Sunday, November 11, 2007

பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட சில மணிநேரங்களில் யாலவில் கிளைமோர் தாக்குதல்: ஓருவர் பலி

[ஞாயிற்றுக்கிழமை, 11 நவம்பர் 2007] அம்பாந்தோட்டை யால காட்டுப்பகுதியில் நேற்று இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் யால கட்டுக்கமுவ என்ற இடத்தில் நேற்று சனிக்கிழமை மாலை 6:45 மணியளவில் இடம்பெற்றதாக தெரியவருகிறது. கட்டுமானப்பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் பயணித்த வாகனத்தை இலக்கு வைத்தே இக்கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதலில் வாகனம் சிக்கியதையடுத்து அந்த வாகனத்தில் இருந்தவர்களில் ஒருவர் உயிரிழந்ததாகவும், மற்றொருவர் காயங்களுடன் காட்டுக்குள் தப்பிச்சென்றிருப்தாகவும் அங்கு நிலைகொண்டிருக்கும் படையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் இத்தாக்குதலை அப்பகுதியில் பதுங்கியிருக்கும் விடுதலைப் புலிகளே நடத்தியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதனிடையே அந்த வாகனத்தில் எத்தனை பேர் இருந்தனர் என்பது குறித்த தகவலை உடனடியாகப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. சுயாதீன தகவல் ஒன்றின்படி இந்த வாகனத்தில் ஆறு பேர் இருந்தனர் என்றும் அவர்கள் அனைவரும் தாக்குதலில் சிக்கியிருக்கலாம் என்றும் தெரியவருகிறது. எனினும் இதனை படையினர் உறுதிப்படுத்தவில்லை. யாலப் பகுதியின் நடவடிக்கை தளபதியாக பிரிகேடியர் சுதந்த ரணசிங்க நேற்று முன்தினம் முதல் நியமிக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதி மக்களின் பாதுகாப்பிற்கு என 300 துப்பாக்கிகள் வழங்கப்பட்டிருப்பதுடன் மேலதிகமாக 200 படையினரும் அங்கு அனுப்பப்பட்டு அப்பகுதியின் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றனர். இந்நிலையிலேயே நேற்றிரவு அங்கு கிளைமோர் தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.