சமாதானத்தை நாட்டில் கட்டி எழுப்புவதற்கான வாய்ப்புக்களை இலங்கை அரசு வீணாக்கிக் கொண்டு இருக்கின்றது என கனேடிய தேசிய நாளேடுகளில் ஒன்றான The Globe and Mail ஆங்கில பத்திரிகை தெரிவித்து உள்ளது.
Sri Lanka is wasting the peace dividend என்கிற தலைப்பில் ஆசிரியர் தலையங்கம் ஒன்றை இப்பத்திரிகை கடந்த 16 ஆம் திகதி தீட்டி உள்ளது. தமிழ் மக்களை அடக்கி ஆளும் சில பல நடவடிக்கைகளில் மஹிந்த அரசு தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றது எனவும் இவ்வாசிரியர் தலையங்கத்தில் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது.
ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டு இருப்பவை வருமாறு:-
"இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை அரசு தவற விட்டு வருகின்றது. அங்கு 18 மாதங்களுக்கு முன் உள்நாட்டு யுத்தம் முடிந்ததை தொடர்ந்து தமிழர்கள் ஓரளவு நிம்மதிப் பெருமூச்சு விட முடிந்திருக்கின்றது என்பதை மறுக்க முடியாது. ஆனால் தமிழர்களை தொடர்ந்து அடக்கி ஆளும் சில கொள்கைகளை மஹிந்த அரசு கை வசம் வைத்திருந்து நடைமுறைப்படுத்தத்தான் செய்கின்றது.
முப்பது வருட கால யுத்தம் முடிந்து விட்ட போதிலும் தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது என்பது இலகுவான காரியம் அல்ல. கடந்த வருடம் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் இலட்சக் கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமை குறித்து விசாரிக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவால் நியமிக்கப்பட்டிருக்கும் தேசிய நல்லிணக்க ஆணைக்குழு அதிகாரங்கள் அற்ற வெறும் சடமாகவே இருக்கின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழித்தமைக்கான முழுப் புகழுக்கும் சொந்தம் கொண்டாடுகின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ. அவர் இதன் மூலம் கிடைத்த பிரபல்யத்தைப் பயன்படுத்தி அரசமைப்பில் திருத்தத்தை ஏற்படுத்தி அவருடைய ஜனாதிபதி பதவிக் காலத்தை இரு தடவைகளுக்கு மேல் நீடிக்க வழி கண்டு பிடித்து உள்ளார். அத்துடன் சிவில் சேவைகள், நீதிச் சேவைகள், பொலிஸ் சேவைகள் ஆகியன சம்பந்தப்பட்ட நியமனங்களில் இறுதித் தீர்மானம் எடுக்கும் உயர் அதிகாரத்தையும் உரித்தாக்கிக் கொண்டுள்ளார்.
ஆனால் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பார் என்கிற வாக்குறுதியை இவர் காற்றில் பறக்க விட்டு விட்டார் என்றும் இவரது அரசு அதிகாரப் பரவலாக்கத்தின் அடிப்படையிலான தீர்வுக்கு எந்நடவடிக்கையையும் உருப்படியாக எடுப்பதாக இல்லை என்றும் நெருக்கடிகளுக்கான சர்வதேச குழு அறிவித்து உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் என்கிற சந்தேகத்தில் அடைத்து வைக்கப்பட்டு இருப்போரில் 12 ஆயிரம் பேரை அரசு விடுவித்து உள்ளது. அத்துடன் 03 இலட்சம் அகதிகளையும் நலன்புரி முகாமில் இருந்து விடுவித்து உள்ளது.
ஆனால் 70 ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் சொந்த காணிகளுக்கு திரும்பிச் செல்ல அனுமதிக்கப்படாமல் உள்ளனர். திரும்பி வந்திருப்பவர்களோ பாரிய மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனர். குறிப்பாக தங்குமிட பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். நிலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விடயத்தில் அரசு வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். இத்தீர்வு நடவடிக்கைகளில் தமிழர்களும் உள்வாங்கப்பட வேண்டும்.
வட மாகாணத்தில் சிங்கள குடியேற்றங்கள் நிறுவப்படக் கூடாது. சிங்களவர்கள் வடக்கில் குடியேற்றப்படக் கூடாது. இதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். மஹிந்த முக்கியத்துவம் கொடுத்து நடைமுறைக்கு கொண்டு வர வேண்டிய விடயமாக தேசிய நல்லிணக்கம் உள்ளது. தனிப்பட்ட அதிகாரங்களை அதிகரிக்கின்றமையை முக்கிய இலட்சியமாக கொண்டு செயல்படுகின்றமை உகந்தது அல்ல.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.