Thursday, October 04, 2007

செய்மதியூடாக சரத் பொன்சேகாவிடம் அவுஸ்திரேலிய நீதிமன்றம் விசாரணை

[வியாழக்கிழமை, 4 ஒக்ரொபர் 2007] சிறிலாங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிடம் தமிழர் இனப்படுகொலை தொடர்பாக அவுஸ்திரேலியா நீதிமன்றம் செய்மதியூடாக விசாரணை நடத்தியது. அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட மூன்று தமிழர் பிரதிநிதிகள் தொடர்பான வழக்கில் சரத் பொன்சேகா சாட்சியமாக சேர்க்கப்பட்டுள்ளார். அவரிடம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை செய்மதியூடே விசாரணை நடத்திய அவுஸ்திரேலிய நீதிமன்றம், சிறிலங்கா இராணுவத்தினரது படுகொலைகள், தமிழ் மக்கள் மீதான சித்திரவதைகள், பாடசாலைகள் மற்றும் வடபகுதி கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதான வான் குண்டுத் தாக்குதல்கள் ஆகியவை குறித்து விளக்கம் கேட்டது. ஆனால் தமிழ் மக்கள் மீதான பாரிய மனித உரிமை மீறல்களுக்கு சிறிலங்கா இராணுவம் பொறுப்பல்ல என்று சரத் பொன்சேகா மறுத்து விட்டார். "தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் கொடும் சித்திரவதைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் உள்ளாக்குவதாகவும் இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன என்று தமிழர் தரப்பு சட்டத்தரணி பிலிப் பௌல்ட்டன் கேள்வி எழுப்பினார். "இதனை நான் ஏற்கவில்லை. மனித உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையிலான செயற்பாடுகளை நாங்கள் மேற்கொள்கிறோம். மனித உரிமைகளை நாம் மீறவில்லை" என்று சரத் பொன்சேகா பதிலளித்தார். அதேபோல் நேற்று நடைபெற்ற விசாரணையின் போதும் தமிழீழ விடுதலைப் புலிகள் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான "இறுதி யுத்தம்" என்ற பெயரில் பாரிய நிதி சேகரிப்பில் ஈடுபடுவதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளே யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை 6 ஆயிரம் முறை மீறியுள்ளனர் என்றும் சரத் பொன்சேகா தெரிவித்தார். தமிழர் தரப்பு சட்டத்தரணிகளோ, யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை சிறிலங்கா அரசாங்கமே மீறுவதாக குற்றம்சாட்டினர். வடபகுதி பாடசாலைகள் மற்றும் தேவாலயங்கள் மீது சிறிலங்கா வான்படையின் வான்குண்டுத் தாக்குதல்களை நடத்தவில்லை என்று சரத் பொன்சேகா மறுத்தார். ஆனால் கடந்த ஆண்டு நவம்பர் 8 ஆம் நாள் மட்டக்களப்பு கதிரவெளியில் இடம்பெயர்ந்தோர் தங்கியிருந்த பாடசாலை மீது வான்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது அச்சம்பவம் நடந்தது உண்மை என்று சரத் பொன்சேகா ஒப்புக் கொண்டார். "இடம்பெயர்ந்த அகதிகளுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களுடன் இருந்தனர். ஆகையால் உள்நோக்கம் ஏதும் எமக்கு இல்லை. அது எமது தவறும் இல்லை" என்று சரத் பொன்சேகா மேலும் கூறினார். அச்சம்பவத்தில் 62 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதை சரத் பொன்சேகா மறுத்ததுடன் 17 பேர் உயிரிழந்தனர் என்றும் கூறினார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.