Wednesday, April 03, 2013

8கோடி தமிழர்களை கொண்ட தமிழ்நாட்டை சீண்டவேண்டாம்- சிங்களவர்களுக்கு மனோ எச்சரிக்கை


இந்தியா துண்டு துண்டாக உடைந்து போக வேண்டும் என தேசிய தேசப்பற்று இயக்க தலைவர் குணதாச அமரசேகர என்ற பல் வைத்தியர் இந்தியாவை நோக்கை சாபம் போடுகிறார். விமல் வீரவன்சவும், சம்பிக்க ரணவகவின் தலைவர் ஓமல்பே சோபித தேரரும் தமிழகத்தை திட்டி தீர்க்கிறார்கள். போதாக்குறைக்கு கிரிக்கட் வீரர் குமார் சங்ககாரவும் சின்ன ஒரு தமிழ்நாடு என்பது மிகப்பெரிய இந்தியா இல்லை என்று கிண்டல் செய்கிறார். நீங்கள் எல்லோரும் சேர்ந்து உங்கள் முட்டாள்தனமான சிங்கள பெளத்த தீவிரவாதம் மூலம் எட்டு கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டை சிண்டி விட்டு,அதை தனிநாடு ஆக்கிவிட  வேண்டாம்.

இந்தியா ஒன்றாக இருப்பது ஒன்றுதான் இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு இருக்கின்ற ஒரே பாதுகாப்பு. இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் இந்த பெரும் உண்மையை உங்களுக்கு விளக்கி சொல்லுகிறதா என எனக்கு தெரியவில்லை. ஆனால், நான் சொல்கிறேன். இந்த அடிப்படை உண்மையை புரிந்துகொண்டு நடந்துகொள்ளுங்கள் என ஜனநாயக மக்கள் முன்னணி மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று கொழும்பில் நடைபெற்ற போது தமிழ்சிங்கள மொழிகளில் கருத்து வெளியிட்ட மனோ கணேசன் சிங்கள பெளத்த அமைப்புகளை குறிப்பிட்டு மேலும் கூறியதாவது,

இந்தியாவில் இன்று மாணவர் போராட்டம் உச்சநிலை அடைந்துள்ளது. அரசியல் கட்சிகள் சட்டபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. நேற்று அங்கு நடிகர்களும் உண்ணாவிரதம் இருந்துள்ளார்கள். இதற்கு பதிலாக சிலர் இலங்கைக்கு தமிழ் திரைப்படங்களை கொண்டு வரக்கூடாது என சொல்கிறார்கள். இலங்கை ஒரு பெரிய திரைப்பட சந்தை இல்லை. இதனால் இங்கு தமிழ்நாட்டு திரைப்படம் வராதது பற்றி எல்லாம் அவர்கள் கணக்கிலும் எடுக்க மாட்டார்கள். இந்தியாவில் இருந்து எந்த பொருளும் கொண்டு வர விட மாட்டோம் என இன்னும் சிலர் சொல்கிறார்கள். அங்கிருந்து எதுவும் வராவிட்டால் அது நமக்குத்தான் பெரும் கஷ்டம். இந்தியாவில் இருந்து எதுவும் வேண்டாம் என்றால் ஏன் கெளதம புத்தரை மாத்திரம் இங்கு வைத்துள்ளீர்கள்? அவரை திருப்பி அனுப்பி விடலாமே.
இந்தியாவையும், தமிழ் நாட்டையும் கரித்துகொட்டி, சாபம் இட்டு, ஜெயலலிதா, கருணாநிதி, வைகோ, சீமான், நெடுமாறன் மற்றும் போராடும் மாணவர்களையும் கண்டபடி  திட்டி தீர்த்து அங்கு தமிழ் இன உணர்வை கொழுந்து விட்டு எரிய செய்து இந்திய மாநிலமான தமிழ்நாட்டை தனியொரு  நாடு ஆக்கி விடாதீர்கள்.

எண்பது மில்லியன் தமிழர் வாழும் தமிழ்நாடு தனிநாடு ஆகும் பட்சத்தில் அது இலங்கைக்கு பெரும் ஆபத்தில் முடியும். தனித்தமிழ்நாட்டின் முதல் நடவடிக்கை இலங்கைக்கு எதிராகத்தான் முடியும். இதை நான் விரும்பவில்லை. இரு தரப்பிலும் வாழும் தீவிரவாதத்துக்கும் மத்தியில் சிக்கி தவிக்க நான் விரும்பவில்லை. ஆனால் இந்த உண்மையை, இந்தியா துண்டு துண்டாக உடைத்து போக வேண்டும்  என பகிரங்கமாக பேசும் சிங்கள தீவிரவாதிகள் உணர வேண்டும். இவர்கள் தங்கள் தலையில் மண்ணை அள்ளி  கொட்டிகொள்கிறார்கள்.
இங்கே ஜெயலலிதாவை திட்டுகின்றவர்கள் ஒரு உண்மையை உணர வேண்டும். தமிழகம் சென்ற பிக்குமார்களை தாக்கியவர்களை தமிழக அரசு கைது செய்துள்ளது. ஆனால், இங்கே பெபிலியானவில் முஸ்லிம் வர்த்தக நிலையத்தை தாக்கி, ஒருவரின் மண்டையை உடைத்த காடையர்களை கைது செய்து மன்னிப்பு வழங்கி விடுவித்துவிட்டார்கள்.

கிளிநொச்சியில் சனிக்கிழமை நடந்த கூட்டமைப்பு கூட்டத்தில் மக்கள் பிடித்து கொடுத்த காடையர்களை போலிஸ் உடனடியாக விடுவித்துவிட்டது. அதில் ஒருவர் போலிஸ் புலனாய்வுதுறை சிஐடி அதிகாரி. இதேபோல்தான் தெள்ளிபளையிலும் மக்கள் பிடித்து கொடுத்த குற்றவாளிகளை போலிஸ் விடுவித்தது.

இன்று காலை கிளிநொச்சியில் உதயன் பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டு நால்வர் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இது முதன் முறை அல்ல. இத்தகைய சம்பவங்களில் ஈடுபடுபவர் எவரும் எப்போதும் கண்டு பிடிக்கப்படுவது இல்லை.
இதுதான் இலங்கையின் கோதாபய ராஜபக்ச போலிஸ். ஆனால், இந்த கோதாபய ராஜபக்சவின் போலீசைவிட ஜெயலலிதாவின் தமிழ்நாடு போலீஸ் நேர்மையாக தனது கடமையை செய்துள்ளது இன்று நிரூபணமாகியுள்ளது.

இந்திய மாணவர்கள் இலங்கை தீவில் தனி தமிழீழத்தையும், அதற்கான பொது வாக்கெடுப்பையும் கோரி போராடுகிறார்கள். அதை நினைந்து சந்தோசப்படுங்கள். ஏனென்றால் அதனால்தான் இந்திய மத்திய அரசு இந்த கோரிக்கைகளை தனது தேச நலனுக்கு எதிரான தீவிரவாத கோரிக்கைகள் என்று சொல்லி நிராகரித்துள்ளது. அதனால் இன்று இலங்கை நாடு தப்பி பிழைத்துள்ளது.

தமிழீழம், பொதுவாக்கெடுப்பு ஆகிய கோரிக்கைகளை விட்டுவிட்டு, அந்த மாணவர்கள் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை அமுல் செய்ய கோரி போராடினார்கள் என்றால் இந்திய மத்திய அரசு மிகப்பெரும் நெருக்கடியில் விழும்.  13ம் திருத்தமும், மாகாணசபையும், முக்கியமாக வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைப்பும் இந்திய மத்திய காங்கிரஸ் அரசு, இலங்கை அரசுடன் செய்துகொண்ட ராஜீவ்-ஜேஆர் ஒப்பந்த சரத்துகளாகும்.  இரு நாடுகள் மத்தியில் செய்யப்பட்ட இந்த ஒப்பந்த அமுலாக்கல் கோரிக்கையை இந்தியாவின் மத்திய அரசு இன்று நிராகரிக்க முடியாது. இந்தியாவில் எந்த ஒரு கட்சியும் நிராகரிக்க  முடியாது.

போராடும் தமிழக மாணவர்களுக்கு நான் இந்த உண்மையை எடுத்து கூறுகிறேன். இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அமுல் செய்யுமாறு உங்கள் நாட்டு அரசாங்கத்தை வலியுறுத்தி ஜனநாயக ரீதியாக போராடுங்கள் என நான் அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
எனவே நிலைமை மோசமாகும் முன், இந்த போராட்டங்கள் அனைத்துக்கும் மூல காரணமான தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் அதிகாரத்தை பகிர்ந்து அளித்து தீர்வு காணுங்கள்.  தமிழ் நாட்டை தூண்டி விட்டு இந்திய மத்திய அரசை நெருக்கடியில் தள்ளி, இலங்கையை ஆபத்தில் தள்ள வேண்டாம் என இலங்கை அரசாங்கத்தையும், சிங்கள-பெளத்த தீவிரவாத கட்சிகளையும் கோருகிறேன்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.