Tuesday, December 28, 2010

வலிகாமம் கல்விப் பணிப்பாளர் பூதவுடல் அக்கினியுடன் சங்கமம்! பெருமளவானோர் இறுதி அஞ்சலி! - சிறிதரன் எம்.பி. கண்டனம்

உரும்பிராயில் சுட்டுக்கொல்லப்பட்ட வலிகாமம் வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் மார்க்கண்டு சிவலிங்கத்தின் பூதவுடல் ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் அதிகாரிகள் சூழ தகனம் செய்யப்பட்டது.

கடந்த 27ம் திகதி தனது மகளுடன் வீட்டிலிருந்த சமயம் கொள்ளைக்கென்ற பெயரில் புகுந்த ஆயுததாரிகள் இவரை சுட்டுக்கொன்றனர்.

இவரது இறுதிக்கிரியைகள் இன்றைய தினம் அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதன்போது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தமது இறுதி அஞ்சலிகளை செலுத்தினர். தொடர்ந்து நண்பகல் 12 மணிவரை பூதவுடல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

பின்னர் நண்பகல் 1.45 மணியளவில் பூதவுடல் வலிகாமம் கல்வி வலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இங்கு வலயக்கல்வி அலுவலக அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டு தமது அஞ்சலிகளை செலுத்தினர்.

இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தனதுரையில்,

காலத்திற்குக் காலம் மனநோயாளிகளாலும் கஞ்சாவிற்காக துப்பாக்கியை கொடுப்பவர்களாலும் தமிழர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இதற்கெல்லாம் எந்தவிதமான நடவடிக்கைகளும் இன்று வரைக்கும் மேற்கொள்ளப்படவில்லை. இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கின்றது. நாளைக்கும் தொடரும்.

1985காலப்பகுதியில் கிளிநொச்சி ரயில் நிலையத்தில் 16 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டபோது அந்த சிப்பாய் மனநோயாளி என்று மூடிமறைத்தார்கள்.

இன்றைக்கு சங்கானையில் இந்து மதகுரு கொல்லப்பட்டபோது கஞ்சாவிற்காக இராணுவச் சிப்பாய்கள் துப்பாக்கி கொடுத்ததாக கூறுகின்றார்கள்.

தமிழர்கள் தொடர்ந்தும் கொல்லப்பட்டுக்கொண்டிருப்பார்கள் இவர்களும் இப்படி ஏதாவது காரணம் கூறிக்கொண்டேயிருப்பார்கள்.

நேற்று ஒரு கல்வியிலாளர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார். இதற்கும் ஏதாவது காரணம் கூறத்தான் போகிறார்கள் அதில் ஆச்சரியப்படவேண்டிய அவசியம் கிடையாது.

குடாநாட்டில் நடந்த சாவுகளுக்கும் கொள்ளைகளுக்கும் அரசாங்கமே முழுப்பொறுப்பபையும் ஏற்றுக்கொண்டாகவேண்டும். குடாநாட்டில் கடந்த 15வருடங்களுக்கும் மேலாக இராணுவம் நிலைகொண்டிருக்கின்றது.

இராணுவமும் இராணுவ புலனாய்வுத்துறையினரும் கண்ணில் எண்ணை விட்டுப் பார்த்துக்கொண்டிருக்கும் சூழலில் இப்படியான சம்பவங்கள் எப்படி நடக்கின்றன.

குடாநாட்டின் முதுகெலும்பாக இருக்கின்ற சகலதுறைகளையும் அடக்கி ஒடுக்குவதன் முலம் மக்களை மந்தைச்சமூகமாக மாற்றும் நடவடிக்கையே மேற்கொள்ளப்படுகின்றது.

இன்று இந்த நிகழ்வை சாதாரண சம்பவமாக பார்க்கமுடியாது. இந்த விடயத்தில் அனைவரும் அக்கறையுடன் நடந்துகொண்டாகவேண்டும்.

இந்த மூத்த கல்வியியலாளருக்கு நடந்திருப்பது நாளைக்கு யாருக்கும் நடக்கலாம். துப்பாக்கி முனையில் மூன்று கொள்ளைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

அவற்றில் இரண்டு பேர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இவ்வாறான சம்பவங்களை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம்.

மேலும் கல்விப் பணிப்பாளரின் குடும்பத்திற்காகவும் அன்னாரின் ஆத்ம சாந்திக்காகவும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் எனக் கூறினார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.