Sunday, June 16, 2013

இயக்குநர் மணிவண்ணன் மறைவு கலை உலக பகுத்தறிவுப் போராளி மறைந்தார்! - வைகோ இரங்கல்

வைகோ இரங்கல்
காலத்தால் அழியாத காவியங்கள் பலவற்றை இயக்கியவரும், தலைசிறந்த சிந்தனையாளருமான   மணிவண்ணன் மறைந்தார் என்ற செய்தி பேரிடியாகத் தாக்கிற்று. தாங்க முடியாத அதிர்ச்சிக்கும், துயரத்துக்கும் ஆளானேன்.

எழுத்திலும் பேச்சிலும், அனைவரையும் வசீகரிக்கும் பேராற்றல் பெற்ற மணிவண்ணன், நடிகராகவும் முத்திரை பதித்தார்.
தமிழ் இன மீட்சிக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட கலை உலகப் போராளி மணிவண்ணன், தமிழ் ஈழ விடுதலைப்புலிகளுக்காகத் துணிச்சலுடன் ஆதரவுக்குரல் எழுப்பி வந்தார்.  தமிழ் ஈழ விடுதலைக்கான பயணத்தில் இன்னும் அளப்பரிய பணிகளைச் செய்யும் எண்ணமும், திறமும் கொண்டு, இந்த இலட்சிய ஏந்தல் உழைத்திடும் வேளையில், இயற்கை அவரைப் பறித்துக் கொண்டதை எண்ணுகையில், வேதனை மேலிடுகிறது.
திராவிட இயக்கத்தில் சோதனைகளை எதிர்கொண்டு நான் போராடியபோது, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உருவான தொடக்க காலத்தில், இயக்குநர் மணிவண்ணன் எழுத்திலும், மேடைப் பேச்சிலும், தோள்கொடுத்துத் துணைநின்று, ஆதரித்த பண்பும் பாங்கு, என்றும் என் எண்ணத்தில் நிலைத்து இருக்கும். ஆண்டுகள் பலவாக அவருடன் பழகிய உன்னதமான நாள்களை நான் எப்படி மறக்க முடியும்?
அவரது மறைவு, பகுத்தறிவு இயக்கத்துக்கு, கலை உலகுக்கு, தமிழ் ஈழப் போர்க்களத்துக்கு ஈடு செய்யவே முடியாத பேரிழப்பாகும்.
அவரை இழந்து கண்ணீரில் பரிதவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், அவரை நேசிக்கும் அனைத்துத் தமிழ் உள்ளங்களுக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்ணீரைக் காணிக்கை ஆக்குகின்றேன்.
‘தாயகம்’ வைகோ
சென்னை - 8 பொதுச்செயலாளர்
15.06.2013 மறுமலர்ச்சி தி.மு.க.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.