Sunday, December 20, 2009

பிரித்தானிய மாணவ விசாக்களுக்கு விண்ணப்பிப்பதற்கு புதிய நடைமுறைகள்- பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவிப்பு


பிரித்தானியாவில் கல்வி கற்பதற்கான மாணவ விசா விண்ணப்பங்களை கொழும்பிலுள்ள விசா விண்ணப்ப நிலையத்தில் சமர்ப்பிக்க விரும்புபவர்கள், எதிர்வரும் 21ஆம் திகதியிலிருந்து முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டுமென பிரித்தானிய எல்லை முகவர் நிலையம் அறிவிப்புச் செய்துள்ளது. இது தொடர்பான ஊடக அறிக்கை  வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:

மாணவ விசா விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு தம்மை பதிவு செய்ய விரும்புபவர்கள் தமது கோரிக்கையை முன்வைக்க திங்கள் முதல் வெள்ளி வரையான நாட்களில் காலை 8.00 மணிக்கும் பிற்பகல் 3.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில்ukstudent colombo@vifshelpline.com என்ற இணையத்தள முகவரியோடு தொடர்பு கொள்ள கோரப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த முன்பதிவு தொடர்பான மேலதிக விபரங்களை www.vfusuklk.com என்ற இணையத்தள முகவரியில் பெற்றுக்கொள்ள முடியும். அதேசமயம், வலிதான விசா ஏற்பு கடிதம் ஒன்று இருப்பவர்கள் மட்டுமே மேற்படி விசாவுக்கான விண்ணப்பங்களை இலத்திரனியல் அஞ்சல் மூலமாக அனுப்ப கோரப்பட்டுள்ளது.

அத்துடன், ஒருவர் விண்ணப்பமொன்றுக்கான கோரிக்கையை முன்வைக்கும் போது, அவரது முழுப்பெயர், கடவுச்சீட்டு இலக்கம், தொடர்பு இலக்கம் என்பவற்றை சமர்ப்பிப்பது அவசியமாகும்.

மேலும் தனது விசா விண்ணப்பத்தை சமர்ப்பிக்க விண்ணப்ப நிலையத்துக்கு சமுகமளிக்கவுள்ள விண்ணப்பதாரியின் பெயரிலேயே பதிவு மேற்கொள்ளப்பட வேண்டும். ஒரு தடவை வழங்கப்பட்ட விண்ணப்ப விபரங்களை மாற்றவோ, விண்ணப்பதாரிக்கு பதிலாக பிறிதொருவர் விசா விண்ணப்ப நிலையத்துக்கு ஆஜராகவோ முடியாது.

ஒருவர் ஒரு பதிவுக்காக ஒரு தடவை மட்டும் கோர முடியும். (பல தடவைகள் பதிவுக்கு கோருவதானது பதிவைப் பெற முடியாது போவதற்கு வழிவகுப்பதாக அமையும்)

விசா விண்ணப்ப நிலையத்திற்கு விஜயம் செய்வதன் மூலமோ அந்நிலையத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொள்வதன் மூலமோ ஒருவர் தம்மை பதிவு செய்து கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவர் முன்பதிவுக்கான கோரிக்கையை முன்வைக்கும் போது அதற்கான பதில் 3 வேலைநாட்களுக்குள் அவரை வந்தடையும். அவருக்கு முதலாவது சாத்தியமான பதிவு ஒதுக்கீடு செய்யப்படும்.

மேலும், மாணவ விசா விண்ணப்பங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டிருப்பதும் விண்ணப்பதாரி பதிவின் பிரகாரம் விசா விண்ணப்ப நிலையத்துக்கு சமுகமளிப்பதற்கு முன்னர் அனைத்து ஆவணங்களும் இணைக்கப்பட்டிருப்பதும் அவசியமாகும்.

பூர்த்தி செய்யப்பட்ட விசா விண்ணப்பப்படிவம், கடவுச் சீட்டு, விசா கட்டணம், ஏனைய தேவையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பத்தை உறுதிப்படுத்தும் இலத்திரனியல் அஞ்சல் பிரதியொன்று என்பனவற்றை விண்ணப்பதாரி வைத்திருந்தால் மட்டுமே அவருக்கு விசா விண்ணப்ப நிலையத்துக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்படும்.

இந்த ஒழுங்கு முறைகளானது விசா சேவையை மேம்படுத்தவும், அனைத்து வாடிக்கையாளர்களுக்காகவும் காத்திருக்கும் நேரத்தை குறைக்கவுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.