Tuesday, December 28, 2010

விடுதலையான முன்னாள் போராளிகளின் தொடர்பில் விபரம் திரட்டும் இராணுவ புலனாய்வு அதிகாரிகள்:

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காகச் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தொடர்பில் இராணுவ புலனாய்வுப் பிரிவினர் தகவல்களை திரட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சிகளை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்கின்றார்களா என்பது தொடர்பில் இராணுவம் மற்றும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து சோதனைகளை நடத்தி வருவதாக இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல இலங்கை ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடாதவாறு நடவடிக்கை மேற்கொள்ளவும் அவர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சிகள் உரிய முறையில் பயன்படுத்தப்படுகின்றனவா என்பது தொடர்பிலும் அறிவதற்காகவே பாதுகாப்பு தரப்பினர் அவர்கள் தொடர்பில் தகவல்களைத் திரட்டி வருவதாகவும் இராணுவ பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

இந்நிலையில், யாழ் மாவட்டத்தில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் தொடர்பான விபரங்களை இராணுவப் புலனாய்வு பிரிவினர் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் கிராம அலுவலர்கள், பிரதேச செயலாளர்கள், உதவி அரசாங்க அதிபர் அலுவலகங்கள் மூலம் பெற்று வருவதால் மேற்படி விடுவிக்கப்பட்டவர்கள் மத்தியில் பெறும் பதற்ற நிலை தோன்றியுள்ளது.

கடந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பான வதந்திகள் மற்றும் காணாமல் போனவர்கள் பற்றிய சம்பவங்களுடன் மேற்படி புலனாய்வு அதிகாரிகளின் விபரம் திரட்டல் நடவடிக்கை இணைத்து பேசப்படுவதாலேயே அவர்கள் மத்தியில் இவ்வாறு பதற்றம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.