போகின்றார்.

இந்தியாவைப்பொறுத்தவரை, நீண்டகாலமாக இழுபறி நிலையிலிருந்த சம்பூர் அனல்மின்நிலைய விவகாரமும், வடமாகாணசபை கூட்டமைப்பின் கரங்களில் சென்ற கையோடு முடிவிற்கு வந்துள்ளது. அங்கிருந்து துரத்தப்பட்ட மக்களுக்குத்தான் இன்னமும் நீதி கிடைக்கவில்லை. அதிகாரநலன் போட்டியில் நசியுண்டுபோன சம்பூர்மக்களின் அவலநிலை குறித்து இனி வெகுசன அமைப்புக்களே பேசவேண்டும்.

'காணி நிலம் வேண்டும் காவல்துறை வேண்டும்..பராசக்தி' என்று இந்திய அரசிடம் நச்சரித்தாலும், அரசோடு பேசுங்கள் என்றுதான் குர்ஷித்தும் சொல்வார். நல்லிணக்கத்தை வெளிப்படுத்த யாழ் நகரில் சிங்கக்கொடியைபிடித்தாலும், அலரிமாளிகையில் பதிவிப்பிரமாணம் எடுத்தாலும், தமிழ் தேசத்தின் இறைமையை, ஒற்றையாட்சியில் உறுதியாகவிருக்கும் சிங்களதேசம் ஏற்றுக்கொள்ளாது. 

அதற்கான எந்த சமிக்ஞையும் அரசதரப்பிலிருந்து வருவதுபோல் தெரியவில்லை. மாறாக, பௌத்த சிங்களப்பேரினவாத கருத்தியலில் ஊறித்திளைத்துள்ளவர்களை  பெரும்
பான்மையாகக்கொண்ட தெரிவுக்குழுவிற்குள் வந்து தீர்வினைத் தேடுங்கள் என்கிறார் இலங்கை சனாதிபதி.

சிங்கக்கொடி....அலரிமாளிகை...வரிசையில், இனிமேல் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவும் இணைந்துகொள்ளும் போல் தெரிகிறது. அரசோடு இணங்கிச் சென்றே , அதிகாரங்களைப்பெறலாம் என்று முடிவெடுத்துவிட்ட கூட்டமைப்பின் தலைமைப்பீடம், இனிமேல் இன அழிப்பிற்கான சர்வதேச சுயாதீன விசாரணை, பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பு, சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வு போன்ற விவகாரங்கள் குறித்து பேசாது. இவை குறித்துப் பேசினால் அரசிற்குப் பிடிக்காது என்பதால் பேசாது.

இப்போதுள்ள அரசியலமைப்பின் பிரகாரம், பகிரப்பட்ட இறைமை பற்றி பேச முடியாது. அவ்வாறில்லாமல் அதிகாரப்பகிர்வு குறித்து பேசுவதானது அதிகாரப்பிச்சையாகவே கருதப்படும். பிச்சை கொடுப்பவரின் மனநிலையைப் பொறுத்து சில விட்டுக்கொடுப்புக்கள் இருக்கும். அதற்கு ' அதிகாரம்' என்கிற பெயர் சூட்டி சுயதிருப்தியடையலாம்.

விஞ்ஞாபனத்தில் வலியுறுத்தப்பட்ட தேசம், சுயநிர்ணயம், இறைமை என்பன குறித்து, இலங்கை விவகாரத்தில் கரிசனை கொண்டுள்ள சர்வதேச நாடுகளின் நிர்வாகங்களுக்கு பெரியளவில் அக்கறை கிடையாது. மக்களிடமிருந்து வாக்குப்பெறுவதற்காக உபயோகப்படுத்தப்பட்ட வார்த்தைகளாக இவை இருந்துவிட்டுப் போகட்டுமென அவர்கள் விரும்புகிறார்கள். அனந்தியின் அரசியல் பிரவேசம்,  சகல தரப்பாலும் விரும்பப்பட்ட விடயமல்ல. இருப்பினும் வாக்குப்பலத்தினை அதிகரிக்கும் ஊக்கியாக மட்டுமே அவர் பயன்படுத்தப்பட்டார் என்பதில் உண்மையுண்டு.

ஏனெனில் சிங்களத்தோடு இணக்கப்பாட்டு அரசியலைச் செய்யவேண்டுமாயின், மேற்குறிப்பிடப்பட்ட சொல்லாடல்களும் நபர்களும் , தமிழ் தேசிய அரசியல் செயற்பாட்டு அரங்கிலிருந்து முதலில் அந்நியப்படுத்தப்பட வேண்டும். அதனை சம்பந்தனும், சுமந்திரனும், முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்களும் கூட்டாக இணைந்து , மிகக்கட்சிதமாக நகர்த்துகின்றார்கள் போலிருக்கிறது.

சர்வதேசம் என்று அழைக்கப்படும் நாடுகளைப் பொறுத்தமட்டில், இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையைக் கையாளுதல் என்பது, அந்த அரசுடனான இராஜதந்திர உறவினை சீர்குலைக்கும் வகையில் அமைந்துவிடக் கூடாது என்பதனை அடிப்படையாகக் கொண்டது.

சிங்கள தேசத்திற்குப் பிடிக்காத விடயங்களை முன்னிறுத்தி அரசியல் செய்வதை, தமிழ் தேசியக்கூட்டமைப்பு தவிர்க்க வேண்டுமென்பதிலும் இவர்கள் மிகுந்த அக்கறையாக இருக்கின்றார்கள். அதேவேளை கூட்டமைப்பின் அரசியல் தளம் பலவீனமடைந்து, வெகுஜன மக்களின் போராட்டங்கள் எழுச்சி பெறக்கூடாதென்பதிலும் கவனமாக இருக்கின்றார்கள்.

இலங்கை அரசின் மீது மட்டுப்படுத்தப்பட்ட அழுத்தங்களைப் பிரயோகிக்கும் கருவியாகவே, தமிழ் மக்களின் தேசிய இனவிடுதலைப் போராட்டம் கையாளப்படுகிறது.
இலங்கை அரசிற்கும் இந்த வல்லரசாளர்களின் பிராந்திய நலன்சார்ந்த  மூலோபாய நகர்வுகள் புரியும்.
ஆட்சி மாற்றம் ஒன்றினை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் வியூகங்களில் தொடர் பின்னடைவுகளை எதிர்கொள்வதால், சிங்கள தேசத்தோடு இணங்கிப்போகச் சொல்லும் அழுத்தங்களும் அதிகரிக்கின்றன.

ஆகவே, இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் வல்லரசின் நலன்கள் நிறைவேறும்வரை, அழிவுகள் தொடரும். இதனை எவ்வாறு தடுத்து நிறுத்துவது என்பது குறித்து மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். நாடாளுமன்றத்தெரிவுக்குழுவின் ஊடாக எந்தத்தீர்வும் வரப்போவதில்லை என்கிற பழைய அனுபவங்களையும் இப்போது நினைவிற்கொள்வது நல்லது.

Tuesday, March 19, 2013

தமிழ் நாட்டிலுள்ள தொப்புள் கொடி உறவுகளுக்காக ஈழத்திலிருந்து ஒரு ஏதிலியின் கடிதம்


தமிழ் நாட்டில் உள்ள எம் தொப்புக் கொடி உறவுகளாகிய எம் நேசத்திற்குரிய கல்லூரி மாணவர்களே ஈழத்தில் இருந்து ஒரு ஏதிலியின் கடிதம் இது.
இலங்கையின் தீவில் வாழும் தமிழர்களாகிய நாம் இற்றைக்கு சுமார் 60 வருடங்களுக்கு மேலாக சிங்கள தேசத்தினாலும் சிங்கள மக்களாலும் அடிமைத்தனத்திற்குள்ளாக தள்ளப்பட்டதோடு, இதற்கு எதிராக போராடியும் வந்தோம்.
இதனால் எமது உயிரிலும் மேலான எத்தனையே இளைஞர்கள், யுவதிகளின் உயிர்களை இந்த மண்ணில் வித்துடல்களாக நாம் விதைத்துள்ளோம்.ஆனால் இன்று இந்திய அரசாங்கம் எம் தமிழ் இனத்தை அழிப்பதற்கு கங்கணம் கட்டி விட்டதால் என் அறிவு எட்டிய எம் வாழ்க்கையை மாணவர்களாகிய உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.
1987ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து அமைதி காக்கும் படையென்று இலங்கைக்கு வந்த இந்திய இராணுவம் எம் தமிழர்களில் பலரை அநியாயமாக கொன்று குவித்தது. இந்திய இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட யாழ். போதனா வைத்தியசாலைப் படுகொலைச் சம்பவத்தை யாராலும் எளிதாக மறக்க முடியாது.
இவ்வாறான சூழ்நிலையில் இந்திய அமைதி காக்கும் படையின் அநியாயங்களுக்கு எதிராகவும் நாம் போராட தள்ளப்பட்டோம். இறுதியாக எம் போராட்டங்களால் இந்திய அமைதி காக்கும் படை இந்த மண்ணில் இருந்து வெளியேறியது. ஆனால் எம் மீது சிங்கள அரசாங்கம் கட்டவிழ்த்து விட்ட அடக்குமுறைகள் குறைந்ததாக தெரியவில்லை.
இலங்கையின் சிங்கள ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்காவின் காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து அநியாயமாக பல பொது மக்கள் புக்காரா குண்டு வீச்சு விமானங்களின் குண்டுகளால் கொன்று குவிக்கப்பட்டனர்.
நவாலியில் தேவாலயத்தில் தஞ்சமடைந்த மக்களையும் குண்டு வீசிக் கொன்றனர். எங்கள் ஊரில் ஆலங்களுக்கும் அடைக்கலத்திற்கு ஒடிச் செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டோம்.
இவ்வாறு பல படுகொலைகளைச் செய்து இறுதியாக 1995ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து சிங்கள இராணுவத்தினால் எம் மக்கள் வெளியேற்றப்பட்டு பலர் கொன்று அழிக்கப்பட்டு எஞ்சியவர்களை சிறைப் பிடித்து கொண்டு வந்து மீள்குடியேற்றம் செய்து அவர்களை இராணுவ மண் அணைகளுக்குள்ளே சிறை வைத்தது.
ஆனால் உள்ளே எம் மாணவிகளை மாணவர்களையும், எதிர்காலச் சந்ததியையும் சிதைக்கும் நடவடிக்கைகளே உலகத்திற்கு தெரியாமல் நடைபெற்றன. செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவியான கிருஷாந்தி போன்ற எத்தனையே மாணவிகளின் கற்புக்களும் உயிர்கள் இராணுவ முகாம்களுக்குள்ளே புதைக்கப்பட்டன.
இவ்வாறு தமிழ் மக்கள் கொன்று எமது தமிழ் இனம் அழிக்கப்படும் போது தான் எம் தேசியத் தலைவன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் வழிகாட்டலில் வன்னியிலிருந்து யாழ்ப்பாணத்தை மீளக்கைப்பற்றுவதற்கான ஆயுத வழிப் போராட்டம் ஆரம்பமானது.
இதன் போது சிங்கள இராணுவ நிலைகளை தகர்தெறிந்து எம் புலிப்படைகள் யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்களை ஆக்கிரமித்து வந்த நிலையில் இந்திய அரசாங்கம் அழுத்தங்களை பிரயோகித்து அந்தப் போராட்டத்தை தடுத்து நிறுத்தியது.
இதன் பின்னர் சமாதானம் என்ற போர்வையில் இலங்கையின் பிரதம மந்திரி ரணில் விக்கிரம சிங்க தலைமையிலான சிங்கள அரசு எம் போராட்டத்தினை பொட்டுப் பூச்சி போல மெல்ல மெல்ல சிதைக்க தொடங்கியது.
துரோகியான கருணாவினை பிரித்தது முதல் பல்வேறு நாசகார நடவடிக்கைகளை செய்தது. இதனாலேயே தமிழ் மக்கள்  2005ஆம் ஆண்டு சிங்கள தேச தேர்தலை  புறக்களித்ததோடு வாக்களிக்கவில்லை.
இதன் பின்னர் எம் ஆயுதப் போராட்டத்தின் மீது சிங்கள இராணுவத்தினால் ராஜபக்ஷவின் கட்டளையில் கிழக்கில் மாவிலாறிலிருந்து யுத்தம் ஆரம்பமாகி பின்னர் வடக்கு வரை அப்பேராட்டம் விஸ்தரிக்கப்பட்டது. இதன்போது எம் தமிழ் மக்கள் பலர் கிழக்கில் கொல்லப்பட்டனர்.
எமது ஆயுத வளங்கள் அழிக்கப்பட்டன. எம் தமிழ் ஈழ மண்ணிற்காக பல மாவீரர்களானர்கள். ஆனால் இந்திய அரசாங்கம் மற்றும் சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட உலக வல்லரசு நாடுகளின் உதவியுடன் பாரிய எடுப்பில் யுத்த முனைகளை எம் மக்கள் மீது சிங்கள அரசாங்கம் திறந்தது. இவற்றிற்கு எதிராக புலிகளும் முப்படைகளையும் களமிறக்கினார்கள்.
எம் போராட்ட வலுவை குறைத்து மதிப்பிட்டிருந்த இந்திய அரசாங்கம் எம் கள நாயகர்களின் தியாகளைக் கண்டு நடுங்கியது. இதனால் மேலதிகமாக இலங்கைக்கு நவீன ராடர்கள். நவீன ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை கொடுத்து உதவி செய்ததோடு, இந்திய இராணுவத்தையும் அனுப்பி வைத்தது.
இந்தியா மட்டுமல்ல எட்டிக்கு போட்டிய ஒவ்வொரு வல்லரசுகளும் தமது படைகளையும் நவீன ஆயுதங்களை அள்ளி வழங்கின. இதனால் அப்பாவித் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டதோடு, அநியாயமாக எமது உறவுகளின் உடல்கள் சிதறிப் போயின.
இறுதியாக எம் போராட்டத்தின் ஒவ்வொரு கணங்களும் இந்தியாவினால் மிக மிக உன்னிப்பாக கவனிக்கப்பட்டு சிங்கள அரசிற்கு தகவல் அனுப்பபட்டு எம் போராட்டம் சிதைக்கப்பட்டது.ஆனாலும் எம் தேசியத் தலைவர் தன்னுடைய மகனையே எம் மக்களுக்காக ஈழ மண்ணில் பலியாக்கினார்.
உலகில் எந்த தலைவனும் செய்ய துணியாத செயல்களை எம் தலைவர் செய்து எதிரிகளே புகழ்ந்து சொல்லும் அளவிற்கு துணிச்சலான முடிவுகளை எடுத்து இறுதி வரை ஒரு நோக்கத்திற்காக வாழ்ந்து காட்டினார்.
ஆனால் மறுபுறம் எமது மக்கள் மீது சிங்கள இராணுவம் கொத்தணிக் குண்டுகளை வீசியதோடு, உலகில் எந்த மூலையில் செய்யக் கூடாத மிகக் கேவலமான செயலாக நவீன இராசயன ஆயுதங்களையும் பாவித்தது. ஒரு லட்சத்திற்கும் அதிகமான எம் உறவுகள் அழிக்கப்பட்டனர்.
தமிழர் என்ற இனம் இலங்கை தீவில் தினமும் சிங்கள இராணுவத்தினால் கொன்றழிக்கப்பட்டது. இதற்கிடையில் தமிழ் நாட்டின் ஏற்பட்ட அசாதாரண நிலைமைகள் காரணமாக 2009 ஆம் தமிழ் நாட்டில் உள்ள வாக்கு வங்கிகளை கொள்ளையடிக்கும் வகையில் கலைஞர் கருணாநிதி ஒரு நாள் உண்ணாவிரத நாடகம் ஆடினார்.
இதனை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். தி.மு.க வாக இருந்தாலும், அ.தி.மு.க வாக இருந்தாலும் தமிழ் நாட்டில் ஆட்சியமைக்கு செயற்பாடுகளிலேயே குறியாக இருந்தன. தவிர ஈழத்தில் எம் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன சுத்திகரிப்புக்களுக்காக உண்மையாக குரல் கொடுக்கவில்லை.
ஆனால் இங்கு எம் உறவுகள் முல்லைத்தீவிலும் முள்ளிவாய்க்காலிலும் கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட போராளிகள் சிங்கள இராணுவத்தினால் அநியாயமாக கொலை செய்யப்பட்டனர்.
சரணடைய வந்த புலிகளின் அரசியல் துறையைச் சேர்ந்த நடேசன், புலித்தேவன் அணியினரும் படுகொலை செய்யப்பட்டனர். இதனை ஏற்கனவே சனல்-4 ஊடகம் உலகறியச் செய்து விட்டது.இப்போது எம் நேசத்தலைவனின் இளைய மகன் பாலச்சந்திரன் கைது செய்யப்பட்டது. பின்னர் படுகொல்லப்பட்டது.
சிங்கள இராணுவத்தினர் தமிழ் இளைஞர்களை கண்கட்டி, கை கட்டி மிகவும் கேவலமாக சுட்டுக் கொல்வது, தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் இசைப் பிரியா, உள்ளிட்ட தமிழ் பெண்களின் அந்தரங்கங்கள் சிங்கள இராணுவத்தினால் பகிரங்கமாக்கப்பட்டது, தமிழ்  பெண்கள் மீதான காமத் தனங்கள், இவைகள் வெளி உலகிற்கு கொண்டு வரப்பட்ட எம் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மிக மோசமான சிங்கள காடையர்களின் கொலை வெறித்தனங்கள்.
இவை தவிர புனர்வாழ்வு என்ற பெயரில் எத்தனை எத்தனையே ஆயிரமாயிரம் இளைஞர்களும், யுவதிகளும் தினம் தினம் சித்திரவதைகளுக்குள்ளும் பாலியல் வல்லுறவுகளுக்கும், உள்ளாக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இவை நீங்கள் அறியாதவை.
இவற்றில் இன்னும் அதிகமாக எம் தமிழர்களின் பூர்வீக நிலங்களில் சிங்கள குடியேற்றங்கள், இராணுவ மயமாக்கல், இராணுவ முகாம்களுக்களுக்காகவும், பௌத்த விகாரைகளுக்காகவும் நில அபகரிப்பு, எமது வளங்கள் சுரண்டப்படுகின்றன. எம் வாழ்வாதாரங்கள் பறிக்கப்படுகின்றன.
மீள்குடியேற்றங்கள் என்ற பெயரில் எம் மக்கள் காடுகளிலும் பற்றைகளுக்குள்ளும் கொண்டு சென்று இறக்கப்படுகின்றனர். இதனால் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். பலர் மனநோயாளிகளாக்கப் படுகின்றனர்.
இத்தகைய மோசமான நிலையில் தமிழ் நாட்டு உறவுகளை சாந்தப்படுத்தவும் தேடிக் கொண்ட பாவங்களுக்கு விமோசனம் தேடும் வகையிலும் 50 ஆயிரம் இந்திய வீட்டுத்திட்டம், துவிச்சக்கர வண்டிகள் என உதவிகளையும் கிள்ளி வீசியிது இந்திய அரசாங்கம்.
ஆனால் சிங்கள அரசாங்கம் தமிழ் நாட்டு தமிழ் மீனவர்களை “சிங்கள அடி தெரியுமா?” என்று கேட்டுக் கேட்டு தொடர்ந்தும் அடித்து உடைத்துக் கொண்டே இருக்கின்றது. இது கூட இந்திய அரசாங்கத்தின் தமிழர்கள் மீதான ஒரு வெறுப்புணர்வான செயற்பாடே ஆகும்.
இன்று எம் இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் வெளிக்கொண்டு வரப்பட்ட நிலையில் கடந்த முறை ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக மேற்குல நாடுகளும் அமெரிக்காவும் தீர்மானம் ஒன்றை சமர்ப்பித்தனர்.
ஆனால் இந்திய அரசாங்கம் தனது துரோகத்தனத்தால் அந்த தீர்மானத்தை வலுவற்றதாக்கியது. பின்னர்  நிறைவேற்றுவதற்கு ஆதரவளிப்பது போல் ஆதரவும் அளித்தது. இதன் மூலம் இரு பக்கமும் நல்ல பிள்ளையாகியது. ஆனால் அப்போது கூறப்பட்டதைப் போல ஒரு வருட காலத்தில் எந்த விதமான முன்னேற்றங்களை காணாத அமெரிக்கா இம்முறை மிகவும் இறுக்கமாக அனைத்துலக போர்க்குற்ற விசாரணை என்ற பொறிமுறையை உள்ளடக்கி தீர்மானத்தை முன்வைத்தது.
ஆனால் இந்திய அரசாங்கம் இம்முறையும் தனது நயவஞ்சக்காதால் இலங்கையை காப்பாற்றி விட்டது. இதனால் எந்தவிதமான பிரயோஜனமும் இல்லாத உப்பு சப்பில்லாத தீர்மானமே ஐ.நாவில் நிறைவேற்றவுள்ளது.
இதற்கிடையில் அடுத்த தேர்தலை குறி வைத்து கலைஞர் கருணாநிதியும் மத்திய அரசில் இருந்து விலகுதல், டேசோ என்று தனது அரசியல் சித்து விளையாட்டுக்களை காட்ட ஆரம்பித்து விட்டார்.
எமக்கு கிடைத்த இந்த சந்தர்ப்பம் சிங்கள அரசாங்கத்தினால் படுகொலை செய்யப்பட்டள எம் அப்பாவி தமிழ் மக்களின் சிந்தப்பட்ட இரத்தின் மூலமும் ஏற்பட்டது. கடவுளாலும் எமது மக்களின் காய்ந்து போகாத இரத்தத்தினாலும் ஏற்பட்ட இந்த இறுதி சந்தர்ப்பத்திலும் இந்திய அரசாங்கமும் எமக்கு துரோகத்தையே செய்தது.
இன்று மாணவர்களாகிய நீங்கள் எங்களுக்காக செய்து வரும் போராட்டங்களை குறித்து ஈழத்திலிருக்கும் உங்கள் உறவுகளாகிய நாம் மகிழ்கின்றோம். இந்தப் பேராட்ட அக்கினி எமக்கான ஒரு தீர்வைப் பெற்றுத் தரும் என நாம் நம்ப ஆரம்பித்துள்ளோம்.
நீங்கள் எந்த அரசியலுக்கு பின்னாலும் செல்லாமல் இருக்கும் வரையில் எங்கள் ஒவ்வொருவரது மனங்களிலும் நீங்கள் குடியிருப்பீர்கள். உங்கள் போராட்டங்கள் தமிழ் நாட்டின் பட்டி தொட்டியெங்கும் பரவ வேண்டும்.
நீங்கள் எங்களுக்காக போராடுவீர்கள் என்று தெரிந்தே அன்றே தீர்க்கதரிசனமான எங்கள் மேதகு தலைவன் உங்களை குறித்து தனது மாவீரர் உரைகளில் மறைமுகமாக சுட்டியிருக்கின்றார்.
இலங்கையில் தழிழர்களுக்கு என தனியான ஒரு நாடு தான் எங்கள் பிரச்சினைக்கான தீர்வு, இதில் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டுகிறேன். அத்தோடு இந்திய அரசின் துரோகத்தனங்களுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுங்கள்.
நாம் அனைவரும் தமிழர்கள். இது வெறுமனனே இலங்கையில் உள்ள தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட போராட்டம் அல்ல. தமிழர்கள் என்ற இனத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட போராட்டம் என்பதை மறந்து விடாதீர்கள்.
ஒரு வேளை கொல்லப்படாமல் இருந்தாலும் தமிழ் ஈழத்தில் உங்களை சந்திக்க காத்திருக்கின்றேன்.
தமிழரின் தாகம் தமீழத் தாகம்.

Wednesday, November 07, 2012

எமக்கு வீர முகவரியை தந்த போராளிகள் பற்றி எவரும் சிந்திப்பதாக தெரியவில்லை,

இனப்படுகொலை முடிந்து மூன்றாண்டுகள் ஓடிவிட்டது. இருந்தும் பல மட்டங்களில் இன்னும் திருப்தி ஏற்பட்டதாகத்தெரியவில்லை.
செத்தவர்கள், தப்பி ஓடியவர்கள் போக, மீதமுள்ளவர்கள் நிம்மதியாக வாழ்வதற்கு ஏதாவது வழி தேடவேண்டும். ஏதாவது மாற்றத்தை சர்வதேசம் பஞ்சாயத்து செய்து ஈட்டித்தருமா என்று "போராடியவர்கள்" வெளி உலகத்தில் நடப்பவை தெரியாமல் ஆகாயத்தை பார்த்து காத்திருக்கின்றனர். அதேநேரம் உள்நாட்டிலும் வெளி மட்டங்களிலும் தேர்வுசெய்யப்பட்ட உளவியல்ரீதியான வன்மங்களும் தலை கழுவி கவிழ்க்கும் தந்தரங்களும் சகல மட்டங்களிலும் தலைவிரித்தாடுகிறது.

காட்டுமிராண்டிகளின் தன்னிச்சையான தலையீடுகளால் சர்வதேச பஞ்சாயத்துக்கூட திசைதிருப்பப்பட்டு வாய்தா தொடர்ந்து வம்பர்களின் கை ஓங்கிவிடும்மோ என்று அச்சப்படும்வகையில் அனைத்தும் திட்டமிட்டு திசைதிருப்பப்பட்டு பயணிப்பதாகவே சம்பவங்கள் உணரவைக்கின்றன. இந்த பஞ்சாயத்து மற்றும் கபட நாடகங்கள் முடிக்கப்படும் தறுவாயில் போராளிகள் ஓர் இருவராவது மிஞ்சுவார்களா என்ற கேள்விக்கு எவரிடமும் விடையில்லை. போராளிகள் மறக்கப்பட்டுவிட்டனரோ என்ற பெரும் கவலையும் எழும்பாமலில்லை. முடிந்தவரை அனைத்து தளங்களிலும் ஏமாற்றுவேலை உளவியல் ரீதியாக திட்டமிடப்படுகின்றன. இது ஏன் கேட்பதற்கு ஆள் இல்லை என்ற இழக்காரமோ என்றும் எண்ணத்தோன்றுகிறது.

மக்கள் பரம்பலை குறைப்பதற்க்காக மேற்கொள்ளும் ஸ்ரீலங்காவின் முதலாவது வேலைத்திட்டம் இராணுவ அடர்த்திமூலமும், சிங்கள குடியேற்றங்கள் மூலமும் செய்து முடிக்கப்பட்டுவிட்டது. அதற்கு தமிழ் அரசியற் கட்சிகளும், இந்திய கொள்கை வகுப்பாளர்களும், ஸ்ரீலங்காவின் உயர் அரச அதிகாரிகளும் அனைத்து ஆதரவையும் வழங்கி நியாயப்படுத்தி விளம்பரப்படுத்துகின்றனர்.

தடை முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளிகளில் கொல்லப்பட்டவர்கள், சித்தசுவாதீனமாக்கப்பட்டவர்கள் போக மீதமுள்ளவர்களை உள ரீதியாக சித்திரவதை செய்து சிதைத்து தலை கழுவி நாடு கடத்தும் முயற்சி அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டிருக்கிறது. வேலைவாய்ப்பு என்ற பெயரில் கண்காணாத அரபி தேசங்களுக்கு நாடு கடத்தி ஒருவருடன் ஒருவர் தொடர்பாடலை தவிர்த்து தனிமைப்படுத்தும் நோக்கமும் திட்டமிடப்பட்டிருக்கிறது, இத்திட்டத்தின்மூலம் நாட்டில் ஆண்களை இல்லாமல் செய்யும் சூழ்ச்சியும் உளவியல் ரீதியாக வக்கிர நோக்கத்துடன் வேகமாக நடைபெறுகிறது. இத்திட்டம் ஓரளவு வெற்றிபெறும் சாத்தியமும் இருப்பதாகவே உணரக்கூடியதாக உள்ளது. . தொடர் இராணுவ கண்காணிப்பு புனர்வாழ்வு என்றபெயரில் கொத்தடிமையாக இருக்காமல் எங்காவது இராணுவ பிரசன்னம் இல்லாத இடத்துக்கு சென்றுவிடலாம் என்ற வெறுப்பு மனநிலைக்கு போராளிகள் வருவதற்கு சூழல்கள் வழிவகுக்கும் என்றே நம்பலாம்.

தீர்வுத்திட்டம் ஒன்றை ஒருபோதும் கொடுக்க விரும்பாத சிங்கள இனவாதிகள், போராளிகளை தன்னிச்சையாக வெளியே விட்டுவிட்டால் அமைப்பு ரீதியாக மீண்டும் ஒன்றுகூடிவிடுவார்கள் என்ற அச்சமும், அரசியல் தஞ்சம் கிடைக்கக்கூடிய நாடுகளுக்கு சென்றடைந்து போர்க்குற்ற வாக்குமூலங்களை கொடுத்து சர்வதேச அழுத்தத்துக்கு ஆளாக்கிவிடுவார்கள் என்ற அச்சமும் சேர்ந்து, போராளிகளை தனிமைப்படுத்தி கண்காணாமல் அரபு தேசங்களுக்கு கிரையம் செய்யும் திட்டமும் உளவியல் அடிப்படையில் வகுக்கப்பட்டிருக்கிறது. இதுபற்றி நமது பெரியவர் சம்பந்தன் ஐயா அறிந்தாரோ என்னவோ யாமறியோம்.

2009 ம் ஆண்டிலிருந்து கணிசமான மக்கள் கடுமையான கடல்ப்பயணத்தின் ஆபத்தை பொருட்படுத்தாமல் அவுஸ்திரேலியாவை நோக்கி புலம்பெயர்ந்து படையெடுக்கத்தொடங்கியிருந்தனர், ஆரம்பத்தில் அவுஸ்திரேலியாவும் அகதிகளுக்கு ஓரளவு ஆதரவாக நடந்துகொண்டிருந்தது. அந்த நோக்கத்தையும் சிதைக்கும்வண்ணம் ஸ்ரீலங்கா அரசு பொய் குடியேற்றவாசிகளை திட்டமிட்டு அவுஸ்திரேலியாவுக்குள் அனுப்பி உண்மையான அகதிகளுக்கும் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கிடைக்காதவண்ணம் பல சதிகளை செய்து வருகிறது. அச் சதித்திட்டத்தில் ஜனாதிபதி மஹிந்தவின் மகன் நாமல் ராஜபக்க்ஷவும் கோத்தபயவும் ஸ்ரீலங்கா புலனாய்வுத்துறை, மற்றும் கடற்படையுடன் இணைந்து செயற்பட்டதாக அறியப்பட்டது, அதுபற்றிய செய்திகள் பல பத்திரிகை ஊடகங்களில் வெளிவந்தன.

இனத்துவேஷம் காரணமாக சிங்கள அரசு அனைத்து கீழ்மட்டமான உத்திகளையும் கையாளுகிறதென்று பார்த்தால். தமிழ்நாட்டு சில அரசியல் கட்சிகளும், சில பத்திரிகைகளும் தொடர்ந்து விஷமம் செய்துவருகின்றன. அதில் உச்சக்கட்டமாக த ஹிந்து, தினமலர், ஆகிய பத்திரிகைகள் ஆரம்பந்தொட்டே வெளிப்படையாக நஞ்சை கக்கி வந்திருக்கின்றன, திமுகவின் கூட்டாளி பத்திரிகையான நக்கீரன் நல்லவன் போல நடித்து புனைக்கதைகளை வெளியிட்டு கருணாநிதியின் அதே தந்திர விஷமம் செய்து பணமீட்டியும் வந்தது. ஆனந்தவிகடன் என்ற பத்திரிகை வன்மத்தை வெளிக்காட்டி கொள்ளாமல் அவ்வப்போது சில அவதூறு செய்திகளை பூசி மெழுகி பிரசுரித்து வந்திருந்தாலும், இன்றளவில் ஆனந்தவிகடனின் முகமூடியும் கழற்றப்பட்டு சுயரூபம் வெளிவந்திருக்கிறது.

"நேற்று நான் விடுதலைப் போராளி! இன்று பாலியல் தொழிலாளி!" என்ற தலைப்பில் வக்கிர உணர்வுடன் ஆனந்தவிகடனில் எழுதப்பட்ட கட்டுரை காழ்ப்புணற்சியில் திட்டமிடப்பட்டு போராட்டத்தை கொச்சைப்படுத்தி சேறடிப்பதற்கு என்று புனையப்பட்ட ஒன்று என்பது அக்கட்டுரை எழுதிய நேர்த்தியும் வஞ்சகமான கால்வாரல் உத்தியும் மிதந்து நிற்கிறது .

அதிகாரங்களால் செய்ய முடியாத வஞ்சகத்தின் எச்சங்களை நிறைவுசெய்யும் நோக்கோடு வஞ்சகமும் வக்கிரமும், எழுத்துமூலம் வடிப்பட்டிருக்கிறது. தமிழக மக்களின் போராட்ட ஆதரவு உணர்வுகளை சிதைத்து நீர்த்துப்போகச்செய்து இந்தியாவின் கொள்கையை நியாயப்படுத்தும் உத்தியும். ஆனந்தவிகடன் மூலம் நரித்தனமாக சரிக்கட்டப்பட்டிருக்கிறது.

அதிகாரவர்க்கம், புலனாய்வாளர்கள், கொள்கைவகுப்பாளர்கள் இப்படி ஒரு கீழ்த்தரமான உத்தியை கையாள நினைத்திருந்தாலும் உள்ளூர ஆனந்தவிகடன் பத்திரிகைக்கும் போராட்டத்தையும் போராளிகளையும் கொச்சைப்படுத்துவதில் உடன்பாடு குறைவில்லாமலே இருந்திருக்கிறது. வியாபாரத்துக்காக தமிழக பத்திரிகைகள் இப்படியான செய்திகளை இன்று மட்டுமல்ல 2009ன் பின் பல சமயங்களில் நானும்கூட என்னும் உத்தியில் உளவியல் கால்வாரலை செய்தே வந்திருக்கின்றன, 2008, 2009 களில் நக்கீரன் ஒரு ஈழப்பத்திரிகைபோலவே தன்னிச்சையாக செயற்பட்டு கற்பனை கதைகள் பலவற்றை வெளியிட்டு வந்தது.

ஆனந்தவிகடன் என்ற பத்திரிகை கீழ்த்தரமாக இப்படி எழுதி வயிறு வளர்க்கவேண்டுமானால் நேரடியாக ஸீ தமிழ் தொலைக்காட்சியுடன் தொடர்புகொண்டு "சொல்லுவதெல்லாம் உண்மை" நிகழ்ச்சி தயாரிப்பாளர்களை அணுகினால் அந் நிகழ்ச்சியில் தினம் தினம் பகிரங்கப்படுத்தும் நிறைய பாலிய வக்கிரங்கள் மிருகத்தனமான சமூகச்சீர்கேடுகளை கூடிய ஆதாரங்கள் படங்களுடன் தினமும் வெளியிடலாம். செய்திக்கும் பஞ்சமில்லை, இந்தியாவில் நடக்காத பாலியல் வக்கிரங்கள் சமூகச்சீர்கேடுகளா வேறு எங்கும் நடந்துவிட்டன.

ஒருவேளை அப்டித்தான் ஒரு போராளிக்கு மிருகத்தனமான இராணுவத்தால் சீரழிக்கப்பட்டு ஒரு துர் நிலை ஏற்பட்டிருந்தாலும் நூற்றாண்டு பாரம்பரிய கொண்ட பத்திரிகை என்று தம்பட்டமடிக்கும் விகடன் ஒரு விடுதலை பெண் போராளிபால் அணுகும் முறை இதுவல்ல என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

வேற்று நாட்டில் வேற்று இனத்தவர்களால் நடத்தப்படும் சனல் 4, நடந்துகொண்ட நாகரீகத்தை இவர்கள் எப்போ கற்றுக்கொள்ளப்போகிறார்கள். ஈழத்தமிழர்களுக்கு எதிரி சிங்களவன் மட்டுமல்ல தமிழ் நாட்டில் சிங்களவனை விட கொடியவர்கள் இருக்கின்றார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று, அந்த பத்திரிகையின் பெயரை எழுதவே அருவருப்பாக இருக்கிறது. அனுதாபப்பட்டு கழிவிரக்கத்தை வெளியிடுவதுபோல அப்பட்டமான காழ்ப்புணர்ச்சியாகவே அந்த கட்டுரை நெஞ்சத்தில் அனலை கொட்டியிருக்கிறது.

ஈழப்போராட்டத்திற்கு தற்போதய தோல்வி என்பது நிரந்தரமானதல்ல. நாம் பலமாக இருந்தபோது இந்த வஞ்சகர்கூட்டம் எப்படி நடந்தது என்பதை நினைத்துப்பார்க்க துன்பத்திலும் சிரிப்பு வருகிறது.

ஒன்றை மட்டும் இந்த வஞ்சகர்களுக்கு தெரிவிக்கமுடியும். ஈழம் ஒன்று ஸ்ரீலங்காவிலிருந்து பிரியும்வரை களம் ஒன்று இருந்துகொண்டேயிருக்கும். என்பதை மட்டும் சொல்லிக்கொள்ள முடியும்.

எந்த வடிவத்திலும் துரோகிகள் எம்முடன் கூட இருந்து செயற்படுவர் என்பதை தலைவர் எம் மக்களுக்கு மிகச்சரியாகவே புரியவும் வைத்திருக்கிறார்.

30 வருடங்களுக்கு மேலாக இலங்கையில் போராட்டம் நடந்து வந்திருக்கிறது, தாயகத்திலிருந்த மக்கள் மட்டுமல்லாது பல்லாயிரம் மைல்களுக்கப்பால் புலம்பெயர் தேசங்களில் சுதந்திரமாக வாழும் இரண்டு மில்லியன் வரையினாலான மக்கள் ஒரு குடையின் கீழ் ஒற்றுமையாக விடுதலை நோக்கி பயணப்பட்டுள்ளனர் இங்கு எவரும் பதவிக்காகவோ பட்டத்திற்காகவோ போராட்டத்திற்கு சாமரம் வீசி நிற்கவில்லை. உணர்வு ரீதியாக தலைவனின் கொள்கையை ஏற்று பயணித்திருக்கின்றனர். பொய் பிரச்சாரத்தை அள்ளிவிட்டு ஐந்து வருட தேர்தல் முறைமையில் தேர்ந்தெடுக்கும் ஒரு அட்டைக்கத்தி கலாச்சாரம் ஈழத்தில் நிகழ்ந்திருக்கவில்லை.

ஒரு காலத்தில் சினிமா பாடலில்க்கூட விடுதலை புலிகளை, போராட்டத்தை உருவகப்படுத்தி கருத்துசொல்ல ஒருவரும் விரும்பியிருக்கவில்லை, அப்படித்தான் தலைவரின் கொள்கை கோட்பாடுகள் அமைந்திருந்தன. இது ஒன்றும் கருணாநிதியின் அடுக்குமொழி வசனத்தில் வளர்ந்த இயக்கமல்ல. உணர்விலும் சத்தியத்திலும் உறுதியிலும் வளர்க்கப்பட்ட பேரியக்கம், தலைவனின் தலையாய பண்புகளும் அதைத்தான் ஒவ்வொரு மனிதனிடமும் குடிகொண்டிருக்கிறது.

அப் பத்திரிகையின் கட்டுரையில் பின்னணியில் நிச்சியம் அரசியல் பின்னணியுடன் இந்திய புலனாய்வுத்துறையான றோவின் திசை திருப்பும் வஞ்சகமும் ஒருசேர இருப்பதை உணரக்கூடியதாக உள்ளது, றோவின் தலையீடு ஏற்கெனவே அறியப்பட்ட அனுபவம் போராட்டத்துக்கு உண்டு. விகடனுக்கு சோரம்போனாலும் பணம் பிரதானமாக தெரிந்திருக்கிறது..

அடுத்து அழையா விருந்தாளி முத்துவேல் கருணாநிதியின் நகைச்சுவைப்பகுதிக்கு வரவேண்டிய தேவை இருக்கிறது.

ஈழத் தமிழர்களின் நல்வாழ்வுக்காக, "டெசோ' மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், தி.மு.க., கருத்துக்கள் அடங்கிய ஆவணத்தை, ஐ.நா., துணை பொதுசெயலர் மற்றும் ஐ.நா., மனித உரிமை ஆணையத்திடம், கட்சியின் பொருளாளர் ஸ்ராலின், பார்லிமென்ட் குழு தலைவர், டி.ஆர்.பாலு ஆகியோர் ஒப்படைத்துள்ளனர்.

இதற்கு முன், 1961ல், தூத்துக்குடி தி.மு.க., பொதுக்குழுவில், ஈழத் தமிழர்களுக்காக நிறைவேற்றப்பட்டத் தீர்மானம், 1985ல் நடத்தப்பட்ட, ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தின் நகல்கள் ஆகியவற்றை, ஐ.நா., சபைக்கு அனுப்பியுள்ளோம். ஈழத் தமிழர்களுக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றிய புகைப்படங்கள் அடங்கிய, "சிடி'யையும் ஐ.நா., சபையில் அளித்துள்ளோம். ஈழத் தமிழர்களின் வாழ்வில் புதிய ஒளியை இம்முயற்சி ஏற்படுத்தும் என, நம்புகிறோம்.

ஐ.நா., சபையிடம் ஒப்படைத்துள்ள ஆவணத்தில், "ஈழத் தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்தி, அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப மறுவாழ்வை முடிவு செய்ய வேண்டும்' என, வலியுறுத்தியுள்ளோம். பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கு, சர்வதேச அளவில் அழுத்தம் கொடுக்கவும் நடவடிக்கை எடுப்போம்.

"டெசோ' மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்கள் பற்றி, மத்திய அரசுக்கு நன்கு தெரியும். எனவே, ஈழத் தமிழர்களின் நல்வாழ்வுக்கு, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கை, "டெசோ' மாநாட்டுத் தீர்மானத்தில் இடம்பெறவில்லை.ஆனால், ஈழத் தமிழர்களின் விருப்பத்துக்கு ஏற்ப, அவர்கள் மத்தியில் நடத்தப்படும் பொது வாக்கெடுப்பின் அடிப்படையில், தனி நாடு உருவாக்கலாம். பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை, லண்டனில் நடைபெறும் "இலங்கை தமிழர்கள் மாநாட்டிலும்" வலியுறுத்துவோம்.இவ்வாறு, கருணாநிதி கூறினார்.

கருணாநிதி குறிப்பிடும் கருத்து மட்டும் எவராலும் புறக்கணிக்க முடியாதது என்பது உண்மையே, நடைமுறையும் வேறு விதமாக இல்லை என்பதும் நூறு வீதம் ஏற்றுக்கொள்ளக்கூடியாவையே. ஆனால்……………... சொல்லியவர் யார் என்று பார்த்தால் முடிவு எப்படி அமையும் என்பதை ஆராய்ந்து பார்க்கத்தேவையில்லை. இந்த செய்தியை ஈழத்து சிறு குழந்தைகள் கேட்க நேர்ந்தால் உடனடியாக ஓடிச்சென்று bunker க்குள் படுத்துக்கொள்ளும்.

1958,தொடக்கம் 2012 டெசோ வரை பலநூறு தீர்மானங்களை இயற்றியதாக குறிப்பிடும் அவர் ஒரு தீர்மானத்தையாவது திரும்ப ஒருமுறை வாசித்தாவது பார்த்திருப்பாரா என்று பார்த்தால் பூய்ச்சியம்தான் பதிலாக கிடைக்கும். ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டதும் 31 நாட்கள் விடுப்பெடுத்து பின் அவர் கையில் எடுப்பது என்னவோ ஈழ அரசியல் பாசம்தான். ஆட்சி கிடைத்துவிட்டால் அவர் என்ன செய்வார் என்பதை 2008, 2009 ம் ஆண்டை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்கால் படுகொலைகளை எண்ணிப்பார்த்தால் அவராது தீர்மானங்களின் ஆழம், வண்டவாளம் நன்கு புரியும்.

கருணாநிதியின் அரசியல் வளர்ச்சியின் மூலவேரே இப்படியான கருத்துக்களை முன்வைத்து தடைதாண்டுவதுதான். அதை கருணாநிதியின் கடந்தகால வழித்தடம் பிசுறின்றி எடுத்துக்காட்டுகிறது. 1961ம் ஆண்டு தமிழர்களுக்காக தூத்துக்குடியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஐம்பது வருடங்கள் கடந்தும் கை துடைக்கவும் உதவியிருக்கவில்லை. ஆனாலும் மூன்று நான்கு இலட்சம்பேர் கொல்லப்பட்டபின்னும் எந்தக்கூச்சமும் இல்லாமல் திமுகவை நியாயப்படுத்துவதற்கு புள்ளி விபரமாக 1961 ஆண்டு 1985 ஆண்டு 2012 டெசோ வரை தடைதாண்டல் நிகழ்ச்சிகள் கூச்சமின்றி ஞாபகப்படுத்தப்படுகிறது. ஈழத் தமிழர்களுக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றிய புகைப்படங்கள் அடங்கிய, சீடி, குறுந்தகடுகள் ஐநா சபைக்கு அனுப்பியிருப்பதாக குறிப்பிடுகிறார். அந்த சீடி க்களை கருணாநிதி போட்டு பார்த்தாரா என்பது தெரியவில்லை. கருணாநிதியின் கைங்கர்யத்தில் நடந்த அந்த படுகொலை சிடிக்களை கருணாநிது ஒருமுறை போட்டு பார்த்துவிட்டு ஐநாவுக்கு கொடுத்து அனுப்பியிருக்கலாம். அவரது நெஞ்சுக்கு நிம்மதியாக இருந்திருக்கும்.

2009ல் கருணாநிதியை தோலுரிக்கும் விதமாக மக்கள் தொலைக்காட்சியும் பல இணையத்தளங்களும் அந்த சிடிக்களை கருணாநிதிக்கு எதிராக வெளியிட்டு மண் வாரி திட்டி தீர்த்தன, அப்போ காவல்த்துறையை கொண்டு மக்கள் தொலைக்காட்சியை முடக்க முயற்சித்தவர் பகவான் கருணாநிதி, இன்று வெட்கம் குற்ற உணர்வு எதுவும் இல்லாமல் தனது அரசியல் மீட்சிக்காக சிடிக்கள் ஐநா மன்றத்துக்கு அனுப்பியிருப்பதாக வேஷம் போடுகிறார், ஆனால் கருணாநிதி சம்பந்தப்பட்ட அனைத்து போர்க்குற்ற வீடியோ ஆதாரங்களும் சனல் 4 முலமும் வேறு வழிகள் மூலமும் ஏற்கெனவே ஐநா பெற்றுவிட்டது.

2009ல் நாம் தமிழர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் மற்றும் வைகோ, நெடுமாறன் அவர்கள் இதுபோன்ற குறுந்தகடுகளை தமிழக மக்களுக்கு வினியோகிக்க முற்பட்டபோது, அவை தனக்கு எதிரானது என்பதை தெரிந்து அனைத்தையும் பறிமுதல் செய்து சீமானை தேசியப்பாதுகாப்புக்கு துரோகமிளைத்தவர் என்று தேசத்துரோகியாக உருவகப்படுத்தி சிறையில் அடைத்தவர் இதே காத்தமுத்து கருணாநிதி.

கருணாநிதியின் டெசோ தீர்மானங்கள் என்ன தாக்கத்தை ஈழத்தமிழர்களுக்கு ஏற்படுத்துகிறதோ இல்லயோ கருணாநிதிக்கும் திமுகவுக்கும் இடையில் இன்று மலைபோல் திரண்டிருக்கும் தடை சற்றேனும் விலகுமென அவர் எதிர்பார்க்கிறார். விளிம்பு நிலையில் இருப்பவர்களும் புதியவர்களும், மறக்கும் தன்மை கொண்டவர்களும் கருணாநிதியின் கண்கட்டு வித்தை விளையாட்டில் ஈர்க்கப்பட வாய்ப்பு இருக்கிறது. அதனால் வீழ்ச்சியிலிருந்து மீண்டுவிடலாம் என அவர் திட்டமிட்டு எதிர்பார்க்கிறார். அதுதான் காலாகாலமாக கருணாநிதியின் கவசமாகவும் இருந்து வருகிறது. கருணாநிதி எடுத்துவைத்திருக்கும் டெசோவின் தீர்மானம் ஒன்றும் புதிதானதுமல்ல. Amnesty international, international crisis group, UN Human rights council ஆகிய அமைப்புக்களும் ஐநா சபையும் அதைத்தான் வலியுறுத்துகின்றன.

கருணாநிதி தனது தப்பித்தலுக்காக எதையும் செய்யக்கூடியவர் என்பது ஒருபுறம் இருந்தாலும் அவர் கடைசிகாலத்தில் மனம் மாறிவிட்டாரோ என்ற ஐயுறவும் லூசுத்தனமான பலரை இரண்டும் கெட்டான் மனநிலைக்கு தள்ளி குளப்பியிருக்கிறது. இதுகூட கருணாநிதிக்கு கணிசமான வெற்றியே. தொடர்ந்து கருணாநிதிக்கு ஆட்சி அதிகாரம் கிடைக்காவிட்டால் அவர் இதே கொள்கையை (தடைதாண்டல் உத்தியை) இன்னும் கடுமையாக்கி காவடி எடுத்து தொடருவார் அந்த கட்டத்தில் தமிழக அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பது அனைவரும் அறிந்ததே.

ஐநா சபைக்குள் ஒரு கோரிக்கை மனுவை உறுப்பு நாடு அந்தஸ்து அல்லாதோர் நேரிடையாக கொண்டு சேர்ப்பது என்பது சற்று சிரமமான காரியமே.

சாதாரண ஒரு தனிமனிதன் ஒரு மனுவை எழுதி பதிவுத்தபாலில் ஐநாவுக்கு அனுப்பிவைத்தால் அந்தமனுவின் முக்கியத்துவம் பொறுத்து அதற்கான பதிலை ஐநா அந்த மனிதனுக்கு அனுப்பி வைக்கக்கூடும். உறுப்புரிமைகொண்ட ஒரு நாட்டின் அங்கீகாரத்துடன் பதிவுசெய்யப்பட்ட ஒரு வெகுஜன அமைப்பு ஒரு சமூகம் சார்ந்து முக்கியமான ஒரு கோரிக்கையை கையளிக்க விரும்பினால் ஐநா மன்றத்திடம் அனுமதிகேட்டு முறையிடலாம், கூறிப்பிட்ட விடயத்தின் அவசியம் முக்கியத்துவம் பரிசீலிக்கப்பட்டு அனுமதி அளிக்கப்படும். அந்தவகையில் ஈழப்பிரச்சினை ஐநாவால் அறியப்பட்ட ஒன்று என்பதால் டெசோ சார்பாக முறைப்பாடு கையளிக்க கேட்கப்பட்ட வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஐநாவின் வரவேற்பு மண்டபத்தில் (information hall) டெசோ தீர்மானம் பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

டெசோ தீர்மானம் ஐநாவுக்கு கையளிக்கப்பட்டுவிட்டதால் தீர்மானத்தில் முன்மொழியப்பட்ட விடயங்களை ஐநா விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளும் என்றோ குறிப்பிட்ட கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றோ எந்த விதியும் இல்லை. டெசோவின் தீர்மானங்கள் இந்தியாவின் ஒப்புதலுடன் அதற்கான பாதையூடாக ஐநாவை சென்றடைந்தால் அந்த தீர்மானத்துக்கு இராசதந்திர அந்தஸ்து கிடைக்கும். இந்தியாவில் உள்ள ஒரு அமைப்பு, இந்திய ஆட்சி அதிகாரத்தில் பங்காளியான திமுக ஈழ விடுதலையில் கரிசினையான உடன்பாடு இருந்திருந்தால் எப்பாடு பட்டாவது டெசோவின் தீர்மானத்தை இந்திய அரசின் ஒப்புதலுடன் ஐநா மன்றத்தில் கொடுத்திருக்கவேண்டும்.

இந்திய நாட்டை நிர்வகிக்கும் பல மந்திரிகளை தன்னகத்தே கொண்ட திமுக தலைவர் கருணாநிதி. மத்தியில் கொள்கைகளை தீர்மானிக்கவல்ல செல்வாக்குமிக்க பங்காளிக்கட்சியாகவும் இருந்துவருகிறார், குடும்ப பிணக்குகளை சீர் செய்வதற்காக பலமுறை மத்திய அரசை மிரட்டி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த சம்பவங்களும் நிறைய உண்டு. அப்படியிருக்கும் பட்சத்தில் ஏன் டெசோ தீர்மானத்தை முறைப்படி மத்திய அரசின் ஒப்புதலுடன் இராசதந்திர தகுதிக்கு கொண்டுவர முயற்சிக்கவில்லை. மத்திய அரசுக்கு டெசோவின் தீர்மானம் அனைத்தும் தெரியும் என்று ஊக அடிப்படையில் பூசி மெழுகி நியாயப்படுத்தியிருக்கிறார்.

வேலைத்திட்டம் செயற்பாடு எதிர்மறையாக இருப்பினும், டெசோ அடிப்படையில் தமிழீழத்துக்கான ஆதரவு கொள்கையை மூலமாகக்கொண்ட ஒரு அமைப்பு என்பதே கருணாநிதியின் கூற்று. அப்படியான அமைப்பு தனது விருப்பம் ஒன்றை கோரிக்கையாக வைப்பது இயல்பானதே, இதே கருத்துப்பட்ட பல கோரிக்கைகள் ஏற்கெனவே ஐநாவின் பார்வையில் இருக்கிறது, எனவே டெசோ தீர்மானத்துக்கு ஐநா எவ்வளவு முன்னுரிமை கொடுக்கும் என்பதும் தெரியவில்லை டெசோ என்ற அமைப்பு பன்முகப்பட்ட சமூக பிற்படுத்தப்பட்டோர் நலன்புரி அமைப்பாக இருப்பின் அதன் கோரிக்கையை ஐநா வேறு வகையாக பாற்பதற்கு சந்தற்பம் உண்டு

டெசோ மாநாட்டில் முன்மொழிந்த தீர்மானங்கள் மத்திய அரசுக்கு தெரிகிறதோ இல்லையோ ஈழத்தமிழர்கள் அனைவரும் அறிந்ததே.

அடிப்படையில் (திமுக) கருணாநிதி ஈழ இன அழிப்பின்போது நேரிடையாக வகுத்த பாத்திரம் எவ்வகையானது என்பது பற்றியும், மத்திய அரசு நடந்துகொண்ட முறைகள் பற்றியும் ஒவ்வொரு ஈழத்தமிழனும் வேதனையுடன் அறிந்துதான் இருக்கின்றனர், இந்திய மத்திய அரசின் ஈழத்தமிழர் பற்றிய வெளியுறவுக்கொள்கை சென்றமாத நிருபாமாவின் பேட்டிவரை வெளிப்படையாக அறியப்பட்டே இருக்கிறது. திமுக பற்றிய கொள்கை என்பதை விடவும் தனிப்பட்ட முறையில் கருணாநிதி எப்பேற்பட்ட கொள்கையை ஈழத்தமிழர்பால் கொண்டிருக்கிறார் என்பதற்கு 1/2 நாள் உண்ணாவிரதம் மட்டும் சான்று அல்ல, தியாகி முத்துக்குமரன் முதல் 19 பேர் தீயில் கருகியபோதும், தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் அன்னை மருத்துவ உதவிக்கு தமிழகம் வந்தபோதும் கருணாநிதியின் எதிர்வினை எப்படி இருந்தது என்பதை அனைத்தும் உலகம் அறிந்துகொண்டதே. அது திரும்பத்திரும்ப பேசப்பட்ட விடயமாக இருந்தாலும் விளிம்பு நிலையில் இருப்பவர்களுக்கும் மறதிக்காரர்களுக்கும் கருணாவின் ஆசைக்கதைகளை கேட்டு ஏமாறும்நிலையில் இருப்பவர்களுக்கும் இந்த இடத்தில் சுட்டிக்காட்டுவது தேவையான ஒன்றாகவே படுகிறது.

அடுத்து லண்டனில் நடைபெறும் உலகத்தமிழர் மாநாடு என்பதைக்கூட கருணாநிதி "உலகத்தமிழர் மாநாடு" என்று உச்சரிக்க விரும்பவில்லை "இலங்கை தமிழர் மாநாடு" என்றே நக்கலாக குறிப்பிட்டு விளித்திருக்கிறார் என்பதையும் லண்டன் மாநாட்டுக்கு அழைப்பு அனுப்பி வரவேற்பவர்கள் புரிந்துகொள்ளவேண்டியவர்களாக இருக்கின்றனர். இருந்தும் அந்த மாநாட்டில் தனது கட்சி ஆளுமையை செலுத்தி 'தடைதாண்டும்'; உத்தியை விரிவுபடுத்த பிரயத்தனப்படுகிறார் என்பதையும் நாம் ஏமாளிகளாக ஏற்றுக்கொள்ளவேண்டியவர்களாக இருக்கிறோம்.

நீதியான, நடுநிலையான, ஒருதலைபட்ஷமில்லாமல் விவாதிக்கவல்ல தமிழர்களின் அரசியல் கட்சிகள், முற்போக்கு அமைப்புக்கள், பிற மொழி அரசியல் கட்சிகள், அமைப்புக்கள் உலகத்தமிழர் மாநாட்டில் பங்குபற்றவேண்டும் என்பது அனைவரினதும் அவாவாக இருக்கும், ஆனால் காலையில் எனது குழந்தைகளை கொன்றவனுக்கு, எனது தாயை சகோதரியை சீரழித்தவனுக்கு மாலையில் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்திருப்பது. அதிர்ச்சியளிக்கிறது. தமிழர் சமூகத்தின் ஒரு அரசியல் கட்சி என்பதினால் கருணாநிதியின் கட்சிக்கு அழைப்பிதழ் அனுப்புவதாக இருந்தால் பாகுபாடில்லாமல் உலகத்தமிழர் மாநாடு என்ற சுலோகத்தின்கீழ் இலங்கையில் இருக்கும் தமிழர் கட்சி என்று மந்திரி பதவியையும் வகிக்கும் டக்கிளஸ் தேவானந்தாவின் கட்சிக்கும், கருணா, பிள்ளையான் ஆகியோரின் கட்சிகளுக்கும் அழைப்பிதழ் அனுப்புவதுதான் நியாயமானதாக இருக்கும். அப்படியில்லாமல் அவர்கள் துரோகிகள் என வகைப்படுத்தப்படுவார்களாயின் கருணாநிதிக்கு எந்த அடிப்படையில் அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருக்கிறது, கருணாநிதி தனது ( தடைதாண்டலுக்காக) குடும்ப சிக்கல் தீரும் நேர்த்திக்கடனுக்காக டெசோ என்ற காவடியை தூக்கி உட்கார்ந்து ஆடுகிறார், என்பதால் நேற்றய முள்ளிவாய்க்கால் படுகொலைகள் எதிலும் கருணாநிதி சம்பந்தமில்லாதவர் என்றே ஆகிவிடுமா?? அல்லது நேற்றைய நிகழ்வுகள் அனைத்தும் நடக்கவில்லை என்றே கொள்ளவேண்டுமா???, அல்லது மறக்கப்பட்டுவிட்டதா????.

இந்த நடைமுறை ஒரு வளர்ப்பு பிராணியின் குணாம்ஷத்தை ஞாபகப்படுத்துகிறது.

ஈழதேசம் இணையத்திற்காக.

கனகதரன்.

Tuesday, April 03, 2012

பிரேரணைகள் வரலாம் தீர்வு வராது - இதயச்சந்திரன்

இலங்கை அரசின் 54 நிறுவனங்கள் நட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் போது, நாட்டின் இறைமையைக் காப்பாற்ற சிங்கள மக்களை அணி திரட்டுகிறது மகிந்த அரசு. நாட்டின் வினைத்திறன் அற்ற ஆட்சி முறைமையை மறைப்பதற்கு, பேரினவாதக் கோஷங்கள் உதவுமென்பதே மகிந்த சகோதரர்களின் கணிப்பு.

நட்டத்தில் ஓடும் ஸ்ரீலங்கன் ஏயர் லைன்சின் கடன் நெருக்கடியை தற்காலிகமாகத் தீர்ப்பதற்கு, ஐக்கிய அரபுக் குடியரசின் வங்கி ஒன்றிடம் கடன் கேட்டது அந்நிறுவனம். அரசு பொறுப்பேற்றால், அதனை வழங்குவதாகக் கூறியது அந்த வங்கி. ரூபாய் நாணயத்தின் பெறுமதி மிக மோசமாக வீழ்ச்சியடைவதால், தடுமாறும் திறைசேரி, இதற்கு ஒத்துக் கொள்ளுமா என்று தெரியவில்லை. மேலும், ஏயர் லங்கா விமானங்களை நிரப்பும் ஈழத் தமிழர்கள் இதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இவை தவிர, புலம்பெயர் தமிழர்கள் கொழும்பில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதை, நாட்டில் உருவாகும் பொருளாதார நெருக்கடிகள் உணர்த்துகின்றன. அதேவேளை மேற்குலகம் பிரயோகிக்க முனையும் அழுத்தங்கள், நேரடியான பொருளாதாரத் தடைகளாக அமையாவிட்டாலும், சர்வதேச நிதி நிறுவனங்களுடாக மறைமுகமான தடைகளை ஏற்படுத்தும் வாய்ப்புண்டு.

அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம், வெற்றி-தோல்விகளுக்கு அப்பால், எத்தகைய விளைவுகளை உருவாக்குமென பார்க்கவேண்டும். இதில் எது நடந்தாலும், மேற்குலகின் தொடர் அழுத்தங்கள், தடையின்றி முன்னெடுக்கப்படுமென எதிர்வு கூறலாம்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி.பிளஸ். வரிச் சலுகையை இலங்கை இழுத்திருக்கும் நிலையில், அமெரிக்காவின் வரிச் சலுகையானது பேரம் பேசும் ஆயுதமாகப் பாவிக்கப்படும் அபாயமும் உண்டு.

அத்தோடு ஈரான் மீதான தடைகள் ஊடாகபாதிப்படையும் ஜப்பான் மற்றும் சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு, அந்நாட்டுடனான வர்த்தகத்தில், மட்டுப் படுத்தப்பட்ட விதி விலக்கினை அளிக்க அமெரிக்கா முன்வந்தாலும், இலங்கையும் அதில் உள்ளடக்கப் படுமா வென்று தெரியவில்லை.

விமல் வீரவன்ச போன்றோர் கூகுளை தடை செய்வோம், அமெரிக்கப் பொருட்களை புறக்கணிப்போம் என்று மண்ணில் புரண்டு ஒப்பாரி வைத்தாலும், ஒவ்வொரு மாதமும் ஈரானிடமிருந்து இறக்குமதி செய்யும் மசகு எண்ணைக்கு அமெரிக்க டாலரில் தான் பணம் செலுத்த வேண்டும்.

பெல்ஜிய நிறுவனமானது, 30 ஈரானிய வங்கிகளுடனான நிதிப் பரிமாற்ற உறவினைத் துண்டித்துள்ளதால், இலங்கைக்கான சகல பரிவர்த்தனை வாசல்களும் மூடப்பட்டு விட்டதைஅமைச்சர் வீரவன்சவும், சம்பிக்க ரணவக்கவும், தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத் தலை குணதாச அமரசேகராவும் புரிந்து கொள்ளவில்லைப் போல் தெரிகிறது.

தமது அதிகாரக் கதிரையும், பேரினவாதக்கருத்தியலும், தக்கவைக்கப் படவேண்டுமாயின், மஹிந்த ஆட்சி நீடிக்க வேண்டுமென்பதே இவர்களின் விருப்பம். ஆனால் இவர்களின் விருப்பத்திற்கேற்வாறு உலக அரசியல் நகர்வதில்லை என்பதை சிங்களத்தின் கீழ் மட்டத் தலைவர்கள் உணர்ந்து கொள்வதில்லை.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள், தமிழ் நாட்டு வெப்பம் தாளாமல், பிரேரணையை ஆதரிப்போம் என பொடிவைத்துப் பேசியதும், இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டிற்கு மாறிவிட்டார்கள் இந்த பேரினவாதக் கருத்தியல் கூட்டணியினர் அத்தோடு நாட்டின் இறைமையைக் காப்பாற்ற, இந்திய விஸ்தரிப்பு வாதத்தை மறுபடியும் தூக்கிப் பிடிக்க ஆரம்பித்துள்ளார் சோமவன்ச அமரசேகர.

அண்மைக் காலமாக வடக்கு மக்களின் அவல நிலை குறித்து, நாடாளுமன்றில் அடிக்கடி பேசிவந்த ஜே.வி.பி.யினர் பௌத்த சிங்கள பேரினவாதத்திற்கு ஆபத்து என்றவுடன், தமது சிவப்புச் சட்டைகளை கழற்றி எறிந்து, தமிழின விரோதப் போக்குகளை முன்னெடுக்க தொடங்கி விட்டனர்.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த சிங்களப்பேரினவாத நாணயத்தின் மறுபக்கமான இரணில் விக்கிரமசிங்கவும், தமிழ் மக்களின் உரிமை குறித்தான அடிப்படைக் கோட்பாட்டில் உறுதியாகவுள்ள தமிழ் சிவில் சமூகத்தினரை கேலி செய்ய ஆரம்பித்த விவகாரம் கவனிக்கத்தக்கது.

ஆகவே ஆட்சி மாற்றமொன்றின் ஊடாக அதிகார நாற்காலி தனக்கு கிடைக்கலாமென கற்பிதம் கொள்ளும் ஐக்கிய தேசியக் கட்சி, அமெரிக்கப் பிரேரணையில், இந்தியா போன்று நழுவல் போக்கினை கடைப் பிடிப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.

‘இறைமைக்கு பேராபத்து’ என்கிற மகிந்தரின் முழக்கத்தால். தென்னிலங்கையில் அரசிற்கான அதரவு அதிகரிக்கும் அதேவேளை. மார்ச் 23க்குப் பின்னர், பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் மக்கள். மறுபடியும் அரசிற்கெதிராக கிளர்ந்தெழுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

அமெரிக்கப் பிரேரணைக்கு இந்தியா நிபந்தனையற்ற ஆதரவினை வழங்கினால், இந்திய முதலீடுகளுக் கெதிரான போராட்டங்களை அரசோடு சேர்ந்தியங்கும் தேசப்பற்றுள்ள இயக்கங்களும், ஜே.வி.பியும் முன்னெடுக்கக் கூடிய சூழல் ஏற்படலாம்.

அனேகமாக, அரசிற்கெதிராக முன்னெடுக்கப்பட வேண்டிய மக்கள் போராட்டங்கள், திசைமாறி, அமெரிக்க, இந்திய எதிர்ப்பு போராட்டங்களாக புதிய பரிமாணத்தை எட்டக்கூடிய வாய்ப்புக்களே அதிகமாகக் காணப்படுகின்றது. அதற்கான அரச ஆதரவும் பலமானதாகவேஇருக்கும்.

அதே வேளை. அமெரிக்கப் பிரேரணை வெற்றியடைந்தால், அடுத்த கட்டமாக என்ன விதமாக நகர்வினை மனித உரிமைப் பேரவையோ அல்லது மேற்குலகோ மேற்கொள்ள முயற்சிக்கு மென்பதை ஆராய வேண்டும்.

பரிந்துரைகள் நிறைவேற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க பேரவை முயலும் போது. அதனை சிங்களம் நிராகரித்தால், அடுத்த கட்ட நகர்வு எதுவாகவிருக்கும் என்பது முக்கியமான விவகாரமாகும்.

அடுத்த 20வது கூட்டத் தொடரில், சிங்களத்தின் மறுப்புக் குறித்து விவாதிக்கப்படுவதோடு, ஐ.நா சபை நிபுணர் குழுவின் அறிக்கை முன்வைக்கப்படுமா? என்கிற கேள்வியும் எழுகிறது.

இருப்பினும் இலங்கை விவகாரம் குறித்தான மேற்குலகின் நிகழ்ச்சி நிரலில், ஒருவிதமான மென்போக்கு நிலை காணப்படுவதை நாம் அவதானிக்க வேண்டும்.

Thursday, March 22, 2012

ஜெனீவா தீர்மானம் வென்றாகிவிட்டது! அடுத்து என்ன…? தமிழீழத்தை வெல்லும்வரை ஒவ்வொரு தமிழனும் ஓயக்கூடாது!!! – ம.செந்தமிழ்.

கடந்த பல நாட்களாக உலகத்தமிழர்களது நாடித்துடிப்பை ஏற இறங்க வைத்த ஜெனீவாத் தீர்மானம் வெற்றிபெற்று விட்டது.

இந்த தீர்மானத்தின் வெற்றி தமிழர்களின் வெற்றியாகவும் சிங்களவர்களின் தோல்வியாகவும் பார்க்குமளவிற்கு உலகத்தமிழர்களிடையே சிறுவர் பெரியவர் ஆண்கள் பெண்கள் என்ற நிலைகள் கடந்து எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருந்தது.

இந்த மனித உரிமைகள் அமர்வில் சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்படுமா இல்லையா என்ற விவாதத்தில் ஆரம்பித்து அதனை எந்த நாடு கொண்டுவரப் போகின்றது எனும் நிலைக்குச் சென்றது முதல் அமெரிக்காவால் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்தில் என்ன இருக்கின்றது என்பதுவரை சென்று அதனை இந்தியா ஆதரிக்குமா இல்லையா என்கின்ற நிலையில் இந்த நிமிடம் வரை தலைகுத்தி நின்றது உண்மை.

தமிழீழ மண்ணில் அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலை குற்றங்களிற்காகவும் மீறப்பட்ட மனித உரிமை மீறல்களிற்காகவும் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களிற்காகவும் சிங்கள அரசை தலைமைவகித்துவரும் மகிந்தராசபக்சே கும்பல் மீது ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட மேற்கொண்ட முயற்சியானது பல்வேறு சச்சரவுகளையும் விவாதங்களையும் தமிழர் தரப்பையும் கடந்து உலக அரங்கிலும் ஏற்படுத்தியிருந்தது.

தொப்புள்கொடி உறவுமுறையில் துடித்தெழுந்த தமிழகத்தின் எழுச்சிக் கோலம் இந்திய நடுவன் அரசை ஆட்டிப்படைத்திருந்தது என்றால் மிகையில்லை.
அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்தை ஆதரிப்பதில் இந்தியாவிற்கு இருந்த நிலை கொழும்பை பகைக்க முடியாது தமிழகத்தை இழக்க முடியாது என்ற இரண்டும் கெட்டான் நிலையாகும்.

மழைவிட்டும் தூவானம் நிற்கவில்லை என்று எகத்தாளம் பேசிய அப்போதைய முதல்வர் தமிழினத் துரோகி கருணாநிதியும் போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று சாத்தான் குரலில் வேதமோதிய இன்றைய தமிழக முதலமைச்சர் செல்வி செயலலிதாவும் புலிகளை யாரென்று தெரியாது.. அவர்களுடன் எனக்கு எந்தவித தொடர்பும் கிடையாது என்று டெல்லியில் விமானம் ஏறும்போதும் சென்னையில் விமானத்தைவிட்டு இறங்கிய கையுடன் தமிழர்களிற்கு தமிழீழம்தான் தீர்வு என பேட்டி கொடுத்த சந்தர்ப்பவாதி ராமதாசும் சோனியாவின் மனதை மகிழ்விப்பதையே ஒரே நோக்கமாக கொண்டு இதுவரை செயற்பட்டு வந்த தமிழக காங்கிரசு தலைவர்களும் போட்டி போட்டுக் கொண்டு களத்தில் குதித்திருந்ததை உலகறியும்.

இவர்களின் இந்த நிலை மாற்றத்திற்கு கேவலம் கெட்ட அரசியல்தான் காரணம். முன்னர் கண்டுகொள்ளாது விட்டதற்கும் இன்று தூக்கிப்பிடிப்பதற்கும் அரசியலே அடிப்படையாக அமைந்துள்ளது.

அன்று பதவிகளை தக்கவைப்பதற்காக ஒருதரப்பும் இழந்த பதவிகளை மீண்டும் பெறுவதற்கு மறு தரப்பும் ஈழத்தமிழினத்தின் அழிவை பகடைக்காயாக பயன்படுத்தியிருந்த நிலையில் இன்று ஒட்டுமொத்தமாக குரலெழுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டதன் பின்னணி தமிழக மக்கள் அரசியல் தலைமைத்துவம் இன்றி தன்னிச்சையாக தமது வாழ்வுரிமையினை நிலைநாட்டுவதற்காக களமிறங்க முற்பட்டுள்ளமையே காரணமாகும்.

இந்தியாவை ஆளும் சோனியா தலைமையிலான மத்திய அரசு தற்போதைய சூழலில் தள்ளாட்டமான போக்கில் இருந்து வருவதாலும் அடுத்தடுத்து நடைபெற்று வரும் மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களில் படுதோல்விகளை சந்தித்துவருவதாலும் அரசியல் எதிர்காலம் கருதி சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதன் பின்னணியில் இந்தியா ஆதரவாக வாக்களித்துள்ளது.

இதன் பின்னயில் முன்னர் குறிப்பிட்ட தமிழக அரசியல் கட்சிகள் தமது போராட்டத்தால்தான் எச்சரிக்கையினால்தான் இந்தியா இந்த நிலைப்பாட்டை எடுத்தது என தம்பட்டம் அடிக்கும் கூத்து அரங்கேறும்.

மன்மோகன்சிங் தீர்மானத்தை ஆதரிக்க இந்தியா விரும்புகின்றது என்ற அறிவிப்பை பாராளுமன்றத்தில் விடுத்த உடனேயே தமிழகத்தில் போராட்டங்கள் வலுக்குறைந்துவிட்டதை அவதானித்த போது இந்த தீர்மானத்தின் வெற்றி முழுமையாக தமிழக களத்தை ஓய்ந்துபோகச் செய்துவிடுமோ என்ற அச்சம் இயல்பாகவே ஏற்பட்டுவிடுகின்றது.

தமிழகத்தில் உள்ள தமிழீழ ஆதரவாளர்களிற்கும் தமிழின உணர்வாளர்களிற்கும் தாய்த்தமிழக உறவுகளிற்கும் இந்த வேளையில் சொல்ல விரும்புவது சிறிலங்காவில் ராசபக்சே கும்பலால் தமிழர்களிற்கு எதிராக நிகழ்த்தப்பட்டது அப்பட்டமான தமிழினப் படுகொலை என்பதையும் அதற்கு காரணமான ராசபக்சே கும்பலை சர்வதேச நீதிமன்றத்தில் ஏற்றி தண்டனை வழங்க வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட உரிமைகள் மறுக்கப்பட்ட ஈழத்தமிழர்களே தமது தலைவிதியை தீர்மானிக்கும் வகையில் சர்வதேச கண்காணிப்பில் பொதுசன வாக்கெடுப்பினை நடாத்தக் கோரியும் போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்பதுதான்.

இதுவே புலம்பெயர் தமிழர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த வெற்றியை வெடிவெடித்து கொண்டாடவோ வாழ்த்துக்கள் கூறி மகிழ்ச்சியடையவோ யாரும் முற்படக்கூடாது. எமது இலக்கு தமிழீழத் தனியரசை அமைப்பதிலையே இருக்க வேண்டும்.

ஜெனீவாவில் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் குறித்து தற்போதுவரை சர்ச்சைகள் நிலவிவந்தாலும் சர்வதேச அரங்கில் தமிழர்களிற்கு சிங்கள இனவெறி அரசால் இழைக்கப்பட்ட அநீதிகளிற்கு நியாயம் கேட்கும் போட்டக்களத்தின் திறவுகோளாகவே கருதவேண்டும்.

உலக வல்லாதிக்க நாடுகளும் பிராந்திய வல்லாதிக்க நாடுகளும் பிராந்திய நலன் சார்ந்து ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட இந்த நூற்றாண்டு கண்டிராத மாபெரும் இனப்படுகொலையினை கண்டுகொள்ளாது விட்டதை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்ட சிங்கள இனவெறி அரசு தன்னை கேள்வி கேட்க யாரும் இல்லை என்ற ஆணவப்போக்குடன் செயற்பட்டுவந்த நிலைக்குப் போடப்பட்ட கடிவாளமாகவே இதனை நாம் பார்க்க வேண்டும்.

இதுவரை தாங்கள் எது செய்தாலும் யாரும் கேட்கமாட்டார்கள் கண்டுகொள்ளமாட்டார்கள் என்ற நிலைப்பாட்டில் இருந்த சிங்களத்தை ஒரு சர்வதேச கண்காணிப்பிற்குள் கொண்டுவரும் பொறியாகவே இந்தத் தீர்மானம் அமைந்துள்ளது.

தமிழீழம் நோக்கிய எமது நீண்ட நெடிய போராட்டத்திற்கு மே-18 2009இல் தடைக்கல் போடப்பட்டது. அதனை உடைத்து தமிழீழ விடுதலைப் போரை முன்னெடுத்து வரும் நாம் இந்த திறவுகோளைப் பயன்படுத்தி திறந்துகொண்டு அடுத்த கட்டத்திற்கு விடுதலைப் போராட்டத்தை முன்நகர்த்த வேண்டும்.

புலம்பெயர் தமிழர்களின் இராசதந்திரப் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாக இதனை கருதலாம். தொடர்ந்து அனைத்துலக தளத்தில் போராடுவோம். தமிழீழத்தை வென்றெடுப்போம்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

ஈழதேசம் இணையத்தள ஆய்வாளர் : ம.செந்தமிழ்.(22-03-2012)

Saturday, March 17, 2012

மக்கள் எழுச்சியை எந்த அடக்கு முறையாளர்களாலும், ஆயுதங்களாலும் தடுத்துவிடமுடியாது - தாயகத்தில் இருந்து வீரமணி

தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்றும் அவர்கள் தமிழ் மக்களுக்கு அழிவுகளை ஏற்படுத்தினார்கள் என்றும் பிதற்றிய அரசாங்கம், அவர்கள் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழர் தாயகப் பிரதேசத்தில் முழுமையான சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பிரச்சாரத்திலும் ஈடுபடுகின்றது. ஆனால் யாழ்ப்பாணம் உட்பட தமிழர் தாயக பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.

இங்கு எவரும் எதையும் செய்யலாம் என்ற நிலை ஒன்று தோற்றம் பெற்றுள்ளது. யாழ் குடாநாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் பெண்கள் மீதான வன்முறைகள் இதனைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. இன வன்முறையாளர்களான சிங்கள தேசத்திடம் இருந்து தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்றம் பெற்ற காலத்தில் இருந்து தமிழீழ தேசியத் தலைவர் தமிழ் மக்களின் சகல விடயங்களிலும், அக்கறையுடனும் அவதானத்துடனும் செயற்பட்டதை எவரும் இலகுவில் மறந்துவிட முடியாது.

மாற்று ஆயுதக் குழுக்களும் பல கட்சிகளும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சமகாலக் கட்சிகளாக இருந்த போதிலும் மேற்படிக் கட்சிகளின் தலைமையிலும் உறுப்பினர்களிடையேயும் ஒழுக்கநெறி காணப்படவில்லை.

ஆரம்ப காலத்தில் தமிழ் மக்களின் நிர்வாக நடவடிக்கைகளில் மேற்படி கட்சிகள் தலையிட்ட போதிலும் இவர்களிடம் இருந்த துர்நடத்தைகள் காரணமாக தமிழ் மக்கள் இவர்களை வெறுத்தொதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் தலைவர் பிரபாகரனின் நேர்மை, நீதியான முறையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக தலைவரும் போராளிகளும் மக்களால் கவரப்பட்டனர்.



புலிகள் சொல்வதை மக்கள் தலைமேற் கொண்டு செயற்பட்டனர். இதனால் புலிகள் இயக்கத்தின் ஆரம்ப காலத்தில் இருந்தே தமிழ் மக்கள் புலிகளை நேசித்தார்கள். மக்கள் மத்தியில் அவர்கள் சிறப்பான வகையில் நிர்வாகங்களை நடத்தினர்.

கிராமங்கள் தோறும் ‘சிற்றூர் சபை’ என்ற சிறு சிறு சபைகளை உருவாக்கிய புலிகள் அமைப்பு அந்தந்தக் கிராமங்களில் இருந்து தெரிந்தெடுக்கப்பட்ட நற்குணம் உள்ளவர்களை அதற்குப் பொறுப்பாக நியமித்து பிரதேசங்களில் இடம்பெற்ற குற்றச் செயல்களை தீர்த்து வைத்தது.

இதன் சிறப்பான செயற்பாட்டால் தமிழ் மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளில் ஆழமாக நம்பிக்கை வைத்தனர். புலிகள் கெரில்லா அமைப்பாகச் செயற்பட்ட போதே தமிழர் தாயகப் பகுதியில் சிவில் நிர்வாக நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனால் குற்றச் செயல்கள் குறைவடைந்தன, இல்லாது ஒழிக்கப்பட்டன.

பின்னர் தமிழர் தாயகத்தின் குறிப்பிட்ட அளவான பிரதேசங்களை தக்கவைத்து மரபுவழிப் போரிடும் அமைப்பாக புலிகள் அமைப்பு வளர்ச்சி அடைந்ததைத் தொடர்ந்து சிவில் நிர்வாகத்தை முன்னெடுப்பதற்காக புதிய வழிமுறைகளைக் கையாள வேண்டிய தேவை தலைவருக்கு ஏற்பட்டது.



இதனால் சர்வதேச விதிமுறைகளுக்கு அமைய காவற்துறை தோற்றுவிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியாக தோற்கடிக்கப்படும் வரை சிறப்பாக இயங்கிய தமிழீழ காவற்துறை இலஞ்சம், ஊழல், பக்கச் சார்பற்ற சிறந்த சேவையை தமிழ் மக்களுக்கு வழங்கியது. இதனால் தமிழர் தாயகப் பிரதேசத்தில் குற்றச் செயல் முழுவதுமாக இல்லாதொழிக்கப்பட்டது.

ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் இல்லாமலுள்ள தற்போதைய காலத்தில் தமிழர் தாயகப் பிரதேசம் எங்கும் குற்றச் செயல்கள் பாரிய அளவில் தலைதூக்கியுள்ளன. தற்போது எவர் எதை நினைத்தாலும் செய்து முடிக்கக் கூடிய சூழலே யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர் தாயகப் பிரதேசத்தில் நடைபெற்று வருகின்றது.

தமிழ் மக்களில் அக்கறையான நிர்வாகம் ஒன்று இதுவரை இங்கு ஏற்படுத்தப்படவில்லை. யுத்தம் நிறைவுக்கு வந்ததைத் தொடர்ந்து தமிழர் தாயகப் பிரதேசங்களில் பல்லினக் கலாசாரம் புகுந்து கொண்டதே இங்கு நடைபெறுகின்ற துர்நடைத்தைகளுக்கு காரணம் என்று பலரும் கூறுகின்றனர். ஏ-9 நெடுஞ்சாலை திறந்து வைக்கப்பட்டதையும் அவர்கள் இதற்கு உதாரணமாகக் கூறுகின்றனர்.

ஏ-9 நெடுஞ்சாலை திறக்கப்பட்டதால் மட்டும் யாழ் குடாநாட்டில் குற்றச் செயல்கள் அதிகரிக்கவில்லை. மாறாக தமிழ் மக்களின் கலை, கலாசார விடையங்களைப் பாதுகாக்கக்கூடிய, அவர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கக்கூடிய அக்கறையான சிவில் நிர்வாகம் ஒன்று தமிழர் தாயகப் பகுதியில் அமுல்படுத்தப்படவில்லை. அவ்வாறான கட்டமைப்பு ஒன்று இருக்குமாயின் இந்தக் குற்றச் செயல்களையும் கலாசாரப் பிறழ்வுகளையும் நிச்சயம் தடுத்து நிறுத்த முடியும்.

ஏனெனில் கடந்த 2002 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா அரசாங்கத்திற்கும் இடையே யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதைத் தொடர்ந்து ஏ-9 நெடுஞ்சாலை திறக்கப்பட்டது. குறிப்பிட்ட சில வருடங்கள் நீடித்த இந்த ஒப்பந்த காலத்திலும் யாழ்ப்பாணக் குடாநாடு உட்பட தமிழர் தாயகப் பிரதேசம் எங்கும் பல்லினக் கலாசாரம் புகுந்து கொண்டது.

வெளித் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டன, ஆனால் அந்தக் காலத்தில் கலாசாரப் பிறழ்வுகளே குற்றச் செயல்களோ அதிகரிக்கவில்லை. அதற்கு காரணம் தமிழ் மக்களில் அதிக அக்கறையான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் இந்த அமைப்பின் நீதி நிர்வாக நடவடிக்கைகளும் தமிழர் தாயகப் பகுதியில் வலுவுடன் சிறந்து விளங்கியமையாகும்.

ஆனால் 2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியாக அடக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழர் தாயகத்தில் வலுவுடன் இயங்கிய அவர்களின் சிவில் நிர்வாக கட்டமைப்பும் சீர்குலைந்தது. இதனால் பொளத்த சிங்கள மேலாதிக்கம் தாயகத்தில் தலைதூக்கியது. குற்றச் செயல்களும் கலாசாரப் பிறழ்வுகளும் இங்கு அதிகரிக்கத் தொடங்கின. பெண்கள் மீதான வன்முறைகளும் சிறுமிகள் மீதான பாலியல் வல்லுறவுகளும் அதிகரிக்கத் தொடங்கின.

பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்ற போதிலும் அண்மைக்காலச் சம்பவங்களாக வடமராட்சி குடத்தனையில் நிலக்ஷனா என்ற மாணவி கொல்லப்பட்டமை, நெடுந்தீவில் லக்ஷினி என்ற மாணவி கொல்லப்பட்டமை உட்பட பல இடங்களிலும் இடம்பெற்ற 15 வயதிற்கு உட்பட்ட சிறுமிகள் மீதான வன்புணர்ச்சி சம்பவங்களைக் கூறலாம்.

யாழ்.மாவட்டத்திலும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு உட்பட தமிழர் தாயகத்தின் பல இடங்களிலும் நடைபெறுகின்ற பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்புணர்வுகள், களவு, கொலை, கொள்ளை போன்ற பல்வேறு குற்றச் செயல்களுடனும் தொடர்புடையவர்கள் ஈ.பி.டி.பி உறுப்பினர்களாகவும், அவர்களுடன் நெருக்கமான உறவுகளைப் பேணுகின்றவர்களாகவுமே உள்ளனர்.

யாழ் குடாநாட்டை இராணுவம் கைப்பற்றிய காலத்தில் இருந்து இன்றுவரை யாழ் குடாநாட்டில் பல கொலைகளிலும் கொள்ளைகளிலும் ஈடுபட்ட ஒட்டுக்குழுக்களின் உறுப்பினர்கள் இதுவரை கைதுசெய்யப்பட்டு தண்டனைகள் வழங்கப்படவில்லை. இவர்கள் சுதந்திரமாக உலா வருகின்றனர்.

குறிப்பாக, ஊடகவியலாளர் நிமலராஜன் கொலையுடன் தொடர்புடைய கிருபா என்று அழைக்கப்படும் ஜெகதீஸ்வரன், தென்மராட்சியில் மாணவனின் கொலையுடன் தொடர்புடைய சாள்ஸ், குடாநாட்டில் இடம்பெற்ற பல கொலைகளுடன் தொடர்புடைய நெப்போலியன், காண்டீபன் ஆகியோர் உட்பட ஈ.பி.டி.பி யின் பல உறுப்பினர்கள் இன்றுவரை சுதந்திரமாக திரிகின்றனர்.

பல கொலைகளைச் செய்த இவர்கள் சிறீலங்கா காவல்துறையால் கைது செய்யப்பட்ட போதும் அரசியல் செல்வாக்குடன் வெளியே வந்துள்ளனர். ஈழ யுத்தத்தில் ஏராளம் தமிழர்களை கொன்று சிங்களத் தரப்பிற்கு வெற்றிவாகை சூடிக் கொடுத்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மற்றும் யுத்த காலத்தில் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் ஆகியோர் சிறைகளில் வாடிக்கொண்டு இருக்கின்ற நிலையில், ஈ.பி.டி.பி ஒட்டுக்குழுவின் மேற்படி உறுப்பினர்கள் மட்டும் சுதந்திரமாக நடமாடுகின்றனர்.

இதில் இருந்து சிறீலங்கா நீதித்துறை எத்தகைய போக்கில் பயணிக்கின்றது என்ற உண்மை வெளிப்படுகின்றது. என்ன செய்தாலும் தமக்கு தண்டனை கிடைக்காது என்று வெகுவாக நம்புகின்ற மேற்படி ஒட்டுக் குழு உறுப்பினர்களும் அவர்களின் ஆதரவாளர்களுமே யாழ் குடாநாடு உட்பட தமிழர் தாயகப் பகுதியில் தமது காடைத்தனங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த காடைக் கும்பலின் கோரப் பசிக்கு இறுதியாகப் பசியாகியவள் நெடுந்தீவைச் சேர்ந்த லக்ஷினி. சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுபவர்கள் என்ற பெயருடன் யாழ் மாவட்டத்தில் இருக்கின்ற சிறீலங்கா காவல்துறையினரும் இலஞ்சம் மற்றும் ஊழல் பெறுவதில் முனைப்புக் காட்டுகின்றனரே தவிர மக்களின் பிரச்சினைகளில் அக்கறை எடுப்பவர்களாக இல்லை.

கொலை செய்கின்ற குற்றவாளிகள் கூட, ஒரு போத்தல் மதுபானத்துடனும் ஒரு சிகரட் பெட்டியுடனும் காவல்துறையினரை தமது கைக்குள் போடக்கூடிய நிலையே இன்று யாழ். குடாநாட்டில் காணப்படுகின்றது. அந்தளவிற்கு யாழ் குடாநாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. அண்மையில் யாழ். மாவட்டத்திற்கு பிரதிப் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட தமிழ் காவல்துறை அதிகாரி எஸ்.இந்திரன் அரசியல் செல்வாக்குடன் தற்போது இடமாற்றப்பட்டுள்ளார்.

மேற்படிப் காவல்துறை அதிகாரி யாழ் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டமை தமிழ் மக்களால் வரவேற்கப்பட்டது. இவர் யாழ் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட சில தினங்களிலேயே யாழில் மிக இரகசியமாக இயங்கிய விபச்சார விடுதி ஒன்று சுற்றி வளைக்கப்பட்டு பல பெண்களும் ஆண்களும் கைது செய்யப்பட்டனர். மேலும் பல இடங்களில் பாடசாலை மாணவர்களுக்கு போதைவஸ்து விற்பனை செய்த சிலரையும் இவர் கைது செய்திருந்தார்.

இது போன்று ஈ.பி.டி.பி என்ற அரசியல் கட்சியின் காடைத்தனத்தினையும் இவர் தட்டிக் கேட்க முற்பட்டார். இதனால் சினமடைந்த மகிந்த அரசு, இவரை தற்போது இடமாற்றம் செய்துள்ளது. இவரைத் தொடர்ந்தும் குடாநாட்டில் வைத்திருந்தால் யாழ்ப்பாண இளைஞர் யுவதிகளையும் மாணவர்களையும் சீரழிக்க வேண்டும் என்ற தமது இலக்கு நிறைவேறாமல் போகும் என்ற காரணத்தினாலேயே இவர் இடமாற்றப்பட்டதாக கூறப்படுகின்றது.

யாழ்.குடாநாட்டில் இளைஞர், யுவதிகளிடமும் மாணவர்களிடமும் பாலியல் தொரடர்பான கலாசார சீரழிவுகளை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களை வேறு வழியில் பயணிக்க வைக்கலாம். அவ்வாறு செய்தால் தமிழ் மக்கள் தமக்கு எதிராக கிளந்து எழாமல் தடுக்க முடியுமென்று அரசாங்கம் நினைக்கின்றது. அரசு நினைப்பது போன்று தமிழ் மக்கள் முட்டாள்கள் அல்ல. குட்டக் குட்டக் குனிபவர்கள் அல்ல. உலகிலேயே சிறந்த கெரில்லா அமைப்பாகவும் மரபு வழிக்கட்டமைப்பை கொண்ட படைபலமாகவும் விழங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் பலத்தை எவருமே குறைத்து மதிப்பிட முடியாமல் இருந்தது.

இதனால் தான் உலகின் 10 இற்கும் மேற்பட்ட நாடுகளின் உதவிகளுடனும் அவர்களின் போர் உத்திகளுடனும் சிறீலங்கா அரசு தமிழீழ விடுதலைப் புலிகளை ஆயுத ரீதியாக தோற்கடித்திருக்கிறது. இத்தகைய வீரம் விளைந்த மண்ணில் வாழுகின்ற தமிழர்களைச் சிங்களம் சிறு துரும்பாக எடை போடுகிறது. அரசிற்கும் இராணுவத்திற்கும் அரச ஒட்டுக் குழுக்களுக்கும் எதிராக மக்கள் கிளர்ந்து எழுவதற்காக கட்டியம் கூறும் சம்பவங்கள் அண்மையில் வெளிப்பட்டன.

மர்ம மனிதர்கள் என்ற போர்வையில் இராணுவத்தினர் நிகழ்த்திய அட்டகாசங்களுக்கு எதிராக நாவாந்துறையில் மக்கள் கிளர்ந்து எழுந்தனர். ஈ.பி.டி.பி ஒட்டுக் குழுவிற்கு எதிராக நெடுந்தீவு மக்கள் கிளர்ந்து எழுந்தனர். இதுபோன்று எதிர்காலத்திலும் மக்கள் கிளர்ந்தெழுவர். இதனை எவருமே தடுக்க முடியாது. தியாகி திலீபன் கூறியதைப் போல மக்கள் புரட்சி வெடிக்கும். அப்போது சுதந்திரத் தமிழீழம் மலரும்.

நன்றி : ஈழமுரசு