நாட்டில் சிங்கள பெளத்த பேரினவாத சக்திகளை அரசாங்கமே தூண்டி விடுவதாகவும் அவர் தெரிவித்தார். வெளிநாடு சென்று தீர்வைப் பெற முடியாது. எமது குடும்பம் அரசியல் வரலாறு கொண்ட குடும்பம் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ள கருத்து தொடர்பாக தமது பக்க நிலைப்பாட்டை தெளிவுபடுத்துகையிலேயே சுரேஷ் பிரேமச்சந்திரன் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் இது தொடர்பாக தெளிவுபடுத்துகையில்,
யுத்தம் முடிந்துவிட்டது. ஆனால் சமாதானம் வந்துவிட்டதாகக் கூற முடியாது. தமிழ், சிங்கள மக்கள் இணைந்து ஒற்றுமையாக வாழும் சூழ்நிலை இன்னமும் ஏற்படுத்தப்படவில்லை. எனவே, பாதுகாப்புச் செயலாளர் நாட்டில் சமாதானம் நிலவுவதாகவும், அதனை சீர்குலைக்க வெளிநாடுகள் முயற்சிப்பதாகவும் கூறுவது 'மந்திரம்' ஓதுவதற்கு சமமானதாகும்.
யுத்தம் முடிந்து 4 வருடங்கள் கழிந்த பின்னரும் வடபகுதி தமிழ் மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள்ளேயே அடக்கியாளப்படுகின்றனர். இராணுவ முகாம்கள் பல அகற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும் அவ்வாறான நிலை அங்கு கிடையாது. மாறாக இராணுவ முகாம்கள் விஸ்தரிக்கப்பட்டு வருகின்றன. அதற்காக மக்களின் பூர்வீக சொந்தக்காணிகள் சுவீகரிக்கப்படுகின்றன.
உலகில் எந்தவொரு நாட்டில் மக்கள் இராணுவ அடக்கு முறைக்குள் ஆளப்படுகின்றனரோ, அங்கெல்லாம் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். இதுதான் உலக நியதி. இதனை மாற்ற முடியாது. நாட்டில் சமாதானம் இல்லை. யுத்தம் முடிந்து 4 வருடங்கள் கடந்துவிட்டன. அரசாங்கம் சிங்கள பெளத்த பேரினவாதச் சக்திகளின் சிறைக்கைதியாக சிக்கிக்கொண்டிருப்பதோடு மட்டுமல்லாது சிங்கள பெளத்த பேரினவாதச் சக்திகளை தூண்டிவிட்டு இந்துக் கோவில்கள், முஸ்லிம் பள்ளிவாசல்கள், கிறிஸ்தவ தேவாலயங்களை உடைக்கின்றது.
இதன்மூலம் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்க மாட்டோம். மாறாக, சிங்கள பெளத்த பேரினவாத தீவிரவாத சக்திகளின் அடிமைகளாகவே தமிழர்கள் வாழ வேண்டும். தமிழர்களுக்கு உரிமை என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதே அரசாங்கத்தின் கொள்கையாகும். அரசாங்கத்தின் சமாதானமும், தேசிய நல்லிணக்கமும் உதட்டளவிலேயே உள்ளது. தவிர நடைமுறை சாத்தியமானதாக இல்லை.
எமது பிரச்சினையை உள்நாட்டில் தீர்க்க முடியும். வெளிநாடுகள் தேவையில்லை. எமக்கு அரசியல் அனுபவம் உள்ளது போன்ற பாதுகாப்புச் செயலாளரின் மந்திரங்களை சர்வதேசம் செவிமடுக்காது. ஏனென்றால் நடைமுறையில் நாட்டில் எதுவுமே இல்லை. சர்வதேசமோ, அதன் தலைவர்களோ இவர்களின் மந்திரங்களை கேட்குமளவிற்கு முட்டாள்களல்ல.
எதிர்வரும் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு மாநாட்டில் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்குமென்பதை எதிர்பார்த் திருக்கின்றோம். எமது மக்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொள்வதற்கான முன்னகர்வுகளையும் நாம் மேற்கொண்டு வருகின்றோம் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
|
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.