Sunday, December 18, 2016

இலங்கையில் முக்கியஸ்தர்களை கொலை செய்ய திட்டமா? சீன நாட்டு பிரஜை கைது

குறிபார்த்து சுடும், மாப்பியாக்களுடன் தொடர்புடைய சீன நாட்டு பிரஜை ஒருவர், கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் மிக முக்கியஸ்தர்களை கொலை செய்யத் திட்டமிட்டாரா என்பதனை உறுதி செய்து கொள்ளும் வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கொழும்பில் உள்ள பிரபல கெசினோ நிலையம் ஒன்றில் பணி செய்யும் Ni Ma Ze Ren என்ற சீன நாட்டு பிரஜையே குற்றப் புலனாய்வு பிரிவினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
முதலீட்டுச் சபையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் ஒன்றில் தொழில் செய்வதற்காகவே தான் இலங்கை வருகைத்தந்துள்ளதாக குறித்த நபர் குறிப்பிட்டுள்ள போதிலும், அவர் சீன நாட்டு சூதாட்டக்காரர்களால் நடத்தப்படும் கசினோ நிலையம் ஒன்றில் பணியாற்றியுள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது
குறித்த சீன நாட்டு சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது, அவரது சுற்றுலா விசா காலாவதியாகியிருந்தது என்று புலனாய்வு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
Ni Ma Ze Ren துப்பாக்கி சூட்டுப் பயிற்சி பெற்றவர் எனவும், முக்கிய பிரபுக்களை இலக்கு வைக்கும் கூலிப்படை மாபியா குழுக்களுடன் தொடர்புடையவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த சீன நாட்டு பிஜை ஜனாதிபதி இல்லம், அலரி மாளிகை, மற்றும் மிக முக்கியஸ்தர்கள் வசிக்கும் மொனாச், கிரெஸ்காட் உள்ளிட்ட அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதிகளுக்கு அருகில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றிலேயே வசித்தார் என தெரியவந்துள்ளது.
Renஇன் மனைவி சீனாவில் அரச புலனாய்வாளராக பணியாற்றுவதோடு, தென்பகுதி மற்றும் ஏனைய பகுதி அரசியல்வாதிகளுடன் தொடர்பில் இருந்துள்ளார் என மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த நபர் கொழும்பில் வசிப்பதற்காக நோக்கத்தை கண்டுபிடிப்பதற்கு விசாரணை மேற்கொள்ளும் அதிகாரிகள் முயற்சிப்பதோடு, அவர் இலங்கையில் தொடர்பில் இருந்த தொலைப்பேசி இலக்கங்கள் தொடர்பிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டில் எந்த நேரத்திலும், ஆட்சி மாற்றம் ஏற்படும் என மூத்த அரசியல்வாதிகள் சிலர் கூறி வருகின்ற நிலையில், நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் சூழ்ச்சி திட்டத்தில் சீன நாட்டு பிரஜை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருக்கலம் என சந்தேகிக்கப்படுகின்றது.

32 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட மாற்றம்...!

வடக்கில் இருந்து இந்தியா வரை பயணிகள் கப்பல் ஒன்று செல்வதற்கு 32 வருடங்களின் பின்னர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் 2ஆம் திகதியில் இருந்து 12ஆம் திகதி வரை தமிழகத்தில் நடைபெறவுள்ள திருவாதிரை திருவிழாவில் கலந்து கொள்ள வடக்கு மக்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. 
இந்நிலையில், கப்பல் ஊடாக பயணத்தை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இம்முறை திருவிழாவில் 2000 பக்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். 
அதற்கு கப்பல் ஒன்றில் பயணிப்பதற்கு வடமாகாண ஆளுநரிடம் தான் அனுமதி கோரியததாக சிவசேனை இந்து சம்மேளத்தின் பிரதானி சச்சித்தானந்தன் தெரிவித்துள்ளார்.
தற்போது வரையில் இந்த கோரிக்கைகளுக்கு அனுமதி கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பாதுகாப்பு அமைச்சிடமும், இலங்கை கடற்படையிடமும் முன்வைத்து அவசியமான அனுமதியை பெற்றுக் கொடுத்ததாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
பயணத்திற்கு அவசியமான கடவுச்சீட்டு, விசா மற்றும் கப்பல் கட்டணங்கள் பக்தர்களினால் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணம் மற்றும் இந்தியாவுக்கு இடையில் பயணிகள் கப்பல் சேவை ஒன்று எதிர்வரும் காலங்களில் ஆரம்பிக்கப்படலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் 19 மீற்றர் உயரத்திற்கு எழுந்த பேரலை! விஞ்ஞானிகள் எச்சரிக்கை

உலக வரலாற்றில் இதுவரை பதிவாகாத மிகப்பெரிய கடல் அலை வடக்கு அட்லாண்டிக் கடலில் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஐஸ்லாந்து மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான பிராந்திய கடல் மட்டம் திடீரென 19 மீற்றர் வரை உயரமாக எழுந்ததாக உலக காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இந்த பேரலையானது 6 மாடி கட்டடம் ஒன்றிக்கு சமமானதென விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் 81 கிலோமீற்றர் வேகத்தில் வீசிய காற்றினால் இவ்வாறு கடல் அலை 60 அடிக்கு மேல் ஏற்பட்டதாக உலக காலநிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் அவ்வாறான பாரிய கடல் அலை 2007ஆம் ஆண்டில் பதிவாகியிருந்தன. அதன் உயர் 18.3 மீற்றராகும்.
நில நடுக்கம் அல்லது சுனாமி நிலைமை இல்லாத சந்தர்ப்பத்தில் கடல் அலை இவ்வாறு பாரிய அளவு அதிகமாக காணப்பட்டால், சுனாமி ஏற்படும் சந்தர்ப்பங்களின் அட்லாண்டிக் பெருங்கடல் அலைகள் பாரிய அளவு உயரத்திற்கு எழும் ஆபத்து காணப்படுவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வெளிநாட்டு வங்கிகளில் உள்ள பணத்தை இலங்கைக்கு கொண்டுவர அனுமதி

இலங்கையர்கள் அரசு அறிவிக்காது வெளிநாட்டு வங்கிகளில் வைப்புச் செய்துள்ள பணத்தை இலங்கைக்கு கொண்டுவர அனுமதி வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இதனடிப்படையில், சட்டவிரோதமான முறையில் அல்லாமல் நேர்மையான முறையில் சம்பாதித்து வெளிநாட்டு வங்கிகளில் வைப்புச் செய்துள்ள பணத்தை நாட்டுக்குள் கொண்டுவர இலங்கையர்களுக்கு அனுமதி கிடைக்கும்.
சுவிஸ் வங்கிகள் மற்றும் பனாமா பத்திரிகைகளில் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களும் தமது பணத்தை இலங்கைக்கு கொண்டுவர முடியும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் தமது நாட்டு மக்கள் வெளிநாடுகளில் வைப்புச்செய்திருந்த பணத்தை மீண்டும் தமது நாடுகளுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்த விதம் தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும் நிதியமைச்சர் கூறியுள்ளார்.

அடுத்த ஆண்டு முதல் 1000 இலத்திரனியல் பேருந்துகள் சேவையில்.

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் இணைத்து ஆரம்பிக்க திட்டமிட்டுள்ள மின்சாரத்தில் ஓடும்(இலத்திரனியல்) பேருந்து சேவைகளை அடுத்த வருடம் ஆரம்பத்தில் தொடங்கவிருப்பதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
முதல் கட்டமாக இலங்கை போக்குவரத்துச் சபை 500 பேருந்துகளையும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் 500 பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த உள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கூறியுள்ளார்.
இதற்காக புதிய வழித்தட அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட மாட்டாது எனவும் அனுமதிப்பத்திரங்களை கொண்டுள்ளவர்கள் மூலம் பேருந்துகளை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் வாகன விபத்து; பத்து பேர் வரை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி சங்கத்தானைப் பகுதியில் இன்று சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் பத்து பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.  

தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வான் ஒன்றும், யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் சிக்கி 3 பெண்களும் 7 ஆண்களும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாகவும், வானில் பயணித்த ஏனையோர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதேவேளை, உயிரிழந்தவர்களின் உடல்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.  

வேகமாக வந்த ஹயஸ் ரக வானின் சில்லு ஒன்றில் காற்று இறங்கியதால் வேக கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பேருந்துடன் மோதி விபத்து இடம்பெற்று உள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Saturday, April 04, 2015

இந்தியப் பிரதமர் மீனவ பிரச்சினைகளில் தலையிட வேண்டும்: ராமதாஸ், கருணாநிதி வலியுறுத்து

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலுள்ள வங்ககடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இருநாட்டு மீனவர்களுக்கும் உரிமையுண்டு என்பதை இந்திய அரசாங்கம் வலியுறுத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் இன்றைய தினம் இந்திய ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பது தொடர்பில் 40 வருடங்களுக்கும் மேலாக பிரச்சினைகள் நீடித்து வருகின்றன.
கச்சதீவை இலங்கைக்கு தாரைவார்த்த பின்னரே இந்த பிரச்சினை மிகவும் தீவிரமடைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியதுடன்,
இதற்கு தீர்வு காணும் வகையில் கடந்த 24ம் திகதி சென்னையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது வருடமொன்றிற்கு 83 நாட்கள் மாத்திரம் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு அனுமதியளிக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதற்கு அனுமதியளிக்க முடியாது என தெரிவித்து எல்லை தாண்டும் மீனவர்களை கைது செய்யுமாறு நேற்று முன்தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் கடற்படையினருக்கு உத்தரவிட்டிருந்தார். 
இதன் முதற்கட்ட நடவடிக்கையாக நேற்றைய தினம் 33 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினராலும், 6 இலங்கை மீனவர்கள் இந்திய கடற்படையினராலும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
இந்நிலையிலேயே இருநாட்டு மீனவர்களுக்கும் வங்ககடலில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு உரிமையுண்டு என இந்திய அரசாங்கம் இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு வலியுறுத்த வேண்டும் எனவும், 
அவ்வாறு வலியுறுத்தும் சந்தர்ப்பத்தில் அவர்களால் மறுப்பு தெரிவிக்க முடியாது என ராமதாஸ் தெரிவித்துள்ளார். 
இதேவேளை இலங்கை, இந்திய மீனவர்களுக்கு இடையில் எத்தனை தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும் இந்த பிரச்சினை தொடர்கதையாகவே அமைந்துள்ளது என திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். 
இவ்வாறு தொடர்கதையாக அமைந்துள்ள மீனவ பிரச்சினைக்கு இந்திய மீனவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து இலங்கை ஜனாதிபதியுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும், 
இந்திய மத்திய அரசு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடும் வழிவகைகளுக்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டு கொண்டுள்ளார். 
இந்த முயற்சிகளை இந்திய அரசாங்கம் இதுவரை மேற்கொள்ளாமல் அசமந்த போக்கில் செயற்படுவது தமிழக மீனவர்களை மிகவும் வேதனைக்குள் தள்ளியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். 
அத்துடன் இந்திய அரசாங்கம் முயற்சித்தால் ஐ.நா அமைப்பினால் உருவாக்கப்பட்ட சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டு இந்த உரிமையை நிலைநிறுத்த முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார். 
இவ்வாறு செய்யும் போது இருநாட்டு மீனவ பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணமுடியும் எனவும், இலங்கையை ஒரு வழிக்கு கொண்டு வரமுடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
இலங்கை அரசாங்கத்தின் மீது இந்தியா கருணை காட்டாமல் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வங்ககடலில் தமிழக மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட சட்டபூர்வமான உரிமையை பெற்று தர முனைய வேண்டும் என அவர் மேலும் கேட்டு கொண்டுள்ளார்.

இலங்கையர்களுடன் செங்கடலில் பயணிக்கும் இரகசிய கப்பல்கள்!

அவன்கார்ட் பாதுகாப்பு நிறுவனம் சர்வதேச ரீதியில் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் வெளிநாடுகளில் செயற்படும் பல்வேறு அமைப்புகளுக்கு ஆயுதங்களை விநியோகித்தமை தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
எகிப்திற்கு அருகில் செங்கடல் பகுதியில் இந்த பாதுகாப்பு நிறுவனத்திற்கு சொந்தமான களஞ்சியங்களுடன் கூடிய இரு கப்பல்கள் இருப்பதாக, இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பாதுகாப்பு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த இரண்டு கப்பல்களில் ஒன்று சவூதி அரேபியாவின் ஜெட்டா (Jeddah) நகருக்கு அருகில் உள்ள கடலில் நங்கூரமிட்டுள்ளது 
ஆயுத களஞ்சியங்களை கொண்ட இந்த கப்பல்கள் மூலம் மத்திய கிழக்கு நாடுகளில் இயங்கும் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் விநியோகிக்கப்பட்டனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 
அத்துடன் இந்த இரண்டு கப்பல்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் அவன்கார்ட் நிறுவனத்தில் பணியாற்றிய 15 அதிகாரிகள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது. 
இதேவேளை குறித்த நிறுவனம் நைஜீரியாவின் பொக்கோ ஹாராம் தீவிரவாதிகளுக்கும் ஆயுதங்களை விநியோகித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
அதேபோல் மாலைதீவு அரசாங்கத்தை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சருக்கு, அவன்கார்ட் நிறுவனத்தின் பணிப்பாளர் நிஷ்சங்க சேனாதிபதியே கடற்படை புலனாய்வு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசகராக இருந்தார். 
இதனால், மேற்படி சதித்திட்டத்திற்கு தேவையான ஆயுதங்களை சேனாதிபதி வழங்கியிருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. 
இவை குறித்து பாதுகாப்பு தரப்பினர் விரிவான விசாரணைகளை நடத்தி வருவதுடன் அதனை சர்வதேச மட்டத்தில் விரிவுப்படுத்தியுள்ளனர்.

Thursday, January 08, 2015

ஜனாதிபதி தேர்தலுக்கான முதலாவது முடிவு - கிளிநொச்சி மாவட்டத்தில் மைத்திரி அமோக வெற்றி

இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இதன் முதலாவது தேர்தல் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்துக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் 38856
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் 13300
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1940
மொத்த வாக்குகள் - 53796

Thursday, October 02, 2014

17 ஆண்டுகள்... அதிர்வலைகள்!

17 ஆண்டுகளைத் தாண்டியும் தடதடத்துக்கொண்டிருந்த ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை, நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா அதிரடியாக முடித்து வைத்துவிட்டார். வழக்கு கடந்துவந்த 17 ஆண்டுகளைப் பற்றிய பருந்துப் பார்வை இது...
1. முட்டாள்கள் தின காமெடி! 1995, ஏப்ரல் 1...
அப்போதைய, ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி, ஒருசில பத்திரிகையாளர்களை சென்னையில் தனது அலுவலகத்துக்கு வரவழைத்திருந்தார். சுவாமியின் வழக்கமான அரசியல் செய்தியாக இருக்கும் எனச் சென்றவர்களுக்குக் காத்திருந்தது, இந்தியாவுக்கான ஸ்கூப் நியூஸ்! ''தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீது வழக்குத் தொடர, தமிழக ஆளுநர் சென்னா ரெட்டி அனுமதி அளித்துவிட்டார்'' என்ற பகீர் தகவலை சர்வசாதாரணமாகச் சொன்னார் சுவாமி. செய்தியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தாலும், சுவாமி ஏதேனும் காமெடி செய்கிறாரா என அந்தப் பத்திரிகையாளர்களுக்குச் சந்தேகம். 'இன்று முட்டாள்கள் தினம். அதனால் சுவாமி நம்மை ஏமாற்றுகிறார்’ என்று ஒரு நிருபர் கமென்ட் அடிக்க, ஆளுநர் சென்னாரெட்டி கையெழுத்திட்ட அனுமதிக் கடிதத்தின் நகலை அனைவருக்கும் வழங்கினார் சுவாமி. 
2. மூன்றே மாதங்களில் முடிக்கலாம்!
இந்திய அரசியல் சட்ட வரலாற்றில், முதலமைச்சர் மீதான ஊழல் குற்றங்களை விசாரிக்க, மாநில ஆளுநர் அனுமதி கொடுத்தது இதுதான் முதல்முறை. லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின்படி நான் தொடரப்போகும் இந்த வழக்கில், சட்டரீதியான நடைமுறைகள்படி தாமதம் ஏற்பட வாய்ப்பு இல்லை. நடைமுறை தாமதங்களையும் தவிர்க்கத்தான் சிறப்பு நீதிமன்றமும் சிறப்பு நீதிபதியும் வேண்டும் என்கிறேன். ஜெயலலிதா மட்டும் வழக்கு நடைமுறைகளுக்கு இசைந்தால், மூன்றே மாதங்களில் வழக்கை முடித்துவிடலாம்!'' என்று அப்போது கூறினார் சுப்ரமணியன் சுவாமி. 
3. ஜெயலலிதாவின் முதல் ரியாக்ஷன்!
ஜெயலலிதா மீது வழக்கு போடலாம்’ என ஆளுநர் சென்னாரெட்டி அனுமதியளித்த கடிதத்தின் நகல், சுவாமி பேட்டியளித்த நாள் அன்று மதியம் 12.30 மணிக்கு போயஸ் கார்டன் ஃபேக்ஸ் மெஷினில் வந்து விழுந்தது. அதைப் படித்ததும் ஆத்திரம், இயலாமை, வெறுப்பு... என நிதானம் இழந்த நிலையில், அப்போது தனக்கு எதிரே நின்றுகொண்டிருந்த அமைச்சர் கே.ஏ.கிருஷ்ணசாமியை விளாசித்தள்ளினார் ஜெயலலிதா. 'நீங்கள் இத்தனை பேர் இருந்தும் என்ன பிரயோஜனம்? நான் எல்லாவற்றையும் உதறிவிட்டு எங்கேயாவது போகிறேன்!’ எனக் கடுகடுத்தார்! 
4. இராஜினாமா பெஸ்ட்!
முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமனைத் தொடர்புகொண்டு, 'ஆளுநர் சென்னா ரெட்டி, சுப்ரமணியன் சுவாமிக்கு அளித்த அனுமதியை ரத்துசெய்யக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்போகிறேன். இதில் உங்கள் கருத்து என்ன?’ என்று கேட்டார். 
முழு விவரத்தையும் பொறுமையாகக் கேட்ட ஆர்.வி, 'அது மிகப் பெரிய விபரீதமாக முடியும். வழக்குத் தொடுத்தால், அதுபற்றிய செய்திகள் தினமும் விவாதிக்கப்படும். உங்கள் மீது 'ஊழல்வாதி’ என்ற பிம்பம் படியும். எனவே, இப்போதே நீங்கள் பதவியை இராஜினாமா செய்து, வேறு ஒருவரை முதல்வராக அமர்த்திவிட்டு, வழக்கை முழுமூச்சாக எதிர்கொள்ளுங்கள்’ என்றார். ஆனால், அதைச் செய்யவில்லை ஜெயலலிதா! 
5. மலையெனக் குவிந்த புகார்கள்!
1995, ஏப்ரல் 15-ம் தேதி தி.மு.க சார்பில், 'தமிழகத்தில் ஊழல்கள் பெருகிவிட்டன’ எனச் சொல்லி 539 பக்கங்கள்கொண்ட அறிக்கை அப்போதைய ஆளுநர் சென்னா ரெட்டியிடம் அளிக்கப்பட்டது. அவர்களைத் தொடர்ந்து வாழப்பாடி ராமமூர்த்தி, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ஆகியோரும் ஆளுக்கு ஓர் அறிக்கையை ஆளுநரிடம் கொடுத்தனர். ம.தி.மு.க சார்பிலும் ஊழல் பட்டியல் தரப்பட்டது. சுவாமி கிள்ளிய திரிக்கு, மற்ற அனைத்துக் கட்சிகளும் வெடிமருந்துகளைக் குவித்தன! 
6. அரசியலில் இது சாதாரணம் அல்ல!
தமிழக முதலமைச்சரான தன் மீது வழக்குத் தொடுக்க ஆளுநர் அளித்த அனுமதிக்குத் தடை விதிக்க வேண்டும்’ என சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை விசாரித்தார் நீதிபதி சிவராஜ் பாட்டீல். ஜெ. தரப்பு வழக்குரைஞர் பராசரன், 'முதலமைச்சருக்கும் ஆளுநருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு மற்றும் அரசியல் காழ்ப்பு உணர்ச்சியின் காரணமாக இப்படி ஓர் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, அதை ரத்துசெய்ய வேண்டும் என்றார். நீதிபதி சிவராஜ் பாட்டீல், 'இது மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு. எனவே, டிவிஷன் பெஞ்சுக்கு மாற்றுகிறேன்!’ என உத்தரவிட்டார். 
7. சுவாமி மீது தாக்குதல் சுனாமி!
1995, ஏப்ரல் 20 அன்று ஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்துக்கு வரும் சுப்ரமணியன் சுவாமி மீது தாக்குதல் நடத்த சிலர் திரண்டனர். சுவாமி வரவும் கற்கள், சைக்கிள் செயின், அழுகிய முட்டை, அறுந்த செருப்புகள் ஆகியவை நீதிமன்ற வளாகத்தில் பறந்துகொண்டே இருந்தன. அந்த சமயம், முன்பு மதுரையில் நடந்த ஒரு கூட்டத்தில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை அவதூறாகத் திட்டியதாகச் சொல்லி வழக்குப் பதிவுசெய்த மதுரை போலீஸ், சுவாமியைக் கைதுசெய்ய சென்னை வந்து காத்திருந்தது. அவர்களிடமும் சிக்காமல் தப்பினார் சுவாமி. இந்த அத்தனை எதிர்ப்புகளில் இருந்தும் தப்பி நீதிமன்றத்துக்குள் வந்தார் சுவாமி. 'ஆளுநரின் உத்தரவை ரத்துசெய்ய முடியாது’ என உத்தரவிட்டது உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச்! 
8. தி.மு.க ஆட்சியில் விறுவிறு வேகம்!
1996-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க மாபெரும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வர, சென்னை சிங்காரவேலர் மாளிகையில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு, வேகம் பிடித்தது ஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு. 'முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளார். அதுபற்றி விசாரிக்க உத்தரவிட வேண்டும்’ என வழக்குத் தொடர்ந்தார் சுவாமி. நீதிபதி சம்பந்தம், விசாரணைக்கு உத்தரவிட்டார். நீதிமன்றம் நல்லம்ம நாயுடு தலைமையில் தனிப் படை அமைத்து உத்தரவிட்டது. 
9. சிறையில் ஜெ... கார்டனுக்குள் போலீஸ்!
வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் முதல் குற்றவாளியாக ஜெயலலிதா, இரண்டாவது குற்றவாளியாக சசிகலா, மூன்றாவது குற்றவாளியாக வளர்ப்பு மகன் சுதாகரன், நான்காவது குற்றவாளியாக இளவரசி ஆகியோரைச் சேர்த்து, 1996 செப்டம்பர் 18 அன்று முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது. அதன்பிறகே 5.5.1997-ல் நீதிபதி சம்பந்தம், ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் முதல் விசாரணையைத் தொடங்கினார்.
அப்போது தி.மு.க அரசு தொடர்ந்த பல வழக்குகளில் ஒன்றான கலர் டி.வி ஊழல் வழக்கில் கைதுசெய்யப்பட்டு, சென்னை மத்திய சிறையில் இருந்தார் ஜெயலலிதா. அந்தச் சமயம் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் போயஸ் கார்டனுக்குள் நுழைந்தனர். 
10. மாறியது காட்சி!
டான்சி வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா, 2001-ம் ஆண்டு நடந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல். ஆனாலும், நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவற்றை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்தது. தேர்தலில் அ.தி.மு.க அமோக வெற்றி பெற, அப்போதைய தமிழக ஆளுநர் பாத்திமா பீவி, ஜெயலலிதாவுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். அதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜெயலலிதா முதலமைச்சர் ஆனது செல்லாது என சுரீர் தீர்ப்பளித்தது. ஜெயலலிதாவின் பதவி பறிபோக, ஓ.பன்னீர் செல்வம் தமிழக முதலமைச்சர் ஆனார். பிறகு டான்சி வழக்கில் இருந்து விடுதலை பெற்று, மீண்டும் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, ஜெயலலிதா மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சர் ஆனார். 
11. வழக்கு பெங்களூருக்கு பார்சல்!
தி.மு.க ஆட்சிக் காலத்தில் இந்த வழக்கில் வாக்குமூலம் அளித்த சாட்சிகளில் 76 பேர், இப்போது தங்கள் தரப்பை மாற்றிச் சொல்லியிருக்கிறார்கள். அத்துடன் லஞ்ச ஒழிப்புத் துறையும் முதலமைச்சர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் துறையாக இருக்கிறது. அதனால் வழக்கை தமிழகத்தில் நடத்தினால், நியாயம் கிடைக்காது. அதிகாரிகள் தைரியமாகச் செயல்பட முடியாது. எனவே, வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்!’ என தி.மு.க பொதுச் செயலாளர் க.அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். 2003, நவம்பர் 18-அன்று, வழக்கை பெங்களூருக்கு மாற்றி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். 
12. வழக்கைத் தரவில்லை தமிழகம்!
பெங்களூர் சிறப்பு நீதிமன்ற சிறப்பு நீதிபதியாக பச்சாபுரே நியமிக்கப்பட்டார். தமிழகத்தில் அப்போது ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க ஆட்சி. அதனால் வழக்கை சென்னையில் இருந்து விடுவிக்க தாமதம் ஆனது. 10 மாதங்கள் கழித்தே, வழக்கின் தமிழ் ஆவணங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு அளித்தார்கள். 
13. எரிச்சல் ஆன நீதிபதிகள்!
பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார் ஜெயலலிதா. 'கடந்த ஆறு மாதங்களாக நான் தினம் தினம் வந்துவிட்டு உட்கார்ந்துவிட்டுப் போகிறேன். நான் தனிமைச் சிறையில் இருப்பதைப்போல் உணர்கிறேன். குற்றம் சாட்டப்பட்டவர்கள் இனியும் வராவிட்டால், நான் அதைக் காரணம்காட்டியே தீர்ப்பைச் சொல்வேன்’ எனக் கடுகடு எச்சரிக்கை விடுத்தார் நீதிபதி பச்சாபுரே. அவர் ஓய்வுபெற, மல்லிகார்ஜூனையா புதிய நீதிபதியாகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவரிடமும் இதே இழுத்தடிப்புகள் தொடர்ந்தன. 
14. லண்டன் சிக்கல்!
சொத்துக்குவிப்பு வழக்கோடு லண்டன் ஹோட்டல் வழக்கு ஒன்றும் இணைக்கப்பட்டு இருந்தது. அந்த வழக்கின் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாததால், வழக்கு இழுக்கப்பட்டது. தி.மு.க ஆட்சிக் காலத்தில் லண்டன் வழக்கு இதிலிருந்து பிரிக்கப்பட்டது. ஆனால், லண்டன் சொத்துக்குவிப்பு வழக்கையும் பெங்களூர் வழக்குடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் என ஜெயலலிதா தரப்பு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய, அந்த மனு மீதான தீர்ப்பு வரும்வரை பெங்களூர் வழக்கு விசாரிக்கப்படவில்லை. இறுதியில் உச்ச நீதிமன்றம், பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கை மட்டும் விசாரித்தால் போதும் என உத்தரவிட்டது. இடையில் நான்கு ஆண்டுகள் உருண்டோடியிருந்தன! 
15. உச்சந்தலையில் கொட்டிய உச்ச நீதிமன்றம்!

சொத்துக்குவிப்பு வழக்கின் குற்றப்பத்திரிகையை எதிர்த்து ஒரு வழக்கு, 'இந்த வழக்கு விசாரணை முழுவதும் சட்ட விரோதம். எனவே, இத்துடன் விசாரணையை நிறுத்த வேண்டும்’ எனக் கோரி ஒரு வழக்கு, வழக்கின் ஆவணங்கள் தமிழில் வேண்டும் எனக் கோரிக்கை என, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றங்களில் மனுக்கள் மேல் மனுக்கள் போட்டார் ஜெயலலிதா. தீவிர விசாரணைக்குப் பிறகு பல மனுக்களைத் தள்ளுபடிசெய்த உச்ச நீதிமன்றம், ஒவ்வொரு சமயமும் ஜெயலலிதா தரப்பைக் கண்டித்தது. 
இடையில், தமிழகத்தில் தி.மு.க ஆட்சி மாறி 2011-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தது! 
16. பெங்களூரிலேயே பல்டி விளையாட்டு!
2013 ஜனவரி 17 அன்று, சொத்துக்குவிப்பு வழக்கின் அரசு வழக்குரைஞர் ஆச்சாரியா பதவி விலகினார். நீதிபதி மல்லிகார்ஜூனையா ஓய்வுபெற்று, புதிய நீதிபதியாக பாலகிருஷ்ணா பொறுப்புக்கு வந்தார். அரசு வழக்குரைஞராக பவானி சிங் பொறுப்பெடுத்துக்கொண்டார். அந்தச் சமயம் வழக்கின் காட்சிகள் மாறின. பவானி சிங்கின் அணுகுமுறை ஜெயலலிதா தரப்புக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறி, அவரை மாற்ற வேண்டும் என கர்நாடக அரசுக்கு பேராசிரியர் க.அன்பழகன் கோரிக்கை வைத்தார். அதை ஏற்றுக்கொண்ட கர்நாடக அரசு அவரை மாற்றியது. பவானி சிங் மாற்றத்தை எதிர்த்து, ஜெயலலிதா தரப்பு உச்ச நீதிமன்றம் சென்றது. பவானி சிங்கே அரசுத் தரப்பு வழக்கறிஞராக நீடிக்கட்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்தச் சமயம்தான் நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா பொறுப்பு எடுத்துக்கொண்டார். 
17. மிஸ்டர் ஸ்ட்ரிக்ட் மாஸ்டர்!
பொறுப்பை கையில் எடுத்ததில் இருந்து கறாரான மாஸ்டராகத்தான் நீதிபதி குன்ஹா இருந்தார். வழக்கை விரைவுபடுத்தி முடிக்க நினைக்கிறார் குன்ஹா என்றதும், புதிய அஸ்திரத்தை எடுத்தார்கள். 
இந்த வழக்கில் 32 நிறுவனங்கள் உள்ளன. இவர்கள் தனித் தனியாக மனு போட்டார்கள். 'எங்கள் நிறுவனத்தை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும். அதுவரை சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணையை நிறுத்த வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார்கள். 
17 ஆண்டுகளாக இந்த வழக்கு நடக்கிறது. இதுவரை தூங்கினீர்களா?’ என்று கேட்டு எல்லா மனுக்களையும் குன்ஹா டிஸ்மிஸ் செய்தார். 
அந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தார். அந்த அளவுக்கு கறார் காட்டியதால்தான், குன்ஹாவால் தீர்ப்பு தேதியை அறிவிக்க முடிந்தது. 
மைக்கேல் டி.குன்ஹா நீதிபதியாக வந்த பிறகு, ஜெயலலிதா பெங்களூருக்கு வரவே இல்லை. தீர்ப்பு தரப்பட்ட 2014, செப்டம்பர் 27 அன்றுதான் நீதிபதி குன்ஹா, ஜெயலலிதாவை முதன்முறையாக நேரில் பார்த்தார். 
அந்த முதல் சந்திப்பே மறக்க முடியாததாக மாறிவிட்டது இருவருக்கும்!
ஜோ.ஸ்டாலின்

ஜெயலலிதாவை பெங்களூரில் இருந்து புழல் சிறைக்கு மாற்ற அதிமுக திட்டம்?

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை, அங்கிருந்து புழல் சிறைக்கு மாற்ற அதிமுக வழக்கறிஞர்கள் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜெயலலிதா சரி என்று கூறி விட்டால் அதற்கான நடவடிக்கைகளை அவர்கள் எடுக்கவுள்ளனர்.
கைதியின் உடல் நலம், பாதுகாப்பு, சிறப்பு அந்தஸ்து உள்ளிட்டவற்றைக் காரணம் காட்டி சம்பந்தப்பட்ட சிறை அதிகாரியிடம் இதுதொடர்பாக கோரிக்கை விடுக்கலாம். அவர் பரிசீலித்து கைதி விரும்பும் சிறைக்கு மாற்ற முடியும். 
எனவே அந்த அடிப்படையில் பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து புழல் சிறைக்கு ஜெயலலிதாவை மாற்றுவது தொடர்பான சட்ட ஆலோசனைகள் ஏற்கனவே செய்து முடிக்கப்பட்டு விட்டனவாம். ஜெயலலிதாவின் சம்மதத்திற்காக தற்போது அதிமுக தரப்பு காத்துக் கொண்டுள்ளது என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 
ஜெயலலிதா இசட் பிரிவு பாதுகாப்பின் கீ்ழ் உள்ளவர். 
மூட்டு வலி, முதுகுவலி, சர்க்கரை நோய் உள்ளிட்டவற்றால் அவர் தொடர் சிகிச்சை பெறும் நிலையில் உள்ளவர். எனவே இதைக் காரணம் காட்டி சிறை மாற்றத்திற்கு அதிமுக தரப்பு திட்டமிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி என்ன ஆவார் ஜெயலலிதா?

ஆரம்பத்திலேயே எங்க குடும்பம் ரொம்ப வசதியாக இருந்தது, ரொம்பப் பணக்காரக் குடும்பம். அப்போது இருந்த அந்தச் சொத்து அப்படியே நிலைச்சு இருந்திருந்தால், எங்க அம்மாவும் நடிக்க வந்திருக்க வேண்டாம், நானும் சினிமாவில் நடிக்க வந்திருக்க வேண்டாம்! இப்படிச் சொன்னவர் ஜெயலலிதா!
தங்களின் அரசியல் வளர்ச்சியை அருகில் இருந்து பார்க்காத உங்களது தாயாரின் நினைவுகளைச் சொல்லுங்கள்...’ என ஒருமுறை ஜெயலலிதாவிடம் கேட்டபோது,
அம்மா இருந்திருந்தால், இந்தக் கேள்விக்கே இடம் இருந்திருக்காது. ஏனென்றால், என்னை அவர் அரசியலில் நுழைய அனுமதித்திருக்கவே மாட்டார்! என்றார். 
குடும்பச் சூழ்நிலை காரணமாக நடிக்க வந்து, தாய் சந்தியாவின் மரணத்துக்குப் பின்னால் அரசியலுக்கு வந்து, 'கூடா நட்பு கேடாய் முடியும்’ என்ற பழமொழிக்கு உதாரணமாக பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் சென்றுவிட்டார் ஜெயலலிதா! 
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்புரத்தில் 'ஜெய விலாஸ்’, 'லலித விலாஸ்’ எனப் பெரும் பங்களாக்களில் அவரது மூதாதையர் வாழ்ந்தார்கள். அதன் நினைவாகத்தான் 'ஜெயலலிதா’ என இவருக்குப் பெயர் சூட்டினார்கள். இன்று பரப்பன அக்ரஹாரா சிறைக்கும், 'ஜெயலலிதா இருக்கும் சிறை’ என்ற பாரம்பர்யம் தொற்றிக்கொண்டுவிட்டது. 
காலம் வழங்கிய அருட்கொடையான ஆட்சி அதிகாரத்தை, அதன் அருமை தெரியாமல் விளையாட்டுத்தனமாக உருட்டி விளையாண்டதன் விளைவு... வினையாகி, இன்று இருட்டுச் சிறைக்குக் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டது ஜெயலலிதாவை! 
'எனக்கு என்ன குடும்பமா... குட்டியா? தமிழக மக்கள்தான் என் குடும்பம்’ எனச் சொல்லிக்கொண்ட ஜெயலலிதா, யதார்த்தத்தில் அப்படி வாழவில்லை என்பதற்குச் சாட்சியே இந்த 66 கோடி ரூபாய். இந்த 66 கோடியின் மதிப்பை 1991-ம் ஆண்டுக் கணக்கின்படி மதிப்பிட வேண்டும். 'இந்தச் சொத்துக்களின் இன்றைய மதிப்பு 3,600 கோடி ரூபாய்க்கும் மேல்’ என அரசு வழக்குரைஞர் பவானி சிங், சிறப்பு நீதிமன்றத்தில் பதிவுசெய்துள்ளார். 
ஓர் அரசு ஊழியர் தன்னுடைய ஒவ்வொரு பைசாவின் வரவுக்கும் கணக்குக் காட்ட வேண்டும் என்ற, மிகச் சாதாரணமான வழிமுறையைக்கூட உதாசீனம் செய்துவிட்டு நினைத்தை எல்லாம் வளைத்து வசப்படுத்தி ஆண்டிருக்கிறார்கள். 
2013 அக்டோபர் 31-ம் நாள், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக ஜான் மைக்கேல் டி.குன்ஹா நியமிக்கப்பட்டார். ஜெயலலிதாவின் வழக்குரைஞர் குமாரைப் பார்த்து, 'இது என்ன மாதிரியான வழக்கு? சுருக்கமாகச் சொல்லுங்கள்’ என்று கேட்டார் நீதிபதி. 
பொதுவாக இந்த மாதிரியான இயல்பான தன்மையை நீதிபதிகளிடம் எதிர்பார்க்க முடியாது. மேலும், அரசு வழக்குரைஞர்களிடம்தான் முதலில் கேட்பார்கள். ஆனால் குன்ஹா, எதிர்த் தரப்பில் இருந்து தொடங்கினார். குமார் மொத்தக் கதையையும் சொல்லிவிட்டு, 'இப்படி பல குளறுபடிகள் உள்ள வழக்கு இது’ என முடித்தார். 
உடனே நீதிபதி, 'எல்லா வழக்குகளிலும் குளறுபடி இருக்கத்தான் செய்யும். அதைக் களைவதுதான் நம்முடைய பொறுப்பு’ என்றார். வார்த்தையைக் கவனியுங்கள். 'நீதிமன்றத்தின் பொறுப்பு’ எனப் பிரித்துச் சொல்லாமல், 'நம்முடைய பொறுப்பு’ என ஜெயலலிதா தரப்பையும் தன்னோடு சேர்த்துக்கொண்டார். 
இந்த வழக்கில் அரசியல் பின்புலங்கள் இருப்பதாக குமார் வாதிட்டபோது, கொஞ்சம் குரலை உயர்த்தினார் நீதிபதி. 'யாரும் இந்த நீதிமன்றத்தில் உணர்ச்சிவசப்பட வேண்டாம். அனைவரும் சேர்ந்தே கோப்புகளைப் பார்த்து நீதியை நிலைநாட்டுவோம்’ என்று சொன்னார். 
பொதுவாக, 'எந்த வழக்காக இருந்தாலும் பேப்பர் பேசும்’ என்பார்கள். அந்த மாதிரி, தன் முன்னால் இருக்கும் ஆவணங்களின் அடிப்படையில் முடிவுகள் எடுப்பேன் என்பதைச் சொல்லாமல் சொன்னார் நீதிபதி. 
மூன்று குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்தான் இந்த வழக்கே நடந்தது! 
1. 1991-96 வரை முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கும் அதிகப்படியான சொத்துக்களைச் சேர்த்துள்ளார். அவற்றை 32 நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். 
2. ஜெயலலிதாவுடன் சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் சேர்ந்து கூட்டுச் சதி செய்துள்ளார்கள். இது இந்தியத் தண்டனைச் சட்டம் 109 (குற்றம் செய்யத் துணிதல்), 120-பி (கூட்டுச் சதி) ஆகிய பிரிவுகளின்படி குற்றம். 
3. 66 கோடி ரூபாய்க்கு சரியான கணக்கு ஒப்படைக்காததால், ஊழல் தடுப்புச் சட்டம் 13(1) இ பிரிவின்படி குற்றம் செய்தவர்கள் ஆகிறார்கள். 
- இந்தக் குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் அப்படியே ஏற்றுக்கொண்டுவிட்டது. குற்றங்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டதாகச் சொன்ன நீதிபதி, வழங்கிய தண்டனைதான் ஜெயலலிதாவுக்கு மட்டும் அல்ல, ஊழல் அரசியல்வாதிகள் அனைவருக்குமே அடிவயிற்றைக் கலக்கிவிட்டது. 
ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டு சிறைத்தண்டனை விதித்ததுடன், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் என அளித்துள்ள தீர்ப்பு, பொதுச் சொத்தை தன் சொத்தாகச் சுருட்டும் எல்லா அரசியல்வாதிகளுக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை. 
சில நாட்களுக்கு முன் வட மாவட்டம் ஒன்றில் தி.மு.க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அதில் பேசிய முன்னாள் அமைச்சர் ஒருவர், 'ஜெயலலிதாவுக்கு எதிராகத் தீர்ப்பு வந்தவுடன் யாரும் பட்டாசு எல்லாம் வெடிக்க வேண்டியது இல்லை. வீட்டுல அமைதியா இருங்க’ என்றாராம். 
அவர் மீதும் சொத்துக்குவிப்பு வழக்கு நீதிமன்றத்தில் நடக்கிறது. அதாவது, ஊழல் அரசியல்வாதிகள் எல்லோரையுமே ரத்தம் உறைய வைத்துள்ளது இந்தத் தீர்ப்பு. 
குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள், அப்பீல் போய்விட்டு, அந்த வழக்கையே முடிக்கவிடாமல் பார்த்துக்கொண்டு, தன் வாழ்நாள் முழுக்க அதே குற்றத்தைத் தொடர்ந்து செய்துவரும் நிலைக்கு, கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்தது. குற்ற வழக்கில் தண்டனை தரப்பட்டதும் பதவி போய்விடும் என்பதே அந்த உத்தரவு. 
அதேபோல், ஒரு குற்ற வழக்கை எவ்வளவு விரைந்து முடிக்க வேண்டும் என்பதையும் நீதிபதி குன்ஹா காட்டிவிட்டார். வெறும் சிறைத் தண்டனைதானே என ஜாமீன் வாங்கிவிட்டு வீட்டில் ஹாயாக இருந்துவிடக் கூடாது என்பதால், மொத்தச் சொத்துக்களையும் பறிமுதல் செய்யவும், சம்பாதித்த சொத்தைவிட ஒரு மடங்கு அதிகமாக அபராதம் விதிக்கவும் வழிகாட்டி இருக்கிறார் குன்ஹா. 
எடியூரப்பாக்களையும், ரெட்டி சகோதரர்களையும் கொண்ட கர்நாடக மாநிலத்தில் இருந்து நீதி, நேர்மை, நியாயத்துக்கு ஆதரவான குரலாக நீதிபதி குன்ஹா உயர்ந்து நிற்கிறார். 
திருமலைப்பிள்ளை வீட்டில், தன் தலையணைக்கு அடியில், 100 ரூபாயை வைத்திருந்த பெருந்தலைவர் காமராஜரையும், நுங்கம்பாக்கம் வங்கியில் 5,000 ரூபாயை வைத்திருந்த பேரறிஞர் அண்ணாவையும் கொண்ட தமிழகத்தில் இருந்து, ஊழல் வழக்குக்காக முதலமைச்சர் பதவியில் இருந்தபடியே சிறைக்குப் போன அவமானம் ஜெயலலிதாவால் நேர்ந்துள்ளது. 
இந்தியாவில் இனி ஊழல் வழக்குகளில் தண்டனை பெறும் ஒவ்வோர் அரசியல்வாதிக்கும் முன்னதாக ஜெயலலிதாவின் பெயர் உச்சரிக்கப்படும். அந்துலேவை அவரது மாநிலத்துக்காரர்களே மறந்துபோயிருப்பார்கள். ஆனால், அரசியல்வாதிகளின் ஊழல் வழக்குகள் பேசப்படும் போதெல்லாம் அந்துலேவின் வழக்கும் பேசப்படுவதைப்போல ஜெயலலிதாவும் இனி நினைக்கப்படுவார். 
சிறுவயதில் தந்தையை இழந்து, வளர்ந்து நின்றபோது தாயை இழந்து, வழி சொல்லத் தேவையான போது அண்ணனை இழந்து, அரசியல் பாதை தொடங்கிய போது குருவான எம்.ஜி.ஆரை இழந்து தனியாக இருந்த ஜெயலலிதா, இப்போது பதவியை, மரியாதையை, நிம்மதியை இழந்து நிற்கிறார். 
குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் அந்தத் தண்டனை காலம் முடிந்து, ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. அப்படிப் பார்த்தால் 10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாது. அப்படியானால் ஜெயலலிதா இனி தேர்தலில் பங்கேற்பதே சிரமம்தான். 
கர்நாடக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் விடுதலை பெற்று வெளியில் வந்தால்தான், பத்தாண்டுகளுக்குள் தேர்தலில் போட்டியிடவே முடியும். ஒருவேளை அப்படி எதுவும் நடக்காத பட்சத்தில், அடுத்த பத்தாண்டுகளுக்கு அ.தி.மு.க., ஆட்சியில் தொடர்ந்தாலும் ஜெயலலிதா வெளியில் இருந்து அதிகாரம் செய்ய முடியுமே தவிர, அதிகாரத்தை அவர் நேரடியாகச் சுவைக்க முடியாது. இது அவரை மனரீதியாகவும் பாதிக்கச் செய்யும்.
இந்தச் சட்ட, நீதிமன்ற நடைமுறைகள் சாதாரணமாக நடந்தாலே இரண்டு ஆண்டுகளைக் கடந்துவிடும். ஊழல் வழக்குகளுக்கு எதிராக நீதிமன்றங்கள் எப்போதும் சாட்டையைச் சுழற்றி வரும் நிலையில், ஜெயலலிதா முழுமையாக வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவது அசாதாரணமான விஷயமே. 
இவை அனைத்தும் கர்நாடக மாநிலம் சம்பந்தப்பட்டதாக இருப்பதால் காலதாமதங்கள் ஏகத்துக்கும் அதிகரிக்கும். அரசியலில் அபார வெற்றிக்குப் பிறகு, மிகப் பெரிய வாழ்க்கைத் தோல்வியை அடைந்துவிட்டார். 
ஜெயலலிதா நினைத்த வாழ்க்கை இதுதானா?

Saturday, February 22, 2014

எமது குரல் உலகெங்கும் கேட்க நாம் ஓயாமல் போராட வேண்டும்! வை.கோ ஜெனீவாவுக்கு அழைப்பு!

மார்ச் 10 திகதிக்கு ஜெனீவா திடலுக்கு திரண்டு வாருங்கள் ,இதுவரை ஜெனீவா இப்படியான மக்கள் சங்கமத்தை சந்தித்திருக்க முடியாத அளவில் அணிதிரள்வோம். உலகம் திகைக்க வேண்டும் , திடுக்கிட வேண்டும். எமது குரல் உலகெங்கும் கேட்கும் வகையில் நாம் ஓயாமல் போராட வேண்டும். வை. கோபால்சாமி அழைப்பு

Monday, January 27, 2014

வடக்கில் சமாதானமாம் - கோத்தாபாய கூறுவதை நம்ப உலகத் தலைவர்கள் முட்டாள்கள் அல்ல: - சுரேஷ் பிரே­மச்­சந்­திரன்

வட மாகாண தமிழ் மக்கள் யுத்தம் முடிந்து நான்கு வரு­டங்­க­ளுக்கு பின்­னரும் இரா­ணுவக் கட்­டுப்­பாட்­டுக்­குள்­ளேயே வாழ்­கின்­றனர். இதனை உலகம் அறியும். எனவே, அங்கு சமா­தானம் நில­வு­வ­தாக பாது­காப்புச் செய­லாளர் கூறு­வதை நம்ப உலக நாடுகள் அதன் தலை­வர்கள் முட்­டாள்கள் அல்ல என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும், எம்.பி.யுமான சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தெரி­வித்தார்.
நாட்டில் சிங்­கள பெளத்த பேரி­ன­வாத சக்­தி­களை அர­சாங்­கமே தூண்டி விடு­வ­தா­கவும் அவர் தெரி­வித்தார். வெளி­நாடு சென்று தீர்வைப் பெற முடி­யாது. எமது குடும்பம் அர­சியல் வர­லாறு கொண்ட குடும்பம் என பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜபக்ஷ தெரி­வித்­துள்ள கருத்து தொடர்­பாக தமது பக்க நிலைப்­பாட்டை தெளி­வு­ப­டுத்­து­கை­யி­லேயே சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் இதனைத் தெரி­வித்தார்.

அவர் மேலும் இது தொடர்­பாக தெளி­வு­ப­டுத்­து­கையில்,

யுத்தம் முடிந்­து­விட்­டது. ஆனால் சமா­தானம் வந்­து­விட்­ட­தாகக் கூற முடி­யாது. தமிழ், சிங்­கள மக்கள் இணைந்து ஒற்­று­மை­யாக வாழும் சூழ்­நிலை இன்­னமும் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. எனவே, பாது­காப்புச் செய­லாளர் நாட்டில் சமா­தானம் நில­வு­வ­தா­கவும், அதனை சீர்­கு­லைக்க வெளி­நா­டுகள் முயற்­சிப்­ப­தா­கவும் கூறு­வது 'மந்­திரம்' ஓது­வ­தற்கு சம­மா­ன­தாகும்.

யுத்தம் முடிந்து 4 வரு­டங்கள் கழிந்த பின்­னரும் வட­ப­குதி தமிழ் மக்கள் இரா­ணுவக் கட்­டுப்­பாட்­டுக்­குள்­ளேயே அடக்­கி­யா­ளப்­ப­டு­கின்­றனர். இரா­ணுவ முகாம்கள் பல அகற்­றப்­பட்­டுள்­ள­தாக கூறப்­பட்­டாலும் அவ்­வா­றான நிலை அங்கு கிடை­யாது. மாறாக இரா­ணுவ முகாம்கள் விஸ்­த­ரிக்­கப்­பட்டு வருகின்­றன. அதற்­காக மக்­களின் பூர்­வீக சொந்­தக்­கா­ணிகள் சுவீ­க­ரிக்­கப்­ப­டு­கின்­றன.

உலகில் எந்­த­வொரு நாட்டில் மக்கள் இரா­ணுவ அடக்கு முறைக்குள் ஆளப்­ப­டு­கின்­ற­னரோ, அங்கெல்லாம் போராட்­டங்கள் தொடர்ந்து கொண்­டேதான் இருக்கும். இதுதான் உலக நியதி. இதனை மாற்ற முடி­யாது. நாட்டில் சமா­தானம் இல்லை. யுத்தம் முடிந்து 4 வரு­டங்கள் கடந்­து­விட்­டன. அர­சாங்கம் சிங்­கள பெளத்த பேரி­ன­வாதச் சக்­தி­களின் சிறைக்­கை­தி­யாக சிக்­கிக்­கொண்­டி­ருப்­ப­தோடு மட்­டு­மல்­லாது சிங்­கள பெளத்த பேரி­ன­வாதச் சக்­தி­களை தூண்­டி­விட்டு இந்துக் கோவில்கள், முஸ்லிம் பள்­ளி­வா­சல்கள், கிறிஸ்­தவ தேவா­ல­யங்­களை உடைக்­கின்­றது.
இதன்­மூலம் தமி­ழர்­க­ளுக்கு உரி­மை­களை வழங்க மாட்டோம். மாறாக, சிங்­கள பெளத்த பேரி­ன­வாத தீவி­ர­வாத சக்­தி­களின் அடி­மை­க­ளா­கவே தமி­ழர்கள் வாழ வேண்டும். தமி­ழர்­க­ளுக்கு உரிமை என்ற பேச்­சுக்கே இட­மில்லை என்­பதே அர­சாங்­கத்தின் கொள்­கை­யாகும். அர­சாங்­கத்தின் சமா­தா­னமும், தேசிய நல்­லி­ணக்­கமும் உதட்­ட­ள­வி­லேயே உள்­ளது. தவிர நடை­முறை சாத்­தி­ய­மா­ன­தாக இல்லை.

எமது பிரச்­சி­னையை உள்­நாட்டில் தீர்க்க முடியும். வெளி­நா­டுகள் தேவை­யில்லை. எமக்கு அர­சியல் அனு­பவம் உள்­ளது போன்ற பாது­காப்புச் செய­லா­ளரின் மந்­தி­ரங்­களை சர்­வ­தேசம் செவி­ம­டுக்­காது. ஏனென்றால் நடை­மு­றையில் நாட்டில் எது­வுமே இல்லை. சர்­வ­தே­சமோ, அதன் தலை­வர்­களோ இவர்­களின் மந்­தி­ரங்­களை கேட்­கு­ம­ள­விற்கு முட்­டாள்­க­ளல்ல.

எதிர்வரும் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு மாநாட்டில் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்குமென்பதை எதிர்பார்த் திருக்கின்றோம். எமது மக்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொள்வதற்கான முன்னகர்வுகளையும் நாம் மேற்கொண்டு வருகின்றோம் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

நீயா-நானா நிகழ்வில் நீக்கப்பட்ட தலைவர் பிரபாகரனைப்பற்றிய கருத்துக்கள்!

நேற்றைய நீயா-நானா நிகழ்வில் பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டிருந்தன. தோழர்.கி.வே.பொன்னைய்யனின் வாதங்கள் ஏனோ பதியப்படாமல் போனது வருத்தமளிக்கிறது. மிக நீண்ட நேரம் பதியப்பட்ட இந்த நிகழ்வு ஒளிபரப்பின் போது சுருக்கப்பட்ட காரணம் என்றாலும், குமரேசன்.அசோக் மற்றும் இன்னும் பிற நண்பர்களின் விரிவான வாதங்கள் பதிந்திருந்தால் விவாதத்தினை இன்னும் சிறப்பாக கண்டிருக்க முடியும். கி.வே பொன்னையனும்-குமரேசன் அசோக்கும் பல தகவல்களை விவாதித்திருந்தார்கள்.. எப்பொழுதும் இருப்பதைப் போல ஒன்றுக்கொன்று எதிர் நிலையில் இருக்கும் கருத்துக்களைப் போன்றதல்ல நேற்றய தலைப்பு. இதனாலேயே பலவிடயங்களை விரிவாக பலரால் பேச முடியாமல் போயிற்று.

அதே போல தமிழீழ தேசியத் தலைவர் தோழர். பிரபாகரனைப்பற்றி பதிந்த கருத்துக்களும் நீக்கப்பட்டிருக்கின்றன. எனக்கு பிடித்த பேச்சாளர்களாக மூவரை குறிப்பிட்டிருந்தேன் 1. மால்கம் எக்ஸ், 2. தந்தைப் பெரியார், 3. தலைவர்.தோழர்.பிரபாகரன். இதில் மூன்றாவது நீக்கபப்ட்டிருந்தது. கி.வே பொன்னைய்யனும் இதே பதிவினை செய்திருந்தார்.

தொலைக்காட்சிகளில் செய்யப்படும் தணிக்கை வருத்தத்திற்குரியது. எத்தனையோ ஆபாசக் காட்சிகளை, குடும்ப வன்முறைக் காட்சிகளை, தணிக்கை செய்யாத தொலைக்காட்சிகள் ”தலைவர் பிரபாகரனின்” பெயரை உடனடியாக தணிக்கை செய்வதை காணமுடிகிறது.. இது முதல்முறைகிடையாது... நேரடி ஒளிபரப்பினைத் தவிர்த்து வேறு எங்கும் முழுமையாக பேசிவிடமுடிவதில்லை..
தலைவர் பிரபாகரனை அவரது அரசியல் நுணுக்கத்திற்காகவும், சர்வதேச அரசியலில் ஏற்படுத்திய தாக்கத்தினைப் பற்றியும், 'டி ஃபேக்டோ' நாடாக "சுயாட்சி பிரதேசமாக இருந்த தமிழீழத்தின்" ஆட்சியைப் பற்றியும் விரிவாக பேசும் காலம் வரும். அதனை உருவாக்குவது நம் அனைவரின் கடமை.

வணிகப் பொருளாக ‘அடையாளமாக பயன்படுத்தி’ வணிகத்தினை பெருக்கமட்டுமே பயன்பட்ட நிகழ்வுகள் மாறி நேர்மையான விவாத களம் அமைக்கப்படவேண்டிய நெருக்கடியை உருவாக்கவேண்டும்,. .. தொடர்ச்சியான போராட்டங்களின் ஊடாகவே இதனை சாத்தியப்படுத்த முடியும்..

குறிப்பு: இதே விஜய் தொலைக்காட்சி தமிழீழத் தேசியத் தலைவரின் வரலாற்றை தானே தயாரித்து ஒளிபரப்பும் அதற்கான காலம் மிக விரைவில் வரும், இது தமிழ் இணையத்தின் கருத்து.
சென்னை - தமிழன்