Showing posts with label பழ.நெடுமாறன். Show all posts
Showing posts with label பழ.நெடுமாறன். Show all posts

Thursday, March 22, 2012

ஈழத்தமிழர் பிரச்சனைக்கான வாசல் கதவு திறந்துவிட்டது-பழ.நொடுமாறன்.

ஈழத்தமிழர் பிரச்சனை குறித்து விவாதிப்பதற்கு வாசல்கதவினை திறந்துவிட்ட வெற்றியாக ஜக்கியநாடுகள் மனிதஉரிமைகூட்டதொடரில் சிறீலங்கா மீதான நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் வெற்றி அமைகின்றது என்று உலகத்தமிழர் இயக்க தலைவர் பழ.நொடுமாறன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஜ.நா மனிதஉரிமைகள் அவையில் அமெரிக்க கொண்டுவந்த தீர்மானம் தமிழ்மக்களுக்கு முழுமனநிறைவு அளிக்காத தீர்மானமாக இருந்தாலும் அந்த தீர்மானத்தை 24 நாடுகள் ஆதரவு தெரிவித்து வெற்றிபெற செய்தது என்பது தமிழ்மக்களுக்கு முதல்கட்ட வெற்றி கிடைத்திருக்கிறது.

ஜ.நாடுகள் சபையிலோ அல்லது அது சார்ந்த துணைஅமைப்புக்களிலேயோ உள்நுளைந்து ஈழத்தமிழர் பிரச்சனை குறித்து விவாதிப்பதற்கு வாசல்கதவினை திறந்துவிட்ட வெற்றியாகும் தொடர்ந்து நாங்கள் எடுத்துக்கொள்கின்ற முயற்சிகள் இறுதி வெற்றி கிடைப்பதற்கு வளிவகுக்கும் அந்தவகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து நின்று நடத்திய போராட்டத்தின் விளைவாக இந்தியாஅரசு தன்னுடைய நிலையினை மாற்றிக்கொண்டு தீர்மானத்தை ஆதரிக்க முன்வந்தது இன்னெரு பாரிய வெற்றியாகும்.

இந்தியாவின் போக்கில் ஏற்பட்ட இந்த மாற்றம் தொடர்ந்து நீடிக்கவேண்டும் அதற்கு 7கோடி தமிழ்மக்களின் ஒன்று பட்டபோரட்டமூலமே சதிக்கமுடியும் என்பதை நினைவு படுத்த விரும்புகின்றோன் தொடர்ந்து நாங்கள் போராடுவோம் வெற்றிபெறுவோம். என்று தமிழக தொலைக்காட்சிக்கு வழங்கிய கருத்தில் இந்த செய்தியினை தெரிவித்துள்ளார்.

Monday, March 19, 2012

ஐ.நா. தீர்மானம் இந்தியா ஆதரவு - மார்ச் 23 - போராட்டம் நிறுத்திவைக்கப்படுகிறது-பழ. நெடுமாறன் அறிவிப்பு

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கமும் மற்றும் தமிழக அரசியல் கட்சிகளும் இணைந்து ஐ.நா. மனித உரிமைக் குழுவில் இலங்கை அரசுக்கு எதிரான போர்க் குற்றத் தீர்மானம் முன்மொழியப்படும் மார்ச் 23ஆம் தேதியன்று தமிழகம் தழுவிய அளவில் வேலை நிறுத்தம் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

ஆனால் இந்திய அரசு இந்தத் தீர்மானத்தை ஆதரிக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. அதை நாங்கள் வரவேற்று நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

அதே வேளையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் குழுவில் இன அழிப்புப் போர்க் குற்றத்திற்காக இராசபக்சே அரசாங்கத்தின் மீது சர்வதேச விசாரணைக் குழுவின் நேரடி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றத் திருத்தத்துடன் இந்தியா இத்தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என தமிழக மக்கள் சார்பில் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

23ஆம் தேதியன்று நடத்தப்படவிருந்த போராட்டம் நிறுத்திவைக்கப்படுகிறது. இப்போராட்டத்திற்கு ஆதரவுதர முன்வந்த அனைத்துக்கட்சிகள், அனைத்துத் தமிழ் அமைப்புகள், வணிகர் சங்க பேரவை மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகிய அனைத்திற்கும் பொது மக்களுக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

( பழ. நெடுமாறன் )
ஒருங்கிணைப்பாளர்
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்

Sunday, March 18, 2012

தமிழகத்தில் 23-ந் தேதி வேலைநிறுத்தம்: பழ.நெடுமாறன் அறிவிப்பு

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அனைத்து நாடுகளும் ஆதரிக்க வலியுறுத்தி தமிழகத்தில் 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வேலை நிறுத்தம் நடைபெறும் என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக, இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தில் 5 லட்சம் தமிழர்கள் வாழ்க்கையை இழந்து நிற்கின்றனர். 1,1/2 லட்சத்திற்கும் அதிகமான பேர் கொல்லப்பட்டனர். இறுதி கட்ட போரில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை ஐ.நா. சபையின் முதற்கட்ட அறிக்கை, ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளது.

மனித குலத்திற்கு எதிராக நடந்துள்ள இந்த கொடுமையை எதிர்த்து தமிழக மக்கள் அனைவரும், அரசியல் வேறுபாடுகளை கடந்து ஒன்று சேர்வது அவசியமாகிவிட்டது. தமிழ் மக்களின் இந்த கொலைக்கு எதிராக போராடி நீதியை நிலைநாட்டும் கடமையோடு செயல்பட வேண்டும்.

ஐ.நா சபையின் மனித உரிமை குழுவில் இன அழிப்பு போர் குற்றத்திற்காக, ராஜபக்சே அரசாங்கத்தின் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த விசாரணை சர்வதேச விசாரணை குழுவின் நேரடி விசாரணையாக அமைய வேண்டும் என்ற திருத்தத்துடன் இந்தியா இந்த தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்.

ராஜபக்சே ஆட்சிக்கு எதிராக தீர்மானத்தை மனித உரிமை குழுவில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளும் ஆதரிக்க வேண்டும். இந்த தீர்மானங்களை முன்வைத்து ஜெனிவாவில் தீர்மானம் முன்மொழியப்பட உள்ள மார்ச் 23-ந் தேதி அன்று காலை முதல் மாலை 6 மணி வரை தமிழக மக்கள் அனைவரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். வணிக நிறுவனங்கள் திறக்காமல் தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

Thursday, March 08, 2012

ஐயா பழ.நெடுமாறனின் கைதட்டை பெற்றார் அம்மா ஜெயா!

இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதற்காக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பழ.நெடுமாறன் பாராட்டு தெரிவித்துள்ளார். .

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியிருப்பது பாராட்டத்தக்கது.

தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக தமிழக மக்களின் இந்த வேண்டுகோளை ஏற்று ஐ.நா. மனித உரிமைக் குழுவில் இந்தியா நடந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Saturday, March 03, 2012

தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் - ஆஸ்திரேலியா வாழ் தமிழர்கள் 1,83,000 நிதி உதவி!

முள்ளிவாய்க்காலில் கடைசிக்கட்ட போரில் மடிந்த தமிழர்களின் நினைவாக தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் என்ற கற்கோயில் எழுப்பப்பட்டு வருகிறது.

ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளித்துத் தியாகம் செய்த முத்துக்குமார் உட்பட 19 ஈகிகளின் நினைவாகவும் சிற்ப நுணுக்கம் மிகுந்த நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டு வருகிறது.

இராசராசன் எழுப்பிய தஞ்சைக் கற்கோயிலுக்குப் பயன்படுத்திய அதே ரக கற்கள் கண்டறியப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெரும் பொருட் செலவில் தஞ்சைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

50 தொன்னிற்கு மேலான எடையும் 40 அடி நீளமும் 10 அடி உயரமும் 3 அடி கனமும் கொண்ட பெரும் கற்களில் நூற்றுக்கு மேற்பட்ட சிற்பிகள் இரவு பகலாக அற்புதமான சிற்பங்களைச் செதுக்கி வருகிறார்கள்.

முள்ளிவாய்க்காலில் படுகொலையாகி வீழ்ந்து கிடக்கும் மக்களின் அவலக் காட்சியும், முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுப் புலம்பும் மக்களின் துயரக் காட்சியும், முத்துக்குமார் உட்பட தமிழ்நாட்டிலும் உலக நாடுகளிலும் உயிர்த் தியாகம் செய்த ஈகிகளின் சிலைகளும் செதுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் முடிவடையும் தருவாயிலுள்ள நினைவு முற்றத்திற்கு பல்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்களும், தமிழன உணர்வாளர்களும் நிதி உதவி அளித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா வாழ் தமிழர்கள் முள்ளிவாய்க் கால் நினைவு முற்றம் அமைப்பதற்காக 1,83,000(ஒரு லட்சத்து எண்பத்து மூன்றாயிரம்) நிதி உதவி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தொகையினை 2.3.2012 அன்று உலகத்தமிழர் பேரமைப்புத் தலைவர் திரு பழ.நெடுமாறனிடம் ஆஸ்திரேலியா வாழ் தமிழர்கள் வழங்கினர்.

Thursday, March 01, 2012

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:

இலங்கையில் அப்பாவித் தமிழர்களைக் கொன்றுகுவித்த இராசபக்சே கும்பலை விசாரித்து உரிய தண்டனையை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையிலும், மாவட்டத் தலைநகரங்களிலும் மார்ச் 6ஆம் தேதி உண்ணாநிலைப் போராட்டம் நடத்த முன்வந்துள்ள இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியை நான் மனமாரப் பாராட்டுகிறேன்.

இந்த உண்ணாநிலைப் போராட்டத்தில் எல்லா இடங்களிலும் பங்கேற்கும்படியும் அவர்களுக்கு வாழ்த்துக்கூறும்படியும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கும் அமைப்புகளையும் தோழர்களையும் வேண்டுகிறேன்.

( பழ. நெடுமாறன் )
ஒருங்கிணைப்பாளர்
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்

Friday, February 03, 2012

பிரபாகரனை சுபாஸ் சந்திரபோஸுடன் ஒப்பீடு செய்து இருக்கும் பழ. நெடுமாறன்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரனை இந்தியாவின் விடுதலைப் போராளிகளில் ஒருவரான சுபாஸ் சந்திர போஸ் நேதாஜியுடன் ஒப்பீடு செய்து இருக்கின்றார் தமிழ் தேசிய இயக்கத்தின் தலைவரும் தமிழ்நாடு அரசியல்வாதியுமான பழ. நெடுமாறன்.

பிரபாகரன்: தமிழர் எழுச்சியின் வடிவம் என்று இவர் நூல் ஒன்று எழுதி இருக்கின்றார். இந்நூல் 1000 பக்கங்கள் வரை கொண்டது. நூல் வெளியீட்டு விழா வரும் மாதங்களில் இடம்பெற உள்ளது.

இந்நூலிலேயே பிரபாகரனையும், சந்திர போஸையும் ஒரு கட்டத்தில் ஒப்பீடு செய்து இருக்கின்றார் நெடுமாறன்.

-இந்தியாவின் மாபெரும் தலைவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஒரு நெருக்கடியான காலக் கட்டத்தில் இந்தியாவை விட்டு வெளியேறினார். அந்த நிலையிலேயே அவர் உலகமறிந்த தலைவர்.

ஜெர்மனியும், ஜப்பானும் அவருக்கு உதவி செய்ய போட்டி போட்டுக் கொண்டு முன்வந்தன. இந்திய மக்களின் மாபெரும் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்ட அவருக்கு உலகத்திலேயே இரண்டு பெரிய வல்லரசுகள் என்னென்ன உதவிகள் தேவையோ அந்த உதவிகளைச் செய்து கொடுத்தன. பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் பணியாற்றி ஜப்பானியர்களால் சிறைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்த இந்திய போர் வீரர்களை மீட்டு அவர்களைக் கொண்டு இந்தியத் தேசிய இராணுவத்தினை நேதாஜி சிங்கப்பூரில் உருவாக்கினார்.

இந்த இராணுவத்திற்குத் தேவையான ஆயுதங்கள். மற்ற உதவிகள் ஆகியவற்றை ஜப்பான் கொடுத்தது. நேதாஜியின் சுதந்திர அரசை ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி மற்றும் நட்பு நாடுகள் அங்கீகரித்தன.நேதாஜியை தனது வழிகாட்டியாகக் கொண்டிருக்கிற அருமைத் தம்பி பிரபாகரனை நேதாஜியுடன் ஒப்பிட முடியாது.

 வயதிலும் சிறியவர், அனுபவத்திலும் சிறியவர். நேதாஜியைப் போன்ற பெரிய தலைவராக உருவாகி அதற்குப் பின்னர் அவர் இந்தப் போராட்டத்தை தொடங்கவில்லை.

இளைஞராயிருந்தபோது தன்னுடைய பதினாறாவது வயதில் விடுதலைப் போராட்டத்தைத் தொடங்கினார்.நேதாஜிக்கு உலக வல்லரசுகள் துணைபுரிந்தன. அருமைத் தம்பி பிரபாகரனுக்கு திக்கற்ற தமிழ் இளைஞர்கள் மட்டுமே துணை நின்றனர். வேறு எந்த நாடும், எந்த வல்லரசும் அவருக்கு உதவி புரிய முன்வரவில்லை.

ஆனால் அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகள் அள்ளி அள்ளித் தரும் நவீன ஆயுதங்களை வைத்திருக்கக் கூடிய சிங்கள இராணுவத்தை ஓட ஓட விரட்டியடிக்கிற விடுதலைப் படையை பிரபாகரன் உருவாக்கிய விதம் கற்பனைக்கு எட்டாதது. அதைப் போலவே வலிமை வாய்ந்த இந்திய இராணுவத்தை எதிர்த்து அவர் நடத்திய வீரப் போராட்டமும் கனவிலும் எண்ணிப் பார்க்க முடியாதது. இதை எப்படி அவர் சாதித்தார்?
இன்னமும் புரியாத புதிர்தான்.-

Friday, May 13, 2011

வரலாறு காணாத வகையில் மக்கள் நடத்திய அமைதிப் புரட்சி - பழ. நெடுமாறன் பாராட்டு

தமிழக மக்கள் வரலாறு காணாத வகையில் அமைதியான புரட்சியை நடத்தி முடித்திருப்பதை நான் மனமாறப் பாராட்டுகிறேன் என தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெமடுமாறன் தெரிவித்துள்ளார்.

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :


தமிழக மக்கள் வரலாறு காணாத வகையில் அமைதியான புரட்சியை நடத்தி முடித்திருப்பதை நான் மனமாறப் பாராட்டுகிறேன். சபாநாயகர், துணை சபாநாயகர் உட்பட, பெரும்பாலான திமுக அமைச்சர்களும் முக்கிய காங்கிரஸ் தலைவர்களும் பெரும் தோல்வியைச் சந்தித்திருக்கிறார்கள்.

ஈழத் தமிழர் பிரச்னையில் திமுக - காங்கிரஸ் கட்சிகள் செய்த அப்பட்டமான துரோகத்திற்கும், தமிழக மீனவர்களை காக்கத் தவறியதற்கும், இந்தியாவின் மிகப் பெரிய ஸ்பெக்ட்ரம் ஊழலைச் செய்ததற்கும் எல்லாவற்றிற்கும் மேலாக குடும்ப ஆட்சியை நிலைநிறுத்தச் செய்யப்பட்ட முயற்சிக்கும் சரியான பாடத்தினை மக்கள் கற்பித்திருக்கிறார்கள்.

பண பலம், அதிகார பலம், இலவசங்களை வாரி இறைத்தல் ஆகிய எதற்கும் மக்கள் ஏமாறவில்லை. திமுக கூட்டணி செய்த முறைகேடுகளை முறியடித்துள்ளனர். திருமங்கலம் சூத்திரத்தை செயற்படுத்த விடாமல் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட நேர்மையான நடவடிக்கைகள் ஜனநாயகத்தைக் காப்பாற்றி உள்ளன. மத, சாதி, பிராந்திய வேறுபாடுகளுக்கு அப்பால் ஒட்டுமொத்தத் தமிழகமும் திமுக கூட்டணிக்கு எதிராகத்
தீர்ப்பளித்துள்ளது.

மக்கள் அளித்த இந்த தீர்ப்பினை வரவேற்றுப் பாராட்டும் அதே வேளையில் புதிய அரசை அமைக்கவிருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவர்களுக்கும் எனது பாராட்டுதலையும் வாழ்த்தினையும் தெரிவித்துக் கொள்வதோடு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை முதல் கடமையாக மேற்கொள்ள வேண்டுமென வேண்டிக் கொள்கிறேன்.

அய். நா. விசாரணைக் குழுவினால் போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கும் இராசபக்சேயை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கும், இலங்கையில் எஞ்சியிருக்கும் ஈழத்தமிழர்களின் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாப்பதற்கு அய். நா. படையை அங்கு அனுப்பி வைப்பதற்கும், தமிழக மீனவர்களைப் பாதுகாப்பதற்கும் தேவையான அவசர நடவடிக்கைகளைத் தலையாய கடமையாக மேற்கொள்ள வேண்டுமென வேண்டிக் கொள்கிறேன்.

Monday, February 21, 2011

தேசியத் தலைவரின் தாயார் அஞ்சலி நிகழ்வு: பழ. நெடுமாறன் அறிக்கை

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின்ஒருங்கிணைப்பாளருமான பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களைப் பெற்றெடுத்த அன்னை பார்வதி அம்மையார்அவர்கள் இன்று அதிகாலை 6:10 மணிக்கு காலமான செய்தியை அறிந்து உலகம் முழுவதிலும்உள்ள தமிழர்கள் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஈழப் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் கூட அங்கிருந்து வெளியேறி பத்திரமான இடம் தேடி அவரும் அவரதுகணவரும் வாழ முயலவில்லை. தங்கள் மக்களின் துயரத்தில் பங்கு கொண்டு அவர்களுடனேயே அத்தனைதுன்பங்களையும் தாங்கி இறுதியாக சிங்கள இராணுவச் சிறையில் பல மாதங்கள் கொடுமைகளை அனுபவித்தபோதிலும் அவர் கொஞ்சமும் கலங்கவில்லை.

சிறையில் தனது கணவரை பறிகொடுத்தத் துயரம் அவரது உடல்நிலையையும் மனநிலையையும் பெரும் பாதிப்புக்குஉள்ளாக்கி விட்டது. இந்த நிலையில் அவர் வெளிநாட்டில் வாழும் அவரது மூத்த மகனும் அவரது மகள்களும் மற்றநெருங்கிய உறவினர்களும் இலங்கை சென்று சந்தித்து ஆறுதல் கூற முடியவில்லை.

அவரைத் தமிழகம் கொண்டு வந்து அவரோடு நெருங்கிப் பழகிய குடும்பங்களோடு தங்க வைத்து மன ஆறுதலையும்மருத்துவ சிகிச்சையையும் அளிக்க செய்யப்பட்ட ஏற்பாட்டினை இந்திய தமிழக அரசுகள் மனித நேயம் கொஞ்சமும்இல்லாமல் முறியடித்தன.

தமிழகத்தில் வந்து இறங்கிய அவரை ஈவு இரக்கமில்லாமல் திருப்பி அனுப்பிய கொடுமையும் நிகழ்ந்தது. இதெல்லாம்அவருடைய மனநிலையை மேலும் பாதித்து விட்டன. இந்த சூழ்நிலையிலேயே மருத்துவ சிகிச்சை பயனளிக்காமல் அவர்காலமாகியிருக்கிறார் என்பதை வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவருக்கு இறுதி வணக்கம் செலுத்தும் வகையில் திங்கள் கிழமை (21-2-2011) அன்று மாலை 4 மணிக்கு உலகமெங்கும்உள்ள தமிழர்கள் கருப்புக் கொடி ஊர்வலங்கள், இரங்கல் கூட்டங்கள் ஆகியவற்றை நடத்துமாறு வேண்டிக்கொள்கிறேன்.

பார்வதி அம்மையார் மறைவு - இரங்கல் கூட்டம்

நாள்: 21 பிப்ரவரி 2011, திங்கள் கிழமை
நேரம்: மாலை 4 மணி
இடம்: தியாகராய நகர் மேல்நிலைப் பள்ளி வளாகம்
வெங்கட் நாராயணா சாலை
சென்னை

பங்கேற்போர்:
பழ.நெடுமாறன்
வைகோ
தா.பாண்டியன்
மரு.செ.நெ.தெய்வநாயகம்
ஆவடி மனோகரன்
மற்றும் பலர்

Sunday, November 28, 2010

எஸ்.எம்.கிருஷ்ணாவின் இலங்கை பயணத்தின் நோக்கம் அம்பலமாகி விட்டது: நெடுமாறன்

இலங்கைக்கு பல்வேறு பொருளாதார உதவிகளைக் கொடுத்து அதன் மூலம் சீனாவின் பிடியிலிருந்து இலங்கையை மீட்டுவிட முடியும் என இந்தியா நம்புகிறது. இதற்காகவே எஸ்.எம். கிருஷ்ணா இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளார் என்பதும் அம்பலமாகியுள்ளது என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் தமிழர்களை மீண்டும் அவர்களுடைய சொந்த இடங்களில் குடியமர்த்துவதும், இனப் பிரச்சினைக்கு படிப்படியாக தீர்வு காணும் வகையில் பேச்சுவார்த்தை நடத்துவதுமே இப்போது முக்கிய பிரச்சனைகளாக உள்ளன.

அவற்றை இலங்கை அரசு நிச்சயம் செய்யும் என நம்புகிறோம் என இந்திய - இலங்கை கூட்டுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த வெளியுறவுத் துறை அமைச்சர் எம்.எம். கிருஷ்ணா கூறியுள்ளார்.

மேலும், போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் அகதிகளை மீண்டும் சொந்த இடங்களுக்கு குடியமர்த்துவது விரைவாக நடைபெறவில்லை என தமிழக முதல்வரின் குற்றச்சாட்டு குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது, முதல்வரின் கவலை நியாயமானதுதான். ஆனால் இலங்கை அரசுக்கு உள்ள சிரமங்களையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும் என கிருஷ்ணா கூறியுள்ளார்.

ஆனால், இவருடைய கூற்றை மறுக்கும் வகையில் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதையும், மனிதாபிமான பிரச்சனைகளைத் தீர்ப்பதையுமே இலங்கை அரசு முக்கியமாகக் கருதுகிறது என கூட்டுக் குழு கூட்டத்துக்குப் பின் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் பேட்டி அளித்துள்ளார்.

இதன் மூலம் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகிவரும் பல லட்சம் தமிழர்கள் குறித்து எஸ்.எம். கிருஷ்ணா சிறிதும் கவலைப்படவில்லை என்பது தெரிகிறது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே பொருளாதாரப் பங்களிப்பு உடன்பாடு செய்வது குறித்து மட்டுமே அவர் பேசியுள்ளார்.

காவிரி படுகையிலும் மன்னார் கடல் பகுதியிலும் எண்ணெய் எடுப்பதற்கு இந்திய நிறுவனங்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என இலங்கை ஒப்புக்கொண்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் சம்பூரில் 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறனுள்ள அனல் மின் நிலையம் ஒன்றை அமைத்துக் கொடுக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கான ஒப்பந்தங்கள் விரைவில் கையெழுத்தாக உள்ளன.

மேலும் வட இலங்கையில் உள்ள ரயில்வே திட்டங்களுக்கு 2 ஆயிரம் கோடி வரை நிதியுதவி அளிக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.

இதுபோன்ற பொருளாதார உதவிகள் மூலம் சீனா பிடியிலிருந்து இலங்கையை மீட்டுவிட முடியும் என இந்தியா நம்புகிறது. இதற்காகவே எஸ்.எம். கிருஷ்ணா இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளார் என்பதும் அம்பலமாகியுள்ளது என்று கூறியுள்ளார் கிருஷ்ணா.

மீண்டும் விடுதலைப்புலி சீறிப் பாயும் - பழ.நெடுமாறன்

தமிழீழ தேசிய மாவீரர்களை நினைவுகூரும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் சென்னையில் தியாகராய நகர் பஸ் நிலையம் அருகே நேற்று மாலை நடைபெற்றது.

அந்நிகழ்வில் கலந்துகொண்ட உணர்வுமிக்க தமிழர்கள் உரையாற்றியிருந்தனர்.

அந்தவகையில் பழ.நெடுமாறன் அவர்கள் புலம்பெயர் மக்களுக்காக ஆற்றிய உரையில், குறிப்பாக சுவிஸ் வாழ் தமிழ்மக்களுக்காக அவர் குறிப்பிட்டுள்ளது என்னவெனில்

அன்புள்ள சுவிஸ் வாழ் தமிழ்மக்களே, உங்களை நான் உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றேன், எல்லோரும் உறுதியாக இருங்கள் தமிழீழ தேசிய தலைவர் 5ம் கட்ட ஈழப்போரை தலைமைதாங்கி நடத்த வெளிவரும் நாளை எதிர்பார்த்து காத்திருங்கள்.

முழுமையான பேச்சினை கீழுள்ள காணொளியில் கேட்கலாம்.

Thursday, June 03, 2010

ஜூன் 8ல் மகிந்தாவுக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்! – தமிழர் பாதுகாப்பு இயக்கம் அறிவிப்பு!!

இலங்கையில் கடந்த ஆண்டு ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்த இலங்கை குடியரசுத் தலைவர் இராசபக்சே ஜூன் 8ஆம் நாள் இந்திய அரசின் அழைப்பின் பேரில் வர இருக்கிறார்.

அயர்லாந்தின் தலைநகரமான டப்ளினில் கூடிய சர்வதேச மக்கள் தீர்ப்பாயம் இராசபக்சேயை போர்க்குற்றவாளி என முடிவு செய்து, சர்வதேச நீதிமன்றத்திற்குமுன் அவர் நிறுத்தப்பட வேண்டும் என கூறியுள்ளது. அய்.நா. பேரவையின் பொதுச்செயலாளர் பான்கீமூன் இலங்கையில் நடந்த போர் அத்துமீறல்கள் குறித்து அய்.நா. விசாரனை மன்றம் ஒன்றை அமைக்கப்போவதாக அறிவித்திருக்கிறார். பல்வேறு நாடுகளும் இராசபக்சேயின் போர்க்குற்றம் குறித்து விசாரனை நடத்தப்பட வேண்டும் என வற்புறுத்தி வருகின்றன.

உலக சமுதாயத்தினால் போர்க் குற்றம் புரிந்தவர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ள இராசபக்சேவுக்கு இரத்தினக் கம்பள வரவேற்பை இந்திய அரசு அளிக்க இருப்பதை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. இந்திய அரசின் இந்த செயல் தமிழக மக்களை பெரும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

தமிழர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை இராசபக்சேவுக்கு தெரிவிக்கும் வகையில் ஜூன் 8ஆம் நாள் காலை 10மணிக்கு… சென்னையில் இலங்கைத் தூதுவர் அலுவலகம் முன்பாக மாபெரும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதே நாளில் அதே நேரத்தில் தமிழகமெங்கும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக்கட்சிகள், அனைத்துத் தமிழ் அமைப்புகள் ஆகியவற்றைச் சேர்ந்த தோழர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில் திரளாகக் கலந்துகொண்டு நமது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்த வேண்டுகிறேன்.

அன்புள்ள,

பழ. நெடுமாறன்
ஒருங்கிணைப்பாளர்
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்

Thursday, May 13, 2010

முள்ளிவாய்க்கால் படுகொலை முதலாண்டு நினைவு நாள் – பழ. நெடுமாறன்


முள்ளிவாய்க்கால் படுகொலை முதலாண்டு நினைவு நாள் தொடர்பில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இலங்கையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிங்களப் படையால் பதறபதறப் படுகொலை செய்யப்பட்ட ஒரு இலட்சத்திற்கு மேலான ஈழத்தமிழர்கள் மற்றும் போராளிகள் ஆகியோரின் முதலாண்டு நினைவு நாள் 17-05-10 அன்று வர இருக்கிறது. நீண்ட நெடிய தமிழர் வரலாற்றில் இதுபோன்ற மிகக்கொடுமையான நிகழ்ச்சி நடந்ததேயில்லை.

இந்த நாளை நினைவில் நிறுத்தி கொல்லப்பட்ட நமது மக்களுக்கு வீரவணக்கம் செலுத்தவேண்டிய கடமை ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு. மே 17 முதல் மே 31 வரை உள்ள 15 நாட்களில் உலகெங்கும் உள்ள தமிழர்கள், குறிப்பாக தமிழ்நாட்டுத் தமிழர்கள் வீரவணக்கப் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் ஆகியவற்றை நடத்தி முள்ளிவாய்க்கால் படுகொலை ஓராண்டு நினைவு நாளைக் கடைப்பிடிக்கும்படி அனைவரையும் வேண்டிக்கொள்கிறேன்.

இக்கூட்டங்களில் கீழ்க்கண்டக் கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டுகிறேன்.

1. இலங்கை மீதான நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் டப்ளின் அறிக்கையை ஏற்று அதன்மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அய்.நா. பேரவையை வலியுறுத்த வேண்டும்.

2. போர்க் குறித்த ஜெனீவா உடன்பாடுகளை அப்பட்டமாக மீறியும் போரின் இறுதி ஐந்து மாதங்களான ஜனவரி முதல் மே 2009 வரையிலான காலக்கட்டத்தில் கொடூரமான போர்க் குற்றங்களையும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களையும் புரிந்த இலங்கை அதிபர் இராசபக்சே இராணுவத்தளபதியாக இருந்த சரத்பொன்சேகா மற்றும் இவர்களுக்குத் துணையாக நின்றவர்கள் ஆகியோரைப் போர்க்குற்றவாளிகளாக கருதி சர்வதேச நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்த வேண்டும்.

3. போர் முடிந்த பிறகும் ஐந்து மாதங்களுக்கு மேலாக முள்வேலி முகாம்களில் அடைபட்டுக் கிடந்த சுமார் மூன்று இலட்சம் மக்களில் ஒரு பகுதியினரை மட்டும் உலக நாடுகளின் கண்டனத்திற்கிணங்க விடுவிப்பதாக சிங்கள அரசு அறிவித்தது.

ஆனால் முள்வேலி முகாம்களில் இன்னமும் அடைப்பட்டுக் கிடக்கும் மக்களும், தற்காலிகமாக வெளியேற்றப்பட்டவர்களும் தங்களின் சொந்த ஊர்களில் குடியேறமுடியாதபடி மீண்டும் அகதி வாழ்விலும் இடப்பெயர்வு வாழ்விலும் தவிப்பதிலிருந்து மீட்டுக் காக்க வேண்டிய கடமை அய்.நா. பேரவைக்கு உண்டு. உடனடியாகத் தலையிட்டு இந்த மக்களைக் காக்கத் தவறினால் பேரழிவு ஏற்படும் என எச்சரிக்க வேண்டும்.

4. போராளிகள் மற்றும் அரசியல் கைதிகள் என்ற பெயரால் தனி முகாம்களில் அடைக்கப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாகிவரும் பன்னிரண்டாயிரம் பேரின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டிய கடமை அய்.நா. பேரவைக்கு உண்டு. அதிலும் குறிப்பாக முகாம்களில் அடைக்கப்பட்டுக் கிடக்கும் பெண்கள் சந்திக்க நேர்ந்துள்ள பாலியல் கொடுமைகளிலிருந்து அவர்களை விடுவிப்பது சர்வதேச சமூகத்தின் நீங்காத கடமையாகும். எவ்வளவு விரைவாக இதில் செயல்பட்டு அவர்களை விடுவிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக செயல்படும்படி அய்.நா. பேரவையையும் சர்வதேச சமூகத்தையும் வற்புறுத்த வேண்டும்.

5. தமிழீழப் பகுதியில் பரவலாக சிங்களர்கள் திட்டமிட்டுக் குடியேற்றப்படுகிறார்கள். ஏராளமான சிங்கள இராணுவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினரின் குடும்பத்தினருக்கும் குடியேற்றப்பட்ட சிங்களவருக்கும் புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டு அளிக்கப்படுகின்றன. இவற்றுக்கு நடுவே புத்தர் கோயில்களும் எழுப்பப்படுகின்றன. தமிழர் பகுதியில் தமிழரை சிறுபான்மையினராக ஆக்கும் இம்முயற்சித் தொடருமானால் எதிர்காலத்தில் இலங்கையில் தமிழினம். ஒடுக்கப்பட்ட இனமாக ஆகிவிடும்.

சிங்கள அரசின் இந்த இனவெறித் திட்டத்தைத் தடுத்து நிறுத்தி தமிழ் மக்களையும் அவர்களின் பாரம்பரிய நிலப்பகுதியையும் பாதுகாத்துத் தரவேண்டிய கடமை அய்.நா.பேரவைக்கு உண்டு என்பதை வற்புறுத்த வேண்டுகிறோம்.

அன்புள்ள

(பழ. நெடுமாறன்)
தலைவர்

Saturday, September 19, 2009

உலகத் தமிழர்களுக்கே முதல்வர் கருணாநிதி மீது வெறுப்பு : பழ. நெடுமாறன்

[சனிக்கிழமை, 19 செப்ரெம்பர் 2009]

"இலங்கைத் தமிழர் விஷயத்தில் முதல்வரின் செயல்பாடுகள் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இடையே கோபத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது" எனக் கூறினார் தமிழர் தேசீய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன்.

மதுரையில் இலங்கைத் தமிழர் குறித்து நடந்த சிறப்புக் கருத்தரங்கில் உரையாற்றுகையிலேயே பழ.நெடுமாறன் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

6.5 கோடி தமிழர்கள் வாழும் தமிழகத்தில் இருந்து 18 மைல் தொலைவில் ஈழத் தமிழர்கள் பெரிதும் துயருற்று வருகின்றனர்.

3.50 லட்சம் தமிழர்கள் முள்வேலி முகாம்களில் உணவு, மருந்து, சுகாதார வசதியின்றி வாடுகின்றனர். அவர்களுக்கு உதவிட முடியாத நிலையில் நாம் உள்ளோம். இது வேதனைக்குரியது.

இந்திய அரசு மூலம் ரூ.500 கோடி நிதியுதவி, மாநில அரசு மூலம் ரூ.25 கோடிக்கான உதவிப் பொருள்களை இலங்கைக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில் அது வழங்கப்பட்டது பற்றி அறிக்கை வேண்டும் என கருணாநிதி கேட்கிறார்.

ஏற்கனவே நிவாரண உதவிகளை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா. ஆணையம் மூலம் அனுப்ப வேண்டும் என்று நாங்கள் கூறினோம்.

மேலும், அங்கு உரிய முறையில் பொருள்கள் வழங்கப்படுகின்றனவா என்பதை அறிய ஆன்மிகத் தலைவர்கள் அடங்கிய குழுவை இங்கிருந்து அனுப்ப வேண்டும் என்றும் சொன்னோம். அதற்கெல்லாம் முதல்வர் செவிசாய்க்கவில்லை.

இலங்கைத் தமிழர் விஷயத்தில் முதல்வரின் செயல்பாடுகள் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இடையே கோபத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

3.50 லட்சம் தமிழர்கள் படும் துன்பத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங்கும், முதல்வர் கருணாநிதியும்தான் காரணம். ஈழத் தமிழருக்கு ஆதரவாக நாம் வீதியில் இறங்கிப் போராடவும் தயங்கக் கூடாது" என்றார்

Tuesday, August 18, 2009

புலிகளின் ஆதரவாளர்களை மிரட்டல்களினால் ஒடுக்கிவிட முடியாது: பழ.நெடுமாறன்

[செவ்வாய்க்கிழமை, 18 ஓகஸ்ட் 2009,] விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை மிரட்டல்கள் மூலம் ஒடுக்கிவிட முடியாது என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது தண்டனைக்குரியக் குற்றமாகும். அவ்வாறு செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பத்திரிகை விளம்பரம் வாயிலாக எச்சரித்துள்ளார். உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம், பொடா மறு ஆய்வுக் குழு ஆகியவை தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசுவது குற்றமல்ல என கடந்த 2004 ஆம் ஆண்டில் மிக தெளிவாகவும் விளக்கமாகவும் தீர்ப்புகள் வழங்கியுள்ளன. அந்த தீர்ப்புகளின் அடிப்படையில்தான் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதாக பொடா சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நானும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் உட்பட பலர் விடுதலை செய்யப்பட்டோம். நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றங்கள் அளித்த இந்த தீர்ப்புகளைக் கொஞ்சமும் மதியாத வகையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் விளம்பரம் வெளியிட்டிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். ஏற்கெனவே 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் தேதி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தமிழ்நாட்டில் நாங்கள் நடத்தவிருந்த முழு அடைப்புப் போராட்டம் சட்ட விரோதமானது என இதே தலைமைச் செயலாளர் எங்களை எச்சரித்து கடிதம் அனுப்பினார். ஆனால் முழு கடையடைப்பு நடத்துவது சட்ட விரோதமானது அல்ல என்று 03.02.09 அன்று உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பைக் கூட மதியாத தன்மையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் நடந்து கொண்டது கடும் கண்டனத்திற்கு உள்ளானது. நீதிமன்றத் தீர்ப்புகளை அவமதிக்கும் வகையிலும் அரசியல் கட்சிகளையும் ஊடகங்களையும் மிரட்டுவதற்கும் தலைமைச் செயலாளரை முதல்வர் பயன்படுத்துவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஈழத் தமிழர் பிரச்னை சுமுகமாக தீர்ந்துவிட்டது என்று சில நாட்களுக்கு முன்னால் கூறிய முதல்வர் இப்போது முகாம்களில் உள்ள ஈழத் தமிழர்களை விடுவிக்க மத்திய அரசு தலையிட வேண்டுமென்று கடிதம் எழுதுகிறார். இப்படி முன்னுக்குப் பின் முரணாகச் செயல்படுவது அவரது வழக்கமாகி விட்டது. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்களை மிரட்டல்கள் மூலம் ஒடுக்கிவிட முயல்வது ஒருபோதும் வெற்றி பெறாது என்று கூறியுள்ளார்.