Friday, February 04, 2011

ஐ.நா நிபுணர் குழுவின் தோல்வியை ஒப்புக் கொள்ளும் மூன்!

இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் ஆலோசனைக் குழுவின் செயல்பாடுகள் ஸ்தம்பித்துப் போய் விட்டன என்று அச்சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்து உள்ளார்.

ஐ.நா செயலாளர் நாயகம் பதவிக்கு பான் கீ மூன் மீண்டும் போட்டியிடுகின்றார். இதற்கான தேர்தல் இவ்வருடம் இடம்பெறுகின்றது.

இந்நிலையில் பிரித்தானியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு சென்ற அவர் இரு நாட்களுக்கு முன் லண்டனில் உள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு சொன்னார்.

இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை, நீதி ஆகியன ஏற்படுகின்றமைக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுப்பார் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

"நான் இலங்கைக்கு இரு தடவைகள் சென்றேன். இலங்கை ஜனாதிபதி மற்றும் அந்நாட்டு அரச உயர் மட்டத்தினர் ஆகியோருடன் விரிவான பேச்சுக்களில் ஈடுபட்டேன். நீண்ட பிரயத்தனங்களின் பின்னர் நிபுணர் குழு ஒன்றை அமைக்கின்றமை தொடர்பாக இலங்கை அரசை வழிக்கு கொண்டு வந்தேன்.

ஆனால் இந்நிபுணர் குழுவால் ஆரம்ப கட்ட செயல்பாடுகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாமல் உள்ளது.இலங்கையுடன் தொடர்ந்து பேசிக் கொண்டு இருக்கின்றார்கள்.

ஆனால் குற்றச் செயல்கள் எங்கு இடம்பெற்றாலும்கூட அக்குற்றச் செயல்களுக்கு பொறுப்பானவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்.

நீதி, அரசியல் அதிகாரம், அரசியல் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை எப்படிக் கட்டி எழுப்ப முடியும்? என்று சிலர் சில வேளைகளில் வியக்கின்றார்கள். அரசியல் ஸ்திரத்தன்மை சில வேளைகளில் முக்கியமானதுதான். ஆனால் நீதியுடன் கூடியதாக இல்லாத அரசியல் ஸ்திரத்தன்மை பயன் அற்றது. அதே போல் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாவிட்டால் நீதியை நிலைநாட்டவும் முடியாது.

எனவே அரசியல் ஸ்திரத்தன்மை, நீதி ஆகியன சம நேரத்தில் முன்னெடுக்கப்பட வேண்டியவை.

இவை இரண்டையும் இலங்கையில் உருவாக்கத்தான் நான் பாடுபடுகின்றேன். எனது அப்பணி தொடரும்." இவ்வாறு இவர் அங்கு மேலும் கூறினார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.