Monday, May 03, 2010

அடங்காத தாகம் :-கண்மணி

தமிழீழ விடுதலை வரலாற்றில் தற்சமயம் ஏற்பட்டுள்ள தேக்க நிலை நிரந்தரமானது அல்ல என்கின்ற எண்ணம் எல்லோருக்குமே இயல்பாக இப்போது எழுந்திருக்கிறது. எந்த நிலையிலும் நாம் தோல்வியுற மாட்டோம் என்பது நம்பிக்கை மட்டுமல்ல, அது நமது தேவையை அடிப்படையாக கொண்டது. வாழ வேண்டும் என்ற நிலை ஏற்பட்டு விட்டால், வாழ்வதற்காக நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம் இயல்பாகவே நமக்குள் அமர்ந்து கொள்கிறது. தமிழீழ விடுதலை வரலாற்றில்கூட இப்படி ஒரு தேவை அடிப்படை கருவாக இருக்கின்ற காரணத்தினால் இதை தவிர்த்து, வேறொன்றையும் சிந்திக்க முடியாத மனநிலையில் நாம் இருக்கிறோம்.

ஆகவேதான் எத்தனை முறையானாலும் ஒரே இலக்கை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். நம்மை எந்த ஒரு நிகழ்வும் தடுத்துவிட முடியாது. தடுத்திட நாம் அனுமதிக்கவும் கூடாது. காரணம் நமக்கான இந்த விடுதலை வேட்கை என்பது தன்னலமானது அல்ல. இதில் வருங்காலம் என்ற ஒரு மாபெரும் இலட்சிய பாங்கு உள்ளடங்கி இருக்கிறது. எதிர்காலத்தின் நன்மைகளுக்காகவே நிகழ்காலத்தில் நாம் போராடிக் கொண்டிருக்கின்றோம். நமது போராட்டம் முடிந்துபோனதல்ல. ஒருவேளை தமிழீழ அரசை நாம் கட்டி அமைத்துவிட்டாலும்கூட, அந்த அரசின் செயல்பாடுகளை நாம் அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தி செல்ல வேண்டிய யுக்திகளாக மாறிவிடுவோம். காரணம் நமது எதிர்கால தலைமுறையின் மகிழ்ச்சியும், அவர்களின் வளமான வாழ்வுமே நம்முடைய கண்முன்னால் காட்சிகளாக தெரிகின்றன.

இதே சிந்தனையோடுதான் தமிழீழ விடுதலையை தேசிய தலைவர் நடத்தினார். தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார். இன்று உலகெங்கும் தமிழ்தேசியத்தின் நடைமுறை பண்பாட்டு காரணிகளை அனைவரும் பேசக்கூடிய ஒரு சிறப்பு நிலை ஏற்பட்டிருக்கிறது என்றால், அதற்கு காரணம் ஒன்று, நமது போராட்டத்தின் நியாயம். இரண்டு, இந்த போராட்டத்தில் உள்ள நேர்மை, மூன்று இந்த போராட்டத்தை இயக்கும் தன்மை. ஆக, இந்த மூன்றிற்கும் அடிப்படை காரணமாக இருப்பவர் நமது தேசிய தலைவர் என்பதை நம்மால் மறுதலிக்க முடியாது. நம்மால் மட்டும் என்பதைவிட, நமது எதிரியாலும்கூட இதை மறுத்துரைக்க முடியாது. காரணம் விடுதலை போராட்டத்தில் ஒரு தலைவரின் பங்கு எவ்வளவு அவசியம் என்பதை அவர் கண்டுணர்ந்தார்.

அந்த தலைவரின் நடவடிக்கை மக்களிடம் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவர் தீர்மானித்தார். தலைவன் என்பவன் தொண்டனாக இருப்பான் என்கின்ற ஒரு கோட்பாட்டியல் நடைமுறைக்கு தம்மை உட்படுத்திக் கொண்டார். ஆகவே, தலைமை என்பது அதிகார நடுவம் அல்ல என்பதை அவர் செயல்படுத்திக் காட்டினார். அதிகாரம் என்பது எந்த நிலையிலும் எதிர்வினையே செய்யும் என்பதை அவர் நடைமுறையில் கண்டிருந்த காரணத்தினால், தம்மை தலைவர் என்று அழைத்துக் கொள்வதை காட்டிலும், தம்மையும் இயக்கத் தோழர்களில் ஒருவராகவே இருத்தி வைத்தார். எந்த நேரத்திலும் தாம் இயக்க சீருடையை அணிந்திருந்தார். காரணம் இயக்க தோழர்களுக்கும் தமக்கும் உடையிலும்கூட இடைவெளி வரக்கூடாது என்கின்ற உயரிய சிந்தனை அவருக்குள் புதைந்து இருந்தது. சாணக்கிய நூலான அர்த்த சாஸ்திரத்தில் ஒரு தலைவனுக்குரிய பண்பாக இந்த கருத்து வலியுறுத்தப்படுகிறது. மக்களை எது மகிழ்விக்கிறதோ, அதை செய்வதுதான் ஒரு தலைவனுக்கு நன்மை. தம்மை மட்டும் மகிழ்வித்துக் கொள்வதல்ல.

தலைவன் மக்களிடம் ஊதியம் பெறும் ஒரு தொண்டன். நாட்டின் மக்களோடு மக்களாக அவன் வாழ வேண்டும்" என. ஆக, ஒரு தலைவனுக்கான இந்த பண்பிலிருந்து ஒருதுளிக்கூட தமது பாதையை விலக்கிக் கொள்ளாத பெரும் பண்பு நம்முடைய தேசிய தலைவருக்கு இருக்கிறது. ஆகவேதான் மக்கள் இயல்பாகவே அவர் பெயரை உச்சரிக்கும்போது ஒரு அதிர்வை உணர்கிறார்கள். அவரை நினைக்கும்போது உள்ளத்தில் ஒரு குதூகலம் தோன்றுவதை உணருகிறார்கள். தேசிய தலைவர் தமது வயிற்றில் பிறக்காத பிள்ளையாக தமிழக தாய்மார்கள் எல்லாம் அவர் இருக்கும் திசை நோக்கி உச்சி முகர்ந்து வாழ்த்துகிறார்கள். தமிழ் இளைஞர்கள் எல்லாம் தன் உடன்பிறந்த அண்ணனைப்போல அவரை தலையில் வைத்து கொண்டாடுகிறார்கள்.

ஆகவே, தலைவன் என்பவன் ஒரு சிறந்த தொண்டன் என்பதை நமது தேசிய தலைவர் நடைமுறையில், தமது வாழ்க்கையில் வெளிப்படுத்தினார். இன்றுவரை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். எந்த நிலையிலும் அவர் போராளிகளிடமிருந்து தம்மை தனிமைப்படுத்திக் கொண்டது கிடையாது. போராளிகளின் உணவும், தேசிய தலைவரின் உணவும் ஒருநாளும் மாறுபட்டது இல்லை. அவர் அந்த மக்களோடு மக்களாக, மக்களுக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு வரலாறு. எந்த காலத்திலும், எந்த தலைவருக்கும் கிடைக்காத ஒரு மாபெரும் சிறப்பை நமது தேசிய தலைவர் பெற்றிருக்கிறார். அது தலைவன் என்பவன் தொண்டன் என்கின்ற பெரும் சிறப்பு. அவர் மக்களை வெறும் மனநிறைவு கொண்டவர்களாக மட்டுமே வளர்த்தெடுக்க விரும்பவில்லை. மாறாக மக்களை ஒரு மாபெரும் ஆற்றல் வாய்ந்த படையணியாக உருவாக்கினார்.

அர்ஜெண்டினாவில் தோன்றி கியூபாவில் புரட்சி நடத்தி நிறைவு பெறாத தமது வாழ்வை நோக்கி நடந்த சே குவேரா கனவின்படி, ஒரு சோசலிச மனிதனை உருவாக்க வேண்டும் என்கின்ற மனப்போக்கு நமது தேசிய தலைவரின் கனவாகவும் இருந்தது. சோசலிச மனிதன் என்பவன் இயற்கையைத் தாண்டி வளங்களை மட்டுமல்ல, உளவியல் ரீதியாக அவன் மகிழ்ச்சியோடும் மனநிறைவும் கொண்டவனாக இருப்பான். இந்த மகிழ்ச்சியும் மனநிறைவும் மாறாத தன்மை வாய்ந்ததாக இருக்கும். காரணம் இது அன்பினால் கட்டப்பட்ட ஒரு சிறப்பு வாய்ந்த உறவாக வெளிப்படும். நமது தேசிய தலைவர் சோசலிச நாட்டை மட்டுமல்ல, சோசலிச தமிழனையும் உருவாக்க தொடர்ந்து போராடினார்.

தாம் பிறந்த மண்ணை, தாம் பிறந்த இனத்தை, தாம் பேசும் மொழியை அவர் அளவு கடந்து நேசித்தார். தூய உள்ளத்தோடு அன்பு செய்தார். ஆகவேதான் அதை காக்க வேண்டும் என்கின்ற இயற்கையான சிந்தனை அவரை ஆக்கிரமித்தது. அதனால்தான் அவர் தம்மையே இழப்பதற்கும் தயாராக இருந்தார். அவர் தம்மை இழக்க தயாராக இருந்த காரணத்தினால், அந்த எண்ண அலைகள் ஏராளமான போராளிகள் தம்மை இழப்பதற்கு தயாரான ஒரு இயக்கத்தை அவரால் கட்ட முடிந்தது. உயிர் என்பது வெல்லமாக மதிக்கப்படும் இந்த காலத்தில், அதை துச்சமாக மதிக்கும் துணிவை அவர் போதித்தார். விவிலிய வசனம் சொல்கிறது, தம் நண்பனுக்காக உயிரை விடுவதைவிட மேலான அன்பு எதுவும் இல்லை என. விவிலியம் என்பது கிறித்துவ மறைநூலாக இருந்தாலும்கூட, இந்த வார்த்தையில் நடைமுறையில் செயல்படுத்திக் கொண்டிருப்பவர் நமது தேசிய தலைவர்.

தமது மக்களுக்காக உயிரை விடுவதைவிட, மேலான அன்பு எதுவும் இல்லை என்பதை அவர் உணர்ந்து வைத்திருந்தார். அந்த உணர்வை வெளிப்படுத்தினார். தாமும் உயிரை விடுவதற்கு தயாராக இருக்கிறார். ஆகவேதான் அவர் சொன்னார், தமது மெய்காப்பாளர்களைப் பார்த்து, ஒருவேளை எதிரிகள் எமை சூழ்வார்களாயின், என்னை எரித்து சாம்பலாக்கி விடுங்கள் என்று. இந்த துணிவு இயல்பாக தோன்றாது. அது அந்த மக்கள்மீது கொண்ட அன்பினால் தோன்றக்கூடியது. இந்த துணிவு மக்களை உளமாற நேசிப்பதால் உருவாகும் ஒரு பேரின்ப ஊற்று. அவர் அந்த மக்களை உளமாற நேசிக்க செய்யவில்லை. அந்த மக்களாகவே அவர் வாழ்கிறார். ஆகவேதான் என்ன செய்தாலும் அந்த பெயரை யாராலும் அழிக்க முடியவில்லை. அது உயிர் நாடிகளை சுண்டிவிடுகிறது. உணர்வுகளை தூண்டிவிடுகிறது. தேசிய தலைவரின் அந்த பெயர் ஒன்று போதும் விடுதலையை வென்றெடுக்க. அவர் சுட்டிக்காட்டுவதை வென்றெடுக்க உலகெங்கும் வீர உள்ளங்கள் உணர்வோடு காத்திருக்கின்றன. இதுவரை உலகில் இவரின் அரசியலை புரிந்து கொள்வதற்கு யாரும் இல்லை.

உலக அரசியல் நுண்ணறிவாளர்கள் சிந்திக்கிறார்கள். இவர் அடுத்து என்ன செய்யப்போகிறார். இவர் எதை நோக்கி அரசியல் நடத்துகிறார். இவரின் அடுத்து அரசியல் திட்டம் என்ன? என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. அதை புரிந்து கொள்ள வேண்டும் என்றால், அவர் எந்த கொள்கையை, எந்த லட்சியத்தை நேசித்தாரோ, அதை நேசிக்க வேண்டும். மேலோட்டமாக தேசிய தலைவரின் அரசியலை யாராலும் புரிந்து கொள்ள முடியாது. வாழைப்பழத்தில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. எல்லாவகை வாழைப்பழங்களிலும் வெவ்வேறு வகையான சுவை செறிவூட்டப்பட்டு இருக்கின்றன. வாழைப்பழம் என்று பொதுவாக வாய் நிறைய அழைத்தாலும்கூட, அதன் சுவையை நாம் உண்பதின் மூலம் மட்டுமே அறிய முடியும்.

அதைபோன்றே உலகத்தின் பல்வேறு போராளிகளை நாம் அறிந்து வைத்திருந்தாலும், எல்லோரையும் நாம் போராளிகள் என்று அழைத்தாலும், நமது தேசிய தலைவரை சுவைத்தவர்களுக்கு மட்டுமே அவரின் இயற்கை குணம் தெரியும். எமது தேசியதலைவர் இந்த மக்களை எவ்வளவு நேசித்தாரோ, அதைவிட பலமடங்கு கூடுதலாக இந்த மக்களை தாங்கி நிற்கும் இயற்கையை நேசித்தார். இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தார். இயற்கை நிறைவோடு இருக்கும்போதுதான் மக்களின் வாழ்வு மகிழ்வோடு இருக்கும் என்பதை அவர் ஆணித்தரமாக நம்பினார். இந்த கருத்தில் இருந்து அவர் எந்த நிலையிலும் மாறுபடவே இல்லை. மாறாத சிந்தனை கொண்ட மகத்தான மாமனிதர் எமது தேசிய தலைவர்.

அவர் குருதி ஓட்டத்திலும், சிந்தனை ஓட்டத்திலும் தமிழ் மக்களின் விடுதலையும், தமிழ் மக்களின் மகிழ்ச்சி நிறைந்த வாழ்வும், தமிழ் மக்களின் நலன் சார்ந்த பண்புகளும் நிறைந்திருக்க வேண்டும் என்பதை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆகவே, தேசிய தலைவரின் செயல்பாடுகள் வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றன. நாம் அடையப்போகும் வெற்றி என்பது சாதாரண வெற்றி அல்ல. வரலாற்றின் இதுவரை நிகழாத மாபெரும் வெற்றி. அது முற்றிலும் தேசிய தலைவரின் மூளை விளைவித்த சிந்தனையின் வெற்றி. இதை நாம் மறுதலிக்க முடியாது. இந்த வெற்றியை மாற்ற முடியாது. தமிழீழ மண்ணில் மகிழ்வோடு வாழும் காலம் நம் கைக்கெட்டிய தூரத்தில் அமைந்திருக்கிறது. நம்பிக்கையோடு நாம் தமிழீழ விடுதலையை வென்றெடுக்கும் பணியில் பங்கேற்போம். தோல்வி என்பது நமக்கு இல்லை. வெற்றி ஒன்றுதான் நமது இலக்கு. வெற்றி ஒன்றுதான் நமது சிந்தனை. வெற்றி ஒன்றுதான் நமது வாழ்வு. அதை அடையும் வரை நமது தமிழீழ தாகம் அடங்கக்கூடாது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.