Tuesday, April 06, 2010

சட்டீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தாக்குதலில் 73 காவலர்கள் பலி _

சட்டீஸ்கர் மாநிலம் டாண்டேவாடாவில் இன்று காலை மாவோயிஸ்ட்கள் நடத்திய படு பயங்கரமான தாக்குதலில் மத்திய ரிசர்வ் பொலிஸ் படையைச் சேர்ந்த 73 காவலர்கள் பலியாயினர்.

சடலங்களை மீட்க ஹெலிகொப்டர் அனுப்பப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

120 பேர் கொண்ட சி.ஆர்.பி.எஃப். படையினர் இன்று காலை பாதை திறப்பு ஒன்றில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்தனர். சிண்டல்னர், டர்மெட்லா ஆகிய பகுதிகளுக்கு இடையே வந்துகொண்டிருந்தபோது, முக்ரனா வனப்பகுதியில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சுமார் 1000 பேர் கொண்ட மாவோயிஸ்ட்கள் இத்தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

முதலில் காவல்படையினர் வந்த வாகனம் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திறந்த வெளியில் வந்த படையினர் மீது மாவோயிஸ்ட்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

மேலும் 6 இடங்களில் மாவோயிஸ்ட்களுக்கும், காவல்துறையினருக்கும் சண்டை நடந்து வருவதாகவும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. மாநிலத்தின் உயர் காவலதிகாரிகள் தாக்குதல் நடந்த இடத்திற்கு விரைந்துள்ளனர்.

இந்தத் தாக்குதலை காட்டுமிராண்டித்தனமானது என்று வர்ணித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தான் அதிர்ச்சியில் உறைந்திருப்பதாகத் தெரிவித்தார்.

மாவோயிஸ்ட்கள் நாட்டின் முதல் எதிரிகள் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று பேசியிருந்தார். இதையடுத்தே இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.மேலும் அடர்ந்த வனப்பகுதி என்பதால் உடல்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.