சரத் பொன்சேகாவை ஜனாதிபதி முன் மண்டியிட வைத்து, மன்னிப்புக் கேட்க வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய, சரத் பொன்சேகாவை ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கோர வைப்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவுடன் இரகசிய சதியாலோசனை நடாத்தியிருப்பதாக சிங்கள இணையத்தள செய்திகளிலிருந்து தெரிய வருகின்றது.சரத் பொன்சேக்காவிற்கு எதிராக இராணுவ நீதிமன்றங்கள் விதித்துள்ள தீர்ப்புகளை கேள்விக்குள்ளாக்கும் சிவில் நீதிமன்றத் தீர்ப்புகள் எதிர்வரும் மாதங்களில் வெளிவரலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்படும் நிலையில் அதற்கு முன்பாகவே அவரை மன்னிப்புக் கோர வைத்து விடுதலை செய்து விடுவது தொடர்பில் அரசாங்கத்தின் மேல் மட்டம் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.
ஆயினும் எவ்வகையிலாவது சரத் பொன்சேகாவை ஜனாதிபதி முன் மண்டியிட வைத்து, மன்னிப்புக் கேட்க வைக்க வேண்டும் என்பதில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உறுதியாக இருப்பதாக தெரிய வருகின்றது. அதற்கான பொறுப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவிடம் அரசாங்கத்தினால் கையளிக்கப்பட்டுள்ளது.
அதற்காக மற்றவர்களையும் தம் கருத்துக்கு செவிசாய்க்க வைக்கும் வகையில் சரத் பொன்சேகா சிறையில் வாடுவது பெரும் அநியாயம் என்றும், தற்போதைய நிலையில் அவரது சேவை நாட்டுக்கு அத்தியாவசியமாகவுள்ளதால் எவ்வழியிலாவது சிறையிலிருந்து வெளி வருவதே உசிதமானது என்றும் அவர்கள் பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றனர்.
சரத் பொன்சேகாவின் செல்வாக்கைப் பயன்படுத்தி பாராளுமன்றத் தேர்தலில் ஓரளவுக்கு வாக்குகளைப் பெற்றுக் கொண்ட ஜே.வி.பி. கூட தற்போது அவரது விடுதலை தொடர்பில் காத்திரமான பங்களிப்பை வழங்குவதில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே அவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு சரத் பொன்சேகா ஜனாதிபதியிடம் மன்னிப்பைக் கோரி வெளியில் வந்து விட்டால் அதன் பின் அரசியல் செயற்பாடுகளை பலமாக முன்னெடுக்கலாம் என்றும் அவர்கள் தங்கள் கருத்துக்கு ஆதரவாக நியாயம் கற்பிக்க முனைகின்றனர்.
அதன் ஒரு கட்டமாக எதிர்வரும் வாரங்களில் சஜித் பிரேமதாச சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகாவைச் சந்தித்து சரத் பொன்சேகாவின் விடுதலை தொடர்பாகக் கலந்துரையாடத் தீர்மானித்துள்ளார்.
ஆயினும் அனோமா பொன்சேகா மற்றும் சரத் பொன்சேகா ஆகியோர் இது தொடர்பில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கப் போகின்றனர் என்பது குறித்து எதிர்வு கூற முடியாத நிலையே தற்போதுள்ளது.






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.