சிறிலங்கா அரசாங்கமும், சீனா அரசுத்துறை நிறுவனமான சீன மேர்ச்சன்ட் ஹோல்டிங்ஸ் இன்ரநசனல் நிறுவனமும், இணைந்து, 20 அடி கொண்ட 18 ஆயிரம் கொள்கலன்களை ஏற்றிய மிகப் பெரிய கப்பல்களை கையாளும் துறைமுகத்தை அமைத்துள்ளன.
500 மில்லியன் டொலர் செலவிலான இந்தத் திட்டம், 2006இல் ஆரம்பிக்கப்பட்டது. தெற்காசியாவிலேயே, மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களைக் கையாளக் கூடியதான, ஆழ்கடல் முனைய வசதி கொண்ட, ஒரே துறைமுகம் இதுவாகும்.
புதிய முனையத்தின் துறை முக கடல் ஆழம் 18 மீற்றராகும். முன்னதாக இது 14 தொடக்கம் 15 மீற்றர் ஆழத்தைக் கொண்டதாகவே இருந்தது. இதன்மூலம் மிகப் பெரிய கொள்கலன், சரக்குக் கப்பல்களை இலகுவாக துறைமுகத்தில் நிறுத்த முடியும். பிரதான முனையம், தனியார்துறையினரால் கட்டப்பட்டுள்ளது.
தலா 1200 மீற்றர் கொண்ட மூன்று முனையங்களிலும், கப்பல்களை அணைக்கவும், ஆண்டுக்கு 75 மில்லியன் கொள்கலன்களை கையாளவும், வசதிகள் உள்ளன. இன்று தெற்கு முனையம் மட்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிழக்கு முனையம், 2014ம் ஆண்டில் பயன்பாட்டுக்குத் தயாராகும்.
இந்தத் திட்டத்தின் எல்லாக் கட்டுமானப் பணிகளும், 2020ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பு துறைமுக விரிவாக்கத் திட்டத்தின் மூலம், 10 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 15 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை, மேற்குலக நாடுகள் மற்றும் இந்தியா என்பன, மனிதஉரிமை விவகாரங்களை காரணம் காட்டி அழுத்தம் கொடுத்து வருகின்ற நிலையில், சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் சீனாவின் முதலீடுகள், புதுடெல்லிக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், புதிய கொழும்புத் துறைமுக முனையம் குறித்து இந்தியா அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், அதனால் அதிகம் பயனடையப் போவது இந்தியாவே என்றும் சிறிலங்கா துறைமுக அதிகாரசபையின் தலைவர் பிரியத் பந்து விக்கிரம கூறியுள்ளார்.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.