Sunday, March 07, 2010

நாடு கடந்த தமிழீழ அரசு குறித்த இந்தியாவின் அச்சமே, நிருபமா ராவின் இலங்கை விஜயம்: சிங்களப் பத்திரிகை

நாடு கடந்த தமிழீழ அரசிற்கு சர்வதேச ரீதியில் கிடைக்கக் கூடிய அங்கீகாரத்தைத் தடுப்பதற்கு உடனடியாக இனப் பிரச்சினைக்கான தீர்வை முன்வைப்பதே சிறந்த வழி எனக் கருதும் இந்தியா அதற்காகவே நிருபமா ராவை அவசரமாக இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளதாக லங்காதீப சிங்கள நாளிதழ் தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவிலிருந்து செயற்படும் வி.உருத்ரகுமாரனின் தலைமையில் எடுக்கப்பட்டு வரும் நாடு கடந்த தமிழீழ அரசு குறித்து உன்னிப்பாக அவதானித்து வந்த இந்தியா, இந்தக் கட்டமைப்பை தகர்ப்பதற்கு இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டமே உகந்த வழியாகக் கருதுவதாகவும் அந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று இரவு இலங்கையை சென்றடைந்த நிருபமா ராவ், இன்று நண்பகல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச‌வுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் அவர் பகற்போசன விருந்திலும் கலந்துகொள்வார் என‌ வெளிநாட்டமைச்சர் ரோகித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

அதேவேளை இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவிருக்கும் இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ் எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தமை தெரிந்ததே.

பல விடயங்கள் குறித்து கலந்துரையாடல்களை நிருபமா ராவ் மேற்கொள்ளவிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இந்தச் சந்திப்பின் போது 13வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான தீர்வு என்பது சாத்தியப்பாடற்றது என்றும், வடக்கு கிழக்கு இணைந்த பிரதேசத்தை உள்ளடக்கி தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தீர்வினைப் பெறுவதற்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் தமிழத் தேசியக் கூட்டமைப்பினால் வலியுறுத்தவுள்ளதாக கூட்டமைப்புத் தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.