Thursday, April 24, 2008

ஆண்டு இறுதிக்குள் வன்னியைக் கைப்பற்றுவோம்: கேகலிய "புதிய" கெடு

[வியாழக்கிழமை, 24 ஏப்ரல் 2008]

வட போர்முனையில் இழப்புக்கள் ஏற்பட்டாலும் ஆண்டு இறுதிக்குள் வன்னியைக் கைப்பற்றுவோம் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல "புதிய" கெடு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று வியாழக்கிழமை ஊடகவியலாளர்களிடம் கேகலிய ரம்புக்வெல கூறியதாவது:

விடுதலைப் புலிகள் யாழ். குடாவுக்குள் ஊடுருவுவதனை இராணுவத்தின் 52 மற்றும் 53 படையணிகள் தடுத்து கடும் பேரிட்டன.

இம் மோதலில் 43 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 33 படையினர் காணாமல் போய் உள்ளனர். காணாமல் போயிருந்த படையினரில் 5 பேர் மீண்டும் படையினருடன் இணைந்துள்ளனர்.

160 படையினர் காயமடைந்துள்ளனர்.

படை நடவடிக்கையில் படையினருக்கு இழப்புகள் வருவதனை தவிர்க்க முடியாது. விடுதலைப் புலிகளுக்கும் இந்த தாக்குல்களில் கடுமையான இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது படையினர் தமது முன்னரங்க நிலைகளைப் பலப்படுத்தி வருகின்றனர். இந்த மோதலில் படையினருக்கு தோல்வி ஏற்படவில்லை.

படையினரின் 53 ஆவது 55 ஆவது படையணிகள் தமது நிலைகளைப் பலப்படுத்தி வருகின்றன.

எமது திட்டங்களை நாம் ஒருபோதும் கைவிட்டுவிட மாட்டோம்.

தற்போது வடக்கில் முகமாலை, கிளாலி, நாகர்கோவில், வரணி, மணலாறு ஆகிய பகுதிகளில் படையினர் முழுப் பலத்துடன் உள்ளனர்.

வட போர்முனையில் ஏற்பட்ட இழப்புகளால் வன்னியைக் கைப்பற்றும் நடவடிக்கையை ஒருபோதும் கைவிட்டுவிடப் போவதில்லை.

இந்த ஆண்டு இறுதிக்குள் வன்னியைக் கைப்பற்றியே தீருவோம் என்றார் கேகலிய ரம்புக்வெல.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.