Wednesday, January 26, 2011

தமிழக முதல்வராக இருப்பதை விட தி.மு.க.தலைவராவதையே விரும்புகிறேன்: கருணாநிதி சூசக அறிவிப்பு

தமிழக முதல்வராக இருப்பதை விட தி.மு.க.தலைவராக இருப்பதையே விரும்புகிறேன் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.இதற்கான முடிவை விரைவில் அறிவிப்பேன் என்றும் அவர் தெரிவித்தார். அறநிலையத் துறை அமைச்சர் பெரிய கருப்பனின் இல்லத் திருமண விழா சென்னையில் திங்கட்கிழமை நடைபெற்றது.திருமணத்தை நடத்தி வைத்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

தமிழகத்தின் அப்போதைய பிரிமியராக இருந்தவர் பனகல் அரசர்.அவர் ஆட்சி புரிந்த காலத்தில் நிறுவப்பட்டதுதான் இந்து அறநிலையத் துறை. ஆலயங்களுக்கு வருகின்ற காணிக்கை ஒழுங்காகச் செலவிடப்படுகிறதா, திருவிழா தெப்ப உற்சவ விழாக்களில் செலவழிக்கப்படும் பணத்துக்கு ஒழுங்கான கணக்கு இருக்கிறதா,தினம் தினம் ஆலயத்துக்கு செலவிடப்படுகின்ற செலவுக்கு, ஆலயப் பணிப்பாளர்களின் ஊதியங்களுக்குக் கணக்கு இருக்கிறதா என ஆராய்ந்து,ஊழல் வராமல் பார்த்துக்கொள்கின்ற பெரும் பொறுப்பை ஏற்றுக்கொண்டது பனகல் அரசின் ஆட்சி.

தமிழகம் மேலும் மேலும் வளம் பெற வேண்டும்.மாநிலத்தில் இன்னும் பல திட்டங்களை நாம் நிறைவேற்ற வேண்டும்.தமிழகத்திலே தி.மு.க.ஆட்சி தொடர்ந்து இருந்து மக்களுக்கான பணிகளை ஆற்றிட வேண்டும் என்கிற ஆசை அமைச்சர் பெரிய கருப்பனுக்கு உண்டு. அதனால்தான் இங்கே அவரை அமைச்சர் என்று அழைத்தபோது காட்டப்பட்ட ஆர்வத்தைவிட மாவட்டச் செயலாளர் என சொன்னபோது அதிக ஆர்வத்தை காட்டினீர்கள்.

எனக்குக்கூட அப்படியொரு ஆசை இருக்கிறது.முதலமைச்சர் என்று சொல்லும்போது நீங்கள் இவ்வளவு பேரும் ஆர்வமாக இருப்பீர்களா அல்லது தி.மு.க.தலைவர் என்று சொல்லுகின்ற நேரத்தில் ஆர்வமாக இருப்பீர்களா என்று கேட்டால் தலைவர் என்று சொல்வதில்தான் ஆர்வமாக இருப்பீர்கள்.ஆகவே நான் அந்த முடிவுக்கே விரைவில் வருவேன் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கருணாநிதி பேசினார்.

முதல்வர் பதவியில் இருந்து விலகும் முடிவை விரைவில் அறிவிப்பேன் என்று கருணாநிதி கூறியபோது,கட்சியின் மூத்த தலைவர்கள் அன்பழகன், ஆர்காடு வீராசாமி ஆகியோர் மேடையில் இருந்தனர். முதல்வரின் மகன்கள் மு.க.ஸ்டாலின்,அழகிரி ஆகியோரும் மேடையில் இருந்தனர்.கடந்த ஆண்டு செம்மொழி மாநாட்டுக்கு முன்பாக நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் கருணாநிதி" மாநாட்டுக்குப் பின் உங்களோடு இணைந்து பணியாற்றுவேன்' என்று தெரிவித்தார்.

இதையடுத்து மாநாட்டுக்குப் பின் முதல்வர் பதவியில் இருந்து விலகி அவரது மகன் மு.க.ஸ்டாலின் பொறுப்பை ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் கட்சித் தலைவர் பதவி மட்டுமே என்ற நிலையை கருணாநிதி எடுத்திருப்பது மூலம் தமிழகத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் யார் முதல்வர் என்ற விவாதம் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.