Showing posts with label உலகச்செய்திகள். Show all posts
Showing posts with label உலகச்செய்திகள். Show all posts

Saturday, October 12, 2013

இலங்கையில் தமிழின அழிப்பு: தமிழருக்கான பாராளுமன்றக் குழுவினரின் கருத்தாய்வு


பிரித்தானியத் தமிழர் பேரவையும், தமிழருக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற குழுவும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த "இலங்கையில் தமிழின அழிப்பு" என்ற தலைப்பிலான கருத்தரங்கொன்று கடந்த செவ்வாய்க் கிழமை நடைபெற்றது.
பிரித்தானியப் பாராளுமன்றத்திற்கு அருகிலுள்ள Portcullis House என்னும் இடத்தில் இக்கருத்தரங்கு இடம்பெற்றது.
பல்வேறு அரசியல்வாதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் ஆய்வாளர்கள், கல்விமான்கள், அரசியல் செயற்பாட்டளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வு, விவாதங்கள் மற்றும் இலங்கையால் அரங்கேற்றப்பட்ட இனவழிப்பு சம்மந்தமான கேள்வி- பதில் அரங்கமாகவும் உருப்பெற்றது.
இலங்கையில் தமிழ் மக்களின் நிலை தொடர்பான, தமிழ் மக்களுக்கும் - வேற்றின மக்களுக்கும், தனிநபர்களுக்கும்- அமைப்புகளுக்கும், என சமூகத்தின் பல்வேறு தரப்பினருக்கிடையான, ஆரோக்கியமான கலந்துரையாடல் இங்கு இடம் பெற்றது.
மேலும் பல ஆய்வுகள், வெளியீடுகள், தரவுத் தொகுப்புகள் மற்றும் பாதிக்கப்பட்டோரின் சாட்சியங்கள் போன்றனவை மூலம் இன்வழிப்பு நடைபெறுவதனை தமிழரல்லாதவர்கள் ஏற்றுக் கொள்ள இந்த நிகழ்வு ஒரு முன்நோக்கிய நகர்வாய் அமையப் பெற்றதென ஏற்பாட்டாளர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

Tuesday, September 24, 2013

தேர்தல் விதிமுறைகள் அரச தரப்பினரால் மீறல் - சர்வதேச கண்காணிப்புக்குழு காட்டம்


வட மாகாண சபைத் தேர்தல் காலங்களில் நடைபெற்ற சிறீலங்கா இராணுவத்தினரது நடவடிக்கைகளுக்கு எதிராக தென் ஆசியப்பிராந்தியத்தில் இருந்து வருகை தந்த சர்வதேச தேர்தல் கண்காணிப்புக்குழு தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. தேர்தல் காலங்களில் தேர்தல் விதிமுறைகள் மற்றும் சட்ட ஒழுங்குகள் சிறீலங்கா அரச தரப்பினராலும் அரச படைகளினாலும் அதிக அளவில் மீறப்பட்டதையும் மேற்படி கண்காணிப்புக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. சிறீலங்கா தேர்தல் திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் இங்கு வருகை தந்திருந்தவெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களே தமது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

தேர்தல் நடைபெற்ற நாளிற்கு முன்னைய நாட்களில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் சார்பாகப் போட்டியிட்ட பல வேட்பாளர்கள் இராணுவத்தினரால் ஆயுத முனையில் தாக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் பல வேட்பாளர்களின் வீடுகள் சிறீலங்கா இராணுவப் புளனாய்வாளர்கள் மற்றும் துணை இராணுவக் குழுக்களைச் சார்ந்தவர்கள் என பொதுமக்களால் சந்தேகிகப்படும் நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் அக்குழு குற்றம்சாட்டியது. மேலும் சிறீலங்காவின் தேசிய இராணுப்பிரிவைச் சேர்ந்த படையினர் மகிந்த ராஜபக்ஸவின் அரசியல் கட்சியின் பிரச்சார நடைவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், தேர்தலில் நேரடியாகவே ஈடுபட்டதாகவும், மகிந்த ராஸபக்ஸவின் கட்சியை சார்ந்தவர்களுக்கு ஆதரவு தேடும் முறையில் அச்சிடப்பட்ட துண்டுப்பிரசுரங்களை தேர்தலில் வாக்களிக்க வரும் மக்களிடம் அச்சுறுத்தும் வகையில் விநியோகித்ததாகவும் அக் கண்காணிப்புக்குழு தெரிவித்தது.

இக்கண்காணிப்புக்குழுவின் தலைவரான முன்னாள் இந்திய தேர்தல் ஆணையாளர் கோபாலசாமி தமிழ் மக்கள் நெடு நாட்களுக்குப்பின் ஜனநாயக செயல்முறையில் பங்குபற்றுவதில் ஆர்வம் காட்டியதாகவும் எனினும் அதை தடுக்கும் வகையில் பல அசம்பாவிதங்கள் அரங்கேறியதாகவும் தெரிவித்தார். மேலும் நம்பக்தன்மை வாய்ந்த உறுதியான மக்கள் மனங்களை வென்றெடுக்கக்கூடிய தேர்தல் நடைமுறைகளை அமுல்ப்படுத்த தேர்தல் ஆணையாளரிடம் அதிக அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் எனவும் கருத்து வெளியிட்டார். எனினும் வழமையன இந்திய தலைமைகளைப் போல் சிறீலங்கா நடைபெறுவது மகிந்தவின் தனிப்பட்ட ஆட்சியென்பதையும், அரசின் முக்கிய பொறுப்புக்களில் உள்ள அனைவரும் மகிந்த மீதான விசுவாசிகளே என்பதை அறியத்தவறிவிட்டார்.

அடிதடி, துப்பாக்கிச்சூடுகளுக்கு மத்தியில் நடைபெற்ற வட மாகாண சபைத்தேர்தலை மிகவும் நீதியான முறையில் நடைபெற்றது வடமாகாண சபைத்தேர்தல் என முரசறைந்தவர்தான் சிறீலங்காவின் தேர்தல் ஆணையாளர். இவர் கைகளில் எவ்வளவு அதிகாரத்தைக் கொடுத்தாளும் அது புலிப்பசிக்குப் புல்லை கொடுத்தது போன்று பிரயோசனமற்றதாகவே இருக்கும்.தேர்தல் வேட்பாளர் ஒருவர் அவரது வீட்டு வாசலில் வைத்து இராணுவத்தினரால் மிரட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரிக்கச் சென்ற உள்ளுர் தேர்தல் கண்காணிப்பாளர் ஒருவர் மிரட்டப்படமை, அனந்தி சசிதரன் மீதான இராணுவம் மற்றும் துணை இராணுவக்குழுக்களின் அட்டுமீறல் சம்பவம், மேலும் அரச ஆதரவுடன் இடம்பெற்ற போலி 'உதயன்" பத்திரிக்கை விநியோகம் மற்றும் தொலைக்காட்சி ஊடகத்தினரின் தவறான செய்திப் பிரயோகங்கள் என்பவை தேர்தல் சட்டங்களை அடியோடு மீறும் செயல் எனவும் அவர் விபரித்தார்.

தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் சிலவற்றின் வேண்டுகோளுக்கிணங்க உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துச் செல்ல போக்குவரத்து சேவைகள் அமுல்ப்படுத்தப்பட்டதாகவும் எனினும் 26மூஇடம்பெயர்ந்த மக்களே வாக்களிப்பில் பங்குபற்றியதாகவும் அவர் தெரிவித்தார். இத்தனை திருகுதாளங்களையும் அரங்கேற்றிவிட்டு த.தே.கூ வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டபின் தமது ஆட்சியில் வடக்கில் வாழும் மக்களின் ஜனநாயக நடவடிக்கைகள் மீதான நம்பிக்கைகள் உயர்வடைந்துள்ளதாக சர்வதேசத்திற்கு அறிக்கை விட்டுள்ளார் மகிந்த ராஜபக்ஸ. இதனை ஏற்றுக்கொள்கின்ற அரசியல் தலைமைகளும் சர்வதேசத்தில் இருக்கவே செய்கின்றன. தேர்தல் நடைபெறும் நேரத்தில் தமிழர்களை வீட்டுக்குள்ளேயே முடங்க வைக்கப்பார்த்ததுதான் இவரது தேர்தல் வெற்றி நோக்கிய திட்டமாக இருந்தது. அத்தனை திட்டத்தையும் தவிடுபொடியாக்கி த.தே.கூட்டமைப்பை தமிழர்கள் அமோக வெற்றி பெற வைத்திருக்கின்றார்கள்.

இதற்கான காரணம் தமிழ்த்; தேசியம் மீதான தமிழ் மக்களின் நாட்டமே தவிர த.தே.கூட்டமைப்பின் தலைமைகளின் சுய அரசியல் சிந்தனைக்காகவல்ல. இதனை அறியாது தமது சொந்த எண்ணப்பிரதிபலிப்புக்களை ஒட்டுமொத்த தமிழர்களின் எண்ணக்கருவெனக் கருதி சிங்கக்கொடி அசைக்கும் நிகழ்வுகள் இனி இடம்பெற்றால் அது தமிழர்களின் அவநம்பிக்கைக்கான விலையாகத்தான் இருக்கும். இந்நிலமை ஒட்டுமொத்த தமிழ்த்தேசியத்தையே உருக்குலைத்துவிடும். தமிழர்களின் எண்ணங்களை முழுமையாக அறிவதுதான் தமிழ் அரசியற் தலைமைகளின் தற்காலத் தேவை.
-ஈழவன்னியன்-

Saturday, September 14, 2013

லண்டனில் அதிநவீன முறையில் வங்கிக் கொள்ளை: பொலிஸாரால் முறியடிப்பு


லண்டனில் உள்ள வங்கியொன்றில் அதிநவீன முறையைப் ( Hi-tech) பயன்படுத்தி கொள்ளையடிக்க முற்பட்ட கும்பலொன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தென் கிழக்கு லண்டனில் அமைந்துள்ள சன்டேன்டர் (Santander) வங்கியில் புகுந்த 12 பேர் கொண்ட கும்பலானது அதிநவீன முறையினைப் பயன்படுத்தி கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.
இவ்வாறு நகரிலுள்ள வங்கிகளில் பல மில்லியன் பவுண்களை கொள்ளையடித்துள்ளனர்.
வங்கியினுள் சென்ற கொள்ளையர்கள், வங்கி சம்பந்தப்பட்ட கணனித் தொடர்புகளை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான கருவியை இரகசியமாகப் பொருத்திவிட்டு சென்றனர். அதன் பின்னர் வங்கிக் கணக்குகளிலிருந்து பணத்தினை கொள்ளையிட்டுள்ளனர்.
இவ்வாறு சன்டேன்டர் (Santander) வங்கியில் கொள்ளையடிக்க முற்பட்டபோது, பொலிஸாரால் மடிக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு மேற்கொள்ளப்பட்டு வந்த கொள்ளைச் சம்பவங்கள் பற்றி ஸ்கொட்லன்ட் யாட் பொலிஸ் நிபுணர்கள் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து இக் கொள்ளைச் சம்பவம் முறியடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 7 பேர் பிரித்தானியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் 2 பேர் இந்தியர்கள் மற்றும் ஏனையவர்கள் ஈரான், ஈராக்கைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் 23 வயது முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
லண்டனில் மூன்றாவது பெரிய வங்கியான சன்டேன்டர் (Santander) 1300 கிளைகளைக் கொண்டிருப்பதுடன், 25 மில்லியனுக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, July 31, 2013

யாழில் படைப்பிரிவுகள் வெளியேறிய முகாம்களுக்கு மூடுவிழா! பொதுமக்களின் வீடுகளை கையளிக்க ஏற்பாடு


யாழ்ப்பாணத்திலுள்ள படை முகாம்களை மூடிவிட்டு அப்பகுதியில் நிலைகொண்டிருந்த படைப்பிரிவுகள் வெளியேறிச் செல்லவுள்ளன.
இராணுவத்தின் 51வது படைப்பிரிவின் படைமுகாம்களே இவ்வாறு மூடப்படவிருக்கின்றன. இதற்கான ஆயத்த நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக 511வது பிரிகேட் படைமுகாம் மற்றும் 512வது பிரிகேட் படைமுகாம்களே மூடப்பட்டு அப்படைமுகாம்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்படவிருக்கின்றன.
இந்த படைமுகாம்கள் அமைக்கப்பட்டிருந்த பொதுமக்களின் வீடுகளும் காணிகளும் மீண்டும் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படவிருக்கின்றன.
இதற்கான நடவடிக்கைகளை படை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். 511வது, 512வது படைமுகாம்கள் அமைந்திருந்த வீடுகள் குறித்த பிரிவு இராணுவ அதிகாரிகளால் உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு நாளைமறுதினம் நடைபெறவுள்ளது.
இதன்படி 511வது படைமுகாம்கள் இருந்த ஊரெழு, அச்செழு பகுதி பொதுமக்களின் வீடுகளை கையளிக்கும் நிகழ்வு அன்றைய தினம் காலை 10.00 மணிக்கு யாழ்.தேசிய கல்வியியற் கல்லூரியில் இடம்பெறவுள்ளது.
512 வது படைமுகாம்கள் இருந்த கொழும்புத்துறை, சுவாமியார் வீதி மற்றும் அரியாலை பகுதியிலுள்ள பொதுமக்களின் வீடுகளை கையளிக்கும் நிகழ்வு அன்றைய தினம் அரியாலையிலுள்ள 512வது படைமுகாமிலும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Saturday, July 20, 2013

பிரித்தானியாவில் வெயில் அகோரம்! வீதியில் தார்கள் உருகின! சில பகுதிகளில் புற்கள் தீப்பற்றின!


கடந்த சில வாரங்களாக பிரித்தானியாவில் நிலவிவரும் வெயில் 30டிகிரியை கடந்துள்ளதனால் பெருமளவிலான மக்கள் தமது கோடை காலத்தினை கடற்கரையோரங்களிலும் ஆறுகளிலும் மிக சந்தோஷமாக கழித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரித்தானியாவில் சில பகுதி வீதிகளில் போடப்பட்டிருந்த தார்கள் உருகியுள்ளதுடன், புற்கள் நிறைந்த சில பகுதிகள் தீப்பற்றி எரிந்துள்ளன.
இரண்டு ஏக்கர் அளவில் படர்ந்திருந்த புற்கள் எரிந்ததனால் 8 தீயணைப்பு வாகனங்களில் வந்த 60 தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் அத்தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாகவும் உயிராபத்துக்கள் எதுவும் நிகழவில்லை என பிரித்தானிய வானிலை அவதான நிலைய தெரிவித்துள்ளது.
2006ம் ஆண்டுக்கு பின்னர் இவ்வாறான அதீத வெப்பம் நிறைந்த காலப்பகுதியாக இவ்வருடத்தை குறிப்பிடக்கூடியதாக இருக்கின்றதாகவும் மேலும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை, புதன்கிழமைகளில் இன்னும் சற்றுக் கூடுதலான வெப்பத்தை (35C)  உணரக்கூடியதாக இருக்கும் என பிரித்தானிய வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
மேலும் இம்முறை சில விற்பனை நிலையங்களில் ஒரு லட்சத்துக்கும் மேலான  Sun  கிறீம்கள் விற்பனையாகலாம் என எதிர்பார்க்கபடுவதாகவும் சில விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Saturday, May 18, 2013

மே 18 – தமிழ் இன அழிப்பு நாள் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை (ICET)


icetதமிழர்களின் செங்குருதியில் தேசம் தோய்ந்த நாட்கள், தமிழர்களின் சிதறடிக்கப்பட்ட உடல்கள் வன்னியின் விளைச்சல் புமியில் வீசியெறியப்பட்டன! விசவாயுக்குண்டுகளில் எமது குழந்தைகளும் கருகின! நீதி படுகொலை செய்யப்பட சர்வதேசம் கைகட்டி வேடிக்கை பார்த்தது!
‘புட்டிய இறச்சிக் கடையின் கோரக்காட்ச்சியினைப்’ போல, தமிழர் தாயகத்தில் சிங்கள அரசின் தமிழின அழிப்புப்போரின் மனிதப்பேரவலம் காட்சிதருகின்றது என சர்வதேச ஊடகம் ஒன்று, உலகம் சொல்ல விரும்பாத உண்மையைக் கக்கியது. தன்னார்வத்தொண்டுப் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், ஐ.நா பணியாளர்கள் என அனைவரையும் வெளியேற்றி, வெளியுலகத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு ஒரு சின்னஞ் சிறு நிலப்பகுதிக்குள் இலட்சக்கணக்கான தமிழ்மக்களை இராணுவ முற்றுகை;குள் இறுக்கிவைத்துக்கொண்டு சிங்கள பேரினவாத அரசினால் நரபலி வேட்டையாடப் பட்டார்கள்.
இந்தப் போர் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் மட்டுமல்ல, சிங்கள தேசம் ஒரு பெரும் இன அழிப்பை நோக்கமாகக் கொண்ட போரையே நிகழ்த்தி வருகின்றது என்ற உண்மையை விடுதலைப்புலிகள் உலகுக்கு இடித்து உரைத்தபோதும் யார் செவிகளுக்கும் அது விழவுமில்லை. அதனை அவர்கள் காதுகொடுத்துக் கேட்க விரும்பவும் இல்லை! சிங்கள அரசுடன் சேர்ந்து நின்றே ஐ.நாவும் ஒத்து ஊதியது. இழப்புக்களின் எண்ணிக்கையை வேண்டுமென்றே குறைத்துச் சொன்னது. முதலில்7000 தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஊகம் வெளியிட்ட ஐக்கிய நாடுகள் சபை, தமது கடமையினைச் செய்யத் தவறியதால் 100,000 வரையிலான தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறியிருக்கிறார்கள்.
சிங்கள அரசினைப் பாதுகாத்ததில் ஐ.நாவுக்கும் பெரும் பங்குண்டு. இன அழிப்பைத் தடுத்திருக்க்கூடிய அத்தனை வாய்ப்புக்களையும் வேண்டுமென்றே அலட்சியம் செய்துவிட்டு, மனித குலத்துக்கே மாபெரும் தவறினை இழைத்துவிட்டு, இப்போது, தவறு செய்து விட்டோம் எனக் கூறி இனிவரும் காலங்களில் இவ்வாறு நடைபெறாமல் இருக்கப் பார்த்துக் கொளளப் போவதாக ஐ.நா உறுதி கூறுகின்றது.
அப்படியென்றால் அநீதி இழைக்கப்பட்ட எங்களுக்கான நீதி எங்கே?
உங்கள் ‘புகோள அரசியல் சதுரங்க பரிசோதனைக் கூடத்தில்’ பலிக்கடாவாக்கப்பட்ட விலங்குகளா தமிழர்கள்?
அல்லது தமிழர்களின் அழிவு ஒரு பொருட்டல்ல பிற இனமக்களின் உயிர்கள்தான் பெறுமதியானவை என்றா உங்கள் கூற்றை நாம் அர்த்தப்டுத்திக்கொள்வது?
சர்வதேசம் கூறும் வெறும்நம்பிக்கை தரும் வார்த்தைகளோ அல்லது ஐ.நா வின் மனிதவுரிமைகள் அவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களோ எமக்கான நீதியினையோ , விடுதலையினயோ பெற்றுத்தந்துவிடப்போவதில்லை, நாம்தான்அவற்றைப் போராடிப பெற வேண்டும்!
இப்போது நினைத்துப் பார்க்கின்ற போதும் நம்பமுடியவில்லை! 21 ஆம் நூற்றாண்டில் மானிடம் குறித்து உயர்ந்த சிந்தனைகள் செழித்து வளர்ந்த உலகிலா நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்? இலட்சக்கணக்கான தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படும் போது அலட்சியமாகவிருந்த ஈவிரக்கமற்ற உலகமா இன்றைய உலகம்? உலகே உனக்கு கண்ணில்லையா? என எம்மால் கதறத்தான் முடிந்தது தடுத்திட முடியவில்லையே?
‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’; என உலக மாந்தர்களையே தன் உறவாக நினைத்து மகிழ்ந்த இனமக்களல்லவா படுகொலை செய்யப்பட்டார்கள்? ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’என்று பாரினில் பசிபோக்கிடும் அறக்கருத்தினை உலகுக்கு கொடுத்த மக்களல்லவா இன்று பசியாலும் பட்டினியாலும் செத்துக்கொண்டிருக்கிறார்கள்?
அகமும் புறமும் என வாழ்வுக்கு இலக்கணம் எழுதிய மக்களா இன்று நிலமிழந்து தவிக்கிறார்கள்?
புமிப்பந்தெங்கும் எட்டு கோடி தமிழர்கள் பரந்து வாழ்ந்தபோதும் எமக்கென ஒரு நாடு இல்லாமமைதான் இந்தப் பரிதாபநிலைக்கு – இந்த மோசமான நிலைக்குக் காரணம் என்ற தேசியத்தலைவரின் வார்த்தைகளை நாம் மறுக்க முடியுமா? ஈழத்தில் தமது தொப்புள் கொடி உறவுகள் படுகொலை செய்யப்படுவது தெரிந்திருந்தும் தமிழகச் சொந்தங்களால் அதனை தடுத்து நிறுத்திட முடியவில்லை. ஏனெனில் முடிவு எடுக்கும் அதிகாரம் அவர்களிடம் இல்லை. இறைமையுள்ள அரசின் சொந்தக்காரர்களாக அவர்களும் இல்லை!
உலகில் சிறுபான்மை இனமான சிங்கள இனம், இறைமையுள்ள அரசு என்னும் ‘உலகத் தகைமைச் சான்றிதளை’ கையில் வைத்துக்கொண்டே அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்துவிடுவதையும் இனப்படுகொலை செய்வதையும் யாரும் தட்டிக்கேட்க்க முடியாது என சவால் விடுகிறது! குற்றமிழைத்த பின்னும் தப்பிக்கொள்ளமுடிகிறது. ‘தமிழீழமே தீர்வு’ என தமிழகச் சட்டசபையில் ஒட்டுமொத்தமாகத் தீர்மானம் நிறைவேற்றிய பின்னும் ஏன் நம்மால் அதனைச் செயற்படுத்த முடியவில்லை? ஏனெனில் மானில அரசு தன்னிச்சையாக செயற்படமுடியாது மத்திய அரசுக்கு கட்டுப்பட்டுத்தான் நடக்கவேண்டும் என்பார்கள். அப்படியென்றால் கோடிக்கணக்கானவர்களாக நாம் இருந்தபோதும் எமக்கென குட்டி நாடொன்றேனும் இருந்தால் மட்டுமே எமது உரிமைகளை நாம் பாதுகாத்திட முடியும் என்ற உண்மையினை சிங்களத்திடம் இருந்து நாம் இனியாவது கற்றுக்கொள்ளவேண்டும்.
தமிழர் தாயகத்தில் தமிழர்களின் மொழி, நிலம் சார்ந்த அடையாளங்களை அழித்து, அபகரிக்கப்பட்ட நிலங்களில் சிங்களக் குடியேற்றங்களை திட்டமிட்டு உருவாக்கியும் சிங்கள அடையாளங்களை நிறுவுகின்ற வேலைகளையும் அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இவை எல்லாமுமே தமிழர்களை இலங்கைத்தீவீல் இருந்து முற்றுமுழுதாக துடைத்தழிக்கும் இன அழிப்பு நடவடிக்கை என்னும் பெரும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியே!
நிலமிழந்த மக்கள் அரசுக்கு எதிராக போராடவும் தலைப்பட்டுள்ளார்கள். வாழ்வதா? சாவதா? என்ற நிலையில் போராடிச்சாவதே மேலானது என்று அவர்கள் தீர்மானித்திருக்கக் கூடும். சுதந்திரதேசத்தின் கனவுகளோடு வாழந்த மக்கள் அடிமையாக எவ்வளவு காலத்துக்குத்தான் அடங்கி ஒடுங்கி வாழக்கூடும்?
2009 தமிழின அழிப்புப் பேரவலத்துக்குப் பின், ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டது. ஆனால் ஈழ விடுதலைப்போராட்டம் உலக அரங்கிற்கு இன்னொரு வளர்ச்சி நிலைக்கு எடுத்துவரப்பட்டு உலகத்தமிழர்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எமது கோரிக்கைகளை உலகத்தமிழர்கள் அனைவருமே கையில் எடுத்துப்போராடும் நம்பிக்கை தரும் காலமாக இன்று மாறியுள்ளது.
எம்மை படுகொலை செய்தாய் ஆனால் எமது கோரிக்கைகள் இன்னும் உயிர்ப்போடேயே உள்ளனவே அதனை என்ன செய்வாய்? எம்மை புதைகுழியில் புதைத்தாய் எம் தாய் நிலத்தை எங்கு கொண்டு போய்ப் புதைப்பாய்?
மே 18 என்பது மாபெரும்பேரவலத்தை தமிழினம் தன் வரலாற்றில் சந்தித்த நாள், உலகமெங்கும் இந்தத் தினத்தை தமிழின அழிப்பு நாளாக, உலகத் தமிழ் மக்கள், முள்ளிவாயக்கால் இனவழிப்பிலும், இதுநாள்வரையிலும் படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவில் ஏந்தி, உலகத்தமிழர்களாகிய நாம் அனைவரும், தமிழீழ விடுதலைக்காக உணர்வெழுச்சியுடன் கிளர்ந்தெழுந்து போராடுவோம் என உறுதி ஏற்க்கும் நாள்!
சுயநிர்ணய உரிமைக்கான எமது அரசியல் போராட்டத்தையும், நீதி கேட்டுப் போராடுவதையும் அதன் இலக்கினை எட்டும்வரை சோர்வின்றி உறுதியுடன் எடுத்துச் செல்வோம். நாம் அனைவரும் ஒற்றுமையாக நின்று ஓரே குரலில் போராடுவோம். வீழ்வது அவமானமல்ல எழுந்திராமல் வீழ்ந்தே கிடப்பதுதான் அவமானம்! சுதந்திர தாகம் கொண்ட மக்களாக எழுச்சியோடு போராடுவோம்!
அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை (ICET)

லண்டன் முள்ளிவாய்க்கால் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கெடுப்பு


பிரித்தானிய தமிழர் பேரவையினால்  லண்டனில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட  முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில்  பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொண்டனர்.
இப்பேரணியில் கலந்து கொண்டவர்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மகாநாட்டில் கலந்து கொள்வது என்ற பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனின் முடிவுக்கு தமது கண்டனத்தையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியிருக்கிரார்கள்.
பிப 1.30 மணிக்கு Hyde Park இல் ஆரம்பமான ஊர்வலம் மாலை 4 மணிக்கு Waterloo Place சென்றடைந்தது. மாலை 3 மணிக்கு Waterloo Place இல் பொதுக் கூட்டம் ஆரம்பமாக இருந்த போதும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் பேரணியில் கலந்து கொண்டதால் சுமார் 1மணி நேரம் தாமதமாகியே Waterloo Place ஐ பேரணி சென்றடைந்தது.
பேரணியில் கலந்து கொண்ட மக்கள் இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் மகாநாட்டில் கலந்து கொள்வது என்ற பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனின் முடிவு மற்றும் தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலையை தடுப்பதற்கு தவறிய ஐ.நா ஆகியவற்றை கண்டிக்கும் நூற்றுக்கணக்கான பதாகைகள் மற்றும் சுலோக அட்டைகள் ஆகியவற்றை ஏந்தியும் கோசங்களை எழுப்பியும் சென்றனர்.
பேரணி நகர்ந்து சென்ற இடம் லண்டன் நகரின் மைய பகுதியாக இருந்ததால் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும் பிரித்தானிய மக்களும் இந்த பேரணியை பார்வையிட்டனர்.
தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையினை வேற்றின மக்களுக்கு எடுத்துக்காட்டும் நிகழ்ச்சிகளும் கவனத்தை ஈர்த்தன. மாலை 4 மணி அளவில் Waterloo Place இல் பிரம்மாண்டமான அளவில் பொதுக்கூட்டம் ஆரம்பமானது.
இதில் இந்தியாவில் இருந்து வந்து கலந்து கொண்டிருக்கும் இந்திய கம்யூனிச கட்சியின் தமிழ்நாட்டு தலைவரும் இந்திய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தா.பாண்டியன், உலக தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவல் அடிகளார் மற்றும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றியதுடன் உலக தமிழர் இயக்க தலைவர் பழ நெடுமாறன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றகழக பொதுச் செயலாளர் வை. கோபாலசாமி மற்றும் பலரது உரைகள் திரையில் ஒலிபரப்பு செய்யப்பட்டது.

Wednesday, April 03, 2013

வடகொரியாவிடம் இருந்து தென்கொரியாவை காப்போம்: அமெரிக்கா அதிரடி

வடகொரியா மற்றும் தென் கொரியாவுக்கும் இடையே கடந்த 63 ஆண்டுகளாக பகை இருந்து வருகிறது. இதற்கிடையே அணு ஆயுத சோதனை மற்றும் ஆயுத குவிப்பு நடவடிக்கையில் அமெரிக்கா ஆதரவுடன் வடகொரியா மீது ஐ.நா. சபை பொருளாதார தடை விதித்தது. இதற்கு தென் கொரியாவும் ஆதரவு தெரிவித்தது.


இதனால் ஆத்திரம் அடைந்த வடகொரியா தென் கொரியாவையும், பசிபிக் கடல் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களையும் தாக்கப்போவதாக அறிவித்தது. அதற்கான பிரகடனத்தில் வடகொரிய அதிபர் கிம்ஜோங் உன் கையெழுத்திட்டார். இதையடுத்து வடகொரியா எல்லையில் அமெரிக்காவும், தென்கொரியாவும் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டன. அப்போது ரேடார் கண்ணுக்கு சிக்காத 2 அமெரிக்க போர் விமானங்கள் அணு குண்டுகளை வீசி வடகொரியாவுக்கு மிரட்டல் எச்சரிக்கை விடுத்தன.


அதை தொடர்ந்து கோபத்தின் உச்சிக்கு சென்ற வடகொரியா ராணுவம் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவை தாக்கும் வகையில் ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்தது. ராணுவ வீரர்களின் உணர்ச்சிமிகு அணிவகுப்பையும் நடத்தியது. இதனால் கொரிய தீப கற்பத்தில் போர் பதட்டம் ஏற்பட்டது. இந்த நிலையில் அமெரிக்காவும், தென் கொரியாவும் தொடர்ந்து போர் பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. இதற்காக அமெரிக்காவின் அதிநவீன போர் விமானங்கள் தென் கொரியாவுக்கு வந்துள்ளன.


மேலும், அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். ஜான் எஸ்.மெக்கைன் என்ற நாசகார போர்க்கப்பல் வடகொரியா கடற்பகுதிக்கு விரைந்துள்ளது. இது மேலும் போர் பதட்டத்தை அதிகரித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா அணு ஆயுதங்களை தயாரிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. கடந்த 1986-ம் ஆண்டு தொடங்கப்பட்ட புளூடோனியம் அணு உலையை அணு ஆயுத பரவல் தடை விவாதத்தின் காரணமாக 2007-ல் வடகொரியா மூடியது.


தற்போது போர் ஏற்படும் சூழ்நிலை உருவாகி இருப்பதால் அந்த மையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.யுரேனியம் செறிவூட்டும் நிலையத்தையும் வடகொரியா மீண்டும் திறந்துள்ளது. இதுகுறித்து, அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரியை தென் கொரியா வெளியுறவு மந்திரி யங் பியாங்-சியும் வாஷிங்டனில் சந்தித்து பேசினார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது, வட கொரியாவின் இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது.


அதே நேரத்தில் அந்த நாட்டின் மிரட்டலை சந்திக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக ஜான் கெர்ரி தெரிவித்தார். அத்துடன் தனது நட்பு நாடான தென் கொரியாவுக்கும் பாதுகாப்பாக இருந்து காப்போம் என்றும் உறுதி அளித்தார்.

8கோடி தமிழர்களை கொண்ட தமிழ்நாட்டை சீண்டவேண்டாம்- சிங்களவர்களுக்கு மனோ எச்சரிக்கை


இந்தியா துண்டு துண்டாக உடைந்து போக வேண்டும் என தேசிய தேசப்பற்று இயக்க தலைவர் குணதாச அமரசேகர என்ற பல் வைத்தியர் இந்தியாவை நோக்கை சாபம் போடுகிறார். விமல் வீரவன்சவும், சம்பிக்க ரணவகவின் தலைவர் ஓமல்பே சோபித தேரரும் தமிழகத்தை திட்டி தீர்க்கிறார்கள். போதாக்குறைக்கு கிரிக்கட் வீரர் குமார் சங்ககாரவும் சின்ன ஒரு தமிழ்நாடு என்பது மிகப்பெரிய இந்தியா இல்லை என்று கிண்டல் செய்கிறார். நீங்கள் எல்லோரும் சேர்ந்து உங்கள் முட்டாள்தனமான சிங்கள பெளத்த தீவிரவாதம் மூலம் எட்டு கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டை சிண்டி விட்டு,அதை தனிநாடு ஆக்கிவிட  வேண்டாம்.

இந்தியா ஒன்றாக இருப்பது ஒன்றுதான் இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு இருக்கின்ற ஒரே பாதுகாப்பு. இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் இந்த பெரும் உண்மையை உங்களுக்கு விளக்கி சொல்லுகிறதா என எனக்கு தெரியவில்லை. ஆனால், நான் சொல்கிறேன். இந்த அடிப்படை உண்மையை புரிந்துகொண்டு நடந்துகொள்ளுங்கள் என ஜனநாயக மக்கள் முன்னணி மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று கொழும்பில் நடைபெற்ற போது தமிழ்சிங்கள மொழிகளில் கருத்து வெளியிட்ட மனோ கணேசன் சிங்கள பெளத்த அமைப்புகளை குறிப்பிட்டு மேலும் கூறியதாவது,

இந்தியாவில் இன்று மாணவர் போராட்டம் உச்சநிலை அடைந்துள்ளது. அரசியல் கட்சிகள் சட்டபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. நேற்று அங்கு நடிகர்களும் உண்ணாவிரதம் இருந்துள்ளார்கள். இதற்கு பதிலாக சிலர் இலங்கைக்கு தமிழ் திரைப்படங்களை கொண்டு வரக்கூடாது என சொல்கிறார்கள். இலங்கை ஒரு பெரிய திரைப்பட சந்தை இல்லை. இதனால் இங்கு தமிழ்நாட்டு திரைப்படம் வராதது பற்றி எல்லாம் அவர்கள் கணக்கிலும் எடுக்க மாட்டார்கள். இந்தியாவில் இருந்து எந்த பொருளும் கொண்டு வர விட மாட்டோம் என இன்னும் சிலர் சொல்கிறார்கள். அங்கிருந்து எதுவும் வராவிட்டால் அது நமக்குத்தான் பெரும் கஷ்டம். இந்தியாவில் இருந்து எதுவும் வேண்டாம் என்றால் ஏன் கெளதம புத்தரை மாத்திரம் இங்கு வைத்துள்ளீர்கள்? அவரை திருப்பி அனுப்பி விடலாமே.
இந்தியாவையும், தமிழ் நாட்டையும் கரித்துகொட்டி, சாபம் இட்டு, ஜெயலலிதா, கருணாநிதி, வைகோ, சீமான், நெடுமாறன் மற்றும் போராடும் மாணவர்களையும் கண்டபடி  திட்டி தீர்த்து அங்கு தமிழ் இன உணர்வை கொழுந்து விட்டு எரிய செய்து இந்திய மாநிலமான தமிழ்நாட்டை தனியொரு  நாடு ஆக்கி விடாதீர்கள்.

எண்பது மில்லியன் தமிழர் வாழும் தமிழ்நாடு தனிநாடு ஆகும் பட்சத்தில் அது இலங்கைக்கு பெரும் ஆபத்தில் முடியும். தனித்தமிழ்நாட்டின் முதல் நடவடிக்கை இலங்கைக்கு எதிராகத்தான் முடியும். இதை நான் விரும்பவில்லை. இரு தரப்பிலும் வாழும் தீவிரவாதத்துக்கும் மத்தியில் சிக்கி தவிக்க நான் விரும்பவில்லை. ஆனால் இந்த உண்மையை, இந்தியா துண்டு துண்டாக உடைத்து போக வேண்டும்  என பகிரங்கமாக பேசும் சிங்கள தீவிரவாதிகள் உணர வேண்டும். இவர்கள் தங்கள் தலையில் மண்ணை அள்ளி  கொட்டிகொள்கிறார்கள்.
இங்கே ஜெயலலிதாவை திட்டுகின்றவர்கள் ஒரு உண்மையை உணர வேண்டும். தமிழகம் சென்ற பிக்குமார்களை தாக்கியவர்களை தமிழக அரசு கைது செய்துள்ளது. ஆனால், இங்கே பெபிலியானவில் முஸ்லிம் வர்த்தக நிலையத்தை தாக்கி, ஒருவரின் மண்டையை உடைத்த காடையர்களை கைது செய்து மன்னிப்பு வழங்கி விடுவித்துவிட்டார்கள்.

கிளிநொச்சியில் சனிக்கிழமை நடந்த கூட்டமைப்பு கூட்டத்தில் மக்கள் பிடித்து கொடுத்த காடையர்களை போலிஸ் உடனடியாக விடுவித்துவிட்டது. அதில் ஒருவர் போலிஸ் புலனாய்வுதுறை சிஐடி அதிகாரி. இதேபோல்தான் தெள்ளிபளையிலும் மக்கள் பிடித்து கொடுத்த குற்றவாளிகளை போலிஸ் விடுவித்தது.

இன்று காலை கிளிநொச்சியில் உதயன் பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டு நால்வர் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இது முதன் முறை அல்ல. இத்தகைய சம்பவங்களில் ஈடுபடுபவர் எவரும் எப்போதும் கண்டு பிடிக்கப்படுவது இல்லை.
இதுதான் இலங்கையின் கோதாபய ராஜபக்ச போலிஸ். ஆனால், இந்த கோதாபய ராஜபக்சவின் போலீசைவிட ஜெயலலிதாவின் தமிழ்நாடு போலீஸ் நேர்மையாக தனது கடமையை செய்துள்ளது இன்று நிரூபணமாகியுள்ளது.

இந்திய மாணவர்கள் இலங்கை தீவில் தனி தமிழீழத்தையும், அதற்கான பொது வாக்கெடுப்பையும் கோரி போராடுகிறார்கள். அதை நினைந்து சந்தோசப்படுங்கள். ஏனென்றால் அதனால்தான் இந்திய மத்திய அரசு இந்த கோரிக்கைகளை தனது தேச நலனுக்கு எதிரான தீவிரவாத கோரிக்கைகள் என்று சொல்லி நிராகரித்துள்ளது. அதனால் இன்று இலங்கை நாடு தப்பி பிழைத்துள்ளது.

தமிழீழம், பொதுவாக்கெடுப்பு ஆகிய கோரிக்கைகளை விட்டுவிட்டு, அந்த மாணவர்கள் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை அமுல் செய்ய கோரி போராடினார்கள் என்றால் இந்திய மத்திய அரசு மிகப்பெரும் நெருக்கடியில் விழும்.  13ம் திருத்தமும், மாகாணசபையும், முக்கியமாக வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைப்பும் இந்திய மத்திய காங்கிரஸ் அரசு, இலங்கை அரசுடன் செய்துகொண்ட ராஜீவ்-ஜேஆர் ஒப்பந்த சரத்துகளாகும்.  இரு நாடுகள் மத்தியில் செய்யப்பட்ட இந்த ஒப்பந்த அமுலாக்கல் கோரிக்கையை இந்தியாவின் மத்திய அரசு இன்று நிராகரிக்க முடியாது. இந்தியாவில் எந்த ஒரு கட்சியும் நிராகரிக்க  முடியாது.

போராடும் தமிழக மாணவர்களுக்கு நான் இந்த உண்மையை எடுத்து கூறுகிறேன். இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அமுல் செய்யுமாறு உங்கள் நாட்டு அரசாங்கத்தை வலியுறுத்தி ஜனநாயக ரீதியாக போராடுங்கள் என நான் அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
எனவே நிலைமை மோசமாகும் முன், இந்த போராட்டங்கள் அனைத்துக்கும் மூல காரணமான தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் அதிகாரத்தை பகிர்ந்து அளித்து தீர்வு காணுங்கள்.  தமிழ் நாட்டை தூண்டி விட்டு இந்திய மத்திய அரசை நெருக்கடியில் தள்ளி, இலங்கையை ஆபத்தில் தள்ள வேண்டாம் என இலங்கை அரசாங்கத்தையும், சிங்கள-பெளத்த தீவிரவாத கட்சிகளையும் கோருகிறேன்.

Saturday, March 23, 2013

மீண்டும் ஒரு இசைப்பிரியாவா ? உடனே காப்பாற்ற முடியுமா ?

இலங்கையில் இறுதிப் போரின் பின் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இன அழிப்பு நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக தமிழர் பிரதேசத்தில் இருந்து தமிழ் மக்கள் வேற்று நாடுகளுக்கு வெளியேறிய வண்ணம் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இலங்கையில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு கடல்வழியாக 45 பேர் படகில் சென்றனர். குறித்த படகு நடுக்கடலில் பழுது பட்டதையடுத்து ...டுபாய் அரசுக்கு சொந்தமான படகு இலங்கை பயணிகளை மீட்டு தமது நாட்டில் வைத்து சர்வதேச தொண்டு நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைத்துள்ளது. இதில் 7 பேருக்கு வெளிநாட்டு விசா வழங்கப்பட்டது. மேலும் 7 பேர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டனர். மீதமுள்ள 31 பேரையும் தற்போது இலங்கைக்கு நாடு கடத்த டுபாய் அரசு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இதில் தமிழீழ ஊடகவியலாளர் பெண் ஒருவரும் அடங்குவர்.

இறுதிப்போரில் அரச படையிடம் சரணடைந்த ஊடகவியலாளர்கள் இசைப்பிரியா மற்றும் அகழ்விழி போன்றோர் மிகக் கொடூரமாகச்சித்திரவதைக்குட்படுத்தி கொலை செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. எனவே இந்த பெண் ஊடகவியலாளரையும் சிறிலங்காவுக்கு நாடு கடத்தினால் , இசைப்பிரியாவுக்கு ஏற்பட்ட கொடுமையே இப் பெண்ணுக்கும் ஏற்படலாம். கவே குறித்த பெண் ஊடகவியலாளர் உட்பட தஞ்சம் கோரிவந்த அனைத்து தமிழ் மக்களுக்கான பாதுகாப்பையும் சர்வதேச அமைப்புக்கள் வழங்க வேண்டும் எனக் கோருவதுடன் இச் செய்தியை ஊடகங்கள் கவனத்தில் எடுத்து உரிய பொறுப்பு வாய்ந்த தரப்புக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் கோரப்படுகின்றது.

Thursday, March 21, 2013

இலங்கை தொடர்பான அமெரிக்க பிரேரணையில் என்ன இருக்கிறது? பதில் உள்ளே!


இலங்கைக்கு எதிராக ஜெனிவா மனித உரிமை கவுன்ஸில் 22வது அமர்வில் அமெரிக்கா முன்வைத்து நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:- 

சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் ஆகியவற்றுக்கு எதிரானவை என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அத்துமீறல்கள் குறித்து சுதந்திரமான நம்பகமான சர்வதேச விசாரணை வேண்டுமென்ற உயர் ஆணையரின் கோரிக்கையை இலங்கை மீதான தீர்மானம் கவனத்தில் கொண்டுள்ளதாக அமெரிக்கத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது நாட்டின் ஒட்டுமொத்த மக்கட்தொகையும் அனைத்து மனித உரிமைகளையும் அடிப்படைச் சுதந்திரங்களையும் முழுமையாக அனுபவிப்பதை உறுதிப்படுத்தும் பொறுப்பு ஒவ்வோர் அரசுக்கும் உண்டு என்பதை மறுவுறுதி செய்தல். 
பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் தாங்கள் மேற்கொள்ளும் எந்த ஒரு நடவடிக்கையும் சர்வதேசச் சட்டத்துக்கு இயைந்ததாக, குறிப்பாக சர்வதேச மனித உரிமைகள் சட்டம், சர்வதேச அகதிகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டம், இவற்றில் எது பொருத்தமானதோ அதற்கு இயைந்ததாக இருக்க வேண்டியதை அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் என்பதையும் நினைவுகூர்ந்துள்ளது. 
வடக்கு மாகாணத்தில் மாகாண சபைக்கான தேர்தல்களை 2013 செப்டம்பரில் நடத்தப்போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளதை வரவேற்று, உள்கட்டமைப்பை மறுவுருவாக்கம் செய்தல், கண்ணிவெடிகளை அகற்றுதல், உள்நாட்டு அகதிகளில் பெரும்பாலோரை மறுகுடியமர்த்தல் ஆகிய பணிகளில் இலங்கை அரசு பெற்றுள்ள முன்னேற்றத்தை வரவேற்று, அங்கீகரிக்கும் அதே வேளையில், நீதி, நல்லிணக்கம் மற்றும் வாழ்வாதார மீட்பு ஆகிய பரப்புகளில் இன்னும் மிகுதியான பணி காத்திருக்கிறது என்பதைக் கவனத்தில் கொண்டு, இந்த முயற்சிகளில் பொதுச் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் சிறுபான்மையினப் பிரதிநிதிகள் உள்ளிட்ட உள்ளூர் மக்கட்தொகையினுடைய முழுமையான பங்கேற்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தல்.
இலங்கை அரசினுடைய படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணையத்தின் அறிக்கை, அதன் விசாரணை முடிவுகள் மற்றும் பரிந்துரைகளைக் கவனத்தில் கொண்டு, இது இலங்கையில் தேசிய நல்லிணக்கத்துக்கான வழிமுறைக்குப் பங்களிக்கும் சாத்தியம் உண்டு என்பதை ஏற்றுக்கொண்டு, படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணையத்தின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கான இலங்கை அரசின் தேசிய நடவடிக்கைத் திட்டத்தையும், அந்த ஆணையத்தின் விசாரணை முடிவுகள் மற்றும் பரிந்துரைகளுக்கான மறுவினையாக அறிவித்துள்ள பொறுப்புறுதிகளையும் கவனத்தில் கொள்ளல். 
ஆணையத்தின் விசாரணை முடிவுகள் மற்றும் ஆக்கப்பூர்வமான பரிந்துரைகள் அனைத்தையும் இந்த தேசிய நடவடிக்கைத் திட்டம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவில்லை என்பதைக் குறித்துக் கொள்ளல். 
சட்டவிரோதமான கொலைகள் மற்றும் கட்டாயத் தலைமறைவுகள் குறித்த பரவலான குற்றச்சாட்டுகளை நம்பகமான முறையில் புலன்விசாரணை செய்தல், இலங்கையின் வடக்குப் பிரதேசத்தை இராணுவ ஆதிக்கத்திலிருந்து விடுவித்தல், நிலத் தகராறுத் தீர்ப்புக்கான பாரபட்சமற்ற அமைப்பு வழிமுறைகளை நடைமுறைப்படுத்தல், காவல்வைப்புக் கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல், முன்பு சுதந்திரமாகச் செயல்பட்ட பொதுச் சமூக நிறுவனங்களை வலுப்படுத்தல், மாகாணங்களுக்கு அதிகார ஒப்படைப்பு குறித்து ஓர் அரசியல் தீர்வை எட்டுதல், கருத்துச் சுதந்திரத்துக்கு அனைவருக்கும் உள்ள உரிமையைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தல், சட்டத்தின் ஆட்சி நிலவத் தேவையான சீர்திருத்தங்களைச் சட்டமாக்கல் ஆகியவற்றுக்கான தேவை உள்ளிட்ட ஆணையத்தின் அறிக்கையில் உள்ள ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளை நினைவுகூர்ந்துள்ளது. 
சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் ஆகியவற்றுக்கு எதிரான சட்டமீறல்கள் பற்றிய எளிதில் புறந்தள்ள முடியாத தீவிரமான குற்றச்சாட்டுகளை இந்த ஆணையத்தின் அறிக்கையும் தேசிய நடவடிக்கைத் திட்டமும் போதுமான அளவு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவில்லை என்பதைக் கவலையோடு குறித்துக் கொள்ளல். 
கட்டாயத் தலைமறைவுகள், சட்டவிரோதமான கொலைகள், சித்திரவதை, கருத்துச் சுதந்திரம், சங்கம் அமைத்தல் மற்றும் அமைதியாகக் கூட்டம் நடத்துதல் ஆகியவற்றுக்கான உரிமைகள் குலைக்கப்படுதல், மனித உரிமைப் பாதுகாப்பாளர்கள், பொதுச் சமூக உறுப்பினர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எதிரான மிரட்டல்கள் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகள், நீதிமன்றச் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு உள்ள அச்சுறுத்தல்கள், மதம் அல்லது கோட்பாடு அடிப்படையிலான பாகுபாடு ஆகியவை உள்ளிட்ட இலங்கையில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் பற்றித் தொடர்ந்து வெளிவரும் செய்திகள் குறித்துக் கவலை தெரிவித்துக் கொள்ளல்.
நல்லிணக்கத்துக்கும், நாட்டு மக்கட்தொகையின் அனைத்து உறுப்பினர்களும் மனித உரிமைகளை முழுமையாக அனுபவிப்பதற்கும் இன்றியமையாத் தேவையான அரசியல் அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட, இலங்கை அரசு வெளிப்படையாக அறிவித்துள்ள பொறுப்புறுதிகளை அந்த அரசுக்கு நினைவுறுத்தல்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்தைச் சேர்ந்த தொழில்நுட்பத் தூதுக்குழுவின் பார்வையிடலுக்கு வசதி செய்து கொடுத்த இலங்கை அரசின் முயற்சிகளுக்குப் பாராட்டுத் தெரிவித்து, உயர் ஆணையர் அலுவலகத்தோடு உரையாடல் மற்றும் ஒத்துழைப்பை அதிகரிக்கும்படி இலங்கை அரசை ஊக்குவித்தல்.
சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் ஆகியவற்றுக்கு எதிரானவை என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அத்துமீறல்கள் குறித்து சுதந்திரமான நம்பகமான சர்வதேச விசாரணை வேண்டுமென்ற உயர் ஆணையரின் கோரிக்கையைக் கவனத்தில் இருத்தி, இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பதில் சொல்லும் பொறுப்பை மேம்படுத்த அந்நாட்டு அரசுக்கு ஆலோசனையையும் தொழில்நுட்ப உதவியையும் வழங்குவது குறித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்தின் அறிக்கையையும், அவ்வறிக்கையில் உள்ள பரிந்துரைகள் மற்றும் முடிவுகளையும், குறிப்பாக இடைக்கால நீதிக்குத் தேவையான இன்னும் அனைத்தளாவியதான, உள்ளிணைத்துக் கொண்டதான ஓர் அணுகுமுறையின் இன்றியமையாத அங்கமாக ஓர் உண்மை தேடும் அமைப்பு வழிமுறையை நிறுவுவது தொடர்பான பரிந்துரையையும் வரவேற்கிறது.
உயர் ஆணையர் அலுவலகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை நிறைவேற்ற இலங்கை அரசை ஊக்குவிக்கிறது. மேலும், சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் ஆகியவற்றுக்கு எதிரான அத்துமீறல்கள் என்ற குற்றச்சாட்டுகள் குறித்து சுதந்திரமான நம்பகமான விசாரணையை நடத்த வேண்டுமென்று இலங்கை அரசைக் கோருகிறது.
படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளை பயன்விளையும் வகையில் நிறைவேற்றும்படியும், தனக்குள்ள பொருத்தப்பாடான சட்டப்பூர்வமான கடமைகளை நிறைவேற்றத் தேவையான கூடுதல் நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ளும்படியும், இலங்கை மக்கள் அனைவருக்கும் நீதி, சமநிலை, பதில் சொல்லும் பொறுப்பு மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை உறுதிப்படுத்தத் தேவையான சுதந்திரமான நம்பகமான நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான பொறுப்புறுதியை நிறைவேற்றும்படியும் இலங்கை அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கையை மீள வலியுறுத்துகிறது. 
சிறப்பு நடைமுறைகளுக்கான உரிமையாணை பெற்றவர்களுக்கு ஒத்துழைப்பு நல்கும்படியும், அவர்களுக்கு அழைப்பு விடுத்தல் மற்றும் அணுகல் உரிமை வழங்குதல் உட்பட நிலுவையில் உள்ள அவர்களின் கோரிக்கைகளுக்கு முறைப்படி மறுவினையாற்றும்படியும் இலங்கை அரசை ஊக்குவிக்கிறது.

மேற்கூறப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவியை, இலங்கை அரசோடு கலந்தாலோசித்து அதன் ஒப்புதலோடு வழங்க உயர் ஆணையர் அலுவலகம் மற்றும் சிறப்பு நடைமுறைகளுக்கான உரிமையாணை பெற்றவர்களை ஊக்குவிக்கிறது.
இப்போது முன்வைக்கப்படும் இந்தத் தீர்மானத்தின் செயற்படுத்தல் குறித்து தொடர்புடைய சிறப்பு நடைமுறைகளுக்கான உரிமையாணை பெற்றவர்களிடமிருந்து உள்ளீட்டைப் பெற்று, பொருத்தமான வகையில் நிகழ்நிலை குறித்த வாய்மொழி அறிக்கையை மனித உரிமைகள் குழுவுக்கு அதன் இருபத்து நான்காவது அமர்வில் வழங்கும்படியும், இருபத்து ஐந்தாவது அமர்வில் விவாதத்தைத் தொடர்ந்து ஒரு முழுமையான அறிக்கையை வழங்கும்படியும் உயர் ஆணையர் அலுவலகத்தைக் கேட்டுக் கொள்கிறது.
அமெரிக்கா முதலில் கொண்டுவந்த வரைபு பிரேரணையில் இருந்து நீக்கப்பட்ட வசனங்கள் வருமாறு:
வெளியிலிருந்து வரும் கண்காணிப்பாளர்கள் மற்றும் வல்லுனர்களுக்கு எந்தவகையான தங்கு தடைகளும் அற்ற அனுமதி வழங்கப்பட வேண்டும். எனும் வாக்கிய அமைப்பு முற்றிலும் நீக்கப்பட்டிருக்கிறது.
வெளியக விசாரணை என்பது உள்ளக விசாரணை என மாற்றப்பட்டிருக்கிறது.
பொருத்தமான சர்வதேச விசாரணை எனும் வாக்கியம் முழுமையாக நீக்கப்பட்டிருக்கிறது.
இலங்கை அரசை வலியுறுத்துகிறோம் எனும் சொல் ஊக்கப்படுத்துகிறோம் என மாற்றப்பட்டிருக்கிறது. 
தேர்தல்கள் நடத்தப்பட்டது, அடிக்கட்டுமானங்களை நிர்மாணித்திருப்பது இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்தியிருப்பது போன்றவற்றை இலங்கை அரசு முன்னெடுத்திருப்பனை நாம் அங்கீகரித்து வரவேற்கிறோம் எனும் பாரா முதல் வரைவில் இல்லை. புதிதாக வெளியான நான்காவது வரைவில் சேர்க்கப்பட்டிருக்கிறது.
நன்றி:- எஸ்.வி.உதயகுமார், யமுனா ராஜேந்திரன்  

Tuesday, March 19, 2013

தமிழ் நாட்டிலுள்ள தொப்புள் கொடி உறவுகளுக்காக ஈழத்திலிருந்து ஒரு ஏதிலியின் கடிதம்


தமிழ் நாட்டில் உள்ள எம் தொப்புக் கொடி உறவுகளாகிய எம் நேசத்திற்குரிய கல்லூரி மாணவர்களே ஈழத்தில் இருந்து ஒரு ஏதிலியின் கடிதம் இது.
இலங்கையின் தீவில் வாழும் தமிழர்களாகிய நாம் இற்றைக்கு சுமார் 60 வருடங்களுக்கு மேலாக சிங்கள தேசத்தினாலும் சிங்கள மக்களாலும் அடிமைத்தனத்திற்குள்ளாக தள்ளப்பட்டதோடு, இதற்கு எதிராக போராடியும் வந்தோம்.
இதனால் எமது உயிரிலும் மேலான எத்தனையே இளைஞர்கள், யுவதிகளின் உயிர்களை இந்த மண்ணில் வித்துடல்களாக நாம் விதைத்துள்ளோம்.ஆனால் இன்று இந்திய அரசாங்கம் எம் தமிழ் இனத்தை அழிப்பதற்கு கங்கணம் கட்டி விட்டதால் என் அறிவு எட்டிய எம் வாழ்க்கையை மாணவர்களாகிய உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.
1987ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து அமைதி காக்கும் படையென்று இலங்கைக்கு வந்த இந்திய இராணுவம் எம் தமிழர்களில் பலரை அநியாயமாக கொன்று குவித்தது. இந்திய இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட யாழ். போதனா வைத்தியசாலைப் படுகொலைச் சம்பவத்தை யாராலும் எளிதாக மறக்க முடியாது.
இவ்வாறான சூழ்நிலையில் இந்திய அமைதி காக்கும் படையின் அநியாயங்களுக்கு எதிராகவும் நாம் போராட தள்ளப்பட்டோம். இறுதியாக எம் போராட்டங்களால் இந்திய அமைதி காக்கும் படை இந்த மண்ணில் இருந்து வெளியேறியது. ஆனால் எம் மீது சிங்கள அரசாங்கம் கட்டவிழ்த்து விட்ட அடக்குமுறைகள் குறைந்ததாக தெரியவில்லை.
இலங்கையின் சிங்கள ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்காவின் காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து அநியாயமாக பல பொது மக்கள் புக்காரா குண்டு வீச்சு விமானங்களின் குண்டுகளால் கொன்று குவிக்கப்பட்டனர்.
நவாலியில் தேவாலயத்தில் தஞ்சமடைந்த மக்களையும் குண்டு வீசிக் கொன்றனர். எங்கள் ஊரில் ஆலங்களுக்கும் அடைக்கலத்திற்கு ஒடிச் செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டோம்.
இவ்வாறு பல படுகொலைகளைச் செய்து இறுதியாக 1995ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து சிங்கள இராணுவத்தினால் எம் மக்கள் வெளியேற்றப்பட்டு பலர் கொன்று அழிக்கப்பட்டு எஞ்சியவர்களை சிறைப் பிடித்து கொண்டு வந்து மீள்குடியேற்றம் செய்து அவர்களை இராணுவ மண் அணைகளுக்குள்ளே சிறை வைத்தது.
ஆனால் உள்ளே எம் மாணவிகளை மாணவர்களையும், எதிர்காலச் சந்ததியையும் சிதைக்கும் நடவடிக்கைகளே உலகத்திற்கு தெரியாமல் நடைபெற்றன. செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவியான கிருஷாந்தி போன்ற எத்தனையே மாணவிகளின் கற்புக்களும் உயிர்கள் இராணுவ முகாம்களுக்குள்ளே புதைக்கப்பட்டன.
இவ்வாறு தமிழ் மக்கள் கொன்று எமது தமிழ் இனம் அழிக்கப்படும் போது தான் எம் தேசியத் தலைவன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் வழிகாட்டலில் வன்னியிலிருந்து யாழ்ப்பாணத்தை மீளக்கைப்பற்றுவதற்கான ஆயுத வழிப் போராட்டம் ஆரம்பமானது.
இதன் போது சிங்கள இராணுவ நிலைகளை தகர்தெறிந்து எம் புலிப்படைகள் யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்களை ஆக்கிரமித்து வந்த நிலையில் இந்திய அரசாங்கம் அழுத்தங்களை பிரயோகித்து அந்தப் போராட்டத்தை தடுத்து நிறுத்தியது.
இதன் பின்னர் சமாதானம் என்ற போர்வையில் இலங்கையின் பிரதம மந்திரி ரணில் விக்கிரம சிங்க தலைமையிலான சிங்கள அரசு எம் போராட்டத்தினை பொட்டுப் பூச்சி போல மெல்ல மெல்ல சிதைக்க தொடங்கியது.
துரோகியான கருணாவினை பிரித்தது முதல் பல்வேறு நாசகார நடவடிக்கைகளை செய்தது. இதனாலேயே தமிழ் மக்கள்  2005ஆம் ஆண்டு சிங்கள தேச தேர்தலை  புறக்களித்ததோடு வாக்களிக்கவில்லை.
இதன் பின்னர் எம் ஆயுதப் போராட்டத்தின் மீது சிங்கள இராணுவத்தினால் ராஜபக்ஷவின் கட்டளையில் கிழக்கில் மாவிலாறிலிருந்து யுத்தம் ஆரம்பமாகி பின்னர் வடக்கு வரை அப்பேராட்டம் விஸ்தரிக்கப்பட்டது. இதன்போது எம் தமிழ் மக்கள் பலர் கிழக்கில் கொல்லப்பட்டனர்.
எமது ஆயுத வளங்கள் அழிக்கப்பட்டன. எம் தமிழ் ஈழ மண்ணிற்காக பல மாவீரர்களானர்கள். ஆனால் இந்திய அரசாங்கம் மற்றும் சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட உலக வல்லரசு நாடுகளின் உதவியுடன் பாரிய எடுப்பில் யுத்த முனைகளை எம் மக்கள் மீது சிங்கள அரசாங்கம் திறந்தது. இவற்றிற்கு எதிராக புலிகளும் முப்படைகளையும் களமிறக்கினார்கள்.
எம் போராட்ட வலுவை குறைத்து மதிப்பிட்டிருந்த இந்திய அரசாங்கம் எம் கள நாயகர்களின் தியாகளைக் கண்டு நடுங்கியது. இதனால் மேலதிகமாக இலங்கைக்கு நவீன ராடர்கள். நவீன ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை கொடுத்து உதவி செய்ததோடு, இந்திய இராணுவத்தையும் அனுப்பி வைத்தது.
இந்தியா மட்டுமல்ல எட்டிக்கு போட்டிய ஒவ்வொரு வல்லரசுகளும் தமது படைகளையும் நவீன ஆயுதங்களை அள்ளி வழங்கின. இதனால் அப்பாவித் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டதோடு, அநியாயமாக எமது உறவுகளின் உடல்கள் சிதறிப் போயின.
இறுதியாக எம் போராட்டத்தின் ஒவ்வொரு கணங்களும் இந்தியாவினால் மிக மிக உன்னிப்பாக கவனிக்கப்பட்டு சிங்கள அரசிற்கு தகவல் அனுப்பபட்டு எம் போராட்டம் சிதைக்கப்பட்டது.ஆனாலும் எம் தேசியத் தலைவர் தன்னுடைய மகனையே எம் மக்களுக்காக ஈழ மண்ணில் பலியாக்கினார்.
உலகில் எந்த தலைவனும் செய்ய துணியாத செயல்களை எம் தலைவர் செய்து எதிரிகளே புகழ்ந்து சொல்லும் அளவிற்கு துணிச்சலான முடிவுகளை எடுத்து இறுதி வரை ஒரு நோக்கத்திற்காக வாழ்ந்து காட்டினார்.
ஆனால் மறுபுறம் எமது மக்கள் மீது சிங்கள இராணுவம் கொத்தணிக் குண்டுகளை வீசியதோடு, உலகில் எந்த மூலையில் செய்யக் கூடாத மிகக் கேவலமான செயலாக நவீன இராசயன ஆயுதங்களையும் பாவித்தது. ஒரு லட்சத்திற்கும் அதிகமான எம் உறவுகள் அழிக்கப்பட்டனர்.
தமிழர் என்ற இனம் இலங்கை தீவில் தினமும் சிங்கள இராணுவத்தினால் கொன்றழிக்கப்பட்டது. இதற்கிடையில் தமிழ் நாட்டின் ஏற்பட்ட அசாதாரண நிலைமைகள் காரணமாக 2009 ஆம் தமிழ் நாட்டில் உள்ள வாக்கு வங்கிகளை கொள்ளையடிக்கும் வகையில் கலைஞர் கருணாநிதி ஒரு நாள் உண்ணாவிரத நாடகம் ஆடினார்.
இதனை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். தி.மு.க வாக இருந்தாலும், அ.தி.மு.க வாக இருந்தாலும் தமிழ் நாட்டில் ஆட்சியமைக்கு செயற்பாடுகளிலேயே குறியாக இருந்தன. தவிர ஈழத்தில் எம் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன சுத்திகரிப்புக்களுக்காக உண்மையாக குரல் கொடுக்கவில்லை.
ஆனால் இங்கு எம் உறவுகள் முல்லைத்தீவிலும் முள்ளிவாய்க்காலிலும் கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட போராளிகள் சிங்கள இராணுவத்தினால் அநியாயமாக கொலை செய்யப்பட்டனர்.
சரணடைய வந்த புலிகளின் அரசியல் துறையைச் சேர்ந்த நடேசன், புலித்தேவன் அணியினரும் படுகொலை செய்யப்பட்டனர். இதனை ஏற்கனவே சனல்-4 ஊடகம் உலகறியச் செய்து விட்டது.இப்போது எம் நேசத்தலைவனின் இளைய மகன் பாலச்சந்திரன் கைது செய்யப்பட்டது. பின்னர் படுகொல்லப்பட்டது.
சிங்கள இராணுவத்தினர் தமிழ் இளைஞர்களை கண்கட்டி, கை கட்டி மிகவும் கேவலமாக சுட்டுக் கொல்வது, தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் இசைப் பிரியா, உள்ளிட்ட தமிழ் பெண்களின் அந்தரங்கங்கள் சிங்கள இராணுவத்தினால் பகிரங்கமாக்கப்பட்டது, தமிழ்  பெண்கள் மீதான காமத் தனங்கள், இவைகள் வெளி உலகிற்கு கொண்டு வரப்பட்ட எம் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மிக மோசமான சிங்கள காடையர்களின் கொலை வெறித்தனங்கள்.
இவை தவிர புனர்வாழ்வு என்ற பெயரில் எத்தனை எத்தனையே ஆயிரமாயிரம் இளைஞர்களும், யுவதிகளும் தினம் தினம் சித்திரவதைகளுக்குள்ளும் பாலியல் வல்லுறவுகளுக்கும், உள்ளாக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இவை நீங்கள் அறியாதவை.
இவற்றில் இன்னும் அதிகமாக எம் தமிழர்களின் பூர்வீக நிலங்களில் சிங்கள குடியேற்றங்கள், இராணுவ மயமாக்கல், இராணுவ முகாம்களுக்களுக்காகவும், பௌத்த விகாரைகளுக்காகவும் நில அபகரிப்பு, எமது வளங்கள் சுரண்டப்படுகின்றன. எம் வாழ்வாதாரங்கள் பறிக்கப்படுகின்றன.
மீள்குடியேற்றங்கள் என்ற பெயரில் எம் மக்கள் காடுகளிலும் பற்றைகளுக்குள்ளும் கொண்டு சென்று இறக்கப்படுகின்றனர். இதனால் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். பலர் மனநோயாளிகளாக்கப் படுகின்றனர்.
இத்தகைய மோசமான நிலையில் தமிழ் நாட்டு உறவுகளை சாந்தப்படுத்தவும் தேடிக் கொண்ட பாவங்களுக்கு விமோசனம் தேடும் வகையிலும் 50 ஆயிரம் இந்திய வீட்டுத்திட்டம், துவிச்சக்கர வண்டிகள் என உதவிகளையும் கிள்ளி வீசியிது இந்திய அரசாங்கம்.
ஆனால் சிங்கள அரசாங்கம் தமிழ் நாட்டு தமிழ் மீனவர்களை “சிங்கள அடி தெரியுமா?” என்று கேட்டுக் கேட்டு தொடர்ந்தும் அடித்து உடைத்துக் கொண்டே இருக்கின்றது. இது கூட இந்திய அரசாங்கத்தின் தமிழர்கள் மீதான ஒரு வெறுப்புணர்வான செயற்பாடே ஆகும்.
இன்று எம் இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் வெளிக்கொண்டு வரப்பட்ட நிலையில் கடந்த முறை ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக மேற்குல நாடுகளும் அமெரிக்காவும் தீர்மானம் ஒன்றை சமர்ப்பித்தனர்.
ஆனால் இந்திய அரசாங்கம் தனது துரோகத்தனத்தால் அந்த தீர்மானத்தை வலுவற்றதாக்கியது. பின்னர்  நிறைவேற்றுவதற்கு ஆதரவளிப்பது போல் ஆதரவும் அளித்தது. இதன் மூலம் இரு பக்கமும் நல்ல பிள்ளையாகியது. ஆனால் அப்போது கூறப்பட்டதைப் போல ஒரு வருட காலத்தில் எந்த விதமான முன்னேற்றங்களை காணாத அமெரிக்கா இம்முறை மிகவும் இறுக்கமாக அனைத்துலக போர்க்குற்ற விசாரணை என்ற பொறிமுறையை உள்ளடக்கி தீர்மானத்தை முன்வைத்தது.
ஆனால் இந்திய அரசாங்கம் இம்முறையும் தனது நயவஞ்சக்காதால் இலங்கையை காப்பாற்றி விட்டது. இதனால் எந்தவிதமான பிரயோஜனமும் இல்லாத உப்பு சப்பில்லாத தீர்மானமே ஐ.நாவில் நிறைவேற்றவுள்ளது.
இதற்கிடையில் அடுத்த தேர்தலை குறி வைத்து கலைஞர் கருணாநிதியும் மத்திய அரசில் இருந்து விலகுதல், டேசோ என்று தனது அரசியல் சித்து விளையாட்டுக்களை காட்ட ஆரம்பித்து விட்டார்.
எமக்கு கிடைத்த இந்த சந்தர்ப்பம் சிங்கள அரசாங்கத்தினால் படுகொலை செய்யப்பட்டள எம் அப்பாவி தமிழ் மக்களின் சிந்தப்பட்ட இரத்தின் மூலமும் ஏற்பட்டது. கடவுளாலும் எமது மக்களின் காய்ந்து போகாத இரத்தத்தினாலும் ஏற்பட்ட இந்த இறுதி சந்தர்ப்பத்திலும் இந்திய அரசாங்கமும் எமக்கு துரோகத்தையே செய்தது.
இன்று மாணவர்களாகிய நீங்கள் எங்களுக்காக செய்து வரும் போராட்டங்களை குறித்து ஈழத்திலிருக்கும் உங்கள் உறவுகளாகிய நாம் மகிழ்கின்றோம். இந்தப் பேராட்ட அக்கினி எமக்கான ஒரு தீர்வைப் பெற்றுத் தரும் என நாம் நம்ப ஆரம்பித்துள்ளோம்.
நீங்கள் எந்த அரசியலுக்கு பின்னாலும் செல்லாமல் இருக்கும் வரையில் எங்கள் ஒவ்வொருவரது மனங்களிலும் நீங்கள் குடியிருப்பீர்கள். உங்கள் போராட்டங்கள் தமிழ் நாட்டின் பட்டி தொட்டியெங்கும் பரவ வேண்டும்.
நீங்கள் எங்களுக்காக போராடுவீர்கள் என்று தெரிந்தே அன்றே தீர்க்கதரிசனமான எங்கள் மேதகு தலைவன் உங்களை குறித்து தனது மாவீரர் உரைகளில் மறைமுகமாக சுட்டியிருக்கின்றார்.
இலங்கையில் தழிழர்களுக்கு என தனியான ஒரு நாடு தான் எங்கள் பிரச்சினைக்கான தீர்வு, இதில் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டுகிறேன். அத்தோடு இந்திய அரசின் துரோகத்தனங்களுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுங்கள்.
நாம் அனைவரும் தமிழர்கள். இது வெறுமனனே இலங்கையில் உள்ள தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட போராட்டம் அல்ல. தமிழர்கள் என்ற இனத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட போராட்டம் என்பதை மறந்து விடாதீர்கள்.
ஒரு வேளை கொல்லப்படாமல் இருந்தாலும் தமிழ் ஈழத்தில் உங்களை சந்திக்க காத்திருக்கின்றேன்.
தமிழரின் தாகம் தமீழத் தாகம்.

Thursday, March 14, 2013

இலங்கையின் போர்க்குற்றம்: "இனவெறித்தீயில் இரையான இளந்தளிர்கள்"- புதிய தலைமுறை புதிய ஆதாரம் வெளியீடு

கைகளை பின்புறமாக பிணைத்து, தலையில் சுட்டு கொல்லும் இலங்கை இராணுவத்தின் ஈவிரக்கமற்ற செயல்... காட்சிகளாக வெளியான போது நம்மை அதிர்ச்சியூட்டின.

இதேபோல ஒவ்வொருவரையும் செயலற்றவராக்கி உதவியற்ற நிலையில் கொன்று குவிக்கப்பட்டவர்கள் எத்தனைபேர். அதற்கான விடை நம்மிடம் இல்லையென்றாலும், சாட்சியமாக இதுவரை வெளிவராத காட்சிகள் அடங்கிய பதிவுகள் புதியதலைமுறைக்கு கிடைத்துள்ளன.
கண்கள் கட்டப்பட்டு, கைகள் பின்புறமாக கட்டப்பட்ட நிராயுதபாணியான ஆண்கள், ஆடைகளின்றி இழுத்துத் தள்ளப்படுகிறார்கள்.. பின்னால் இருந்து வெற்றி எக்காளத்துடன் இலங்கை இராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளுகிறார்.
ஒரு போர் மூண்டால் இராணுவ வீரர்கள் உயிர் துறப்பார்கள். உயிருடன் பிடிபடுபவர்கள் போர்க் கைதிகளாவார்கள். ஆனால் போரில் கைதிகளாக பிடிபட்டவர்களை கொல்வதென்பது சர்வதேச சட்டங்களின் படி ஏற்றுக்கொள்ள முடியாத குற்றம்.
போருக்கு பிந்தைய காலகட்டத்தில் நிறைவேற்றப்படும் மரண தண்டனைகள் அத்தனையுமே போர்க் குற்றங்கள்தான்.
போர்க்கைதிகள் கொல்லப்படுவது பற்றியும், பெண்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுவது பற்றியும் பேசும் சர்வதேச சட்டங்கள் போர்க்காலத்தில் கொல்லப்படும் குழந்தைகள் பற்றி இதுவரை எங்குமே பேசவில்லை என்பது தான் துயரம்.
அப்படி ஒரு சிறுவனை கொல்லும் காட்சிகள் பிரத்தியேகமாக புதிய தலைமுறைக்கு கிடைத்திருக்கிறது.
இலங்கை இராணுவத்தினரிடம் பிடிபட்ட இளைஞர்கள் மத்தியில் ஒரு சிறுவன் அமர்ந்திருக்கிறான். அடுத்து, அந்த சிறுவனின் உடல், தலை சிதைத்த நிலையில் மற்ற உடல்களுடன் சேர்ந்து கிடக்கிறது.
லண்டனைச் சேர்ந்த உலகத் தமிழர் பேரவை தனக்கு கிடைத்த புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரத்தை புதிய தலைமுறைக்கு வழங்கியிருக்கிறது.
இதை நாம் ஒரு முறைக்கு இருமுறையாக உறுதிப்படுத்திக்கொள்ள தடயவியல் துறையில் பெரும் நிபுணத்துவம் பெற்ற ஒரு வல்லுனரை அணுகி ஆய்வு செய்தோம்.
மாநிலத்தில் பல குற்ற வழக்குகளில் துப்புத் துலங்குவதற்கு பெரும் துணையாக இருந்த, 22 ஆண்டு காலமாக மாநில தடய அறிவியல் துறையில் பணிபுரிந்த திரு.சந்திரசேகரன், இந்த காட்சிகளை நன்கு ஆயுவு செய்து, தனது ஆய்வு விவரங்களை விவரித்தார்.
2009ம் ஆண்டு இலங்கை உள்நாட்டுப்போர் முடிந்ததற்கு பிறகு, இதுவரை பல அதிர்ச்சிகரமான காட்சிப் பதிவுகள், புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.
உலகத்தமிழர் பேரவை வெளியிட்ட இந்த காட்சி ஆதாரங்கள், ஒருவேளை அந்தச் சிறுவன் உயிரோடு இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையை முற்றாக சிதைத்திருக்கிறது.
இராணுவத்தின் பிடியில் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் இருந்ததையும், உயிரற்று கிடந்த புகைப்படங்களும் உலகையே உலுக்கின. அந்த புகைப்படங்கள் கேலம் மேக்ரேவின் நோ பயர் ஸோன் ஆவணப்படத்தில் அந்த புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
இலங்கை இராணுவம் அரங்கேற்றிய போர்க்குற்றங்களின் இன்னொரு முகத்தை வெளிப்படுத்திய அந்த புகைப்படங்களோடு புதிய தலைமுறைக்கு கிடைத்த காட்சி ஆதாரங்கள், போர்க்குற்றத்தின் இன்னொரு வடிவத்தை வெளிச்சமிட்டுக் காட்டின.
உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த போர்க் குற்றங்களுக்கோ, மனித உரிமை மீறல்களுக்கோ சாட்சியம் இல்லை என்று நினைத்தது இலங்கை. ஆனால். எதை வெற்றிக் களிப்பில் பதிவு செய்தார்களோ அந்த காட்சிகள்தான் இன்று சாட்சியங்களாக அவர்களுக்கு எதிரானதாக திரும்பிக் கொண்டிருக்கின்றன.
இந்த வீடியோ ஆதாரங்கள் மூலம் வெளிப்படும் ஓர் உண்மை, இந்தக் கொடிய செயலில் ஈடுபட்டவர்களே, இந்த நீளமான வீடியோ காட்சிகளையும் எடுத்துள்ளனர்.
ஒரு கையில் துப்பாக்கி ஏந்தி சுட்டவர்கள். மறு கையில் தங்களிடம் உள்ள கைபேசியில் அதனை பதிவு செய்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. சாட்சியமற்ற போராக கருதப்பட்ட இலங்கை யுத்தத்தில் சாட்சியமாக நின்று இந்த விடியோ காட்சிகள், உலக சமுதாயத்தின் மனசாட்சியை உலுக்கி எடுத்து கேள்வி கேட்டுக்கொண்டிருக்கின்றன..
இறந்து போன குழந்தைகளின் எண்ணிக்கை பற்றி மட்டும் அல்ல.. காணாமல் போன குழந்தைகளைப் பற்றி கூட ஐநா அறிக்கையில் எதுவும் சொல்லப்படவில்லை. ஆனால், குழந்தைகளின் மறுவாழ்வுப் பணிகளை இலங்கை அரசு சிறப்பாக மேற்கொண்டிருந்ததாக பாராட்டு தெரிவித்திருந்தது ஐநா அறிக்கை.
பொதுமக்களையும், குழந்தைகளையும் விடுதலைப்புலிகள் மனித கேடயங்களாக பயன்படுத்தினார்கள் என்று இலங்கை அரசு தொடர்ந்து கூறிக்கொண்டிருக்கிறது.
ஆனால் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் புகைப்படங்களோ, புதிய தலைமுறை வசம் கிடைத்துள்ள விடியோ காட்சிகளோ, அந்த குழந்தைகள் போரில் சிக்கி உயிரிழந்ததாக இலங்கை சொல்லும் நொண்டிச்சாக்கை நிராகரிக்கின்றன.
பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் உடலாவது அடையாளம் தெரிந்த ஓர் உடலாக இருக்கிறது.
ஆனால் நமக்கு கிடைத்த காட்சியில் உள்ள சிறுவன் யாரென்றே தெரியாது. இவனைப்போல எத்தனை எத்தனையோ சிறுவர்கள் காணாமல் போயிருக்கிறார்கள்.


இலங்கையின் போர்க்குற்றம்: "இனவெறித்தீயில் இரையான இளந்தளிர்கள்"- புதிய தலைமுறை புதிய ஆதாரம் வெளியீடு