Monday, February 04, 2008

கொழும்பில் குண்டுகள் வெடிக்கும்: தொலைபேசியில் அச்சுறுத்தல்

[திங்கட்கிழமை, 04 பெப்ரவரி 2008] சிறிலங்கா தலைநகர் கொழும்பில் சுதந்திர நாள் நிகழ்வுகள் நடைபெறவுள்ள நிலையில், குண்டுவெடிப்புச் சம்பவங்கள் இடம்பெறும் என்று தன்னை "எல்லாளன் படை"யின் உறுப்பினர் என அறிமுகம் செய்துகொண்ட ஒருவர் எச்சரிக்கை விடுத்திருக்கின்றார். சுதந்திர நாள் நிகழ்வுகள் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் கொழும்பு காலிமுகத்திடலில் இன்று திங்கட்கிழமை காலை 8:30 மணியளயவில் நடைபெறவிருக்கும் நிலையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. விடுதலைப் புலிகள் அமைப்பே "எல்லாளன் படை" என்ற பெயரில் நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்புக்கள் உட்பட தலைநகர் கொழும்பில் தாக்குதல்களை நடத்தி வருவதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையிலேயே தன்னை "எல்லாளன் படை"யைச் சேர்ந்தவர் என அறிமுகப்படுத்திக்கொண்ட ஒருவர் அனைத்துலக ஊடகமான "ரொய்ட்டர்ஸ்" செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசி மூலமாக சுதந்திர நாள் நிகழ்வு நடைபெறும் போது குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெறும் எனத் தெரிவித்திருக்கின்றார். சுதந்திர நாளினை முன்னிட்டு கொழும்பு காலிமுகத்திடலில் இன்று காலை நடைபெறும் நிகழ்வில் படையினர் தமது பலத்தைக் காட்டும் வகையிலான பாரிய அணிவகுப்பினை நடத்தவிருக்கின்றனர். இதற்காக ஆயிரக்கணக்கான படையினரும், டாங்கிகளும் தயாராக வைக்கப்பட்டுள்ளன. வான்படையின் அணிவகுப்பு மற்றும் கடற்படையினரின் அணிவகுப்பும் நடைபெறும். இந்நிலையில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் இடம்பெறலாம் என்ற அச்சத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் பலப்படுத்தப்பட்டிருக்கின்றது. "ரொய்ட்டர்ஸ்" செய்தி நிறுவனத்துடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட ஒருவர், தன்னை எல்லாளன் படையைச் சேர்ந்தவர் என அறிமுகப்படுத்திக்கொண்டார். "தயவு செய்து கவனமாக இருங்கள். கொழும்பின் சில பகுதிகளில் குண்டு வெடிப்புக்கள் இடம்பெறப்போகின்றன. சுதந்திர நாள் நிகழ்வுகளை இலக்கு வைத்து சில இடங்களில் நாம் குண்டுகளைப் பொருத்தியிருக்கின்றோம்" எனவும் தொலைபேசியில் தொடர்புகொண்டவர் குறிப்பிட்டிருக்கின்றார். தொலைபேசியில் தொடர்பு கொண்டவர் "ரொய்ட்டர்ஸ்" செய்தி நிறுவனத்துக்கு முன்னர் அறிமுகமானவர் அல்ல. அவர் விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புபட்டவரா என்று "ரொய்ட்டர்ஸ்" செய்தி நிறுவனத்தினரால் கேட்கப்பட்ட போது, அவர் தொலைபேசி இணைப்பைத் துண்டித்துக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சுதந்திர நாளினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒருபகுதியாக பிரதான நிகழ்வு நடைபெறும் காலிமுகத்திடலை அடுத்துள்ள பகுதிகள் கடந்த இரண்டு நாட்களாகப் பேக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. இதனைவிட இன்று காலை 6:00 மணிமுதல் செல்லிடப்பேசிகள் மூலமான குறுஞ்செய்திச் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டிருக்கின்றது. அனைத்து வகையான தொலைபேசிகள் மூலமாகவும் குறுஞ்செய்திகளை அனுப்பவோ பெற்றுக்கொள்ளவோ முடியாது. தாக்குதல் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கு இதனைப் பயன்படுத்தலாம் என்பதால்தான் குறுஞ்செய்திச் சேவைகளும் தடைசெய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.