Friday, January 22, 2010

வட்டுக்கோட்டைத் தீர்மானத்துககுப் பேராதரவு அளித்து வரலாறு படையுங்கள்: தமிழ் படைப்பாளிகள் கழகம்

நோர்வே, பிரான்ஸ், கனடா நாடுகளில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீது வெற்றிகரமாக மீள் வாக்குக் கணிப்பு எடுத்ததைத் தொடர்ந்து சுவிசில் எதிர்வரும் 23, 24, ஜெர்மனியில் 24, நெதர்லாந்தில் 24, பிரித்தானியாவில் 30 ஆம் நாள் வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது.

தமிழீழ மக்களது அரசியல் வரலாற்றில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மிக முக்கிய திருப்பு முனையாகும். 1972 ஆம் ஆண்டுவரை அய்க்கிய இலங்கையில் இணைப்பாட்சி முறைமைக்கு தந்தை செல்வநாயகம் தலைமையில் போராடி வந்த இலங்கைத் தமிழரசுக் கட்சி, அய்க்கிய இலங்கையில் ஒற்றை ஆட்சி முறைமைக்கு ஆதரவாக ஜி.ஜி. பொன்னம்பலம் தலைமையில் செயற்பட்டு வந்த அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், செளயமூர்த்தி தொண்டமானின் தலைமையில் இயங்கிய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவை இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற அமைப்பைத் தோற்றுவித்து வட்டுக்கோட்டையில் 1976 ஆம் ஆண்டு மே 14 இல் நடைபெற்ற அதன் முதல் தேசிய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் "ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் உரிய இயல்பான தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான, இறைமை பொருந்திய, சமய சார்பற்ற, சமவுடமைத் தமிழீழ அரசை மீள் எழுப்புதலும் மீள் உருவாக்குதலும் இந்நாட்டில் தமிழ் தேசிய இனத்தின் இருப்பைப் பாதுகாப்பதுதவிர்க்க முடியாததாகி விட்டது என இந்த மாநாடு தீர்மானிக்கிறது.

" (This convention resolves that restoration and reconstitution of the Free, Sovereign, Secular, Socialist State of Tamil Eelam, based on the right of self determination inherent to every nation, has become inevitable in order to safeguard the very existence of the Tamil Nation in this Country.) தமிழ் இறைமை (Tamil Sovereignty)

தமிழ்த் தேசியம் (Tamil Nationhood) அதன் அரசியல் இலக்கு (Independent Statehood) ஆகியவற்றை வரைவிலக்கணம் செய்வதுடன் இறைமை மீட்சிக்கான கோட்பாட்டையும் (Reversion to Sovereignty) இன அழிப்புக்குட்பட்ட (Genocide) ஒரு தேசிய இனத்தின் சுயாட்சி உரிமைக் கோட்பாட்டையும் (Right to Self-Determination) ஒருசேரப் பயன்படுத்தி தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தார்மீக அடிப்படைகளை முன்னெப்போதும் இல்லாதவாறு தெளிவாகவும், பின் எப்போதும் இதைவிடத் தெளிவாக ஒரு தீர்மானமாக நிறைவேற்றுவதற்கான வினைத்திறன் ஒன்றின் தேவையை விட்டுவைக்காதவாறு நுண்மாண் நுழைபுலத்தோடு (Perspicacity) இத் தீர்மானத்தின் ஒவ்வொரு சொல்லும் தெளிவுற ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

1977 ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தமிழ்மக்களிடம் ஆணை கேட்டு 23 மூன்று தொகுதிகளில் போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி 18 தொகுதிகளில் வெற்றிவாகை சூடியது.

எனவே வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு பேராதரவுஅளித்து வரலாறு படையுங்கள் என சுவிஸ், ஜெர்மன், நெதர்லாந்து மற்றும் பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் ஈழத்தமிழ் மக்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம் என தமிழ் படைப்பாளிகள் கழகம் - கனடா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.