இலங்கையின் உள்நாட்டு ஆயுதப் போராட்டம் நிறைவடைந்ததன் பின்னர் நாட்டில் சுமுகமான ஜனநாயக சூழலை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புக்கள் காணப்பட்ட போதிலும் தற்போது அவ்விடயங்களிலிருந்து தூரச் சென்று சா்வாதிகாரப் பாதையில் பயணிக்கும் வெளிப்பாடுகளும் சமிக்ஞைகளுமே காணப்படுகின்றன. குறிப்பாக இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உள ரீதியான முன்னேற்றங்களை இன்னும் அடையவில்லை என ஐநா சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்தார்
பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் உள ரீதியான முன்னேற்றம் காணபபடவில்லை.
சர்வதேச குற்றச்சாட்டுகள் குறித்த உள்ளக விசாரணையில் உண்மைத்தன்மை இல்லை.
போர்க்குற்றம் தொடர்பில் சுயாதீன விசாரணை இன்றேல் சர்வதேச விசாரணையைத் தவிர வேறு வழியில்லை.
பள்ளிவாசல், தேவாலயங்கள் தாக்கப்பட்டுள்ளமை குறித்து உரிய விசாரணை அவசியம்.
அரசியல் கைதிகள் தொடர்பில் அரசின் செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ளும் வகையில் அமையவில்லை.
சா்வதேச குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான ஆக்கபூர்வமான விசாரணைகளை இலங்கை அரசாங்கம் வெளிப்படையாகவும், நம்பகத்தன்மையுடனும் மேற்கொள்ளவில்லை. குறிப்பாக இராணுவத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளை இராணுவமே விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிப்பது எந்த வகையிலும் நியாயபூர்வமானதாகவோ, ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவோ அமையாது. ஏற்கனவே இலங்கைப் படைகளுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் காணப்படுகையில் எமக்குச் சாட்சியமளித்த வடக்கு, கிழக்கு மக்களை அச்சுறுத்துவது மேலும் நிலைமையை மோசமடையவே செய்யும்.
ஆகவே மனித உரிமைகள் உள்ளிட்ட இலங்கைக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தேசிய ரீதியிலான சுயாதீனமானதும், வெளிப்படையானதுமான விசாரணைகள் மேற்கொள்ளப்படாத பட்சத்தில் சர்வதேச விசாரணைகளைத் தவிர இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற உண்மைகளைக் கண்டறிய வேறு பொறிமுறைகள் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நாடு திரும்புவதற்கு முன்னர் இலங்கை விஜயம் குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று சனிக்கிழமை கொழும்பில் அமைந்துள்ள ஐநா அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே மனித உரிமைகள் ஆணையாளர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில்,
மனித உரிமைகள் மதிப்பீட்டிற்கான உத்தியோகபூர்வ 7 நாள் விஜயத்தை இலங்கையில் நிறைவு செய்துள்ளேன். இவ்விஜயத்தின்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அரசின் உயர்மட்ட உறுப்பினர்கள், மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உட்பட சிவில் அமைப்புகள் போன்றவர்களுடன் விசேட சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தேன். அதேபோன்று பாதுகாப்புச் செயலாளர், பிரதம நீதியரசர், ஜனாதிபதியின் செயலாளர்ஹ உள்ளிட்டோரையும் சந்தித்தேன். மேலும் யுத்தம் இடம்பெற்ற வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் விஜயம் செய்து அரச அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினேன். குறிப்பாக இறுதி யுத்தம் இடம்பெற்ற ப’குதிகளுக்கு விஜயம் செய்து அங்குள்ள பொதுமக்களையும் சந்தித்தேன்.
இச்சந்தர்ப்பத்தை எமக்கு வழங்கியமைக்காக இலங்கை அரசுக்கு நன்றி கூறுகின்றேன். இவ்வாறான நீண்ட நாள் விஜயமொன்றை எந்தவொரு நாட்டிலும் இதற்கு முன்னர் மேற்கொள்ளவில்லை. இலங்கையின் அனைத்து தரப்புகளிடமும் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் உன்னிப்பாகக் கருத்துகளைக் கேட்டறிந்து கொண்டேன். இதன் பிரகாரம் எதிர்வரும் செப்படம்பர் மாதம் இடம்பெறவுள்ஹள ஜெனிவா அமர்வில் இலங்கை விஜயம் தொடர்பிலான அறிக்கை ஒன்றினை சமர்ப்பிக்க உள்ளதுடன் மார்ச் மாதத்தில் முழுவளவிலான அறிக்கையினைச் சமர்ப்பிப்பேன்.
இலங்கையில் தற்போது கண்டறிந்து கொண்ட மனித உரிமைகள் நிலைவரங்களை இருவிதமாக இனங்கண்டுள்ளேன். கடந்த 27 வருட காலமாக இலங்கையில் காணப்பட்ட அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான ஆயுதப் போராட்டத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள மனித உரிமைகள் தொடர்பிலான சவால்கள் எவ்வாறு நாடளாவிய ரீதியில் எதிர்கொள்ளப்படுகிறது. சில உள்நாட்டு ஊடகங்கள், அமைச்சர்கள் மற்றும் குறிப்பிட்ட சில தரப்புக்கள் ஐநாவில் தமிழ் புலிகள் உள்ளதாக என்னைச் சுட்டிக்காட்டிக் கூறுகின்றன. இது கடந்த வாரத்திலும் எனது விஜயம் பற்றி சுட்டிக்காட்டிக் கூறப்பட்டது. இவ்வாறான பிரசாரத்தில் மூன்று அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர். நான் தென்னாபிரிக்கர் என்ற வகையில் பெருமையடைகின்றேன். அதேபோன்று விடுதலைப்புலிகள் கொலைகார அமைப்பு என்பதை உறுதி செய்து கொள்கிறேன். ஏனெனில் அவர்கள் பல்லாயிரம் உயிர்களை அழித்துள்ளனர். நீலன் திருச்செல்வத்தை1999ம் ஆண்டு யூலை மாதம் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மூலம் கொலை செய்தனர். இவ்வாறு இலங்கையர்கள் பலரும் கொல்லப்பட்டனர். இதனையிட்டு நான் கவலையடைவதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இவ்வாறு உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்படவர்களை உள்நாட்டில் மேற்கொண்ட வடக்கு கிழக்கு விஜயத்தின் போது சந்தித்தேன். பலர் காணாமல் போயுள்ளனர். கொல்லப்பட்டும் உள்ளனர். மேலும் பலர் போரினால் கடுமையாக இழப்புக்களையும் சந்தித்துள்ளனர். இவற்றுக்கான சாட்சியங்களாக ஷெல் தாக்கப்பட்ட மரங்கள், அழிவடைந்த வீடுகள் என்பன முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் இன்னும் காணப்படுகின்றன.
உள்நாட்டு யுத்தத்தின் பின்னரான செயற்பாடுகளில் நல்லிணக்கத்துக்கு முன்னுரிமை கொடுத்து செயற்பட வேண்டிய அவசியம் காணப்பட்டது. இந்த நல்லிணக்கச் செயற்பாட்டை மேற்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் ஊடாக சுட்டிக்காட்டப்பட்டுள்ள பலவேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வெளிப்படையான விசாரணைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக திருகோணமலை மாணவர்களின் கொலை, ஐநா தொண்டு ஊழியர்களின் கொலை போன்ற விடயங்களை வெளிப்படையாக விசாரணை செய்து அறிக்கைகளை சமா்ப்பித்திருக்க வேண்டும். ஆனால் அவை இன்னும் இடம்பெறவில்ல. அதேபோன்று நல்லிணக்க ஆணைக்குழுவில் பரிந்துரைக்ஹகப்பட்ட பல்வேறு முக்கியமான விடயங்கள் தொடர்பிலும் ன்னேற்றங்கள் காணப்படவில்லை.
மாறாக மேன்மேலும் மனித உரிமைகளுக்கு நெருக்கடியான சூழலே இலங்கையில் காணப்படுகின்றது. குறிப்பாக வடக்கில் இராணுவத்தை ஒரே இரவில் குறைக்க முடியாது என பாதுகாப்புச் செயலாளர் என்னிடம் குறிப்பிட்டார். இதனைப் பல்வேறு பொறிமுறைகளை கையாண்டு படிப்படியாதகப் படைகளை வடக்கிலிருந்து குறைப்பதற்கான வழிமுறைகளை முன்னெடுக்கலாம். சிவில் நிர்வாகத்தில் இராணுவம் ஆதிக்கம் செலுத்துவது ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றல்லஇ குறிப்பாக இராணுவத்துக்கு எதிராகக் காணப்படுகின்ற பாலியல் ரீதியிலான குற்றச்சாட்டுக்கள் காணப்படுகையில் அவற்றை உரிய முறையில் விசாரணை செய்து சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்காதுள்ளமை பாதிக்கப்பட்ட மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளேயே தள்ளிவிடும்.
காணாமல் போனோர் விவகாரங்களில் தீர்வை எட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அண்மையில் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட காணாமல் போனோர் குறித்து ஆராய்வதற்கான குழு சிறந்த முன்னெடுப்பாகும். இருப்பினும் கடந்த காலத்தில் இலங்கை அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் நிலைவரங்கள் எத்தன்மை கொண்டது என்பதனை நாம் அறிவோம். ஆகவே வெறுமனே ஆணைக்குழுக்கள் அமைத்து பயனில்லை. காணாமல் போனோர் குறித்து எனது அறிக்கையில் முக்கிய பரிந்துரைகளை மேற்கொள்ளவுள்ளேன். ஐநா சபையில் காணப்படுகின்ற காணாமல் போனோர் விவகாரங்கள் தொடர்பிலான பிரிவுகளை இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துவேன்.
இதனூடாக இலங்கை அரசாங்கம் அனைத்து தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய விசாரணைகளை மேற்கொள்ள முடிவதுடன் சா்வதேச காணாமல் போனோர் சாசன பொறிமுறைகளையும் கையாளக்கூடிய வகையிலும் அமையும். மேலும் இராணுவத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை இராணுவமே விசாரணை செய்வது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. அற்றுக்கு தேசிய அல்லது சர்வதேச ரீதியிலான விசாரணைகளே சாத்தியப்படும். அண்மையில் வெலிவேரியவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் அவசியமாகும். அதேபோன்று பள்ளிவாசல்கள் மற்றும் தேவாலயங்கள் தாக்கப்பட்டுள்ளன. இது குறித்தும் உரிய விசாரணைகள் மற்றும் பாதுகாப்பு பொறிமுறைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
அரசியல் கைதிகள் விவகாரங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் ஏற்றுக் கொள்ளும் வகையில் அமையவில்லை. இதனை நீதி அமைச்சருடனான சந்திப்பின் போதும் வினவினேன். அதற்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் பதிலளிக்கப்படவில்லை. ஆகவே சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை உரிய நீதிதுறைசார் பொறிமுறையைக் கையாண்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் யுத்தம் முடிந்து 4 வருட காலமாகியும் பயங்கரவாதச் சட்டம் இன்னும் நடைமுறையில் உள்ளது. இது ஏற்றுக்கொள்ளக் கூடியதொன்றல்ல.
2005ம் ஆண்டு தொடக்கம் இதுவரையில் சுமார் 30 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டும், காணாமல் போயும் உள்ளனர். பல ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்டும் உள்ளன. இவற்றிலிருந்து இலங்கையில் கருத்துச் சுதந்திரம் எந்தளவிற்கு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளது என்பது தெளிவுபடுகின்றது. இதனை சர்வதேச மனித உரிமைகள் சாசனங்கள் அனுமதிப்பதும் இல்லை. உள்நாட்டில் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் ஜனநாயகம் முடக்கப்பட்டுள்ளது. 18வது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் சுயாதீனமாக செயற்படக்கூடிய தேர்தல் மற்றும் மனித உரிமை போன்ற ஆணைக்குழுக்கள் சுயாதீனத் தன்மைகள் இழந்துள்ளன. குறிப்பாக முன்னாள் நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணைச் செயற்பாடுகளின் ஊடாக சுயாதீனமற்ற தன்மை வெளிப்பட்டது.
ஆகவே இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய போக்கு சர்வாதிகாரப் போக்காகவே காணப்படுகின்றது. உரிய வகையிலான பொறுப்புடைமைகளை பாதுகாத்துக் கொள்வதனையே இலங்கையிடம் ஐநா எதிர்பார்க்கின்றது எனக் கூறினார்.
மேலும் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகள் சிலவற்றுக்டகுப் பதிலளிக்கையில்,
கேள்வி - விடுதலைப்புலிகள் மேற்கொண்ட வன்முறைகள் மற்றும் கொலைகள் தொடர்பில் வடக்கு கிழக்கில் சாட்சியங்களைப் பெற்றுக் கொண்டீர்களா?
பதில் - ஆம். மனித உரிமைகளை யார் மீறி இருந்தாலும் அதனை அனுமதிக்கும் நிலைப்பாட்டில் மனித உரிமைகள் என்ற வகையிலோ சாதாரண மனிதர் என்ற வகையிலோ அனுமதிக்க இயலாது. விடுதலைப்புலிள் செய்த மிகவும் மோசமான கொலைகள் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் நீலன் திருச்செல்வம் மீதான தற்கொலைத் தாக்குதலாகும்.
கேள்வி - பதவி நீக்கப்பட்டுள்ள முன்னாள் நீதியரசரை நீங்கள் சந்தித்துள்ளீர்களா?
பதில் - இல்லை. தற்போது பதவியிலுள்ள பிரதம நீதியரசரைச் சந்தித்’துப் பேசினேன்.
கேள்வி - இலங்கையில் போர்க்குற்றங்கள் என எதனை மையப்படுத்திக் கூறுகின்றீர்கள்?
பதில் - இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் இறுதிக்காலப் பகுதியில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்கள் குறித்து பல்வேறு சந்தேகங்களய் காணப்படுகின்றன. 2009ம் ஆண்டு யுத்தம் முடிந்தவுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஐநா செயலாளர் நாயகம் பான் கீ மூனைச் சந்தித்ததன் பின்னர் நிபுணர் குழு அமைக்கப்பட்டு பல்வேறு விடயங்கள் தொடர்பில் விசாரணைக்கு வலியுறுத்தப்பட்டது.
இதில் சுட்டிக்காட்ப்பட்டுள்ள பல்வேறு விடயங்களில் மனித உரிமை மீறல்களும் போர்க்குற்றங்களும் முக்கியமானதாகும். இதற்குப் பின்னர் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உறுதிமொழிகளின் பிரகாரம் இ’துவரையில் கையாளப்பட்ட வழிமுறைகளே இன்னும் தொடர்கின்றன.
கேள்வி - காணாமல் போனோர் விவகாரம் தொடர்பில் உங்களின் எதிர்காலச் செயற்பாடு என்ன?
பதில் - இலங்கையில் இதுவரையில் காணாமல் போனோர் குறித்து ஆக்கபூர்வமான வெளிப்பாடுகள் காணப்படவில்லை. இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஏற்கனவே பல உறுதிமொழிகளையும் வழங்கியிருந்தார். ஆனால் அவை எதுவும் இதுவரையில் வெளிப்படவில்லை. ஆகவே காணாமல் போனோர் தொடர்பில் உரிய விசாரணைகள் தேசிய மட்டத்தில் முன்னெடுக்கப்படாவிடின் சர்வதேச பொறிமுறை இன்றியமையாததாகும்.
கேள்வி - ஐநா மனித உரிமைகள் பேரவை பக்கச்சார்பாக செயற்படுவதாகக் கூறப்படுகின்றது. குறிப்பாக இலங்கை விடயத்தில் இந்நிலைவரம் மோசமாக உள்ளதாக ஜனாதிபதியும் கூறியுள்ளார். இது குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில் - ஐநா சபை பக்கச்சார்பாக செயற்பட வேண்டிய தேவையில்லை. இலங்கைக்கு எதிரான 300 நிபந்தனைகள் பல நாடுகளினாலும் முன்வைக்கப்பட்டன. ஆகவே இலங்கை விடயத்தில் தனிப்பட்ட நோக்கத்துடன் நாம் செயற்படவில்லை என்பது வெளிப்படுகின்றது. அதேபோன்று விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு அவை ஐநாவினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டது.
கேள்வி - தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பில் சர்வதேச விசாரணைகள் தொடர்பில் வலியுறத்தப்படதாகக் கூறப்படுகின்றதே?
பதில் - தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உடனான சந்திப்பில் பல்வேறு விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன. குறிப்பாக நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையில் காணப்படுகின்ற 13வது திருத்தச்சட்டம் குறித்துப் பேசினோம். அதேபோன்று வடமாகாண சபைத் தேர்தல் முக்கியமான முன்னெடுப்பாகக் கருதுகின்றேன்.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.