Sunday, November 11, 2007

தென்னிலங்கை சிங்கள கிராம மக்களுக்கு ஆயுதங்கள்

[ஞாயிற்றுக்கிழமை, 11 நவம்பர் 2007] தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியிருப்பதாகக் கருதப்படும் தென்னிலங்கை சிங்கள கிராம மக்களுக்கு ஆயுதங்களை வழங்க சிறிலங்கா காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ரன்மினிதென்ன தொடக்கம் யால வனம் வரையான மற்றும் கதிர்காமம் முதல் திஸ்ஸமகாராம வரையிலான அனைத்து சிங்கள கிராமங்களின் பாதுகாப்புக்காக கிராம வாசிகளுக்கு ஆயுதங்கள் வழங்கப்படுகிறது. தென்பகுதி கிராமங்களின் பாதுகாப்பிற்காக பொதுமக்களுக்கு ஆயுதம் வழங்குவது இதுவே முதல்முறை என்று சிறிலங்கா காவல்துறை தலைமையக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கு முன்னர் வடக்கு-கிழக்கு எல்லைகளில் அமைந்துள்ள சிங்கள கிராம மக்களுக்கே ஆயுதங்கள் வழங்கப்பட்டன. யால எல்லைக் கிராமங்களின் பாதுகாப்பிற்காக பொதுமக்களுக்கு சுமார் 300 துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை உயர் அதிகாரியான ஜயந்த விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார். காவல்துறை மற்றும் பாதுகாப்பு படையினருடன் இணைந்து கிராமங்களை பாதுகாப்பதற்காக பொதுமக்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். ரன்மினிதென்ன உட்பட்ட கிராமங்களின் பாதுகாப்பிற்காக வெளியிடங்களிலிருந்து சுமார் 350 காவல்துறையினரும் பாதுகாப்பு படையினர் 200 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். ரன்மினிதென்ன உட்பட அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் கிராமங்களின் பாதுகாப்பிற்காக அந்த கிராமங்களிலுள்ள இளைஞர்களை குடிசார் பாதுகாப்பு படையில் இணைத்து அவர்களுக்கு ஆயுத பயிற்சியளிப்பது பற்றியும் ஆராயப்பட்டு வருகிறது. திஸ்ஸமகாராம பிரதேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக கூட்டு நடவடிக்கை தலைமையகம் ஒன்றை அமைக்கவுள்ளதாக பிரதமர் ரத்தினசிறி விக்கிரமநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இதற்கமைய திஸ்ஸமகாராம பிரதேசத்தின் பொறுப்பதிகாரியாக பிரிகேடியர் சுதந்த ரணசிங்க நேற்று முன்தினம் வியாழக்கிழமை அந்த பிரதேசத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார். அம்பாந்தோட்டை பிரதேச கட்டளையதிகாரியாக பிரிகேடியர் சுதந்த ரணசிங்க செயற்படுவார். இதற்கமைய யால தேசிய வனம், அம்பாந்தோட்டை மாவட்டத்திலிருக்கும் இராணுவ, வான் படை, கடற்படை, காவல்துறை மற்றும் குடிசார் பாதுகாப்பு படை ஆகியவற்றின் நடவடிக்கைகள் மட்டும் பிரிகேடியர் சுதந்த ரணசிங்கவின் கீழ் இருக்கும் என்று இராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.