Showing posts with label நாடு கடந்த அரசாங்கம். Show all posts
Showing posts with label நாடு கடந்த அரசாங்கம். Show all posts

Thursday, March 01, 2012

இந்தியா தமிழர் சார்பு நிலையை எடுக்கவேண்டும் – எக்கொனமிக்ஸ் சஞ்சிகைக்கு உருத்திரகுமாரன் பேட்டி!

தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மிகக் கொடூரமான இராணுவத்தால் அடக்கி ஆளப்படும் சிறிலங்காத் தமிழர்களின் குரல்கள் இன்னமும் மௌனமாகவே உள்ளன. குறிப்பாக சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சிறிலங்காவில் உள்ள தமிழ் மக்களின் குரல்கள் தொடர்ந்தும் நசுக்கப்படுகின்றன.

ஆனால் தாய்நாட்டை விட்டு புலம்பெயர்ந்து வேறு நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் தாம் ஓர் அணியில் ஒன்று திரள்வதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளனர். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை உருவாக்குவதற்கான தேர்தல்கள் புலம்பெயர்ந்து 12 நாடுகளில் வாழும் சிறிலங்காத் தமிழர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டன. இத் தேர்தலின் மூலம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் [TGTE] பிரதமராக உருத்திரகுமாரன் விசுவநாதன் தெரிவு செய்யப்பட்டார்.

இது வரையில், TGTE எந்தவொரு நாட்டாலும் உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஆனால், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் செயற்படும் அமைப்புக்களின் ஆதரவை TGTE பெற்று வருவதாக நியூயோர்க்கில் வசிக்கும் விசுவநாதன் தெரிவித்துள்ளார்.

TGTE ஆனது தீவிரவாத அமைப்பு என சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்து வருகிறது. ஆனால், ஜனநாயக வழிமுறையின் ஊடாக சிறிலங்காத் தமிழர்களுக்கு அமைதியான தீர்வொன்றைப் பெற்றுக் கொடுப்பதற்காக போராடுகின்ற அமைப்பாகவே TGTE உள்ளதாக அதன் பிரதமர் விசுவநாதன் தெரிவித்துள்ளார். 54 வயதான விசுவநாதன், தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பாக இந்தியாவை தளமாகக் கொண்ட The Economic Times ஊடகத்தின் செய்தியாளர் Ullekh NP உடன் மேற்கொண்ட நேர்காணலின் விபரம் வருமாறு:

கேள்வி: உங்களுடைய செயற்பாட்டுத் திட்டங்கள் எவை?

பதில்: தற்போது, சிறிலங்காத் தமிழர்களின் அரசியல் அவாக்கள் அவர்களது சொந்த நாட்டில் மறுக்கப்பட்ட நிலையிலேயே வாழ்கின்றனர். அத்துடன் இவர்களது அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டுள்ளன. சிறிலங்கா அரசாங்கமானது சட்ட ரீதியான தடைகள், இராணுவ ஆக்கிரமிப்புக்கள், கொலைகள் போன்றவற்றை மேற்கொள்வதன் ஊடாக, தமிழ் மக்களின் அரசியல் அவாக்கள் மற்றும் அவர்களுக்கான உரிமைகளை வழங்காது அவர்களது குரல்களை நசித்து வருகிறது. ஜனநாயக வழிமுறையின் ஊடாக அரசியற் போராட்டம் ஒன்றை நடாத்தி, சிறிலங்காத் தமிழர்களுக்கான உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதை நோக்காகக் கொண்டே புலம்பெயர் தமிழர்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை உருவாக்கியுள்ளனர்.

கேள்வி: இந்தியாவில் நீங்கள் தனியான கிளை அலுவலகத்தைக் கொண்டுள்ளீர்களா?

பதில்: இந்தியாவில் TGTE இன் ஆதரவுடன், அதன் ஒருங்கிணைப்பு மையம் மற்றும் தமிழ் இளையோர், மாணவர் அமைப்பு என்பன உருவாக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலுள்ள பிரதிநிதிகளைக் கொண்டு TGTE க்கான நாடாளுமன்ற உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இந்திய செயற்பாட்டாளர்கள், கல்விமான்கள், பொது அமைப்புக்கள், உள்ளுர் அரசியல்வாதிகள் ஆகியோர்களின் ஆதரவையும் TGTE பெற்றுள்ளது.

கேள்வி: TGTE ஆனது தனது இலக்கை அடைந்து கொள்வதற்குத் தேவையான அனைத்துலக சமூகத்தின் ஆதரவை எவ்வளவு தூரம் வெற்றி கொண்டுள்ளது என நீங்கள் நம்புகிறீர்கள்?

பதில்: அனைத்துலக சமூகமானது சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொண்ட நிலையில், ‘பாதுகாப்பு வலயத்தில்’ அமைந்திருந்த வைத்தியசாலை மீது சிறிலங்கா இராணுவத்தால் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சிறிலங்காவின் வடபகுதியில் அமைந்துள்ள முள்ளிவாய்க்காலில் மேற்கொள்ளப்பட்ட மனிதப் படுகொலை தொடர்பில் அனைத்துலக சமூகமானது தனது கவனத்தை திசைதிருப்பிய நிலையில், சிறிலங்கா அரச இயந்திரமானது திட்டமிட்ட வகையில் இவ்வாறான படுகொலை நடவடிக்கைகளை மேற்கொண்டது தொடர்பான உண்மைகளை அனைத்துலக சமூகமானது கண்டறிந்து கொண்ட நிலையில், தமிழ் மக்களின் அடையாளங்களை முற்றாக அழிப்பதற்காக சிறிலங்கா அரசாங்கமானது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது தொடர்பில் அனைத்துலக சமூகமானது தனது கவலை தெரிவித்த நிலையில், அனைத்துலக சமூகமானது எமக்கு ஆதரவாக இருப்பார்கள் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

ஐ.நா வல்லுனர் குழுவின் அறிக்கை, பிரித்தானியாவின் சனல் 04 தொலைக்காட்சி சேவையால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட ஆவணப்படம் என்பன ஏற்கனவே அனைத்துலக சமூகத்தின் மனச்சாட்சியை தட்டி எழுப்பியுள்ளன. வருகின்ற நாட்களில், சிறிலங்கா இராணுவத்தின் உயர் மட்ட அதிகாரிகளிடமிருந்து இறுதி யுத்த நடவடிக்கை தொடர்பாக மேலும் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளிப்படுத்தப்படும்.

கேள்வி: TGTE இன் நோக்கங்கள் எவை? அவற்றை அடைந்து கொள்வதற்காக தங்களால் கைக்கொள்ளப்படும் திட்டங்கள் எவை?

பதில்: சிறிலங்காவிற்கு உள்ளே அமைதி வழியில், ஜனநாயக வழிமுறையைப் பயன்படுத்தி, தமிழீழம் என்கின்ற இறையாண்மை நாட்டை உருவாக்கிக் கொள்வதை நோக்காகக் கொண்டு உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பே TGTE ஆகும். TGTE ஆனது ஆயுத வழியில் செயற்படுவதைத் தனது தெரிவாகக் கொண்டிருக்கவில்லை. எவ்வாறிருப்பினும், TGTE ஆனது தனது கொள்கை உரையில் குறிப்பிட்ட விடயங்களை நிறைவேற்றத் தவறும் பட்சத்தில், எவ்வாறான வழிமுறைகளை நாம் கையாளுவோம் என்பதை என்னால் தற்போது எதிர்வுகூற முடியவில்லை.

கேள்வி: இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகியன TGTE விடயத்தில் எவ்வாறான கருத்துக்களைக் கொண்டுள்ளன?

பதில்: இந்நாடுகளிடமிருந்து பூரண அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கவில்லை. தமிழர் பிரதேசங்கள் மீது சிறிலங்கா அரசாங்கத்தால் பிரயோகிக்கப்படும் இறையாண்மையை வெளிப்படையாக எதிர்த்து நிற்கும் TGTE ஆனது அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளிடமிருந்து முற்றுமுழுதான, தெளிவான அங்கீகாரத்தை எதிர்பார்த்து நிற்கவில்லை. ஆனால் இந்நாடுகளின் அரசாங்கங்கள் சிறிலங்கா அரசாங்கத்துடனான தமது இராஜதந்திர ரீதியான உறவில் ஆழமான மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்பதையே நாம் கோரி நிற்கிறோம். எவ்வாறிருப்பினும், தென்னாசியாவில் நிகழும் பூகோள அரசியல் மாற்றங்கள், இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் நலன்கள், தமிழர் நலன்கள் என்பன ஒரு புள்ளியில் சந்திக்கும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

கேள்வி: இந்தியாவின் செயற்பாடுகள் தொடர்பில் திருப்தி கொண்டுள்ளீர்களா?

பதில்: தென்னாசியப் பிராந்தியத்தின் அதிகார சக்தியாக உள்ள இந்தியாவானது மிக முக்கிய பங்காற்ற வேண்டிய நிலையில் உள்ளது. எடுத்துக்காட்டாக, ஐ.நா வல்லுனர் குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் அமுல்படுத்தப்படுத்துவது தொடர்பில் இந்தியாவானது அழுத்தம் கொடுத்திருக்க முடியும். சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான அனைத்துலக சுயாதீன விசாரணைப் பொறிமுறை ஒன்றை உடனடியாக உருவாக்க வேண்டும் என ஐ.நா செயலாளர் நாயகத்தால் நியமிக்கப்பட்ட வல்லுனர் குழுவால் பரிந்துரைக்கப்பட்டது. அத்துடன் சிறிலங்கா அரசாலும் அதன் இராணுவத்தாலும் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் வல்லுனர் குழு பரிந்துரைத்தது. அத்துடன், யுத்தத்தின் போது கொல்லப்பட்ட மற்றும் காணாமற் போனவர்களுக்கான மரண சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும் எனவும், யுத்தத்திலிருந்து மீண்டெழுந்த அனைவருக்கும் உளவியல் ரீதியான ஆற்றுப்படுத்தல் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், தமிழ் மக்களின் கலாசார விழுமியங்கள் மதிக்கப்படுவதுடன், பாரம்பரிய வழக்காறுகள் பேணுவதற்கான அனுமதிகள் வழங்கப்பட வேண்டும் எனவும், இடம்பெயர்ந்த அனைத்து மக்களும் அவர்களது சொந்த இடங்களுக்குச் செல்வதற்கான உதவிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் எனவும் ஐ.நா வல்லுனர் குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

கேள்வி: இந்தியா, சிறிலங்கா மீது எவ்வாறான வெளிநாட்டுக் கொள்கையைக் கொண்டுள்ளது என நீங்கள் கருதுகிறீர்கள்?

பதில்: இந்து சமுத்திரத்திலும், சிறிலங்காவிலும் தற்போது சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதை நாம் கவனத்திற் கொண்டுள்ளோம். இந்தியாவானது தனது உண்மையான நண்பர்கள் யார் என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். 1971ல் இந்திய – பாகிஸ்தான் யுத்தம் இடம்பெற்ற போது, இந்தியாவுக்கு எதிராக தாக்குதலைப் புரிவதற்காக பாகிஸ்தான், கொழும்பு விமான நிலையத்தைப் பயன்படுத்திக் கொண்டது என்பதை இங்கு நினைவுபடுத்த நான் விரும்புகிறேன். சிறிலங்காத் தீவில் தமிழ் மக்கள் முற்றுமுழுதாக தோற்கடிக்கப்பட்டால், சிறிலங்காவில் இந்தியா தனது எந்தவொரு செயற்பாடுகளையும் முன்னெடுக்க முடியாது. சிங்கள ஆய்வாளர்கள் சிலரும் இவ்வாறே தெரிவித்துள்ளனர். இன்னொரு வகையில் கூறுவதானால், பௌத்த சிங்களப் பேரினவாதிகளின் பார்வையில் தமிழர்கள் எதிரிகளாகவே பார்க்கப்படுகின்றனர். சிறிலங்காவை முன்னர் ஆண்ட அரசாங்கங்களுக்கும் இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கும் இடையில் பல்வேறு நிகழ்ச்சி நிரல்கள் திட்டமிடப்பட்டிருந்தன என்பதை நாம் துப்பறிந்து கொள்ள முடியாது.

கேள்வி: வரலாற்றைப் பின்னோக்கிப் பார்க்கில், ராஜீவ் காந்தியைக் கொலை செய்தமையானது தமிழீழ விடுதலைப் புலிகள் செய்த மிகப்பெரிய தவறு என நீங்கள் கருதுகிறீர்களா? இதனை வே.பிரபாகரன் ஏற்றுக்கொண்டாரா?


பதில்: ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக விசாரணை செய்வதற்காக உருவாக்கப்பட்ட Jain ஆணைக்குழுவால் சந்தேகங்கள் எழுப்பப்பட்டதையும், அவ் ஆணைக்குழுவால் உருவாக்கப்பட்ட பல்வேறு நன்நடத்தை கண்காணிப்பு குழுவின் செயற்பாடுகள் நிறைவுபடுத்தப்படவில்லை என்பதையும் இங்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன். ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டமை ஒரு ‘துன்பியல் சம்பவம்’ என மறைந்த அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தெரிவித்திருந்தார். எவ்வாறிருப்பினும், தமிழர் தேசம் மீண்டும் புத்துயிர் பெறுவதிலும், அதிகார சக்தி மிக்க இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை தொடர்பிலும் ஒருவரின் படுகொலையானது தடையாக இருக்கக் கூடாது. இவ்வாறான நடவடிக்கையானது இந்து சமுத்திரத் தீவில் ஏற்படும் பூகோள அரசியல் மாற்றத்தை இந்தியா தனது சொந்த நலனுக்காக முகங் கொடுப்பதற்குப் பயன்படுத்தப்பட மாட்டாது என நாம் நம்புகிறோம்.

கேள்வி: 2009 ல் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையின் போது புலிகள் தோற்கடிக்கப்பட்டதற்கான முக்கிய காரணங்கள் எவை?

பதில்: சிறிலங்கா அரசாங்கத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகள் இதயசுத்தியுடனேயே பேச்சுக்களை ஆரம்பித்தனர். சிறிலங்காவில் இடம்பெற்ற மோதலுக்கான காரணங்களை கவனத்தில் எடுக்காது, அனைத்துலக சமூகத்தால் முன்னெடுக்கப்பட்ட தீவிரவாதத்துக்கு எதிரான யுத்தமானது சிறிலங்காவின் அதிகார சமநிலையில் குழப்பத்தை உண்டுபண்ணியதாக, சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட சமரச முயற்சிகள் தொடர்பாக நோர்வேயால் நவம்பர் 11,2011 அன்று வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ அறிக்கையான Pawns of Peace Report இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளிடமிருந்தும் நிதி, இராணுவ மற்றும் இராஜதந்திர ரீதியான ஆதரவுகளைப் பெற்றுக் கொள்வதற்காக ராஜபக்ச அரசாங்கம் மூலோபாய ரீதியான போட்டியில் ஊறுவிளைவித்தது” என அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கள அரசாங்கமானது தான் விரும்பியதை அடைந்து கொள்வதற்காக அனைத்தலக சமூகத்தினதும் இந்தியாவினதும் செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டது.
எவ்வாறிருப்பினும், இனப்படுகொலை ஒன்றுக்கு உறுதுணையாக இருந்ததன் மூலம் இந்தியாவானது தனது தேசிய நலனில் எதையும் சாதித்திருக்கும் என நான் நினைக்கவில்லை. சிறிலங்கா மீது தாம் செல்வாக்குச் செலுத்த விரும்பவில்லை என்றும், ஆனால் தாம் அவ்வாறு செய்ய வேண்டியிருந்ததாகவும் இந்திய இராஜதந்திரிகள் கருத்தரங்குகளில் வெளிப்படையாகத் தெரிவித்தனர்.
இந்தியாவானது ஒரே வெளிநாட்டுக் கொள்கையை தொடர்ச்சியாகப் பயன்படுத்தியதன் மூலம் எதனையும் கற்றுக் கொள்ளவில்லை என்பதே கவலைக்குரிய விடயமாகும்.

கேள்வி: சிறிலங்காவில் கட்டவிழ்த்துவிடப்படும் இராணுவ நடவடிக்கைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்காக நீங்கள் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளீர்கள்?

பதில்: கேடுகாலமாக, சிறிலங்காத் தீவில் உண்மை, நீதி என்பன நிலைநாட்டப்படும் என்பதில் நம்பிக்கை கொள்ள முடியவில்லை. நல்வாய்ப்பாக, சிறிலங்காத் தீவுக்கு வெளியேயும் தமிழ் மக்கள் வாழ்கின்றனர். இதில் சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கு சாட்சியமாக உள்ள முன்னாள் சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள் பலர் மற்றும் அனைத்துலக இராஜதந்திரிகள் பலர் வெளிநாடுகளில் வசிக்கின்றனர்.

முதலாவதாக, சிறிலங்காவில் இடம்பெற்ற படுகொலைகளை நேரில் கண்டவர்களிடமிருந்து வாக்குமூலங்கள் சேகரிக்கப்படுகின்றன. இவர்களிடமிருந்து பெறப்படும் தகவல்களைப் பயன்படுத்தி சட்ட ரீதியான, கல்வி சார், பொது அமைப்புக்களின் ஊடாக போர் மீறல்கள் தொடர்பான உண்மையான நிலைப்பாட்டை வெளிக்கொண்டு வருவதே இரண்டாவது நடவடிக்கையாகும்.

மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி

Tuesday, February 28, 2012

நீதிகேட்கும் வேட்கையுடன் சுதந்திர தமிழீழம் நோக்கிய விடுதலைப்பயணம் ! - பிரதமர் வி.உருத்திரகுமாரன்

மக்கள் உயிர்களைவிட அரசியல் நலன்களை பெரிதென மதிக்கும் இந்த சர்வதேச ஒழுங்கின் அறமுறை அற்ற அணுகுமுறைகள் நமது மக்கள் கொல்லப்படுவதனை அனுமதித்து நின்றன.

நமது மக்கள் கொல்லப்படுவதை அனுமதித்த அதே உலக சமுதாயத்திடம் நமது மக்களுக்கான நீதியனை கோருவதற்கு நமக்கு எல்லாவித தார்மீக உரிமைகளும் உள்ளன.
இந்தத் தார்மீக உரிமையின் அடிப்படையில், நீதியின் அடிப்படையில், நியாயத்தின் அடிப்படையில், தர்மத்தின் அடிப்படையில் நாம் இங்கு நீதி கேட்டுக் கூடியுள்ளோம்.

இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் ஜெனீவா ஐ.நா மனித உரிமைச் சதுக்கத்தில் இடம்பெற்ற கவனயீர்ப்பு மக்கள் எழுச்சி நிகழ்விற்கு வழங்கிய சிறப்புரையில் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழலில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இத்தகைய சிறிலங்காவுக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றக்கூடிய சாத்தியக்கூறு இல்லை. குறைந்தபட்சம் சீனா, ரஸ்யா இத்தகைய பிரேணைகளை வீட்டோ செய்துவிடும்.

இத்தகைய ஒரு சூழலில் சிறிலங்கா அரசின் மீதான அனைத்தலக விசாரணகளைக் கொண்டுவருவதற்கு ஐ.நா மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடர்கள் போன்றவற்றிற்கு ஊடாக அழுத்தங்களைக் கொடுப்பது நம் முன்னால் இருக்கும் ஒரு வாய்ப்பாகும்.

இந்த யதார்தத்தினையும் நாம் புரிந்து வைத்துக் கொண்டுதான் நமது செயற்பாடுகளை நாம் ஆற்ற வேண்டும் எனவும் தனதுரையில் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

 உரையின் முழுவடிவம் :

அன்பான தமிழீழ மக்களே!

இன்று இந்த ஐக்கியநாடுகள் சபை முன்றிலே நாம் நீதிக்காகக் கூடியுள்ளோம்.

தமிழீழ மக்கள் மீது சிறிலங்கா அரசு புரிந்து வரும் இன அழிப்பையும் (Genocide) போர் மற்றும் மானிடத்துக்கெதிரான குற்றங்கங்களையும் அனைத்துலக சமூகத்தின் முன்நிறுத்த இன்றைய தினம் ஜெனிவா ஜக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்துக்கு முன்னே நாங்கள் கூடியிருக்கிறோம்.

நமது மக்களுக்கான நீதியினைக் கோரி இலண்டனில் இருந்து ஜெனிவாவரை நடைப்பயணம் செய்து இங்கு நம்முடன் இணைந்திருக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர் ஜெயசங்கர் முருகையா அவர்களையும் ஏனைய தோழர்களையும் வாழ்த்தி வரவேற்று  இவர்களது இலட்சிய உறுதியினையும் நமக்குள் உள்வாங்கியவாறு நமது மக்களுக்கு நியாயம் கோருவதற்காக இங்கு கூடியிருக்கிறோம்.

சிங்களத்தால் இன அழிப்புக்குள்ளாக்கப்பட்ட எமது மக்களின் சார்பில் அனைத்துலக சமூகத்திடம் நீதிகோரி நாம் இங்கு கூடியிருக்கிறோம்.
இன்றைய தினம், பெப்ரவரி மாதம் 27 ஆம் நாள், ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகும் முதல்நாளிலேயே நீதிகோரும் வேட்கையுடன் நாம் இங்கு கூடியிருக்கிறோம்.

2009 ஆம் ஆண்டு அனைத்துலக சமூகமும், ஐக்கியநாடுகள் சபையும் வாய்மூடி மௌனித்துப் போய் நமது மக்களுக்கு பெரும் தவறிழைக்க, அந்த வெளியினை நன்கு பயன்படுத்தியவாறு சிங்களம் நமது மக்களை கொன்றெழித்தது. நாகரீக உலகையே அதிரச் செய்யும் வகையில் பெரும் நரபலி எடுத்தது.

சிங்களத்தின் இந்த தமிழினஅழிப்பில் 100,000 க்கும் மேற்பட்ட நமது உறவுகள் கொத்துக் கொத்தாக நம் கண்முன்னாலேயே கொல்லப்பட்டார்கள். வீதிகளில், வீடுகளில், பள்ளிக்கூடங்களில், வழிபாட்டுத்தலங்களில், மருத்துவமனைகளில், திருமணவீடுகளில், இழவுச் சடங்குகளில் எங்கும் நமது மக்கள் துரத்தித் துரத்திக் கொல்லப்பட்டார்கள்.

நமது மக்கள் நடக்கும் போதும் கொல்லப்பட்டார்கள். படிக்கும்போதும் கொல்லப்பட்டார்கள். உண்ணும்போதும் கொல்லப்பட்டார்கள். உறங்கும்போதும் போது கொல்லப்பட்டார்கள். கூடும்போதும் கொல்லப்பட்டார்கள். ஓடும் போதும் கொல்லப்பட்டனர். இயற்கை கழிக்கும் போதும் கொல்லப்பட்டார்கள். இயலாது இருக்கும் போதும் கொல்லப்பட்டார்கள்.

குப்பை கூளங்களைக் கூட்டித் தள்ளி ஒரு மூலைக்குள் வைத்துத் தீயிட்டுக்; கொழுத்துவதைப்போல  மூட்டைப்பூச்சிகைள தட்டிக் கொட்டி ஒருங்கு சேர்த்து காலால் நசுக்குவதைப்போல  நமது மக்களை அடித்துத் கலைத்து விரட்டிச் சென்று கடற்கரையோரத்தில், ஒரு சிறிய நிலப்பகுதியில் வைத்து நரபலி எடுத்தது சிங்களம்.

இவற்றையெல்லாம் இந்த அனைத்துலக சமூகம், இந்த ஐக்கிய நாடுகள் சபை அனுமதித்து நின்றது. மக்கள் உயிர்களைவிட அரசியல் நலன்களை பெரிதென மதிக்கும் இந்த சர்வதேச ஒழுங்கின் அறமுறை அற்ற அணுகுமுறைகள் நமது மக்கள் கொல்லப்படுவதனை அனுமதித்து நின்றன. நமது மக்கள் கொல்லப்படுவதை அனுமதித்த அதே உலக சமுதாயத்திடம் நமது மக்களுக்கான நீதியனை கோருவதற்கு நமக்கு எல்லாவித தார்மீக உரிமைகளும் உள்ளன.

இந்தத் தார்மீக உரிமையின் அடிப்படையில், நீதியின் அடிப்படையில், நியாயத்தின் அடிப்படையில், தர்மத்தின் அடிப்;படையில் நாம் இங்கு நீதி கேட்டுக் கூடியுள்ளோம்.

நமது மக்கள் மீதான சிங்களத்தின் தொடரும் இனஅழிப்பை தடுத்து நிறுத்த நமக்கான ஒரு பாதுகாப்பு ஏற்பாடு தேவை என்ற அடிப்படையில்  ஈழத் தமிழர் தேசத்தின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில்  எமக்கான நீதி, சுதந்திமும் இறைமையும் உடைய சுதந்திரத் தமிழீழ அரசினை அமைப்பதாகத்தான் இருக்கமுடியும் என ஓங்கி உரத்த குரலில் அனைத்துலக சமூகத்தின் முன் பிரகடனப்படுத்தியவாறு 
நமது மக்களை இனஅழிப்புக்குள்ளாக்கிய, இனஅழிப்புக்குள்ளாக்கும் சிங்கள அரசு மீது அனைத்துலக விசாரணையினைத் உடனடியாகத் தொடங்கு எனவும்  விசாரணைகளின் அடிப்படையில் சிறலங்காவின் ஐனாதிபதி மகிந்த இராஜபக்ச உட்பட அனைத்துக் குற்றவாளிகளையும் குற்றவாறிக்கூண்டில் ஏற்றித் தண்டனை வழங்கு எனவும்  நாம் அனைத்துலச சமூகத்திடம்  இந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிடம் கொன்றொழிக்கப்பட்ட நமது மக்களின் பெயரால் கோருகிறோம்.

அன்பான மக்களே!

மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகள் ஒன்றுகூடி உலகின் மனித உரிமை நிலைமை குறித்து இன்று ஆரம்பமாகும் இக் கூட்டத்தொடரில் விவாதிக்கின்றனர்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் 2012 ஆம் ஆண்டை அனைத்துலக விசாரணைகளைவலியுத்தும் ஆண்டாகபிரகடனப்படுத்தயுள்ளமையினை நீங்கள் அறிவீர்கள்.

சிறிலங்கா அரசு புரிந்த குற்றங்களுக்கு எதிராக அனைத்துலக விசாரணைகளை கோரும் நமது நிலைப்பாட்டை இம் மனித உரிமைப் பேரவையின் இக் கூட்டத்தொடரின் போதும் நாம் வலுப்படுத்த வேண்டும்.

இதற்காக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளை நோக்கிய தமது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரவையின் கூட்டத் தொடர் நடைபெறும் காலகட்டத்தில் ஐ.நா. மண்டபத்துக்குள்ளும் சிறலங்கா அரசின் மீதான அனைத்துலக விசாரணைகளைக் கோரும் செயற்பாடுகளுக்கான ஏற்பாடுகளை நாம் செய்திருக்கிறோம்.

சிறிலங்கா அரசின் மீது அனைத்துலக விசாரணைகளைக் கோரும் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களுடன் இணைந்து நின்று சிறிலங்கா மீது விசாரணைககைளக் கோரக்கூடிய நாடுகளை உற்சாகப்படுத்துவதும் ஆதரவு தரக்கூடிய நாடுகளின் எண்ணிக்கையினை அதிகரிக்கச் செய்வதும் நாம் மேற்கொள்ளும் இத்தகைய அரசியல் இராஜதந்திர செயற்பாடுகளில் கூடுதல் இடம் பிடிக்கும். ஐக்கிய நாடுகள் சபை மண்டபத்துக்கு உள்ளே மட்டுமன்றி மண்டபத்துக்கு வெளியே நடைபெறும் செயற்பாடுகளும் இவ் விடயத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.
 
இன்று நாம் ஐக்கியநாடுகள் சபைக்கு வெளியில் நடாத்தும் இப்போராட்டம் மண்டபத்தின் உள்ளே அதிர்வலைகளை ஏற்படுத்தும். லண்டனிலும் இருந்து புறப்பட்டு இஙகு வந்தடைந்து நீதி கோரும் நடைப்பயணமும் நமது மனவலிமையினை உள்ளே கூடியிருக்கும் அரச மற்றும் மனித உரிமை அமைப்பின் பிரதிநிதிகளுக்கு வெளிப்படுத்தும்.
நாம் சிறிலங்கா அரசினைக் குற்றவாளிக்கூண்டில் ஏற்றி நமது மக்களுக்காய் நீதி கோரும் முயற்சியும் தொடர்ச்சியான செயற்பாடுகளை வேண்டி நிற்பது. விடாமுயற்சியுடன் மேற்கோள்ளப்பட வேண்டியது. நீதி, நீதி என்பதற்காகத் தானாக வென்று விடுவதில்லை. நீதியினை நாம் வெற்றி பெற வைக்க வேண்டும். இதற்கான உறுதியும் தூரநோக்கும் நம்மிடம் இருக்க வேண்டும்.

2012 ஆண்டில் நாம் முக்கியமான வரலாற்றுக் கட்டத்தில் நிற்கிறோம். சிறலங்கா மீது அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற அனைத்துலக அழுத்தம் கணிசமாக எழுந்துள்ளது. அனைத்துலக பிணக்குக்குழு (International Crisis Group)> , அனைத்;துலக மன்னிப்புச்சபை (Amnestry International), மனித உரிமைகள் காப்பகம் (Human Rights Watch) சனல் 4 தொலைக்காட்சி (Channel 4) போன்ற அனைத்துலக நிறுவனங்கள் சிறிலங்கா அரசு மீதான அழுத்தத்தை உருவாக்குவதில் முன்னின்று செயற்பட்டு வருகின்றன.

சிறிலங்கா மீதான விசாரணை விடயத்தில் அரசுகளுக்கும் சர்வதேச குடிசார் சமுகத்திற்குமிடையே இடையே ஒரு வேறுபாடும் தெரிகிறது. அரசுகள் இந்த விசாரணையினை சிறிலங்கா அரசு அனைத்துலக தராதரத்துக்கிணங்க மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றன.
ஆனால் ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகத்தின் நிபுனர் குழு, மனித உரிமை அமைப்புக்கள், தமிழ் மக்கள் சிறலங்கா அரசுக்கு இந்த தகைமையோ அல்லது விருப்பமோ இல்லை என்கின்றன. அனைத்துலக விசாரணைகளைக் கோருகின்றன.

சிறிலங்கா அரசு சர்வதேச குடிசார் சமுகத்தால் (சிவில் சமுகத்தால்), தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட தனது நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையினை முன்வைத்து தன் மீதான அழுத்தத்தைச் சமாளிக்கப் பார்க்கிறது.

போர்குற்றங்கள் தொடர்பான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை திருப்பதிகரமாக இல்லையென அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா, தென்னாபிரிக்கா கருத்து தெரிவித்துள்ளன. மன்னதர் முன்னாள் பேராய கலாநிதி ராயப்பு 146,679 மக்கள் தொடர்பாக தகவல் இல்லையென இந்த நல்லிண ஆணைக்குழவின் முன்னால் மகஜர் சமர்பித்தார்.
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் நிபுனர் குழு 40,000 மேற்பட்ட மக்கள் இறந்துள்ளார்கள் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆயினும் நல்லிணக்க ஆணைக்குழு சிறிலங்கா இராணுவம் மனித உரிமைகளை யுத்தத்தின்போது மதித்ததெனவும் சில ராணுவ உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் நான்கே நான்கு சமயங்களில் மட்டும் அத்துமீறி நடந்திருக்ககூடும் என கூறியுள்ளது.

பொது அறிவு நான்கு சந்தர்ப்பங்களில் நாப்பதாயிரம் மக்கள் அல்லது 146,679 மக்கள் இறந்திருப்பார்களென்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது. நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை இன அழிப்பு, மானிடத்திற்கு எதிரான குற்றங்கள், போர்குற்றங்கள் புரிந்த சிறிலங்கா அரசின் அரசியல் ராணுவ தலைவர்களை தப்பவைக்கும் பொறிமுறையாக அமைகின்றது.

எனவே அனைத்துலக விசாரணைக்கு மாற்றீடாக நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையை ஏற்பது முழுப்பூசணிக்காயினைச் ஒரு கோப்பைச் சோற்றினுள் மறைக்கும் மூடத்தனத்தை ஒத்தது.
இத்தகைய ஒரு பின்னணியில் மனித உரிமைப் பேரவையின் 19 வது கூட்டத் தொடர் ஆரம்ப்பமாகும் பெப்ரவரி 27 ஆம் நாள் ஜெனிவாயில் ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் நாம் ஒன்றுகூடி நியாயம் கோருவது மிகவும் முக்கியத்தும் வாய்ந்ததாகும்.

நாம் நமது சக்தியெல்லாம் திரட்டி சிறிலங்கா அரசின் பொய்மையினையும் கபடத்தனத்தையும் அம்;பலப்படுத்தி அனைத்துலக விசாரணைகளைக் கோரும் முயற்சிகைள வலுப்படுத்த வேண்டும்.
மிகக் கொடுமையான முறையில் கொன்றொழிக்கப்பட்ட நமது மக்களுக்காக நாம் அனைத்துலக அரங்கில் நியாயம் கோருகின்றோம் என்ற தார்மீக ஆவேசத்துடன் நாம் அனைவரும் செயற்படுவது மிகவும் முக்கியத்தும் வாய்ந்தது.

அன்பான மக்களே!

நாம் இன்று மேற்கொள்ளும் முயற்சி ஒரு அரசினை வேறு அரசுகளைக் கொண்டு தண்டிக்க வைக்கும் முயற்சி. சிறிலங்கா அரசு உலகில் தனித்த விடப்பட்ட ஒரு அரசு அல்ல. சிறிலங்கா அரசு பல நண்பர்களை  பலமிக்க அரசுளையும் தனது நண்பர்களாகக் கொண்டுள்ளது.

அரசுகளுக்கிடையிலான உறவுகள் தர்மத்தின் அடிப்படையில் நிகழ்பவை அல்ல. இவை நலன்களின் அடிப்படையில் சுழல்பவை. இதனால் சிறலங்கா அரசினைக் குற்றவாளிக்கூண்டில் எற்றச் சற்றுக் காலம் எடுக்கக்கூடும்.

இன்று சிறிலங்கா மீது யுத்தக்குற்ற விசாரணைக்கான அழுத்தங்களைக் கொடுக்கும் பலமிக்க பல அரசுகளும் தற்போதய சிறிலங்கா அரசாங்கத்தை தம்முன்னே பணியவைக்கும் நோக்கத்தை தமது நலன்கள் சார்ந்து கொண்டுள்ளனர் என்புதனையும் நாம் புரிந்து வைத்திருக்க வேண்டும்.

சிறிலங்கா அரசு இந்த பலம் மிக்க அரசுகளுக்கு பணிவதுபோல நடித்து தனது குற்றங்களில் இருந்து உச்சித் தப்பி விடலாம் என்ற திட்டத்தை வகுத்துச் செயற்படும் நிலைமைகளும் உள்ளன.

சிறிலங்கா அரசு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பான ரோம் நகரத்து பிரகடனத்தில் கையெழுத்திடவில்லை. இதனால் போர்க்குற்ற விசாரணைகளுக்கு ஐக்கியநாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையின் அங்கீகாரம் தேவைப்படும்.

தற்போதைய சூழலில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இத்தகைய சிறிலங்காவுக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றக்கூடிய சாத்தியக்கூறு இல்லை. குறைந்தபட்சம் சீனா, ரஸ்யா இத்தகைய பிரேணைகளை வீட்டோ செய்துவிடும்.

இத்தகைய ஒரு சூழலில் சிறிலங்கா அரசின் மீதான அனைத்தலக விசாரணகளைக் கொண்டுவருவதற்கு இந்த மனித உரிமைப் பேரவையின் கூட்டததொடர்கள் போன்றவற்றிற்கு ஊடாக அழுத்தங்களைக் கொடுப்பது நம் முன்னால் இருக்கும் ஒரு வாய்ப்பாகும். இந்த நடைமுறை காலஅவகாசத்தையும் கோரி நிற்கக் கூடியவை.
இதனால் சிறிலங்கா அரசினை நாம் விரும்புவது போலத் தண்டனைக்குள்ளாக்குவது சவால் மிக்கதொரு விடயமாகத்தான் இருக்கும். இந்த யதார்தத்தினையும் நாம் புரிந்து வைத்துக் கொண்டுதான் நமது செயற்பாடுகளை நாம் ஆற்ற வேண்டும்.

இருப்பினும் உலகினில் உண்மையும், நியாயமும், தர்மமும் என்றும் தோற்பதில்லை. ஏனெனில் அவை மிகவும் சக்தி மிக்கவை. ஒரு மானுட சமூகத்தின் இயக்கத்தில் மிகுந்த முக்கியம் பெறுவவை. இதனால் காலம் சற்றுச் சென்றாலும் நாம் நமது முயற்சியில் வெற்றி பெறுவோம். ஏனெனில் நமது பக்கம்தான் நீதி உள்ளது.

அதுவரை உறுதியுடன் நமது மக்களின் விடுதலைக்காய் செயற்படுவோம். நமது மக்களுக்கு நீதிகிடைக்கும் வரை ஓயமாடடோம் என உறுதி எடுத்துக் கொள்வோம்.

Saturday, February 04, 2012

சிங்கள தேசத்தின் சுதந்திர நாளில் நமது விடுதலைக்காகத் தொடர்ந்து போராட உறுதி பூணுவோம்: தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரன்

சிங்கள தேசத்தின் சுதந்திர நாளில் நமது விடுதலைக்காகத் தொடர்ந்து போராட உறுதி பூணுவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். ஈழத் தமிழர் தேசம் தனது இறைமையினைத் தனது கைகளில் மீண்டும் எடுக்கும். அது வரை எமது உரிமைப் போரரட்டம் ஓயப் போவதில்லை - இதுவே சிங்கள பௌத்த பேரின ஆட்சியாளர்களுக்கு ஈழத் தமிழர் தேசம் சார்பில் நாம் விடுக்கும் உறுதியான செய்தியாகும்.
உங்கள் இராணுவ ஆக்கிரமிப்பும் படையெடுப்பும் நமது தேசத்தின் நிலங்களை எம்மிடம் இருந்து பறித்தெடுத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் நமது மக்களின் மனதை உங்களால் வெற்றி பெற முடியாது. உங்களால் மட்டுமல்ல எந்த ஆக்கிரமிப்பாளர்களாலும் நமது மக்களை வெற்றி கொள்ள முடியாது.

நமது மக்களின் மனங்களை உங்களால் வெற்றி கொள்ள முடியாதவரை நீங்கள் ஆக்கிரமிப்பாளர்களே. என்றோ ஒரு நாள் நமது மண்ணை விட்டு வெளியேற வேண்டியவர்களே.

இன்று ஈழத் தமிழர் தேசத்தை ஆக்கிரமித்துக் கொண்டதையும் நீங்கள் கொண்டாடும் இவ்வேளையில் உங்கள் ஆக்கிரமிப்பு இராணுவத்தை ஈழத் தமிழர் தேசத்தின்; தாயகப்பூமியில் இருந்து வெளியேறுமாறு இன்றைய தினத்தில் நாம் கோருகிறோம்.

சிங்கள தேசத்தின் முற்போக்காளார்களுக்கும் உலக சமுதாயத்துக்கும் நீதியின் அடிப்படையில் ஈழத் தமிழர் தேசத்தின் விடுதலைக்காக உரத்துக் குரல் எழுப்புமாறும் இன்றைய நாளில் நாம் அறைகூவல் விடுக்கிறோம் என பிரதமர் வி.ருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து நின்றவாது சிங்கள பௌத்த மேலாதிக்க நிலையில் தனது சுதந்திர நாளை சிங்கள தேசத்துக்கு கொண்டாடி வரும் நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரனால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் முழுவிபரம் :
இன்று சிங்கள தேசம் தனது 64 வது சுதந்திரதினத்தைக் கொண்டாடுகிறது. பிரித்தானியரிடமிருந்து தான் பெற்றுக் கொண்ட சுதந்திரத்தை கொண்டாடும் முகமாக சுதந்திரதின ஏற்பாடுகளைச் செய்து மகிழ்கிறது.

ஒரு தேசம் என்ற வகையில் சிங்கள தேசம் தனது சுதந்திரத்தைக் கொண்டாடுவதற்கு உரிமை உடையதுதான். தனது தேசத்தின் விடுதலையை மட்டும் சிங்கள தேசம் கொண்டாடுமாயின் அதை நாம் ஆட்சேபிப்பதற்கு எதுவும் இல்லை. அயல் நாடாக இருந்து வாழத்துக் கூறுவதற்கும் ஈழத் தமிழர் தேசம் தயாராகவே உள்ளது.

ஆனால் சிங்கள தேசம் கொண்டாடுவது தனது சுதந்திரத்தை மட்டுமல்ல. ஈழத் தமிழர் தேசத்தை தனது ஆளுகையின் கீழ் ஆக்கிரமித்துக் கொண்ட நாளாகவும்தான் இன்றைய தினத்தைக் கருதுகிறது. இதற்காகவும்தான் கொண்டாட்டங்களை நடாத்துகிறது.

இதனால்தான் சிங்களம் கொண்டாடும் இந்த சுதந்திரநாள் ஈழத் தமிழர் தேசத்துக்கு கரிநாளாகிறது. தனது விடுதலைக்காய்ப் போராடுவதற்கு ஓர்மத்துடன் உறுதி பூணும் நாளாவும் அமைகிறது.

ஈழத் தமிழர் தேசம் தனது இறைமையினை சிங்கள தேசத்திடம் தாரை வார்த்துக் கொடுக்கத் தயாராக என்றும் இருந்ததில்லை. பறிக்கப்பட்ட தனது இறைமையினை மீளத் தனது கரங்களில் எடுத்துக் கொள்வதற்கான போரட்டங்களைத் தான் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது.

தேசியத்தலைவர் தலைமையில் தமிழர்களின் நடைமுறை அரசு அமைக்கப்பட்டதன் ஊடாக ஈழத் தமிழர் தேசம் தனது இறைமையினை மீண்டும் தனது கைகளில் எடுத்துக் கொண்ட நிகழ்வையும் வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது..

சிறிய தேசங்களின் இறைமையை விடவும், நீதி, நியாயம் தர்மத்தை விடவும் பலமிக்க அரசுகளின் நலன்களே இன்று வரலாற்றுச் சக்கரத்தைச் சுழற்றும் ஒரு சர்வதேச ஒழுங்கு சிங்கள தேசத்துக்கு வாய்ப்பாக அமைய ஈழத் தமழர் தேசத்தின் இறைமையை சிங்கள தேசம் மீண்டும் இராணுவ ஆக்கிரமிப்பின் ஊடாகப் பறித்தெடுத்துக் கொண்டது.
கடந்த 64 ஆண்டுகாளக ஈழத் தமிழர் தேசத்தின் தன்னாட்சி உரிமையினை சிங்கள அரசு மறுத்து வருகிறது. தமிழர் தேசத்தின் மீது திட்டமிட்ட முறையில் இனஅழிப்பை (புநநெழஉனைந)மேற் கொண்டு வருகிறது.

 சிங்களம் ஆட்சி அதிகாரத்தை தனது கையில் எடுத்துக் கொண்ட நாளில் இருந்து இலங்கைத்தீவின் வரலாற்றுப்பக்கங்கள் எல்லாம் சிங்களத்தின் இனஅழிப்பு முயற்சிகளால் நிரம்பிக் கிடக்கிறது.

நில ஆக்கிரமிப்பாக, குடியுரிமைப் பறிப்பாக, கல்வி, தொழில் வாய்ப்புப் புறக்கணிப்பாக, பண்பாட்டுச் சிதைப்பாக, காலத்துக்காலம் நடைபெற்று வந்த படுகொலைகளாக இவை எல்லாற்றுக்கும் சிகரம் வைப்பது போல வன்னி இறுதிப்போரில் நாகரீக உலகம் வெட்கித் தலைகுனியும் வகையில் நடாத்தப்பட்ட இனப்படுகொலையாக � சிங்களத்தின் கொடும் நாக்கு தமிழ் மக்களைத் தொடர்ச்சியாகத் தீண்டியே வருகிறது.

தற்போது போரில் இராணுவரீதியில் வெற்றி கொண்ட மமதையில் ஈழத் தமிழர் தேசத்தின் மீதான ஆக்கிரமிப்பைத் சிங்களம் தீவிரப்படுத்தி வருகிறது. ஈழத் தமிழர் தேசத்தினைக் கரைத்துச் சிதைக்க முயல்கிறது.
இத்தகைய ஒரு சூழலில், சிங்கள தேசத்தின் சுதந்திரநாளாகிய இன்று நாம் சிங்கள தேசத்தின் இனவாத ஆட்சியாளர்களுக்கு ஒரு செய்தியினைத் தெளிவாகக் கூற விரும்புகிறோம்.

ஈழத் தமிழர் தேசம் தனது இறைமையினைத் தனது கைகளில் மீண்டும் எடுக்கும். அது வரை எமது உரிமைப் போரரட்டம் ஓயப் போவதில்லை - இதுவே சிங்கள பௌத்த பேரின ஆட்சியாளர்களுக்கு ஈழத் தமிழர் தேசம் சார்பில் நாம் விடுக்கும் உறுதியான செய்தியாகும்.

உங்கள் இராணுவ ஆக்கிரமிப்பும் படையெடுப்பும் நமது தேசத்தின் நிலங்களை எம்மிடம் இருந்து பறித்தெடுத்துக் கொண்டிருக்கலாம்.
ஆனால் நமது மக்களின் மனதை உங்களால் வெற்றி பெற முடியாது. உங்களால் மட்டுமல்ல எந்த ஆக்கிரமிப்பாளர்களாலும் நமது மக்களை வெற்றி கொள்ள முடியாது.

நமது மக்களின் மனங்களை உங்களால் வெற்றி கொள்ள முடியாதவரை நீங்கள் ஆக்கிரமிப்பாளர்களே. என்றோ ஒரு நாள் நமது மண்ணை விட்டு வெளியேற வேண்டியவர்களே.

இன்று ஈழத் தமிழர் தேசத்தை ஆக்கிரமித்துக் கொண்டதையும் நீங்கள் கொண்டாடும் இவ்வேளையில் உங்கள் ஆக்கிரமிப்பு இராணுவத்தை ஈழத் தமிழர் தேசத்தின்; தாயகப்பூமியில் இருந்து வெளியேறுமாறு இன்றைய தினத்தில் நாம் கோருகிறோம்.

சிங்கள தேசத்தின் முற்போக்காளார்களுக்கும் உலக சமுதாயத்துக்கும் நீதியின் அடிப்படையில் ஈழத் தமிழர் தேசத்தின் விடுதலைக்காக உரத்துக் குரல் எழுப்புமாறும் இன்றைய நாளில் நாம் அறைகூவல் விடுக்கிறோம்.

இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

Saturday, January 21, 2012

டென்மார்க்கில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் அரங்கம்:

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் அரங்கம் நிகழ்வு டென்மார்க்கின்ற நகரில் இடம்பெறவுள்ளதாக தகவற்றுறை அமைச்சகத்தின் ஊடக குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 22-01-2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 15:30 மணிக்கு Industrivej 15A / 7200 Grindsted எனும் முகவரியில் இடம்பெறுவதாக ஊடகக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமகால அரசியல் நிலைவரம் மற்றும் நா.த.அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்தான விழிப்பூட்டல் நிகழ்வாக இடம்பெறவுள்ள இப்பொதுக் கூட்டத்தில் நா.தஅரசாங்கத்தின் உள்துறை அமைச்சர் நாகலிங்கம் பாலசந்திரன் அவர்கள் கலந்து கொள்கின்றார்.

உள்துறை அமைச்சின் டென்மார் பிரதிநிதி இளையராஜா சிதம்பரநாதனின் ஒழுங்குபடுத்தலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் அரங்கம் நிகழ்வில் அனைவரையும் பங்கெடுத்துக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Saturday, December 31, 2011

வரும் ஆண்டை எமது மக்களை மீட்கும் ஆண்டாக வரவேற்போம்.

அனைவருக்கும் 2012 இனிய புத்தாண்டு மற்றும் தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்
வறுமையும் அறியாமையும் நீங்கி உலகெங்கும் வன்முறைகள் தொலைந்து சாந்தியும் சமாதானமும் நிலைத்திருக்க வரும் புத்தாண்டு நல்வரவாகட்டும். அடக்குமுறைகள் இல்லாதொழிந்து இனங்களுக்கிடையே ஒற்றுமை மேலோங்கி சுயகௌரவத்துடன் வாழ நல்லதோர் ஆண்டாக மலரட்டும்.

தமிழ் மக்களுக்கான உரிமைகள் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வரும் கசப்புணர்வுகளை நீக்கி ஐனநாயக முறைப்படி தமிழ்மக்களின் விருப்பத்திற்கேற்ப தெழிவான சமாதான தீர்வை முன்வைத்து நல்லிணக்கத்தை ஏற்படுத்த இலங்கை அரசு தவறின் மீண்டும் தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளை பெற்றுக்கொள்ள வன்முறையை நாடிச்செல்வார்கள்.

எனவே இலங்கை அரசும் சர்வதேசமும் துரிதமாக செயற்பட்டு வரும் புத்தாண்டை தமிழ் மக்களின் உரிமைகள் கிடைக்கின்ற ஆண்டாக மலரச்செய்யும் பொறுப்பும் கடமையும் உண்டு.

30 ஆண்டுகளாக நடைபெற்ற உள்நாட்டுப் போரினால் அனைத்தையும் இழந்த மக்கள் பொருளாதார ரீதியாக முன்னுக்கு வர முயற்சி செய்யும் வேளையில் அவர்களுக்கு ஆதரவாக பக்கபலமாக நின்று அவர்களுக்கு உதவிடும் பாரிய கடமை அனைவருக்கும் உண்டு.

இதனை செய்ய தவறின் பாதிக்கப்பட்ட மக்கள், சமூகத்தின் மீது கோபம் கொள்வார்கள் அதன் விளைவு விபரீதமாகும். எனவே தமிழ் மக்களின் நிலையான வாழ்வாதார நிலைப்படுத்தலுக்கு சரியான பொறிமுறையூடான தீர்வு அவசியம். எனவே அத்தீர்வுத்திட்டத்தை ஏற்படுத்த அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம்.

எம் இனத்தின் உரிமைக்காக வாழ்ந்த எமது மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்புவதும், வலுவிழந்த மக்களை தூக்கி விடுவதும் புலம் பெயர்ந்த மக்களாகிய எமது கடமை எனவே வரும் ஆண்டை எமது மக்களை மீட்கும் ஆண்டாக வரவேற்போம்.

குறிப்பு: வரும் 2012ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் இரு தேர்தல்கள் நடைபெறவுள்ளது எனவே பிரான்ஸ் குடியுரிமை பெற்ற அனைத்து மக்களையும் எதிர் வரும் 31.12.2011க்கு முன் வாக்காளர் டாப்பில் பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்.

அனைத்து மக்களும் கல்வியில் முன்னேறி, வறுமையின்றி சுயமாக வாழ எமது நல்வாழ்த்துக்கள்.

நா. பாலச்சந்திரன்

உள்துறை அமைச்சர்

நாடுகடந்த தமிழீழ அரசு

Thursday, December 15, 2011

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்தித்தளத்தினை பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தொடக்கி வைத்தார் !

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்தித்தளமான www.naathamnews.com இணையத்தளத்தை பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தொடக்கிவைத்தார். நா.த.அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ மூன்றாவது பாராளுமன்ற அமர்வு அமெரிக்காவில் இடம்பெற்று வருகின்றது. இந்த அமர்வின் போதே நாதம் செய்திகள் இணையத்தளத்தை பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தொடக்கிவைத்தார்.



நாதம் செய்தித்தளத்தில் நா.த.அரசாங்கம் உத்தியோகபூர்வ செய்திகள் மற்றும் அறிக்கைகளை அனைவரும் பார்வையிடலாம். இதேவேளை தமிழர் நலனை முன்னிறுத்திய பிற செய்திகளும் இத்தளத்தில் இணைக்கப்படும் என தகவல்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நா.த.அரசாங்கத்தின் தகவல்துறை அமைச்சகத்தின் செயற்த்திட்டங்களின் விரிவாக்கத்தின் ஒரு கட்டமாக நாதம் தகவல் இணையம் ( Naatham Infos Network) பதிவு செய்யப்பட்ட நிறுவனமாக இயங்கவுள்ளது.

Sunday, November 27, 2011

நமது தேசம் நிச்சயம் சுதந்திரக்காற்றைச் சுவாசித்து நிற்கும் – மாவீரர் தின செய்தியில் பிரதமர்!

இன்று தமிழீழ தேசிய மாவீரர் நாள்! தமிழீழ விடுதலை என்ற புனித இலட்சியத்தினை தமது இதயக்கூட்டில் சுமந்தவாறு நமது தேசமெங்கும் களமாடித் தமது குருதியால் தமிழீழத் தேசத்தின் எல்லைகளை வரைந்த நமது தேசத்தின் புதல்வர்களின் நினைவுநாள்!

விடுதலைப்போராட்டம் என்பது நெருப்பாற்றைக் கடப்பது போன்றது என்ற நமது தேசியத்தலைவரின் வார்த்தைகளுக்கு இணங்க தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம்; சந்தித்;த பல நெருப்பாறுகளை தமது அளப்பரிய வீரத்தாலும் ஈகத்தாலும் தாண்டி முன்னகர்ந்த அற்புதமான மனிதர்களை நாம் வணங்கும் நன்நாள்.

மாவீரர்கள் நமது தேசத்தின் இருளகற்ற ஓயாது ஒளிர்ந்த ஒளிவிளக்குகள்.

தமது அற்புதமான வாழ்வினூடாகவும் வீரச்சாவினூடாகவும் இவர்கள் தமிழீழ தேசத்தின் சுதந்திர வேட்கையினை உணர்த்தி நின்றார்கள். உலகப்பந்தில் தமிழீழ தேசத்தின் புள்ளியினைக் கோடிட்டுக் காட்டினார்கள்.

சின்னஞ் சிறிய தமிழீழத் தேசம் தனது விடுதலைக்காக, கௌரவமான, பாதுகாப்பான, சமத்துவமான வாழ்வுக்காக எத்தகயை பெரும் விலைகளையும் கொடுக்கத் தயாராக இருந்தது என்பதனை நமது மாவீரர்கள் உலக வரலாற்றுப் புத்தகத்தில் பதிவு செய்து நின்றார்கள்.


மாவீரர்களுக்குரிய இந் நாள் நமது தேசத்தின் வீர வரலாற்றின் நினைவுநாள். நமது தேசத்தின் அதி உயர்ந்த பெருமைக்குரிய நாள். மாவீரர் ஈகத்தினை கனத்த நெஞ்சங்களுடன் நினைவுகூர்ந்து அவர்கள் உள்ளுணர்வுகளை நமக்குள் நாமே ஆழமாக உள்வாங்கிக் கொள்ளும் நாள்.

தமிழீழ விடுதலை என்ற நமது இலட்சியக் கனலை நமக்குள் நாமே எரிய விட்டுக் கொள்ளும் நாள். இம் மாவீரர்களை ஈழத்தமிழர் தேசம் மட்டுமல்ல தமிழகம் மற்றும் உலகப் பரப்பெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் இன்றைய மாவீரர் நாளில் வணங்கி நிற்கிறார்கள்.

மாவீரர்கள் நமது சிறிய தேசத்தின் விடுதலை உணர்வின் குறியீடு. அடக்கு முறைக்கு அடிபணிய மறுத்த அளப்பெரும் வீரத்தின் குறியீடு. தன்னலமற்ற ஈகத்தின் குறியீடு. உலகின் பெரும் சக்திகளின் எதிர்ப்புக்கும் மத்தியிலும் தனது சக்தியெல்லாவற்றையும் திரட்டிப் போராடிய நமது தேசத்தின் பெருமையின் குறியீடு.

இந்தக் குறியீடு, இக் குறியீட்டின் ஆன்மீகசக்தி இன்று சிங்களத்தை அச்சுறுத்துகிறது. ஈழத் தமிழர் தேசத்தை சிங்களமயமாக்கும் தமது திட்டத்துக்கு மாவீரர்களின் நினைவுகள் தடையாக அமைந்து விடுமென அஞ்சுகிறது. தமிழீழம் என்ற ஈழத் தமிழர் தேசத்தின் அரசியல் பெருவிருப்பினை மாவீரர் என்ற குறியீடு உயிர்ப்பாகப் பேணி விடுமோ என்று பதைபதைக்கிறது.

இதனால் மாவீரர்கள் துயில்வதற்காக அமைக்கப்பட்ட துயிலும் இல்லங்களை அழித்துச் சிதைத்தது மட்டுமன்றி மாவீரர் நினைவுகளை மக்கள் மத்தியில் இருந்து அகற்றி விடுதவற்கு சிங்களம் பகீரத முயற்சி எடுக்கிறது.மாவீரர் நினைவாக ஆலயங்களில் பூசைகள் வழிபாடுகள் நிகழ்ந்து விடுமோ என அந்தரிக்கிறது. மாவீரர்களுக்காக மக்கள் விளக்கு வைத்து வழிபட்டு விடுவார்களோ எனப் பதைபதைத்து மக்களை அச்சுறுத்துகிறது.


மாவீரர் நாளாகிய இன்று நமது தாயக மண்ணில் ஆலயங்களில் ஒலிக்கும் ஒவ்வொரு மணிஒலியிலும் நமது மக்கள் எம் மாவீரர் முகங்களைக் காண்பார்கள். மக்கள் தமது வீடுகளிலும் கோவில்களிலும் ஏற்றும் ஒவ்வொரு தீபத்திலும் நமது மாவீரர்கள் ஒளிர்வார்கள். எத்தகைய இராணுவ அச்சுறுத்தல்கள் ஊடாகவும் நமது மக்களின் மனக்கோவில்களில் விரியும் மாவீரர் நினைவுகளை சிங்கள இராணுவத்தால் அகற்றி விடமுடியாது.


மாவீரர் நினைவுகள் நமது மக்களுக்கு, தேசத்துக்கு என்றும் காவலாகவே இருக்கும். அந்நினைவுகள் தான் விடுதலை இலக்கு நோக்கி நமது தேசத்தை வழி நடாத்தும்.

அன்பான மக்களே!

ஈழத் தமிழர் தேசம் இன்று ஒரு முக்கியமான வரலாற்றுக்கட்டத்தில் நிற்கிறது. 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையுடன் ஈழத் தமிழர் தேசத்தின் உரிமைக்குரலை நசுக்கி விடலாம் என்ற சிங்களத்தின் திட்டம் தோல்வியடைந்து வருகிறது.

ஈழத் தமிழர் தாயகத்தில், தமிழர் அடையாள அரசியலை அழித்து சிறிலங்கா அடையாள அரசியலை நடைமுறைப்படுத்தும் சிங்களத்தின் முயற்சி வெற்றி பெறவில்லை. இராணுவ அச்சுறுத்துல்களுக்கும் அரசின் ஆசைவார்த்தைகளுக்கும் மத்தியிலும் தாயகத் தமிழ் மக்கள் சிங்களத்திடம் அடிபணியவில்லை.

போதிய அரசியல் வெளி இல்லாத காரணத்தால் தமது சுதந்திரவேட்கையினை தமக்குள் புதைத்து வைத்திருந்தாலும் தேசம் என்ற தகைமைக்குரிய மக்களாகவே தாயக மக்கள் தமது அரசியல் முடிவினை எடுத்து வருகிறார்கள். புலம் பெயர் தமிழ்மக்கள் தமக்குரிய அரசியல்வெளியினைப் பயன்படுத்தி ஈழத் தமிழர் தேசத்தின் சுதந்திரவேட்கையினை வெளிப்படுத்துவதுடன் இனப்படுகொலை புரிந்த, இன்றும் புரிந்து வருகின்ற சிங்கள ஆட்சியாளர்களைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


தாயகத்திலும் புலத்திலும் வாழும் ஈழத் தமிழ் மக்களை உள்ளடக்கிய ஈழத் தமிழர் தேசம் தனது அரசியல் உரிமைகளை வென்றெடுப்பது எவ்வாறு?

ஈழத் தமிழர் தேசத்தின் அரசியல் பெருவிருப்பான, நமது மாவீரர்களின் இலட்சியக்கனலான தமிழீழத் தனியரசு குறித்து முன்னேறுவது எப்படி?

இதனைக் களமும் புலமும் இணைந்தபடி சாத்தியப்படுத்துவது எவ்வாறு?

தற்போதய சூழலில் ஈழத் தமிழர் தேசம் அனைத்துலக ஆதரவினைத் தனது பக்கம் வென்றெடுக்கும் நகர்வினை அரசியல்ரீதியாகவும் இராஜதந்திர ரீதியாகவும் மேற்கொள்ளவேண்டியுள்ளது. அனைத்துலக அரசுகளை ஈழத் தமிழர் தேசம் தர்மம், நீதி, நியாயம் என்ற தார்மீக மொழிகளில் மட்டும் பேசி வென்றெடுக்கமுடியாது. சுயநலன்கள் என்ற அச்சில் சுழலும் இன்றைய உலக ஒழுங்கு தர்மத்தின் மொழிகளுக்கு கட்டுப்படுவதில்லை.


இதனால், அனைத்துலக சமூகத்தினை நமது பக்கம் வென்றெடுப்பதற்கு பலமிக்க அனைத்துலக அரசுகளின் நலன்களுடனும் நிலைப்பாடுகளுடனும் ஈழத் தமிழர் தேசத்தின் நலன்களையும் நிலைப்பாடுகளையும் பொருந்தச் செய்ய வேண்டியது அவசியமாக அமைகிறது. அனைத்துலக சமூகத்தின் பார்வையில்;, குறிப்பாக வெவ்வேறு அரசுகளின் பார்வையில் இலங்கைத்தீவில் ஆயுதப் போராட்டம் இல்லாத, அதேவேளை நாடு எவ்வகையிலும் பிரிக்கப்படாத வகையில் ஒரு அரசியல்தீர்வு தமிழர் பிரச்சனைக்குக் காணப்படவேண்டும் என்ற நிலைப்பாடே தற்போதும் உள்ளது.


இங்கு அரசுகள் என்பதனை நான் வலியுறுத்துவதற்குக் காரணம் உண்டு. நீதி தொடர்பாக அரசுகளினதும் அந்தந்த நாட்டு மக்களினதும் நிலைப்பாடுகள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அரசுகள் தமது முடிவுகளை நீதியின் அடிப்படையில் இன்றி நலன்களின் அடிப்படையில் எடுப்பவை. சில சந்தர்ப்பங்களில் நீதியும் பலம் வாய்ந்த அரசுகளது நலன்களும் ஒன்றாகச் சந்திப்பதுமுண்டு.

அரச இயந்திரம் ஆனது ஆடை அணிவதில்லை என்றும் அதனால் அதற்கு வெட்கம் மானம் போன்றவை எதுவும் இருப்பதில்லை என்றும் சிலர் கூறுவார்கள். இத்தகைய அரசுகளைத்தான் இன்று ஈழத்தமிழர் தேசம் தனக்குச் சார்பாக வென்றெடுக்க வேண்டியுள்ளது. 2009ஆம் ஆண்டு ஆயுதங்கள் மௌனிக்கப்படுகின்றன என்று விடுதலைப்புலிகள் அமைப்பு எடுத்த நிலையின்பின் ஈழத்தமிழர் மத்தியில் தாயகத்திலும்சரி புலத்திலும்; சரி மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் அனைத்துமே அரசியல் இராஜதந்திரவழிமுறைகளின் பாற்பட்டுத் தான் அமைந்து வருகின்றன.


இதனால் அனைத்துலகச் சமூகத்தினது ஆயுதப்போராட்டம் தொடர்பான நிலைப்பாட்டுக்கும் ஈழத் தமிழர் தேசத்தின் தற்போதய நிலைப்பாட்டுக்கும் இடையே முரண்பாடுகள் எதுவும் இல்லை. இவை ஒரேபுள்ளியில் சந்திக்கின்றன. ஆனால் தமிழீழத் தனியரசு தொடர்பான விடயத்தில் தமிழீழ மக்களின் அரசியல் பெருவிருப்புக்கும் அனைத்துலக அரசுகளின் நிலைப்பாட்டுக்கும் இடையே முரண்பாடு உள்ளது.

புலத்தில் உள்ள ஜனநாயகவெளியின் காரணத்தால் புலம்பெயர் தமிழ் மக்கள் வாழும் நாடுகள் தமிழீழத் தனியரசுக்கான செயற்பாடுகளைச் சகித்துக் கொள்கின்றன. ஆனால் அவர்களின் தற்போதய எண்ணமெல்லாம் புலம் பெயர் தமிழ் மக்கள் தமது நிலையினை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதாகத்தான் உள்ளது.

விடுதலைக்காகப் பேராடும் ஒரு தேசிய இனம் என்ற வகையில் நமது இலக்கு நோக்கி அனைத்துலகச் சமூகத்தின் ஆதரவினை வென்றெடுக்க நாம் முயலவேண்டுமேயன்றி அனைத்துலக அரசுகளின் நிலைப்பாடுகளுடன் கண்மூடித்தனமான சமரசங்களைச் செய்ய முடியாது. இதனால், அனைத்துலக அரசுகளின் விருப்பங்களுக்குப் பின்னால் நமது தேசங்களின் நலன்களையெல்லாம்; துறந்துவிட்டு நாம் ஓட முடியாது. இதேவேளை ஒரு சிறிய தேசமான நாம் பலம் மிக்க அனைத்துலக அரசுகளிடம் இருந்து அந்நியப்படவும் முடியாது.


இதனாலேதான் மிக நுட்பமான முறையில் நாம் களத்திலும் புலத்திலும் உள்ள நிலைமைகளுக்கேற்ப காய்களை நகர்த்தி இச் சிக்கலைக் கையாள வேண்டியுள்ளது. தமிழீழம் சாத்தியமற்றது என்ற காரணத்தைக்கூறியோ அல்லது பலமுள்ள அரசுகள் அதனை ஏற்றுக் கொள்ளாது என்ற காரணத்தை முன்வைத்தோ தமிழீழ இலக்குக் குறித்து எவரும் தடுமாறக்கூடாது. தடுமாறவும் முடியாது.


ஏனெனில் அனைத்துலக சூழல் என்பது அனைத்துலக அரசுகளின் நிலைப்பாடுகள் என்பன மாற்றத்துக்குள்ளாக முடியாதவை அல்ல. நாம் நமது விடுதலைக்கனலை உயிர்ப்பாக வைத்திருப்பதன் மூலம்தான் மாறிவரக்கூடிய அனைத்துலகச் சூழலை நமது இலக்கு நோக்கிக் கையாள முடியும். அதேவேளை தாயகத்தில் இன்றுள்ள அரசியல்வெளி மறுக்கப்பட்ட சூழலின் காரணமாக தமிழீழத் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட அரசியல் தலைவர்கள் தமிழீழ இலட்சியத்தை தமது நிலைப்பாடாகக் கொண்டு செயற்பட முடியாத நிலை இருப்பதனை நாம் புரிந்து கொள்கிறோம்.

இன்றைய காலகட்டத்தில் அனைத்துலக அரசுகளைக் கையாள்வதில் தாயகத் தலைவர்களுக்கு ஒரு முக்கிய பாத்திரம் உண்டு. தனித் தமிழீழத்தைத் தமது நிலைப்பாடாகக் கொண்டு இவர்கள் செயற்படாத காரணத்தால் அனைத்துலக அரசுகளுடன் உறவுகளை வைத்துச் செயற்படுதல் இவர்களுக்கு ஒப்பீட்டளவில் இலகுவாக இருக்கும். அனைத்துலக அரசுகளும் இதனை விரும்பும்.


இதனை இன்று தாயகத்தில்; தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக் கூடுதலாகச் செய்து வருகிறது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் அனைத்துலக அரச பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை நடாத்துகிறது. இவை ஈழத்தமிழர் தேசத்தின் ஒட்டுமொத்த அரசியல் வியூகத்தின் ஒருபடியாக அமையக் கூடியவை. ஈழத் தமிழர் தேசத்தினது அரசியல் பெருவிருப்பான தமிழீழத்தனியரசுக்கான பயணத்துக்கு இது அவசியமானதும்கூட. அனைத்துலக அரசுகளின் எதிர்பார்ப்புக்கேற்ற வகையில், அரசியல் தீர்வு காணும் விடயத்தில் சிங்களம் ஒரு போதும் ஈழத் தமிழ் மக்களின் குறைந்தபட்ச எதிர்பார்ப்புக்களைக்கூட ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

மகிந்த ராஜபக்ச சிங்களத்தின் சார்பில் முன்வைக்கும் ஒரு நாடு – ஓரு மக்கள் என்ற கொள்கையானது தமிழர்களை பௌத்த சிங்கள மக்களின் விருப்பத்துக்கிணங்க – அவர்கள் தீர்மானிப்பதற்கிணங்க வாழப் பழகிக் கொள்ளுங்கள் என்பதுதான். ஈழத் தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் தம்மை அடையாளப்படுத்துவதும் இவ்வாறு அடையாளப்படுத்துவதற்குரிய தகைமைகளைக் கொண்டிருப்பதும் சிங்களத்துக்கு சிம்ம சொப்பனமாகவே உள்ளது.


இதனால் தமிழர் தேசத்தைக் கரைத்து சிங்களப் பெரும்பான்மைக்குள் விழுங்கிவிடுதவற்கு சிங்களம் திட்டமிட்டுச் செயலாற்றி வருகிறது. இத்தகைய பின்னணியில் ஈழத் தமிழ் மக்களின் தேசியப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காணும் திட்டமோ அல்லது விருப்போ சிங்களத்திடம் இல்லை. மக்கள் ஆணையினைப் பெறுவதற்காக மக்கள் மத்தியில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினால் 2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்கப்பட்ட நிலைப்பாட்டுக்கு அருகில்கூட சிங்கள அரசுடனான பேச்சுவார்த்தைகளில் கூட்டமைப்பால் முன்னேற முடியாது. எனினும் அனைத்துலக சமூகத்தின் ஆதரவினைப் பெறுவதற்காக இவர்கள் தமது முயற்சிகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.


சிங்கள அரசு தமிழ் மக்களின் அரசியல்; தீர்வாகக் குறைந்தபட்ச ஏற்பாடுகளுக்குக்கூடத் தயாராக இல்லை என்பதனை பச்சையாக அனைத்துலகச் சமூகத்தின் முன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோலுரித்துக் காட்டும்போது தமிழீழ மக்களின் பெருவிருப்பான தமிழீழத் தனியரசினைத் தவிர வேறுவழியில்லை என்ற நிலைப்பாடு வலுப்பெறக்கூடிய நிலை ஏற்படும்.

இது அனைத்துலகச் சமூகத்தின் மத்தியில் தமிழீழத் தனியரசு தொடர்பான நமது நிலைப்பாட்டை வலுப்படுத்தும் வாய்ப்புக்களைத் தரும். மேலும், சிங்கள அரசும் அனைத்துலக சமூகமும் தமக்குள் மோதிக்கொள்ளும் நிலையும் சிறிலங்காவில் எதிர்காலத்தில் தோற்றம் பெறும்.

சிறிலங்கா அரசு தற்போது முற்றிப் பழுத்த ஒரு சிங்கள பௌத்த பேரினவாத அரசாக உள்ளது.

சிறிலங்காவின் பாராளுமன்றம், நிர்வாக இயந்திரம், நீதித்துறை, இராணுவக் கட்டமைப்பு, ஊடகங்கள் அனைத்துமே சிங்கள பௌத்த பேரினவாதத்தின் நிலையான தூண்களாக உள்ளன. சிங்கள பேரினவாதத்தின் காவல் பூதங்களாக உள்ளன. ஆதலால் சிங்களத்தின் ஆட்சிபீடத்தில் இருக்கும் எவரும் அல்லது இனிமேல் ஆட்சிபீடம் ஏறும் எவரும் சிங்கள பௌத்தத்தின் உண்மையான சேவகனாகத்தான் இருக்க முடியும்.

முன்னர் இருந்ததைவிட சிங்கள இராணுவம் அரசியல் பலமிக்க அதிகாரக் கட்டமைப்பாக உருப்பெற்றுள்ளது. இத்தகைய சூழலில் மேற்குலகின் எதிர்பார்ப்புக்கேற்ப ஒரு தாராளவாத அரசாக சிறிலங்கா அரசு மாற்றமடையாது. சிங்கள அரசினை மேற்குலகின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப மாற்றுவதற்கு சிங்களத்தலைவர்கள் எவரும் முயன்றால் இவர்களை சிங்கள பௌத்த தேசியவாதம்; அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும். தேர்தல்களில் இவர்களைத் தோல்வியடையச் செய்யும்.

இதனால் சிறிலங்காவை தான் விரும்புகிற ஒரு தாராளவாத அரசாக மாற்றியெடுக்கும் மேற்குலகத்தின் திட்டமும் வெற்றியடையப்போவதில்லை. இதனால் மேற்குலகத்துக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையே ஒரு முறுகல்நிலை வலுவடையக்கூடிய நிலைமைகள் உள்ளன. மேலும் புவிசார் அரசியல் தளத்திலும் சிறிலங்காவில் தமது நலன்களை அடைந்து கொள்ளும் போட்டியில் இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையே ஒருவகைப் பதட்டம் இருக்கிறது.


இலங்கைத்தீவில் சீனாவின் கை ஓங்கி விடக்கூடாது என்பது இந்தியாவினதும் அமெரிக்காவினதும் கூடுதல் அக்கறையாக இருக்கிறது. இந்தப் புவிசார் அரசியல் சார்ந்த முரண்பாடுகள் இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் புவிசார் அரசியலை ஒரு வகைக் கொதிநிலையில் வைத்திருக்கவே வழிகோலும்.

இத்தகைய முரண்பாடுகளின் தர்க்கரீதியான வளர்ச்சிப்போக்கில் ஈழவிடுதலைக்கான கதவுகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் கனிந்து வரும் என நாம் திடமாக நம்புகிறோம். ஈழத்தமிழர் தேசம் தன்வசமிருந்த வன்வலுவினை (Hard Power) இழந்து விட்டிருந்தாலும் தனது ஏனைய வளங்களை ஒருங்கு திரட்டி தனக்கான மென் வலுவினை (Soft Power) சாதுரியமாகப் பயன்படுத்துவதன் மூலம் (Exercising the soft power in a smart way) தனது இலக்கு நோக்கி முன்னேறும் ஆற்றலைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

ஈழத் தமிழர் தேசத்தின் புவியியல் அமைவிடம், தென்னாசியாவின் மாறி வரும் புவிசார் அரசியல், 60 மில்லியன் தமிழகத் தமிழர்கள், 1 மில்லியன் புலத்து ஈழத் தமிழர் சமூகம், அந்தந்த நாட்டு அரசியல்களில் சென்றிணையும் இரண்டாம், மூன்றாம் ஈழத் தமிழர் தலைமுறை, சிறிலங்கா அரசின் மீது விழுந்துள்ள சர்வதேசக் குற்றச் சாட்டுக்கள்;, இராஜதந்திர பாதுகாப்புத் தொடர்பாக மாறிவரும் சர்வதேச சட்ட நிலைப்பாடு, எமது அரசியல் கோரிக்கையின் தார்மீக, சட்ட வலு, சிறிலங்கா அரசின் பேரினவாத நிலைப்பாடு – இவை அனைத்தும் இணைந்த வகையில் ஈழத் தமிழர் தேசத்துக்கு உரிய அரசியல்வலுவைத் தரக்கூடியவை.


தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுதம் தாங்கிய போராட்டமாகப் பரிணாமம் பெற்று வீச்சுடன் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் நமது மாவீரர்களின் அளப்பெரும் வீரத்தாலும் ஈகத்தாலுமே ஈழத் தமிழர் தேசியப் பிரச்சினை அனைத்துலகப் பரிமாணத்தைப் பெற்றுள்ளது. ஒரு நாட்டின் தேசியப்பிரச்சினை என்பது பொதுவாக அந் நாட்டின் உள்நாட்டுப்பிரச்சினையாக மட்டும் இருப்பதில்லை. இது அனைத்துலகப்பரிமாணம் கொண்ட பிரச்சினையாகவே இருப்பதுண்டு.


இந்த வகையில் ஈழத் தமிழர் தேசத்தின் தேசியப்பிரச்சினை இலங்கைத்தீவினுள் மட்டுமே சுருங்கி விடும் உள்நாட்டுப் பிரச்சினை அல்ல. இது ஒரு அனைத்துலகப் பரிமாணம் கொண்ட பிரச்சினை. இதனால் அனைத்துலக சமூகத்தைக் கையாள்வதற்குரிய முறையில் ஈழத்தமிழர் தேசம் ஒரு தெளிவான வெளியுறவுக் கொள்கையினைக் கொண்டிருப்பதும் மிகவும் அவசியம். இத்தகைய ஒரு பின்னணியுடன்தான் நாம் தற்போதய காலகட்டத்து விடுதலைப்போராட்டத்தை அணுக வேண்டும்.


இப் போராட்டத்தில் இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு அமைப்புக்கும் ஒரு பாத்திரம் உண்டு. தாயகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, புலத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், உலகத் தமிழர் பேரவை, தேசிய மக்கள் அவைகள் உட்பட ஒவ்வொரு நாட்டிலும் இயங்கும் அரசியல் முனைப்புக் கொண்ட அமைப்புக்கள் – அவை யாவற்றுக்குமே இன்றைய கால கட்டத்தில் ஒவ்வொரு பாத்திரம் உண்டு.


இந்தப் பாத்திரங்களை ஒவ்வொரு அமைப்புக்களும் தமக்கிடையேயான ஒரு புரிதலுடன் ஏற்றுக்கொண்டு அங்கீகரித்தலும் ஒரு பொது மூலோபாயத்தின் அடிப்படையில் பொது உடன்பாட்டுக்கு வருதலும் காலத்தின் தேவையாகும். இவ் விடயத்தில் தாயகத்தில் உள்ள அமைப்புக்களும் புலத்தில் இயங்கும் அமைப்புக்களும் ஒரு மூலோபாயத்தின் அடிப்படையில் அமைந்த வெவ்வேறு வேலைத்திட்டங்களைக் கொண்டிருக்கலாம்.

ஆனால் நாம் சென்றடைய வேண்டிய இடம் தொடர்பாக நமக்குள் ஒரு தெளிவு இருக்க வேண்டும். இந்தத் திசையினை நமது மாவீரர்கள் நமக்குள் காட்டி நிற்கிறார்கள். மாவீரர்கள் காட்டி நிற்கும் அந்த இலக்கு நோக்கி எமது போராட்டத்தினை இட்டுச் செல்லும் பணிக்கென சென்ற ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு நாட்களின்போது உருவாக்கப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள், புலம்பெயர் தமிழ் உறவுகள் மற்றும் தமிழக உணர்வாளர்கள் எல்லோரது ஆதரவுடனும் எமது அமைச்சுக்களினூடாகவும் வெளியேயும் பல்வேறு முனைகளில் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம். அனைத்துலக அரங்கில் எம்மை நிலை நிறுத்துவதும,; அனைத்துலக சமூகத்தை இராஜதந்திர வழிமுறைகளின்படி கையாளுவதும் நாம் கட்டியெழுப்பும் எமக்கான மென்வலுவில் தங்கியுள்ளது. இப்பணியினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தற்போது முதன்மைப் படுத்திச் செயற்பட்டு வருவதோடு இது பற்றிய பரந்த விவாதத்தினை எதிர்வரும் தமது மூன்றாவது அமர்வின் போது மேற்கொள்ளவும் இருக்கிறது.

அன்புக்குரிய மாவீரர் பெற்றோரே! குடும்பத்தினரே!!


நமது தேசம் மாவீரர்கள் தேசம். நமது தேசத்தின் உன்னதமான மனிதர்களான உங்கள் பாசத்துக்குரிய பிள்ளைகளின், உறவுகளின் பிரிவுத்துயரில் தமிழர் தேசமே மூழ்கி நிற்கிறது. சோகத்தில் துவண்டு விடாமல் தமிழீழ விடுதலை இலக்கு நோக்கிப் பயணிக்கும் உறுதியினையும் மாவீரர் நினைவுகள் நமக்குத் தருகின்றன.

தாயகத்திலே உங்கள் பிள்ளைகளுக்காக, நம் உறவுகள் ஒரு விளக்கு ஏற்றி வைக்கும் உரிமைகூட உங்களுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது. தேசத்தின் விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த அனைவரையும் ஒரே நாளில் நினைந்து வணங்கி உறுதிபெறும் ஒரு பண்பாட்டு நிகழ்வாக மாவீரர்நாள் அமைந்து வந்தது. இந்தப் பண்பாட்டுவெளியினையும் சிங்களம் நம்மிடம் இருந்து பறித்திருக்கிறது. தங்கள் பிள்ளைகள், உறவுகள் துயில்வதற்கான இல்லங்களும் சின்னாபின்னப் படுத்தப்பட்டுள்ளன.

ஆக்கிரமிப்பாளனின் கால்கள் பட்டு நமது தாயக தேசம் அசிங்கப்பட்டுக் கிடக்கிறது. உங்கள் பிள்ளைகளுக்காக, உறவுகளுக்காக நமது தேசத்தின் மாவீரர்களுக்காக தாயக மக்கள் நிச்சயம் ஒரு விளக்கினைத் தமது வீடுகளில் ஏற்றுவார்கள். தமிழீழ தேசத்தின்; ஆலயங்களிலும் கோவில்களிலும் ஒலிக்கும் மணி ஒலிகள் நிச்சயம் உங்கள் பிள்ளைகளின் உறவுகளின் பெயர் சொல்லும்.

நீங்களும் நமது தேசத்தின் மதிப்புக்குரியவர்களாக எமது நெஞ்சங்களில் இருப்பீர்கள்.

இன்று சுவிஸ் நாட்டில் கட்டியெழுப்பப் பட்டுள்ள மாவீரர் நினைவாலயம் புலத்திலே உங்கள் பிள்ளைகளுக்காக இனிமேல் எடுக்கப்படவிருக்கும் நினைவாலயங்களுக்குக் கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளது. உங்கள் பிள்கைளகளின், உறவுகளின் கனவுகள் நிச்சயம் நனவாகும்.
அன்பான மக்களே!

‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்: ஆனால் மறுபடியும் தர்மம் வெல்லும்’ என்பார்கள். தற்போது தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வியுள்ளது. இது நிரந்தரமானதல்ல. தர்மம் மறுபடியும் நிச்சயம் வெற்றி பெறும்.தர்மம் வெற்றிவாகை சூடும் போது இன்று நமது மண்ணை ஆக்கிரமித்து நிற்கும் ஆக்கிரமிப்பாளர்கள் நமது மண்ணை விட்டு அகன்றிருப்பார்கள்.

நமது தேசம் நிச்சயம் சுதந்திரக்காற்றைச் சுவாசித்து நிற்கும். இது நாம் கண்டு நிற்கும் கனவு மட்டுமல்ல. எதிர்காலத்தில் நிதர்சனமாகப் போகும் வரலாற்றின் சாத்தியப்பாடு. இந்ந நிலையை உருவாக்கி நமது மாவீரர் நினைவுச் சின்னங்களை நமது மண்ணில் நாம் மீளக் கட்டியெழுப்புவோம்.

சிங்களத்தால் சிதைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தையும் மீண்டும் புத்துயிர் பெற வைப்போம். தமது கனவுகள் நனவாகி விட்டன என்ற நிறைவுடன் விடுதலையடைந்த ஈழத் தமிழ்ப் பூமியில் நமது மாவீரர்கள் அமைதியாக உறங்குவார்கள். உலகின் ஏனைய சுதந்திர மக்கள் போல நமது மக்களும் சுதந்திரமாக கௌரவமாக, பாதுகாப்பாக, சமத்துவத்துவத்துடன் வாழ்வார்கள்.

இந் நிலை உருவாகும் வரை நாம் நமது இலட்சியப்போராட்டத்தினை ஓயாது முன்னெடுப்போம் என நமது மாவீரர்கள் நினைவுடன் உறுதியெடுத்துக் கொள்வோமாக!

விசுவநாதன் ருத்ரகுமாரன்

பிரதமர்.

Wednesday, November 16, 2011

ஒருங்குபட்ட ஏற்பாடுகளின் கீழ் மாவீரர்நாள்: பொது உடன்பாட்டை ஏற்படுத்தும் முயற்சிக்கு ஆதரவு வழங்குங்கள்!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தற்போதய காலகட்டம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டம் ஆகும். இக் காலகட்டம் ஈழத் தமிழர் தேசம் தனது அரசியல் பெருவிருப்பான தமிழீழத் தனியரசு என்ற கொள்கை நிலையினை உயிர்ப்போடு பேணி அந்த உயரிய இலட்சியத்தை நோக்கித் தொடர்ச்சியாகச் செயற்படும் தீர்மானகரமான காலகட்டம்.

இந்த இலட்சியப்பயணத்தில் நம்மை வழிநடாத்துபவர்கள் நமது மாவீரர்களே.

தமது தன்னலமற்ற ஈகத்தால், அளப்பெரும் வீரத்தால் வரலாற்றுச் சாதனைகளைப் புரிந்து நமது தாயக மண்ணில் ஆகுதியாகிப் போனவர்கள் நமது மாவீரர்கள்.

தியாகதீபம் திலீபனின் வார்த்தைகளில் கூறுவதாயின் மலரும் தமிழீழத்தை வானத்தில் இருந்து பார்ப்பதாக நமக்குக் கூறிவிட்டு நம்மிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டவர்கள் இம் மாவீரர்கள்.

இம் மாவீரர்களை மையமாகக் கொண்டுதான் ஈழத்தமிழர் தேசம் ஒன்றுபட்ட தேசமாக விளங்க முடியும்.

இவர்கள் விட்டுச் சென்ற இலட்சியச்சுவடுகள்தான் நமக்கான வழிகாட்டிகள்.

நமது மாவீர்களின் இலட்சியத்தை முன்னெடுப்பதில் தமிழ்த்; தேசியச் செயற்பாட்டாளர்களுக்கிடையே கொள்கையளவில் மாறுபட்ட கருத்துக்கள் கிடையாது.

அணுகுமுறைகள் சார்ந்து நமக்கிடையே மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். நாம் எல்லோரும் ஒரே அமைப்பாக செயற்பட முடியாமலும் போயிருக்கலாம். ஆனால் இவை அனைத்தும் ஒரு ஜனநாயகச் சூழலில் மிக இயல்பானவை.

நமக்கிடையே இருக்கக்கூடிய எவ்விதமான அணுகுமுறை வேறுபாடுகளும்; நமக்கிடையிலான உரையாடலுக்கூடாகக் கையாளப்படக்கூடியவை. ஆனால் இதற்கெல்லாம் நாம் ஒருவரையொருவர் மதிக்கவும் அங்கீகரிக்கவும் ஏற்றுக் கொள்ளவும் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.

பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, கனடா போன்ற நாடுகளில் இவ் வருட மாவீரர் நாள் நிகழ்வுகளை இரு பிரிவுகளாக நடாத்துவது தொடர்பான தகவல்கள் நம்மையும் நமது மக்களையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளன.

பல மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் மக்களும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை இவ் விடயத்தில் தலையிடுமாறும் ஒருங்குபட்ட ஏற்பாடுகளின் அடிப்படையில் மாவீரர் தின நிகழ்வுகள் நடைபெறுவதற்கு ஆவன செய்யுமாறும் தொடர்ச்சியான வேண்டுகோளை விடுத்து வருகின்றனர்.

இருந்த போதும் நமது மாவீரர் குடும்பநலன் பேணும் அமைச்சின் ஊடாக ஒருங்குபட்ட ஏற்பாடுகளின் அடிப்படையில் மாவீரர் நாள் நிகழ்வுகளை மேற்கொள்ளுமாறு அழைப்பினை விடுத்ததைத் தவிர நாம் மேலதிகச் செயற்பாடுகளில் இதுவரை ஈடுபடவில்லை.

இதற்கு ஒரு முக்கிமான காரணம் இருந்தது.

மாவீரர் நாள் இரண்டு பிரிவுகளாக நடைபெறும் நிலைமை திடீரெனத் தோற்றம் பெற்றதொன்றல்ல. விடுதலை அமைப்பின் இரண்டு கட்டமைப்புக்கள் தாம் ஒன்றாகச் செயற்படுவது தொடர்பாக நீண்டகாலம் பேச்சுக்களில் ஈடுபட்டு அதில் வெற்றியடைய முடியாமல் போனமையின் எதிர்மறைப் பெறுபேறாகவே இந் நிலை தோற்றம் பெற்றுள்ளது.

இவ் இரண்டு கட்டமைப்புக்களிலும் ஒன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்பட்டு வருகிறது என்பது ஊர் அறிந்த விடயம்.

இச் சூழலில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஆக்கபூர்வமான முறையில் ஒருமைப்பாட்டை ஏற்படுத்தல் சாத்தியம்தானா எனும் கேள்வி எமக்கிடையே இருந்தது.

இருந்த போதும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அரசாங்கம் எனும் வகையில் நாம் நமது கடமைகளை மேற்கொள்ளுதல் அவசியமானது என நாம் உணரும் காரணத்தினாலும், இவ் விடயத்தில் மாவீரர் குடும்பங்கள் மற்றும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் ஒருங்குபட்ட முறையில் மாவீரர்நாள் நிகழ்வுகளை நடாத்துவதற்கு வழிகோலும் வகையிலுமான பேச்சுக்களில் உடனடியாக ஈடுபடுவதென நாடு கடந்த தமிழீழ அரசாங்ககத்தின் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இப் பேச்சுக்களை நடாத்துவதற்கென நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாவீரர் குடும்பநலன் Nபுணும் அமைச்சினால் பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, கனடா ஆகிய நாடுகளில் பிரதிநிகள் உடனடியாக நியமனம் செய்யப்படுவார்கள்.

முரண்பட்ட நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் இரண்டு மாவீரர் நாள் ஏற்பாட்டுக்குழுவினர்களுடனும் பேச்சுக்களை மேற்கொண்டு, இம் முரண்பாடுகளுக்கான காரணங்களைக் கண்டறிந்து, இரண்டு பகுதியினருக்கும் ஏற்புடையதான ஒரு பொது ஏற்பாட்டைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் நமது பிரதிநிதிகள் ஈடுபடுவார்கள்.

நமது இம் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவீரர் நாள் ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ள இரு பகுதியினரையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பகிரங்கமாகக் கோருகிறது.

இம் முயற்சிக்கான ஆதரவினை வழங்குமாறு பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, கனடா ஆகிய நாடுகளில் உள்ள பொது அமைப்புக்களையும் ஊடகங்களையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உரிமையுடன் வேண்டிக் கொள்கிறது.

நமது மாவீரர்களின் கனவை நனவாக்கும் நோக்கம் கொண்ட தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரோக்கியமாக அடுத்த கட்டம் நோக்கி நகர்வது ஈழத் தமிழர் தேசத்தின் ஒருமைப்பாட்டான செயற்பாடுகளில் இருந்தே கட்டியமைக்கப்படக் கூடியது.

இதனை உணர்ந்து நாம் அனைவரும் செயற்படவேண்டியது இன்றைய காலத்தின் தேவை மட்டுமல்ல மாவீரர்களுக்கு நாம் செய்யும் உண்மையான வணக்கமாகவும் அமையும்.

விசுவநாதன் ருத்ரகுமாரன்

பிரதமர்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.

Thursday, September 22, 2011

தென் சூடான் - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உயர்மட்டச் சந்திப்பு!

தென் சூடானிய அரசாங்கத்துக்கும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கும் இடையிலான உயர்மட்ட சந்திப்பொன்று ஜெனீவாவில் இடம்பெற்றுள்ளது.இருதரப்பு நல்லுறவுகளை கட்டியெழுப்பும் நோக்கில் இடம்பெற்றுள்ள இச்சந்திப்பு குறித்து, நா.த.அரசாங்கத்தின் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நாடு கடந்த​ தமிழீழ​ அரசாங்கத்தின் பிரதி வெளிவிவகார​ அமைச்சர் மாணிக்கவாசகர .கனகரட்னம், ஜ​.நாவுக்கான​ பிரதிநிதி முருகையா சுகிந்தன் ஆகிய பிரதிநிதிகளுக்கும், ஜரோப்பிய​ ஒன்றியத்திற்கான ​ தென்சூடானிய உயர் ஸ்தானிகர் பிரான்ஸிஸ் நஷாரியோ அவர்களுக்கும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

தென்சூடானினதும், தமிழீழ​ மக்களினதும் இருபக்க​ நலன்கள் குறித்த​ பல்வேறு வகையான​ விடயங்களுடன், மனித​ உரிமைகள் மற்றும் தென்சூடானில் அபிவிருத்தி திட்டங்கள் பற்றியதாகவும் இச்சந்திப்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

எதிர்காலத்தில் இரு அரசாங்களிடையிலான இராஜதந்திர​ உறவுகளை வலுப்படுத்தி கொள்ளவும், தென்சூடானுடனும், சர்வதேசத்துடனும் நல்லுறவுகளை கட்டியெழுப்புவதற்கான​ சாத்தியப்பாடுகள் குறித்தும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டன.

இவ்வாறு நா.த.அரசாங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாதம் ஊடகசேவை

Wednesday, June 15, 2011

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உயர்மட்ட கூட்டம் !

பிரித்தானியாவின் நாடாளுமன்ற வளாகத்தில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உயர்மட்ட கூட்டம் ஒன்று நாளை வியாழக்கிழமை (யூன் 16) இடம்பெற இருப்பதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.சனல்௪ தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களம் ஆவணப்படம், பிரித்தானியா அரசியல் மட்டத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், நா.த.அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள இந்த கூட்டத்தில், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் பங்கெடுக்கின்றனர்.

தமிழினத்தின் மீதான சிறிலங்காவின் போர்குற்றங்கள், இனப்படுகொலை, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் - பிரித்தானியாவில் இருந்து தமிழ் அகதிகள் திருப்பி அனுப்பப்படுதல் தொடர்பிலான விவகாரம் மற்றும் ஈழவிடுதலைப் போராட்டத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வகிபாகம் ஆகிய விடயங்களை முன்னிறுத்தியதாக இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐ.நா. நிபுணர் குழுவினால் பரிந்துரைக்கப்பட்டவாறு, அனைத்துலக நீதி விசாரணை மற்றும் அனைத்துலக பொறிமுறை ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான ஆதரவினையும், இதற்கான அழுத்தம் அரச மட்டத்தில் மேற்கொள்வதற்கு வேண்டப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

நாதம் ஊடகசேவை
தகவல்துறை அமைச்சகம்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.

Friday, June 10, 2011

வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழக சட்டப் பேரவையின் தீர்மானம்! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

தமிழகசட்டப் பேரவையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றச் செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்களை ஈழத் தமிழர் தேசத்தின் சார்பில் வாழ்த்துவதிலும் பாராட்டுவதிலும் நாம் பெருநிறைவடைவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பிரதமர் விசுவாநாதன் ருத்திரகுமாரன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக சட்டப் பேரவையில்; நிறைவேற்றப்பட்டுள்ள இத் தீர்மானம் நடைமுறைப்படுத்தப் படும் வகையில் தமிழகம் தொடர்ந்து செயற்படவேண்டும் என நாம் பணிவுடன் வேண்டுகிறோம் எனவும் தமிழக முதல்வர் இதற்கு ஆவன செய்வார் எனவும் உறுதியாக நம்புவதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வரால் முன்வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா அரசின் மீதான பொருளாதாரத் தடைக் கோரிக்கையை உலக அளவில் மேலும் வலுவூட்டச் செய்வதற்குரிய செயற்பாடுகளை முன்னெடுக்க நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் திட்டமிடுகிறது என்ற செய்தியினை தமிழக முதல்வருக்கும் தமிழக அரசியல் கட்சிகளுக்கும் மக்களுக்கும் இத் தருணத்தில் வெளிப்படுத்த விரும்புகிறோம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் முழுவிபரம் :

தமிழ் மக்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் புரிந்தவர்களை போர்க்குற்றவாளிகள் என அறிவிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையினை வலியுறுத்த வேண்டும் எனவும் தமிழ் மக்கள் சமத்துவமான நிலையில் வாழ்வதற்கான தீர்வு எட்டப்படும்வரை சிறிலங்காவுக்கு எதிரான பொருளாதாரத் தடை விதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்திய மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை கண்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பெருமகிழ்வடைகிறது.

இத் தீர்மானத்தை முன் மொழிந்து, இத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டிய காரணங்களைத் தெளிவாகச் சட்டப்பேரவையில் வெளிப்படுத்தி பேரவையின் அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் இத் தீர்மானத்தை நிறைவேற்றச் செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்களை ஈழத் தமிழர் தேசத்தின் சார்பில் வாழ்த்துவதிலும் பாராட்டுவதிலும் நாம் பெருநிறைவடைகிறோம்.

இத் தீர்மானத்துக்கு ஆதரவளித்த அனைத்துக் கட்சிகளுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதற்கெல்லாம் ஆதாரமாக நிற்கும் தமிழக மக்களின் கரங்களை நாம் நன்றியுணர்வுடன் இறுகப் பற்றிக் கொள்கிறோம்.

தமிழ் நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இத் தீர்மானம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும். ஈழத் தமிழ் மக்கள் தமிழக மக்களின் தொப்புள் கொடியுறவுகள் என்பதனையும் சிங்களம் அவர்களை இனப்படுகொலைக்குள்ளாக்கி, அடக்கி ஒடுக்கி இரண்டாம்தரக் குடிமக்களாக நடாத்தி வருகிறது என்பதனையும், சிங்களத்தைப் பணிய வைக்கக் கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதனைத் தவிர வேறுவழியேதும் இல்லை என்பதனையும் தமிழ் நாட்டு மக்கள் சார்பாக நிறைவேற்றப்பட்டுள்ள இத்தீர்மானம் இந்திய அரசுக்கும் இந்திய மக்களுக்கும் அனைத்துலகத்துக்கும் உணர்த்தி நிற்கிறது. சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஒரு அச்சுறுத்தலாகவும் அமைந்துள்ளது.

இத் தருணத்தில் சிங்கள ஆட்சியாளர்கள் தொடர்பான நமது வரலாற்றுப் பட்டறிவினையும் பதிவு செய்ய விரும்புகிறோம். சிங்கள ஆட்சியாளர்கள் கொடூரமும் சூழ்ச்சியும் மிக்கவர்கள். முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா ஒரு தடவை சொன்னதைப் போல வயிற்றில் குத்துவதாகப் பாசாங்கு செய்து முகத்தில் குத்தக் கூடியவர்கள். தமக்கு அழுத்தங்கள் வரும் போது பணிவது போல நடிப்பதும் வந்த அழுத்தங்களில் இருந்து விடுபட்டதும் துள்ளியெழுந்து மிதிப்பதும் சிங்கள ஆட்சியாளர்களுக்குக் கைவந்த கலை. தம் மீதான அழுத்தத்தை எதிர் கொள்ள தற்போதய சூழலில் சீனாவை வைத்து இந்தியாவினைக் கையாளும் அணுகுமுறையினை சிங்களம் கடைப்பிடித்து வருகிறது. இந்திய மத்திய அரசோ சிறிலங்காவை சிறிய அரசாகக் கருதி அதனைத் தாம் இலகுவாகக் கையாளலாம் என்ற பாணியில் செயற்பட்டு வருகிறது. ஆனால் உண்மையில் சிறிலங்கா அரசை அழுத்தங்கள் இன்றிக் கையாள்வது சாத்தியமானதல்ல. தமிழக முதல்வர் சிறிலங்கா அரசினைப் பேசி வழிக்குக் கொண்டுவர முடியாது என்பதனையும், கடுமையான நடவடிக்கைகள் தேவை என்பதனையும் புரிந்து செயலாற்றியிருப்பது அவரது ஆற்றலையும் ஆளுமையையும் வெளிப்படுத்துகிறது.

தமிழக சட்டப் பேரவையில்; நிறைவேற்றப்பட்டுள்ள இத் தீர்மானம் நடைமுறைப்படுத்தப் படும் வகையில் தமிழகம் தொடர்ந்து செயற்படவேண்டும் என நாம் பணிவுடன் வேண்டுகிறோம். தமிழக முதல்வர் இதற்கு ஆவன செய்வார் எனவும் உறுதியாக நம்புகிறோம்.

போர்க்குற்றம் புரிந்தவர்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உலகளாவியரீதியில் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. தமிழக சட்டப்; பேரவையின் இத் தீர்மானம் நமது முயற்சிகளுக்கு வலுவூட்டும்.

தமிழக முதல்வரால் முன்வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா அரசின் மீதான பொருளாதாரத் தடைக் கோரிக்கையை உலக அளவில் மேலும் வலுவூட்டச் செய்வதற்குரிய செயற்பாடுகளை முன்னெடுக்க நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் திட்டமிடுகிறது என்ற செய்தியினை தமிழக முதல்வருக்கும் தமிழக அரசியல் கட்சிகளுக்கும் மக்களுக்கும் இத் தருணத்தில் வெளிப்படுத்த விரும்புகிறோம்.

நன்றி

விசுவநாதன் ருத்ரகுமாரன்

பிரதமர்

Wednesday, May 18, 2011

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் செயலகச் செய்தி கையளிக்கப்பட்டது !

தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் செல்வி ஜெயலிலாவுக்கு நாடுகடந்த தமிழிழ அரசாங்கத்தின் பிரதமர் செயலகத்தின் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிபீடத்தில் ஏறியிருக்கும் செல்வி ஜெயலலிதா ஈழதமிழர் பிரச்சனை குறித்து கூறிய கூற்றுக்கள் பரவலாக பலரது கவனத்தைப் பெற்றிருக்கின்றது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் செயலகத்தின் கடிதத்தின் முழுவிபரம் :

நீயு யோர்க் 16, 2011

மதிப்புக்குரிய தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு! நடைபெற்று முடிவடைந்த சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியடைந்து தமிழ்நாட்டின் முதல்வராக, தாங்கள் பதவியேற்கும் இத்தருணத்தில் ஈழத் தமிழ் மக்கள் சார்பில் தங்களை வாழ்த்துவதிலும் பாராட்டுவதிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பெருமகிழ்வடைகிறது.

ஈழத் தமிழர் தேசம்; தமது தாயகத்தை பாதுகாத்துக் கொள்ளவும், கௌரவமான வாழ்வை மீட்டெடுத்துக் கொள்ளவும், தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் கொடுமைகளுக்கும் நீதி கோரவும் சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்ளை எதிர்த்து ஜனநாயக வழியில், அரசியல் இராஜதந்திர வழிமுறைகளில் போராடும் இன்றைய தருணத்தில் தங்களது வரலாற்று வெற்றி ஈழத் தமிழ் மக்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தினையும் தந்திருக்கிறது.

இலங்கைத்தீவில், ஈழத் தமிழர் தாயகத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு தமது அரசியல் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான அரசியல்வெளி முற்றாக மறுக்கப்பட்டு உள்ள ஒரு சூழலில் இலங்கைத்தீவுக்கு வெளியே புலம் பெயர்ந்து வாழும்; ஈழத் தமிழ் மக்களாகிய நாம் எமது அரசியல் பெருவிருப்பாகிய சுதந்திரத் தமிழீழ அரசினை உருவாக்கிக் கொள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை உருவாக்கியுள்ளோம். ஒரு தேசத்துக்குரிய தகைமை கொண்ட ஈழத் தமிழினம் சிங்கள பேரினவாதத்தின் திட்டமிட்ட இனஅழிப்பு முயற்சியிலிருந்து நிரந்தரப் பாதுகாப்பினைப் பெற்றுக் கொள்வதற்கு தனியரசினை அமைப்பதைத் தவிர வேறு வழியேதுமில்லை என்பதனை வரலாறு எமக்கு உணர்த்தி நிற்கிறது.

உலகெங்கும் சிதறிப்பரவி வாழும் ஒரு மில்லியன் எண்ணிக்கை கொண்ட ஈழத் தமிழ் புலம் பெயர் மக்களும் உலகின் 80 மில்லியன் தமிழ் மக்களும் ஒருங்குகூடிச் செயற்படுவதன் மூலம் இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் வாழ நாம் வழிவகுக்க முடியும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் நாம் செயற்பட்டு வருகிறோம்.

இலங்கைத் தீவில் சிங்கள இனவாதத்தின் திட்டமிட்ட இனஅழிப்பு நடவடிக்கைகளிலிருந்து தனது இருப்பினை பாதுகாத்துக்கொள்வதற்காக தமிழினம் நாளும் நடாத்தும் போராட்டத்தினை தாங்கள் நன்கறிவீர்கள். தமிழர் தாயகம் சிங்கள ஆக்கிரமிப்புப் ப+மியாக மாற்றப்பட்டிருப்பதையும், அங்கு தமிழர் வாழ்வு பெரும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்டிருப்பதையும் பல தடவைகள் வெளிப்படுத்தியும் உள்ளீர்கள்.

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின் போது வெற்றி பெற்று தங்கள் கட்சியின் ஆதரவில் மத்தியில் அரசாங்கம் அமையும் சூழ்நிலை தோன்றின் ஈழத்தமிழரின் சுதந்திரமான பாதுகாப்பான வாழ்வுக்கு சுதந்திரத் தமிழீழம் அமைவதுதான் ஒரேவழி என மத்திய அரசுடன் வாதாடி அதனை வென்றெடுப்பேன் எனத் துணிச்சலுடன் தெரிவித்திருந்தீர்கள். தற்போது சட்டசபைத் தேர்தலில் பெருவெற்றி பெற்ற பின்னர் போர்க்குற்றவாளியான சிறிலங்கா ஜனாதிபதியினையும் அவர்தம் தரப்பையும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தவும்,

சிறிலங்கா மீது பொருளாதாரத் தடையினைக் கொண்டுவரவும் இந்திய மத்திய அரசினை வலியுறுத்துவேன் என மிக உறுதிபடக் கூறியுள்ளீர்கள். வேறு பல அரசியல் தலைவர்கள் போல் சொல்லொன்று செயலொன்றாக இல்லாமல் - கருத்தை துணிச்சலுடன் சொல்வது மட்டுமன்றி அதனை செயல்படுத்தும் ஆற்றலும் கொண்டவர் தாங்கள் என ஈழத் தமிழ் மக்கள் நம்புகிறார்கள். இதனால் தாங்கள் முதல்வராவதை மகிழ்வுடன் வரவேற்கிறார்கள்.

இலங்கையில் சிங்கள இனவாதம் தமிழர்களை சமத்துவமாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்கான வாய்ப்பெதனையும் கடந்த காலங்களில் விட்டு வைத்ததில்லை. இனியும் விட்டு வைக்கப் போவதில்லை. தமிழர்களின் அடையாளத்தை அழித்து, மெல்ல மெல்ல அவர்களை சிங்கள இனத்துடன் கரையப் பண்ணி இனக் கபளீகரம் செய்யும் முயற்சியினை சிங்கள அரசு மேற்கொண்டு வருகிறது. ஈழத் தாயகத்தில் உள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளின் ஊடாகத் தமிழரின் பாதுகாப்பான, கௌரவமான வாழ்வுக்கான ஏற்பாடு ஒன்றை எட்டுவதற்கு எடுக்கும் முயற்ககைளைச் சந்தர்ப்பம் பார்த்து உரிய நேரத்தில் சிங்கள இனவாதம் தனது இரும்புச் சப்பாத்துக்களால் துவம்சம் செய்து விடும். இந்த நிலை தமிழீழத் தனியரசினைத் தவிர வேறு மார்க்கம் ஏதுமில்லை என்பதனை உலகுக்கு முரசறைந்து சொல்லும்.

இத்தகைய ஒரு போக்கில் வரலாறு முன்னேறும் தருணத்தில் தாங்கள் தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருப்பது தமக்கு ஒரு பாதுகாப்புக் கவசமாக அமையும் என ஈழத் தமிழ் மக்கள் கருதுகிறார்;கள். தாங்கள் முதல்வராக இருந்த போதுதான் ஈழத் தமிழ் மக்களின் கௌரவமான வாழ்வும் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டது என்பது வரலாற்றில் நிலைபெறும் வகையில் தாங்கள் செயற்பட வேண்டும் என்பதே எமது விருப்பாகும்.

தங்கள் தலைமையில் அமையும் தமிழக அரசாங்கத்தின் ஆட்சிக் காலம் தமிழக மக்களுக்கு மட்டுமல்ல ஈழத் தமிழ் மக்களுக்கும் வசந்தத்தைத் தரும் காலமாக அமையட்டும் என வாழ்த்தி நிற்கிறோம். நன்றி.

விசுவநாதன் ருத்ரகுமாரன்

பிரதமர்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Sunday, May 01, 2011

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கையெழுத்துப் போராட்டம் உத்தியோகபூர்வமாக தொடங்கியது!

ஐநா நிபுணர் குழுவின் பரிந்துரைகளை முன்னிறுத்தி அனைத்துலகரீதியிலான கையெழுத்துப் போராட்டம் உத்தியோகபூர்வமாக தொடங்கியது.ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழுகின்ற நாடுகளிலும் மற்றும் தமிழகம், சிங்கப்பூர், மலேசியா, தென்னாபிரிக்கா உட்பட தென்சூடான் உகண்டா சைப்பிரஸ் என உலகின் பல பாகங்களிலும் இந்தக் கையெழுத்துப் பேராட்டம் நடைபெறுகின்றது.

சிறிலங்காவில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், போர்குற்றங்கள் ஆகியனவற்றுக்கு பொறுப்பான அரசியல், இராணுவ தலைவர்களை விசாரிக்க, சர்வதேச நீதிமன்றத்தின் வழக்குத் தொடுநருக்கு பாரப்படுத்துமாறு, தங்களைக் கேட்டுக் கொள்கிறோம் என ஐநாவின் செயலாளர் நாயகம் பான் கீ முன் அவர்களுக்கு இந்த கையெழுத்துப் பிரிதிகள் அனுப்பி வைக்கப்படவுள்ளன.

இது குறித்து அமைச்சர் டிலக்சன் மொறிஸ் தெரிவிக்கையில் ஐநாவின் நிபுணர் குழுவின் அறிக்கைக்கு சிறிலங்கா ஒரு அரசாங்கமாக தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தி வரும் நிலையில் நாடுகளைக் கடந்த வாழும் ஈழத்தழிழர்களும் ஒரு அரசாங்கமாக தங்களுடைய பலத்தைக் காட்ட வேண்டியது தருணமிது.

ஒரு உத்தியோகபூர்வ ஆவணமாக ஐநாவிடம் கையளிக்கப்படும் இந்த இக்கையெழுத்துப் போராட்டமென்பது, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சனநாயகபூர்வமாக வெளிப்படுத்தி நிற்கின்ற, தாயகம்-தேசியம்-தன்னாட்சி எனும் ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசைகளையும் அது கூறிநிற்கின்றது என குறிப்பிட்டார்.

அனைத்துலகரீதியாக, ஒருங்கிணைந்த வகையில் நடைபெறும் இந்தக் கையெழுத்துப் போராட்டத்தில், தொண்டர்களாக பங்கெடுக்க விரும்புவோர்,நாடுகடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர்களிடமோ அல்லது warcrime@tgte.org இந்த மின்னஞ்சல் முகவரிக்கோ தொடர்பு கொண்டு விபரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

தமிழர்களும், தமிழர்கள் அல்லாதோரும் கையொப்பம் இடலாம் என்பதோடு வயதெல்லையும் அற்றது. நூறு கையெழுத்துக்களை பெற்றுக் கொள்ளும் வகையில் ஏழு பக்கங்களை கொண்டதாக கையொப்ப கோவை அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ் சமூக அரசியல் பொது அமைப்புக்கள் அனைத்தும் இந்தப் கையெழுத்துக் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முன்வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Sunday, March 27, 2011

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை சீர்குலைக்க லண்டனுக்கு விரையும் சிறிலங்கா புலனாய்வாளர்கள்!

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளும் அதற்கான ஆதரவும் பெருகிவரும் நிலையில் அதனை சீர்குழைக்கும் நோக்கில் சிறிலங்காப் புலனாய்வாளர்கள் லண்டனுக்கு விரைவதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ் மக்கள் தங்களுடைய லட்சியமான தமிழீழக் கோட்பாட்டை கைவிட்டு ஒன்றுபட்ட இலங்கைக்குள் சிறிலங்கா அரசுடன் கூட்டு அரசியலுக்கு தயாராகிவிட்டனர் எனும் சிறிலங்கா அரசின் சர்வதேச பிரச்சாரங்களுக்கு உலக அரங்கில் பெரும் சவாலாக புலம் பெயர் தமிழர்களும் அவர்களுக்கு தலைமை தாங்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் பெரும் இடைஞ்சலாக அமைவதாக குறிப்பிட்டிருக்கும் கொழும்பு ஊடகம் இதனை தடுத்து நிறுத்தும் முயற்சியில் தீவீரமாக இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கேபியை முன்னிறுத்தி புலம்பெயர் தமிழர்களை குழப்ப எடுத்து வரும் முயற்சிகள் மறைமுகமாக மேற்கொண்ட சிறிலங்காப் புலனாய்வுத்துறை இப்போது நேரடியாகவே புலத்தில் கால்பதிக்க தொடங்கியுள்ளது.

முள்ளிவாய்காலுக்கு பின்னர் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் ஏற்பட்ட குழப்பங்களை தனக்கு சாதமாக பயன்படுத்த சிறிலங்கா அரசு முனைந்து வரும் நிலையில் குழப்பங்களை கடந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இராஜதந்திர செயற்பாடுகள் வேகம் பெறுகின்றமை பெரும் நெருக்கடியை சிறிலங்காவுக்கு தோற்றுவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது.

புலம்பெயர் நாடுகளில் ஏற்பட்டுள்ள சிறு சிறு பிளவுகளை ஊதிப் பெருப்பித்து தமிழ் மக்களை மேலும் குழப்ப நிலையில் வைத்திருக்க அது முனைவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனொரு அங்கமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் யாப்பினை ஏற்றுக் கொள்ளாமல் வெளியில் நின்று அரசியல் செய்யும் சிறுகுழுவை தனது நிகழ்சி நிரலுக்கு ஏற்றவாறு பயன்படுத்த சிறிலங்கா அரசு முனைகின்றது.

அமெரிக்காவைத் தளமாக கொண்டு இயங்கும் சிறிலங்கா அரசின் பரப்புரை ஊடகமாக பொஸ்ரன் நியூஸ் எனும் இணையம் இதனை தெளிவாக காட்டியுள்ளது.

வெளியில் நின்று அரசியல் செய்யும் சிறுகுழுவை தனக்கு சார்பாக பயன்படுத்தும் நோக்கில் மறைமுக ஏஜெண்டுகள் மூலம் அவர்களை தொடர்பு கொள்வதாக தெரியவருகின்றது.

ஏற்கனவே வரதராஜப்பெருமாளின் ஐரோப்பிய பயணத்தில் திட்டங்களைத் தீட்டியதாக ஏற்கனவே பொஸ்ரன் நியூஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை சீர்குலைக்க நினைக்கும் சிறிலங்கா அரசுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துடன் முரண்பிடிக்கும் இச்சிறுகுழுவின் செயற்பாடுகள் வரப்பிரசாதம் என குறிப்பிட்டிருக்கும் பொஸ்ரன் நியூஸ் இதனை தீவிரப்படுத்து திட்டங்களை வகுத்துள்ளது.

மார்ச் 27 ஞாயிற்றுக்கிழமை லண்டனில் ஒன்று கூடவுள்ள இந்த சிறுகுழுவின் கூட்டத்தில் சிறிலங்காப் புலனாய்வுத்துறையின் மறைமுக ஏஜெண்டுகளும் பங்கெடுக்கவே லண்டனுக்கு புலனாய்வாளர்கள் விரைந்துள்ளதாக கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் புதனன்று வெளியிட்டுள்ள அறிக்கை தமிழ் மக்களின் மத்தியில் தெளிவான நிலைப்பாட்டை எட்டியுள்ள நிலையில் அதனை திசைதிருப்பும் நோக்கில் ஹபரண காட்டுப்பகுதியில் சிறிலங்காப் படையினர் மீது தாக்குல் என செய்தி திட்டமிட்டு இந்த மறைமுக புலனாய்வு ஏஜெண்டுகளால் பரப்பபட்டிருக்கலாம் என நம்பகமான செய்திகள் தெரிவிக்கின்றன.

Thursday, March 24, 2011

மக்கள் நலனை மட்டும் முன்னிறுத்தியதாக நமது செயற்பாடுகள் அமையட்டும்! ஒருங்கிணைந்து செயற்பட முன்வருமாறு பிரதமர் வேண்டுகோள்!!

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின் தமிழீழ மக்களின் அரசியல் பெருவிருப்பான சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசுக்கான போராட்டத்தை அரசியல் இராஜதந்திர வழிமுறைகளினால் முன்னெடுக்க நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் திட்டத்தை நாம் முன்னெடுத்ததை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்பதனை வடிவமைப்பதற்காக மதியுரைஞர் குழுவும், திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நாடு தழுவிய அளவில் செயற்பாட்டுக் குழுக்களும் எனது ஒருங்கிணைப்பில் அமைக்கப்பட்டு - 12 நாடுகளில் தேர்தல்கள் நடாத்தப்பட்டு, உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு - நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை முள்ளிவாய்க்கால் பேரவலம் நடைபெற்ற ஓராண்டு காலகட்டமாகிய 2010 ஆண்டு மே மாதம் 17-19 நாட்களில் அமெரிக்காவின் அரசியலமைப்பு எழுதப்பட்ட பிலடெல்பியா நகரில் அமைந்திருந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க மண்டபத்தில் கூட்டப்பட்டதனையும் நீங்கள் அறிவீர்கள்.

முதலாமது அமர்வின் இறுதியில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பை உருவாக்குவதற்காக அரசவை அரசியல் நிர்ணய சபையாக மாற்றியமைக்கப்பட்டது. செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக செயற்குழுக்களும் அமைக்கப்பட்டன. அரசியலமைப்பின் முன்வரைவினை விவாதித்து ஏற்றுக்கொண்டு – அரசியலமைப்பின் அடிப்படையில் அரசாங்கத்தினை அமைத்துக் கொள்வதற்காகக் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் இறுதிப்பகுதியில் நியுயோர்க் நகரில் கூடினோம். அரசியலமைப்பினை விவாதித்தோம். ஏற்றுக் கொண்டோம். இவையெல்லாம் வீடியோ பதிவுகளாக நம்மிடம் உள்ளன. அமர்வின் இறுதி நேரத்தில் சில உறுப்பினர்கள் அதிருப்தி காரணமாகச் சபையில் இருந்து வெளியேறினர். ஜனநாயக முறையின் ஓர் அங்கமாகத் தான் இதனையும் அணுகினோம்.

இதன் பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியில் அமைப்பின் அடிப்படையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை வழிநடாத்திச் செல்லும் நிர்வாக பீடமாக அமைச்சரவையை உருவாக்கினோம். இவ் அமைச்சரவையில் இணைந்து கொள்ள விரும்புவோர் தமது விருப்பத்தையும் தாம் ஆற்றக்கூடிய பணிகளையும் அறியத் தருமாறு சபையில் இருந்து வெளியேறியோர் உட்பட அனைத்து உறுப்பினர்களிடமும் கோரினோம். தமது விருப்பத்தைத் தெரிவித்தவர்கள் மத்தியில் இருந்து அமைச்சர்களையும் துணையமைச்சர்களையும் தெரிவுசெய்தோம். இளையோர்கள், மூத்தோர்கள், பெண்கள் என அனைவரைம் உள்ளடக்கிய அமைச்சரவையும் அமைக்கப்பட்டது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளையும் முன்னெடுக்கத் தொடங்கினோம்.

தமிழீழ விடுதலை என்ற நமது இலக்கினை முன்னெடுப்பதற்கு உருவாக்கப்பட்டுள்ள பிரதமர் பணிமனையினையும் 10 அமைச்சுக்களையும் கொண்டமைக்கப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற குழந்தை 10 மாதம் கருவில் இருந்து உருவாகிப் பிறந்து தவழத் தொடங்கி இன்று நடை பயிலவென நிமிரத் தொடங்கும் கால கட்டத்திலேதான் நாம் நிற்கிறோம். இக் குழந்தையின் வளர்ச்சியில் படிநிலைகள் உள்ளன. இவ் வளர்ச்சிப் படிநிலைகள் ஒவ்வொன்றையும் நாம் கட்டம் கட்டமாகத் தான் தாண்டிச் செல்ல வேண்டும். அதற்குரிய தொலைநோக்குடன் நாம் செயற்பாடுகளை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளோம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்பது ஒரு எண்ணக்கருவாக ஆரம்பிக்கப்பட்ட திட்டம் என்பதனைத் தாங்கள் எல்லோரும் நன்கறிவீர்கள். நேரடித் தேர்தல்கள் மூலம் உறுப்பினர்களைத் தெரிவு செய்து அரசாங்கத்தை அமைத்து அமைச்சுக்களை உருவாக்கியுள்ள நாம் அமைச்சுகளுக்குரிய கட்டமைப்புக்களைத் தற்பொழுதுதான் உருவாக்கத் தொடங்கியுள்ளோம். முதற்தடைவையாக அமைக்கப்படும் அரசாங்கம் என்ற வகையில் அரசாங்கத்தின் கட்டமைப்புக்களை உருவாக்கும் பணியும் எம்மிடமே உள்ளது. செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான கட்டமைப்புகளையும் உருவாக்கி அவற்றின் ஊடாக செயற்பாடுகளையும் முன்னெடுப்பது என்பது இரட்டிப்பு சவால் நிறைந்த பணியாகும். நாம் தற்போது உருவாக்கி வரும் அரசாங்கக் கட்டடைப்புக்கள் எதிர்காலத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை ஒரு வலுமையமாக உருவாக்குவதற்கு உறுதுணையாக அமைய வேண்டியவை. தற்போதைய சூழலில் நாம் ஒருங்குபட்டு கடினமாக உழைப்பதன் ஊடாகவே வலுவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான அடித்தளத்தை இட முடியும்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இக் குறுகிய கால இயக்கத்தின்போது தனது செயற்பாடுகளை விரிவாக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டிலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோழமை மையம் அமைக்கப்பட்டுள்ளது. தென்சூடானுடன் நட்புறவுப்பாலம் கட்டப்பட்டள்ளது. ஏனைய பல முனைகளிலும் இராஜதந்திர உறவுகள் கட்டும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம். உரிய நேரம் வரும் போது அவற்றை மக்களுக்கு அறியத் தருவோம். சிங்கள தேசமும் அனைத்துலக சமூகமும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைந்துள்ளதையும் அவற்றின் செயற்பாடுகளையும் உன்னிப்பாக அவதானித்து வருகிறது. சிறிலங்கா ஆட்சியாளர்களுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அச்சத்தைத் தருவதாக உள்ளது என்பதை அவர்களின் செயற்பாடுகள் உணர்த்துகின்றன. ஈழத் தமிழர் தேசமானது தனது பலத்தை தமிழக மற்றும் உலகத் தமிழர்கள் எல்லோரது பங்கு பற்றலுடனும் நியாயத்துக்காகக் குரல் கொடுக்கக்கூடிய அனைத்துலக மக்கள், சக்திகளின் துணையுடனும் கட்டி எழுப்புவதற்காக நாம் அயராது உழைக்க வேண்டிய கால கட்டம் இது.

இத்தகையதொரு சூழலிலே, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டவர்களில் ஒரு பகுதியினர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசமைப்பினை ஏற்றுக் கொண்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்றத்தில் தம்மை உறுப்பினர்களாகப் பிரகடனம் செய்யாமல் இன்றுவரை இருந்து வருவது நமக்குக் கவலையையும் ஏமாற்றத்தையும்; தருகிறது.

மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பினை ஏற்று உறுதிமொழி எடுக்கும்போதுதான் உறுப்பினர் தகைமையைப் பெறுகின்றனர். இதனால் அனைத்துத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களையும் முறையாக எல்லோரது அங்கீகாரத்துடனும் ஏற்றுக் கொள்ளப் பட்ட அரசியலமைப்பின்படி உறுதிமொழியெடுத்து உறுப்பினர்களாகுமாறு நாம் தொடர்ச்சியாக அழைப்பு விடுத்து வருகிறோம். எத்தகைய கருத்து முரண்பாடுகளையும்; உறுப்பினர்கள் என்ற நிலையில் இருந்து அணுகுவோம் என்பதுதான் இவ் விடயத்தில் எமது நிலைப்பாடாக இருந்து வருகிறது.

இக்தகைய சூழலில் பெப்ரவரி மாதம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டு உறுதிமொழி எடுக்காத சிலரதும் தெரிவு செய்யப்படாதவர்கள் சிலரதும் பெயர்களில் சில கோரிக்கைகளும் நிபந்தனைகளும் உள்ளடக்கிய கடிதம் ஒன்று எனக்கு அனுப்பப்பட்டிருந்தது. இக் கடிதம் என்னை வந்தடைவதற்கு முன்னரே ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டிருந்தது. ஓரிரு இணையத்தள ஊடகங்களிலும் பிரசுரமாகியிருந்தது.

இக் கடிதம் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் என்ற ரீதியில் எனக்கு எழுதப்படவில்லை. இக் கடிதத்திற்கு நான் பதிலளிக்காமைக்குப் பல காரணங்கள் உண்டு. முதலாவதாக இக் கடிதம் ஊடகங்களில் முதலில் வெளிவந்து ஒரு கிழமைக்குப் பின்னர் தான் எனக்குக் கிடைத்தது. இரண்டாவதாக நாடு கடந்த உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்படாத சிலரது பெயர்களும் கடிதத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தன. மூன்றாவதாக இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பாகத் தீர்மானிக்கும் அதிகாரங்கள் எல்லாம் என்னிடம் இல்லை. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் யாப்பில் உள்ளடங்கும் அதிகாரங்கள் மட்டும் எனக்கு உண்டே ஒழிய, நான் சர்வ அதிகாரங்கள் கொண்டவன் அல்ல. நான்காவதாக இக்கடிதத்தில் காணப்பட்ட மிரட்டல் தொனி.

இக்கடிதம் எனக்குப் பிரதமர் என்ற ரீதியில் எழுதப்படாவிடினும், இது நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பானது என்ற படியினால் இக்கடிதம் பற்றி நான் அமைச்சரவையின் கருத்தைக் கேட்டேன். மேலே கூறப்பட்ட காரணங்களின் அடிப்படையிலும் இக்கடிதம் ஒரு நல்லெண்ணத்துடன் எழுதப்பட்ட கடிதமாக அமையவில்லை என்பதனாலும் நான் அதற்குப் பதில் அனுப்பவேண்டிய அவசியம் இல்லையென அமைச்சரவையும் கருதியது.

இச் சிக்கலை மேலும் நீடிக்க விரும்பாத நாம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை உறுதிமொழி எடுத்து உறுப்பினர்களாக தகைமைப்;படுத்துமாறு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்து அழைத்தோம். இக் கால அவகாசம் போதாது எனத் தெரிவிக்கப்பட்டமையால் இது இம்மாதம் 25 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டள்ளது. அவைத் தலைவர் பொன் பாலராஜன் அவர்கள் அறிவித்தவாறு இம் மாதம் 25 ஆம் திகதிக்குள் உறுதிமொழி எடுக்கத் தவறும் தெரிவு செய்யுப்பட்ட உறுப்பினர்கள் தாங்களாகவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்ற நிலையில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்வதாகக் கருதி அடுத்த கட்ட நடடிவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் நிலை தோன்றிவிடும்.

இந் நிலை தோற்றம் பெறுவதை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் என்ற நிலையில் இருந்து நான் விரும்பவில்லை. அவைத்தலைவர், அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பினை ஏற்றுக் கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்ட மூன்றில் இரண்டு பங்குக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் எவரும் விரும்பவில்லை.

இவ் வேளையில், உறுதிமொழி எடுக்காதவர்களை உறுதிமொழியை எடுத்து அவையின் உள்ளே வந்து எமது ஒற்றுமையைப் பலப்படுத்துமாறு நாடு கடந்த தமிழீழ அரசங்கத்தின் இளம் தலைமுறை உறுப்பினர்கள் எடுத்திருக்கும் முயற்சியையும் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகின்றேன். இம் முயற்சிக்குப் பாராட்டும், இம் முயற்சி வெற்றிபெற எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்கள் எல்லோரும் ஒரே இலக்கினைக் கொண்டவர்கள். ஒரே நோக்கத்துக்காhகச் செயற்படுபவர்கள். அணுகுமுறை வேறுபாடுகள் நமக்கிடையே இருக்கக்கூடினும் நாம் வென்றடைய வேண்டிய இடம் தொடர்பாக நமக்கிடையே மாறுபாடுகள் எதுவுமில்லை. இதனால் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்குள் அணிகள் எதற்கும் தேவையும் இல்லை. இடமும் இல்லை. தமிழீழ தேசத்தின் விடுதலைக்கெனச் செயற்படுவதற்காக மக்கள் நம்மைத் தேர்ந்தெடுத்தார்களேயன்றி அணிபிரிந்து மல்லுக் கட்டுவதற்காக மக்கள் நம்மைத் தேர்ந்தெடுக்கவில்லை. இவ்வாறு அணிபிரிந்து செயற்படுவோமானால் அது மக்களுக்கும் தமிழீழ விடுதலைக்ககாகத் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீர்களுக்கும் நாம் செய்யும் அநீதியாகத்தான் அமையும்.

இதனால் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளியே நின்று அணிபிரிந்து இயங்கும் செயற்பாடுகளைக் கைவிடுமாறு ’ஜனநாயக அணி’ எனத் தம்மை அழைத்துக் கொள்வோரை உரிமையுடன் வேண்டிக் கொள்கிறேன். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பின்படி உறுதிமொழி எடுத்து உறுப்பினர் தகைமையினை எட்டிக் கொள்ளுமாறும் அவர்களிடம் கோருகிறேன்.

நமக்கிடையே இருக்கக்கூடிய வேறுபாடுகளை உறுப்பினர் என்ற நிலையில் இருந்து நாம் பேசித் தீர்ப்போம் வாருங்கள். முரண்பாடுகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற அமைப்பின் ஜனநாயக வரையறைக்குள் இருந்து அணுகுவோம் வாருங்கள்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இதுவரை தெரிவு செய்யப்படாத உறுப்பினர்களைத் தெரிவு செய்யவும், நியமனம் செய்யப்படும் பேராளர்களை நியமனம் செய்யவும,; செனட்சபையை நிர்ணயம் செய்வதற்குமான ஏற்பாடுகளை நாம் இப்போது முன்னெடுத்து வருகிறோம். பிரான்சிலும் பிரித்தானியாவிலும் நெதர்லாந்திலும் பின்லாந்திலும் இருந்து இன்னும் தேர்தல்கள் மூலம்; தெரிவு செய்யப்பட வேண்டியுள்ள 10 பிரதிநிதிகளுக்கான தேர்தல்களை நடாத்துவதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு நாம் தேர்தல் ஆணையத்தைக் கோரியுள்ளோம்.

இத் தெரிவுகள் நடைபெற்ற பின்னர், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பு உட்பட உறுப்பினர்கள் மேற்கொள்ள விரும்பும் மாற்றங்களை அரசியலமைப்புக்குட்பட்டு மேற்கொள்ள முடியும். பேச்சுக்களின் மூலம் மாறுபட்ட கருத்துக்களுக்குள் உடன்பாடு காணவும் முடியும். நாம் அரசாங்கத்தினை அமைத்த பின்னர் அரசாங்க நடைமுறைகளில் இருந்து பின்வாங்குவதோ, விலகிச் செயற்படுவதோ அல்லது தடம் பிறள்வதோ நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் வளர்ச்சிக்கோ அல்லது சிறப்புக்கோ உதவாது. இந்த விடயத்தில் நாம் தெளிவாகத் தான் இருக்கின்றோம.;

நாம் இப்போது உருவாக்கும் அரசாங்கத்தை அதன் கட்டமைப்புக்களை மக்களால் தெரிவு செய்யப்படவர்களே எதிர்காலத்திலும் நடாத்திச் செல்லப் போகின்றனர். இங்கு நான் உட்பட தனி மனிதர்கள் எவரும் அரசாங்கத்தின் நிலையான தலைவர்களாக இருக்கப் போவதில்லை. ஆனால் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழீழ மக்கள் தமது முழுமையான விடுதலையை அடைந்து கொள்வதற்கு வழிகோலும் வலுமையமாக நிலைபெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக எம்முன்னே விரிந்து நிற்கின்றது. அதனைக் கவனத்தில் கொண்டு அவ்வுண்மையை ஏற்றுக் கொண்டு அனைவரும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் என்பதனை உரிமையுடன் கோரி நிற்கின்றேன்.


தமிழ் உறவுகளே!


நாம் அதிவேகமாகச் செயற்பட வேண்டிய காலம் இது. தமிழ் ஈழத் தேசத்தவராகிய நமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் கோர வேண்டிய காலகட்டம். நமது மக்களுக்கு அநீதியினை இழைத்தவர்களை நீதியின்முன் நிறுத்துவதற்கு நாம் அணிவகுக்கும் காலகட்டம். நமது மக்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகள் வேண்டி நாம் போர்க்கொடி தூக்கும் காலகட்டம்.


தமது குருதியால் நமது தாயகப் பூமியினை நனைத்து, தமிழீழ விடுதலை என்ற இலட்சியத்தை நமது தேசமெங்கும் விதைத்து, இக் கனவுகளுடன் தம்விழி மூடிய நமது மாவீர்களின் எண்ணங்களுக்கு நாம் வடிவம் கொடுக்கும் கால கட்டம். தாயக பூமியில் சிங்கள இனவாதப் பூதத்தால் பிய்த்தெறியப்பட்ட நமது மக்களின் மற்றும் மாவீரர், போராளிகள் குடும்பங்களின் வாழ்க்கையினை நிமிரச் செய்வதற்கு நாம் உறுதுணையாக நிற்க வேண்டிய காலகட்டம்.


நமது தேசத்தின், மக்களின் நலன் சார்ந்து, நமது மக்களுக்கு விசுவாசமாக நாம் செயற்பட வேண்டிய காலகட்டம். இக் காலகட்டத்தில் மக்கள் நலனை மட்டும் முன்னிறுத்தியதாக நமது செயற்பாடுகள் அனைத்தும் அமையட்டும்.


உறுதிமொழி எடுக்காதிருக்கும் உறுப்பினர்கள் ஒவ்வொருவரிடமும் இவ் அழைப்பினைத் தனிப்பட்ட அழைப்பாகக் கருதுமாறு கேட்டுக்கொள்கிறேன்.


நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் என்ற ரீதியில் இரு கரம் விரித்து உங்களை அழைக்கின்றேன். வாருங்கள்;. ஒன்றாகப் பயணிப்போம். சுதந்திர இறைமையுள்ள தமிழீழம் அமைப்போம்.


நன்றி.


விசுவநாதன் ருத்திரகுமாரன்
பிரதமர்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்