ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் முன்னணி அரசுக்கு இருந்த அரசியல் விருப்பும், அதன் தந்திரோபாயமுமே தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டமைக்கு முக்கிய காரணம் என சிறிலங்கா படைத்துறை அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.விடுதலைப் புலிகள் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இருந்த உறுதியான தீர்மானமே அவ்வமைப்பு தோற்கடிக்கப்பட்டதிற்கான முதன்மையான காரணம் என இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளுடனான போரின் இறுதிக் காலங்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இருந்த அரசியல் விருப்பும், அவர் மேற்கொண்ட தந்திரோபாய நகர்வுகளுமே படையினரை விடுதலைப் புலிகளை எதிர்த்துப் போரிட்டு வெற்றி காணச் செய்தது என இச்செவ்வியில் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இச்செவ்வியில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'ஒரு போரில் வெற்றி கொள்வதற்கு படையினரின் எண்ணிக்கையும், யுத்த தாங்கிகளும், ஆட்லறிகளும் போதுமானவையல்ல. போரை வெற்றி கொள்ள வேண்டும் என்ற அரசியல் விருப்பும், அதற்கான தகுந்த தந்திரோபாயமும் வேண்டும். ஒரு இராணுவத் தாக்குதல் நடவடிக்கையின் போது யுத்த தாங்கிகள், கவச வாகனங்கள், ஆட்லறிகள் போன்ற ஆயுதத் தளபாடங்களை உபயோகித்து படையினர் சண்டையிடுகின்றனர் என்றே வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்குப் புலப்படும். ஆனால் போருக்கு வெளியில் இருந்து பார்க்கின்ற மக்களுக்கோ அல்லது சர்வதேச சமூகத்துக்கோ அப்போரின் வெற்றிக்குப் பின்னால் இருந்த தந்திரோபாயங்கள் குறித்து புலப்படுவதில்லை.
சிறிலங்காவின் வரலாற்றில் நான்கு வௌவேறு ஜனாதிபதிகளைக் கொண்டிருந்த கடந்தகால எட்டு அரசுகளும் விடுதலைப் புலிகளுடனான போரை முடிவுக்கு கொண்டு வருவதில் தோல்வி கண்டன. விடுதலைப் புலிகளுடனான போரை முடிவுக்கு கொண்டு வருவதில் அவர்கள் தோல்வி கண்டமைக்கு இவ்வாறு ஆட்சியிலிருந்த ஜனாதிபதிகளினதும், அரசுகளினதும் கட்டுப்பாட்டின் கீழ் நன்கு பயிற்றப்பட்ட படைத்தளபதிகளும், படையினரும் இருக்கவில்லை என்பது அர்த்தமல்ல. 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு பதவி ஏற்ற போது விடுதலைப் புலிகளுடனான போரில் சுமார் 26,000 படையினர் கொல்லப்பட்டிருந்தனர். ஆனால் இவ்வாறு ஆட்சி செய்தவர்களிடம் விடுதலைப் புலிகள் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜாக்சவுக்கு இருந்த அரசியல் விருப்பும், தற்திரோபாய அறிவும் இருக்கவில்லை.
இந்நிலையில், போரின் இறுதிக் காலங்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேற்கொண்ட பல தந்திரோபாய நகர்வுகளின் கூட்டு நடவடிக்கையே படையினரை விடுதலைப் புலிகளை எதிர்த்துப் போரிட்டு வெற்றி காணச் செய்தது' என கோத்தபாய ராஜபக்ச இச்செவ்வியில் தெரிவித்துள்ளார்.






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.