Wednesday, August 28, 2013

இந்தியக் கடற்படையா? சிங்களவனுக்குக் கைக்கூலி வேலை செய்யும் கங்காணிப் படையா?: வைகோ ஆவேசம்

vaiko
தமிழக மீனவர்களைத் தாக்குகின்ற ஒரு சமயத்திலாவது இந்தியக் கடற்படை, அதைத் தடுக்க முற்பட்டதே கிடையாது என்றும்,  இது இந்தியக் கடற்படையா? சிங்களவனுக்குக் கைக்கூலி வேலை செய்யும் கங்காணிப் படையா? என வைகோ ஆவேச கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில், ”இந்தியாவில் ஒரு அரசு இருக்கிறதா? துணைக்கண்டத்தின் அனைத்து மக்களுக்குமான அரசு இருக்கிறதா? குறிப்பாக, தமிழ்நாட்டு மீனவர்கள், இந்தியக் குடிமக்கள் என்ற எண்ணமாவது, அரசுக்கு உள்ளதா? என்பதுதான்  எழுகின்ற கேள்விகள் ஆகும்.
ஆதவன் கீழ்த்திசையில் தினமும் உதிப்பது போலத்தான், தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்குவதும், சுடுவதும், கொல்வதும், சிறைபிடிப்பதும், சித்ரவதை செய்வதும், இலங்கைச் சிறைகளில் அடைப்பதும், நாள் தவறாமல் நடக்கிறது.
இலங்கை அரசோடு இந்திய அரசு, ஒட்டி உறவாடிக் கும்மாளம் போடுவதால்தான், இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்களைத் தாக்குகின்ற ஒரு சமயத்திலாவது இந்தியக் கடற்படை, அதைத் தடுக்க முற்பட்டதே கிடையாது. இது இந்தியக் கடற்படையா? சிங்களவனுக்குக் கைக்கூலி வேலை செய்யும் கங்காணிப் படையா?
25 ஆம் தேதி, பாம்பனுக்கு அருகில், நமது கடல் எல்லைக்கு உள்ளேயே மீன் பிடித்துக் கொண்டு இருந்த, 35 மீனவர்களை, 26 ஆம் தேதி காலையில் சிங்களக் கடற்படை கைது செய்து, இலங்கையில் நீர்க்கொழும்பு சிறையில் அடைத்து உள்ளனர். நேற்று (27 ஆம் தேதி) புத்தளம் நீதிமன்றத்தில் அவர்களைக் கொண்டு போய் நிறுத்தி உள்ளனர். அப்போது, ‘இந்திய அரசின் சார்பில், தூதரகத்தின் இருந்து யாராவது வந்து இருக்கிறார்களா?’ என்று நீதிபதி கேட்டபோது, ‘எவரும் வரவில்லை’ என்று, சிங்கள அரசு வழக்கறிஞர் கூறி உள்ளார். மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம், ஈழத்தமிழர்களுக்கு என்றுமே உதவியது இல்லை. சிங்கள அரசுக்கு எடுபிடி வேலைதான் செய்து வந்து உள்ளது. இந்திய நாட்டைச் சேர்ந்த குடிமக்களான, தமிழக மீனவர்ளைப் பாதுகாக்க, எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை என்பது புலனாகிறது.
இலங்கை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், இந்தியப் பிரதமரைச் சந்தித்தபின் செய்தியாளர்கள் கேட்டபோது, கச்சத்தீவு முடிந்து போன பிரச்சினை, அதை மீண்டும் தருவது என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அதேபோல மீனவர்களை விடுவிக்கவும் முடியாது. சட்டப்படி இலங்கை நீதிமன்றம் நடவடிக்கை மேற்கொள்ளும் என்று இந்திய அரசின் கன்னத்தில் அறைந்தாற்போல் ஆணவத்தோடும், திமிரோடும் எப்படிச் சொல்ல முடிந்தது?
இனப்படுகொலையின் கூட்டுக் குற்றவாளி அல்லவா இந்திய அரசு? அதுதான், அந்த அமைச்சரை அப்படிப் பேச வைத்தது.  எனவே, தமிழக மீனவர்களை உடனே விடுவித்து மீட்டுக் கொண்டு வர, இந்திய வெளி விவகாரத் துறை அமைச்சர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.