Thursday, February 14, 2008

தமிழரின் வங்கிக் கணக்கு விவரம் பொலிஸ் கோருவது உரிமை மீறல்! குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக படிவம் சமர்ப்பிப்பு

[வியாழக்கிழமை, 14 பெப்ரவரி 2008] "கொழும்பில் தங்கியிருக்கும் அல்லது வசிக்கும் தமிழர்களிடம் அவர்களின் வங்கிக் கணக்குகளின் விவரங்களையும் அவற்றில் உள்ள பணத்தின் தொகையையும் தெரிவிக்கும்படி வற்புறுத்தும் ஒழுங்குவிதியை பொலிஸார் பலவந்தமாகத் திணிப்பது பெரும் சட்ட மீறலும் அடிப்படை உரிமை மீறலுமாகும்.'' இவ்வாறு நேற்று உயர்நீதிமன்றத்தில் தமிழர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. தலைநகரிலும் சுற்றுப்புறங்களிலும் தமிழர்கள் வகைதொகையின்றி கைது செய்யப்படுவதை ஆட்சேபித்து இ.தொ.கா. தாக்கல்செய்த அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று உயர்நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே மனுதாரர் தரப்பின் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் இத்தகவலை நீதிமன்றுக்குத் தெரியப்படுத்தினார். மேற்படி வங்கிக் கணக்கு இலக்கங்கள், அவற்றில் உள்ள பணத்தின் தொகை ஆகியவற்றை வெளிப்படுத்தும்படி கோரி முகத்துவாரம் பொலிஸாரால் அப்பகுதித் தமிழ் மக்களுக்கு விநியோகிக்கப்பட்ட படிவத்தின் பிரதியும் நேற்று உயர்நீதிமன்றத்தில் மனுதாரர் தரப்பு சட்டத்தரணியால் சமர்ப்பிக்கப்பட்டது. இவ்வாறு தங்களின் வங்கிக் கணக்கு, அதில் உள்ள பணத்தொகை போன்ற விடயங்களை வெளிப்படுத்துமாறு வலியுறுத்துவது கட்டாயப்படுத்துவது சம்பந்தப்பட்ட நபரின் அடிப்படை உரிமையை அப்பட்டமாக மீறும் செயற்பாடாகும். இப்படி ஒவ்வொரு பொலிஸ் நிலையமும் தன்னிச்சைப்படி தான்தோன்றித்தனமாக தத்தமது பிரதேசங்களில் தமிழர்களை மோசமான நெருக்குதல்களுக்கும் சட்டவிரோதமான முறையில் அழுத்தங்களுக்கும் உட்படுத்துகின்றன என்றும் மனுதாரர் தரப்பு சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார். நன்றி : சுடர் ஒளி

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.