Tuesday, April 06, 2010

தமிழர் சிந்திய இரத்தம் உலகின் மனச்சாட்சிக் கதவுகளில் தெறித்துள்ளது – பத்மினி சிதம்பரநாதன்

இன்று எமக்குச் சாதகமான சூழ்நிலைகள் உருவாகி வருகின்றன. தமிழர் சிந்திய இரத்தம் உலகத்தின் மனச்சாட்சிக் கதவுகளில் தெறித்துள்ளது. தமிழர்களின் நீண்டகால உரிமைப் போராட்டத்தின் விளைவாக இன்று தமிழர் பிரச்சினை உலகில் பேசு பொருளாகி உள்ளது. இலங்கை நாடும், இலங்கையின் இனப்பிரச்சினையும் சர்வதேசத்தின் கவனத்திற்கு உரியதாகியுள்ளது.
சர்வதேசத் தரப்புகளும் சிறிலங்கா மீது தமது நலன்களை அடிப்படையாக வைத்து கவனத்தைக் குவிக்கத் தொடங்கியுள்ளன. சர்வதேச சமூகம், தமிழர்களுடன் அதாவது, தாயகத்தில் வாழும் தமிழர்களுடனும், புலம் பெயர்ந்த தமிழர்களுடனும் சிறிலங்கா அரசு பேசவேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருகின்றது. சர்வதேச சமூகம் தமிழர்களின் நியாயமான அபிலாசைக்கு ஏற்ப இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று கூறுகின்றது.

இந்நேரத்தில் தமிழர்கள் கொள்கை உறுதிப்பாட்டோடு நின்று தமது நியாயத்தை சகல சம்பந்தப்பட்ட தரப்புகளோடும் கலந்துரையாடலில் ஈடுபடுவதன் மூலம் தமிழர்களின் நலனை அடைய முடியும எமது அரசியலில் ஒரு புதிய பண்பாட்டை உருவாக்குவதன் மூலம் மக்கள் அரசியலை முன்னெடுக்கும் திட்டத்தையே தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி கொண்டுள்ளது. நாம் மக்களோடு சேர்ந்தியங்கி மக்களைப் பலம் பெறவைத்து, தமிழரின் நியாயமான அபிலாசைகளை மக்களே எடுத்துக் கூறுகின்ற அளவிற்கு மக்கள் அரசியலைக் கட்டி வளர்ப்போம் என தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட வேட்பாளர் பத்மினி சிதம்பரநாதன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களைத் தொடர்பு கொண்டு அவர்களின் கருத்துக்களை பொங்கு தமிழ் வெளிக் கொண்டு வருகின்றது. அவ்வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட வேட்பாளருமான பத்மினி சிதம்பரநாதனைத் தொடர்பு கொண்ட போது அவர் சொன்ன கருத்துக்களை இங்கே தொகுத்துத் தருகின்றோம்.

‘எமது அரசியலில் ஒரு புதிய பண்பாட்டை உருவாக்குவதன் மூலம் மக்கள் அரசியலை முன்னெடுக்கும் திட்டத்தையே தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி கொண்டுள்ளது. நாம் மக்களோடு சேர்ந்தியங்கி மக்களைப் பலம் பெறவைத்து, தமிழரின் நியாயமான அபிலாசைகளை மக்களே எடுத்துக் கூறுகின்ற அளவிற்கு மக்கள் அரசியலைக் கட்டி வளர்ப்போம்.

மக்களை அணிதிரட்டி இனப்பிரச்சினை சம்பந்தப்பட்ட ஏனைய தரப்புகளோடு கலந்துரையாடிப் புரிந்துணர்வை வளர்க்க முயன்று படிப்படியாக ஒரு நிலைத்த சமாதானத் தீர்வை நோக்கி முன்செல்ல தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி முயற்சிக்கும்.

தமிழ் மக்கள் தேர்தல் பற்றி பொதுவாக அக்கறையின்றி இருக்கின்றார்கள். சிலர் நான் இன்னமும் வீட்டுச் சின்னத்திலேயே தேர்தலில் நிற்பதாகக் கூட நினைக்கிறார்கள். வேறு பலர் கூட்டமைப்பில் பிளவு ஏற்பட்டது பற்றி கவலையையும், விரக்தியையும் தெரிவிக்கின்றார்கள். தாங்கள் குழப்பமடைந்திருப்பதாக கோபத்தோடு கூறுகிறார்கள்.

நான் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து போயிருக்கிறேன் என அவர்களுக்கு பொய் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு இந்தப் பிளவின் பின்னணி என்ன என்பது தெரியாமலே இருக்கிறது. நாம் பிளவிற்கான காரணங்கள் பற்றிய கதைகளை அவர்களுக்குக் கூறும் போது அவர்கள் தமக்கு எதுவுமே தெரியாமல் இருந்து விட்டதே என்று கவலையும், கோபமும் அடைகின்றார்கள்.

நான் எழுபதுகளின் பிற்பகுதியில் யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்தபோதே சமூகப் பண்பாட்டு வேலைகளில் ஈடுபட்டிருக்கிறேன். அன்றிலிருந்து தொடர்ச்சியாக 2004ஆம் ஆண்டில் கட்சி அரசியலில் பிரவேசிக்கும் வரை சமூகப் பண்பாட்டு வேலைகளில் ஈடுபட்டு வந்த வரலாறு எனக்குண்டு. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக நாம் செயற்பட்டு வந்திருக்கிறோம். முக்கியமாக ஒடுக்கப்பட்ட பெண்களின் விடுதலைக்காகவும், புறந்தள்ளப்பட்ட கிராமங்களின் முன்னேற்றத்திற்காகவும் நாம் உழைத்திருக்கிறோம்.

2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின் எல்லோரும் குழப்பத்தில் இருக்கிறார்கள். எதிர்காலம் என்னவென்று தெரியாத ஒரு சூனியச் சூழலுக்குள் அகப்பட்டுத் தவிக்கிறார்கள். ஆனால், அவர்கள் தமது மனதுக்குள் தேசியம் பற்றிய ஆசையைப் பாதுகாப்பாகப் பதுக்கி வைத்துள்ளார்கள். இதை எல்லோரும் உணர்ந்து கொள்ளுதல் அவசியமான ஒன்று.

இந்தத் தேர்தல் எம்மீது திணிக்கப்பட்ட ஒன்று. மக்கள் தமக்கிடையே ஒன்று கூடிக் கதைத்து குழப்பங்களைத் தீர்த்து தமது தேசியம் பற்றிய ஆசையைப் பகிர்ந்து கொண்டு எவ்வாறு அடுத்த கட்டத்தை முன்னெடுக்கலாம் என்று தெளியும் முன்னரே இந்தத் தேர்தல் திணிக்கப்படுகிறது’ எனவும் அவர் எம்மிடம் தெரிவித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.