[சனிக்கிழமை, 01 டிசெம்பர் 2007] தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரையை இந்திய கொள்கை வகுக்கும் அமைப்பான றோ, வழமைபோல் அபத்தமாக புரிந்து கொண்டுள்ளதாகத் தெரிகிறது. தேசியத் தலைவரின் மாவீர நாள் உரை தொடர்பில் தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் குமுதம் ரிப்போர்ட்டரின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சுப. தமிழ்ச்செல்வனின் படுகொலையால் தமிழ்நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை கட்டுக்குள் வந்த ஒருசில நாட்களுக்குள்ளாகவே, புலிகளின் தலைவர் பிரபாகரன் பேசிய பேச்சால் காங்கிரஸ் தலைவர்களும், மத்திய அரசின் உளவுப் பிரிவும் கொதித்துப் போயுள்ளது. காங்கிரஸ் தலைவர்களையும், மத்திய அரசின் உளவுப்பிரிவையும் ஒரே நேரத்தில் உஷ்ணமாக்கும் விதத்தில் பிரபாகரன் பேசியதுதான் என்ன? மத்திய அரசின் உளவுப்பிரிவான "ரா" அமைப்பைச் சேர்ந்த அதிகாரி ஒருவரிடம் பேசினோம். தனது பெயரை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் பேசினார் அவர். சுப.தமிழ்ச்செல்வனின் படுகொலையைக் கண்டித்து முதல்வர் வெளியிட்ட இரங்கற்பா, அரசியல் கட்சிகள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் ஆகியவற்றால் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஆவேசமடைந்து, புலிகளுக்கு ஆதரவான பிரசாரத்தைத் தடுத்து நிறுத்த வேண்டுமென தமிழக அரசை வற்புறுத்தினார்கள். மேலும், காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டத்திலும் புலிகளின் ஆதரவு நிலையைக் கண்டித்துத் தீர்மானம் போடப்பட்டது. அதன்பிறகும், தமிழ்நாட்டில் புலிகளுக்கு ஆதரவான குரல்கள் ஒலிப்பது தொடர்ந்ததே தவிர, முற்றிலுமாக நின்றபாடில்லை. அதனால்தான், மத்திய இணையமைச்சர் இளங்கோவன், புலிகளுக்கு ஆதரவான பேனர்களை அப்புறப்படுத்த வேண்டுமென எச்சரித்தார். ஆனால், அவரது உருவப் பொம்மையையே தூக்கிலிடும் அளவிற்கு புலிகளின் ஆதரவாளர்கள் தீவிரம் காட்டியதைப் பற்றிய விவரம் மத்திய அரசுக்குச் சென்றவுடன் கவலையடைந்த மத்திய அரசு, தனது அதிருப்தியை மாநில அரசுக்குத் தெரிவித்தது. அதன் எதிரொலியாகத்தான், கடந்த 26 ஆம் தேதி அவசர அவசரமாக தமிழக காவல்துறை இயக்குனர் விளம்பரம் ஒன்றை வெளியிட்டார். இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாகச் செயல்படுபவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கடுமையாக எச்சரித்ததன் விளைவாக, தமிழகத்தில் புலிகளின் ஆதரவுக் குரல்கள் அமைதியாகின. ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்பு தமிழ்நாட்டில் அடங்கியிருந்த விடுதலைப்புலிகளின் ஆதரவு நிலை, இப்போது வெளிப்படையாகக் குரல் கொடுக்கும் நிலைக்கு வந்ததுதான் மத்திய அரசை அதிர்ச்சியடைய வைத்தது. இந்த நேரத்தில்தான் புலிகள் அமைப்பு கடைப்பிடிக்கும் மாவீரர் தினமான நவம்பர் 27 இல் பிரபாகரன் என்ன பேசுகிறார் என்பதை உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்தோம். கடந்தாண்டுகளைப் போல் இல்லாமல், இந்தாண்டு தனது பேச்சில் பிரபாகரன், தமிழ்நாட்டில் புரட்சியை உருவாக்கும் விதத்திலும், இந்திய அரசைக் குறைகூறும் விதமாகவும் பேசியதுதான் மத்திய அரசைக் கவலையடைய வைத்தது. பிரபாகரன் தனது பேச்சில், எமது மக்களின் இந்த நீதியான, நியாயமான, நாகரிகமான போராட்டத்தைச் சிங்கள தேசம் தொடர்ந்து ஏற்றுக்கொள்ள மறுத்து வருகிறது. மாறாக, எம்மண் மீதும், மக்கள் மீதும், பெரும் இன அழிப்புப் போரை, ஆக்கிரமிப்புப் போரைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. போர் என்ற போர்வையில் மாபெரும் மனித அவலத்தை ஏற்படுத்தி வருகிறது. அறுபது ஆண்டுகாலமாக அநீதி இழைக்கப்பட்டு, அடக்குமுறைக்கு ஆட்பட்டு, சாவும் அழிவும் எண்ணில்லா இன்னல்களும் குடிபெயர்ந்த அகதிவாழ்வுமாக எம்மக்களின் அன்றாடச் சீவியம் சீரழிந்த போதும் எமக்காக எந்தவொரு நாடோ, எந்தவோர் அமைப்போ குரல் கொடுக்கவில்லை. ஆதரவோ, அனுதாபமோ தெரிவிக்கவில்லை. உலகமே கண்ணை மூடிக்கொண்டு பாராமுகமாகச் செயல்படுகிறது என்று பேசியுள்ளார் பிரபாகரன். அதைத்தொடர்ந்து பிரபாகரன் பேசியதுதான், தனிநாடு என்ற கோரிக்கையை தமிழ்நாட்டுத் தலைவர்கள் மறந்தே போய்விட்ட இந்த நேரத்தில், தமிழர்களுக்கென்று தனிநாடு உருவாக வேண்டுமென்ற பிரிவினைவாதத்திற்கு விதை தூவும் வகையில் அவரது பேச்சு அமைந்துள்ளது என்பதுதான் மத்திய அரசை கவலைக்குள்ளாக்கியுள்ளது. பூமிப்பந்தெங்கும் எண்பது மில்லியன் (எட்டுக்கோடி) தமிழர் பரந்து வாழ்ந்தபோதும், எமக்கென ஒரு நாடு இல்லாமைதான் இந்தப் பரிதாப நிலைக்கு, இந்த மோசமான நிலைமைக்குக் காரணம். எனவே, எமது மாவீரர்களை நினைவுகூரும் இன்றைய எழுச்சிநாளில் உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழ்மக்கள் அனைவரையும் தமிழீழ விடுதலைக்காக உணர்வெழுச்சியுடன் கிளர்ந்தெழுமாறு வேண்டிக்கொள்கிறேன் என்று பேசியுள்ளார் பிரபாகரன். எட்டுக்கோடி தமிழர்கள் என்று அவர் கூறுவது இந்தியாவிலுள்ள தமிழர்களையும் சேர்த்துத்தான் என்கிறபோதுதான், இந்தப் பேச்சின் மூலம் இந்திய இறையாண்மைக்கு ஆபத்து வந்துவிடுமோ? என்று மத்திய அரசு கவலையுடன் பிரபாகரனின் பேச்சை ஆராய்ந்து வருகிறது என்றார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைக்காக உலகத் தமிழர்கள் கிளர்ந்தெழ வேண்டும் என்று தமிழீழத் தேசியத் தலைவர் கோருவது என்பது தமிழ்நாட்டில் தனிநாடு கோரும் பிரிவினைவாதத்துக்கு விதை தூவுவது என்பதாக எப்படி அமையும்? வங்க தேசத்தின் விடுதலைக்காக இந்திய இராணுவமே யுத்தம் நடத்தியும் மேற்கு வங்கம் இன்னும் இந்தியாவின் மாநிலமாகத்தானே இருக்கிறது. அப்படியெனில் தமிழீழ விடுதலைக்கு தாய்த் தமிழக உறவுகள் ஆதரவளிப்பது என்பது எப்படி தமிழ்நாடு பிரிவினைவாதத்துக்கு விதை தூவுமாம்? காலம் காலமாக இருந்து வரும் "றோ" வின் பிழையான புரிதலே இப்போதும் தொடருகிறது என்பது மட்டும் நிதர்சனமாக நிற்கிறது.
Saturday, December 01, 2007
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.