Tuesday, March 18, 2008

தள்ளாடி படைத்தளம் மீது விடுதலைப் புலிகள் எறிகணை வீச்சு: 14 படையினர் படுகாயம்

[செவ்வாய்க்கிழமை, 18 மார்ச் 2008] மன்னாரில் உள்ள தள்ளாடி சிறிலங்காப் படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நேற்று இரவு நடத்திய கடும் எறிகணை வீச்சுத் தாக்குதலில் 14 படையினர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தள்ளாடிப் படைத்தளத்தை இலக்கு வைத்து நேற்று திங்கட்கிழமை இரவு 9:45 மணிமுதல் விடுதலைப் புலிகள் கடுமையான எறிகணை வீச்சுத் தாக்குதல்களை நடத்தினர் என்று கூறப்படுகின்றது. விடுதலைப் புலிகளின் எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கும் சத்தங்களால் தள்ளாடியை அண்மித்த பகுதிகள் நேற்று இரவு அதிர்ந்த வண்ணம் இருந்தன. இடையிடையே தள்ளாடிப் படைதளத்திற்குள் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களும் கேட்டன. சுமார் 2 மணித்தியாலங்களுக்கும் மேலாக விடுதலைப் புலிகளின் எறிகணைகள் தள்ளாடிப் படைத்தளத்திற்குள் வீழ்ந்து வெடித்தன என்று அப்பகுதியை அண்மித்துள்ள மக்கள் தெரிவித்தனர். இதேவேளை தள்ளாடிப் படைத்தளம் விடுதலைப் புலிகளின் எறிகணைத் தாக்குதலுக்கு இலக்காகிக் கொண்டிருந்தபோது, மன்னார் சவுத்பார் படைத்தளத்தில் இருந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி நோக்கி கடுமையான எறிகணை வீச்சுத் தாக்குதல்கள் ஆரம்பமாகின. இன்று அதிகாலை 1:00 மணிவரை இத்தாக்குதல்கள் தொடர்ந்தன. இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை 1:30 மணியளவில் மன்னார் மருத்துவமனைக்கு 14 படையினர் படுகாயங்களுடன் கொண்டுவரப்பட்டனர். அவர்களில் பலர் ஆபத்தான நிலையில் இருந்ததால் அவர்கள் அனைவரும் இன்று காலை அனுராதபுரம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். எனினும் இத்தாக்குதலில் படையினருக்கு உயிரிழப்பு ஏற்பட்டதா என்ற விபரம் தெரியவரவில்லை.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.