Sunday, April 06, 2008

குண்டுத்தாக்குதலில் சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே பலி

[ஞாயிற்றுக்கிழமை, 06 ஏப்ரல் 2008]

சிறிலங்காவின் கம்பகா மாவட்டத்தில் உள்ள வெலிவெரியாவில் இன்று காலை இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் சிறிலங்காவின் பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தித்துறை அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உட்பட 12-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். 90-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

சிறிலங்காவின் தேசிய தடகள விளையாட்டுப் பயிற்சியாளர் லக்ஸ்மன் டி அல்விஸ், பிரபல தேசிய மரதன் ஓட்ட வீரர் கருணாரத்ன ஆகியோரும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.

சிங்களப் புதுவருட கொண்டாட்ட நிகழ்வில் மரதன் ஓட்டப்போட்டியை ஆரம்பித்து வைப்பதற்கு என வெலிவெரியாவில் உள்ள கந்தை விளையாட்டு மைதானத்திற்கு வருகை தந்தபோது அங்கு நின்ற தற்கொலை குண்டுதாரி அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளேயை இலக்கு வைத்து தாக்குதலை நடத்தியுள்ளார்.

மரதன் ஓட்டப் பந்தய வீரர் போன்று நின்ற ஒருவரே தாக்குதலை நடத்தியிருக்கின்றார்.

அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே மரதன் ஓட்டப் போட்டியினை ஆரம்பித்து வைக்கும் நோக்கில் மரதன் ஓட்டப் பந்தய வீரர்களுக்கு கைலாகு கொடுக்க ஆரம்பித்த போதே மரதன் ஓட்டப் பந்தய வீரர் போன்று நின்ற தற்கொலை குண்டுதாரி குண்டை வெடிக்க வைத்துள்ளார்.

சம்பவ இடத்திலேயே ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளே கொல்லப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

கம்பகா மாவட்ட மருத்துவமனைப் பணிப்பாளரும், அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொல்லப்பட்டதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

தாக்குதலில் 12-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதுடன் 90-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

கடுமையான காயங்களுக்குள்ளானோர் கம்பகா பொது மருத்துவமனையிலும், ராகம மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு கடும் பாதுகாப்புகளுடன் சிறிலங்கா காவல்துறை மா அதிபர் விக்டர் பெரேரா தற்போது சென்றிருக்கின்றார்.

சிதறிக் கிடக்கும் சடலங்களையும் நிகழ்ந்த அவலத்தையும் கண்டு காவல்துறை மா அதிபர் விக்டர் பெரெரா அதிர்ச்சியடைந்ததாக அப்பகுதியில் உள்ள ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார்.

அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே 1953 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11 ஆம் நாள் கொச்சிக்கடை வெலிகனப் பகுதியில் பிறந்தார். பாடசாலைக் கல்வியை முடித்துவிட்டு 1970 ஆம் ஆண்டு சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து அரசியலில் இறங்கிய அவர், 1983 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்.

1984 ஆம் ஆண்டு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கந்தான தேர்தல் தொகுதியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். அதன்பின்னர் 1989, 1994, 2000, 2001 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய அவர், பல்வேறு அமைச்சுப் பொறுப்புகளையும் வகித்துள்ளார்.

சட்டத்தரணியான இவர், சிங்களம்- தமிழ்- ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் சரளமாக உரையாடக்கூடிய திறமையைக் கொண்டவர் ஆவார். இதன் காரணமாக மகிந்த ராஜபக்ச அரசின் காலத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குழுவில் முக்கிய ஒருவராக இடம்பிடித்ததுடன், விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் தமிழில் உரையாடுவதனை ஓட்டுக்கேட்கும் ஒருவராகவும் செயற்பட்டவர் என்று அப்போது பேசப்பட்டது.

தனது அரசியல் காலத்தில் முக்கிய பல அமைச்சுப் பொறுப்புக்களை வகித்திருந்தார். கத்தோலிக்க விவகார அமைச்சர் , துறைமுக அதிகாரசபை அமைச்சர், பெருந்தெருக்கள் அமைச்சர் உட்பட பல பதவிகளைப் வகித்திருந்தார்.

55 வயதான இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையும் ஆவார்.

தனது இறுதிக்காலத்தில் மடுத்திருத்தல பகுதியைக் கைப்பற்ற வேண்டும் என்பதில் முனைப்புடன் இருந்த இவர், சிறிலங்கா அரசின் இராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்தியும் வந்தார். அரசாங்கத்தின் காய் நகர்த்தல்களுக்குரிய முக்கிய அமைச்சராகவும் திகழ்ந்தார்.

இந்த வருட ஆரம்பத்திலிருந்து சிறிலங்காவில் இரண்டு அமைச்சர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.