Monday, May 03, 2010

ஜே.வி.பியினருக்கு வழங்கியது போன்று எமது இளைஞர்களுக்கும் மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் :- சம்பந்தன் கோரிக்கை.

எமது மக்களின் ஜனநாயக ரீதியான முடிவை அரசம் சர்வதேசமும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலை மாவட்டத்தின் பாலையூற்று கிராம மக்கள் வழங்கிய வரவேற்பு நிகழ்வில் பங்கு கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:-

எமது மக்களின் நீண்டகாலப் பிரச்சினை, சிறையில் வாடும் எமது இளைஞர்களின் நிலைமைகள், பாதிக்கப்பட்ட எமது மக்களின் நிலைமைகள் தொடர்பாக இங்கு இளைஞர் ஒருவரால் கேள்விக்கள் முன்வைக்கப்பட்டன. அவரது கேள்விகள் மற்றும் பிரச்சினை நியாயமானது. இவற்றை தீர்க்கத்தான் நாம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். எமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் மேற்சொன்ன விடயங்களும் உள்ளடக்கப்பட்டிருந்தன. எமது மக்கள் அதனை முழுமையாக ஏற்றுள்ளனர்.

நடந்து முடிந்த தேர்தலில் வடக்கு � கிழக்கில் எமது கட்சி வெற்றி பெற்றுள்ளது. பல சுயேட்சைக் குழுக்கள், பல தமிழ் கட்சிகள் என்பன எமது கட்சிக்கெதிராக களமிறக்கப்பட்டன. பலவிதமான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. பலரது அடையாள அட்டைகள் பறிக்கப்பட்டன.

பெருவாரியான நிதியும் செலவு செய்யப்பட்டது. இறுதிக் கட்டத்தில் மக்களுக்கு பொருட்களும் வழங்கப்பட்டன. யுத்த சூழல் காரணமாக மக்கள் பலவீனமாக இருந்த இந்த நிலைமையில் இவ்விதமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. வடக்கு � கிழக்கின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மேற்கொள்ளப்பட்டன. இவற்றை ஆளும் கட்சி முக்கியஸ்தர்கள் நிறைவேற்றினார்கள். ஆயினும் வடக்கு � கிழக்கில் நாம் அதிகப்படியான 14 பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளோம். வேறு எந்த தமிழ்க் கட்சியும் இங்கு வெற்றி பெறவில்லை.

கடந்த 2004 தேர்தலின் போது கூட்டமைப்பு 22 உறுப்பினர்களை பெற்றது. மக்கள் சற்று இன்னும் வாக்களித்திருந்தால் இந் நிலைமை ஏற்பட்டிருக்கும். 2004 தேர்தலைப் பொறுத்வதரை அது அமைதியான தேர்தலாக இடம்பெற்றது. யுத்த நிறுத்த சூழல் இருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்தார்கள்.

அவர்களது அரசியல் பிரிவு செயற்பட்டது. இடம்பெயர்ந்த அநேகமான மக்கள் திரும்பியிருந்தார்கள். மக்கள் ஓரளவு சுந்திரமாக வாக்களிக்கும் சூழல் காணப்பட்டது. இந்த நிலைமையில் நாம் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றோம்.

கிழக்கு மாகாணத்தில் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். இவர்களில் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் பேசும் உறுப்பினர்கள். இவர்களில் அதாவுல்லா, கிஸ்புல்லா போன்றவர்கள் ஆளும் தரப்பைச் சார்ந்தவர்கள். எமது உறுப்பினர்கள் ஐவர், முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் 4 பேர் உள்ளனர்.

இந்த நிலையில் தமிழ் பேசும் 9 உறுப்பினர்களும் எமது பிரச்சினை தொடர்பாக பேசி வருகின்றோம். இவர்கள் ஒருமித்த இந்த நிலையில் வடக்கு � கிழக்கில் அதிக பெரும்பான்மையுடன் நாம் உள்ளோம். எம்மால் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞானத்தை இத் தேர்தில் மக்கள் ஏற்று அங்கீகரித்துள்ளனர். எது மக்கள் எட்சி என்றும் வன்முறையை, பிரிவினையை ஆதரித்தது கிடையாது.

நாங்கள் பிரிவினையை விரும்பவில்லை. வன்முறைய விரும்பவில்லை. எமது நியாயமான கோரிக்கைகளை முன்பிருந்த பெரும்பான்மைத் தலைவர்கள் நிறைவேற்றவில்லை. இதனால் தான் எமது மக்கள், இளைஞர்கள் பிரிவினை, வன்முறையில் இறங்க நேரிட்டது. எமது கட்சி எமது மக்கள் பிரிவினையை ஆதரிக்காது என்ற கொள்கையைக் கொண்ட கட்சி.

இந்த நிலையில் எமது மக்களின் நியாய பூர்வமான பிரச்சினைக்கு நியாயமானதும் நிலைத்து நிற்கக் கூடியதுமான ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வைக் காண நாம் முயற்சிக்கின்றோம். இரண்டாவதாக எமது பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, உட்கட்டுமான அபிவிருத்தியில் கவனம் செலுத்தல் என தீர்மானித்தோம்.

இந்த நாட்டில் 1970, 71 களில் ஆயுதமேந்திப் போராடிய ஜே.வி.பி உறுப்பினர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது. இதேபோன்று எமது இளைஞர்களுக்கும் மன்னிப்பு வழங்க வேண்டும், வழங்கும் காலம் வரும். சிறையில் முகாம்களில் குற்றம் சாட்டப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர் - யுவதிகள் விடுவிக்கப்பட வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்களும் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்படவேண்டும்.

நடந்து முடிந்த தேர்தலில் எமது மக்கள் முன்வைத்த ஜனநாயக ரீதியான கோரிக்கைகள் தட்டிக்கழிக்கப்படாமல் தீர்க்கப்பட வேண்டும். அவை அங்கீகரிக்கப்பட வேண்டும். அரசம், சர்வதேசமும் எமது மக்களின் ஜனநாயக இந்த உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என மக்கள் சார்ப்பாகக் கோரிக்கை விடுக்கின்றேன் என்றும் இரா சம்பந்தன் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.