பொதுத்தேர்தல் வாக்களிப்பு பிற்பகல் 4மணியுடன் நிறைவடைந்த நிலையில் வடக்கு கிழக்கில் தமிழ் பிரதேசங்களில் மிகக்குறைவாக காணப்பட்டதாக தேர்தல் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் 50வீதத்திற்கு மேல் வாக்கு பதிவு இடம்பெற்றிருப்பதாகவும் வடக்கு, கிழக்கில் முஸ்லீம் பிரதேசங்களில் வாக்களிப்பு வீதம் 95வீதத்தை காட்டிய போதிலும் தமிழ் பகுதிகளில் 35வீதத்திற்கு குறைவானவர்களே வாக்களித்திருக்கிறார்கள். இதனால் வன்னி திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் தமிழ் பிரதிநிதித்துவம் குறையலாம் என அஞ்சப்படுகிறது.
இன்று காலையில் திருகோணமலை, மட்டக்களப்பு பகுதிகளில் தமிழ் வாக்காளர்கள் வாக்களிக்க சென்ற போது தடுக்கப்பட்டதாகவும் அச்சுறுத்தல் காரணமாக தமிழ் வாக்காளர்கள் வாக்களிக்க செல்லவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் முஸ்லீம் பிரதேசங்களில் 95வீதமானவர்கள் வாக்களித்திருக்கின்ற அதேவேளை தமிழ் பிரதேசங்களில் 30வீதத்திற்கு குறைவானவர்களே வாக்களித்திருக்கிறார்கள்.
காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி பகுதிகளில் காலையிலிருந்து மாலை வரை நீண்டவரிசையில் நின்று மக்கள் வாக்களித்த போதிலும் தமிழ் பிரதேசங்களில் உள்ள வாக்குச்சாவடிகள் மக்கள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்பட்டதாக நமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு ஆதரவு தளம் அதிகம் உள்ள கல்லடி, செட்டிப்பாளையம், குருக்கள்மடம் ஆகிய இடங்களில் முரளிதரன் குழுவைச் சேர்ந்த பிரசாந்தன் தலைமையிலான குழுவினரும் சந்திரகாந்தன் குழுவினரும் பொதுமக்களை தாக்கி வாக்களிக்க விடாது தடுத்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று காலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு எதிரான துண்டுப்பிரசுரங்களை வாக்குச்சாவடிகளுக்கு அருகில் வைத்து பிள்ளையான் குழு விநியோகித்தாகவும், தமிழ் தேசியக்கூட்டமைப்பு வேட்பாளர்கள் சிலர் போட்டியிலிருந்து விலகி விட்டதாகவும் பிரசாரம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
1250வாக்காளர் உள்ள குருக்கள்மடம் வாக்குச்சாவடியில் அச்சம் காரணமாக 300பேருக்கு குறைவானர்களே வாக்களித்திருக்கிறார்கள். ஆரையம்பதியில் ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்தவர்கள் மதுவில் மயக்கமருந்துகளை கலந்து கொடுத்ததால் பெருந்தொகையானவர்கள் வாக்களிக்க முடியாது பாதிக்கப்பட்டதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த அசம்பாவிதங்களால் அப்பகுதியில் உள்ள பெண்களும் வாக்களிக்க செல்லவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பில் 3இலட்சத்து 30ஆயிரம் வாக்காளர்களில் 80ஆயிரம் பேர் முஸ்லீம் வாக்காளர்களாகும். இன்றைய தேர்தல்களில் 76ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வாக்களித்த அதேநேரம் தமிழர்கள் 90ஆயிரத்திற்கு குறைவானர்களே வாக்களித்திருக்கிறார்கள். ஒரு இலட்சத்து 40ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் வாக்களிக்கவில்லை என நமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். இதனால் தமிழரசுக்கட்சியின் வெற்றிவாய்ப்பு பெரிதும் பாதிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.
வாக்காளர்கள் அச்சுறுத்தப்பட்டமை, தேர்தல்களில் அக்கறை இன்மை காரணமாக தமிழ் மக்கள் வாக்களிப்பில் கலந்து கொள்வதை தவிர்திருக்கிறார்கள் என தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலையின் வடக்கேயும் கும்புறுபிட்டியிலிருந்து தெற்கே மூதூர் பிரதேசத்திலும் ஆளும் கட்சியில் போட்டியிடும் அமைச்சுப் பதவி வகிக்கும்
வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளர்கள் வாக்களிக்கச்செல்லும் தமிழ் வாக்காளர்களை தடுத்ததாவும் வன்முறை பாவிப்பதாகவும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
திருகோணமலையிலும் மூதூர் உட்பட முஸ்லீம் பிரதேசங்களில் வாக்களிப்பு வீதம் 85வீதத்தை தாண்டிய போதிலும் திருகோணமலை நகரம் உட்பட தமிழ் பிரதேசங்களில் 35வீதத்திற்கு குறைவாகவே காணப்பட்டதாக நமது திருகோணமலை செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 25வீதமே வாக்களித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இம்மாவட்டத்தில் 7இலட்சத்திற்கு மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் பதியப்பட்ட போதிலும் உண்மையில் 3இலட்சம் வாக்காளர்களே அங்கு இருப்பதாகவும் இதனாலேயே வாக்களிப்பு வீதம் குறைவாக காணப்படுவதாகவும் நமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இன்று காலையில் யாழ்ப்பாணத்தில் சில இடங்களில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு வேட்பாளர்கள் சிலர் தேர்தலிலிருந்து விலகி விட்டதாகவும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டிருந்தன. யாழ்ப்பாணத்தில் கூட மக்களின் வாக்களிப்பு வீதம் குறைவடைந்திருப்பது தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு பாதகமாக அமையலாம் என கருதப்படுகிறது.
வன்னியில் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் இருக்கும் மக்களை வாக்களிக்க விடாது அமைச்சர் ரிசாட் பதியுதீனின் ஆதரவாளர்கள் தடுத்ததாக டெயிலிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை இடம்பெயர்ந்து வவுனியாவில் தங்கியுள்ள மக்கள் வவுனியா மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த கொத்தணி வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். இங்கு கூட 25வீதமானவர்களே வாக்களித்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் 80 வன்முறைச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் 55வீதமானவர்கள் வாக்களித்திருப்பதாகவும் பவ்ரல் அமைப்பின் தலைவர் ரோகன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இரவு 8மணிக்கு வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும் என்றும் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் இரவு 11மணிக்கு பின்னரும் தொகுதி ரீதியான வாக்களிப்பு முடிவுகள் நள்ளிரவு ஒரு மணிக்கு பின்னரும் வெளியாகும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.









0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.