Friday, April 18, 2008

சீனா, பாகிஸ்தானை சாட்டி இந்தியாவும் ஆயுதங்களை வழங்குவது மன்னிக்க முடியாத வரலாற்றுப் பிழை ஆகும்: வைகோ

[வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2008]


சீனா, பாகிஸ்தானை சாட்டி இந்தியாவும் சிறிலங்காவிற்கு ஆயுதங்களை வழங்குவது, மன்னிக்க முடியாத வரலாற்றுப் பிழை ஆகும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

புதுடில்லியில் உள்ள இந்தியப் பிரதமர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்த பின்னர் அவரிடம் கையளித்த கோரிக்கை மனுவில் வைகோ தெரிவித்துள்ளதாவது:
சிறிலங்கா அரசு நடத்தி வருகின்ற காட்டுமிராண்டித்தனமான இராணுவத் தாக்குதல்களால், நாளுக்குநாள் நிலைமை மோசமாகி வருகிறது. அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். இலட்சக்கணக்கான தமிழர்கள், தங்களுடைய வீட்டை விட்டு விரட்டப்பட்டு, காடுகளில் தஞ்சம் புகுந்து உள்ளனர். மருந்துகள், உணவு இன்றித் தாங்கவொண்ணாக் கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள்.

"தெற்கு ஆசியாவில் அமைதி மற்றும் மறுவாழ்வு" - என்ற பொருளில், மனித மாண்புகளின் பன்னாட்டுச் சங்கம் (International Association for Human Values) என்ற அமைப்பின் சார்பில், நோர்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவில், ஏப்ரல் 10,11 ஆகிய நாட்களில் நடைபெற்றது.

வாழும் கலை அமைப்பின் நிறுவனர், ரவிசங்கர் குருஜி அவர்கள், இந்த மாநாட்டை ஒருங்கிணைப்பதற்கான நல்லெண்ண முயற்சிகளை மேற்கொண்டார்கள். இந்த மாநாடு வெற்றிகரமாக நடைபெறுவதற்கான அனைத்து உதவிகளையும், நோர்வே அரசு முன்னின்று செய்தது.

தெற்கு ஆசியாவில் நிலவுகின்ற கீழ்காணும் பிரச்சினைகள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

1. சிறிலங்கா அரசுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் சண்டை

2. மியன்மார் நாட்டில் மறுக்கப்படும் மக்கள் உரிமைகள்

3. நேபாள் நாட்டில் மக்கள் ஆட்சி மலர நடைபெறும் போராட்டம்

4. மலேசியத் தமிழர்களின் உரிமைப் போராட்டம்

5. இந்தியாவில் வளர்ந்து வரும் மாவோயிஸ்ட், நக்சல் பிரச்சினைகள்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த அறிஞர் பெருமக்கள், கல்வியாளர்கள் பலர் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.

மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் விடுத்த அழைப்பின் பேரில், நானும் இம்மாநாட்டில் பங்கேற்றேன். சத்தீஸ்கர் மாநில உள்துறை அமைச்சர் மாண்புமிகு ராம்விசார் நேதம் கலந்து கொண்டார்.

ஏப்ரல் 10 ஆம் நாள் மாநாட்டு நிகழ்வுக்கு, ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி எரிக்கா மான் அவர்கள் தலைமை ஏற்றார். பண்டிட் ரவிசங்கர் குருஜி வரவேற்பு உரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் பங்கேற்றோர்:

1. வைகோ, பொதுச்செயலாளர் மறுமலர்ச்சி தி.மு.க.

2. டாக்டர் பிரமணவத்தே சீவாலி நாயக தேரர், துணைப்பொதுச்செயலாளர், இலங்கை அமரபுர மஹாநிகய

3. டாக்டர் ஜயலத் ஜெயவர்த்தன - சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர், ஐக்கிய தேசியக் கட்சி

4. டாக்டர் மடுலுவாவே சோபித நாயக தேரர், தலைமை (தேர்வு), நாகவிகாரை கோட்டை, சிறிலங்கா

5. பேராசிரியர் இந்திரா சொய்சா, பன்னாட்டு அமைதி ஆய்வு மன்றம், நோர்வே
6. மாண்புமிகு ஆறுமுகம் தொண்டைமான், சிறிலங்கா அமைச்சர்

7. பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க, செயலாளர், அமைதிச் செயலகம், சிறிலங்கா

இலங்கை அமைதிப் பேச்சுகளுக்கான நோர்வே அரசின் சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பெளயர், சிறப்புரை ஆற்றினார்.

திரு கொலின் ஆர்ச்சர், (பொதுச் செயலாளர், பன்னாட்டு அமைதி மன்றம், சுவிற்சர்லாந்து),

திரு சிகர்ட் ஃபால்கன்பெர்க் மிக்கெல்சன், பேராசிரியர் ரூன் ஒட்டோசென், (பத்திரிகைக் கல்வித்துறை, ஓஸ்லோ பல்கலைக்கழகம்) ஆகியோர், தெற்காசியப் பகுதியில் அமைதியை எட்டுவதற்கான வழிவகைகள் குறித்த கருத்துகளைத் தெரிவித்தனர்.

நோர்வே அரசின் அமைச்சர் எரிக் சொல்ஹெய்மை, ஏப்ரல் 12 ஆம் நாள் நண்பகலில், அவரது அலுவலகத்தில் நான் சந்தித்தேன். சிறிலங்கா அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சண்டை நிறுத்தம் ஏற்படவும், அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெறவும் பெரும் பங்கு ஆற்றியவர் திரு சொல்ஹெய்ம் அவர்கள். அவருடனான சந்திப்பு பயனுள்ளதாக அமைந்தது.

நோர்வேயில் நடைபெற்ற இந்த அமைதி மாநாடு, சிறிலங்கா அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெறுகின்ற சண்டையை நிறுத்தவதற்கும், அமைதிப் பேச்சுகளைத் தொடங்குவதற்கும் அழைப்பு விடுத்து உள்ளது.

சிறிலங்கா அரசு தொடுத்து வருகின்ற கொடுந் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தி, அமைதிப் பேச்சுக்கள் நடைபெறுவதற்கு உரிய சூழ்நிலையைத் தோற்றுவித்து, இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டிய பெரும் பொறுப்பு, இந்திய அரசுக்கு இருக்கிறது.

இலங்கையில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களால், தமிழர்கள் எத்தகைய வேதனைகளைஅனுபவித்து வருகின்றனர் என்பதையும், எல்லையற்ற படுகொலைகள், காணாமல் போனவர்கள் குறித்தும் உலக அளவில் செயற்பட்டு வருகின்ற பல அமைப்புக்கள் வெளியிட்டுள்ள சில தகவல்களைத் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.

வடக்கு-கிழக்கு மனித உரிமைகள் செயலகத்துக்குக் கிடைத்து உள்ள தகவல்கள், (North East Secretariat on Human Rights NESOHR):

ஆயுதப்போராட்டத்தில் ஈடுபடாத அப்பாவித் தமிழ் இளைஞர்களும் இந்த வன்முறையில் தப்பவில்லை. அவர்கள் சிறிலங்கா இராணுவத்தால் கடத்திச் செல்லப்படுகிறார்கள்.அதற்குப் பிறகு அவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைப்பது இல்லை. அவர்கள் படுகொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற அச்சம் நிலவுவதாகத் தெரிவிக்கின்றது.

1997 ஆம் ஆண்டு, செம்மணி என்ற நடத்தில் புதைகுழிகள் தோண்டப்பட்டபோது, அங்கே 400-க்கும் மேற்பட்ட, இளைஞர்கள், குழந்தைகள், பெண்களின் உடல்கள் ஒரே இடத்தில் கிடைத்தது, மேற்கண்ட அறிக்கையை உறுதி செய்கிறது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் (United Nationsl Human Rights Commission-UNHRC) கட்டாய வெளியேற்றம் குறித்து வெளியிட்டு உள்ள அறிக்கையில்,

"தங்களுடைய வாழ்வு இடங்கள், சொந்த வீடுகளில் இருந்து மக்களைக் கட்டாயமாக வெளியேற்றுவது, அப்புறப்படுத்துவது என்பது, அரசியல், சமூக, பொருளாதார உரிமைகளை மறுத்து, பண்பாட்டுச் சிதைக்கின்ற கொடுமை ஆகும்" என்று தெரிவித்து இருக்கிறது.

இலங்கையில் ஐந்து இலட்சம் தமிழர்கள் இவ்விதம் தங்களுடைய வீடுகளில் இருந்து விரட்டப்பட்டு, சொந்த நாட்டுக்கு உள்ளேயே காடுகளில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்து உள்ள கொடுமை அரங்கேறி இருக்கிறது. அங்கே தற்காலிகமாக உருவாக்கப்பட்டு உள்ள முகாம்களில், உணவு, மருந்து, குடிதண்ணீர் எதுவுமே இல்லை. வாழ்க்கை என்பது அவர்களுக்கு நரகம்தான்.

இதில் தப்பிப் பிழைத்தவர்கள், ஒன்றரை இலட்சம் பேர், இந்திய மண்ணில், தமிழகத்தில் தஞ்சம் புகுந்து உள்ளனர். சுமார் எட்டு லட்சம் பேர் அகதிகளாக உலகம் முழுமையும் பல்வேறு நாடுகளில் புகலிடம் பெற்று உள்ளனர். இவர்கள் அனைவரும் தங்கள் சொந்த மண்ணுக்குத் திரும்புவதற்கும், அங்கே மானத்தோடும், உரிமையோடும் வாழ்வதற்கும் உரிய சூழ்நிலை ஏற்பட வேண்டும்.

பச்சிளம் தமிழ்க் குழந்தைகள் அனுபவித்து வரும் கொடுமைகள் குறித்து, ஐ.நா. குழந்தைகள் ஆணையம் (UNICEF) 2003 ஆம் ஆண்டு வெளியிட்டு உள்ள அறிக்கை நெஞ்சைப் பிழிகிறது.

ஐம்பது ஆயிரம் தமிழ்க் குழந்தைகள் பள்ளிகளை விட்டு வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

தமிழீழ மண்ணில் நூற்றில் ஒரு குழந்தை தாய்-தந்தையரை இழந்து, அநாதை விடுதியில் உள்ளது.

முன்னூறில் ஒரு குழந்தை, தந்தை அல்லது தாயை இழந்து இருக்கிறது.

எந்தவிதமான சத்து உணவுகளும் குழந்தைகளுக்குக் கிடைப்பது இல்லை.

30 விழுக்காடு பள்ளிக் கட்டடங்கள், சிறிலங்கா இராணுவ குண்டுவீச்சுகளால், இடித்துத் தகர்க்கப்பட்டு விட்டன.

இதுதான், இலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதியில் உள்ள உண்மை நிலை என்பதை ஐ.நா. அறிக்கை தெளிவுபடுத்துகிறது.

உலக வங்கியின் மனிதவளத் துறை, 2005 பெப்ரவரியில் வெளியிட்டு உள்ள வெளியிட்டு உள்ள அறிக்கையில், இலங்கையின் வடக்கு - கிழக்குப் பகுதியில் உள்ள குழந்தைகள் 46 விழுக்காடு சத்துக்குறைவுடன் உள்ளதையும், அதேவேளையில், சிங்களவர்கள் பெரும்பான்மையாக உள்ள தெற்குப் பகுதியில் இது 29 விழுக்காடாக உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டுகிறது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, சிறிலங்கா வான் படை நடத்தி வருகின்ற குண்டுவீச்சுகள், கொடுந்தாக்குதல்களில், பெருமளவில் குழந்தைகள்தாம் பலியாகின்றனர் என்ற செய்தி, உலகில் அமைதியை விரும்பும் மக்களின் மனங்களில் பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, வடக்கு-கிழக்கு மனித உரிமைகள் செயலகம் (NESOHR) வெளியிட்டு உள்ள அறிக்கை வருமாறு:

1. 2005 டிசம்பர் 23 அன்று, சிறிலங்கா கடற்படைக் குண்டுவீச்சில் நான்கு பேர் இறந்தனர். அவர்களுள், டிக்ஸன் என்ற மூன்று வயதுக் குழந்தையின் உடல் இரண்டு துண்டாகிக் கிடந்தது.

2. 2005 டிசம்பர் 28 அன்று, யாழ்ப்பாணம்-கொடிகாமம் என்ற இடத்தில், 15 வயதே நிரம்பிய தம்பிராஜா அருளானந்தன் என்ற சிறுவனை, அவனது குடும்பத்தினர் முன்னிலையிலேயே சிறிலங்கா இராணுவம் சுட்டுக்கொன்றது.

3. 2006 ஜனவரி 16 ஆம் நாள், மட்டக்களப்பு, அக்கரைப்பற்று என்ற இடத்தில், நண்பர்களுடன் வேலைக்குச் சென்று கொண்டு இருந்த கோபாலகிருஷ்ணன் சுரேஷ் என்ற 16 வயது இளைஞன், சுட்டுக்கொல்லப்பட்டான்.

4. 2005 டிசம்பர் 7 ஆம் நாள், மட்டக்களப்பில் ஒரு வீட்டுக்கு உள்ளே நுழைந்த கொலையாளிகள், யோகராசா யோகேஸ்வரி என்ற இரண்டு வயதுக் குழந்தையையும், துரைராசவதனி என்ற 18 வயதுப் பெண்ணையும் சுட்டுக் கொன்றனர்.

5. 2006 ஜனவரி 7 ஆம் நாள், யாழ்ப்பாணம், நாவலடியில், சிறிலங்கா வான்படை குண்டுவீசியபோது, சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்த சிவராசா ஜெசிபன் (13) என்ற சிறுவன் கொல்லப்பட்டான்.

6. 2006 ஜனவரி 28 ஆம் நாள், தமிழ்செல்வன் என்ற 13 வயதுச் சிறுவனும், சுரேஜா என்ற 14 வயதுச் சிறுமியும், அவர்களுடைய வீட்டில் இருந்தபோது, துணை இராணுவப்படை வீசி எறிந்த குண்டுகளால் கொல்லப்பட்டனர்.

7. இவை அனைத்திலும் மிகப் பெரிய கொடுமையாக, 2006 மே 14 ஆம் நாள், செஞ்சோலை என்ற இடத்தில், 61 பச்சிளம் பெண் குழந்தைகள், சிறிலங்கா வான்படைக் குண்டுவீச்சால், கோரமாகக் கொல்லப்பட்டது, அனைவரையும் பதைபதைக்கச் செய்தது.

இவை எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு, வேறு வழி இல்லாமல், தங்கள் வீடுகளில் வசித்துக்கொண்டு இருக்கிற தமிழர்கள், தாங்கள் வாழ்வதற்கு உரிய அடிப்படை உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டு உள்ளனர். எடுத்துக்காட்டாக, வடக்கு-கிழக்குப் பகுதியில் வாழ்கின்ற தமிழர்களுள், 12 விழுக்காட்டினர் மீன்பிடித் தொழிலையே நம்பி உள்ள மீனவர்கள் ஆவர். ஆனால், பாதுகாப்பு என்ற பெயரில், அவர்கள் கடலுக்கு உள்ளே செல்வதை சிறிலங்கா கடற்படை தடுத்து வருகிறது. அவர்களது மீன்பிடி வலைகள், படகுகளைத் தகர்த்து அழித்து வருகிறது.

வடக்கு - கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் பட்டினி போட்டுச் சாகடிக்கப்படுகிறார்கள். உணவு, மருந்துகளைக் கொண்டு செல்லக்கூடிய உயிர்நாடியாகத் திகழ்கின்ற, ஏ-9 நெடுஞ்சாலையை, சிங்கள அரசு நீண்ட காலமாக மூடி விட்டது.

இன்று, உலக நாடுகள் அனைத்தும், இலங்கையில் நடைபெற்று வருகின்ற மனித உரிமை மீறல்களையும், தமிழர்களுக்கு இழைக்கப்பட்டு வருகின்ற அநீதியையும் கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளன. மனித உரிமைகள் ஆணையத்தில் தலைவர், திருமதி லூய்ஸ் ஆர்பர், இலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதிகளுக்குச் சென்று பார்ப்பதற்கு, சிங்கள அரசாங்கம் அனுமதி அளிக்க மறுத்ததால், அங்கே நடைபெறுகின்ற கொடுமைகள் வெட்ட வெளிச்சத்துக்கு வந்து விட்டன.

சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து, சிறிலங்கா அரசு ஆயுதங்களை வாங்கிக் குவித்து இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

சீனாவும், பாகிஸ்தானும் இலங்கைக்கு உள்ளே வந்துவிடக்கூடாது என்பதற்காக சிறிலங்காவிற்கு இந்தியா ஆயுதங்களைக் கொடுப்பது, மன்னிக்க முடியாத வரலாற்றுப் பிழை ஆகும்.

2004 ஆம் ஆண்டு, சிறிலங்கா அரசுடன் இந்தியா இராணுவக்கூட்டு ஒப்பந்தம் செய்துகொள்ள இருந்த நிலையில், என்னுடைய வேண்டுகோளை ஏற்று, அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இடாமல் இரத்துச் செய்தீர்கள். ஆயினும், இந்தியக் கடற்படையின் சில அதிகாரிகள், தேவை இல்லாமல், சிறிலங்கா இராணுவத்துக்கு நாங்கள் தார்மீக ஆதரவு அளித்து வருகிறோம் என்ற அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர்.

2007 ஆம் ஆண்டு, மார்ச் 10 ஆம் நாள் நான் தங்களைச் சந்தித்து, தமிழக மக்களிடம் திரட்டப்பட்ட, உணவு, மருந்துகளை, செஞ்சிலுவைச் சங்கம் வழியாக, இலங்கைக்கு அனுப்புவதற்கு உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தபோது, தாங்கள் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்தீர்கள். பின்னர் என்ன காரணத்தாலோ இன்று வரையிலும் அவை எதுவும் ஈழத்தமிழர்களுக்குச் சென்று சேரவில்லை.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களும், ஈழத்தமிழர்களும் தொப்புள்கொடி உறவு கொண்டவர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. மிகவும் நெருக்கடியான இந்த நேரத்தில் உங்கள் வாயிலின் கதவுகளை நான் தட்டுகிறேன். ஈழத்தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து ஆழ்ந்து சிந்தித்து, அவர்களுடைய வாழ்வில் விடியல் பிறந்திட, தொலைநோக்குப் பார்வையுடன் ஒரு திட்டத்தை வகுக்குமாறு தங்களை அன்புடன் வேண்டுகிறேன்.

அதற்கு முதற்படியாக, ஈழத்தமிழர்களுக்கு ஆறுதல் அளிக்கின்ற வகையில், சிறிலங்கா வான்படைக்கு இந்தியா வழங்கி உள்ள ரேடார்களை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்றும், சிறிலங்காவிற்கு இராணுவ உதவிகளை நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், ஈழத்தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்துமாறு சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுப்பதுடன், அமைதிப் பேச்சுகளை நடத்தி, ஈழத்தமிழர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வினைக் காணுமாறு வலியுறுத்தும்படியும் கேட்டுக்கொள்கிறேன். தாங்கள் மேற்கொள்ளுகின்ற முயற்சிகளுக்கு, உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் தங்களுக்கு நன்றியோடு இருப்பார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதினம்.கொம்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.