Saturday, February 09, 2008

கிளிநொச்சியை நிச்சயம் கைப்பற்றுவோம்: சரத் பொன்சேகா

[சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2008]


வன்னிப் பெருநிலப்பரப்பில் உள்ள கிளிநொச்சிப் பகுதியை நிச்சயம் மீட்போம் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:
53, 55, 57, 58, 59 ஆகிய படையணிகள் வன்னியைச் சுற்றிவளைத்து விட்டன. இதனால் எமது கவனத்தை திசைதிருப்ப விடுதலைப் புலிகள் முனைகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்று வரும் தாக்குதல்கள் அத்தகைய நோக்கங்களைக் கொண்டவையே ஆகும்.

இத்தகைய தாக்குதல்களைக் கண்டு நாம் பின்வாங்கப் போவதில்லை. கிளிநொச்சியை நிச்சயம் கைப்பற்றுவோம். வன்னியில் உள்ள 2 லட்சம் மக்களையும் விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து விரைவில் மீட்போம்.

இராணுவத்தில் 33,000 பேரை கடந்த வருடம் மட்டும் இணைத்திருக்கின்றோம். மேலும் 15,000 பேரை இந்த வருடம் சேர்க்கத் திட்டமிட்டிருக்கின்றோம். இராணுவத்திற்கு ஆட்திரட்டுவது தற்போது இலகுவான விடயமாகி உள்ளது. ஆனால் கடந்த காலங்களில் இராணுவத்திற்கு ஆட்திரட்ட நாம் மிகவும் கடினப்பட்டோம்.

விடுதலைப் புலிகளை கட்டங்கட்டமாகவே வெற்றிகொள்ள முடியும். அவர்கள் 25 வருடகால கெரில்லா அனுபவத்தை வைத்துப் போரிடுவார்கள். எனவே விடுதலைப் புலிகளைக் கட்டம் கட்டமாகவே வெற்றிகொள்ள வேண்டும். அது அடுத்த மாதத்தில் (மார்ச்) சாத்தியப்படாது.

விடுதலைப் புலிகள் தமது அமைப்பில் 5,000 பேரை மட்டுமே கொண்டுள்ளனர். தற்போது விடுதலைப் புலிகளின் அரைவாசிப் பேரை அழித்துவிட்டோம். மீதம் உள்ளவர்களையும் அழிக்க வேண்டும்.

கிளிநொச்சியைக் கைப்பற்றுவதே எமது திட்டம். நாம் ஏற்கனவே மேற்கொண்ட நடவடிக்கைகள் பல்வேறு தலையீடுகளால் நிறுத்தப்பட்டன. இந்தியா ஒரு தடவை தலையிட்டு எமது முயற்சியை தடுத்தது. முன்னாள் அரச தலைவர்களான ரணசிங்க பிரேமதாசவும், சந்திரிகா குமாரதுங்கவும் இந்த முயற்சிகளை எடுத்தனர். ஆனால் அவர்கள் அரசியல் அழுத்தங்களால் அந்த முயற்சியை கைவிட்டு விட்டனர்.

ஆனால் இந்த தடவை நாம் கிளிநொச்சியைக் கைப்பற்றுவோம். கைப்பற்றி விட்டு கடந்த காலத்தைப் போன்று விலக மாட்டோம். தொடர்ந்தும் அங்கு நிலைகொள்வோம். எனது இராணுவத் தளபதி பதவிக்காலத்தில் சிறந்த இராணுவத் தளபதி என்ற நிலையுடன் பதவி விலகுவேன். அதற்குப் பின்னர் அரசியலில் ஈடுபட மாட்டேன். அந்த அனுபவம் எனக்கு இல்லை என்றார் அவர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.