இலங்கைத் தமிழர் பிரச்சனையை தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தங்களுடைய அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும், அதனால் பாதிக்கப்படுவது இலங்கைத் தமிழர்களே என்றும் இலங்கை வட மாகாணத் தேர்தலில் தமிழ்த் தேச கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
ஈழத் தமிழினத்தின் அரசியல் விடுதலைப் போராட்டத்தை தொடக்க காலம் தொட்டு கொச்சைபடுத்தியும், தமிழீழ விடுதலைப் போராளிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்தும் வந்த ஒரு ஆங்கில நாளேட்டிற்கு அளித்துள்ள பேட்டியில் மேற்கண்டவாறு விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டிற்கும், தமிழீழ மக்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்திற்கும் உள்ள தொடர்பை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை அறிந்தவர்கள் எவரும் விக்னேஸ்வரன் கூறுவதை ஏற்க மாட்டார்கள். ஈழத் தமிழரின் வாழ்விற்கும், அரசியல் சம உரிமைக்கு ஒரே தீர்வு தனித் தமிழ் ஈழமே என்று தமிழ்நாடு முடிவு செய்யவில்லை. அதனைத் தீர்மானத்தவர், ஈழத் தமிழினத்தின் அரசியல் சம உரிமைக்காக சாத்வீக வழியில் போராடிய ஈழத் தந்தை செல்வா அவர்கள்தான் என்பதை விக்னேஸ்வரன் தெரியாதோ? ஈழத் தமிழர்களின் அரசியல் சம உரிமைப் போராட்டத்தை ஒடுக்க முதலில் சிங்கள காவல் துறையையும், பிறகு இராணுவத்தையும் ஏவிவிட்டு தமிழர்களை திட்டமிட்ட இன அழித்தலுக்கு ஆளாக்கிய இலங்கையை ஆண்டு வந்த சிங்கள பெளத்த இனவாத அரசுகளின் இனவெறிபிடித்த நடவடிக்கைகளே அங்கு ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்கு வித்திட்டது என்கிற வரலாறும் விக்னேஸ்வரன் அறியாதவரோ? அதனால்தான், ஏதோ தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தமிழீழ விடுதலையை பேசுவதனால்தான் இலங்கைத் தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று கதை விடுகிறார்.
இலங்கைத் தமிழினத்தின் அரசியல் விடுதலை வரலாறு விக்னேஸ்வரனுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஏனென்றால் அவர் கொழும்புவில் சட்டப் பணியாற்றிக்கொண்டு, பிறகு நீதிபதியாகி வசதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தவர். சிங்கள அதிகார, அரசியல் குடு்ம்பங்களோடு திருமண சம்பந்தம் செய்துகொண்டு பாதுகாப்பாக வாழ்ந்து வந்தவர். எனவே, ஈழத் தமிழினத்தின் 60 ஆண்டுக்கால துயரம் விக்னேஸ்வரன் அறியாதது. அந்த துயரத்திற்குக் காரணமான சிங்கள பெளத்த இனவாத அரசியல் அவருக்கு புரிந்திருக்கவில்லை. அதனை விக்னேஸ்வரன் முழுமையாக புரிந்துகொள்ள வேண்டுமெனில், ஈழத் தந்தை செல்வா ஆற்றிய உரைகளின் தொகுப்பாக வந்துள்ள புத்தகங்களை படித்துத் தெளிய வேண்டும்.
இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் இடையிலான பிரச்சனை, ஒரு குடும்பத்தின் கணவருக்கும் மனைவிக்குமான பிரச்சனை போன்றது, அதில் பக்கத்து வீட்டார் தலையிடக்கூடாது, நாங்கள் அடித்துக்கொள்வோம், பிறகு கூடிக்கொள்வோம் என்று விக்னேஸ்வரன் அந்த பேட்டியில் கூறியுள்ளார். விக்னேஸ்வரன் கூறியுள்ள இந்த எடுத்துக்காட்டை தமிழீழ மக்களிடம் கூறினால் வாயால் சிரிக்க மாட்டார்கள்! சிங்கள பெளத்த இனவாத அரசியலின் அடிப்படையை புரியாத அல்லது இல்லாததுபோல் காட்டிக்கொள்ள விக்னேஸ்வரன் முயற்சிக்கிறார். தமிழருக்கும் சிங்களருக்கும் உள்ள பிரச்சனைதான், இதில் பக்கத்து வீட்டுக்காரன் தலையிடக்கூடாது என்று கூறியுள்ள விக்னேஸ்வரன், பிறகு இந்திய அரசின் தலையீட்டை பாராட்டுகிறார்! ஆக, ஈழத் தமிழினத்திற்காக குரல் கொடுக்கும் தமிழ்நாடு உங்களுக்கு பக்கத்து வீட்டுக்காரன் என்றால், டெல்லி உங்களுக்கு யார்? அதனை விளக்க வேண்டும்.
தமிழருக்காக பேசும் சிங்களவர்களும் உள்ளார்கள் என்று கூறுகிறார். தமிழர்களுக்காக நியாயமாக பேசும் சிங்கள புத்திசீவிகள் அனைவரும் தமிழீழ விடுதலையே தமிழருக்கான ஒரே தீர்வு என்று கூறுகிறார்கள் என்பதை விக்னேஸ்வரனை விட நாங்கள் அதிகம் அறிந்தவர்கள்.
இன்றிலிருந்து இரண்டு மாதங்களுக்கு முன் வரை யாருக்கும் தெரியாத நபர் விக்னேஸ்வரன். ஆனால், அவரை தமிழ்த் தேச கூட்டமைப்பு வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கிறது என்றால், அதன் பின்னணி சதியில் சிங்கள பெளத்த இனவாத அரசும், டெல்லியும் உள்ளது என்பது வெள்ளிடை மலை. தமிழனின் அரசியலைக் கொண்டே தமிழினத்தின் விடுதலையை முடக்குவது என்கிற சீறிய சதித் திட்டத்தின் வெளிப்பாடுதானே விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளது? இந்த உண்மையெல்லாம், சிங்கள இனவாத இராணுவத்தின் கொடூரங்களால் தங்களின் கணவரையும், பிள்ளைகளையும் இழந்து தனிமரமாய் நிற்கும் ஈழத் தாய்மார்களுக்குத் தெரியும், விக்னேஸ்வரன்களுக்குத் தெரியாது.
பதவிக்காக தமிழினத்தின் விடுதலைப் போராடத்தை விலை பேசும் இப்படிப்பட்ட கொழும்புக் காக்காய்களுக்கு காயம் பட்டு முணங்கிக் கொண்டிருக்கும் தமிழினத்தின் வலி தெரியுமா? இனவெறி அரசியலால் சற்றும் பாதிக்கப்படாத உங்களைப் போன்றவர்களுக்கு தமிழினத்தின் விடுதலை உணர்வு சற்றும் தீண்டாதது எங்களுக்கு எந்த விதத்திலும் வியப்பளிக்கவில்லை. ஈழத் தமிழினத்தின் விடுதலைப் போராட்ட வரலாறு எண்ணிலடங்கா துரோகிகளை கண்ணுற்றுள்ளது. அந்த பட்டியலில் நீங்களும் உள்ளீர்கள் என்பது எங்களுக்காக புரியாது?
தமிழிழ மக்களின் உண்மைப் பிரதிநிதிகள் அவர்களின் விடுதலைக்காகவும், மானம் காக்கவும் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளே. தம் இனம் காக்க களம் புகுந்து உயிர் தியாகம் செய்த மாவீரர்களே ஈழத் தமிழினத்தின் வழிகாட்டிகள். ஈழத் தமிழினத்தின் துயரத்தை துடைக்க முத்துக்குமார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் தங்கள் இன்னுயிரை தீக்கீரையாக்கியுள்ளனர். அவர்களின் தியாகமே, ஈழத் தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தோடு எம் தமிழ்நாட்டையும், அதன் அரசியலையும் இணைத்துவிட்டது. அதன் மீது கேள்வி எழுப்பும் எந்த யோக்கிதையும் விக்னேஸ்வரனுக்குக் கிடையாது. எம் இனத்தின் விடுதலைக்காக உயிர் நீத்த ஒரு மாவீரராவது இந்த விக்னேஸ்வரன் குடும்பத்தில் உள்ளரா? தமிழீழ விடுதலையின் தியாக ரூபங்களான விடுதலைப் புலிகளே எம்மக்களின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள். அவர்களின் இடத்தில் ஒருபோதும் தமிழ்த் தேச கூட்டமைப்பு வந்துவிட முடியாது. புலிகளின் இடத்தை பூனைகள் நிரப்ப முடியாது. அது நடக்கவும் நடக்காது, உலகத் தமிழினம் அதனை ஒருபோதும் அனுமதிக்காது.
வட மாகாணத் தேர்தலில் தமிழ்த் தேச கூட்டமைப்பு வெற்றி பெறலாம், விக்னேஸ்வரன் முதலமைச்சர் ஆகலாம். ஆனால் அதுவே ஈழத் தமிழினத்தின் விடுதலை கோரிக்கையை விட்டுத் தந்துவிடுவதாக ஆகாது. நாங்கள் ஒருபோதும் சிங்களத் தலைமையையோ அல்லது சிங்கள அரசியல் கட்சிகளையோ ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பதை வெளிப்படுத்தவே, தமிழீழ மக்கள் தமிழ்த் தேச கூட்டமைப்பிற்கு வாக்களிக்கின்றனரே தவிர, த.தே.கூ.தான் எங்களின் அரசியல் பிரதிநிதிகள் என்று சான்றளிக்க அல்ல என்பதை விக்னேஸ்வரனும், அந்த கூட்டமைப்பின் பதவிப் பித்தர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
தமிழீழ விடுதலையே தமிழினத்தின் தாகம்.
நாம் தமிழர் கட்சிக்காக,
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.